Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch31 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch31 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

152
0
Read Kadal Pura Part 1 Ch31 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch31 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch31 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 31 :வெற்றியின் வழி.

Read Kadal Pura Part 1 Ch31 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

பாலூர் சிறு வணிகர் வீதியிலிருந்த தன் விடுதியை அணுகியதும், அதுவரையிலிருந்த ஆபத்து நீங்கிவிட்டதென நினைத்து முக்காட்டை நீக்கிவிடலாமென முதலில் யோசனை சொன்ன அமீர், தன் விடுதிக்கு எதிரே அரசாங்க வீரர்களின் இரு புரவிகள் நிற்பதையும் அந்தப் புரவிகளில் வந்த இருவர் தன் வீட்டுக் கதவருகில் சென்ற தன்றி அவர்களில் ஒருவன் பெரும் சாவியொன்றைக் கதவின் துவாரத்தில் நுழைத்துப் பூட்டைத் திறக்க முயன்றதையும் கண்டு சற்றே எச்சரிக்கை அடைந்து, “பொறுங்கள் அநபாயரே! புரவியை இந்தப் பக்கத்தில் நிழலுக்காக ஒதுக்குங்கள்” என்று கூறித்தானும் தன் புரவியை அநபாயன் புரவியுடன் சற்றுப் பக்கவாட்டில் நகரவிட்டான். புரவிகள் இரண்டும் நகர்ந்து தனது விடுதியின் பக்கத்து விடுதித் தாழ்வாரம் அடித்த நிழலில் ஒதுங்கியதும் தன் கூரிய விழிகளால் தன் வீட்டு முகப்பில் நடக்கும் காரியங்களை அமீர் கவனிக்கலானான். கவனிக்கக் கவனிக்க அவன் முகத்தில் ஆச்சரியக்குறி படருவதை அந்த இருளில் முழுதும் கவனிக்க முடியாவிட்டாலும் அமீர் திடீரெனக் கிளப்பிய, “ஹூம்” என்ற ஒலியால் அவன் புத்தியில் பேராச்சரியம் குடிகொண்டிருக்கிறதென்பதை ஊகித்துக் கொண்ட அநபாயன், “எதைக் கண்டு ஆச்சரியப்படுகிறாய் அமீர்?” என்று வினவினான்.

“அதோ அவர்களைக் கவனியுங்கள்” என்றான் அமீர் மேலும் ஆச்சரியம் ததும்பிய குரலில்.

அமீர் விடுதி முகப்பில் பெரும் தாழ்வாரம் இருந்த போதிலும் கிருஷ்ணபக்ஷத்தின் அந்த மூன்றாம் நாளிரவில் பிற்பகுதிச் சந்திரன் நன்றாகக் காய்ந்து கொண்டிருந்ததால் தாழ்வாரத்தில் இருட்டைச் சற்று மந்தப்படுத்தியே இருந்ததன் விளைவாக அநபாயன், அமீர் விடுதிக் கதவுக்கெதிரே நடந்த நாடகத்தை நன்றாகப் பார்க்க முடிந்தது. அமீரின் இல்லக் கதவை நோக்கி மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து சென்ற இருவரும் தங்களைப் போலவே முக்காடிட்டு இருந்ததையும் மிகுந்த எச்சரிக்கையுடன் அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே அவர்கள் கதவை நோக்கி நகர்ந்ததையும் அமீர் எச்சரிக்கை செய்யுமுன்பாகவே நோக்கிவிட்ட அநபாயனின் புலிக்கண்கள் அவர்களிலொருவன் பெரும் சாவியொன்றை எடுத்துப் பூட்டில் பொருத்தினதும் சிறிது ஆச்சரியப்பட்டேபோனான். கதவோடு கதவாகப் பூட்டை இணைக்கும் வழக்கம் பாரதத்தில் கிடையாதென்பதையும், நாதாங்கி போட்டுத் தனிப்பூட்டும் தாழும் இடும் வழக்கமே உண்டென்பதையும் உணர்ந்திருந்த அநபாயன் அமீர் வீட்டுக் கதவிலேயே பூட்டு பொருத்தப்பட்டிருப்பதை அன்றுதான் கவனித்தானாகையால், சிறிது ஆச்சரியமே அடைந்தான். அப்படிப் பூட்டியிருந்தாலும் அந்தப் பூட்டைத் திறக்க அவர்களுக்குச் சாவி ஏது என்பதும் அவனுக்கு விளங்காததால் அமீரின் பக்கம் திரும்பி, “அமீர், உன் விடுதியில் சில நாட்களாகவே விசித்திரங்கள் பல நடக்கின்றன என்றான்.

