Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch8 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch8 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

166
0
Read Kadal Pura Part 1 Ch8 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch8 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch8 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 8 : அபாய அறிவிப்பு!

Read Kadal Pura Part 1 Ch8 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

அந்த இரவில், அறை ஜாமத்திற்கு முன்பு, எந்த முன்னறிவிப்புமின்றிச் சாளரத்தின் மூலம் திடீரென வந்து குதித்துத் திரை மறைவில் பதுங்கிய இளையபல்லவன், சில நாழிகைக்குள்ளாகவே தன்னுடன் நீண்ட நாள் பழக்க முள்ளவன் போல் நடந்துகொள்ளத் துவங்கிவிட்டதையும் படுக்கச் செல்லும் அந்த நேரத்திலும் இடக்கு வார்த்தைகள் பேச முற்பட்டதையும் கண்ட காஞ்சனாதேவிக்கு, அவன் மீது எல்லையற்ற கோபம் சுடர்விடுவதே இயற்கையென்றாலும் அந்த இயற்கைக்கு இதயம் இடம் கொடாமல், உள்ளம் பூராவும் மகிழ்ச்சி வெள்ளம் பாயவே, அவள் அறை நாதாங்கியைப் பிடித்த வண்ணம் இடை சிறிது நெளிய மிக ஒய்யாரமாக நின்றாள். தவிர, இளைய பல்லவன், அவன் கையிலிருந்த காட்டுப் புறாவையும் நோக்கித் தன்னையும் நோக்குவதைக் கண்டதும் சிறிது புன்முறுவலும் கோட்டினாள் கடாரத்தின் இளவரசி. இளைய பல்லவன் அவள் நின்ற அழகையும், உள்ளே ஓடிய எண்ணங்களின் விளைவாக அவள் உதடுகளில் தோன்றிய புன்னகையையும் கவனித்ததன்றி, அவள் கழுத்தில் வளைய வந்து மார்பில் தொங்கிய நவரத்தின மாலையையும் பார்த்து அவள் புன்னகையின் ஒளிக்கு முன்பு அந்த நவரத்தின மாலையின் ஒளி எத்தனை சர்வ சாதாரணமானது என்பதை நினைத்து வியந்தான். எத்தனையோ பளபளப்பான கற்களை உலகத்தில் ஆண்டவன் சிருஷ்டித்திருந்தும், அவற்றுக்குப் பின்பு தொக்கி நிற்க உணர்ச்சியாகிற ஒளியை மட்டும் சிருஷ்டிக்காத காரணத்தினாலேயே ஒரு பெண்ணின் இளநகை முன்பு இரத்தின வைடூரியங்களும் ஒளியிழந்து விடுகின்றன என்பதை எண்ணி ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். காஞ்சனா தேவியின் கண்களும் உதடுகளும், உணர்ச்சிகளின் விளைவாகப் பேசும் பேச்சுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நவரத்தின மாலையின் வைடூரியங்கள் எத்தனை மௌனத்தையும், சங்கடத்தையும் அடைந்திருக்கின்றன என்பதையும் இளையபல்லவன் அலசிப் பார்த்து, ‘விளக்கில் இவை பளிச்சுப் பளிச்சென்று மின்னுவதற்கும் அந்தச் சங்கடம் தான் காரணமாயிருக்க வேண்டும்’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான். செயற்கைக் கற்கள் சிறிதளவும் ஈடு கொடுக்க முடியாத இயற்கை லாவண்யங்களுடன் திகழ்ந்த காஞ்சனாதேவிக்கு ஆபரணங்கள் அனாவசியம் என்றே முடிவுக்கு வந்த கருணாகர பல்லவன், சொர்ணச் சாயையுடனும் பட்டு போல் மென்மையுடனும் விளங்கிய அவள் கழுத்தையும், கன்னங்களையும் ஒருமுறை தடவிப் பார்த்துத் தன் இடது கையிலிருந்த வெண்புறாவின் முதுகை மெல்லத் தடவிக் கொடுத்தான்.

