Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch34 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch34 | Sandilyan | TamilNovel.in

145
0
Read Kadal Pura Part 1 Ch34 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch34 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch34 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 34: வீட்டுப் புறா! காட்டுப் புறா! கடல் புறா!

Read Kadal Pura Part 1 Ch34 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

அறை விளக்கின் சுடரிலிருந்து அஞ்சன விழிகளை இளைய பல்லவனின் கையை நோக்கித் திருப்பிய காஞ்சனாதேவி தனது கண்களிலிருந்து திடீரெனப் பொலபொலவென உதிர்ந்து கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீருக்குக் காரணம் கற்பிக்க முடியாமல் திண்டாடினாள். அது வாழ்க்கையின் சோதனையளித்த வேதனைக் கண்ணீரா அல்லது இதயத்தின் மகிழ்ச்சி நிரம்பி வழிந்த இன்பக் கண்ணீரா என்பதை அவள் சொந்த உணர்ச்சிகளே கண்டுபிடித்துச் சொல்ல முடியாத குழப்ப நிலையில் இருந்தாள் அவள். இளைய பல்லவனின் இடது கையிலே தவழ்ந்து நின்ற வெண்மையான அந்தப் பெரும் காட்டுப் புறாவும் அதன் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த அந்த வாலிப வீரனின் வலது கரமும் சொன்னவை பழங்கதைதான். ஆனால் அவற்றில் எத்தனை புதுமைகளைக் கண்டாள் கடாரத்தின் அந்தக் கட்டழகி. ‘இவர் கையிலே இன்று தவழும் இந்தக் காட்டுப் புறா மூன்று நாள்களுக்கு முந்திய இரவில் எத்தனை வேகமாக சாளரத் துக்குள் பறந்து வந்தது! அதை எத்தனை லாகவமாகப் பிடித்தார் இவர்! பிடித்ததும் எத்தனை நேரம் உற்றுப் பார்த்தார். உற்று மட்டுமா பார்த்தார். இறக்கைகளைத் தூக்கித் தூக்கி விரல்களால் என்னென்ன சோதனைகள் செய்தார்! செய்தவர் அடுத்தடுத்து என்னை ஏன் பார்த்தார்?” என்று தன் மனத்துக்குள்ளே கேள்விகளைத் திரும்பத் திரும்ப வீசிக்கொண்ட காஞ்சனாதேவி, ஒரு புருஷன் ஒரு பெண்ணை எத்தனை சீக்கிரம் வசியம் செய்துவிட முடியும் என்பதையும் நினைத்து உள்ளூர வியந்தாள். அந்த வியப்பில், வியப்பில் விளைந்த காதலில், காதலில் விளைந்த தாபத்தில் அவள் மேற்கொண்டும் அந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தொகுத்து நினைந்து நினைந்து உருகினாள். அதே இரவில் அந்தக் காட்டுப் புறா சிறகடித்து இளையபல்லவன் அறையை நோக்கி ஓடியது. அதைத் தான் துரத்தியது, புறா இளையபல்லவனை மூக்கால் கொத்தியது, புறாவை எடுத்து அவன் தன்னிடம் அளித்தது, ஆகிய அத்தனை காட்சிகளும் அவள் சிந்தனையில் வலம் வந்தன. ‘புறாவைத்தான் அவர் கொடுத்தார்! நான் அதை ஏன் வாங்கி மார்பில் அணைத்துக்கொண்டேன்? புறா மீது ஆசையா?’ என்று அவள் தன்னைக் கேட்டுக்கொண்டு உள்ளூர வெட்கவும் செய்தாள். அந்த இன்ப நிகழ்ச்சிகளெல்லாம், அவள் இதயத்தில் வேதனையையும் காதலையும் கலந்து பிரவகிக்கச் செய்தன. அடுத்து அன்று இரவு நேர இருந்த பயங்கரப் பயணம், அதில் இளைய பல்லவனுக்கு நேர இருந்த பயங்கர முடிவு இவையிரண்டும் அவள் இதயத்தில் வேதனை வெள்ளத்தைக் கிளப்பிவிட்டன. இத்தனையையும் இதயம் தாங்க முடியுமா? முடியாததால் பொங்கிப் பொலபொலவென உதிர்ந்தன அவள் கண்களிலிருந்து நீர்த் துளிகள்.

