Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch30 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch30 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

134
0
Read Kadal Pura Part 1 Ch30 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch30 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch30 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 30 : இரவில் வந்த இருவர்..

Read Kadal Pura Part 1 Ch30 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

அரும்பாடுபட்டுப் பெரும் விலை கொடுத்துக் கலிங்கத்து மன்னனான பீமன் திரட்டி வைத்திருக்கும் இணையற்ற அரபுப் புரவிகளில் இருப்பதை விலைக்கு வாங்க வந்ததன்றி, அவற்றுக்கான பொன்னையும் தன்முன்னால் கொட்டிக் குவித்த அமீரையும் அவனுடன் ஆஜானுபாகுவாய் நின்ற அநபாயனையும் குழப்பமும் திகிலும் கலந்த பார்வையுடன் நோக்கிய அரண்மனைக் குதிரைச்சாலைத் தலைவன் நீண்ட நேரம் பதில் சொல்ல வகையறியாது மிரண்டு விழித்துக்கொண்டு நின்றான். அமீர் தன் நாட்டவன் என்ற காரணத்தாலும் அத்துடன் தன் உயிர் நண்பனென்ற நினைப்பினாலும் அவனுக்கு எந்த உதவியும் செய்யத் தயாராயிருந்த குதிரைச் சாலைத் தலைவன், அமீர் கேட்ட உதவியால் தன் பதவி, உயிர் அத்தனையும் பறிபோய்விடும் என்பதை உணர்ந்ததன் விளைவாகப் பெரும் பிரமைபிடித்துப் பல நிமிஷங்கள் குழம்பவே செய்தான். அது தவிர, யாரும் வாங்க அஞ்சும் பழக்கப்படாத முரட்டுப் புரவிகளை அவர்கள் ஏன் வாங்க முற்படுகிறார்களென்பதும் அவனுக்குப் புரியாத புதிராயிருக்கவே, இதில் ஏதோ மர்மம் புதைந்து கிடக்கிற தென்பதை மட்டும் உணர்ந்து கொண்டாலும் அந்த மர்மம் எதுவாயிருக்கக்கூடும் என்பது தெரியாததால் ஓரளவு திணறவும் செய்தான். அவர்கள் கேட்பதுபோல் தான் எந்தக் காரணத்தைக் கொண்டு விற்பது, விற்றாலும் அவற்றை எப்படிக் குதிரைச் சாலையிலிருந்து அப்புறப் படுத்துவது, என்ற விஷயங்களை எண்ணிப் பார்த்துச் சிந்தை கலங்கிய அந்த அரபு நாட்டான் தன் குழப்பத்திலிருந்து விடுதலையடைந்தாலும் கிலியிலிருந்து விடுதலையடையாதவனாய் மெள்ள மெள்ளத் தன் எண்ணங்களைக் கேள்விகளாகத் தொடுக்கவும் முற்பட்டு, “அரண்மனை விற்பனைச் சாலையல்லவென்பதை நான் உனக்குச் சொல்ல வேண்டுமா அமீர்?” என்று வினவினான் உள்ளத்தில் பரவி நின்ற கிலி குரலிலும் ஒலி பாய.

வந்த காரியத்தின்மீது மெதுவாக ஆட்சேபனைப் புயல் வீச முற்பட்டுவிட்டதை உணர்ந்த அநபாயன், தன் கூரிய விழிகளை அமீரின்மீது திரும்பினான். அந்த விழிகளைச் சந்திக்க முடியாத அமீர், தன் பார்வையைக் குதிரைச் சாலைத் தலைவன் விழிகளுடனேயே உறவாடவிட்டு, “அரண்மனையை வர்த்தகச் சாலையென்று யாராவது சொல்வார்களா? அதற்குத்தான் கலிங்கத்தின் பொது அங்காடி இருக்கிறதே. அது மட்டுமா? பெருவணிகர் சிறு வணிகர் வீதிகளிலும் வர்த்தகசாலைகள் இருக்கின்றனவே” என்றான் சர்வ சாதாரணமாக.

“அப்படியிருக்க அரண்மனையில் புரவி வாங்க ஏன் வந்தாய்?” என்று மீண்டும் வினவினான் அந்த அரபு நாட்டான்.

“மற்ற இடங்களில் கிடைக்காதவை இங்கிருப்பதால் தான்” என்று பதில் சொன்னான் அமீர்.

“கலிங்கத்தில் வேறெங்கும் புரவிகள் கிடைக்காதா?” குதிரைச்சாலைத் தலைவன் குரல் அப்பொழுதும் குழம்பிக் கிடந்தது.