இதைக் கேட்ட அமீரும் அநபாயன் பக்கம் திரும்பி, “ஆம் அநபாயரே! இதோ வந்திருக்கும் மனிதர்களும் விசித்திரமானவர்கள்” என்றான்.

“என்ன விசித்திரமாயிருக்கிறது அவர்களிடம்?” என்று அநபாயன் வினவினான்.
“வந்திருப்பவர்கள் கலிங்க வீரர்களல்ல” என்றான் அமீர் திட்டமாக.

“வேறு யார்?” அநபாயனின் குரலில் மேலும் ஆச்சரியம் ஒலித்தது.

“அதுதான் புரியவில்லை. புரவிகள் கலிங்க வீரர் புரவிகளேயொழிய வந்திருப்பவர்கள் கலிங்க வீரர் அல்ல. ஆனால் என் வீட்டுப் பூட்டின் மர்மத்தைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்” என்று அமீர் விளக்கினான்.

“என்ன மர்மமிருக்கிறது உன் விடுதியின் பூட்டில்?” என்று வினவினான் அநபாயன் மீண்டும்.

“அதோ பாருங்கள், அந்த மனிதன் பூட்டில் சாவியைச் சொருகினானேயொழிய முழுவதும் திருப்பவில்லை” என்று சுட்டிக் காட்டினான் அமீர்.

உண்மையில் சாவியைப் பூட்டுக்குள் கொடுத்த மனிதன் அதை வலதுபுறம் பூராவாகத் திருப்பவில்லை . அதற்கு மாறாகப் பூட்டும் பாவனையில் இடதுபுறமே அரைவாசித் திருப்பித் திருப்பி, பழைய நிலைக்குக் கொண்டு வந்தான். இதைக் கண்ட அநபாயன் கேட்டான், “பூட்டைத் திறக்கும் வழி இதுவா அமீர்?” என்று.

“இல்லை அநபாயரே! பூட்டைத் திறக்க அவன் முயலவில்லை. ஏனென்றால் அது பூட்டல்ல” என்றான்அமீர்.

“பூட்டல்லவா!” அநபாயனின் ஆச்சரியம் பன்மடங்கு அதிகமாகியது.

“இல்லை அநபாயரே! அது பூட்டல்ல. கதவில் இரண்டு துவாரங்கள் இருக்கின்றன. ஒன்றுதான் பூட்டு. மற்றொன்று தாழைத் திறக்க, உள்ளிருக்கும் அடிமைகளை அழைக்கும் சிறு மணி. அந்தத் துவாரத்தில் சாவியைக் கொடுத்து மும்முறை திருப்பினால் உள்ளிருக்கும் மெல்லிய சலாகை நகர்ந்து பக்கத்துச் சுவரிலிருக்கும் மணிமீது தட்டும். அடிமைகள் கதவைத் திறக்க அது கட்டளை. இந்தச் சூட்சுமத்தை இவன் எப்படியோ அறிந்திருக்கிறான்” என்று மளமளவென்று விளக்கிய அமீர், “புரவியை விட்டு இறங்கி இந்த நிழலிலேயே வாருங்கள். இவன் யாரென்று பார்க்கலாம்” என்று கூறிவிட்டுத் தானும் புரவியிலிருந்து இறங்கிப் பக்கத்திலிருந்த தாழ்வார இருளில் பதுங்கிப் பதுங்கித் தன் வீட்டு முகப்பை அடைந்தான். அநபாயனும் அமீரின் வழியைப் பின்பற்றி, மெள்ள நடந்து வந்து பூட்டில் சாவியைக் கொடுத்து நின்றவன்மீது அமீர் பாய்ந்ததும் மற்றவன் கழுத்தைப் பின்னாலிருந்த வண்ணம் இறுகப் பிடித்து, “பேசாதே! வாயைத் திறந்தால் கழுத்தை நெறித்துவிடுவேன்!” என்று எச்சரித்தான்.