பஞ்சணையில் உட்கார்ந்திருந்த அந்தப் பருவ அஞ்சுகத்தின் பங்கஜ விழிகளிலிருந்து, நெஞ்சமுருகியதால் வழிந்த கண்ணீரைக் கருணாகர பல்லவனும் கவனிக்கத் தான் செய்தான். அந்தக் கண்ணீருக்குக் காரணமும் அவனுக்குப் புரிந்தேயிருந்தது. அநபாயனுக்காகத் தூது வந்த பறவைத் தீவின் அந்தக் காட்டுப்புறா, எதிரே பஞ்சணை யிலிருந்த நாட்டுப்புறாவுக்குப் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டதையும், அந்த நினைப்புகளும் அன்றிரவு நிகழ இருக்கும் நிகழ்ச்சியில் தான் ஏற்கப்போகும் பங்குமாக இணைந்து அவள் இதயத்தை ஒரு கலக்கு கலக்கி விட்டிருப்பதையும் புரிந்து கொண்ட கருணாகர பல்லவன், காஞ்சனாதேவிக்கு ஆறுதல் சொல்லவும் உற்சாகப்படுத்தவும் கட்டிலை நோக்கி மெள்ள நடந்தான். இரண்டு அடிகள் எடுத்து வைத்ததுமே வீரனுக்கு வேண்டிய உறுதி தன் நடையிலில்லாததை அவன் புரிந்து கொண்டான். தன்னுடைய இரும்பு இதயங்கூடப் பஞ்சணையில் உட்கார்ந்து விளக்குச் சுடரில் சொர் ண பிம்பமென ஜொலித்த அந்தப் பைங்கிளியின் துக்க நிலையைக் கண்டதும் தளர்ந்து விட்டதைக் கண்டு வியப்பின் வசப்பட்டான். ருத்திரனிடமே கைவரிசையைக் காட்டும் துணிவு கொண்ட காமனுக்குத் தன்னைப் பலவீனப்படுத்துவது ஒரு பெரிய விஷயமல்ல என்பதையும் அறிந்து கொண்டான். அந்த உணர்ச்சியுடன் காஞ்சனாதேவியை அணுகிய இளையபல்லவன், அவளது அழகிய தோளின் மேல் தனது வலது கரத்தை வைத்தான்.

அவள் உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் பிரவகித்தன. அவள் இதயத்தை முதலில் நெகிழச் செய்தது நினைப்பு. இப்பொழுது நெகிழச் செய்தது தோளில் தவழ்ந்த கை, முதுகுப் புறமும் இறங்கிக் கொடுத்த அணைப்பு. ஒன்று சிந்தனை, இன்னொன்று ஸ்பரிசம். இரண்டில் எது வேக முடையது என்பதை அந்த இருவராலும் உணர முடிய வில்லை . வலது கையை அவளது முதுகில் ஆறுதலாகத் தவழவிட்டு அவள் பூவுடலை அணைத்த வண்ணம் அவள் பக்கத்தில் அமர்ந்த இளையபல்லவன், இடது கையிலிருந்த புறாவை, “இந்தா காஞ்சனா! இதைப் பிடி!” என்று சொல்லி மடியில் செயலற்றுக் கிடந்த அவள் கைகளில் பொருத்தினான். அவள் இரண்டு கைகளும் புறாவைப் பற்றிக்கொண்டன. அப்படிப் பற்றி நின்ற அந்தச் சமயத்திலும் இடது கையால் அவள் கையையும் வலது கையால் அவள் முதுகையும் ஆறுதலாகத் தடவிக் கொடுத்தான் இளையபல்லவன். அன்பின் அந்தச் செயலிலும் இன்பமும் வேதனையும் கலந்தே பாய்ந்தன அவள் உடலில். வாழ்க்கையே இரண்டும் கலந்ததுதான் என்பதை அவள் அந்த நேரத்தில் சந்தேகத்துக்கு இடமின்றிப் புரிந்துகொண்டாள். அப்படிப் புரிந்துகொண்டதால் ஓரளவு சாந்தியும் பெற்றாள். அந்த சாந்திக்கு மேலும் உறுதியளிக்க நினைத்த இளைய பல்லவன் தன் இடது கையினால் அவள் முகத்தைத் திருப்பி வலது கையால் அவள் கண்களையும் வழவழத்த கன்னங்களையும் துடைத்தான்.