“கிடைக்காமலென்ன? கிடைக்கும், ஏராளமாகக் கிடைக்கும்” என்றான் அமீர்.

“அப்படியானால் அந்தப் பொதுச் சாலைகளில் வாங்குவதுதானே?” என்று வினவினான் அரபு நாட்டான்,

“நாங்கள் பொதுச் சாலையில் தலைகாட்ட முடியா தென்பது ஒரு காரணம்” என்றான் அமீர் மெதுவாக.

“ஏன்?” கேள்வி ஆச்சரியத்துடன் எழுந்தது.

“இன்று கலிங்கத்தின் நீதி மண்டபத்தில் நடந்தது தெரியுமல்லவா?” அமீரின் இந்தப் பதிலில் ஓரளவு விளக்கமும் இருந்தது.

“தெரியும் தெரியும்” என்று கூறித் தலையையும் ஆட்டிய குதிரைச் சாலைத் தலைவன் அநபாயனை ஆச்சரியம் ததும்பும் கண்களுடன் நோக்கி, “இத்தகைய சாகசச் செயல்கள் அரபு நாட்டில் நடப்பதுண்டு. இந்த நாட்டில் நடப்பதை இன்றுதான் கேள்விப்பட்டேன். மிகவும் துணிகரச் செயல்” என்று பாராட்டிவிட்டு, மீண்டும் அமீரை நோக்கி, “புரிகிறது அமீர்! நீதி மண்டபச் சம்பவத்துக்குப் பிறகு அநபாயர் பொதுச்சாலைகளில் தலை காட்டுவது அபாயம். நீ அவர் நண்பன் என்பதும் கலிங்கத்தின் ஆட்சியாளருக்குத் தெரியும். ஆம், ஆம். நீங்களிருவரும் மறைவிலிருப்பதுதான் உசிதம்” என்று உள்ள நிலையைத் தெளிவாக விவரித்தான்.

குதிரைச்சாலைத் தலைவன் அத்தனை திட்டமாக நிலைமையைப் புரிந்துகொண்டதைப் பற்றி மகிழ்ச்சி கொண்ட அமீர் புன்முறுவலொன்றையும் தன் பெரு உதடுகளில் தவழவிட்டு, “இப்பொழுது புரிகிறதா நான் உங்களிடம் புரவி வாங்க வந்த காரணம்?” என்றும் வினவினான்.
உண்மையில் அந்த அரபு நாட்டானுக்கு விளங்க வில்லை காரணம். ஆகவே அவன் கேட்டான், “பொதுச் சாலைகளுக்கு நீங்கள் போக முடியாதிருக்கலாம். நான் போகலாமல்லவா?” என்று.

“போகலாம்” என்றான் அமீர்.

“அப்படியானால் உங்களுக்குப் பதில் புரவிகளை நான் வாங்கலாமே?” என்றான் குதிரைச் சாலைத் தலைவன்.

“வாங்கலாம். அதில் சில கஷ்டங்களிருக்கின்றன” என்று சுட்டிக் காட்டினான் அமீர்.

“என்ன கஷ்டம்?”

“முதன் முதலில் உங்களை அரண்மனைக்குப் புரவி வாங்கவே அரசர் நியமித்திருக்கிறார். “

“ஆம். “

“அரண்மனைப் புரவிகள் அங்காடியிலிருந்து வாங்கப் படுவதில்லை. “

“இல்லை. “

“நேராக மரக்கலங்களில் வந்திறங்கும் புரவிகளில் சிறந்தவற்றை வாங்கிவிட்டுப் பிறகுதான் அங்காடிக்குப் புரவிகள் அனுப்பப்படுகின்றன. “

“ஆம்… ” உள்ளூர ஏற்பட்ட சந்தேகத்தால் வார்த்தையை நீள இழுத்தான் அரபு நாட்டான்.

“நீர் அங்காடியில் புரவி வாங்குவது அரசருக்குத் தெரிந்தால் முதலில் பதவி போய்விடும்… ” என்று அமீரும் இழுத்தான்.

அரபு நாட்டான் கண்கள் அச்சத்தால் பெரிதாக விரிந்தன. “உம்… ” என்ற பதில் ஒலியிலும் அந்த அச்சம் விரிந்து கிடந்தது.

“அடுத்தபடி புரவிகள் பிறருக்கு வாங்கப்பட்டது என்பது தெரிந்தால்… ” என்று நீட்டினான் அமீர்.

