Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch29 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch29 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

186
0
Read Kadal Pura Part 1 Ch29 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch29 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch29 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 29 : பரிசுகள் இருபது.

Read Kadal Pura Part 1 Ch29 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

தென்கலிங்கத்து மன்னன் அரண்மனைக்கு நேர்ப் பின்புறத்திலிருந்த குதிரைச் சாலைத் திட்டிவாசல் கதவிடுக்கு வழியாகத் தூரத்தே தீபங்கள் இரண்டு தெரிந்ததையும் அந்தத் தீபங்களில் ஒன்று தாங்கள் இருந்த இடத்தை நோக்கி நகரத் தொடங்கியதையும் கண்ட அநபாயன் பெரும் ஆச்சரியத்திற்குள்ளாகிக் கதவிடுக்கிலிருந்து கண்ணை எடுத்துத் தலை நிமிர்ந்து உள்ளேயிருந்த வியப்பு முகத்திலும் ஒளிவிட அமீரை நோக்கினான்.

பாலூரையும் அதன் மக்களையும் அங்கிருந்த அரசாங்க அதிகாரிகளையும் சர்வ விளக்கமாக அறிந்தவன் நானொருவனே என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த அநபாயனுக்குத் தன்னை மீறி விவகாரங்கள் அறிந்தவன் ஒருவனிருக்கிறானென்பதே பெரும் வியப்பாயிருந்ததால் அந்த வியப்பைச் சொற்கள் மூலம் காட்ட முற்பட்டு, “அமீர், உன் திறமை இன்றுதான் எனக்கு முழுவதும் புலப்படுகிறது” என்று கூறினான்.

இதழ்களில் லேசான புன்முறுவலொன்று தவழ அநபாயனை நோக்கிய அமீர், சற்று விஷமத்துடனேயே கேட்டான், “ஏன் இதுவரை புலப்படவில்லையா?” என்று.

அநபாயன் பதிலுக்குச் சிரித்தான். “புலப்பட்டது அமீர், புலப்பட்டது. நீ திறமைசாலியென்பதும் எந்த நிலைமையையும் சமாளிக்கும் வல்லமை உனக்கு உண்டென்பதும் எனக்கு ஏற்கெனவே தெரியும்” என்று பதிலும் சொன்னான் அநபாயன்.
“தெரியுமா?” அமீரின் கேள்வியில் ஏளனத்தின் சாயை நிரம்ப இருந்தது.

அதைக் கவனித்தும் கவனிக்காதவன்போல் பதில் சொன்ன அநபாயன், “தெரியும் அமீர். தெரியாவிட்டால், உன்னிடம் என்னுடைய அருமை நண்பர்களின் உயிரையும் மாபெரும் கடாரத்தின் பிற்காலத்தையும் ஒப்படைப்பேனா? உன் திறமையைப் பற்றி நான் சந்தேகிக்கவில்லை. இந்தப் பாலூரின் முக்கிய இடங்களிலெல்லாம், நீ ஆள்களை உன் வாணிபத்துக்கு அனுகூலமாக வைத்திருப்பதும் எனக்குத் தெரியும். ஆனால் அரச மாளிகைக்கு அருகிலேயே, ஏன் உள்ளேயே என்று கூறலாம். நீ கை வைக்க முடியும் என்பதை நான் இதுவரை உணரவில்லை. இன்று வரை மூன்றிலொரு பங்கு தமிழரை உடைய இந்தப் பாலூரில் என் சக்திதான் அதிகம் என்று எண்ணியிருந்தேன். கை விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய சொற்ப அராபியர் உள்ள இந்த ஊரில் உன் சக்தியும் செல்வாக்கும் என் சக்தியைவிடப் பல மடங்கு அதிகம் என்பதை இன்று உணர்ந்து கொண்டேன்” என்று உணர்ச்சி பாய்ந்த குரலில் சொற்களை உதிர்த்தான்.

