Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch32 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch32 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

109
0
Read Kadal Pura Part 1 Ch32 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch32 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch32 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 32 :முதல் பலி.

Read Kadal Pura Part 1 Ch32 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கிருஷ்ணபக்ஷத்து நான்காம் நாள் காலைப் பொழுது தனது ஆயுளில் ஐந்து நாழிகைகளை ஓட்டிக்கொண்ட சமயத்தில் அமீரின் இல்லத்தில் மூன்றாம் கட்டின் அந்தரங்க அறையில் தனது வெற்றித் திட்டத்தை விவரிக்க முற்பட்ட அநபாயன் பேச்சைத் துவங்கு முன்பாக எதிரே அமர்ந்திருந்தவர்களின் முகங்களைச் சில விநாடிகள் உற்றுநோக்கினான். பொழுது விடிந்ததும் எதிரேயிருந்த முகங்களில் கவலை மட்டும் விடியாதிருப்பதைக் கண்ட சோழர்குல இளவல் அவர்கள் கவலையின் வேகத்தை உணர்ந்தேயிருந்தான். கடந்த மூன்று நாள்களாகப் பாலூரில் நடந்த நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட அனைவரும் அந்த அறையில் கூடியிருந்ததைக் கவனித்த அநபாயன் கலிங்கத்தின் எதிரிகளை ஒரே அறையில் ஒழிக்கப் பீமனுக்கு அதைவிடச் சிறந்த சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்ற நினைப்பால் தன் கடை இதழில் சிறிது புன்முறுவலையும் தவழவிட்டான். குதிரைச்சாலைத் தலைவனான அரபு நாட்டான் பாதுகாப்பில் அமீரால் வைக்கப்பட்டிருந்த குணவர்மனும் அமீரின் இல்லப் பாதுகாப்பிலிருந்த காஞ்சனாதேவியும் அக்கம் பக்கத்திலமர்ந்திருந்ததன்றி மீண்டும் மீண்டும் ஒருவரை யொருவர் பிரிய இஷ்டப்படாததுபோல் இருவர் கைகளும் ஒன்றையொன்று பற்றிக்கிடந்ததையும் அவர்களை விட்டுச் சற்றே விலகி உட்கார்ந்திருந்த இளையபல்லவன் காஞ்சனாதேவி மீதுகூட கண்களைச் செலுத்தாமல் தன்னையே நோக்கிக் கொண்டிருந்ததையும் பீமனுடைய கடுமையான காவலை உடைக்கக்கூடிய என்ன விந்தைத் திட்டத்தைத்தான் சொல்லிவிட முடியும் என்ற எண்ணத்தால் சீனக் கொள்ளைக்காரனான அகூதா தனது முகத்தில் ஓரளவு அவநம்பிக்கையுடன் அமர்ந்திருந்ததையும், தன்னிடம் அளவுக்கு மீறிய . நம்பிக்கை உடைய அமீர் மட்டும் முகத்தில் எந்தவிதச் சந்தேகத்தையோ கவலையையோ காட்டாமல் உத்தரவு எந்தத் திக்கில் பிறப்பிக்கப்படும் என்பதை எதிர்பார்க்கும் தூதன் போல் தன் வாயையே கவனித்துக் கொண்டிருந்ததையும் தனது புலிக் கண்களால் அளவெடுத்துக் கொண்ட