அவன் கண்கள் பாய்ந்த இடங்களைக் கவனித்த காஞ்சனாதேவி அவன் புறாவின் முதுகைத் தடவியதும் தன் கபோலங்களையே அவன் வருடிவிட்டது போல் பெரிதும் சங்கடத்துக்குள்ளாகி, தலையைச் சரேலென்று மறுபுறம் திருப்பிக் கொண்டாள். அப்படித் திருப்பியதால் தன் பார்வைக்கு நேரெதிரில் வந்துவிட்ட அவள் வலது கன்னத்தில் வெட்கத்தின் குருதி பாய்ந்து அதைச் செக்கச் செவேலென்று அடித்துவிட்டதைக் கண்ட இளையபல்லவனும், தான் வரம்பு மீறிவிட்டதை உணர்ந்து, பேச்சினால் உணர்ச்சிகளுக்குத் தளைபோட முற்பட்டு, “காஞ்சனா தேவி!” என்று ஒருமுறை அழைத்தான்.

அவளிடமிருந்து ஒரு “ஹூம்”காரந்தான் பதிலாக வந்தது.

“நான்… ” சிறிது தடுமாறியே பேசினான் அந்த வீரன்.

“ஹூம்” அப்பொழுதும் அதே சத்தம்தான் வந்தது அவளிடமிருந்தது. அந்தச் சத்தத்தில் சங்கடத்துடன் ஓரளவு கடுமையும் கலந்திருந்தது.

“விளையாட்டாகப் பேசிவிட்டேன்” என்று மறுபடி யும் பேச்சைத் துவங்கி, முடிக்க முடியாமல் திணறினான் இளையபல்லவன்.

“ஹும்!”

“மன்னிப்புக் கேட்கிறேன். “

“ஹூம்! ஹூம். “

“இந்த ஹூம்முக்கு மேல் வார்த்தைகளே வராதா உங்களுக்கு?” இம்முறை இளையபல்லவன் சொற்களில் சிறிது தைரியமும் தொனித்தது.

சரேலெனத் திரும்பிய காஞ்சனாதேவியின் கண்களில் மிகுந்த கம்பீரமும் மிதமிஞ்சிய கடுமையும் கலந்திருந்தன. உரிமையற்ற ஆடவன் அதிக உரிமை கொண்டாட முயலும்போது கற்புக்கரசிகளின் இதயத்தில் ஏற்படும் உக்கிரம் அந்தக் கண்களில் இருந்தது. “வார்த்தைகள் வரும் இளைய பல்லவரே! நிரம்ப வரும், வரம்புக்குள் சம்பாஷணையும் செய்கையும் இருக்கும் பட்சத்தில்” என்ற அவள் சொற்களிலும் அந்தக் கடுமை நன்றாகப் புலனாயிற்று. இப்படிப் பேசிய அந்த அழகி, அதுவரையிருந்த சங்கடத்தையும் சலனத்தையும் உதறிக்கொண்டு நெளிந்த நிலையிலேயே சிறிது நிமிர்ந்து கம்பீரத்துடன் நின்றாள்.

ஆளும் தோரணையில் நின்ற அந்த ஆரணங்கைக் கவனித்த இளையபல்லவனின் விழிகள், அவள் விழிகளிலிருந்து தப்பவே முயன்றன. பத்து வாள்கள் வீசப்பட்டாலும் அவற்றை உறுதியுடன் நோக்கவல்ல அவன் கண்கள் அந்தப் பெண்ணின் பார்வைக்கு முன்னால் உறுதி குலைந்து நிலை தடுமாறின. அவன் பேசிய சொற்களும் அப்படி உறுதி குலைந்து தழுதழுத்தே வெளிவந்தன. “புரிகிறது அரசகுமாரி! தவறு புரிகிறது!” என்ற சொற்களைத் தட்டுத் தடுமாறியே உதிர்த்தான் இளையபல்லவன்.