அநபாயன் கையில் சிக்கிக் கொண்டவனிடமிருந்து பதிலேதும் வரவில்லை . கழுத்து இறுகப் பிடிக்கப்பட் டிருந்ததால், “ஹும்… ஹும்… ” என்ற மூச்சுத் திணறும் சப்தமே வெளிவந்தது. ஆனால் அமீரின் நிலை வேறு விதமாயிருந்தது. சாவியைப் பூட்டி அடிமைகளை வரவழைக்க முற்பட்டவன்மீது பின்னாலிருந்து அமீர் மிகுந்த எச்சரிக்கையுடன்தான் தாவினான். அவன் யார் மீது தாவினானோ அந்த மனிதனும் அமீரைப்போல். அப்படி அதிக உயரமோ பருமனோ உள்ளவனும் அல்ல. ஆனால் அவன்மீது பாய்ந்த மறுவினாடி அமீர் தரையில் புரண்டு கொண்டிருந்தான். அமீரின் ராட்சத உருவத்தைத் திரும்பிப் பாராமலே கையின் வேகத்தினால் தரையில் உருள வைத்த மனிதனை ஏறெடுத்து நோக்கிய அநபாயன் முகத்தில் வியப்பின் குறி பெரிதும் படர்ந்தது. அந்த இரவே தனக்கு அடுத்தடுத்து வியப்பை அளிப்பதற்காக ஏற்பட்டதோ என்பதை நினைத்து நினைத்துப் பரவசப்பட்ட அநபாயன், தான் பிடித்திருந்த கழுத்தை விடுதலை செய்தான். மண்ணில் உருண்ட அமீர்கூடத் திடீரெனப் பரம சந்துஷ்டியுடன் எழதிருந்து தன்னை வீழ்த்திய வனுக்குத் தலை வணங்கி, “இந்த நிசியில் நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அப்பப்பா! எப்படி ஏமாற்றிவிட்டீர்கள்!” என்று மிகவும் பணிவும் வியப்பும் கலந்த குரலில் கூறினான்.

“இரவிலும் சரி, பகலிலும் சரி, எனக்கு இரு கண்கள் பின்புறம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா அமீர்?” என்று கூறிய சீனக் கடலோடி, அமைதி நிரம்பிய அந்த இரவில் பயங்கரமாக ஆனால் மிக மெதுவாக நகைத்தான்.

“அது தெரியும் குருநாதரே! ஆனால் வந்திருப்பது நீங்கள் என்பது எனக்கெப்படித் தெரியும்” என்று வினவினான் அமீர்.

“பூட்டில் சாவியை நான் இடதுபுறம் திருப்பியதை நீ பார்த்திருக்க வேண்டுமே?” என்று கேட்டான் சீனக் கடலோடி.

“பார்த்தேன். “

“இத்தகைய பூட்டுகள் சீனாவைத் தவிர வேறு இடங்களில் ஏது?”

“கிடையாது. “

“இந்த எச்சரிக்கை முறையும் நான் சொல்லிக் கொடுத்ததுதானே உனக்கு?”

“ஆமாம். “

“அப்படியிருக்க, மீதியை நீ ஊகித்துக்கொள்ள வேண்டியதுதானே?” என்று விளக்கிய சீனக் கடலோடி, “உள்ளே வா அமீர்! நாம் பேச வேண்டிய விஷயங்கள் நிரம்ப இருக்கின்றன” என்று கூறிக்கொண்டு மீண்டும் இருமுறை சாவியைத் திருப்பவே கதவு திறக்கப்பட்டது. கதவு திறந்ததும் ஏதோ தான்தான் அந்த வீட்டுக்கு எசமானன் போல் உள்ளே தாராளமாக நடந்த சீனக் கடலோடி முதல் இரண்டு கட்டுகளையும் கடந்து முதல் நாள் தான் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட மூன்றாம் கட்டின் பெரும் அறைக்கு வந்து சேர்ந்தான். வந்ததும் அடிமைகளை அழைத்து விளக்கைக் கொளுத்துமாறு உத்தரவிட்ட அந்தச் சீனக் கொள்ளைக்காரன் எந்தவிதக் கவலையுமில்லாத வதனத்துடன் அங்கிருந்த ஆசனமொன்றில் சாய்ந்துகொண்டு, “அநபாயரே! அமருங்கள். நாம் யோசிக்க வேண்டியது நிரம்ப இருக்கிறது” என்றான்.

