Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch33 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch33 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

178
0
Read Kadal Pura Part 1 Ch33 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch33 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch33 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 33 கை சொன்ன கதை.

Read Kadal Pura Part 1 Ch33 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

அமீர் வீட்டு அந்தரங்க அறையின் வண்ணச் சுவரிலே சுண்ணக்கட்டி கொண்டு கோடுகள் தீட்டப்பட்டதுமே திட்டத்தின் விவரங்களைத் திண்ணமாகப் புரிந்து கொண்ட இளையபல்லவன், கிழக்குக் கோட்டை வாயிலைக் குறிப்பிட்டு, முதல், பலியை இந்த இடத்தில் கொடுக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டியதன்றி, தன் ஆசனத்திலிருந்து எழுந்து நின்று அந்த நரபலியாகத் தன்னை ஏற்க வேண்டுமென்று கேட்டதும் அந்த அறையில் பயங்கர மௌனமே ஒரு விநாடி நிலவியது.

அடுத்த விநாடி எழுந்த கேள்வியும் அங்கிருந்த ஆண் மக்களிடமிருந்து எழவில்லை . “கூடாது! கூடாது! யாரும் பலியாகக் கூடாது!” என்று காஞ்சனாதேவியின் கிள்ளைக் குரலே அந்த அறையில் ஊடுருவிச் சென்றது. பலி கொடுக்க வேண்டிய இடத்தைச் சுவரில் விரலால் சுட்டிக் காட்டி நின்ற அநபாயன் தன் ஈட்டி விழிகளை அந்தக் கடாரத்து இளவரசியின் பங்கஜ முகத்தின்மீது மிகவும் பரிதாபத்துடன் திருப்பினான். அவள் நிலைமீறி உணர்ச்சி பொங்கச் சொற்களை வெளியிட்டதன் காரணம் அவனுக்கு நன்றாகப் புரிந்தேயிருந்தது. ‘இங்கு கடாரத்து இளவரசி பேசவில்லை. அவள் காதல் பேசுகிறது’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்ட அநபாயன், “இந்தப் பலி கொடுத்தால் மற்றவர்கள் பிழைக்கலாம் தேவி. இல்லையேல் இன்னும் ஒரேநாளில் நாமனைவரும் கலிங்கத்தின் வாள்களுக்குப் பலியாவோம்” என்றான்.

“வாழ்ந்தால் கூடிவாழ்வது. வீழ்ந்தால் கூடிவீழ்வது என்ற தத்துவம் உயரியதல்லவா?” என்று கேட்டாள் காஞ்சனாதேவி பளிச்சென்று.

இம்முறை அநபாயனுக்குப் பதில் இளையபல்லவனே பதில் கூறினான். காஞ்சனாதேவி இருந்த பக்கம் திரும்பிக் கூடப் பாராமல் எதிரே சுவரிலிருந்த கோடுகளிலேயே கண்களை நாட்டிக்கொண்டு, “தனி மனிதர்களுக்கு அந்தத் தத்துவம் சரி தேவி, நாடுகளுக்கல்ல!” என்று பதில் கூறினான் இளையபல்லவன்.

“இங்கு பலியாகப் போவது தனி மனிதரா, நாடா?” என்று கூறினாள் காஞ்சனாதேவி.

“தனி மனிதர் பாலியானால் நாடுகள் பலியாகா; இல்லையேல் இரண்டும் பலியாகும்” என்றான் இளைய பல்லவன்.

“நீங்கள் சொல்வது புரியவில்லை” காஞ்சனா தேவியின் குரலில் வருத்தம் துளிர்த்து நின்றது.