சில வினாடிகள் முன்பு தன்னை அலசிய கண்கள் நிலைகுலைந்து, பெண்களின் கண்களைப்போல் நிலத்தை நோக்குவதைக் கண்டாள் கடாரத்துக் கட்டழகி. புறாவைப் பிடித்திருந்த இடது கையும் அதன் முதுகைத் தடவிய வலது கையும் சற்றே நடுங்குவதையும் பார்த்த அந்தப் பேரழகியின் முகத்திலிருந்த கோபம் மெள்ள மெள்ள அகன்றது. ‘இவர் மிகுந்த பண்பாடுள்ளவர். அதனால்தான் தவறை உணர்ந்ததும் நடுங்குகிறார். பாவம்! எதற்காக இத்தனைக் கடுமையை இவரிடம் காட்டினேன்!’ என்று தனக்குள் எண்ணமிட்டாள் காஞ்சனாதேவி. அத்துடன், ‘ஆண்களின் சலனத்துக்குப் பாதி பெண்கள் தானே காரணம்? பெண்கள் கொடுக்கும் இடத்தால்தானே ஆண்கள் வரம்பு மீறுகிறார்கள்? இவர் திரை மறைவிலிருக்கிறேனென்று சொன்னதும் நான் நகைத்தது மட்டும் சரியா? பெண்மைக்கு அழகா?” என்று தன்னையும் கண்டித்துக் கொண்ட காஞ்சனாதேவி, பேச்சை வேறு திசையில் மாற்றி, “இரண்டாம் ஜாமம் துவங்கிவிட்டது இளைய பல்லவரே!” என்றாள்.

“ஆம், அரசகுமாரி! ஊரும் மெள்ள மெள்ள அடங்கி வருகிறது. கப்பல் துறையிலும் கூச்சல் அதிகமாகக் காணோம். வீதியிலும் ஜனநடமாட்டம் குறைந்துவிட்டது” என்று சம்பாஷணையில் கலந்துகொண்டான் கருணாகர பல்லவன், சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

“வீதியில் மட்டுமல்ல, வீட்டிலும் சத்தத்தைக் காணோம். “

“ஆமாம், உறங்கும் நேரம் வந்துவிட்டது! உங்கள் பணிப்பெண்கள் காத்திருப்பார்கள், செல்லுங்கள். “

“நீங்களும் உறங்குங்கள். அதோ மஞ்சமிருக்கிறது. விடி விளக்கும் அறை மூலையிலிருக்கிறது. வேறெதாவது தேவையானால் சொல்லுங்கள்” என்று கேட்டாள் காஞ்சனா தேவி.

“வேறெதுவும் தேவையில்லை, அரசகுமாரி. மஞ்சம் கூடத் தேவையில்லை. என்னால் தரையிலும் படுத்து உறங்க முடியும். ஆனால் இன்றிரவு உறக்கம் பிடிப்பது கஷ்டம்” என்று பதில் கூறினான் கருணாகர பல்லவன்.

அவன் பதிலைக் கேட்டதும் ஒருமுறை மிரண்டு விழித்தாள் அவள். இளையபல்லவன் மீண்டும் பழைய பல்லவியைப் பாடவும், பழைய ஆராய்ச்சியைத் தொடங்கவும் முற்பட்டுவிட்டானோ என்ற திகைப்பால், “ஏன் உறக்கம் பிடிக்காது இளைபல்லவரே!” என்று தைரியமாகக் கேட்கவும் செய்தாள்.

அவள் விழித்ததையும், விழிப்பிலிருந்த திகைப்பையும் கருணாகர பல்லவன் கவனிக்கவே செய்தான். அவற்றின் பொருளும் அவனுக்குப் புரிந்துதானிருந்தது. ஆகவே அவளுக்குத் தைரியத்தை ஊட்டச் சொன்னான், “அரசகுமாரி! காரணம் நீங்கள் நினைப்பதல்ல. சித்தத்தில் சிக்கல்கள் பல சூழ்ந்திருக்கின்றன. “

“என்ன சிக்கல்கள்!”

“அரசியல் சிக்கல்கள். உங்கள் நிலை, என் நிலை, அநபாயர் நிலை. “

“ஆம், ஆம். எல்லோர் நிலையும் அபாய நிலைதான். “

“சாதாரண அபாய நிலையல்ல, அரசகுமாரி. நமது உயிர்களை மட்டும் பாதிக்கக்கூடிய நிலையல்ல. பெரிய அரசுகளைப் பாதிக்கக் கூடியது!”

“பெரிய அரசுகளையா?”

“ஆம், சோழநாடு, வேங்கிநாடு, கலிங்கநாடு, கடாரம் இத்தனையையும் பாதிக்கக்கூடிய சிக்கல்கள் இந்த ஒரே நகரத்தில் பாலூர்ப் பெருந்துறையில் ஏற்பட்டிருக்கின்றன. “

“புரிகிறது இளையபல்லவரே!”