அநபாயன், அவர்கள் மனங்களில் ஓடிய பல்வகை எண்ணங்களை எடை போட்டதால் திட்டத்தை மெல்ல மெல்லவே விவரிக்கத் தொடங்கினான். திட்டத்தைத் திடீரென்று சொல்லாமல் அதற்குப் பூர்வ பீடிகையொன்றும் போட்டுக்கொண்டு பேச ஆரம்பித்து, “பௌர்ணமி கழித்த நான்காம் நாள் இது. கடந்த மூன்று நாள்களில் பாலூரில் நடந்த நிகழ்ச்சிகளை நீங்கள் அறிவீர்கள். இரண்டு அரசாங்கங்களின் தற்போதைய உறவு, பிற்காலத்தின் நலன் அனைத்தும் அந்த நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இதோ அமர்ந்திருக்கும் கடாரத்தின் மன்னர் இவர் இளவரசரா மன்னரா என்று தீர்மானிக்க முடியாத நிலையில் அந்த அரசாங்கம் இருக்கிறது ஆகவே மன்னரென்றே அழைக்கிறேன். இவரும் இவரது மகள் இளவரசி காஞ்சனாதேவியும் கடாரத்தின் தளையை அவிழ்க்கச் சோழ நாட்டு உதவி நாடி வந்திருக்கிறார்கள். ஆகவே இவர்களைக் காப்பது சோழ நாட்டின் இளவரசன் என்ற முறையில் என் பொறுப்பாகிறது. பாலூர்ப் பெருந்துறையில் மூன்றிலொரு பங்குள்ள தமிழ்ப் பெருமக்களின் நலனைப் பாதுகாப்பதும் சோழ மன்னர் வீரராஜேந்திர சோழ தேவனின் பிரதிநிதி என்ற முறையில் என் கடமையாகிறது. இந்த இரண்டு கடமைகளையும் நிறைவேற்ற இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று கலிங்கத்தின் படைகளிலும், மற்றத் துறைகளிலுள்ள தமிழ் மக்களைத் திரட்டிப் பாலூரை ரத்தக் களறியாக்குவது. இரண்டாவது எந்த ரத்தக் களறியும் ஏற்படாமல் தந்திரத்தால் நாலைந்து பேரின் வீரத்தாலும் துணிவாலும் தப்பிச் செல்வது. முதல் வழி பயங்கரமானது. நாம் அப்புறம் சென்றதும் இந்த ஊரிலுள்ள தமிழ் மக்களை உருத்தெரியாமல் அடிப்பது, போர் வெறி பிடித்திருக்கும் பீமனுக்கும் அனந்தவர்மனுக்கும் சோழர்களுடன் போர் தொடங்க ஒரு காரணத்தை அளிப்பது. இந்த முறையைச் சோழர் குல இளவரசனானநான் அனுமதிக்க முடியாது. நாடுகளின் வேறுபாடுகளைத் தீர்க்கக் கடைசி பக்ஷமாகத்தான் இருக்க வேண்டும். தவிர நாம் பாலூர் விட்டு நகர்ந்ததும் பெரும் படைகளைக் கொண்டு தமிழர்களையும் பழி வாங்க, பீமனைத் தூண்டும் வழி சிறந்த வழி அல்ல. ஓர் இளவரசன் காட்டக்கூடிய வழியும் அதுவல்ல. போரைக் கண்டு சோழநாடு அஞ்ச வில்லை. ஆனால் அனாவசியமாகப் போரில் நாட்டை இறக்குவதற்கும் அது இஷ்டப்படவில்லை. இன்று உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லுகிறேன். அதோ உட்கார்ந் திருக்கும் எங்கள் படைத்தலைவரைப் போலவே நானும் இங்கு சோழ மன்னரால்தான் அனுப்பப்பட்டேன். ஆனால் சில வாரங்கள் முன்னதாக அனுப்பப்பட்டேன். எதற்கு?..” என்று பேசிக்கொண்டு போன அநபாயன் சற்றுப் பேச்சை நிறுத்தினான்.

