Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch36 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch36 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

121
0
Read Kadal Pura Part 1 Ch36 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch36 | Kadal Pura Sandilyan | TamilNovel.in.

Read Kadal Pura Part 1 Ch36 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 36: சாதனை

Read Kadal Pura Part 1 Ch36 | Kadal Pura Sandilyan | TamilNovel.in.

பாலூர்ப் பெருந்துறையின் கீழ்க்கோட்டை வாசல் காவலர் தலைவன் உடையில் மறைந்து புரவிமேல் ஆரோ கணித்து ராட்சத சொரூபமாய் விளங்கிய மன்னன் பீமனுடைய பெரு விழிகளைக் கண்டதால் கருணாகர பல்லவனும், நீர்க்குடங்கள் நிரம்பிய பின்புற வண்டியில் அடிமை வேடத்தில் இளையபல்லவன் காட்சியளித்ததால் தென் கலிங்கத்து பீமனும் திகைப்பின் எல்லையை ஒரே சமயத்தில் அடைந்தார்களானாலும், அந்தத் திகைப்பு பீமனைவிட கருணாகர பல்லவனுக்கே அதிகமாய் இருந்தது. தன் கைவசமிருந்து பறந்துவிட்ட பறவைகள் தப்பும் ஒரே மார்க்கம் கிழக்குக் கோட்டை வாசல்தான் என்பதைச் சந்தேகமறத் தீர்மானித்துக் கொண்டதாலும், அப்படித் தப்புவதானால் அவர்கள் சந்திரன் உதயமாகு முன்புள்ள இருட்டிலேயே தப்ப வேண்டுமென்பதையும் ஊகித்துக் கொண்டதாலும், காவலரையும் நம்பாமல் எதிரிகள் எப்படி வருவார்களென்பதை எதிர்பார்த்த வண்ணம் காவலர் தலைவன் உடையணிந்து தானே வண்டிகளை எட்டு நாழிகைகள் வரை பரிசோதிப்பதென முடிவு கட்டிக் காவல் புரிந்த தென்கலிங்கத்துக் காவலனுக்கு இளையபல்லவனைக் கண்டதும் அதிர்ச்சி ஏற்பட்டாலும் முன்கூட்டி எதிர்பார்த்த காரணத்தால் அதிர்ச்சி சற்று குறைவாக இருந்தது.

ஆனால் தங்களைப் பிடிக்க பீமன் காவலன் உடை யணிந்து காவல் புரியவும் முனைவானென்பதைச் சற்றும் எதிர்பாராத இளையபல்லவன் அவனைத் தன் எதிரே கண்டதும் அளவுக்கு மீறிய வியப்பும் அதிர்ச்சியுமே அடைந்தான். அதுமட்டுமல்ல. இரண்டு தடவை வண்டியைச் சுற்றி வரும்வரை பீமனை அமீர் எப்படி அடையாளம் கண்டுகொள்ளாமல் இருந்தான் என்பதும் சட்டென்று புரியாது போகவே அதிர்ச்சி சற்று எல்லை கடந்ததாகவே இருந்தது. ஆனால் அடுத்த வினாடி பீமன் தலையில் யவனர்களின் உலோகக் கவசத்தை அணிந்திருந்ததையும் அதன் முகப்பு மூடியை முகத்தை முக்கால் வாசி மறைக்கும்படி இழுத்துத் தாழ்த்தியிருந்ததால் நேர்ப் பார்வைக்கு முகத்தின் கீழ்ப்பாகம் மட்டுமே தெரியுமாதலால் யாரும் பீமனைச் சட்டென்று புரிந்துகொள்ள முடியாதென்பதையும் உணர்ந்துகொண்ட இளையபல்லவன், ஆபத்தான அந்தச் சமயத்திலும், அதிர்ச்சி மனத்தைக் கவ்விய அந்த நேரத்திலும், தென் கலிங்கத்து மன்னன் திறனை மனத்துக்குள் பாராட்டவே செய்தான். பீமன் புரவிமேலிருந்து தன்னைக் கீழ்ப்புறம் கவனித்ததாலும் தானும் திடீரெனத் தலையைத் தூக்கியதாலுமே பீமனை யாரெனத் தான் புரிந்துகொள்ள முடிந்ததென்பதைச் சந்தேகமற உணர்ந்த இளையபல்லவன் சரேலெனத் தன் வாளை வெகு வேகமாக உறையிலிருந்து உருவினான். அந்தச் சமயத்தில் மட்டும் பீமன் ஆணவத்துக்கு இடங்கொடுக்காமல் நடந்துகொண்டிருந்தால் அடுத்த நாள் உதயத்தை அந்த வண்டியிலிருந்த யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் இரத்தத்தில் இயற்கையாக ஊறிவிட்ட மமதை பீமனைப் பலமாக நகைக்கச் செய்தது. முதலில் நகைத்தவன் அத்துடன் நிற்காமல் காவல் பலத்தால் ஏற்பட்ட துணிவாலும், அசட்டையாலும் உடனே நடவடிக்கை துவங்காமல், “அடிமை வேடத்தில் படைத் தலைவரா?” என்று இரைந்து கூறி இடி இடியென இன்னொரு முறையும் நகைத்தான். மூன்றாம் முறை அவன் நகைக்கவில்லை. காளைகள் கனவேகத்தில் திடீரென எதிரேயிருந்த குதிரைப் படை வரிசையை நோக்கிப் பாய்ந்தன. அடுத்த விநாடி அந்தக் கோட்டை வாயிலைப் பெரும் குழப்பம் சூழ்ந்துகொண்டது.