மூன்றாம் ஜாமம் துவங்கிவிட்ட அந்த இரவு நேரத்தில் அவன் சொல்லக்கூடிய அப்பேர்ப்பட்ட தலை போகும்படியான காரியம் என்னவாக இருக்கும் என்பதை அறியாத அநபாயன் ஏதும் பேசாமல் அங்கிருந்த ஆசனத்தில் அமர, சீனக் கடலோடிக்குச் சற்றுப் பின்னடைந்திருந்த ஆசனத்தில் அவனுடன் வந்தவனும் மிகப் பணிவுடன் உட்கார்ந்துகொண்டான். அறையில் அப்பொழுதும் தூங்கா விளக்கொன்று மெல்லியதாக எரிந்து கொண்டிருந்தாலும் அது போதாதென்ற காரணத்தால் சீனக் கடலோடியின் உத்தரவைத் தொடர்ந்து அடிமைகளிருவரைப் பெருவிளக்குகள் இரண்டைக் கொண்டு வரக்கட்டளையிட்ட அமீர் அந்த விளக்குகள் வந்து உள்ளே பேரொளி பரவியதும், “மேற்கொண்டு என்ன தேவை குருநாதரே, சிறிது அரபு நாட்டு மது கொண்டு வரட்டுமா?” என்று மிகப் பணிவுடன் வினவினான்.

மிகப் பெரும் அபாயத்தை விளக்கும் குறியையோ வேறெவ்வித உணர்ச்சியையோ பிரதிபலிக்காமல் மிகுந்த அமைதியுடன் இருந்த முகத்தை இருமுறை அப்படியும் இப்படியும் ஆட்டி மது தேவையில்லையென்பதை உணர்த்திய சீனக் கடலோடி, “மது இருக்கட்டும் அமீர், நாம் வந்த காரியத்தை முதலில் கவனிப்போம்” என்றான்.

“என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள். எந்த உத்தரவுக்கும் பணியச் சித்தமாயிருக்கிறேன்” அமீரின் கேள்வியில் பயமும் பக்தியும் சொட்டியது.

“முதலில் வாசலிலுள்ள புரவிகளின் மீதிருக்கும் சீலைகளை எடுத்து மறைத்துவிடு. அவற்றில் கலிங்கச் சின்னங்கள் இருக்கின்றன” என்றான் சீனக் கடலோடி.

“சரி” என்றான் அமீர்.

“பிறகு குதிரைகளை உன் கொட்டடியில் கட்டிவிடு” என்றும் உத்தரவிட்டான் அகூதா.

“புரிகிறது” என்றான் அமீர்.

அமீருக்கு மட்டுமல்ல. அநபாயனுக்கும் விஷயம் தெளிவாகப் புரிந்தது. ஆனால் ஏதும் புரியாதவன் போல் கேட்டான், “ஏது இந்தப் புரவிகள் உங்களுக்கு” என்று.

“இங்கு அவசரமாக வரத் தேவையிருந்தது. வரும் வழியில் கலிங்க வீரர் இருவர் மறித்து மல்லுக்கு வந்தார்கள்-” என்ற அகூதா வாசகத்தை முடிக்காமலே விட்டான்.

“அவர்களைக் குத்திப் போட்டீர்களா?” அமீர் பயத்துடன் வினவினான்.

வீரர்களைக் குத்தினானா அல்லது கட்டிப் போட்டானா என்பதை அகூதா சொல்லவில்லை. அது அத்தனை பிரமாத விஷயமல்லவென்பதற்காக அசட்டையுடன் கையை ஆட்டிவிட்டு, “எப்படியிருந்தாலும் அவர்களால் நமக்குத் தொல்லையில்லை. நாம் கவனிக்க வேண்டியது நமக்கு முன்னுள்ள அபாயம்” என்றான்.

அநபாயன் விழிகள் மெள்ள எழுந்து சீனக் கடலோடியை நோக்கின. “புதிதாக என்ன அபாயம் நேரிட்டு விட்டது!” என்று வினவினான்.