அந்த அறையில் குழுமியிருந்த யாரும் பதில் சொல்லும் நிலையில் இல்லாததைக் கண்டு அநபாயன் தானே மேற்கொண்டு காரணத்தைச் சொன்னான். “தென்கலிங்கத்துப் பீமனும் வடகலிங்கத்து அனந்தவர்மனும் பரஸ்பர இணைப்பு ஏற்படுத்திக் கொண்டார்களாஎன்பதை அறிய அனுப்பினார். அது மட்டுமல்ல, இந்த இணைப்பு இருந்த போதிலும் தென் கலிங்கத்துப் பாலூரில் வாழும் தமிழர் நிலை நல்ல முறையிலிருக்கிறதா? சோழநாட்டிடம் தீரா விரோதமுள்ள அனந்தவர்மன் போதனையால் பீமன் தமிழர்களின் விரோதியாகி விட்டானா என்பதை உணரவும் அனுப்பினார். அத்துடன் கடாரத்து மன்னர் சோழநாடு வருவதாகவும் செய்தி வந்தது. அப்படி வந்தால் அவரைப் பாலூரில் வரவேற்றுப் பத்திரமாகச் சோழநாடு அழைத்து வரும்படி சோழ மன்னர் பணித்தார். இத்தனை அலுவல்களையும் ஏற்று வந்தேன். வந்தபின் இங்கு நிலைமை கடுமையாயிற்று. சோழ நாட்டுக்கு இங்குள்ள நிலை பற்றிச் செய்திகூட என்னால் அனுப்ப முடியவில்லை . ஆகவே இளையபல்லவரையும் சமாதான ஓலையுடன் அனுப்பியிருக்கிறார். நாங்கள் இருவரும் வந்த பணியில் ஒன்று பலனற்று விட்டது. நிரந்தர சமாதானம் சாத்தியமில்லை . தமிழர் நிலை கேவலமாயிருக்கிறது. இந்தச் சமயத்தில் இங்கு போரைப் புகுத்துவதால் ஆரம்பத்தில் தமிழர் சேதம் பெருவாரியாயிருக்கும். இங்குள்ள தமிழர் சமூகம் பெரும் படைகளால் அழிக்கப்படாலும் படலாம். ஆகையால் அதைத் தவிர்க்க இஷ்டப்படுகிறேன். அதற்கு ஒரே வழிதான். நமது தலைகளைப் பணயம் வைத்துத் தப்புவதைத் தவிர வேறு வழியில்லை . அத்தகைய ஆபத்தான மார்க்கத்தைத்தான் நாம் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. நமது சிக்கலில் சம்பந்தப்படாதவர்களும் சிலர் இருக்கிறார்கள். ஆனால் நமக்கு உதவ முன்வந்திருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுதுகூட இந்த ஆபத்தை ஏற்க இஷ்டப்படாவிட்டால் விலகலாம். அவர்களை நமக்காகவோ சோழ நாட்டுக்காகவோ, தியாகம் செய்யச் சொல்ல நமக்கு உரிமையில்லை… ” என்ற அநபாயன், அகூதா, அவன் அடிமை, அமீர் இவர்களை ஒருமுறை கூர்ந்து நோக்கினான.