சிரிப்பினால் விளைந்த விபரீதங்கள் பல. புராணங்களில் அத்தாட்சி அவற்றுக்கு நிரம்ப உண்டு. அன்று திரௌபதி சிரித்ததால் விளைந்தது மகாபாரதம். இன்று பீமன் சிரித்ததால் விளைந்தது வேறொரு விபரீதம். கலிங்கத்தின் பிற்கால அவலநிலைக்கு அன்றே அடிகோலியது பீமன் சிரிப்பு. எந்த விநாடியிலும் தாங்கள் வளைக்கப்படலாமென்பதை அறிந்து இந்திரியங்களை ஊசி முனையில் நிறுத்திக்கொண்டிருந்த அமீர் பின்னால் திடீரென ஏற்பட்ட சிரிப்பைக் கேட்டதும் தன் இடையிலிருந்த குறுவாள்களை மின்னல் வேகத்தில் எடுத்து விர்விர்ரென்று எதிரே வழிமறித்து நின்ற குதிரை வீரர்கள் மீது வீசிவிட்டு அதேசமயத்தில் சாட்டையையும் பளீர் பளீரெனக் காளைகளின் முதுகில் வெகு வேகமாகத் தாக்கினான்.

எண்ணிக்கையின் அதிகத்தாலும், காவலை யாரும் பிளக்க முடியாதென்ற சித்தத்தாலும் பலத்த எச்சரிக்கையிலும் சிறிது அசிரத்தையைக் கலந்து கொண்ட குதிரை வீரர் வரிசை, கண்ணிமைக்கும் வேகத்தில் அமீர் வீசிய குறுவாள்களால் சட்டென்று பிளவு கொடுத்தது. புரவிகளிலிருந்து சட்டென்று நிலத்தில் மூன்று வீரர்கள் விழுவதற்கும் குறுவாளால் தாக்கப்பட்ட புரவியொன்று வீரிட்டுக் குறுக்கே ஓடி வரிசையைக் கலைப்பதற்கும் வண்டிக் காளைகள் திடீரென வாயு வேகத்தில் பறப்பதற்கும் அவகாசம் சரியாக இருக்கவே எதிர்வரிசை மின்னல் வேகத்தில் பிளந்தது.

