Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch35 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch35 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

100
0
Read Kadal Pura Part 1 Ch35 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch35 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch35 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 35: சோதனை

Read Kadal Pura Part 1 Ch35 | Kadal Pura Sandilyan | TamilNovel.in.

கலிங்கத்தின் பெரும் சாதிக் காளைகள் இரண்டு பூட்டப்பட்ட தனது வண்டியை அரை நடையாகவும் அரை ஓட்டமாகவும், மிகுந்த எச்சரிக்கையுடன் விட்டுக் கொண்டு வந்த அமீர், நான்காம் பிறைச்சந்திரன் உதயமா வதற்கு முந்திய ஆறாவது நாழிகையின் துவக்கத்தில் கிழக்குக் கோட்டை வாசலின் ஆரம்பப் பகுதியை அணுகியதுமே கண்களை உயர்த்திச் சற்று தூரத்தே எதிரேயிருந்த நிலைமையை நோக்கி அச்சத்தால் இதயம் படபடக்கச் சில விநாடிகள் திணறியே போனான். சிறு வணிகர் வீதியிலிருந்த இல்லத்தை விட்டுப் புறப்படும் முன்பே வண்டியின் ஏற்பாட்டைப் பலத்த முன் யோசனையுடன் செய்து முடித்திருந்த அந்த அரபு வர்த்தகனின் சிந்தனையின் ஒரு பகுதி, அச்சத்துக்கு ஏதும் இடமில்லையென வற்புறுத்தினாலும், இன்னொரு பகுதி கண்ணுக்கெதிரேயிருந்த ஆபத்தை விளக்கி அச்சத்தின் அவசியத்தை வலியுறுத்தலா யிற்று. வாணிபப் பொதிகளை ஏற்றிச் செல்வதற்வதற்காகவே நிர்மாணிக்கப்பட்டிருந்த அந்தப் பார வண்டியில் அசையக்கூட இடமில்லாத வண்ணம் பன்னிரண்டு நீர்க் குடங்களைத் திணித்திருந்த அமீர் அவற்றின் ஆறடி உயரத்தளவுக்குப் பக்கக் கழிகளைச் செருகியதன்றி, அவற்றுக்குப் பாதுகாப்பளிக்கும் பாவனையில் ஏராளமாக வைக்கோலையும் வாழை இலைச் சருகுகளையும் திணித்து அவை கழுத்தளவுவரை மறையும்படி செய்திருந்ததாலும், அவற்றில் ஆறு குடங்களில் காஞ்சனாதேவி, குணவர்மன் இவர்களைத் தவிர கூலவாணிகன், சுங்க அதிகாரி, காஞ்சனாதேவியின் பணிப்பெண்கள் இருவர் ஆகியோரை ஒரு குடம் விட்டு இன்னொரு குடமாகப் பதுங்கவைத் திருந்ததாலும் அவர்களைப் பதுங்க வைத்த குடங்களின் கழுத்துக்குக் கீழே இரண்டொரு பெரும் துவாரங்களைச் செய்து மூச்சு விடவும் ஏற்பாடு செய்திருந்ததாலும், அச்சத்துக்கு எந்தவிதக் காரணமும் இல்லை . நீர் நிரம்பியிருந்த குடங்களைத் தவிர்த்து மனிதர்கள் பதுங்கியிருந்த குடங்களில் மூச்சுக் காற்றுக்காகத் துளைத்திருந்த துவாரங்கள் வைக்கோலின் மறைவிலும் வாழைச் சருகுகளின் மறை விலுமிருந்தபடியால் அவை இருப்பது யார் கண்ணுக்கும் புலப்படாமல் செய்திருந்தான் அமீர். கிழக்குக் கோட்டை வாசலைத் தாண்டிக் காஞ்சனாதேவி உண்டைவில் மூலம் எரியம்பு வீச நேர்ந்தால் அவள் இருந்த நீர்க்குடத்தின் மூடியை விலக்கும் நோக்கத்துடன் அவள் பதுங்கியிருந்த குடத்தை மட்டும் முன்னணியில் தன் சாட்டைக் கைக்குப் பக்கத்தில் வைத்திருந்தான் அவன். இரவில் செல்லும் இத்தகைய வண்டிகளில் வெளிச்சத்துக்கு இருபுறமும் பந்தங் கள் செருகுவது வழக்கமானாலும், வண்டியில் அதிக வெளிச்சமிருக்கக் கூடாது என்ற எண்ணத்தால் ஒரே ஒரு பந்தத்தை மட்டும் சாட்டை பிடித்திருந்த தனது வலது கைக்கு அருகேயிருந்த பெரும் கழியில் கட்டியிருந்தான். அப்படிப் பிணைத்திருந்த அந்தப் பந்தத்தில் துணியும் அவன் அதிகம் சுற்றாமல் மெல்லிய பந்தமாகவே அதை எரியவிட்டிருந்ததால் அது மிகக் குறைவான ஒளியையே வண்டியில் வீசியிருந்ததன் விளைவாக ஒரு குடத்துக்கும் இன்னொரு குடத்துக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லா திருந்ததோடு அந்தப் பந்தம் வண்டியின் முகப்பில் அமீரின் சாட்டைக் கரத்துக்குப் பக்கத்திலிருந்த காரணத்தால் காஞ்சனாதேவி சரேலென எரியம்பைக் கொளுத்தும் வண்ணம் அவளிருந்த குடத்துக்கு வெகு அருகாமையிலும் அமைந்து கிடந்தது. இது தவிர குடங்களைக் கழுத்து வரையில் மறைத்த பெரும் வாழைச் சருகுகளைச் சின்னஞ்சிறு விசிறிகள் போல் பிரித்து ஆங்காங்கு வைத்திருந்ததால் அவை அந்தந்த இடங்களில் பந்தத்தின் வெளிச்சத்தைத்தடை செய்து குடங்களின்மீது பட்டை பட்டையாக இருட்டைப் பாய்ச்சியிருந்தது. இப்படிப் பல வழியிலும் மறைக்கப்பட்ட குடங்களின் மூடப்பட்ட வாய்கள் கூடச் சட்டென்று பார்வைக்குப் புலனாகாமலே இருந்தன. இத்தனை முன்னேற்பாடுகளைச் செய்த அமீர் இவற்றையும் மீறிச் சோதனை நடந்தால் தான் நடத்த வேண்டிய வேலையை எண்ணித்தன் வயிற்றுப் பகுதியிலிருந்த கச்சையில் வரிசையாகப் பல குறுவாள்களையும் செருகிக் கொண்டிருந்தான்.