இதைக்கேட்ட அமீரின் முகத்தில் சங்கடம் தெரிந்தது. அகூதாவின் அடிமை முகம் கல்லாயிருந்தது. அகூதாவின் சிறு விழிகள் ஆச்சரியத்துடன் அந்த வீர புருஷனின் கண்களோடு கலந்தன. “நாங்கள் பின்வாங்கினால் தங்கள் விடுதலைத் திட்டம் நிறைவேறுவது சாத்தியமா?” என்று மெள்ளச் சொற்களையும் உதிர்த்தான் அகூதா.

“நீங்கள் பின்வாங்கினால் நான் இன்றிரவு கடைப்பிடிக்க இருக்கும் திட்டம் நிறைவேறாது. வேறு திட்டத்தைத்தான் யோசிக்க வேண்டும். ஆனால் உங்களைப் பேராபத்தில் சிக்கவைக்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று கேட்டான் அநபாயன்.

“நாங்கள் மரக்கலங்களில் இருக்கப் போகிறோம். நீங்கள் வந்ததும் பாய் விரித்து ஓடப் போகிறோம். இதில் ஆபத்து என்ன இருக்கிறது?” என்று வினவினான் அகூதா.

“நீங்கள் மரக்கலங்களில் இருக்கலாம். ஆனால் உங்கள் படகுகளில் இரண்டு கரையருகே இருக்க வேண்டும். கரையிலும் காவலிருப்பதாக நீங்கள் சொல்லுவதால், உங்கள் படகுகளிலிருக்கும் மாலுமிகள் எந்த நேரத்திலும் சிறை செய்யப்படலாம் அல்லது எங்களால் கடற்கரையில் கலவரம் ஏற்பட்டால் வெட்டப்பட்டாலும் படலாம். அப்படி வெட்டப்பட்டு ரகளை நிகழ்ந்தால் உடனே பாலூர் அரசாங்க ஆயூதப் படகுகள் உங்கள் மரக்கலங்களை வளைத்துக் கொள்ளும்; தீப்பந்தங்களை எறிந்து உங்கள் மரக்கலப் பாய்களைக்கொளுத்த அவற்றுக்கு எத்தனை நேரம் பிடிக்கும்?” என்று வினவினான் அநபாயன்.

இதைக் கேட்ட அந்தச் சீனக் கடலோடி அநாயாசமாகச் சிரித்தான். “அநபாயரே! நீங்கள் சொல்லும் அபாயத்தை முன்பே நான் யோசித்தேன். நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா என்பதற்காகத்தான் கேட்டேன். அபாயமில்லாத வாழ்க்கையில் ருசி எங்கிருக்கிறது? உங்களைப் போன்ற ஒரு வீர புருஷனுக்கு உதவ என் இரண்டு மரக்கலங்களல்ல, உயிரையே பலி கொடுக்கத் தயாராயிருக்கிறேன். ஆனால் உன் உயிரைப் பலி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பலி கொடுப்பது சாத்தியமும் இல்லை. இதைவிடப் பெருத்த’ அபாயங்களே என்னை அழிக்க முடியவில்லை” என்று சொற்களை உதிர்த்தான் அகூதா அந்தப் பெரு நகைப்புக்கிடையே.

எதற்கும் அஞ்சாத அகூதாவின் துணிவைக் கண்டு அநபாயனே ஆச்சரியப்பட்டான். அத்துடன் நன்றியும் தொனிக்கும் குரலில் சொன்னான், “சீனக் கடல் வீரரே! உங்கள் உதவியைத் தமிழகம் என்றும் மறக்காது” என்று.

இத்துடன் அகூதாவுடன் சம்பாஷணையை முடித்துக் கொண்ட அநபாயன் அமீரை நோக்கிவிட்டு மற்றவர்களையும் நோக்கிச் சொன்னான்: “முடிந்தால் அமீரை இந்த அபாயத்திலிருந்து விலக்கலாம். ஆனால் என் மனோ பாவத்தை முன்கூட்டி அறிந்த அமீர் அதற்கு வழியில்லாமற் செய்துவிட்டான். நமக்காக அரண்மனைக்குப் பின்புறத்திலுள்ள குதிரைச்சாலை விடுதியில் அதன் தலைவன் பராமரிப்பிலேயே குணவர்மரையும், பணிப்பெண்களையும், அவர் பணியாட்களையும் தங்கவைத்துக் காப்பாற்றியிருக்கிறான். இங்கு நாம் தங்கியிருப்பது பீமனுக்குத் தெரிந்தாலும் அமீரின் தலை அவன் தோள்களில் பத்திரமாக உட்கார்ந்திருக்க முடியாது. தவிர அமீரில்லாமல் நாம் தப்பவும் முடியாது. நான் வகுத்திருக்கும் திட்டத்துக்கு அமீரும் அகூதாவும் இரு சக்கரங்கள். அச்சு சோழ நாட்டின் படைத்தலைவன். இவற்றில் ஏதாவதொன்று கழன்றாலும் முறிந்தாலும் ஆபத்துதான்” இப்படிச் சொல்லிவிட்டுக் காஞ்சனாதேவியின் கருவிழிகளைச் சந்தித்த அநபாயன், “தேவி! உங்களை விட்டு விட்டதாக நினைக்க வேண்டாம். உங்கள் வீரக்கலங்களுக்கும் முக்கிய பணி இருக்கிறது” என்று சொல்லி, “இதோ நன்றாகக் கவனியுங்கள்” என்று கூறி மற்றவர்கள் மீது ஒருமுறை தன் ஈட்டி விழிகளை உலாவ விட்டு எதிரே இருந்த வண்ணச் சுவரில் கையிலிருந்த சுண்ணாம்புக்கட்டியால் வெள்ளைக் கோடுகள் சிலவற்றை இழுக்கவும், சில குறிகளைப் போடவும் முற்பட்டான். அடிக்கடி நின்று நின்று முடிக்கப்பட்ட அந்தச் சித்திரத்தைச் சில விநாடிகள் உற்று நோக்கிவிட்டுச் சற்று எட்ட உட்கார்ந்திருந்த இளைய பல்லவனையும் உற்று நோக்கினான் அநபாயன்.