“நான் இரண்டு மரக்கலங்களைக் கொண்டு வந்திருக் கிறேன்” என்றான் அகூதா எதையோ வற்புறுத்தும் நோக்கத்துடன்.

“அப்படியா!” என்றான் அநபாயன்.
“இதோ இருக்கும் இந்த அடிமை எனது இன்னொரு மரக்கலத்தை நடத்துபவன்,” என்றான் அகூதா, தன் பின்னால் உட்கார்ந்திருந்த அந்த இன்னொரு சீனனைச் சுட்டிக் காட்டி.

தட்டை முகத்தில் எந்தவித உணர்ச்சியுமில்லாமல் சிலையென உட்கார்ந்திருந்த அந்தச் சீனனை நோக்கிய அநபாயன், “புரிந்து கொண்டேன்” என்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் அசைத்தான்.

அடுத்தபடி பெரும் வெடியொன்றை எடுத்து வீசினான் அகூதா. “இவன் நடத்தும் மரக்கலம் இன்றிரவு கலிங்கத்தின் அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டது” என்ற அகூதா, பளிச்சிட்ட தனது இரு விழிகளை அநபாயன் மீது நாட்டினான்.

அநபாயன் கண்களில் ஒரு வினாடி கவலையின் சாயை தோன்றி மின்னல் வேகத்தில் மறைந்தது. அதைக் கவனிக்கத் தவறாத சீனக் கடலோடி, அநபாயன் அத்தனை அபாயத்திலும் உணர்ச்சிகளைப் பெரும் கட்டுக்குள் வைத்திருப்பதை எண்ணிப் பெரிதும் வியந்து, ‘இவன் ஆளப்பிறந்தவன்தான். சந்தேகமில்லை’ என்று தனக்குள்ளேயே சொல்லியும் கொண்டான். மனத்தில் ஓடிய எண்ணங்களைச் சிறிதும் வெளிக்கு மட்டும் காட்டாத அகூதா அமீரை நோக்கித் திரும்பி, “சோதனை வியப் பில்லையா! உனக்கு?” என்று வினவினான்.

“இதில் வியப்பென்ன இருக்கிறது? வெளிநாட்டு மரக் கலங்களின் சரக்குகளைச் சோதனை செய்வது சுங்க அதிகாரிகளின் வழக்கம்தானே?” என்றான் அமீர், அப்பொழுதும் நிலைமையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல்.

“வழக்கம்தான். ஆனால் இன்றிரவு இந்த மரக்கலம் மட்டுமே சோதனை செய்யப்பட்டிருக்கிறது” என்று அகூதா சற்று அழுத்திச் சொன்னான்.

“அப்படியா?” இம்முறை அமீரின் குரலில் கவலை நிரம்பி நின்றது.

“ஆம்” என்றான் அகூதா.

“ஏன்?” மீண்டும் வினவிய அமீரின் குரலில் நடுக்கமும் தொனித்தது.

இம்முறை அகூதா பதில் சொல்லு முன்பு அநபாயன் பதில் கூறினான். “அந்த மரக்கலம் புகார் செல்கிறது. “

“சீனக் கடலோடியின் சிறு கண்கள் ஆச்சரியத்தால் அளவுக்கு அதிகமாக விகசித்தன. “எப்படித் தெரியும் உங்களுக்கு?” என்று வியப்புடன் வினவினான் சீனக் கடலோடி.

“நேற்றுவரை புகார் செல்லும் மரக்கலம் எதுவும் துறைமுகத்துக்கு வரவில்லை. நீங்கள் இரண்டு மரக்கலங் களைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். எங்களைத் தப்புவிக்க ஒரு மரக்கலத்தை உபயோகிக்க நீங்கள் தீர்மானித் திருக்கலாம். நானாயிருந்தால் அப்படித்தான் செய்வேன். அபாயம் நிரம்பிக் கிடந்ததால் இரண்டு மரக்கலங்களில் ஒன்றைத்தான் நான் பலி கொடுப்பேன்” என்று விவரித்தான் அநபாயன்.

“இருக்கலாம். ஆனால் என் எண்ணம் சுங்கக் காவலருக்கு எப்படித் தெரியும்?” என்று வினவினான் அகூதா.