“சிறை வாசம்” என்று திகிலுடன் வந்தது. அரபு நாட்டான் பதில்.

“அநபாயருக்காக வாங்கப்பட்டது என்பது தெரிந்தால் சிரச்சேதம்” இதைச் சர்வ சகஜமாகச் சொல்லி வார்த்தையை முடித்த அமீர், “இப்பொழுது தெரிகிறதா பொதுச்சாலைகளில் எங்களுக்காக நீரும் புரவி வாங்க முடியா தென்பது?” என்றும் கேட்டான்.

அமீருக்கு என்ன பதில் சொல்வதென்பதை அறியாமல் விழித்த குதிரைச் சாலைத் தலைவன், “அப்படியானால் அரண்மனைப் புரவிகளை விற்பது உசிதம் என்பது உனது கருத்தா?” என்று ஆத்திரத்துடன் வினவினான்.

“இதைப் பாருங்கள்” என்று பதிலக்கு அமீர் எதிரே குவித்திருந்த இரண்டாயிரம் பொற்கழஞ்சுகளைச் சுட்டிக் காட்டினான்.

“என் உயிர் இரண்டாயிரம் பொற்காசுகள்தான் பெறுமா?” அரபு நாட்டான் கேள்வியில் ஆத்திரத்தின் எல்லை தெரிந்தது.

“பெறுமானம் எத்தனை என்பதைச் சொன்னால் கொடுக்கச் சித்தமாயிருக்கிறோம். ஐயாயிரம்… ” என்று கேட்டு நகைத்தான் அமீர்.

அரபு நாட்டானின் பெரும் கண்கள் கனலைக் கக்கின. “விளையாட இது நேரமல்ல அமீர். புரவி விற்பனைக்கு இது இடமுமில்லை “ என்றான் அவன்.

“உண்மை, உண்மை “என்றான் அமீர்.

“எது உண்மை?” என்று சீறினான் குதிரைச்சாலைத் தலைவன்.

“விளையாட இது நேரமில்லையென்பது. “

“விற்பனைக்கும் இது இடமில்லை என்று கூறினேன்” என்று கோபத்துடன் சுட்டிக் காட்டினான் அரபு நாட்டான்.

“அதில்தான் அடியவனுக்குச் சற்று கருத்து வேற்றுமை யிருக்கிறது” என்று அமீர் விண்ணப்பித்துக் கொண்டான்,

“கருத்து வேற்றுமையா?”

“ஆம். “
“என்ன கருத்து வேற்றுமை?”

“புரவிகளை நாங்கள் எங்காவது வாங்க வேண்டு மென்றால் அரண்மனையில்தான் வாங்க முடியும். அது மட்டுமல்ல. எங்களுக்குத் தேவையான முரட்டுப் புரவிகள் பொதுச் சாலைகளில் கிடைக்காது. “

இந்தப் பதிலைக் கேட்டதும் குதிரைச் சாலைத் தலைவனின் இதழ்களில் இகழ்ச்சி நகை விரிந்தது. “புரவிகள் வாங்க வேண்டுமானால் இங்குதான் வாங்க வேண்டுமா?”

“ஆம்” என்றான் அமீர்.

“அதுவும் முரட்டுப் புரவிகள்!”

“ஆம். ஆம். “

“அமீர்!”

“உம். “

“உனக்குப் பைத்தியம் ஏதாவது உண்டா ?”

“இதுவரை இல்லை. “

“அப்படியானால் புரவிகளை வாங்க அரண்மனை தான் சரியான இடம் என்று ஏன் சொல்லுகிறாய்?”

“ஏனெனில் நாங்கள் புரவிகளை மீண்டும் விற்க வேண்டியதில்லை” என்று மிக மெதுவாகவும் திடமாகவும் சொன்னான் அமீர்.

முன்னுக்குப் பின் முரண்பாடாக வந்த அமீரின் பதிலில் ஏதோ மர்மம் புதைந்திருக்கிறதென்பதைப் புரிந்து கொண்ட குதிரைச் சாலைத் தலைவன் அமீரின் முகத்தை நன்றாக ஆராய்ந்தான். இருவர் கண்களும் நீண்ட நேரம் சந்தித்தன. அந்தச் சந்திப்பிலிருந்து பார்வையை அகற்றாமலே சொன்னான் அமீர், “புரவிகள் விற்பனைக்கு வேண்டியதில்லை. வாடகைக்குத்தான்” என்று.