இந்த ஏற்பாடுகளைச் செய்து முடிக்கும் முன்பாகவே அநபாயனுக்கும் இளைய பல்லவனுக்கும் தனது அடிமை களின் வேடங்களை அணிவித்த அமீர் அவர்கள் இருவரையும் முக்காடுகளை நன்றாக இழுத்து முகங்களை மறைத்துக் கொள்ளுமாறு வாள்கள் வெளியில் தெரியாத வண்ணம் அரபு நாட்டுப் பெரு அங்கிகளின் மடிப்புகளில் பதுக்கிப் பிடித்துக் கொள்ளுமாறும் எச்சரிக்கை செய்துவிட்டு, அவர்களிருவரையும் வண்டியின் பின்புறத்தில் உட்காரவைத்த பின்பே வண்டியை ஓட்ட முற்பட்டான். இந்த ஏற்பாடுகள் பரிபூரண திருப்தியையே ஆரம்பத்தில் அளித்திருந்தன அமீருக்கு. தன் வாணிபத்தை முதல் நாளே மற்றொரு வாணிகனுக்கு விற்று அவனிடமிருந்த விலைப் பொருளைப் பொற்காசுகளாகப் பெற்றுக்கொண்ட அமீர், அந்தப் பொற்காசுகளைத் தான் வழக்கமாக வைக்கும் பெட்டியில் வைத்துக்கூடக் கொண்டு வரவில்லை. நீர்க் குடங்களின் வண்டியில் பணப்பெட்டி தென்பட்டால் கேள்விக்கு இடமாகுமென்று கருதிய அமீர் பொற்காசுகளை ஐந்தாறு துணிப்பைகளில் கட்டி நீர்க் குடங்களுக்கு இடையிடையே இருந்த இடங்களில் வைத்து மேலே வைக்கோலைத் தூவி மறைத்திருந்தான். இப்படி ஒவ்வொரு காரியத்தையும் அணு அணுவாகக் கவனித்து ஆபத்தை எத்தனை தூரம் தவிர்க்க முடியுமோ அத்தனை தூரம் தவிர்த்து சந்தேகத்தை எவ்வளவு தூரம் விலக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலக்கியிருந்தான் அந்த அரபு நாட்டுச் சிறுவணிகன். அது மட்டுமின்றிச் சீனக் கப்பலுக்குத் தன் வீட்டிலிருந்தே நீர்க்குடங்கள் செல்வதை வலியுறுத்தும் பொருட்டுப் பகல்முதலே சீனக்கப்பல்களிரண்டிலிருந்தும் பல நீர்க்குடங்களை வரவழைத்துத் தனது வண்டிகள் இரண்டொன்றிலும் நீர் நிரம்பிய குடங்களை அந்தக் கப்பல்களுக்கு இரண்டு மூன்று முறை அனுப்பியும் இருந்தான். அப்படி அனுப்பிய ஒவ்வொரு வண்டியையும் கோதாவரிக்கரைக் குடிசைக்கு அனுப்பி சங்கமக் கலங்கலற்றிருந்த தெள்ளிய கோதாவரி நீரை அங்கிருந்தே நிரப்பிப்பிறகு வண்டிகளைத் தன் வீட்டுக்குக் கொண்டு வந்து வீட்டிலிருந்தே வண்டிகளைக் கடற்கரைக்கு அனுப்பி வைத்தான். அப்படி அனுப்பிய ஒவ்வொரு வண்டியிலும் வண்டியோட்டுபவனைத் தவிர பின்புறத்தில் இரு அடிமைகளையும் உட்கார வைத்து அனுப்பினான். கடைசியாக வரும் தனது வண்டியை யாரும் சந்தேகிக்கக் கூடாதென்பதற்காக முன்கூட்டியே இத்தகைய எச்சரிக்கை யுடன் ஏற்பாடுகளைச் செய்த அமீர், தனது வண்டிகள் பலவற்றின் சோதனை ஏற்கெனவே நடந்துவிட்டதையும் உணர்ந்திருந்தானாகையால் எப்படியும் இந்த வண்டிக்கு அதிகச் சோதனையிருக்காதென்ற துணிவுடனேயே வீட்டை விட்டுக் கிளம்பினான். அப்படித் துணிவைத்துணை கொண்டு கிழக்குக் கோட்டை வாசலைத் தூரத்திலிருந்து பார்த்த அமீரின் துணிவைப் பயம் எனும் அம்பு திடீரெனத் துளைத்தது. தூரத்தில் தெரிந்த காட்சியைக் கண்டதும் அவன் இதயம் பெரிதும் படபடக்கத் துவங்கியது.