“புகாருக்குச் செல்லும் சரக்குகளை அந்த மரக்கலத்தில் ஏற்ற நீங்கள் அனுமதித்திருக்கலாம்” என்ற அநபாயன் மேலும் சொன்னான்: “நன்றாகக் கவனியுங்கள். இரண்டு அரசாங்கங்களைச் சேர்ந்தவர்கள், இரண்டு அரச குடும்பங் களில் அரியணையேறத் தகுதியுள்ளவர்கள் பீமன் கைகளி லிருந்து நழுவியிருக்கிறார்கள். நழுவிப் பாலூரில் மறைந் துறைகிறார்கள். அவர்கள் தப்பிச் செல்லும் வழி கடல் வழி ஒன்றுதான். அவர்கள் செல்லக்கூடிய துறைமுகம் புகார் ஒன்றுதான். எந்த மரக்கலம் புகாருக்குச் செல்லுமோ அதில்தான் அவர்கள் தப்பப் பார்ப்பார்கள். ஆகவே இன்றிரவிலேயே போலி வியாபாரிகளை விட்டுப் புகாருக்கு ஏதாவது மரக்கலம் போகிறதா என்று பார்த்திருக்கிறான் பீமன். இரவு பகலாகக் கப்பலில் சரக்கு ஏற்றுவது பாலூரில் சகஜம். ஆகவே புகாருக்குச் செல்லும் ஏதாவது ஒரு மரக்கலத்தில் போலிச் சரக்கை ஏற்ற ஏற்பாடு செய்திருக்கிறான். உங்கள் உபதலைவர்தானே இவர்? இவரிடம் வந்து போலி வியாபாரிகள் சரக்கைக் கொடுத்திருக்கிறார்கள். இவர் ஏற்றிக் கொண்டிருக்கிறார். அடுத்த ஜாமத்தில் நாங்கள் அந்த மரக்கலத்தில் இருக்கிறோமோ என்று சோதனை நடந்திருக்கிறது… ”

தன் விளக்கத்தை இந்த இடத்தில் சற்றே நிறுத்திய அநபாயனை வியப்புத் ததும்பிய கண்களுடன் நோக்கிய அகூதாவின் அடிமை, “உண்மை ! முக்காலும் உண்மை . வியாபாரிகள் தான் முதலில் சரக்கைக் கொண்டு வந்தார்கள். எனது கப்பல் புகார் செல்லவேண்டுமென எசமான் உத்தரவிட்டதால் ஏற்றிக்கொண்டேன்” என்றான்.
அகூதா பக்தி நிரம்பிய கண்களை அநபாயன்மீது திருப்பினான். “அநபாயரே! உமது அறிவு கூரியது. அந்த அறிவுதான் இப்பொழுது ஏற்பட்டுள்ள புதுச் சிக்கலையும் அவிழ்க்க வேண்டும்” என்று கூறிய அகூதா, “இனி இவன் நடத்தும் மரக்கலத்தின்மீது சிங்கப் படகுகளின் பார்வை இருக்கும். அதுமட்டுமல்ல, கடலோரமெங்கும் காவலிடப் பட்டிருக்கிறது. கடலுக்குச் செல்லும் கீழ்க்கோட்டை வாசலிலும் காவல் இரட்டிக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுதுள்ள நிலை இது. நாளை நிலை இன்னும் கடுமையாயிருக்கும்,” என்றும் சுட்டிக் காட்டினான்.

இதைக் கேட்டதும் மிகத் தெளிவான அமீரின் பார்வையிலும் குழப்பம் தெரிந்தது. அநபாயன் விழிகள் மட்டும் நிர்மலமாயிருந்தன. சற்று யோசனையால் அவன் நுதல் மட்டும் சிறிது சுருங்கி வரிக்கோடுகள் மூன்று குறுக்கே பாய்ந்து சென்றன. பல வினாடிகள் தலை தாழ்த்தி மௌனமாகவே இருந்த அநபாயன் கடைசியாகத் தலை நிமிர்ந்தான். “அகூதா! நிலைமை அபாயமானது தான். ஆனால் அபாயந்தான் வீரர்களின் போர்த்திறமையையும் சிந்தனைத் தெளிவையும் அளக்கும் கருவி. காலையில் இதற்கு ஒரு வழி கண்டுபிடிப்போம். எப்படியும் நாளை இரவு பாலூரை விட்டுப் புறப்பட்டு விடுவோம்” என்று திட்டமாக அறிவித்துவிட்டு அமீரை நோக்கித் திரும்பிய அநபாயன், “அமீர், குணவர்மர் எப்பொழுது இங்கு வரமுடியும்?” என்று வினவினான்.

