Home Kadal Pura Read Kadal Pura Part 1 Ch9 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch9 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

183
0
Read Kadal Pura Part 1 Ch9 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 1 Ch9 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 1 Ch9 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

முதல் பாகம், அத்தியாயம் 9 : வலைக்குள் வந்த சிங்கம்.

Read Kadal Pura Part 1 Ch9 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

பாலூர்ப் பெருந்துறையில் பெருவணிகர் வீதிக்குள் நுழைந்த சமயத்திலோ, கூலவாணிகனின் மாளிகைக் கூடத்துக்குள் வந்த விநாடியிலோ எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடங்கொடாத இளையபல்லவன் அந்தக் கூடத்தில் உட்கார்ந்திருந்த பெருங் கூட்டத்தின் நடுவிலிருந்து கூல வாணிகன் எழுந்த தோரணையைக் கண்டதுமே ஏதோ விபரீதம் நேர்ந்திருக்கிறதென்ற தீர்மானத்துக்கு உள்ளானானென்றால், கூலவாணிகனின் முகத்திலிருந்த திகிலையும் அவனிருந்த கோலத்தையும், கண்டதும் அபாரமான அதிர்ச்சிக்கும் சீற்றத்துக்கும் இடங்கொடுத்தான். தாறு மாறாகக் கிழிக்கப்பட்டிருந்த உடைகளுடனும், முகத்தில் மிதமிஞ்சிய திகிலுடனும், கயிறுகளால் பிணைக்கப்பட்ட கைகளுடனும் எழுந்து நின்ற கூலவாணிகனையும் அவனைச் சுற்றிலும் வணிகர் உடையிலிருந்த கலிங்கவீரர் கூட்டத்தையும் பார்த்த கருணாகர பல்லவன், உண்மையைக் கண்ணிமைக்கும் நேரத்தில் புரிந்துகொண்டு வாளை உருவ, கச்சையை நோக்கிக் கையைக் கொண்டுபோன சமயத்தில், தன் வாளும் மிகத் தந்திரமாகப் பின்புறத்திலிருந்து உருவப்பட்டு விட்டதையும், அந்த வாளை உருவியவன் வெளியிட்ட பேய்ச் சிரிப்பு அந்தக் கூட்டத்தையே இடித்து விடுவதுபோல் ஒலித்ததையும் கவனித்து, ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றான். மறுகணம், தன்னை நோக்கி அப்படி நகைத்தவனைப் பார்க்கப் பின்புறம் திரும்பினான். அப்பொழுதுதான் சிரிப்பைச் சற்று அடக்கிக் கொண்ட கலிங்க மன்னன் பீமன், முகத்தில் பரவிய கேலிப் புன்னகையுடன் அவனெதிரே காட்சியளித்தான்.

எதை எதிர்பார்த்தாலும், கலிங்கத்து மன்னன் தலை நகரைவிட்டுப் பாலூர்ப் பெருந்துறைக்கு வருவானென்பதைக் கனவிலும் எதிர்பார்க்காத கருணாகர பல்லவன், தன் அதிர்ச்சியையும் சீற்றத்தையும் சிறிதளவு உதறிவிட்டுச் சற்று வியப்பு மண்டிய வதனத்துடனேயே மன்னனை ஏறெடுத்து நோக்கினான். சோழ நாட்டு விஸ்தரிப்பு வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடும் உறுதி கலிங்கத்து மன்னன் முகத்திலிருந்ததையும், சில வருடங்களுக்கு முன்பு தான் சந்தித்த போதில்லாத சதைப் பிடிப்பும் அவனுக்குண்டாகி, பெயருக்குத் தகுந்தபடி உயரம் பருமனுடன் அவன் அசல் பீமனாகவே விளங்கியதையும் கண்ட கருணாகர பல்லவன், பலமும் யுக்தியும் நிறைந்த பெரு விரோதியின் முன்பு தானிருப்பதை உணர்ந்தான். கலிங்கத்து மன்னன் அந்தச் சமயத்தில் ராஜரீகத்துக்கான உடையேதும் அணியாமல் சயனத்துக்குச் செல்லும் சாதாரண உடையே அணிந்திருந்ததையும், தன்னிடமிருந்து லாகவமாக உருவிவிட்ட தன் வாளைத் தவிர வேறு வாள் ஏதும் இல்லாமல் அவன் மிக அசட்டையாக நின்றிருந்ததையும் கவனித்த கருணாகர பல்லவன், அவன் நெஞ்சுரத்தைப் பெரிதும் வியந்தான். தன் வீரர்களோடு ஒரு வீரனாகப் பழகும் கலிங்கத்துப் பீமனின் வீரர்களை அவனிடமிருந்து எந்தவிதத்திலும் பிரிப்பதோ அவர்களில் யாரையும் தன் உதவிக்கு இணைப்பதோ முடியாத காரியமென்பதும் வெட்ட வெளிச்சமாயிற்று இளைய பல்லவனுக்கு. உதடுகளும் கன்னங்களும் தடித்து நின்றதால் ஓரளவு பயங்கரமாகத் தெரிந்த பீமனது முகத்தில் பளிச்சிட்ட கண்கள் தன்னை ஊடுருவிப் பார்ப்பதையும் புரிந்துகொண்ட இளையபல்லவன் தன்னைத் திடப்படுத்திக்கொள்ள பீமனிடமிருந்து திரும்பிக் கூலவாணிகனின் கூட்டத்தையும் அங்கு குழுமியிருந்த கலிங்கத்து வீரரையும் கவனித்தான்.

