Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch37 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch37 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

175
0
Read Kadal Pura Part 1 Ch37 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch37 | Kadal Pura Sandilyan | TamilNovel.in.

Read Kadal Pura Part 1 Ch37 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 37: பிரிவா, முடிவா?,

Read Kadal Pura Part 1 Ch37 | Kadal Pura Sandilyan | TamilNovel.in.

தூரத்தே புரண்டு புரண்டு வந்து தரையில் மோதிய கடலலைகளைவிடப் பெரும் கனைப்புகளுடனும் வேகத் துடனும் தன்னைப் பின்புறத்தில் மோதப் பாய்ந்து வந்த முரட்டு அரபுப் புரவிகளைப் பார்க்கச் சற்றுக் கண்ணைப் பின்புறம் திருப்பிய இளையபல்லவன், முன்புற எச்சரிக்கையை இழந்தது அரை வினாடியே என்றாலும், அந்த அரை விநாடிக்குள் வெகு லாகவமாக குறிவைத்துப் பீமன் எறிந்த பெரும் வேல் அவன் கழுத்தை மின்னல் போல் தடவி உராய்ந்து தோலையும் ஓரளவு உரித்துச் சென்றதால் மற்றக் காயங்களைவிட அந்தக் காயத்திலிருந்து குருதி பலமாகப் பிரவாகிக்கத் தொடங்கியது. வேலெறிவதில் குறி தவறாதவன் எனப் பிரசித்தமுடைய தென் கலிங்கத்துப் பீமனின் வேல் அன்றும் குறி தவறாமல் இளையபல்லவன் கழுத்தை ஊடுருவத்தான் வந்ததென்றாலும், சோழர் படைத் தலைவன் தலைவிதியும் கலிங்கத்தின் பிற்காலக் கதியும் அவன் உயிரை மயிரிழையில் காக்கவே செய்தன. இளையபல்லவன் போராட்டத்திலேயே இருந்திருந்தால் அந்த வேலே அவனை மாய்த்திருக்கும். ஆனால் திடீரெனப் பின்புறத்தில் புரவிகளின் சத்தத்தைக் கேட்டுத் திரும்பி விட்டதாலும், மீண்டும் அவன் கழுத்தைத் திருப்பி எதிரிகளை நோக்கு முன்பு வெகு வேகத்துடன் புரவியொன்றும் அவனை முட்டியதால் அவன் உடல் சிறிது நகர்ந்துவிட்டதாலும் பீமனின் வேல் அவன் உயிரை உறிஞ்ச சக்தியற்ற தாயிற்று. இருப்பிலும் அவன் வேலைவிடப் பயங்கரமாகப் பாய்ந்து வந்தன பின்புறத்தில் அரபுப் புரவிகள். எதிரிகள் மீண்டும் அவனைச் சுற்றி வளைத்துத் தாக்கினார்கள்.
மனித வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் அபாயமே பெரும் உதவியாக மாறத்தான் செய்கிறது. இளையபல்லவன் அந்தச் சமயத்திலிருந்த அபாயநிலையில் பின்னால் வந்த புரவிகள் விளைவித்த அபாயம் ஓரளவு நன்மையே விளை வித்தது. கலிங்க வீரர்களுக்கும் இளையபல்லவனுக்கும் எந்தவித வித்தியாசத்தையும் எட்டாத அந்த முரட்டுப் புரவிகள் இளைய பல்லவனை மட்டுமின்றி அவனைச் சூழ்ந்து வந்த கலிங்க வீரர்மீதும் பாய்ந்ததால் வீரர் படை அவனைச் சூழ முடியாமல் பின்னடையவே நாற்புறத்திலும் சுழன்று போரிட அவசியமில்லாமல் எதிரிகளை நேர் முகமாகவே வாளால் தடுத்தும் வீழ்த்தியும் போரிட்டான் சோழர் படைத் தலைவன். அந்தப் போரும் சில விநாடிகளே நிகழ்ந்தன. புரவிகளின் பாய்ச்சலுக்கும் கடிக்கும் உதைக்கும் அஞ்சிய கலிங்கக் காவல் வீரர்கள் சில அடிகள் பின்வாங்கியது இளைய பல்லவனுக்கு ஓரளவு சௌகரிய மாயிருந்தாலும் அவன் அந்தச் சமயத்தில் மரண வேதனையைப் பரிபூரணமாக அனுபவித்தான். புரவிகள் அவனைச் சில சமயம் உராய்ந்து சென்றபோது, ஏற்கெனவே பல காயங்களிலிருந்து ரத்தம் பெருகியதால் சோகப்பட்டிருந்த அவன் உடல் தள்ளாடியது. புரவிகள் கடல் மணலைப் பின்புறக் காலால் வாரி வாரியடித்ததால் மணலிலிருந்த சிறுசிறு கற்கள் சுள்சுள்ளென்று அவன் தேகத்தில் பல இடங்களிலும் தாக்கின. வீசப்பட்ட மணல் அங்கியணிந்த பாகங்களைப் பாதிக்காவிட்டாலும் குருதி பாய்ந்த கழுத்தின் பின்புறத்திலும் சதை பிய்ந்த பக்கப் பகுதிகளிலும் தாக்கி, பதிந்து, மிகுந்த எரிச்சலையும் சொல்லவொண்ணா வேதனையையும் விளைவித்தன. திடீர் திடீரெனக் கிடைத்த இரண்டொரு உதைகள் அயராத அவன் கால்களையும் அயர வைத்தன. இத்தனையையும் சமாளித்துக் கொண்டு எதிரிகளைத் தேக்கி நின்ற இளைய பல்லவன், காவல் வீரர்களில் சிலர் மாண்டுவிட்டாலும் அவருக்குப் பின்புறத்திலிருந்து மீண்டும் இருபது முப்பது புரவிப் படை வீரர்கள் உதவிக்கு வருவதைக் கவனித்தான். துவண்ட தன் கால்களையும் சற்றே மயக்கம் வந்துகொண்டிருந்த தனது எண்ணினான். அதை வாழும் தன்க நிலையையும் எண்ணினான். தனக்கு முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறதென்பதைச் சந்தேகமற உணர்ந்தான்.