“புரியச் சொல்கிறேன், கேளுங்கள்” என்று துவக்கிய இளையபல்லவன், மற்றவர்களுக்கு முன்னால், தனக்கும் காஞ்சனாதேவிக்கும் சென்ற இரண்டு நாள்களுக்குள் வளர்ந்துவிட்ட காதலை வெளிப்படுத்த இஷ்டப்படாமல் அவளைக் “கேளுங்கள்” என்று மரியாதையாகவே அழைத் தான். மேற்கொண்டு அநபாயன் திட்டத்தை அவன் விவரித்தபோதும் அவளைச் சற்று மரியாதையாகவே விளித்து விஷயங்களை விளக்கலானான். “தேவி! இன்று இந்த அறையில் நாம் விவாதிக்கிறோம் நமது விடுதலை பற்றி. ஆனால் நமது விடுதலையில் பிணைந்திருப்பது நமது உயிர்கள் மட்டுமல்ல, கடாரம், சோழ நாடு இவற்றின் நலன்களும் கலந்திருக்கின்றன. நாம் அனைவரும் இந்த இடத்தில் பலியானால் நாடுகளின் நலன்களும் பலியாகும். உதாரணமாக உங்கள் தந்தையும் நீங்களும் பலியானால் கடாரத்தை ஜெயவர்மன் கையிலிருந்து மீட்பது யார்? குணவர்மன் வேண்டுகோளின்றி ஏன், வற்புறுத்தலின்றி சோழநாடு கடாரத்தின் மீது மரக்கலங்களை ஏவுமா? அநபாயர் பலியானால் சோழநாடு கலிங்கத்துடன் மோதாதிருக்குமா? அது மோதுவது இருக்கட்டும். இங்குள்ள தமிழர் வாளாவிருப்பார்களா? அடுத்த விநாடி ரத்தக் களரி ஏற்படும் தேவி! நீங்கள் நினைப்பது போல் கூடி வீழும் தத்துவம் நாம் இன்றுள்ள நிலைக்குப் பயன்படாது. தவிர, திட்டத்தில் அநபாயர் எதிர்பார்ப்பது போல் அப்படிப் பலி கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்றான் இளையபல்லவன்.

“பலிக்கு அவசியமில்லையா!” காஞ்சனாதேவியின் குரலில் சற்று நம்பிக்கை தொனித்தது.
.
“அவசியமில்லை. ஆனால் ஏற்படாது என்று திட்டமாகச் சொல்ல முடியாது. அதோ அந்தக் கோடுகளையும் புள்ளிகளையும் கவனியுங்கள்” என்று திட்டத்தை விளக்க முற்பட்ட இளையபல்லவன், “மேற்குக் கோடியிலிருக்கும் புள்ளிதான் இந்த வீட்டின் கொல்லைப்புறம். அதற்கு அடுத்து, குறுக்கும் . நெடுக்குமாக இழுக்கப்பட்டுள்ள கோடுகள் இந்தக் கொல்லைப்புறத்தை அடுத்த சிறு தோப்பைக் குறிக்கின்றன. தோப்புக்கு அடுத்தபடி பட்டையாக இழுக்கப்பட்டுள்ள மூன்று கோடுகளும் மூன்று பெருவீதிகள். அந்த வீதிகளைக் கடக்கும் வரையில் அதிக ஆபத்தில்லை. ஏனென்றால் முதல் சோதனை அந்த முப்பெரும் வீதிகளைத் தாண்டி, கடல் முகப்பிலிருக்கும் கிழக்குக் கோட்டை வாசலில்தான் நடக்கும். அங்கு நமது வண்டி மட்டும் இருந்தால் மாடுகளை வேகமாக முடுக்கி நீர்க்கரையை அடைய முயலலாம். ஆனால் வண்டிகள் பல நீர்க்கரைக்குச் செல்லும். அப்படிச் செல்லும் வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்திப் பரிசோதிக்கப்படும். அந்தப் பரிசோதனையில் நீர்க்குடங்களை வீரர்கள் அதிகமாகத் தட்டிப் பார்க்காமல் விட்டுவிட்டால் தப்பிவிடலாம். பலிக்கு அவசியமிருக்காது. அப்படியில்லையேல், சோதனையில் சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும், வண்டியின் பின்புறம் உட்கார்ந்திருக்கும் நானோ அநபாயரோ கீழே குதித்து வீரர்களை மறித்து வண்டி வேகமாக நீர்க்கரைக்குச் செல்ல அவகாசம் கொடுக்க வேண்டும். அப்படி அவகாசம் கொடுக்கும்போது வீரர்களைத் தடுத்து நிற்பவனுக்குத் தப்ப அவகாசமிருக்காது. போரிட்டு மடிய வேண்டியதுதான்..” என்று சொல்லிக்கொண்டு போன இளையபல்லவனை இடைமறித்த காஞ்சனாதேவி, “ஏன் மடிய வேண்டும்? இந்த ஊருக்கு வந்த புதிதில் அதே கோட்டை வாசலிலிருந்து நீங்கள் தப்பவில்லையா?” என்று வினவினாள்.