சந்திரன் உதயமாக இன்னும் இரண்டு நாழிகைகள் இருந்ததால் இருள் சூழ்ந்து கிடந்த கடல் பிரதேசத்துக்கு வெளிச்சம் காட்டும் தூதன் போல் பெரும் பந்தங்களுடன் ஜாஜ்வல்லியமாகக் காட்சியளித்தது கிழக்குக் கோட்டை வாசல். கோட்டை வாயிலின் பக்கச் சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த பெரும் பந்தங்கள் மட்டுமின்றி யவன நாட்டு வெண்கலப் பெருவிளக்குகளும் தங்கள் தீ நாக்குகளைப் பெரிதாக நீட்டி ரத்த வெறி பிடித்த ராட்சதர்களைப் போல் காட்சியளித்தன. சாதாரணமாகப் பத்துப் பன்னிரண்டு வீரர்களுக்கு மேல் காவலிருக்காத அந்தக் கோட்டை வாசலில் காவல் நான்கு பங்கு அதிகமாயிருந்ததால் காவல் வீரர்களின் புரவிகள் அணிவகுப்பட்டு ஒன்றையொன்று பயங்கரமாய் உராய்ந்து கொண்டு நின்றன. வெறும் வாள்களையே ஏந்தி நிற்கும் காவல் வீரர்கள் மட்டுமின்றிப் பெரிய ஈட்டிகளைத் தாங்கிக்கொண்டு இருபது குதிரை வீரர்கள் கிழக்குக் கோட்டை வாசலின் கடலின் வழியை மறித்து நின்றுகொண்டிருந்தனர். சுமார் நாற்பதடி அகலமிருந்த அந்தக் கிழக்குக் கோட்டை வாசலின் இருபுறங்களிலும் புரவி வீரர்கள் இரட்டை வரிசையாக நிற்க வைக்கப் பட்டிருந்ததால் இடையே ஒரு சமயத்தில் ஒரு வண்டி மட்டுமே செல்ல மார்க்கமிருந்தது.