அப்படிப் புரவிகள் வரிசை பிளந்த அதே விநாடியில், “மடக்குங்கள் வண்டியை” என்று பிரம்மாண்டமாக எழுந்த பீமன் கூச்சல் அந்தக் கோட்டைப் பிரதேசத்தில் பலமாக எதிரொலி செய்யவே இருபது முப்பது வீரர்கள் வாள்களுடனும், ஈட்டிகளுடனும் வண்டியின் பின்புறம் கனவேகத்தில் நெருங்கினார்கள். வேல்கள் வண்டியை நோக்கிப் பறந்தன. ஆனால் வண்டி, வேல்களைவிட வேகமாகப் பாதையில் பறந்தது. காளைகளைவிடப் புரவிகள் வேகம் வாய்ந்தவைதான். காவல் செய்த புரவிப் படைக்குச் சுதந்திரம் இருந்தால். அவை அந்தக் காளைமாட்டு நீர்க்குட வண்டியைத் துரத்தி கணநேரத்தில் மடக்கியிருக்க முடியும். ஆனால் முடியாத ஒரு பெருந்தடை அவர்களுக்கு எதிரே நின்றது. சோழ நாட்டு வீரம் எப்படியிருக்கும் என்பதை அங்கே அன்று கலிங்க வீரர்கள் கண்டார்கள். அமீர் மூன்று புரவி வீரர்களைத் திடீரெனத்தன் குறுவாள்களுக்கும் பலி கொடுத்துக் குதிரையொன்றின் வயிற்றிலும் கத்தி எரிந்து குழப்பத்தை விளைவித்துப் புரவிப் படையைப் பிளந்து ஊடுருவியதும் வண்டி கோட்டை வாசலின் உயரத்திலிருந்து கனவேகமாகச் சரிவுப் பாதையில் பாய்ந்தது. கோட்டை வாசலின் முகப்பிலிருந்து கடற்கரை மணலில் இறங்கிய அந்தப் பாதையின் ஆரம்பம் வந்ததும் சரேலெனக் கீழே குதித்த இளைய பல்லவன் தன் வாளை உருவிக்கொண்டு எதிரே வந்த புரவிப்படையைத் தேக்கினான்.

அமீர் விளைத்த குழப்பத்தின் விளைவாக அணி வகுத்து வரமுடியாமல் தாறுமாறாக வந்த புரவிப் படையின் முகப்பில் வந்த வீரனொருவன் புரவியின் வயிற்றில் கண்ணிமைக்கும் நேரத்தில் தன் வாளைப்பாய்ச்சி இழுத்த கருணாகர பல்லவன் மல்லாந்து அந்தக் குதிரையிலிருந்து விழுந்த வீரனின் கழுத்திலும் கத்தியைப் பாய்ச்சிவிட்டு அவன் கையிலிருந்த வேலை எடுத்து எதிரே வந்த நாலைந்து புரவி வீரர்களில் ஒருவன் மீது வீசினான். வேலை நேராக மார்பில் தாங்கி மாண்டு விழுந்த அந்த வீரனின் குதிரைமீது ஒரே தாவாகத் தாவி ஏறிய சோழர் படைத்தலைவன் குதிரையைக் கன வேகத்துடன் அப்புறமும் இப்புறமும் திருப்பியும் தன் நீண்ட வாளை மின்னல் வேகத்தில் சுழற்றியும் வண்டியைப் பின்பற்ற முயன்ற புரவி வீரர்களைத் தேக்கினான்.

அமீரின் வண்டி திடீரென முன்னோக்கிப் பாய்ந்து சென்றுவிட்டதாலும், தன் ஆணைப்படி காவல் வீரர்கள் வண்டியைத் தொடர முற்பட்டதாலும் பின்னால் தங்க நேர்ந்த பீமன் தன் கண்ணெதிரே நடந்து கொண்டிருந்த வீர ஜாலத்தைக் கண்டு நம்ப முடியாமல் வியப்பின் வசப்பட்டு, குதிரையில் அசையாமல் சில விநாடிகள் உட்கார்ந்து விட்டான். அமீரின் வண்டி திடீரெனப் பாய்ந்த வேகம், புரவிப் படை வரிசையில் மூன்று வீரர்கள் திடீரென உருண்டு மாண்டது, வரிசை பிளந்து வண்டி யோடியது, இத்தனையும் பீமனுக்கு வியப்பை அளித்த தென்றால், இளையபல்லவன் வண்டியிலிருந்து குதித்துக் குதிரையொன்றை மாய்த்துத் தன் வீரர்களைக் கோட்டை வாசல் முகப்பிலேயே தேக்கியதன்றி, தன் காவல் வீரனொருவனின் புரவிமீதும் தாவி வாளைச் சுழற்றிக் குதிரையைத் திருப்பி வளைந்து வளைந்து போரிடவும் முற்பட்டது ஆச்சரியத்தின் எல்லையையும் தாண்டி அவனைக் கொண்டு சென்றது. அதன் வசப்பட்ட பீமன் அவசியமான நாழிகைக்கு அதிகமாகவே தன் வீரர்கள் தேக்கப்பட்டு விட்டதைக்கூட நினைத்துப் பார்க்கச்சக்தியற்றவனாய் இளையபல்லவனின் துணிவை நினைத்து மலைத்து நின்றான்.