“என்ன புரிகிறது, அரசகுமாரி? உங்களுக்குப் புரிவதெல்லாம் இந்தப் பாலூர்ப் பெருந்துறையில் நமக்கிருக்கும் ஆபத்துதான். ஆனால் சந்தர்ப்பங்கள் எப்படி அமைந்திருக்கின்றன பாருங்கள். சாதாரணக் காலத்தில் நீங்கள் கலிங்கம் வந்திருந்தால் இங்கிருந்து சோழநாட்டுக்கு எவ்விதத் தடையுமின்றிப் பயணம் செய்திருக்கலாம். சோழ நாட்டுடன் கலிங்கம் போரிட ஏற்பாடு செய்யும் சமயத்தில் வந்திருக்கிறீர்கள். அதுவும் நான் கலிங்கத்தில் கால் வைத்த இந்த தினத்தில் நிலைமை மிகவும் முற்றிவிட்டது. கலிங்கத்துக்கும் எனக்கும் போதாத அம்சங்கள் பலவற்றைச் சூழ்நிலை சுட்டிக் காட்டுகிறது. என் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்து மோதுகின்றன. கலிங்கத்தால் நான் அழிவேனா அல்லது என்னால் கலிங்கம் அழியுமா என்பதுகூடப் புரியவில்லை எனக்கு. காலம்தான் இதற்குப் பதில் சொல்லும்” என்று ஏதோ தீர்க்கதரிசி போல் பேசினான் கருணாகர பல்லவன்.

பாலூர்ப் பெருந்துறையில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அத்தனை தூரம் கற்பனை தேவையில்லை என்று நினைத்த கடாரத்து இளவரசி, “இளையபல்லவர் மதிப்பீடு அளவுக்கு மீறியிருக்கிறது. போர்கள் அத்தனை சீக்கிரமாக ஏற்படுமா?” என்றாள்.

கருணாகர பல்லவன் துன்பப் புன்முறுவலொன்றை இதழ்களில் படரவிட்டான். “அரசகுமாரி! தமிழகத்தை நீங்கள் அறியமாட்டீர்கள். தமிழர்கள் எந்த நஷ்டத்தையும் பொறுப்பார்கள். மான நஷ்டத்தை மட்டும் பொறுக்க மாட்டார்கள். ராஜராஜ சோழரும், ராஜேந்திர சோழரும் ஏன், இன்று அரியணை எறியிருக்கும் வீரராஜேந்திர சோழ தேவர்கூட ராஜ்ய விஸ்தரிப்புக்காகப் போர்களில் இறங்கவில்லை. அக்கம் பக்கத்து நாடுகள் கடைபிடித்த கொள்கைகள், தமிழருக்கு விளைவித்த அநீதிகள், இவற்றாலேயே போரில் இறங்கினார்கள். சோழர் படைகள் என்றும் போருக்குச் சித்தமானவை. மிகப் பலமானவை. ஆனால் சின்னஞ்சிறிய ஆட்டுக்குட்டி போன்ற கலிங்கம், புலியுடன் விளையாடத் துவங்கியிருக்கிறது. இரண்டு நாடுகளுக்குமிடையே போரை எதிர்பார்க்கிறேன். கலிங்கத்துப் பீமன் தமிழர்கள் பலரைச் சிறையில் தள்ளியிருப்பதே போர் நிகழப் போதிய காரணம். தவிர, அநபாயரையும் சிறை செய்தானென்றால் கேட்க வேண்டியதில்லை. அந்த ஒரு குற்றத்துக்கு இந்த நாட்டை நானே கொளுத்தி விடுவேன்! என்றோ ஒருநாள் இந்த நாடு என் கையால் நாசமடையும்!” என்று உணர்ச்சி பொங்கக் கூறினான் கருணாகர பல்லவன்.