மரண உணர்ச்சி மனிதனுக்கு எப்பொழுதும் எதிர் பாராத பலத்தையும் வேகத்தையும் அளிக்கும் தன்மை வாய்ந்ததால், மரணத்தை எதிர்நோக்கி நின்ற அந்தக் சமயத்தில் இளையபல்லவனுக்கு இணையற்ற பலத்தையும் அளித்தது. அதைத்தவிர அந்தச்சமயத்தில் புரவி வீரர் அணி முகப்பில் தன் எதிரே ராட்சதன் போல் வந்துவிட்ட பீமன், “வெட்டிப் போடுங்கள் அவனை. உங்களில் நால்வர் சுங்கச் சாவடிப் பக்கம் போய்ச் சங்கமக் கரையோரமாகப் போய் அந்த வண்டியைத் தடை செய்யுங்கள்” என்று உத்தரவிட்டதையும் அந்த உத்தரவைத் தொடர்ந்து அவனுக்குப் பின்புறமிருந்த வீரர் சிலர் புரவிகளின் இடையூறு இல்லாத பக்கமாகச் சுங்கச் சாவடியை நோக்கி விரைந்ததையும் கவனித்த இளையபல்லவன், வெகு சீக்கிரம் அமீரின் வண்டியையும் ஆபத்து சூழ்ந்துவிடும் என்பதை உணர்ந்து கொண்டானாகையால் வாளால் எதிரிகளைத் தாக்கிக்கொண்டு பின்புறம் திரும்பி வண்டியை நோக்கினான். அடுத்த வினாடி பின்புறம் பாய்ந்த முரட்டுப் புரவியொன்று மோதித் தள்ள அவன் நிலத்தில் உருண்டான். அவன் தலையில் இருமுறை இரு குளம்புகள் சட்சட்டென்று தாக்கின. அத்துடன் அவன் நினைவிழந்தான். வேறுபல புரவிகள் அவன்மீது பாய்ந்து சென்றன.