அந்தப் பாராட்டுதலால் ஓரளவு சங்கடத்துக்குள்ளான அமீர் சற்றே தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, “தாங்கள் அளவுக்கதிகமாக என்னைப் புகழுகிறீர்கள்” என்று முணுமுணுத்தான்.

“இல்லை அமீர், அளவுக்கதிகமான புகழ்ச்சி அல்ல இது. உண்மையைத்தான் கூறுகிறேன். இன்று பாலூர் உள்ள நிலைமையில் அரச வீதிக்குள் புகுவதே கஷ்டம். ஏதோ பொய்க் கையெழுத்து ஓலைகளையும் பழைய உத்தரவுகளையும் காட்டி அதைச் சாதித்தாய். அரண் மனைக்குள் புகுந்து பின்புறம் வந்துவிட்டோம். குதிரைச்சாலைக்குள் நுழைவது மிகக் கஷ்டமென்று நினைத்தேன். அதற்கும் வழி வைத்திருக்கிறாய்” என்று மேலும் பாராட்டிய அநபாயனை இடைமறித்த அமீர், “அநபாயரே! வயதும் சந்தர்ப்பமும் அனுபவத்தை அளிக்கின்றன. அனுபவம் புதுப்புது முறைகளைச் சுட்டிக்காட்டுகிறது. தங்களைவிட அறிவில் நான் குறைந்தவனாயிருந்தாலும், வயதில் பெரியவன். பல நாடுகளில் தங்கியிருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வித அனுபவம், சிக்கல் எனக்கு இருந்தன. அவற்றைத் தீர்க்கப் பலப்பல தந்திரங் களைக் கையாள வேண்டி வந்தது. கடைசியில் சொந்த நாடு விட்டுத் தூர நாடுகளில் உறைய வேண்டிய அவசியமுள்ள எனக்குத் தந்திரம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டது. புதுப்புது நிலைகளில் புதுப்புது எச்சரிக்கைகளும், புதுப்புதுத் தந்திரங்களும் இயற்கையாகவே ஏற்படுவது பழக்கமாகிவிட்டது. என் கஷ்டங்களை வாழ்க்கையில் அனுபவித்த யாருக்கும் யுக்திகளும், குயுக்திகளும் தாமாகவே தோன்றும்” என்று கூறிவிட்டு அதற்குமேல் அந்தச் சம்பாஷணையை நீடிக்கவிட இஷ்டப்படாமல் பேச்சை வேறு திசையில் திருப்பி, “இதோ பாருங்கள் அநபாயரே! நீங்கள் தூரத்தில் பார்த்த விளக்கு சீக்கிரம் இந்த வாசலை நெருங்கிவிடும். கதவும் திறக்கப்படும். ஆகவே உள்ளே புகத் தயாராயிருங்கள்” என்று எச்சரித்தான்.

“சரி அமீர்! ஆனால் ஒரு சந்தேகம். இங்கு நீ கதவைத் தட்டினாய். விளக்கு தொலைவிலிருந்து வருகிறது. நீ மெள்ளத் தட்டியது அத்தனை தூரம் காதில் விழுமா?” என்று வினவினான்.

“விழாது அநபாயரே விழாது. இந்தக் கதவுக்கருகில் சதா காவல் உண்டு. விளக்குத்தான் இங்கே வைப்பதில்லை. ஆனால் கதவு தட்டியதும் இங்குள்ள காவலன் சென்று தோப்பு நடுவிலுள்ள வீட்டிலிருந்து விளக்கைக் கொண்டு வருவான்” என்று விளக்கினான் அமீர்.

“கதவுக்கருகில் ஏன் விளக்கு வைப்பதில்லை?” என்று மீண்டும் கேட்டான் அநபாயன்.

“இது அரசர் நுழையும் வாயில். “

“பீமனா !”