“வாடகைக்கா?” மெள்ள வந்தது அரபு நாட்டான் கேள்வி. அவன் மூச்சு மட்டும் பெரிதாக வந்தது.

“ஆம். சில நாழிகைகளுக்கு” என்ற அமீர், “வேண்டு மானால், அநபாயரைக் கேளுங்கள்” என்றான்.

அவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டும் ஏதும் பேசாமல் மௌனமாக நின்றிருந்த அநபாயனை நோக்கிய அரபு நாட்டான், அமீரின் பேச்சுக்கு அந்த வீர முகத்திலும் ஆமோதிப்பு இருந்ததைக் கவனித்தான். அவன் விழிகளில் பயம் விரிந்தது. ஏதோ அபாயமான திட்டத்தில் அந்த இருவரும் தன்னை ஆழ்த்தத் திட்டமிட்டு வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட குதிரைச் சாலைத் தலைவன், அமீரை மீண்டும் நோக்கி, “விவரமாகச் சொல் அமீர். புரவிகள் தற்காலிகமாக உங்கள் வசமிருக்க வேண்டுமா?” என்று கேட்டான்.

“இல்லை, இல்லை. உங்கள் வசமே இருக்கலாம். இரண்டு நாழிகைகள் நாங்கள் சொல்லும் இடத்திலிருந்தால் போதும். அதற்குப்பிறகு நீங்கள் புரவிகளை இங்கு கொண்டு வந்துவிடலாம். அதற்குத்தான் இரண்டாயிரம் பொற்காசுகள்” என்று விளக்கிய அமீரின் பெருவிழிகள் அர்த்த பாவத்துடன் அரபுநாட்டான் முகத்தில் நிலைத்தன.

“எந்த இடத்தில் புரவிகளை நிறுத்த வேண்டும்?” என்று கேட்டான் விஷயத்தை மெள்ளப் புரிந்துகொள்ளத் துவங்கிய குதிரைச்சாலைத் தலைவன்.

“கடற்கரையில்” என்று அமீர் குறிப்பிட்டான்.

“கடற்கரைக்குப் புரவிகளை ஏன் கொண்டு போனாய் என்று கேள்வி வந்தால்?”

“அரபு நாடு பாலைவன நாடு. “

“ஆம். “

“அராபியப் புரவிகளை மணலில்தான் பழக்க வேண்டும். “

“ஓகோ!”

“ஆகவே அரண்மனை முரட்டுப் புரவிகள் இருப்பதைக் கடற்கரையில் பழக்குகிறீர்கள். இதை யாரும் ஆட்சேபிக்க முடியாது. “

“முடியாது, முடியாது. “

“பழக்கப்படும்போது புரவிகள் தாறுமாறாக ஓடுவது வழக்கந்தானே. “

“ஆமாம். “

“அதையும் யாரும் ஆட்சேபிக்க முடியாது. “

“முடியாது. “

“அவ்வளவுதான் எங்களுக்குத் தேவை. “

“எந்தச் சமயத்தில் புரவிகள் கடற்கரைக்கு வர வேண்டும்?” என்று கேட்டான் அரபு நாட்டான்.

“நாளை இரவு ஆறாவது நாழிகை வரட்டும். எட்டாவது நாழிகைக்கு மேல் அவை அங்கிருக்கத் தேவையில்லை. முரட்டுக் குதிரைகளை இரவில் பழக்குவது வழக்கமாத லால் எவ்விதச் சந்தேகமும் ஏற்படாது” என்று சுட்டிக் காட்டினான் அமீர்.

குதிரைச் சாலைத் தலைவன் அநபாயன்மீது தனது கண்களைத் திருப்பினான். “அநபாயரே! உங்களைப் போல் சிறந்த வீரர்கள் உலகத்தில் மிகவும் அபூர்வம். அந்த வீரத்துக்கும் அமீரின் நட்புக்கும் நான் பணிகிறேன். எந்த நேரத்துக்கு நான் குதிரைகளைப் பழக்க வேண்டும் கடற்கரையில்?” என்று கேட்டான்.

“அதற்கு அடையாளம் தரப்படும்” என்றான் அநபாயன்.

“எப்பொழுது? எங்கு?” என்று வினவினான் அரபு நாட்டான்.

“கடற்கரையில், ஆகாயத்தைக் கவனித்திரும். “

புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தலையசைத்தான் அந்த அரபு நாட்டான்.