புரவிகளின் அந்தத் தாக்குதலில் அந்த வீரனின் உடல் மணலில் புரண்டதைக் கண்ட பீமன், இனி அவனைக் கவனிக்கத் தேவையில்லையென்ற காரணத்தாலும், தாறு மாறாகப் படையைத் தேக்கும் புரவிகளோடு போரிடுவது அவசியமில்லை என்ற காரணத்தாலும், வண்டியை மடக்க ஏற்பாடு செய்து அநபாயன் முதலியவர்களைப் பிடிப்பதே அடுத்தபடி செய்ய வேண்டிய வேலை என்ற உத்தேசத்தாலும் தன் வீரர்களைப் பக்கவாட்டில் திரும்பச் சொல்லி அவர்களுடன் சுங்கச் சாவடிப் பாதையில் வெகு துரித மாகச்சென்றான். அப்படிச் சென்று கொண்டிருந்த சமயத்தில் அமீரின் வண்டி எங்கிருக்கிறதென்பதைக் கவனிக்க நீர்க் கரையருகே கண்களை ஓட்டினான். புரவிகள் எழுப்பிய மணல் தூசியும் இடையே போடப்பட்ட கப்பிச் சாலையிலிருந்து கிளம்பிய செம்மண் தூசியும் கடற்கரைப் பிராந்தியத்தில் மண்டிக் கிடந்ததால் வண்டி இருந்த இடம் கண்ணுக்குத் தெரியவில்லை கலிங்கத்து அதிபனுக்கு. அந்தத் தூசி மட்டும் மறைக்கவில்லை அமீரின் வண்டியை. அந்த வண்டிக்கு முன் ஓடிய வண்டிகளும் கிழக்குக் கோட்டை வாசலில் நிகழ்ந்த சண்டையால் ‘பயந்த பணி யாட்கள் தாறுமாறாக ஓடியதும் கடற்கரையில் கலவரத்தைத் தடுப்பதற்காகவே நிறுத்தப்பட்டிருந்த சுங்கக் காவல் வீரர் நீர்க்கரையை அடைக்க விரைந்ததால் ஏற்பட்ட கூட்டமும்கூட வண்டி கண்ணுக்குப் புலப்படாததற்குக் காரணமாயின. புலப்படாத அந்த வண்டியைத் தேக்கும் காரணத்துடன் வெகு வேகமாகச் சுங்கச் சாவடியை அடைந்த பீமன், அங்குள்ள காவல் வீரர்களை நீர்க்குடம் ஏற்றிச் செல்லும் சகல வண்டிகளையும் மறிக்குமாறு உத்தர விட்டான். அத்துடன் எந்த மரக்கலத்தையும் நங்கூரம் எடுக்க அனுமதிக்க வேண்டாமென்று காவல் படகுகளின் மாலுமிகளுக்கும் உத்தரவிட்டான். இந்த உத்தரவுகளின் விளைவாகக் காவல் வீரர்கள் வேகமாக நீர்க்கரை எல்லை முழுவதையும் வளைக்க முற்பட்டனர். பந்தங்களை ஏந்திய படகுகளில் பல, கோதாவரி சங்கம நீரில் படர்ந்து சென்று எங்கும் பரவத் தொடங்கின.

நாலைந்து வண்டிகளின் மறைவில் தனது வண்டியை ஓட்டினாலும் பின்புறமே பார்த்து வந்த அமீர், இளைய பல்லவனின் நிலையைக் கவனித்தான். புரவிகளின் அட்டகாசத்தைக் கவனித்தான். பீமன் சுங்கச் சாவடியை நோக்கி விரைந்ததையும் கவனித்தான். அடுத்த சில நிமிடங்கள் சங்கம நீரில் படகுகள் படர்ந்து சென்றதையும் பந்தங்கள் பல அலைமோதிய கரையை நோக்கி ஊர்வதையும் பார்த்தான். தாங்கள் நன்றாக வளைக்கப்பட்டதை உணர்ந்து கொண்டதால் அதுவரை வண்டிக்குப் பின் சென்றவன் சுவடு மாற்றி மற்ற வண்டிகளைத் தாண்டிச் செல்லத் தனது காளைகளை முடுக்கினான்.

வேகமாகச் சென்ற அந்த வண்டியின் பின்புறம் அமர்ந்திருந்த அநபாயனும், அத்தனையையும் கவனிக்கவே செய்தான். அவன் முகம் உணர்ச்சியேதுமற்றுக் கல்லா யிருந்தது. இளையபல்லவன் கதியை முழுவதும் நிர்ணயிக்க முடியாவிட்டாலும், ஓரளவு ஊகிக்க முடிந்த அவன் இதயத்தின் நிலை எதுவோ சொல்ல முடியாது. ஆனால் முகத்தின் நிலையில் எந்த மாறுதலுமில்லை. வெறித்துச் சில வினாடிகள் கோட்டை வாசல் பிராந்தியத்தில் தன் கண்ணுக்கெதிரே விளைந்த காட்சியை நோக்கினான். பிறகு ஏதும் நடக்காதது போல, “இனி மறைவுக்கு அவசியமில்லை அமீர். வெகு சீக்கிரம் நாம் காவலரால் சூழப்படுவோம். ஆகவே இவர்களைக் குடங்களிலிருந்து எழுந் திருக்கச் சொல். ஆளுக்கொரு வாளையும் கொடு” என்றான் அநபாயன் வறண்ட குரலில்.