அதுவரை கவலை மூடிக்கிடந்த இளையபல்லவன் வதனம் பனித்திரை கிழிந்த வானம்போல் திடீரென ஒளி பெற்றது. கண்களில் சரேலெனப் பளிச்சிட்ட வீராவேசம் முகத்திலும் கனவேகத்தில் பரவியது. துவண்ட உடலில் சுரணை பலமாக ஓடியதற்கான அறிகுறிகளும் தென்பட்டன. “நல்லது! நல்லது!” என்று அவன் நாவும் உற்சாகத்துடன் சொற்களைக் கொட்டின.

அநபாயன் வரைந்த கோடுகளிலிருந்து அவன் என்ன புரிந்துகொண்டான் என்பது காஞ்சனாதேவிக்குப் புரியாததால் அவள் சற்றுக் கோபத்துடன் அநபாயனைப் பார்த்து, “இளைய பல்லவருக்கும் தங்களுக்கும் உயிர், நினைப்பு திட்டத்தை. ஆனால் எங்களுக்குப் புரியவில்லை” என்றாள்.

அந்தப் பெண்ணின் ஆத்திரத்துக்குக் காரணம் அநபாயனுக்குத் தெள்ளென விளங்கியது. தாங்கள் காதல் கொள்பவனுடைய எண்ணம், உணர்ச்சி, எல்லாம் தங்களுடன் ஒன்ற வேண்டுமேயொழிய வேறொருவனிடம் ஒன்றுவதை விரும்பாத பெண் மனப்பான்மையே அவள் சீற்றத்துக்குக் காரணமென்பதால் குறுநகை கொண்ட அந்தப் பிற்கால குலோத்துங்கன், “கோபம் வேண்டாம். எங்கள் நீண்ட நாள் பழக்கத்தால் கருணாகரன் என் யோசனையைப் புரிந்து கொண்டான். இன்னும் சில காலம் உங்களுடன் பழகினால் அவன் என்னைப் புரிந்துகொள்ள இஷ்டமும் படமாட்டான்” என்று பேசிவிட்டு, “கவனி யுங்கள் காஞ்சனாதேவி! அமீர் இதுவரையில் கொண்டு வந்துள்ள செய்திகளும் சரி. இன்று அகூதா கொண்டு வந்திருக்கும் செய்தியும் சரி, ஒரு விஷயத்தை ஊர்ஜிதப் படுத்துகின்றன. பீமன் கடல் வழியையும் தடை செய்து விட்டான் என்பதுதான் அது. கடலை நாம் அடையக் கூடிய வழிகள் இரண்டு. ஒன்று கோதாவரி மார்க்கம். இரண்டாவது கிழக்குக் கோட்டை வாசலின் நிலவழி. பாலூரின் தெற்குத் தோப்பிலுள்ள அமீரின் குடிசைக்கு அப்பாலுள்ள கோதாவரித் துறையில் படகுகளை நிறுத்தி அவற்றில் ஏறிச் சங்கமத்தைத் தாண்டி மரக்கலங்களை அடைந்துவிடலாமென முதலில் யோசித்தேன். அது இப்பொழுது சாத்தியமல்ல. முதல் காரணம் இது சித்திரை மாதம். பௌர்ணமி