இந்த ஏற்பாடுகளைத் தூரத்தில் இருந்தே கவனித்த அமீர், காவலின் அமைப்பிலிருந்த முறையை நோக்கி தாங்கள் எத்தனை சாமர்த்தியமாக நடந்துகொண்டாலும் தப்புவது பிரம்மப்பிரயத்தனமென்ற தீர்மானத்துக்கு வந்ததால் அவன் அஞ்சா நெஞ்சமும் அஞ்சவே செய்தது. ஆகவே அவன் தலையை திருப்பாமலே சாட்டையைப்பின்புற நீர்க்குடமொன்றில் திருப்பித் தட்டி, “சற்றுக் கோட்டை வாசலைப் பாருங்கள்” என்றான். அந்தச் சொற்கள் காதில் விழுந்ததும் ஏக காலத்தில் இளைய பல்லவனும் அநபாயனும் சற்றுத் திரும்பிக் கோட்டை வாசலைக் கவனித்தார்களானாலும் அநபாயன் மட்டுமே அமீருக்குப் பதில் சொல்லத் துவங்கி, “ஆம், காவல் கடுமையாகத்தானிருக்கிறது” என்று முணுமுணுத்தான்.

“வண்டி கோட்டை வாசலை நெருங்கியதும் நாற்புறமும் சூழப்படும். முன்னும் பின்னும் பக்கங்களிலும் காவல் நெருக்கமாக இருக்கிறது” என்று முன்னே வைத்த கண்ணைப் பின்புறம் திருப்பாமலே மெள்ள விளக்கினான் அமீர்.

“ஆம். சோதனை முடிந்து அவர்கள் வழி விட்டாலும் நாம் கோட்டை வாயிலைக் கடந்து நீர்க்கரைக்குச் செல்லும் பாதையிலிறங்குவது கஷ்டம். அந்தப் பாதையையும் அடைத்து நிற்கிறது படை” என்றான் அநபாயன்.

“சோதனையின்போதே சந்தேகம் வந்தால் என்ன செய்வது?” என்று மீண்டும் வினவினான் அமீர்.

“சோதனையின் போதும் காளைகளை அடியோடு நிறுத்தாதே. தாரைப் பாய்ச்சிக் காளைகளை அசைய விட்டு அவை பழக்கப்படாத முரட்டுக் காளைகளெனப் பாசாங்கு செய்துகொண்டிரு. வீரர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் காளைகளை ஒரே முடுக்காக முடுக்கிப் பாய்ச்சிலில் செல்லவிடு” என்றான் அநபாயன்.