அமீருக்கு நிலைமை புரிந்திருந்தது. வண்டி நீர்க்கரையை அணுகுவதற்குச் சில அடிகளே இருந்தன. தூர நீர்க் கரையில் பெரும் பந்தமேதுமில்லாமல் மினுக்மினுக்கென்று சிறு விளக்குகளுடன் ஒரு படகு நின்றிருந்ததையும் கவனித்தான். அந்தப் படகைத்தான் தாங்கள் அணுக வேண்டு மென்பதையும், அதை அணுகுமுன்பு சற்றுத் தூரத்தில் வந்துகொண்டிருந்த சுங்கக் காவலர் அதை அணுகி விடுவார்களென்பதையும் உணர்ந்து கொண்டானாதலால், “அநபாயரே சிறிது தாமதியுங்கள். நீர்க்கரையை அடையும் தருணத்தில் அதைச் செய்வோம்” என்று கேட்டுக் கொண் டான். அமீரின் தாமதத்துக்குக் காரணம் அநபாயனுக்குப் புரியாவிட்டாலும், அவன் அதை ஆட்சேபிக்காமல் அடுத்து நேரவேண்டிய சண்டைக்குத் தயாராக நினைவை முடுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். நீர்க்கரையை அநேகமாக வண்டி நெருங்கிய தருணத்தில் காவலரும் நெருங்கி வந்தனர். வந்தது காவலர் மட்டுமல்ல, அங்கு நின்றிருந்த படகிலிருந்து நான்கு மாலுமிகளும் கரையில் குதித்து வண்டியை எதிர் கொண்டனர். அதேசமயத்தில், “அநபாயரே! வாள்களை எடுத்து இவர்களுக்குக் கொடுங்கள். காஞ்சனாதேவி! வெளியே வாருங்கள். உங்கள் தந்தை யாரும் வெளிவந்து அந்த மாலுமிகளுக்குப் பக்கத்தில் குதிக்கட்டும்” என்றான்.

அடுத்த விநாடி நீர்க்குடங்கள் வண்டியிலிருந்து உருண்டன. அவற்றைத் தொடர்ந்து வண்டியிலிருந்தவர்கள் மணலில் குதித்துக் கரையை நோக்கி விரைந்தார்கள். கட்டின காளைகளை அப்படியே விட்டுவிட்டுக் குதித்த வர்களுக்கு வைக்கோல் மறைவிலிருந்த வாள்களையும் எடுத்தளித்துவிட்டு, வைக்கோல் மறைவிலிருந்த தனது குறுவாள்களையும் கைக்கொண்ட அமீரும், அவர்களைத் தொடர்ந்தான். அவர்களில் முன் சென்ற குணவர்மனும் பணிப்பெண்களுமே படகை அடைய முடிந்தது. மற்றவர் காவலரால் சூழப்பட்டார்கள். சூழ்ந்த காவலர் பதின்மரே யென்பதையும் மற்றவர் சற்றுத் தூரத்திலேயே வருகிறார்க ளென்பதையும் கவனித்த அநபாயன் தன் வாளைக் கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு மூன்று பேர் மேல் பாய்ச்சி இழுத்தான். அவன் வாளுக்கு இரையாகி விழுந்தவர்களை அடுத்து வந்த மற்ற இருவர்களின் வாள்கள் காஞ்சனாதேவியின் வாளின் சுழற்றலுக்குப் பலியாகி ஆகாயத்தில் பறந்தன. போரிட்டுக் கொண்டே அந்த அபூர் வத்தைக் கவனித்த அநபாயன், எதிரிகளின் கைகளிலிருந்த வாள்களை ஒரு சுழற்றில் அவள் எப்படி நீக்கிப் பறக்க வைக்க முடிந்தது என்பதை அறிய முடியாமல் வியப்பின் வசப்பட்டான்.