“ஆம். தென்கலிங்க மன்னருக்கு அரபு நாட்டுப் புரவிகளிடம் உள்ள ஆசை சொல்ல முடியாது. ஆகவே புரவிகளைப் பார்க்க அரசர் இங்கு வருவார். வந்து மும்முறை கதவைத் தட்டுவார். தட்டி உள்ளே நுழைந்து புரவிகளைப் பார்த்துவிட்டுப் போவார். “

மேலே ஏதும் அமீர் விவரிக்கத் தேவையில்லாதிருந்தது. பீமன் தன்னந்தனியே புரவிகளுடன் உறவாட ஆடம்பரமேதுமில்லாமல் நுழையும் திட்டிவாசலுக்குள் நுழைய அதே முறையை அமீரும் கையாண்டிருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட அநபாயன் மேலும் வியப்பே எய்தினான். “அரசர் வந்திருப்பதாக எண்ணித்தான் காவலன் விளக்குக் கொண்டுவரப் போயிருக்கிறானா?” என்று ஆச்சரியத்துடன் வினவினான்.

“ஆமாம்” என்று சர்வசாதாரணமாகப் பதில் கூறினான் அமீர்.
“கதவைத் திறந்தபின் வந்திருப்பது அரசனல்ல வென்பதைக் காவலன் புரிந்துகொண்டால் என்ன செய்வது?”

“புரிந்து கொள்ள முடியாது. “

“ஏன் புரிந்துகொள்ள முடியாது?”

“அரசரைக் கண்டவுடன் காவலன் தலைகுனிந்து வணங்க வேண்டும். பிறகு குனிந்த தலையை நிமிராமல் திரும்பி வீட்டை நோக்கி நடக்க வேண்டும். திட்டிவாசல் காவலருக்கு இப்படித் திட்டமான உத்தரவிருக்கிறது. அது மட்டுமல்ல… ”

“வேறென்ன?”

“அரசரும் நம்மைப்போல் முக்காடிட்டுத்தான் வருவார். நமது புரவிகளைப்போல் அவர் புரவியும் சற்றுத் தொலைவில் தனித்துத்தான் நிற்கும். “

திட்டிவாசல் பிரவேசத்தை மிகக் கெட்டிக்காரத்தன மாகவே பீமன் ஏற்பாடு செய்திருக்கிறானென்பதை உணர்ந்துகொண்ட அநபாயன், பீமனைப்போல் தாங்கள் நுழைவது அத்தனை கஷ்டமல்லவென்பதைப் புரிந்து கொண்டான். இருப்பினும் மேற்கொண்டும் சந்தேகம் ஏற்படவே கேட்டான்: “மன்னன் வருவதாயிருந்தால் ஒரு புரவிதானே நின்றிருக்கும். “

“இல்லை, இல்லை. சில சமயம் பீமன் ஒரே ஒரு மெய்க்காவலனை அழைத்து வருவது உண்டு” என்று அந்தச் சந்தேகத்தையும் உடைத்த அமீர் மேலும் கையாள வேண்டிய முறைகளைக் கூறினான். “அநபாயரே! இதோவாசல்! இன்னும் சில விநாடிகளில் இந்தத் திட்டிவாசற் கதவு ஓசைப்படாமல் திறக்கப்படும். முக்காட்டைத் தளர்த்தாமல் நேரே பார்த்தபடி உள்ளே நுழையுங்கள். காவலனைப் பேசாமல் பின்தொடருங்கள். தோப்பின் நடுவிலுள்ள வீட்டின் முகப்பில் சென்றதும் அவன் நின்று விடுவான். நீங்கள் சென்று எதிரேயிருக்கும் கதவைத் திறந்துகொண்டு உள்ளே செல்லுங்கள்” என்று விளக்கினான் அமீர்.