அத்தனைக்கும் அவள் ஏதும் பேசாமல் சிலையென உட்கார்ந்திருந்தாள். சிந்தனை அலைகளில் புரண்டு கொண்டிருந்த அவள் சித்தம் பேசும் சக்தியை அறவே இழக்கச் செய்திருந்தது. அவள் நிலையைப் புரிந்து கொண்ட இளையபல்லவன் தானே மீண்டும் பேசமுற்பட்டு, “காஞ்சனா! நெஞ்சத்தை நெகிழவிடும் சமயமல்ல இது. துணிவுடன் இதயத்தை இரும்பாக்கிக் கொள்ள வேண்டிய நேரத்தை அடைந்துவிட்டோம்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி காதுக்கருகில் உதடுகளைக் கொண்டு சென்று வார்த்தைகளை உதிர்த்தான். அப்படிக் காதுக்கருகில் அவன் பேசியபோது உதடுகளில் அவள் காதின் நுனிகளும் லேசாகப் பட்டனவாதலால் அவள் மேலும் உணர்ச்சிகளுக்கே அடிமையானாள். அவற்றிலிருந்து விடுவித்துக்கொள்ள இஷ்டப்படாததாலோ என்னவோ சரேலெனப் பஞ்சணையிலிருந்து எழுந்திருந்து சாளரத்தை நோக்கிச் சென்று அதனருகே நின்று ஒரு புறமாகச் சாய்ந்தும் கொண்டாள்.

புறாவைப் பிடித்த இடதுகை மார்பில் புதைந்து கிடந்ததால் புறாவின் பட்டு மேனியும் அவள் மார்பில் ஒரு புறத்தில் பட்டுக் கொண்டிருந்தது. அப்படியும் இப்படியும் திரும்பிய அதன் தலையும் மூக்கும் அங்கும் இங்கும் பட்டு வேதனையையும் அளித்துக் கொண்டிருந்தது. சாளரத்துக்கு வெளியே தொங்கிய பூங்கொடி அவள் இதய வெப்பத்தைப் போக்க மெல்லக் காற்றில் ஆடி ஆடி ஆல வட்டம் போட்டும் அவள் வெப்பம் மட்டும் மாறவில்லை. அதை அதிகப்படுத்த இளைய பல்லவனும் பஞ்சணையை விட்டு எழுந்து அவளிருந்த இடத்துக்கு வந்து அவளுக்குப் பின்புறம் நின்று ஒரு கையைச் சாளரத்தின் மீதும் இன்னொரு கையை அவள் சிற்றிடையிலும் உலாவவிட்டான். அத்துடன் அவள் கன்னத்தை நோக்கித் தலையைத் தாழ்த்தி, “காஞ்சனா, நேரம் ஓடுகிறது. ஐந்தாவது நாழிகை நாம் நமது பயணத்தைத் தொடங்க வேண்டும்” என்று மெள்ளச் சொன்னான்.

அந்தப் பயண விவரங்கள் தெரிந்த விஷயந்தான். திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டதுங்கூட. ஆனால் திரும்பத் திரும்பச் சொன்னாலும் சலிக்காத விஷயங்கள் உலகத்திலிருக்கின்றன அல்லவா? சிலவற்றை மறப்பதாலும் சிலவற்றைத் திரும்பத் திரும்ப நினைப்பதாலுமே மனித னுக்குத் துணிவும் திருப்தியும் ஏற்படுகிறது. இதை உணர்ந்து தானோ என்னமோ இளையபல்லவன் அந்த ஐந்தாவது நாழிகையை அவளுக்கு நினைப்பூட்டினான். ஆனால் அவள் நினைப்பு வேறாயிருந்தது. அந்த ஐந்தாவது நாழிகை புறப்பாடு தாங்களிருவரும் பிரியும் இறுதிப் புறப்பாடாகவுமிருக்கலாம் என்பதையே எண்ணி காஞ்சனாதேவி பதிலுக்குப் பெருமூச்செறிந்தாள். அந்தப் பெருமூச்சின் பொருளைப் புரிந்துகொண்ட இளையபல்லவன் சொன்னான்: “தேவி! பயப்படாதே. நாம் அத்தனை சுலபத்தில் பிரியமாட்டோம்” என்று.