காஞ்சனாதேவி குழந்தைகளைச் சமாளிப்பது போல் நாலைந்து வீரர்களின் வாள்களைச் சமாளித்துக் கொண்டிருந்தாள். கையில் உறுதியுடன் பிடிக்கப்பட்டிருந்தாலும், அச்சில் சுழலும் சக்கரம்போல் அவள் வாள் அநாயாசமாகச் சுழலுவதையும், வாள் சுழற்சிக்குத் தக்கபடி அவள் மணிக்கட்டு அநாயாசமாக அசைந்ததையும் கவனித்த அமீர் கூடப் பிரமித்துப் போனான். அப்படிப் போரிட்ட சமயத்திலும் ஆடை சிறிதும் அலங்காமலும் அங்கலாவண்யங்களில் அதிர்ச்சி ஏதுமில்லாமலும் அவள் போரிட்டதையும், போரிட்டுக் கொண்டே அவள் பின்னடைந்த சமயத்திலும் அவள் நடையில் அழகுடன் நிதானமுமிருந்ததையும் கவனித்த அமீர், ‘இது எப்படி சாத்தியம்’ என்று வாயைப் பிளந்து கொண்டே வண்டியிலிருந்து கொண்டுவந்த குறு வாள்களைப் பட்பட்டென்று எறிந்து எதிரிகளில் நாலைந்து பேரை விண்ணுலகு அனுப்பினான்.

முதலில் குணவர்மனையும் பணிப்பெண்களையும் கடலை நோக்கிப் போகச் சொல்லி அவர்களுக்குப் பாது காப்பளித்துக் கொண்டே போரிட்டான் அநபாயன். காஞ்சனாதேவி, அமீர், அநபாயன் மூவரும் மெள்ளப்படகை நோக்கி நகர்ந்தார்கள். அந்த மூவராலும் முடிக்கப்பட்ட சுங்கக் காவலர் பதின்மரைத் தொடர்ந்து மேலும் மேலும் சாரிசாரியாக வீரர்கள் வரவே காஞ்சனாதேவியையும், அநபாயனையும் படகுக்கு விரையச் சொன்ன அமீர், தான் மட்டும் நின்று தூரத்திலிருந்தே இரு குறுவாள்களை வீசினான். சில அடிகளில் வந்து கொண்டிருந்த வீரர் இருவரும் புரவிகளும் மாண்டு விழவே அவர்கள் வேகம் சற்றே தடைப்பட்ட இடை நேரத்தில் அமீர் மாலுமிகளை நோக்கி, “படகு நகரட்டும்” என்று உத்தர விடவே படகு நகர்ந்தது அமீரில்லாமலே. அமீர் கரையில் தங்கிவிட்டதையும், அவனை வீரர்கள் அணுகி வந்து கொண்டிருப்பதையும் ஊர்ந்த படகிலிருந்து கவனித்த அநபாயன், தன் நிலையையும் மறந்து, “அமீர் அமீர்” என்று வாய்விட்டுக் கூவினான்.

காஞ்சனாதேவியின் அஞ்சன விழிகள் கரையைக் கவனித்தன. அமீர் வெகு வேகமாக நீர்க்கரையில் வேறு புறம் ஓடிவந்த வண்டிகளின் மறைவில் மறைந்து விட்டதை அவள் பார்த்தாள். அவனைத் தொடர்ந்து சுங்க அதிகாரியும் கூலவாணிகனும் ஓடுவதும் அவள் கண்ணுக்குத் தெரிந்தது. “ அவர்கள் எங்கு ஓடுகிறார்கள்,” என்று கவலையுடன் கேட்டாள் காஞ்சனாதேவி.

“தெரியாது” என்றான் அநபாயன்.

“அவர் கதி?” மீண்டும் எழுந்தது அவள் குரல்.
அதுவரை தைரியமாயிருந்த காஞ்சனாதேவி விம்மி னாள். கண்களில் நீர் சுரந்து கரைக்குத் திரையிட்டது. அந்தத் திரையிலும் ஒரு முரட்டுப் புரவி வெகு வேகமாக நீர்க்கரையை நோக்கி ஓடிவருவது தெரிந்தது அவளுக்கு. அந்தக் காட்சியும் சீக்கிரம் இருளில் மறைந்தது. கண்ணுக்குத் தெரிந்ததெல்லாம் சொப்பனமோ என்று கூட அவள் நினைத்தாள். சொப்பனத்தைக் கலைத்தது படகு மாலுமியொருவனின் குரல். “கப்பல் வந்துவிட்டது” என்று கூறினான் மாலுமி.