அரண்மனையையும் தோற்கடிக்கும் சிறப்பு வாய்ந்த கோடிக்கரைக் கூலவாணிகன் சேந்தனின் பெருமாளிகைக் கூடம் சுமார் ஆயிரம் பேருக்கு ஒரே காலத்தில் விருந்தளிக்கக் கூடிய அளவுக்கு விசாலமாயிருந்தது. ஆங்காங்கு ஒவ்வொரு மூலையிலுமிருந்த திண்டு திவாசுகளும் கணக்கெழுதும் பெட்டிகளும், விதவிதமான சரக்கு மூட்டைகளும் பலதரப்பட்ட வியாபாரம் அங்கு நடப்பதை உணர்த்தின. அந்த மாளிகைக் கூடத்தின் மேற்கூரையில் பலநாட்டு ஓவியங்களால் தீட்டப்பட்ட வண்ணச் சித்திரங்கள், கூலவாணிகனின் செல்வச் சிறப்புக்கு அத்தாட்சியாய் விளங்கின. இத்தனைச் செல்வச் சிறப்பிருந்தும், வர்த்தக விஸ்தரிப்பிருந்தும், அரசியலில் சிக்கிய ஒரே காரணத்தால் கூலவாணிகன் அன்று துன்புறுத்தப்பட்டு, கைகள் பிணைக்கப்பட்டு நின்ற பரிதாபக் கோலத்தைக் கண்ட கருணாகர பல்லவன், கூலவாணிகன் சேந்தனிடம் பெரும் அனுதாபமே கொண்டான். பீமன் கையில் வகையாய்ச் சிக்கிவிட்ட தனக்கும் கூலவாணிகனுக்கும் என்ன கதி கிடைக்குமென்பதைச் சந்தேகத்துக்கிடமின்றிப் புரிந்து கொண்ட இளையபல்லவன், மேற்கொண்டு நடப்பது நடக்கட்டுமென்று பீமனை நோக்கி மீண்டும் திரும்பி, “கலிங்கத்து மன்னரை இங்கு நான் எதிர்பார்க்கவில்லை” என்று சம்பாஷணையில் மெள்ள இறங்கினான்.

பீமனுடைய பெரும் மீசையும் கருத்த பெரிய புருவங்களும் ஆச்சரியத்துக்கு அறிகுறியாக ஒருமுறை எழுந்து தாழ்ந்தன. “தாங்கள் எதிர்பார்க்காத சம்பவங்கள் பல நிகழ்ந்திருக்கின்றன இந்த இரவில்!” என்று பதிலுக்குச் சொற்களை உதிர்த்த அவன் உதடுகளில் புன்முறுவ லொன்றும் படர்ந்தது.