அவன் உணர்ச்சி ஆவேசத்தைக் கண்டு அரசகுமாரி அசந்து போனாள். சற்று முன்பு காதல் விஷயத்தில் அதைரியத்துடன் உலாவிய கண்கள், போரை எண்ணும் போது உணர்ச்சி வேகத்தில் சுழல்வதை எண்ணி வியந்தாள் அவள். தீர்க்கதரிசிபோல் அன்று அவள் பேசிய பேச்சு அவளுக்கு விசித்திரமாயிருந்தது. ‘கலிங்கத்தின் நிலை சரியில்லைதான். ஆனால் அநபாயர் தப்பிவிட்டார். இனி இவரும் நாங்களும்கூடத் தப்பலாம். அதற்கு உதவத்தான் கோடிக்கரைக் கூலவாணிகன் இருக்கிறான். அநபாயரும் தூதுப் புறா மூலம் தைரியம் சொல்லி ஓலை அனுப்பியிருக்கிறார். எல்லோரும் தப்பிச் சோழ நாடு சென்று விட்டால் இரண்டு நாடுகளுக்கும் பேச்சு வார்த்தை யிலேயே சமரசம் ஏற்படலாம்’ என்று நினைத்தாள் அவள்.

காலம், கருணாகர பல்லவன் வார்த்தைகளைத்தான் சரியென நிரூபித்தது. பிற்காலத்தில் தொண்டைமான் என்ற சிறப்புப் பெயர் பெற்றுப் பெரும் படைகளுடன் கலிங்கத்தின்மீது படையெடுத்து அழிக்கவிருந்த இளைய பல்லவன் அப்படியொரு காலம் வரும் என்பதை அந்த இரவில் நினைக்காவிட்டாலும், தமிழர்களுக்குக் கலிங்கம் இழைத்த அநீதிகளை எண்ணி அவன் இதயம் கொந்தளித்தது. அந்தக் கொந்தளிப்பின் விளைவாக உணர்ச்சி வசப்பட்டுப் பேசிவிட்ட கருணாகர பல்லவன் மெள்ள மெள்ளச் சுயநிலை திரும்பி, “அரசகுமாரி! உணர்ச்சி வசத்தால் ஏதேதோ பேசிவிட்டேன். நீங்கள் உறங்கச் செல்லுங்கள்,” என்று முடிவாகக் கூறினான்.

மேற்கொண்டு ஏதும் பேசாமல் திரும்பிய காஞ்சனா தேவியை, “அரசகுமாரி!” என்று மீண்டும் அழைத்துத் தடுத்த கருணாகர பல்லவன், “இதைப் பிடியுங்கள்!” என்று தூதுப் புறாவை அவளிடம் நீட்டினான்.

அதை ஆசையுடன் வாங்கி மார்பில் அணைத்துக் கொண்டாள் அரசகுமாரி. ஒரு கையால் அதைத் தடவிக் கொடுத்துக் கொண்டும் சொன்னாள், “அப்பா! சீனத்துப் பட்டைவிட எத்தனை மென்மை? எத்தனை வழவழப்பு!” என்று.

“ஆம் அரசகுமாரி,” என்றான் இளையபல்லவன் புன்முறுவலுடன்.

“அழகில் இணையற்றது. “

“அறிவிலும் இணையற்றது. “

“தூது செல்லும். அவ்வளவுதானே?”

“அது மட்டுமல்ல அரசகுமாரி. பழகினால் பல அலுவல்களைச் செய்யும். செய்தி தீட்டிய பட்டுத் துணியை இறக்கைகளில் மறைத்து அனுப்புவது மட்டுமல்ல, ஒரு முறை சைகை காட்டிக் குறிப்பினால் அறிவித்தால் மூக்கினாலும் ஓலைகளை எடுத்துச் செல்லும். உட்காரச் சொல்லும் இடங்களில் உட்காரும். மறையச் சொன்னால் மறையும். வேவும் பார்க்கும். “

அரசகுமாரி வியப்பு மிதமிஞ்சியது. “வேவு பார்க்குமா!” என்று கேட்டாள் அவள் வியப்புக் குரலிலும் ஒலிக்க.

“பார்க்கும். “

“பார்த்து எப்படி வந்து சொல்லும்?”

“எதிரிகள் நடமாட்டம் சமீபத்தில் இருந்தால் சிறகைப் பலமுறை அடித்துக் கொள்ளும். நின்ற இடத்தில் நிற்காது. அங்கும் இங்கும் தத்தி அவஸ்தைப்படும். நாம் செயலற்று இருந்தால் கையை அலகால் கொத்திக் காயப்படுத்தவும் செய்யும். புகாரின் யவனர்கள் இப்படியெல்லாம் இப்புறாக்களைப் பழக்குகிறார்கள். “

ஆச்சரியத்துக்குள்ளான அரசகுமாரி அதற்குமேல் ஏதும் சந்தேகம் கேட்காமல், “வருகிறேன் இளைய பல்லவரே! இரவில் ஏதாவது அபாயம் நேர்ந்தால் புறாவை அனுப்புகிறேன்” என்று சொல்லி நகைத்து விட்டுச் செல்லத் தொடங்கினாள்.