அதைத் தொடர்ந்து, “நூலேணியில் ஏறுங்கள் காஞ்சனாதேவி!” என்றது அநபாயன் குரல்.

ஏதோ கனவில் ஏறுவதுபோல் நூலேணியின் மூலம் மரக்கலத்தில் ஏறினாள் அவள். ஏற்கெனவே நங்கூரம் நீக்கப்பட்ட அந்த மரக்கலம் அவளுக்காகவே அத்தனை நேரம் தாமதித்ததைப்போல் அவள் ஏறியதும் நகரவும் தொடங்கியது. அவள் பாலூர் கிழக்கு வாசலை நோக்கி மீண்டும் விம்மினாள். எதிரே அப்பொழுதும் கடற்கரையில் வீரர்கள் நடமாட்டமும் குழப்பமும் கூச்சலும், பந்தங்களின் அசைவும் இருந்தன. அந்தத் தூரத்திலும் முரட்டுப் புரவிகளின் கனைப்புக் கேட்டது அவள் காது களுக்கு. காவற் படகுகள் பல எங்கும் சங்கமப் பகுதியில் விரைந்து கொண்டிருந்தன. கப்பல் செல்ல முற்பட்டு விட்டதைக் கண்ட காவற் படகுகளின் எரியம்புகள் அந்தக் கப்பலின்மீது சரமாரியாக வரத் தொடங்கின. அவளைச் சுற்றிலும் பறந்தன. அவற்றைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் கடற்கரையைப் பார்த்துக் கொண்டே நின்றாள் கடாரத்தின் இளவரசி.

‘எங்கே அவர்? என்ன ஆனார்?’ என்று அவள் தன்னைத்தானே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டாள். “கடல் புறா பறந்து போகிறதே? வாருங்கள்! வாருங்கள்!” என்று கடற்கரையை நோக்கிக் கையை நீட்டிக் கதறினாள். அவள் கதறலுக்கு யாரும் பதில் சொல்லவில்லை. பெரிதாக எழுந்து மரக்கலத்தைத் தள்ளிச் சென்ற அலைகள்கூட அவளுக்கு ஆதரவு சொல்ல மறுத்து, பேய்ச் சிரிப்புச் சிரிப்பதுபோல் பயங்கரமாகச் சப்திக்கவே செய்தன. காற்றுக் கடவுள்கூட அவளிடம் கருணை இழந்திருக்க வேண்டும். அந்த மரக்கலத்தில் செல்ல இஷ்டமில்லாத அந்தக் கடாரத்து இளவரசியைக் கனவேகத்தில் கடத்திக் கொண்டு பாய்களில் மும்முரமாகப் பாய்ந்து மரக்கலத்தைக் கடலில் வேகமாகச் செலுத்தினான் காற்றுக் கடவுள். மரக்கலம் ஓடியது. அத்துடன் தன் வாழ்க்கையும் எங்கோ ஓடுவதாக அவள் எண்ணினாள். கரையைப் பிரிந்து கப்பல் வேகத்துடன் சென்றது. காதலனைப் பிரிந்த அவள் வேதனையுடன் சென்றாள். பிரிவுக் கனலில் அவள் வெந்து கொண்டிருந்தாள். இது பிரிவா? முடிவா?” என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு ஏங்கினாள். துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டதால், மேலும் மேலும் விம்மினாள். அந்த விம்மலுக்குச் சரியாக அவள் மார்பகம் போலவே கடலின் அலைகளும் எழுந்து எழுந்து தாழ்ந்தன. கப்பல் மட்டும் எதையும் லட்சியம் செய்யாமல் ஓடிக்கொண்டிருந்தது.

முதல் பாகம் முற்றும்

இத்துடன். சாண்டில்யன் அவர்களின் கடல் புறா முதல் பாகம்,

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி. இதன் அடுத்த பாகத்தை கேட்க மிஸ்டர் அன் மிஸ்ஸஸ் தமிழன் சேனலுக்கு Subscribe பண்ணுங்க. நன்றி வணக்கம்.

Previous articleRead Kadal Pura Part 1 Ch36 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch1 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here