மன்னன் பதிலிலிருந்து அவன் தன்னைப்பற்றிய பல விவரங்களை அறிந்திருக்கிறானென்பதை இளையபல்லவன் உணர்ந்து கொண்டானேயொழிய, அந்த விவரங்கள் என்னவாயிருக்கக் கூடும் என்பதை அறியாததால் அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன், “உண்மை தான்! நள்ளிரவில் வணிகர் விடுதிக்கு மன்னர் வருவது நான் எதிர்பார்க்காத சம்பவம்தான். இத்தகைய விஜயத்துக்குக் கலிங்கத்தின் சம்பிரதாயம் இடம் கொடுக்கிறதா?” என்று வினவினான்.

பீமன் முகத்தில் ஆலோசனை படர்ந்தது. ஏதோ யோசித்துவிட்டுச் சொன்னான். “சம்பிரதாயம் இடம் கொடாதுதான். ஆனால் எல்லாம் வணிகர் செய்யும் வாணிபத்தைப் பொறுத்தது. “

பீமன் செய்த போலிச் சிந்தனையும், அவன் கூறிய சொற்களின் பொருளும் புரிந்துதானிருந்தது இளைய பல்லவனுக்கு. இருப்பினும் புரியாதவன்போல், “நீங்கள் சொல்வது விளங்கவில்லை” என்று பதில் கூறினான்.

“வாணிபத்தில் பலவிதமுண்டு” என்று சுட்டிக்காட்டி மெள்ள நகைத்தான் பீமன்.

“மன்னருக்கு வாணிபத்திலும் நல்ல பரிச்சயமுண்டு போலிருக்கிறது?” என்று இளைய பல்லவன் பதிலுக்கு இகழ்ச்சி நகை புரிந்தான்.

நிராயுதபாணியாகக் கலிங்கத்து வீரர்கள் மத்தியில் சிறைப்பட்டு நின்ற சமயத்திலும் இளையபல்லவன் இகழ்ச்சி நகை புரிந்ததையும், சர்வசகஜமாகப் பேசத் துவங்கிவிட்டதையும் கண்ட பீமன், அவன் நெஞ்சுரத்தைப் பெரிதும் வியந்தான். அந்த வியப்பு குரலிலும் ஓரளவு தொனிக்கப் பேச முற்பட்டு, “வாணிபத்திலும் பரிச்சயம் தேவையாயிருக்கிறது, இளைய பல்லவரே! காரணம் தெரியுமா?” என்று வினவினான்.

“தெரியாது” என்றான் இளையபல்லவன்.

“இதில் கஷ்டமேதுமில்லை. வாணிபத்தில் பலவகை யுண்டென்று முன்னமே நான் குறிப்பிடவில்லையோ?”

“ஆம். குறிப்பிட்டீர்கள்”

“பொருள்களில் செய்யும் வாணிபம் ஒருவகை. “

“ஓகோ?”

“அரசியலில் வாணிபம் மற்றொரு வகை”

“அப்படியா!”

‘அரசியலை வாணிபத்திலும், வாணிபத்தில் அரசியலையும் கலப்பதால் பல தொல்லைகள் உண்டாகின்றன” என்று கூறிய பீமன், புன்முறுவல் செய்தான்.

இளையபல்லவன் இதற்கு ஏதும் பதில் சொல்லாது போகவே, சற்றுப் பெரிதாகவே நகைத்த கலிங்கத்து மன்னன், “ஏன் பதிலில்லை, இளைய பல்லவரே! வணிகர்கள் அரசியலில் கலக்கும் போது மன்னரும் வாணிபத்தில் கலக்கத்தானே வேண்டியிருக்கிறது? இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் சம்பிரதாயத்தை மட்டும் கவனிக்க முடியுமா? முடியாது முடியாது. வாணிபத்திலும் சோழ நாட்டிலிருந்து வரும் வணிகரிடமும் நாம் சிறிது கவனத்தைச் செலுத்தத் தான் வேண்டியிருக்கிறது. செலுத்துவதில் பலனுருக்கிறது” என்றும் கூறினான்.

“என்ன பலன்?” இளையபல்லவன் சற்று நிதானத்தை இழந்து இரைந்தே கேட்டான் இந்தக் கேள்வியை.