அந்த நினைப்பும், நினைப்பினால் ஏற்பட்ட மலைப்பும் சில விநாடிகள் தான் நின்றன. ஆனால் அந்த விநாடிக்குள் நிகழ்ந்த விபரீதம் கணக்கிட முடியாது. புரவிமேல் ஆரோகணித்து வாளை வீசிக்கொண்டு கால ருத்திரன் போல் சுழன்ற இளையபல்லவன் நாலைந்து வீரர்களை மாய்த்து விட்டதன்றி, தனது புரவியைக் கோட்டை வாயிலின் குறுக்கே வடக்கும் தெற்குமாக ஓடவிட்டு, புரவிப் படையினர் யாரும் அருகே வர முடியாதபடி தடுத்து நின்றான். அப்படி நின்ற சமயத்தில் தற்காலிகமாகத் தனக்கு ஏற்பட்ட வெற்றியைக் கண்டு பெருமிதமும் அந்த வெற்றியின் விளைவாக அநபாயன் காஞ்சனாதேவி முதலியோர் தப்பிவிட முடியும் என்ற நினைப்பால் மன ஆறுதலும் கொண்டான் இளையபல்லவன். அந்த மன ஆறுதலுடன் தன் நிலையும் புரிந்தே இருந்தது அவனுக்கு. எதிரே வரிசை வரிசையாக வந்து கொண்டிருந்த வீரர்களுக்குத் தான் பலியாக அதிக நேரமாகாது என்பதை உணர்ந்துகொண்ட கருணாகர பல்லவன், அந்த உணர்ச்சியின் விளைவாகச் சற்றும் கலவரப்படாமல் மிகுந்த வேகத்துடனும் ஆனால் நிதானத்துடனும் போரிட்டான். தன் உள்ளத்தைக் கவர்ந்து நின்ற காஞ்சனாதேவியும் அநபாயனும் தப்புவதற்கும், தான் முதல் பலியாவதானால், எதிரிகளைப் பெரும் பலிகொடுத்தே சாவதென்ற முடிவுடன் மிக உக்கிரமாகப் போரில் இறங்கிய இளைய பல்லவன், எதிர்நோக்கி வந்த புரவி வீரர்களின் நால்வர் வாள்களைத் தன் வாளால் மிக வேகமாகத் தடுத்தான். அப்படித் தடுத்தும் திடீரெனக் குதிரையை முன் செலுத்தி இரண்டொருவர் மார்புகளில் வாளைப் பாய்ச்சி இழுத்தும் பலி கொடுத்து மெள்ள மெள்ளப் பின்னடைந்தான்.

எதிரேயிருந்த வீரர்கள் மீண்டும் மீண்டும் பலியான தால் அவர்கள் பிரிந்து பக்கவாட்டிலும் வரத் தொடங்கினார்கள். “உம்! சூழ்ந்து கொள்ளுங்கள் அவனை” என்று தூரத்திலிருந்து கூவிய பீமனின் உத்தரவைத் தொடர்ந்து நாற்புறத்திலும் வீரர் நெருங்க முற்படவே, தன் காலம் நெருங்கிவிட்டதென்ற முடிவுக்கு வந்தான் இளைய பல்லவன். அவன் வாளைச் சுழற்றிச் சுழற்றிக் குதிரையையும் சுழற்றிப் போரிடப் போரிட எதிரிகளும் அவனை நாற்புறமும் சூழ்ந்தார்கள். அதே சமயத்தில் பீமன் உத்தரவுப்படி மற்றொரு பிரிவு அவனைப் பக்கவாட்டில் தாண்டி அமீரின் வண்டியையும் மிக வேகமாகத் துரத்தியது. அடுத்த விநாடி தன் கழுத்திலிருந்த கொம்பை எடுத்துப் பீமன் மும்முறை ஊதினான்.