“நீங்கள் அனுப்பத் தேவையில்லை. அதுவே இந்த அறைக்கு வரும்” என்று கூறிய கருணாகர பல்லவன். அரச குமாரி கண்ணுக்கு மறைந்தவுடன் அறைக்குள் திரும்பி மேலங்கி முதலியவற்றைக் களைந்து, பஞ்சணையில் படுத்தான். இலவம் பஞ்சாலும் சீனத்துப் பட்டாலும் தயாரிக்கப்பட்ட அந்தப் பஞ்சனை மிக மெதுவாக இருந்தாலும் கலிங்கத்தில் காலடி வைத்த வினாடி முதல் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் உள்ளத்தில் பெரும் அலைகளாக எழுந்து மோதிக் கொண்டிருந்ததால் உறக்கம் பிடிக்காமலே நீண்ட நேரம் படுத்துக் கிடந்தான் அந்த வாலிபன். ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தின் சரித்திரமும் காஞ்சனாதேவியின் இணையற்ற அழகும் திரும்பத் திரும்ப அவன் மனக் கண்களுக்கு முன்னால் எழுந்து உலாவின. தன்னால் முடியுமானால் அவசியம் ஜெயவர்மனைக் கொன்று ஸ்ரீவிஜயத்தில் குணவர்மனுக்கு முடிசூட்டுவதென்ற முடிவுக்கு வந்த இளைய பல்லவன், தன் சொப்பனத்தை எண்ணித் தானே நகைத்துக் கொண்டான். ஸ்ரி விஜயம் எங்கே, நான் எங்கே? ஸ்ரீவிஜயத்துக்குச் செல்லப் பெரும் கடற்படை வேண்டும். கடற்படை இருந்தாலும் அதைச் செலுத்தத் திறன் வேண்டாமா? மரக்கலம் செலுத்தியே பழக்கமில்லை எனக்கு. மனக்கோட்டை மட்டும் பலமாயிருக்கிறது!’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, ‘சரி, சற்று நிம்மதியாக உறங்குவோம்,” என்று கண்களை மூடினான்.

ஆனால் அன்றிரவு அத்தனை சுலபத்தில் அவனுக்கு நிம்மதியளிப்பதாகக் காணோம். சுமார் அடுத்த அரை ஜாமம்தான் அவன் படுத்திருந்தான். திடீரென வீதியில் தடதடவெனப் புரவிகள் வரும் சத்தம் கேட்கவே சட்டென்று எழுந்து சாளரத்துக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்தான். சுமார் நான்கு புரவிகள் எதிரேயிருந்த மாளிகைத் தாழ்வாரத்து வெளிக்கூரையின் இருட்டடித்த இடத்தில் நகர்ந்து நின்றன. அந்தப் புரவிகளில் ஒன்றிலிருந்து குதித்த போர்க் கவசமணிந்த வீரனொருவன் வீதியில் இருமுறை அங்குமிங்கும் உலாவினான். பிறகு திடீரென்று குறுக்கே நடந்து மாளிகையின் கீழ்க்கதவை லேசாக மும்முறை தட்டவும் செய்தான். அவன் தட்டுவதற்கும் இரண்டறைகளுக்கு அப்பாலிருந்த தன் பள்ளி யறையிலிருந்து காஞ்சனாதேவி ஓடி வருவதற்கும் சரியாயிருந்ததைக் கவனித்தான் இளைய பல்லவன். அது மட்டுமல்ல, காஞ்சனாதேவிக்கு முன்பாக பறவைத் தீவின் அந்தப் பெரும் புறா சிறகடித்துப் பறந்து வந்து அவன் மார்மேல் உட்கார்ந்து அவன் மார்பை மும்முறை அலகால் குத்தவும் செய்தது. அந்தப் புறாவைத் துரத்தி வந்த காஞ்சனாதேவியின் கண்கள் அச்சத்துடன் எழுந்து கருணாகர பல்லவனின் கண்களுடன் கலந்தன.