இளையபல்லவன் இம்முறை அவளைத் திரும்பி நோக்கினான். அவன் கடை இதழ்களில் புன்முறுவலொன்றும் தவழ்ந்து நின்றது. “அந்த நிலைமை வேறு, இன்று நிலைமை வேறு தேவி. அன்று நிகழ்ந்த சம்பவம் திடீரென்று நிகழ்ந்தது. இன்றிருப்பதுபோல் அத்தனைக் காவல் எச்சரிக்கையும் இல்லை. அன்று தப்புவதற்கும் அடைக்கலம் புகுவதற்கும் இடமொன்று கிடைத்தது… ” என்று அர்த்த பாவத்துடன் அந்த அஞ்சன விழியாளைப் பார்த்த இளையபல்லவன் அநபாயனை நோக்கிக் கேட் டான்: “கிழக்குக் கோட்டை வாசலில் வீரர்களை நான் சில நிமிடங்கள் தடுக்கலாம். அதற்குள் நீர்க்கரைக்கு வண்டி போய்விட முடியுமா? நீர்க்கரைக்கும் கோட்டை வாசலுக்கு முள்ள பாதை நீண்டதாயிற்றே. என்னை வெட்டிப் போட்டு வீரர்கள் தொடர்ந்தால் என்ன செய்வீர்கள்?”

அநபாயன் கண்கள் இளையபல்லவன் கண்களுடன் சில விநாடிகள் கலந்தன. “அதையும் யோசித்தேன் கருணாகரா! நம்முடைய வண்டிக் காளைகள் என்ன தான் முடுக்கப்பட்டாலும் கோட்டை வாசலிலிருந்து நீர்க் கரையை அடைய நிமிடங்கள் பல ஆகும். உன்னைச் சுற்றிக்கொண்டே கலிங்கத்து வீரர்கள் வண்டி போகும் திசையையும் எண்ணத்தையும் புரிந்துகொண்டால் கண்டிப்பாக வண்டியைத் துரத்தி மடக்கப் பார்ப்பார்கள். ஆனால் மடக்க முடியாது” என்று திட்டமாகத் தெரிவித்த அநபாயன், காஞ்சனாதேவியை நோக்கி, “தேவி! இந்த இடத்தில்தான் உங்கள் சேவை தேவையாயிருக்கும்” என்றான்.

“என்ன சேவை அநபாயரே?” என்று கேட்டாள் காஞ்சனாதேவி.

“உங்கள் நாட்டில் பெருவில் மட்டும் உண்டு. எங்கள் நாட்டில் உண்டை வில் என்ற சிறு வில் உண்டு” என்றான் அநபாயன்.

சோழர்குல இளவல் எதற்காக இதைச் சொல்கிறான் என்பதைப் புரிந்துகொள்ளாத காஞ்சனாதேவி குழப்பத்துடன் கேட்டாள்: “உண்டை வில்லா ?” என்று .

“ஆம் தேவி! உண்டை வில். உங்கள் பெரு வில் நீர்க் குடத்தில் பிடிக்காது. ஆனால் தமிழகத்தில் சிறுவர்கள் சிறு விற்களில் களிமண் உருண்டைகளை வைத்து மரக் கனிகளை அடிப்பது உண்டு. சாதாரண வில் போன்றதுதான் அது. ஆனால் நான் நல்ல சருமத்தைச் சுருட்டிச் செய்யப்படுவதால் பெரு வில்லின் வேகமுடையது. அந்த வில் மூலம் நன்றாக இழுத்து எய்யப்படும் அம்பு ஆகாயத்தில் நீண்ட தூரம் செல்லும். “

“எதற்கு அது இப்பொழுது?”