அந்த ஊதலால் கடற்கரைப் பிராந்தியமே திடீரென உயிர்பெற்றுத் துடித்தது. அந்தக் கொம்பின் ஒலியால் தூரத்தே சுங்கச் சாவடியிலிருந்த வீரர்கள் பலர் சண்டை நடக்கும் இடத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள். வாள்களின் ஒலியினால், இளையபல்லவனின் வாளால் மாண்ட குதிரைகளின் ஓலத்தாலும் அந்தக் கடற்கரை மிகப் பயங்கரமாக எதிரொலி செய்தது. எதிர்பாராத சண்டை ஏற்பட்டதால் படகிலிருந்து மூட்டைகளைத் தூக்கிச் சுங்கச் சாவடிக்குச் சென்றுகொண்டிருந்த பணியாட்கள் மூட்டைகளைக் கீழே போட்டுக் கலவரப்பட்டு ஓடினார்கள்.

இந்தக் குழப்பத்தில் இளையபல்லவன் நிலை விநாடிக்கு விநாடி அபாயமாகிக் கொண்டிருந்தது. வெகு வேகமாக வாளைச் சுழற்றிப் போரிட்ட போதிலும் எதிரிகளின் வாள்கள் விளைவித்த காயங்கள் பலவற்றால் அவன் உடலில் குருதி புறப்பட்டு உடையை நனைத்திருந்தது. அவன் புரவியும் காவல் வீரனொருவனின் வேல் வீச்சால் மாண்டு விடவே அது சாயுமுன்பு நிலத்தில் குதித்த இளைய பல்லவன் நிலத்தில் நின்றபடியே போரிட்டான். அந்த நிலையில் நான்கு புரவிகள் அவனை நோக்கிப் பாய்ந்து வந்தன. அவற்றிடம் துவைபடாதிருக்கப் பின்னோக்கிச் சில அடிகள் ஓடி மீண்டும் போரிடத் திரும்பினான் இளையபல்லவன். அதே விநாடியில் பின்புறத்திலிருந்தும் பெருத்த அபாயம் வந்தது அவனுக்கு. குதிரை வீரர்கள் இளையபல்லவனையும் தாண்டி வண்டியைத் தொடர்ந்த தால் அமீர் காஞ்சனாதேவி பதுங்கியிருந்த நீர்க்குடத்தின் மூடியை நீக்கிவிடவே அநபாயன் உத்தரவுப்படி எரியம்பை ஆகாயத்தில் வீசினாள் காஞ்சனாதேவி. ஆக்னேயாஸ்திரம் போல் வானவீதியில் இருளைக் கிழித்துக்கொண்டு சென்ற அந்த எரியம்பின் மர்மம் அறியாத குதிரை வீரர்கள் திடீரெனப் பேராபத்தில் சிக்கினார்கள். எரியம்பின் அடையாளத்தைக் கண்டதும் குதிரைச்சாலைத் தலைவன் முன்னேற்பாட்டின்படி தயாராக வைத்திருந்த முரட்டு அரபுப் புரவிகளின் தளைகளைப் பல ஆட்களைக் கொண்டு ஒரே சமயத்தில் தரித்துவிடவே, கிழக்குக் கோட்டை வாசலுக்கு அடியிலிருந்த கடற்கரை மணலில் இருபது வெறி பிடித்த புரவிகள் வாயு வேகத்தில் தாறு மாறாகப் பறக்கத் தொடங்கியதால் பயங்கரமான பெரும் குழப்பம் அந்தப் பிராந்தியத்தில் ஏற்படவே செய்தது.