“ஆம், தேவி. ஏதோ அபாயம்தான் வந்திருக்கிறது. இதைப் பிடியுங்கள்” என்று புறாவைப் பிடித்து அவளிடம் கொடுத்த இளையபல்லவன் தன் மேலங்கியை மிகத் துரிதமாக அணிந்து இடையில் வாளையும் எடுத்துக் கட்டிக் கொண்டு திடுதிடுவென்று அறைக்கு வெளியே நின்றான்.

“சற்று நிதானியுங்கள். தந்தையை எழுப்புகிறேன்” என்று தடுத்தாள் காஞ்சனாதேவி.

“யாரையும் எழுப்ப வேண்டாம். நீங்கள் அறைக்குச் சென்று தாழிட்டுப் படுத்துக் கொள்ளுங்கள். என் குரலோ உங்கள் தந்தை குரலோ கேட்டாலொழியக் கதவைத் திறக்க வேண்டாம்” என்று எச்சரிக்கை செய்த கருணாகர பல்லவன் கண வேகமாகப் படிகளில் இறங்கிக் கீழ்த்தளத்துக்குச் சென்றான்.

அவன் கீழ்த்தளத்தின் வாயிற்படியை அடைவதற்கும் கவசமணிந்த வீரன் உள்ளே நுழைவதற்கும் சரியாயிருந்தது. அந்த இரவில் மென்மேலும் பல விந்தைகள் காத்திருந்தன, இளைய பல்லவனுக்கு. எதிரே வெகு வேகமாகப் படிகளில் இறங்கி வந்த இளைய பல்லவனைக் கண்டதும் கவச மணிந்த வீரன் தலை தாழ்த்தி வணங்கினான். எதிரி எதற்காகத் தலை வணங்குகிறான் என்பதை எண்ணிப் பார்த்து, ஏதும் புரியாமல் வியப்பில் ஆழ்ந்த இளைய பல்லவனை, வந்த வீரனின் பேச்சு இன்னும் அதிக ஆச்சரியத்தில் அமிழ்த்தியது.

“இந்த மாளிகையில் கருணாகர பல்லவர் தங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டோம்… ” என்று துவங்கினான் வீரன்.

கருணாகர பல்லவன் அந்த வீரனைக் கூர்ந்து நோக்கி, “யார் நீங்கள்?” என்று கேட்டான், சந்தேகம் தொனித்த குரலில்.

“கருணாகர பல்லவரின் நண்பரொருவர் அனுப்பினார்” என்று பதில் கூறினான் அந்த வீரன்.

“யாரந்த நண்பர்?”

“அதைக் கருணாகர பல்லவரிடம்தான் சொல்ல முடியும். மற்றவர்களிடம் சொல்ல உத்தரவில்லை“ திட்டமாக அறிவித்தான் அந்த வீரன்.

“நான்தான் இளையபல்லவன். “

“அடையாளம்?”

“இதோ பார்” இடது கையிலிருந்த முத்திரை மோதிரத் தைக் காட்டினான் இளையபல்லவன்.

அதைக் கவனித்ததும் மீண்டுமொருமுறை தலை வணங்கிய அந்த வீரன், “தாங்கள் என்னை நம்பி என்னுடன் வர இதைக் காட்ட உத்தரவாயிருக்கிறது,” என்று கூறி, தன் கச்சையிலிருந்து மற்றொரு மோதிரத்தை எடுத்துப் பதிலுக்குக் காட்டினான்.

அந்த மோதிரத்தைக் கையில் வாங்கிய கருணாகர பல்லவனின் கண்களில் வியப்பின் எல்லை தெரிந்தது. மிகுந்த பயபக்தியுடன் கண்களில் அந்த மோதிரத்தை ஒற்றிக்கொண்டான். அவன் முகத்தில் ஒரு விநாடி குழப்பம் தெரிந்தது. ‘புறா பொய் சொல்லுமா? அதன் அபாய அறிவிப்பு பொய்யா? வந்திருப்பவர்கள் நண்பர்களானால் அது ஏன் சிறகடித்து ஓடி வந்தது? என் மார்பை ஏன் குத்தியது?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். மீண்டும் மோதிரத்தை நன்றாக ஆராய்ந்தான். ‘சந்தேகமில்லை. புறா தவறுதான் செய்திருக்கிறது. இந்த முத்திரை மோதிரத்தின் ஆணையை மீற முடியாது. வந்திருப்பவர்கள் விரோதிகளாயிருக்க முடியாது. நண்பர்களைத் தவிர வேறு யார் இந்த மோதிரத்தைக் கொண்டு வர முடியும்?’ என்று தன்னைக் கடைசியில் திடப்படுத்திக் கொண்ட கருணாகர பல்லவன், “இந்த மோதிரத்துக்குடையவர் எங்கிருக்கிறார்?” என்று கேட்டான்.