போய் இன்று நான்காவது நாள். இந்த மாதத்துக்கு கோதாவரியுடன் கடலின் பேரலைகள் பனைமர உயரத்துக்கு மோதுகின்றன. அந்த இடத்தை அணுக வேண்டாமென அரசாங்கப் படகுகளுக்கே உத்தரவு உண்டு. அப்படியே அந்த அபாயத்தை எதிர்த்து வெண்மதி கிளம்புமுன் மரக்கலங்களை அடையலாமென்றால் இடையே சுங்கச்சாவடி இருக்கிறது. சுங்கச் சாவடியில் நமது படகுகள் தேக்கப்பட்டு வெண்மதி கிளம்பிவிட்டால் அலைகள் உக்கிரம் மிக அதிகமாகிவிடும். அப்புறம் கோதாவரி கடல் சங்கம எல்லைக்குள் போவதைவிட பீமன் கையால் வெட்டுண்டு போவது மிகவும் சௌகரியமானது. ஆகையால் அந்த வழி பயனில்லை . பயனுள்ள ஒரே வழி கீழ்க்கோட்டை வாசல் ஒன்றுதான். அந்த வழியைத்தான் அமீர் குறிப்பிட்டான். அந்த வழியைத்தான் நானும் தேர்ந்தெடுக்கிறேன். அமீரின் நீர்க்குடங்கள் அவற்றுக்குப் பெரிதும் உதவுகின்றன. அந்தக் குடங்களும் நாமும் செல்லவேண்டிய முறையை அகூதா ஏற்கனவே சுட்டிக் காட்டியிருக்கிறார். அவர் சுட்டிக் காட்டிய வீரர்கள் திட்டம்தான் சிறந்தது. நீர்க்குடங்களில் ஒளிந்து காஞ்சனாதேவி, அவர் பணிப் பெண்கள் இருவர், குணவர்மர் வரலாம்; அமீர் வண்டி ஓட்டலாம். நானும் இளைய பல்லவனும் வண்டியின் பின்புறம் இருப்போம் இதெல்லாம் முன்னால் நாம் ஒப்புக்கொண்ட ஏற்பாடுகள். ஆனால் வண்டி கடலோரத்தை அடைவதில் சில கஷ்டங்கள் இருக்கின்றன. இதோ பாருங்கள்” என்று கூறிவிட்டுத் தன் ஆள்காட்டி விரலால் சுவரிலிருந்த ஒரு பெரும் புள்ளியைச் சுட்டிக் காட்டினான்.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சம்பாஷணைகளில் இளையபல்லவன் கலந்து கொள்ளவில்லை. திட்டம் வெகு தெளிவாகப் புரிந்திருந்தது அவனுக்கு. அநபாயன் அந்தப் புள்ளியைத் தொட்டுக் காட்டியதும் தலையை மட்டுமே அசைத்தான் சோழர் படைத்தலைவன். ஆனால் காஞ்சனா தேவி தன் அஞ்சன விழிகளை அந்தப் புள்ளியின்மீது நிலைக்கவிட்டு, “அந்த இடம் நாம் இப்பொழுதிருக்கும் அமீரின் வீடுதான்” என்றாள்.