குதிரைச் சாலைத் தோப்பு வீட்டை அடைய வேண்டியமுறை மிகத் தெளிவாக விளக்கப்பட்டதைக் கேட்ட அநபாயன், அமீரின் திறமையையும் அரண்மனை விவகாரங்கள், முறைகள் முதலியவற்றை அவன் நுட்பமாக அறிந்திருப்பதையும் எண்ணி உள்ளூர அவனைப் பாராட் டினான். அமீரைப்பற்றி அப்படி அவன் உவகை கொண்ட சமயத்தில் திட்டி வாசற்கதவு மெள்ளத் திறக்கப்பட்டது. முக்காட்டை நன்றாக இழுத்துவிட்டுக் கொண்டு தோப்புக்குள் அநபாயன் நுழைந்தான். அநபாயனிடம் நடை முறையை விவரித்துக் கொண்டிருக்கையிலேயே தன் புரவியின் பக்கங்களில் தொங்கிய பைகளிலொன்றிலிருந்து கனமான ஒரு துணி முடிப்பை எடுத்துக் கொண்ட அமீரும் அநபாயனைப் பின்பற்றித் தோட்டத்துக்குள் நுழைந்தான்.

தோட்டத்தில் சிறு செடி கொடிகள் அதிகமில்லாமல் எங்கும் பெரும் மரங்களே இருந்தன. அப்படியிருந்த பெரும் மரங்களும் நெருக்கமாக வைக்கப்படாமல் புரவிகளைப் பிணைக்கும் நோக்கத்துடன் விட்டுவிட்டு வைக்கப் பட்டிருந்ததால் அவற்றின் ஒவ்வொன்றின் அடியிலும் நீளக் கயிறுகளில் பிணைக்கப்பட்ட புரவிகள் கால் பாவி நகர்ந்து கொண்டிருக்க முடிந்தது. முன்னே விளக்குக் காட்டிச் சென்ற காவலனைப் பின்பற்றிய அநபாயன் எத்தனை விதவிதமான சாதிக் குதிரைகள் அங்கிருந்தனவென்பதை மட்டுமின்றி அவற்றின் பழக்கத்துக்குத் தக்கபடி அவை பிணைக்கப்பட்டிருப்பதையும் கண்டான். சில புரவிகளுக்குப் பின்னங்கால் ஒன்றில் மட்டும் பிணைக்கயிறு கட்டி மரத்தில் அக்கயிற்றைச் சுற்றிக் கட்டியிருந்தார்கள். இன்னும் சில புரவிகளுக்குக் கழுத்திலும் இன்னும் சிலவற்றுக்கு இடுப்பின் வாளிப்பிலும் கயிறுகள் கட்டப்பட்டிருந்தன. இப்படிப் பலவிதமாகக் கட்டப்பட்ட கயிறுகளால் பலவிதமாக உடலைச் சிலுப்பியும் உலாவியும் கனைத்துக் கொண்டிருந்த குதிரைகள் மீது இடையே மரக் கிளைகளில் ஊடுருவி வந்த சந்திர வெளிச்சம் விழுந்திருந்ததால் புரவிகள் தெய்வலோகப் புரவிகளைப் போலக் காணப்பட்டன.