“பதில் சொல்ல உத்தரவில்லை, இளைய பல்லவரே” என்றான் வீரன்.

கருணாகர பல்லவன் மேற்கொண்டு அவனுடன் விவாதிக்காமல் பணிப்பெண் ஒருத்தியை அழைத்து, “நான் வெளியே செல்கிறேன். சீக்கிரம் திரும்பி விடுவேனென்று உன் தலைவியிடம் சொல்” என்று காஞ்சனா தேவிக்குச் செய்தி அனுப்பிவிட்டு, கவசமணிந்த வீரனை நோக்கி, “சரி, புறப்படுங்கள்” என்று கூறி அவனைத் தொடர்ந்து சென்றான்.

இளைய பல்லவனுடன் வீதிக்கு வந்த அந்த வீரன் எதிர்த் தாழ்வரை நிழலில் மறைந்திருந்த மற்றப் புரவி வீரரை வெளியே வரும்படி அழைத்தான். அவர்களிலொருவனது புரவியில் கருணாகர பல்லவனை ஏறச் சொல்லி மற்ற வீரர்கள் பின் தொடரத் தன் புரவியைச் செலுத்தினான்.

புரவியில் ஆரோகணித்துச் சென்ற கருணாகர பல்லவன், தன்னை அழைத்துச் செல்லும் வீரர் இரண்டு மூன்று வீதிகளைக் கடந்து வணிகர் பெரு வீதிக்குள் புகுவதைக் கண்டதும், ‘சரி சரி, இவர்கள் கோடிக்கரைக் கூலவாணிகன் விடுதிக்கு அழைத்துச் செல்கிறார்கள். புறாதான் தவறு செய்துவிட்டது. நண்பர்களை விரோதிகளாக நினைத்து விட்டது’ என்று நிச்சயப்படுத்திக் கொண்டான். அந்த நிச்சயத்தால் வெகு அலட்சியமாகப் புரவியை நடத்திக்கொண்டு வீரர்களுடன் சென்றான்.

இரண்டு மூன்று வீதிகளைக் கடந்து வணிகர் பெரு வீதியின் கோடியிலிருந்த பெரிய மாளிகையொன்றின் முன்பு வந்ததும் வீரர்கள் இளைய பல்லவனை இறங்கச் சொன்னார்கள்.

புரவியிலிருந்து இறங்கியதும் கோடிக்கரைக் கூல வாணிகனின் அந்த மாளிகைக்குள் சர்வசகஜமாக நுழைந்தான் இளையபல்லவன். மூன்றாம் ஜாமம் நெருங்கிக் கொண்டிருந்த அந்த வேளையிலும் கூலவாணிகனின் மாளிகைக் கூடத்தில் பெருவிளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. கூடத்தின் நடுவில் பெரும் கூட்டமொன்று உட்கார்ந்திருந்தது.

அதன் நடுவிலிருந்து எழுந்த கூலவாணிகனைக் கண்ட கருணாகர பல்லவன் பெரும் வியப்புக்கு மட்டுமல்ல, அதிர்ச்சிக்கும் சீற்றத்துக்கும் உள்ளானான்.

புறாவின் அபாய அறிவிப்பில் பிசகில்லை என்பதை உணர்ந்தான். அவன் கை, மின்னல் வேகத்தில் வாளை நாடிச் சென்றது. மீண்டும் ஸ்தம்பித்தான் அவன். உறையில் வாள் இல்லை. பேரிடி போன்ற சிரிப்பொலி யொன்று அவன் பின்புறத்திலிருந்து எழுந்தது.

Previous articleRead Kadal Pura Part 1 Ch7 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch9 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here