“இல்லை. அமீரின் வீட்டுக் கொல்லைப்புறம் இது. வீட்டுக்கு இதோ இரு குறிகள் போட்டிருக்கிறேன்” என்று திருத்திச் சொன்ன அநபாயன், “இன்றிரவு சரியாக ஐந்தாவது நாழிகை துவங்கியதும் நீங்களும் உங்கள் தந்தையும் பணிப்பெண்களும் நீர்க்குடங்களில் பதுங்குவீர்கள். அமீரின் பெருவண்டி பன்னிரண்டு பெரும் குடங்களை ஏற்றிக்கொள்ளக் கூடியவை. ஆறு குடங்களில் நீர் இருக்காது. நீங்களிருப்பீர்கள். இன்று மாலைக்குச் சற்று முன்பாகவே அகூதாவின் கப்பல்களுக்கு நீர் சேகரிக்கும் படலம் துவங்கும். இரண்டு மரக்கலங்களிலிருந்தும் அகூதாவின் மாலுமிகளும் அடிமைகளும் நீர்க்குடங்களை ஊருக்குள் கொண்டுவந்து வண்டிகளில் கொண்டு போய்க் கொண்டிருப்பார்கள்… ” என்றான் அநபாயன்.

“மிகவும் சரி. அப்பொழுதுதான் இந்த வண்டி வரும் போது சந்தேகம் இருக்காது. மற்ற வண்டிகளைப் போலவே இதையும் நினைப்பார்கள்” என்று அகூதா இடைமறித்துக் கூறினான். “ஆம் சீனத் தலைவரே! அப்பொழுதுதான் சந்தேகம் ஏற்படாது. நாம் கூடியவரையில் தைரியத்துடன் இந்த வீட்டின் கொல்லைப்புறத்தை விட்டுக் கிளம்பலாம். அமீர் வண்டியோட்டுவதால் யாருக்கும் சந்தேகமும் ஏற்படக் காரணமில்லை. அப்படிச் சந்தேகம் ஏற்பட்டால் மூன்று இடங்களில் ஏற்படலாம்” என்ற அநபாயன், அந்த இடங்களைத் தன் விரலால் சுட்டிக் காட்டி, “முதல் இடம் கீழ்க்கோட்டை வாயில், இரண்டாவது இடம் அதை அடுத்துக் கடலலைகள் மோதும் கரைக்குச் செல்லும் பாதை, மூன்றாவது இடம் கடலோரம். இந்த மூன்று இடத்தில் எந்த இடத்தில் தடை நேர்ந்தாலும் ஒரு பலி நிச்சயம்” என்று விளக்கினான்.

இதைக் கேட்டதும் அந்த அறையில் சில விநாடிகள் நிசப்தம் சூழ்ந்தது. ‘திட்டத்தின் வெற்றிக்குப் பலி வேண்டுமா? பலியாரைக் கொடுப்பது?” என்ற கேள்விகள் அங்கிருந்த முகங்களில் எழுந்து “தாண்டவமாடின. ஒரு முகத்தில் மட்டும் கேள்வி தாண்டவமாடவில்லை. பதில் மட்டும் தாண்டவமாடியது. வெகு அலட்சியமாக ஆசனத்திலிருந்து எழுந்து பதிலை உதிர்த்த இளையபல்லவன் குரல் அந்த அறையை கணீரென்று ஊடுருவியது. “பலி இதோ இருக்கிறது. அதுவும் முதல் பலி” என்று தன் மார்பில் கையை வைத்துக் காட்டிய அவன் நுதலில் வீரக்களை சுடர் விட்டது. இதழ்களில் வீர நகையொன்றும் தவழ்ந்தது. அதுமட்டுமல்ல, “பலி கொடுப்பதானால் கொடுக்கும் இடம் அதோ” என்று தன் விரலையும் சுவரிலிருந்த கோடுகளை நோக்கிச் சுட்டிக் காட்டினான் இளையபல்லவன். அத்துடன் அநபாயனை நோக்கி, “இதைவிடப் பெரும் பாக்கியம் எந்த வீரனுக்கும் கிடைப்பது அரிது. இந்தப் பலியெனும் பாக்கியத்தை எனக்களியுங்கள் இளவரசே” . என்று அபாரத் துணிவும் தியாக வேட்கையும் நிரம்பிய சொற்களை உதிர்த்தான் சோழர்களின் படைத்தலைவன்.

Previous articleRead Kadal Pura Part 1 Ch31 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch33 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here