அநபாயன் மீண்டும் சொன்னான்: “குதிரைச் சாலைத் தலைவரே! நீர் நமக்கு இன்று செய்யும் உதவிக்குப் பிரதி இந்த இரண்டாயிரம் பொற்கழஞ்சுகளல்ல. உமது உதவியால் பெரும் அரசுகள் பயன்பெறப் போகின்றன. அந்தப் பயன் தகுந்த உருவெடுக்கும்போது அநபாயன் நெஞ்சத்தில் முதலில் நீர்தானிருப்பீர். “

உணர்ச்சியுடனும் ஆவேசத்துடனும் ராஜரீகத்துடனும் உதிர்க்கப்பட்ட சொற்களால் சொர்க்க போகத்தை அடைந்த அந்த அரபுநாட்டான் தலையை மிகவும் தாழ்த்தி அநபாயனை வணங்கினான். “இந்த அடிமையின் உயிர் இனி தங்களுடையது” என்றும் கூறினான்.

இந்த உறுதிமொழிக்குப் பிறகு அவனிடம் விடை பெற்றுக்கொண்டு செல்ல எழுந்த அநபாயன், அமீர் இருவரில் அமீர் மட்டும் திடீரென ஒரு விநாடி நின்று, “ஒரு முக்கிய விஷயம் மறந்துவிட்டேன்” என்று குதிரைச் சாலைத் தலைவனை நோக்கிக் கூறினான்.

“என்ன விஷயம்?”

“தங்களிடம் ஒப்படைத்தேனே சில பணியாட்கள்… பணிப்பெண்கள்… ”

“ஆம், ஆம். “

“அவர்களைப் பொழுது விடிவதற்குள் இல்லத்திற்கு அனுப்பிவிட வேண்டும். “

“மிகவும் கஷ்டமாயிற்றே!”

“தங்களுக்கு எதுவும் கஷ்டமில்லை. அவசியம் அனுப்பிவிடுங்கள்” என்று திட்டமாகக் கூறி அந்த அரபு நாட்டானைத் தலை தாழ்த்தி வணங்கிய அமீர், அதற்கு மேல் தாமதிக்காமல் அநபாயனை அழைத்துக்கொண்டு புறப்பட்டு, பழையபடி திட்டிவாசலுக்கு வெளியே வந்ததும், இருவரும் தலை முக்காடுகளை இழுத்துப் போர்த்திக் கொண்டு புரவிகளில் ஏறிச் சென்றார்கள்.

வணிகர் வீதியிலிருந்த இல்லத்தை அணுகியதும் அதற்குமேல் ஆபத்து ஏதுமில்லையென்ற காரணத்தால் முக்காட்டை நீக்கிய அமீர், “பிரபு! நீங்களும் முக்காட்டை எடுத்துவிடுங்கள்” என்று உற்சாகத்துடன் கூற முற்பட்டவன் திடீரென்று பேச்சை நிறுத்திக் கடிவாளத்தை இழுத்துப் புரவியையும் நிறுத்தினான்.

அவன் செய்கையைக் கவனித்த அநபாயனும் தானும் புரவியை நிறுத்தி, “என்ன அமீர்?” என்று கவலையுடன் வினவினான்.

பதிலுக்கு அமீர் தன் இல்லத்தின் வாயிலைச் சுட்டிக் காட்டினான். வாயிலில் இரு புரவிகள் நின்றிருந்தன. இரண்டும் அரசாங்க வீரர்களின் புரவிகள் என்பது அவற்றின் மீதிருந்து தொங்கிய பக்கச் சீலைகளிலிருந்து மிகத் திட்டமாகத் தெரிந்தது. அந்தப் புரவிகளிலிருந்து அப்பொழுதுதான் இறங்கிய இரு வீரர்கள் அமீரது விடுதியின் பெருங்கதவை நோக்கி மெள்ளச் சென்றனர். அடுத்த படிகதவு தட்டப்படும் என்று அமீரும் அநபாயனும் எதிர்பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடி காரியம் நடக்கவில்லை. வர்த்தகர்களில் ஒருவன் தன் அங்கியிலிருந்த பெரும் சாவியொன்றை எடுத்து அந்தப் பெருங் கதவின் பூட்டு வாயில் பொருத்தினான். அமீரின் கண் களில் வியப்பும் பிரமிப்பும் மிதமிஞ்சித் தாண்டவமாடின. “பிரபு! பிரபு! ஆபத்து வந்துவிட்டது!” என்று அச்சத்துடன் குழறினான்.

Previous articleRead Kadal Pura Part 1 Ch29 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch31 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here