நிதானத்தைச் சிறிதும் இழக்காமலே பதில் சொன்னான் பீமன். “அநபாயச் சோழரின் இணைபிரியாத தோழரான இளைய பல்லவரின் சந்திப்பு எனக்குக் கிடைத்திருப்பதே பெரும் பலனல்லவா?”

“இதற்குத் தாங்கள் இத்தகைய முயற்சி எடுத்திருக்க வேண்டியதில்லை” என்று சற்றுக் கோபத்துடன் கூறினான் இளையபல்லவன்.

“அப்படியா!” என்று கேட்ட பீமனின் முகத்தில் ஆச்சரிய ரேகை படர்ந்தது.

“ஆம் மன்னவா! தங்களைக் காணவே நான் கலிங்கம் வந்தேன். இத்தனை வீரர்களை அனுப்பிப் பவனி நடத்தா விட்டாலும் தங்களை நாடிக் கண்டிப்பாய் வந்திருப்பேன்” என்றான் இளையபல்லவன்.

“ஆம், ஆம், மறந்துவிட்டேன்” என்றான் பீமன்.

“எதை மறந்துவிட்டீர்கள்?”

பீமன் சொன்ன பதில் ஒருவிநாடி பேரதிர்ச்சியைக் கொடுத்தாலும் அடுத்த விநாடி அந்த அதிர்ச்சி மறைந்தது இளையபல்லவனிடமிருந்து. “ஆம்! ஆம். மறந்துவிட்டேன். வீரராஜேந்திர சோழதேவரிடமிருந்து நீங்கள் சமாதான ஓலை கொண்டு வந்திருப்பதை மறந்துவிட்டேன்” என்று பீமனின் பதிலைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த இளைய பல்லவன், ‘இந்த விவரம்தான் சுங்க அதிகாரிக்கே தெரிந்திருந்ததே. மன்னனுக்குத் தெரிவதில் வியப்பென்ன?” என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான். அத்துடன் சற்றுக் கோபத்துடன் கேட்கவும் செய்தான். “நான் சமாதான ஓலை கொண்டு வந்ததை அறிந்துமா என்னைச் சிறைப்படுத்தினீர்கள்?” என்று.

பீமன் முகத்தில் வருத்தக் குறி தோன்றியது. “சிறைப் படுத்திக் கொண்டு வருவது உசிதமில்லைதான். ஆனால் சமாதானத் தூதர்கள் இறங்கும் துறைமுகச் சுங்கச் சாவடியில் அந்நாட்டு மன்னர்களைத் தூஷிப்பதும், வீரர் துரத்த ஓடுவதும், மாளிகையில் பதுங்குவதும் உசிதமா என்பதை எண்ணிப் பாருங்கள்!” என்று வருத்தத்துடன் கூறுபவன் போல் பாசாங்கு செய்த பீமன் உண்மையில் தன்னைப் பார்த்து நகைக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டான் இளையபல்லவன். தவிர தான் பாலூர்ப் பெருந்துறையில் காலெடுத்து வைத்த விநாடியிலிருந்து தன் நடவடிக்கைகள் பலவற்றையும் கலிங்க மன்னன் தெரிந்து கொண்டிருப்பதை உணர்ந்த கருணாகர பல்லவன், தன் இருப்பிடத்தை அவன் எப்படிக் கண்டுபிடித்தானென்பதை மட்டும் புரிந்து கொள்ள முடியாமல் சிந்தை குழம்பினான். ‘சுங்கச் சாவடி நிகழ்ச்சியைக் காவல் வீரர்களிடமிருந்து அறிந்திருக்கலாம். ஊருக்குள் ஏற்பட்ட சண்டை நிகழ்ச்சியையும், துரத்திய வீரர்கள் சொல்லியிருப்பார்கள். ஆனால் குணவர்மன் தங்கியிருந்த மாளிகையில் ஒளிந்ததை இவன் எப்படி அறிந்தான்?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்ட இளைய பல்லவன். பதிலேதும் கிடைக்காமல் பீமனை நோக்கினான்.