“இன்றிரவு நான்காம் ஜாமத்தில் வருவார்” என்றான் அமீர்.

“எங்கு தங்க வைத்திருக்கிறாய் அவரை?”
“குதிரைச்சாலை விடுதியில். “

“என்ன! இப்பொழுது சென்றோமே அங்கேயா?”

“ஆம். குதிரைச்சாலை பீமன் அரண்மனைக்கு அருகில் இருக்கிறதல்லவா? ஆகவே யாரும் அங்கு அவரைத் தேடமாட்டார்கள். “

“அவரை அனுப்பச் சொல்லிக் குதிரைச்சாலைத் தலைவரிடம் நீ சொல்லவில்லையே. “

“பணியாட்களைப் பற்றிச் சொன்னேனே?”

“கடாரத்தின் இளவரசன் பணியாளா!”

“மண்டலாதிபதிகளும் பணியாட்களாக வேஷம் போடும் அவசியம் நேரிடத்தானே செய்கிறது. “

மற்ற அத்தனை பேர் மேலும் கலிங்கவீரர் கண் ணோட்டமிருக்கக் குணவர்மனைப் பற்றி மாத்திரம் தங்களுக்கோ கலிங்க வீரர்களுக்கோ எந்தவிதத் தகவலும் கிடைக்காத மர்மத்தைப் புரிந்துகொண்ட அநபாயன் சாதாரண சமயமாயிருந்தால் அமீரின் சாமர்த்தியத்தைப் பற்றிப் பெரிதும் பாராட்டியிருப்பான். ஆனால் ஆபத்து நிறைந்த அந்தச் சமயத்தில் அவன் மனம் அத்தகைய பாராட்டுதல்களை அள்ளி வீசும் நிலையில் இல்லை. ஆகவே, “சரி அமீர்! எல்லோரையும் காலையில் இந்த அறையில் திரட்டிவை. என் திட்டத்தை அதற்குள் முடிவு செய்கிறேன்” என்று கூறிவிட்டு அமீரிடமும் அகூதா விடமும் விடை பெற்றுக்கொண்டு தன் அறைக்குச் சென்றான். அநபாயன் வார்த்தைகளைக் கேட்ட அகூதாவின் முகத்தில் நம்பிக்கையேதும் துளிர்விடவில்லை. பீமனுடைய பெரும் காவலை உடைக்கும்படியான அப்படியென்ன பெரும் திட்டத்தைக் காலைக்குள் அநபாயன் வகுக்க முடியும் என்று எண்ணினான் அந்தச் சீனக் கடலோடி. ஆனால் காலையில் அவர்கள் கூடிய சில நிமிடங்களில் அவன் சந்தேகம் பறந்தது. அநபாயன் திட்டம் அத்தனை கச்சிதமாக இருந்தது. அமீரின் விடுதியிலிருந்து கிளம்பி மரக்கலம் பாலூர்த் துறையிலிருந்து பாய் விரித்துப் பறக்கும் வரையில் ஒவ்வோர் எதிர்ப்பையும் சமாளிக்கத் தக்கதும் சந்தேகத்தக்கு இடம் கொடாதது மான பெரும் திட்டத்தை அநபாயன் வகுத்திருந்தான். “அபாயமான திட்டம்தான்! ஆனால் நூற்றுக்குத் தொண்ணூறு வெற்றி கிடைக்கும். வெற்றிக்கு இது வழிதான் ..” என்பதை அகூதாவே ஒப்புக்கொண்டான். அந்தத் திட்டத்தைப் படிப்படியாக அனைவர் முன்னிலையிலும் விவரிக்கத் தொடங்கினான் அநபாய குலோத்துங்கன்.

Previous articleRead Kadal Pura Part 1 Ch30 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch32 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here