“ஒருவேளை நமது வண்டி தேக்கப்பட்டு, கருணாகரன் கீழே குதித்து வீரர்களைத் தடுத்து நின்றால் அமீர் தமது வண்டியைக் கடும் வேகத்தில் துரத்துவான். அந்த வண்டி அப்படிப் பறந்து ஐம்பதடி தூரம் சென்றதும் நீங்கள் நீர்க்குடத்தின் மறைவிலிருந்தே உண்டை வில் மூலம் எரியம்பு ஒன்றை ஆகாயத்தில் அனுப்ப வேண்டும். அதற்கான வசதிகள் – உண்டை வில், நீண்ட துணி சுற்றி எண்ணெய் தோய்த்த அம்பு. இவை உங்களுடன் நீர்க் குடத்தில் வைக்கப்படும். உங்கள் குடத்துக்குப் பக்கத்தில் வண்டியில் வெளிச்சத்துக்காகத் தீப்பந்தம் ஒன்றும் செருகப்பட்டிருக்கும். அம்பை மட்டும் வெளிநீட்டிப் பற்றவைத்துக் குடத்திற்குள் கொண்டு போய் உண்டை வில்லில் நாணிழுத்து ஆகாயத்தில் பறக்கவிடுங்கள். “

இதை எதற்காகச் சொல்லுகிறான் அநபாயன் என்று மற்றவர்களுக்குப் புரியாவிட்டாலும் அமீருக்கு மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்தது. “ஆகாயத்தைப் பார்த்திருங்கள் அடையாளத்துக்கு” என்று அநபாயன் குதிரைச்சாலைத் தலைவனுக்குக் கூறியதன் நோக்கம் அப்பொழுதுதான் புரியவே, அமீர் பயமும் பக்தியும் ஆச்சரியமும் கலந்த பார்வையொன்றை அநபாயன்மீது செலுத்தினான்.

‘ஆகாயத்தில் எரியம்பு போனதும் அரபு நாட்டான் முரட்டுப் புரவிகள் இருபதையும் அவிழ்த்துக் குறுக்கே விரட்டிவிடுவான். தாறுமாறாகப் பாய்ந்து செல்லும் அந்தப் புரவிகளைத் தாண்டி வண்டியை மடக்க ஆயிரம் கலிங்கத்து வீரர்களாலும் முடியாது. ஆகாகா! எப்பேர்ப் பட்ட திட்டம்! எத்தனை கூரிய அறிவு இவருக்கு! படிப்படியாக ஒவ்வொரு தடையையும் சமாளிக்க ஏற்பாடு செய்திருக்கிறாரே’ என்று நினைத்து நினைத்து வியப்பில் ஆழ்ந்த அமீரின் உள்ளத்தில் கவலையும் புகுந்துகொண்டது. ‘அரபுப் புரவிகளின் வேகம், தாறுமாறான பாய்ச்சல், பழக்கப்படாததால் கடிக்கும் சுபாவம், இத்தனையும் மீறிக் கலிங்க வீரர் வரமுடியாது. ஆனால் அதேபோல் அந்தப் புரவிகள் நம் வண்டி மீதும் பாய்ந்தால்!’ என்று எண்ணினான். அடுத்த வினாடி விளைவைப் பற்றி எண்ணவும் பயந்தான். ‘விளைவு விபரீதமாகும். நீர்க்குடங்கள் உடையும். மாடுகள் மிரளும். வண்டியே புரவிகளால் கவிழ்க்கப்பட்டாலும் படலாம். அப்படிக் கவிழ்க்கப்பட்டால் யார் வண்டிச்சக்கரத்தில் அகப்படுவார்கள்? யார் புரவிகளின் கால்களில் சிக்குவார்கள்? சொல்ல முடியாத பயங்கரம்!’ என்று நினைத்த அமீர் திகிலின் சொரூபமாக விளங்கினான்.

அவன் திகிலின் காரணத்தைப் புரிந்துகொண்ட அநபாயன், “நீ நினைக்கும் கஷ்டமும் இருக்கிறது அமீர். ஆனால் வண்டியை வேகமாகச் செலுத்த உனக்கிருக்கும் சாமர்த்தியத்தில்தான் நான் அந்த ஆபாயத்திலிருந்து மீள நம்பிக்கை வைத்திருக்கிறேன்” என்றான்.