அதைச் சொன்ன இளைய பல்லவனின் குரலிலிருந்த உறுதியைக் கண்ட காஞ்சனாதேவி அது உண்மை உறுதியா அல்லது தனக்குத் தைரியம் சொல்ல ஏற்பட்ட போலி உறுதியா என்பதை நிர்ணயிக்கமாட்டாமல், “அதென்ன அத்தனை நிச்சயமாகச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

“நிச்சயம் எதிலிருக்கிறது தேவி? பிரிவோம் என்பதில் மட்டும் இருக்கிறதா?” என்று வினவினான் இளைய பல்லவன் காதல் கரைபுரண்ட குரலில்.

“உள்ள அபாயம் பிரிவைத்தான் காட்டுகிறது” என்றாள் அவள் மெதுவாக.

“அந்த அபாயத்திலிருந்து நான் பலமுறை தப்ப வில்லையா? ஏன், நீதி மண்டபத்தில் மரணக் கூண்டிலிருந்து தப்பி வரவில்லையா? அப்பொழுதில்லாத புது அபாயம் இப்பொழுது எங்கிருந்து வந்துவிட்டது” என்றான் இளையபல்லவன்.

தர்க்க ரீதியில் அவன் பேச்சு சரியாகத்தானிருந்தது. ஆனால் உணர்ச்சிகளின் பீதிக்கு அது பதில் சொல்ல முடியவில்லை. ஆகவே காஞ்சனாதேவி சொன்னாள்: “என் மனத்திலென்னவோ சஞ்சலம் குடிகொண்டிருக்கிறது. வேதனை ஆட்கொண்டிருக்கிறது என் இதயத்தை” என்று.

வேதனையின் காரணத்தை அவன் புரிந்துகொண் டிருந்தான். தன்னிடத்தில் அவளுக்குள்ள காதல், தன் உயிரைப்பற்றி அவளுக்குள்ள பயம் இரண்டுமே வேதனைக் குக் காரணம் என்பதைப் புரிந்துகொண்ட இளையபல்லவன், “தேவி! எனக்கு நன்றாகப் புரிகிறது. காதலின் தன்மையும் வன்மையும் அப்படிப்பட்டது” என்றான்.

“காதலின் தன்மையா?” காஞ்சனாதேவியின் இந்தக் கேள்வியில் அமுதம் கலந்திருந்தது.

“ஆம். தேவி! காதலென்பதை விஷயம் என்று வட மொழியில் அழைக்கிறார்கள்” என்று விளக்க முற்பட்டான் அவன்.

“அப்படியா?” அத்தனை வேதனையிலும் கேலியிருந்தது அவள் குரலில்.

“ஆம் தேவி! விஷயம் என்று சொல்கிறார்கள். அது மட்டுமல்ல. விஷயத்துக்கும் விஷத்துக்கும் ஓர் எழுத்துத்தான் வித்தியாசமென்றும் சொல்கிறார்கள். “

“ஆம். ஓர் எழுத்துத்தானே வித்தியாசம். “

“ஆனால் விளைவில் பெரும் வித்தியாசமிருக்கிறது. “

“எப்படி?”

“சாப்பிட்டால்தான் விஷம் மனிதனைக் கொல்லும். விஷயத்தை நினைத்தாலே போதும், மனிதன் உடல் உருகிப் போகிறான். வேதனைப்பட்டு இறப்பவர்களும் உண்டு. அத்தனை பயங்கரம் காதலின் நினைப்பு. “

“இதை எனக்கு எதற்காகச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டு அவனை நோக்கித் திரும்பினாள் காஞ்சனாதேவி.

அவள் தோள்களை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு அவன் சொன்னான்: “தேவி! நீ என்னை நினைந்து நினைந்து உருகக்கூடாது” என்று.

அவள் கண்களை வெட்கத்தால் நிலத்தில் தாழ்த்திக் கொண்டாள். “ஏன்?” என்று பவள இதழ்களிலிருந்து உதிர்ந்த சொல்லும் வெட்கத்தைப் பூசிக்கொண்டே வெளி வந்தது.