“எதிரே சுவர்போல் மறைந்திருக்கும் குதிரை வீரர் வரிசையை என்ன செய்வது?” என்றான் அமீர் அச்சத் துடன்.
“வண்டியின் வேகம் வரிசையைப் பிளந்துவிடும். பிளவு கூடுவதற்குள் வண்டி பாதையில் இறங்கிவிடும். அடுத்த பொறுப்பு படைத் தலைவருடையது” என்று திட்டமாக அறிவித்தான் அநபாயன்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் காளையை முடுக்கிய அமீர், உள்ளே அச்சமிருந்தாலும், வெளியே மிகுந்த அலட்சியத்துடன் வண்டியின் முகப்பில் சாட்டையும் கையுமாக அமர்ந்திருந்தான். ஜல்ஜல் என்று கழுத்துச் சலங்கைகள் சப்திக்க, கிழக்குக் கோட்டை வாசலின் சோதனைத் தளையை அடைந்துவிட்ட அமீரின் வண்டிக்கு முன்பாக சுமார் பத்து வண்டிகள் நின்றிருந்தனவாகையால் அமீரின் வண்டி முன்பிருந்த வண்டிகள் நகர நகர மெதுவாகவே நகர வேண்டியதாயிற்று. கோட்டை வாசலில் அன்று காவல் மட்டும் பலமல்ல, காவல் முறையிலும் புதுமையிருந்ததை கவனித்த அமீரின் சஞ்சலம் பன்மடங்கு அதிகமாயிருந்தது. சாதாரணமாக வரும் வண்டிகளை நான்கு வீரர்கள் மடக்குவார்கள், சுற்றி வந்து சோதனை செய்வார்கள். பிறகு போகலாம் என்று அனுமதிப்பார்கள். அந்த அனுமதி கிடைத்ததும் கடல் நீர்க்கரைக்குச் செல்லும் பாதையில் வண்டிகள் உருண்டோடும். இன்று அந்த முறை கையாளப்படவில்லை. வாயிலுக்குக் குறுக்கே பெரும் கயிறுகளைக் கொண்ட தளையிருந்தது. அந்தத்தளை நீக்கப்பட்டு ஒவ்வொரு வண்டியாகக் கோட்டை வாயிலுக்குள் அனுமதிக்கப்பட்டது. பிறகு தளை போடப்பட்டு, தளைக்கும் நீர்ப்பாதைக்கும் இடையே இருந்த உட்புறத்தில் சோதனை நடந்தது. அதன்பிறகு ‘வழி விடு’ என்று ஒரு வீரன் கூவியதும் நீர்க்கரைப் பாதையை அடைத்து நின்ற குதிரைப்படை வழி விட்டது. பிறகு வண்டி, பாதையில் சென்றது. இப்படி வண்டிகள் சென்று கொண்டிருந்த முறையைக் கண்ட அமீர், ‘இனி அஞ்சிப் பயனில்லை, தலைக்குமேல் ஓடிய வெள்ளம் சாண் ஓடினால் என்ன முழம் ஓடினால் என்ன’ என்ற முடிவுக்கு வந்தான்.

முன் வண்டிகள் மெள்ள மெள்ள நகர்ந்தன. தளைக் கயிறுகள் நீக்கப்பட்டு நீக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டன. ‘வழி விடு’ என்று வீரர்கள் போட்ட கூச்சல் மீண்டும் மீண்டும் கேட்டது. முன்னிருந்த ஒவ்வொரு வண்டியும் செல்லச் செல்ல அமீர் வண்டிச் சக்கரங்கள் மெள்ள உருண்டனவே தவிர, அவன் இதயம் மட்டும் வேகத்தைக் குறைக்காமல் அதிகமாக ஓடத் துவங்கியது. முன் வண்டி சட்டென்று நின்ற சமயத்தில் மட்டும் இதயம் ஒரு விநாடி நின்றுவிட்டது போன்ற பிரமையும் அமீருக்கு அவ்வப்பொழுது ஏற்பட்டது. காவல் வீரர்கள் அமர்ந் திருந்த குதிரைகளின் கனைப்பும், அவை காலைத் தூக்கிச் சிலசமயம் தரையில் தட்டி அசைத்ததால் ஏற்பட்ட குளம்படிச் சத்தங்களும் அமீரின் இதயத்தையே தாக்கிக்கொண்டிருந்தன. அவ்வப்பொழுது பந்தங்களுக்குக் காவலாளிகள் எண்ணெய் விட்டதால் ஏற்பட்ட ‘சொய்’ என்ற சத்தம் அமீரின் இதயத்தையே பந்தமாகவும் எண்ணத்தையே எண்ணெயாகவும் மாற்றி எரியவிட்டதால் அமீரின் உள்ளம் மட்டுமின்றி உடலும் வேகமாக எரியத் தொடங்கியது.