புரவிகளின் கவர்ச்சி, வீரரான அநபாயன் இதயத்தை வெகு வேகமாக அந்தப் புரவிகளை நோக்கி இழுக்கத் தொடங்கியது. அப்படி இழுத்ததன் விளைவாகப் பேரு வகை கொண்ட அநபாயன் அத்தகைய புரவிகளைக் கொண்ட பீமனை அந்தச் சமயத்தில் மனத்துக்குள் பாராட்டவும் செய்தான். குதிரைகளுடன் உறவாட ஒரு மன்னன் தன்னந்தனியே திட்டிவாசல் வழியாக வருவானேன் என்று முதலில் எண்ணிய அந்தச் சோழர்குல இளவல், ‘இத்தகைய புரவிகளுடன் விருதுகளில்லாமல், காவலர் பாதுகாப்பு இல்லாமல், தன்னந்தனியே இருப்பதைவிடச் சிறந்த இன்பம் வேறென்ன இருக்க முடியும்? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். அத்தகைய சிறந்த புரவிகளை உடைய பீமனிடம் பெரும் பொறாமையும் கொண்டான் அவன். அந்தப் பொறாமையுடன் அரசரீதியான பொறாமையும் கலந்துகொண்டது அந்த வீரன் மனத்திலே. ‘சோழ நாட்டுக்கும் வெளிநாட்டுப் புரவிகள் வரத்தான் செய்கின்றன. ஆனால் அவை சோழர் கீழுள்ள முசிறிப் பெருந்துறையில் இறக்கப்படுகின்றன. அங்கிருந்து வடநாட்டவரும் சேரரும் வாங்கியது போக மீதிக் குதிரைகளே சோழநாட்டுக்குக் கிடைக்கின்றன. முசிறிப் பெருந்துறைக்கு அடுத்தபடி பாலூரே பெரும் துறைமுகம். அரபு நாடுகளிலிருந்து வரும் பல்வகைப் புரவிகள் கடாரத்துக்கும் காம்போஜத்துக்கும் சீனத்துக்கும் போகின்றன. ஆகவே இந்தப் பாலூர் பெருந்துறை மட்டும் சோழர் வசமிருந்தால் எத்தனை வகைப் புரவிகளை வாங்கலாம். எத்தனை தரமான வேகமான புரவிப் படையை அமைக்கலாம்!’ என்று எண்ணம் துளிர்த்தது அந்த வீரனின் சிந்தையில். ‘ஏற்கெனவே திறமைமிக்க யானைப் படையை உடைய சோழர்களிடம் சிறந்த புரவிப் படையும் பெருகிவிட்டால் கலிங்கத்தை விழுங்குவதோ அந்தப் பீமனுக்குத் தகுந்த படிப்பினை அளிப்பதோ ஒரு பிரமாதமல்ல’ என்று தனக்குத்தானே கனவு கண்ட அநபாயன் அங்கிருந்த புரவிகளின் மீது வைத்த கண்ணை வாங்காமலே நடந்து சென்றான். புரவிகளிடம் இருந்த அந்த வீரச் சிந்தனையில் கனவு கண்டுகொண்டே தான் தோப்பின் நடுவிடுதிக்கு வந்துவிட்டதைக் கூட அறியால் விடுதியின் முகப்புக்கு வந்து ஏதோ பதுமைபோல் கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள்ளும் நுழைந்த பின்புதான் அவன் சுரணை யடைந்தான். “இவர்தான் என் நண்பர்” என்று அமீரின் வார்த்தைகள் பலமாக ஒலித்தபின்பே இக உலகத்துக்கு வந்த அநபாயன் தன் கண்களைத் தூக்கி எதிரேயிருந்த குதிரைச் சாலைத் தலைவனை ஏறெடுத்து நோக்கினான்.

கலிங்கத்து அரண்மனைக் குதிரைச் சாலைத் தலைவன் அமீரைப் போலவே அரபு நாட்டைச் சேர்ந்தவனென்பதைப் பார்த்ததும் தெரிந்து கொண்ட அநபாயன், “சரியான நபரைத்தான் புரவிகளின் பாதுகாப்புக்குப் பீமன் பொறுக்கியிருக்கிறான்” என்று பீமனைக்கூட அந்தச் சமயத்தில் சிலாகித்தான். அமீரைவிட அதிக உயரம் பருமனுடனும் பெரிய தாடியுடனும் புஷ்டியான கன்னங்களுடனும் காணப்பட்ட அந்த அரபு நாட்டான் அநபாயர் தன்னை ஏறெடுத்துப் பார்த்ததுமே தலை வணங்கினான். அத்துடன் பணிவு பெரிதும் தொனித்த குரலில், “தாங்கள் யாரென்பது எனக்குத் தெரியும்” என்றும் கூறினான்.

அந்த அரபு நாட்டானை அதுவரை பார்த்திராத அநபாயன், ஆச்சரியத்தில் திளைத்தான். “என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம், பார்த்திருக்க முடியாது” என்றும் கூறினான்.

“கேட்டிருக்கிறேன். கேட்டது பார்த்தது போல்தான்” என்றான் குதிரைச் சாலைத் தலைவன்.