கருணாகர பல்லவனது எண்ணத்தில் சுழன்ற ஒவ்வொன்றையும் புரிந்துகொண்ட பீமன் சொன்னான்: “இளையபல்லவரே! ஆபத்திலிருப்பவன் புத்தி எப்பொழுதும் சுறுசுறுப்புடன் வேலை செய்கிறது. கலிங்க நாடு ஆபத்திலிருக்கிறது. ஆகவே அதன் மன்னன் விழிப்புடனிருக்கிறான். கலிங்கத்தின் துறைமுகங்களைக் கைப்பற்றிக் கொண்டு சோழ நாடு அளிக்க விரும்பும் போலிச் சமாதானத்தைத் தென்கலிங்கமும் ஏற்காது, வடகலிங்கமும் ஏற்காது. ஆகவே சோழர் போர் தொடுப்பார்கள். அத்தகைய நிலையில் சோழ நாட்டிலிருந்து படைகள் வந்திறங்க இருக்கும் கலிங்கத்தின் முதல் துறைமுகமான பாலூர்ப் பெருந்துறையில் நாங்கள் சர்வ எச்சரிக்கையுடனிருப்பது இயற்கைதானே? அதன் விளைவாகத்தான் இங்கிருக்கும் தமிழ் ஒற்றர்களையும், இங்கு வரும் சோழ நாட்டுப் படைத்தலைவர்களையும் கண்காணிப்புச் செய்கிறோம். நீங்கள் பாலூர்ப் பெருந்துறையில் கால் வைத்த விநாடி முதல், கலிங்கத்தின் ஒற்றர்கள் உங்களைக் கவனித்து வருகிறார்கள். நீங்கள் வெளிநாட்டுப் பிரமுகர் வீதியில் மறைந்ததும் அந்த வீதி முழுதும் ஒற்றர் பார்வைக்குள் அகப்பட்டது. தவிர… ”

இப்படிச் சம்பாஷணையை அரைகுறையாக விட்ட பீமன் மீண்டும் இளநகை கொண்டான். அந்த இளநகையில் பெரும் பொருள் சிக்கியிருப்பதை உணர்ந்த இளைய பல்லவன், “ஏன் பேச்சைப் பாதியில் நிறுத்திவிட்டீர்கள்? எதையோ சொல்ல வந்தீர்களே?” என்று கேட்டான்.

சொல்ல வந்ததைச் சொன்னான் பீமன். அதைக் கேட்டதும் மீண்டும் திகைப்பும் அதிர்ச்சியும் சூழ்ந்து கொண்டன இளையபல்லவனின் சித்தத்தை.

“ஆம் ஆம். பேச்சைப் பாதியில்தான் நிறுத்திவிட்டேன். நான் சொல்ல வந்தது… ” என்ற பீமனை இடை மறித்த இளையபல்லவன், “நீங்கள் சொல்ல வந்தது?” என்று வினவினான்.

“ஒற்றர்கள் கண்பார்வையிலிருக்கும் தெருவில், புறா மூலம் தூது விடுவது அத்தனை சரியல்ல என்று நினைக்கிறேன்” என்றான் பீமன்.

இதைக் கேட்டதும் சில விநாடிகள் ஸ்தம்பித்து நின்று விட்டான் இளைய பல்லவன். அவன் திகைப்பைக் கண்ட கலிங்கத்துப் பீமனது முகத்தில் இகழ்ச்சிப் புன்முறுவல் பெரிதாகப் படர்ந்தது. “நீங்கள் மறைந்த வீதியைப் பற்றிச் செய்தி கிடைத்ததும் அதே வீதியைக் கண்காணிக்க ஒற்றர்களை ஏவினேன். தூதுப்புறா அந்த வீதியில் ஒரு மாளிகையை நோக்கிப் பறந்ததாகச் செய்தி கிடைத்ததும் மற்றதை ஊகித்துக் கொண்டேன். இதற்குப் பிரமாத ஆராய்ச்சி தேவையில்லை. இளைய பல்லவரே” என்றும் விளக்கினான்.

இளையபல்லவனின் சித்தம் குழப்பத்தில் ஆழ்ந்து கிடந்தது. குழப்பம் நிரம்பிய வதனத்துடனேயே பீமனை ஏறெடுத்து நோக்கிய இளையபல்லவன், “புரிந்தது மன்னவா! தங்கள் ஒற்றர் கண்காணிப்புத் திறன் புரிந்தது. இனி என்னை என்ன செய்வதாக உத்தேசம்?” என்று வினவினான்.