இளையபல்லவன் தனது குரலில் அன்பும் காதலும் கலந்தோடச் சொன்னான்: “நாம் ஒருவேளை இன்று பிரிந்தாலும் மீண்டும் கூடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்படிக் கூடும்போது உன் நிலை என் மனத்தைப் பிளக்கக் கூடாது. நீ சிந்தனையால் சிதைந்து உடல் உருக்குலைந்து போயிருந்தால் என் மனம் வெடித்து விடும். நான் உன்னைச் சந்திக்கும்போது இந்த எழில் உடலின் கவர்ச்சி, அஞ்சன விழிகளின் தீட்சண்யம், கபோலங்களின் பளபளப்பு அத்தனையும் மாறாதிருக்க வேண்டும். இன்று போலவே நீ அன்றுமிருக்க வேண்டும். புரிகிறதா?”

புரிந்தது அவளுக்கு. புரிந்ததால் அவனை நன்றாக நிமிர்ந்து நோக்கினாள். “நான் வாளை வீசுவேன். போரிடுவேன். இருப்பினும் நான் பெண், பேதை என் மனம் உறதிகொள்ள மறுக்கிறது” என்றாள் அவள்.

“தேவி! மனத்தை உறுதிப்படுத்திக்கொள். உனக்குத் தைரியம் சொல்லவும், என்னை நினைப்பில் வைத்துக்கொள்ள அடையாளமாக இந்தப் புறாவை உனக்குக் கொடுக்கவும் வந்தேன். அதற்காகவே அமீரிடமிருந்து இதை வாங்கினேன். அடுத்த சில நாழிகைகளின் நிகழ்ச்சிகளைப் பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது. நாம் பிரிந்தாலும் பிரியலாம், பிரியாவிட்டாலும் இல்லை. நான் மட்டுமென்ன, வண்டி சரியாக வளைக்கப்பட்டால் நீ கூடமாளலாம். அப்படிச் சாவதானால் வீரர்கள் குலத்தில் பிறந்தவர்களென்று உறுதியுடன் போரிட்டு மடிவோம். பிழைத்தால் வீரர் குலத்தின் மக்களாகச் சந்திப்போம்” என்று உறுதியும் வீரமும் நிரம்பிய சொற்களை உதிர்த்த இளையபல்லவன் அவள் முகவாய்க் கட்டையைத் தூக்கி அவள் கண்களை ஆழ்ந்து நோக்கி, “தேவி! நாம் பிரிவதானாலும் மீண்டும் கூடு மட்டும் நினைவுச் சின்னமாக இந்தப் புறாவைக் கொடுத்திருக்கிறேன்” என்றான்.

பதிலுக்கு அத்தனை துன்பத்திலும் அவள் இளநகை புரிந்தாள். “உங்களை நினைத்திருக்கக் காட்டுப் புறாவைக் கொடுத்தீர்கள். உங்களுக்கு நான் என்ன தரட்டும்?” என்று கேட்டாள் அவள்.

“எதுவும் வேண்டாம் தேவி. நான் எங்கு இருந்தாலும் புறாவின் நினைப்பு எனக்கிருக்கும். இங்கு வந்ததும் வீட்டுப் புறா ஒன்றைக் கண்டேன். பிறகு காட்டுப் புறா ஒன்றுகைக்கு வந்தது. இனி கடற் புறாவொன்றும் கப்பலில் பறக்கும்!” என்றான் இளையபல்லவன், ஆபத்தான நினைப்புகளை அவள் இதயத்திலிருந்து அகற்ற. அவள் தனது கண்களை அகல விரித்தாள். “கடல் புறாவா!” என்றும் ஆச்சரியம் குரலில் ததும்ப வினவினாள்.