அசாயத்தியமான வேகத்துடனும், திடீர் திடீரென கால்களைத் தரையில் உதைத்து மணலைக் கிளப்பிக் கொண்டும் பயங்கரமான விதவிதமான கனைப்புகளுடன் அந்த உயர்ந்த சாதி அரபுப் புரவிகள் குறுக்கே ஓடியதால் வண்டியைத் துரத்திய புரவி வீரர்கள் தடுக்கப்பட்டனர். பழக்கப்படுத்தப்படாத அந்த அரபுப் புரவிகள் மிகுந்த வேகத்துடன் அப்புறமும் இப்புறமும் அம்புகள் போல் பாய்ந்து பாய்ந்து திரிந்தன. சில புரவிகள் குதிரை வீரர்களின் குதிரைகளையும் தாண்டி எழும்பியதால் அவற்றில் ஆரோகணித்திருந்தவர்கள் மணலில் புரண்டார்கள். மணலில் புரண்ட சிலர் சில புரவிகளின் குளம்புகளில் சிக்குண்டு கதறினார்கள். அந்தப் பயங்கரப் புரவிகள் பழக்கப்பட்ட படைப் புரவிகளை உதைத்தன; கடித்தன. திடீர் திடீரெனத் திரும்பித் திரும்பி ஓடின. மீண்டும் திரும்பித் திரும்பிப் பாய்ந்து வந்தன. சுதந்திரமாகத் தாங்கள் திரிந்த அரபுப் பாலைவன ராஜ்யத்தை இங்கு ஸ்தாபித்தன.

புரவி வீரர்களுடன் போரிட்டுக் கொண்டு பின்னுக்கு நகர்ந்த இளையபல்லவன் . ஒருமுறை பின்னுக்குக்கண்ணை ஓட்டி அங்கு நிகழ்ந்த பயங்கரத்தைக் கண்டான். கண்டு வியந்தானா! அஞ்சினானா! அவனுக்கே புரிய வில்லை அவன் உணர்ச்சி! புரவிகள் இருப்பதை விட்டுப் பின்தொடரும் படையை எப்படி மடக்க முடியும் என்று ஆரம்பத்தில் சந்தேகித்த இளையபல்லவன், அந்தப் புரவிகளின் வேகத்தாலும் முரட்டுத்தனத்தாலும் நிகழ்ந்த சேதத்தைக் கண்டு வியக்கவே செய்தான். அந்த வியப்பில் ஒரு வருத்தமும் எழுந்தது அவன் உள்ளத்தில்.

தானும் மெள்ளப் போரிட்டுக் கொண்டு பின்னால் வந்துவிட்டாலும் தான் தப்பும் மார்க்கத்தை அந்தப் புரவிகள் அடியோடு அடைத்துவிட்டதை எண்ணி வருந்தினான். பின்னால் சென்றால் அரபுப் புரவிகள் மிதித்துவிடும். முன்னால் சென்றால் வீரர்கள் அழித்துவிடுவார்கள். எப்படியும் மரணம் நிச்சயம் என்ற முடிவுக்கு வந்த இளையபல்ல வனின் இதயத்தில் சந்துஷ்டியும் நிலவியது. “எப்படியும் அநபாயனும் காஞ்சனாதேவியும் தப்பிவிட்டார்கள். இது பெரும் சாதனை. என் சாதனை” என்று தன்னைப் பாராட்டிக் கொண்டு மரணத்தை வரவேற்க வெறியுடன் போரிட முற்பட்டு, தன் வாளை வெகு வேகமாகச் சுழற்றி முன்னேறி, சுற்றிலும் சூழ்ந்து வந்த வீரர் கூட்டத்தில் புகுந்தான். அந்தத் தருணத்தில் மரணமும் அவனை வரவேற்க முற்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பின்புறம் முரட்டு அரபு நாட்டுப் புரவிகள் நான்கு அவனை நோக்கி ஏன் பாய்ந்து வர வேண்டும்?

அவை மட்டுமா பாய்ந்து வந்தன? இல்லை, இல்லை. பீமன் சற்றுத் தூரத்திலிருந்து இம்மி பிசகாமல் குறிவைத்து எறிந்த வேலொன்றும் அவன் கழுத்தை நோக்கிப் பறந்து வந்தது.

Previous articleRead Kadal Pura Part 1 Ch35 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch37 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here