அமீரும் அநபாயனும் பரிமாறிக்கொண்ட சொற்களையும் எண்ணங்களையும் புரிந்து கொள்ள முடியாததால் அந்தத் திட்டத்தைப் பற்றிய விவரங்களையும் மற்ற வர்களுக்குத் தெரிவித்தான் அநபாயன். ஆகாயத்தில் எரியம்பு பறந்ததும் மூர்க்கத்தனமுள்ள இருபது அரபுப் புரவிகள் தாறுமாறாக ஓடிக் கிழக்கு வாசல் வீரர்களைத் தேக்கும். அவற்றைத் தாண்டுவது பெரும் படைக்கும் சுலபத்தில் முடியாது; அந்தக் குழப்பத்தில் கிடைக்கும் இடைக்காலத்தை நாம் நீர்க்கரையை அடையப் பயன்படுத்திக் கொள்வோம். நீர்க்கரையில் சீனத் தலைவரின் படகுகள் தயாராயிருக்கும். வண்டி நின்றதும் குடங்களில் உள்ளவர்கள் தரையில் குதித்துப் படகுகளுக்கு ஓட வேண்டும். தொடரும் வீரர்களை நானும் அமீரும் தடுத்து நிற்போம். தேவியும் குணவர்மரும் மற்றோரும் படகுகளில் ஏறியதும் நாங்களும் ஓடி ஏறிக்கொள்வோம். பிறகு படகுகள் புகார் செல்லும் மரக்கலத்தை நோக்கி விரையும். படகு அணுகியதும் அந்த மரக்கலம் பாய் விரித்தோடத் தயாராயிருக்கும். இதுதான் திட்டம். இடையே பல இடுக்கண்கள் நேரலாம். அவ்வப்பொழுது அவற்றை நமதுயுக்தி கொண்டு முடிந்த வரை சமாளிக்க வேண்டும். மனிதயுக்தி இவ்வளவுதான். மற்றபடி நாம் தப்புவதும் அல்லாததும் ஆண்டவனின் கரங்களில் இருக்கின்றன” என்று சொல்லித் தலையைக் குனிந்துகொண்ட அநபாயன் சில விநாடிகள் ஆண்டவனை நினைத்தான்.

அறையிலே மௌனம் நிரம்பி நின்றது. “இனி நாம் கலையலாம். இன்றிரவு ஐந்தாவது நாழிகை புறப்படச் சித்தமாயிருங்கள்” என்று உத்தரவிட்ட அநபாயன் அனைவருக்கும் சிரம் தாழ்த்தினான். அன்று முழுதும் குணவர்மன் ஒரு நிலையில் இல்லை . ‘எதற்காகச் சோழ நாடு வந்தோம்? சாவதாயிருந்தால் கடாரத்திலேயே செத் திருக்கலாமே!’ என்று அன்று அடிக்கடி சொல்லிக் கொண் டிருந்தார். காஞ்சனாதேவி துக்கத்தின் சிகரமாக விளங்கி னாள். அன்று பகல் உணவுகூட அருந்த மறுத்தாள். பணிப் பெண்களை வெறுத்தாள். அறைக்கு வெளியே இருக்கக் கட்டளையிட்டாள். பஞ்சணையில் படுத்துப் புரண்டு கொண்டிருந்தாள். இளைய பல்லவனுக்கு நேர இருந்த கதி அவளை ஓர் உலுக்கு உலுக்கியிருந்தது. அவள் வேதனை யைச் சகிக்க இஷ்டப்படாது போல் பொழுது வேகமாக ஓடி விளக்கு வைக்கும் நேரமும் வந்தது. காஞ்சனா தேவியின் அறையிலும் ஒரு விளக்கு எரியத்தான் செய்தது. அந்தச் சுடர் போல தன் வாழ்க்கை விளக்கு எரியுமா அணையுமா என்பதை நினைத்து அவள் விளக்கின் சுடரை நோக்கிக் கொண்டிருந்த சமயத்தில்தான் இளைய பல்லவன் அவள் அறைக்குள் நுழைந்தான்.

அவன் தனியாக நுழையவில்லை. கையிலே ஒன்றும் தவழ்ந்து நின்றது.

அதைக் கண்டதும், பொலபொலவெனக் கண்ணீரை உகுத்தாள் அவள். அது ஆனந்தக் கண்ணீரா, சோகக் கண்ணீரா, பெரும் விந்தையைக் கண்டதால் ஏற்பட்ட கண்ணீரா! இதயத்தில் வேதனை விளைந்ததால் ஏற்பட்ட கண்ணீரா! அவளுக்கே புலப்படவில்லை. அவன் கையையே வெறித்து நோக்கினாள் அவள்.

அவன் கை சொன்ன கதைதான் என்ன?

Previous articleRead Kadal Pura Part 1 Ch32 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch34 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here