முன் வண்டிகள் மீண்டும் மீண்டும் நகர்ந்தன. அமீரின் வண்டிச் சக்கரங்கள் உருண்டு உருண்டு நின்றன. பின்னாலும் வண்டிகள் வந்துகொண்டிருந்தன. சில சமயங்களில் வெகு அருகில் வந்துவிட்ட பின் வண்டிமாடுகள் அமீர் வண்டியின் பின்புறத்தில் நீண்டு கிடந்த வைக்கோலை இழுத்துத் தின்னவும் தொடங்கின. அப்படி வைக்கோல் இழுக்கப்பட்ட சத்தம்கூடப் பயங்கரமாகத் தெரிந்தது, அந்தச் சூழ்நிலையில் அமீருக்கு. கடைசியாக எழுந்தது வீரர்களின் எச்சரிக்கை ஒலி. “உம். உள்ளே வா!” என்றான் புரவியில் அமர்ந்திருந்த காவல் வீரன் ஒருவன். அந்த ஆணையைத் தொடர்ந்து கயிறுத் தளை அவிழ்க் கப்பட்டதும் உள்ளே வண்டியை ஓட்டினான் அமீர். பின்னால் மீண்டும் தளை பூட்டப்பட்டதைக் கவனித்தான். முன்னால் கடலுக்குச் செல்லும் பாதையைச் சுவர் போல் மறித்து நின்ற புரவிக் காவற்படையையும் பார்த்தான். தனக்கு வெகு அருகில் பக்கவாட்டில் வாளை உருவிப் பிடித்த வண்ணம் இரு புரவிக் காவலர் எந்த விநாடியிலும் தன் இதயத்தில் வாளைப் பாய்ச்சிவிடக் கூடிய வகையில் நின்றுவிட்டதையும் கவனித்தான். உள்ள நிலையை ஒரு விநாடியில் எடைபோட்ட அமீர் சாட்டையால் கையை நெற்றிக்காக இருமுறை உயர்த்தி எதிரேயிருந்த வீரர் தலைவனை இருமுறை வணங்கினான். அவனிடம் தனக்குள்ள பரிச்சயத்தைக் காட்டப் புன்முறுவ லொன்றையும் முகத்தில் படரவிட்டுக் கொண்டான்.

அவன் புன்முறுவலை எதிரேயிருந்த காவலர் தலை வனும் கவனித்தானானாலும் அவன் இதழ்களில் பதிலுக்குப் புன்முறுவலேதும் விளையவில்லை. முக்கால் முகத்தைக் கவசத்தால் மூடியிருந்த அந்த வீரன் அமீரைக் கூர்ந்து ஒருமுறை நோக்கியபின்பு, தன் புரவியை நடத்திக் கொண்டு இருமுறை வண்டியை வலம் வந்தான். தன் வாளின் நுனியால் இரண்டொரு குடங்களைத் தட்டவும் செய்தான். குடங்களிரண்டும் நீர் நிரம்பியிருந்ததால் ‘தட்தட்’ என்று ஏற்பட்ட சத்தம் பெரும் அமுதமாக அமீரின் இதயத்தில் பாய்ந்தது. அதற்குமேல் அபாயம் நீங்கி விட்டதாக நினைத்த அமீர் சற்றுத் தைரியத்துடன் பெருமூச்சும் விட்டான். ஆனால் நீர்க்குடங்களின் சப்தங்களைக் கேட்ட காவலர் தலைவன் திருப்தியடைந்ததாகத் தெரியவில்லை. மீண்டும் ஒருமுறை வண்டியைச் சுற்றி வந்தான். இம்முறை பின்புறம் வந்ததும் அங்கு உட்கார்ந்திருந்த இரு அடிமைகளையும் நோக்கிவிட்டு, அவ்விருவரில் ஒருவரை, “யார் நீ?” என்று கேட்டு அடுத்தவிநாடி என்ன நடக்குமென்று மற்றவர்கள் யோசிக்குமுன்பே தன் வாளின் நுனியால் ஒருவனது முக்காட்டைச் சரேலெனத் தூக்கினான். இளையபல்லவன் ஈட்டி விழிகள் காவலன் கண்களுடன் திடீரெனக் கலந்தன. கலந்த கண்கள் அதிர்ச்சியடைந்தன. அந்த இருவரும் ஒருவரையொருவர் அந்த இடத்தில் எதிர்பார்க்கவேயில்லை.

Previous articleRead Kadal Pura Part 1 Ch34 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch36 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here