“மூன்றாவது ஜாமம் நெருங்குகிறது” என்று பதில் சொன்னான் பீமன்.

“ஆம்” என்றான் இளையபல்லவன்.

“காலை வரை எந்தத் தண்டனையும் தங்களுக்கு விதிப்பதற்கில்லை. “

“ஏன்?”

“நீதி மண்டபத்தில் விசாரிக்காமல் தண்டனையிடும் வழக்கம் கலிங்கத்தில் கிடையாது. “

“நீதிக்கு மதிப்புக் கொடுக்கிறீர்களா?”

“பெருமதிப்புக் கொடுக்கிறோம். பரம விரோதிகளையும் தீர விசாரித்தே தண்டனை கொடுக்கிறோம். ஆகவே தாங்கள் இன்றிரவு நிம்மதியாக உறங்கலாம்” என்று கூறிய பீமன் சரேலெனத் தன் வீரர்களை நோக்கித் திரும்பி, “கலிங்கத்தின் வலைக்குள் தானாக வந்த இந்தப் பல்லவச் சிங்கத்தையும், வேவு பார்க்கும் அந்தக் கூல வாணிகனையும் சிறையில் அடையுங்கள்!” என்று ஆணையிட்டு, “வருகிறேன் இளையபல்லவரே! நாளை நீதி மண்டபத்தில் சந்திப்போம்” என்று அந்த வாலிப வீரனிடம் விடையும் பெற்றுக்கொண்டு வாயிலை நோக்கி நடந்தான்.

மன்னன் ஆணைப்படி கலிங்கத்தின் வீரர்கள் கூல வாணிகனையும் இளைய பல்லவனையும் புரவிகளில் ஏற்றிச் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றார்கள். பாலூர்ப் பெருந்துறையின் சிறைச்சாலை பெருவணிகர் வீதிக்கு இரண்டு வீதிகள் தள்ளியே இருந்தபடியால் வெகு சீக்கிரம் அவர்கள் சிறைக்கு வந்தார்கள். பெரு மதில்களால் சூழப்பட்டு, பல வாயில்களையுடைய அந்தச் சிறைக் கூடத்தை ஏறிட்டுப் பார்த்த கருணாகர பல்லவன் அதிலிருந்து தப்புவது யாருக்கும் நடவாத காரியமென்ப தைப் புரிந்துகொண்டான். தவிர, அவனும் கூலவாணிகனும் சேர்த்தே தள்ளப்பட்ட சிறையின் பெரிய அறையைச் சுற்றிலுமிருந்த வலுவான இரும்புச் சட்டங்கள் சிறையிலிருந்து எமனும் தப்ப முடியாதென்பதை நிரூபித்தன வாகையால் ‘விஷயம் நாளையுடன் முடிந்துவிடும்’ என்ற முடிவுக்கே வந்தான் இளையபல்லவன். ஆனால் விஷயம் அத்தனை எளிதில் முடிவதாயில்லை. முடிவதற்குச் சரித்திரமும் இடம் கொடுக்கவில்லை. மறுநாள் காலை அவன் அருந்துவதற்குக் கொண்டுவரப்பட்ட அதிசய உணவும் இடம் கொடுக்கவில்லை. உணவைக் கண்டு கூல வாணிகன் அதை வெறுப்புடன் நோக்கினான். ஆனால் இளைய பல்லவன் விழிகளில் வெறுப்பு இல்லை, விருப்பே படர்ந்து நின்றது. சில ஜாமங்களில் உயிர் துறக்கப் போகும் இளையபல்லவன் உணவைக் கண்டதும் விருப்பம் காட்டியது பெரும் வெறுப்பாயிருந்தது கூலவாணிகனுக்கு. ‘இறக்கப் போகிறவனுக்கு இவ்வளவு விருப்பமா உணவில்? சே! இவன் ஒரு மனிதனா’ என்று அலுத்துக் கொண்டான். ஆனால் இளைய பல்லவன் விருப்பத்துக்குக் காரணமாயிருந்தது உணவு மட்டுமல்ல என்பதைக் கூலவாணிகன் புரிந்து கொள்ளவில்லை.

Previous articleRead Kadal Pura Part 1 Ch8 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 1 Ch10 | Kadal Pura Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here