“ஆம் தேவி! இன்று நீ சீனத்துக் கப்பலில் கடல்மீது பறந்து கொண்டிருப்பாயே?” என்றான் விஷமத்துடன் அந்த வாலிபன்.
அவள் உள்ள வேதனை அவன் அரவணைப்பில் மறைந்தது. அவள் இதழ்களிலும் விஷமம் தாண்டவமாடியது. “வீட்டுப்புறா இருந்த இடத்தில் ஒரு வாலிபன் சாளரத்தின் மூலம் குதித்துத் திரையில் மறைந்து வேடிக்கை பார்த்தார். காட்டுப் புறாவைக் கையிலேந்தி இறக்கைகளை நீக்கி விரல்களால் துருவித் துருவிச் செய்திச் சுருளை எடுத்தார். கடல் புறாவை என்ன செய்யப் போகிறார் அவர்?” என்று கேட்டாள் அவள்.

அவன் கைகள் அவளைச் சுற்றிச் சென்றன. விழிகள் அவள் விழிகளைக் கூர்ந்து நோக்கின. “ஏன் கடல் புறாவுக்கு மட்டும் இறக்கைகள் இல்லையா?” என்று கேட்டான். அந்தச் சொற்கள் அளித்த ஆனந்தம், குரல் ஒலி கிளப்பிய வேட்கை இரண்டும் அவளை எங்கோ கொண்டு சென்றன. சொல்லிலும் செயலிலும் இணையற்ற கருணாகர பல்லவனின் காதலியாகத் தான் திகழ நேர்ந்ததைப் பெரும் பாக்கியமாக மதித்த அவள் இதயம் மீண்டும் உறுதி கொண்டதன்றி, ஒருவேளை கிழக்குக் கோட்டை வாசலில் வண்டி தடுக்கப்படாவிட்டால் கடற் கரையோரத்தில் அவனும் தானும் அக்கம் பக்கத்தில் நின்று போரிடலாம் என்ற நினைப்பும் அவளுக்கு மிகுந்த தைரியத்தை ஊட்டியது. துணிவு துளிர்த்ததன் விளைவாக அவனை ஏறெடுத்து நோக்கிய காஞ்சனாதேவி, “கடற் புறாவை நீங்கள் சோதிக்கும் காலம் அதிக தூரத்தில் இல்லை. அது சிறகடித்து எதிரிகளை வீழ்த்தும் காட்சியை இன்றிரவு எட்டு நாழிகைக்குள் கடற்கரையில் பார்க்கப் போகிறீர்கள்” என்றாள்.

அவன் பதில் சொல்லவில்லை. சற்று மௌனமாக நின்றான். கடைசியாகப் பிரியாவிடை பெற்ற அவன், “வருகிறேன் தேவி! நாழிகைகள் ஓடிக்கொண்டு இருக் கின்றன. வண்டியும் சித்தமாகிவிடும். நானும் சித்தமாகிறேன்” என்று சொல்லி அவள் கைகளை மெல்ல நெறித்து விட்டுச் சென்றான்.

வண்டி புறப்படும் நேரம் வந்தது. நீர்க்குடங்களுடன் வண்டி தயாராக நின்றது. அதில் ஏற நின்றிருந்தவர்களை நோக்கி அநபாயன் சொன்னான்: “நமது பயங்கரப் பயணம் துவங்குகிறது. எச்சரிக்கையுடன் இருங்கள். அவரவர் பணியை அந்தந்தச் சமயத்தில் செய்யுங்கள். எதற்கும் அஞ்ச வேண்டாம். கடமையை நாம் செய்வோம்; பலன் ஆண்டவன் கரங்களிலிருக்கிறது. “

இதைச் சொன்ன அவன் சிரம் தாழ்த்தி ஆண்டவனைச் சில விநாடிகள் நினைத்தான். பிறகு அனைவரையும் வண்டியிலேறி அவரவர் இடங்களை அடைய உத்தர விட்டான். அவரவர் அமர்ந்ததும் அவனும் அமர, பெரும் காளைகள் பூட்டப்பட்ட அந்த வண்டியும் திடுதிடுவென சக்கரங்கள் சப்திக்க, பாலூரின் வீதிகளில் புரண் டோடியது.

அப்படிப் புரண்டோடி ஆறாவது நாழிகையில் கிழக்குக் கோட்டை வாசலை வண்டி எட்டியதும் தூர இருந்த நிலையை நோக்கிய அமீரின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. பெரும் பயம் புத்தியைச் சூழ்ந்து கொண்டது.

Previous articleRead Kadal Pura Part 1 Ch33 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch35 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here