அமீர் இடைபுகுந்து, “தலைவரே! எங்களுக்கு மொத்தம் இருபது புரவிகள் வேண்டும். அதுவும் கட்டுக்கடங்காத, அதிகமாக பழக்கப்படாத புரவிகள் வேண்டும்” என்றான்.

குதிரைச் சாலைத் தலைவனின் புருவங்கள் ஆச்சரியத் தால் மேலெழுந்தன. “முரட்டுப் புரவிகளா வேண்டும்!”

என்று அந்த ஆச்சரியம் முகத்தில் விரியவும் குரலில் தொனிக்கவும் கேட்டான்.

“ஆம்” என்றான் அமீர்.
“அதுவும் யாருக்கும் அடங்காமல் நாலா பக்கத்திலும் சிதறி வெகு வேகத்துடன் ஓடக்கூடிய புரவிகள் வேண்டு மென்பாய் போலிருக்கிறதே?” என்று ஏளனமாகக் கேட்டான் அரபு நாட்டான்.

“ஆம். அவைதான் வேண்டும்” என்று திட்டவட்டமாகப் பதில் சொன்னான் அமீர்.

குதிரைச் சாலைத் தலைவனின் முகத்திலிருந்த ஏளனக் குறி மறைந்து அது இருந்த இடத்தைப் பயத்தின் சாயை ஆட்கொண்டது. “அவற்றை அவிழ்த்துவிட்டால் நேரக்கூடிய ஆபத்து என்னவென்று தெரியுமா?” என்று வினவினான் அந்த அரபு நாட்டான் குரலிலும் கிலியின் ஒலி பாய.

“தெரியும்” என்றான் அமீர்.

“ஆபத்தை எதற்காக விலைக்கு வாங்குகிறாய்?”

“தேவையாயிருக்கிறது. “

“ஆபத்து தேவையாயிருக்கிறதா?”

“ஆம்!”

இதற்குப் பதில் என்ன சொல்வதென்று விளங்க வில்லை அந்தக் குதிரைச் சாலைத் தலைவனுக்கு. அமீரின் முகத்தை விட்டு அநபாயன் முகத்தை நோக்கி, “அமீர் சொன்னதைக் கேட்டீர்களா?” என்று வினவினான்.

”ஆகா! கேட்டேன்” என்றான் அநபாயன். அவன் குரலில் பெரு மகிழ்ச்சி ஒலித்தது.

அமீர் தன் கையிலிருந்த பொற்கழஞ்சுகளைக் கலகல வென்று அரபு நாட்டான் எதிரில் கொட்டினான். “இரண்டாயிரம் பொற்கழஞ்சுகள் இருக்கின்றன” என்று கணக்குச் சொல்லி, பொற்குவியலைச் சுட்டியும் காட்டினான். புரவிச் சாலைத் தலைவன் கண்கள் பிரமைபிடித்த வண்ணம் பொற்காசுக் குவியலை இமை கொட்டாமல் பல விநாடிகள் பார்த்துக் கொண்டிருந்தன.
அரண்மனைப் புரவிகளில் ஒன்றை அரசர் அனுமதி யின்றி விற்பதே பெரும் குற்றம். அதற்கு மரண தண்டனை உண்டு. இருபது புரவிகளை விற்பது கனவிலும் நினைக்க முடியாத காரியம். அத்தகைய காரியத்துக்குத் தன்னைத் தூண்டிய இருவரையும் எதிரேயிருந்த பொற் குவியலையும் மாறி மாறிப் பார்த்த புரவிச் சாலைத் தலைவனின் முகம் பிரமையும் கிலியும் பிடித்துக் கலவரப் பட்டுக் கிடந்தது. அடுத்தபடி புரவிகளை விற்க அமீர் சொன்ன திட்டம் அவனைப் பைத்தியம் பிடிக்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது.

Previous articleRead Kadal Pura Part 1 Ch28 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch30 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here