Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch1 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch1 |Sandilyan | TamilNovel.in

172
0
Read Kadal Pura Part 2 Ch1 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch1 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch1 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 1 : காவலனை நோக்கி வந்த காலன்.

Read Kadal Pura Part 2 Ch1 |Sandilyan | TamilNovel.in

உதிக்கலாமா வேண்டாமா என்று உறுதியற்றுச் சலனப்படுவனபோல் ஆதவன் மிகுந்த சந்தேகத்துடன் நீர் மட்டத்துக்குமேல் மெள்ளத் தலையை நீட்டத் துவங்கிய அந்த அதிகாலை நேரத்தில்கூட *அக்ஷய முனைக் கடலோரம் கோபத்தின் வசப்பட்ட மனித புத்தியைப் போல் மிதமிஞ்சிய உஷ்ணத்தைக் கக்கிக் கொண்டிருந்தது.

பூமத்திய ரேகை தன்னை இரண்டாகப் பிளந்து சரிபாதி உடலில் பாய்ந்து சென்றதால் சாதாரண காலத்திலேயே நல்ல உஷ்ணத்தைப் பெற்றிருந்த சுமத்ரா என்ற சொர் ண பூமித் தீவு, தனது வடக்குக் கோடியில் கடலில் தலை நீட்டிக் கொண்டு முப்புறமும் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அக்ஷயமுனைக்கு, கோடைக்காலத்தின் அந்த காலையில் அளவுக்கதிகமாகவே உஷ்ணத்தை அளித் திருந்ததால், கரையிலிருந்த கடல் நாரைகள் தரையிலிருந்து பறந்து சென்று அலைப்பரப்பில் உட்கார்ந்து கொண்டன.

இடையே பூமத்திய ரேகை ஓடுவதாலேயே அதிக உஷ்ணத்தைப் பெற்றிருந்த சொர்ணபூமியின் மேல் திசையில், பாரதத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையைப் போலவே வடக்குத் தெற்காக ஓடிக்கொண்டிருந்த பகிட்பாரிஸான் மலைத்தொடரில் சுமார் தொண்ணூறு எரிமலைகளிருந்தபடியால் தீவின் உஷ்ணம் அபரிமிதமாக இருந்ததன்றி, அந்த மலைத் தொடரின் துவக்கமும் அக்ஷய முனையை ஒட்டியிருந்ததால், அன்றைய அதிகாலையிலேயே காலை வைத்து நடக்க முடியாத அளவுக்குக் கடற்கரையோர மணல் பிராந்தியத்தில் சாதாரணமாகவே உஷ்ணம் மிதமிஞ்சியிருக்குமென்றால் அக்ஷய முனைக் கடலோர மணலின் தன்மை வேறு அந்தச் சூட்டைப் பன்முறை பெருக்கிக் கொண்டிருந்தது.

மனிதனால் வரையறுக்க முடியாத ஏதோ ஒரு காலத்தில் பகிட்பாரிஸாரின் எரிமலைகள் பொங்கி வழிந்தோடிய காரணத்தால் பல இடங்களில் கந்தகமும் சொர்ணக்கனிகளும் சொர்ணத் தீவின் மண்ணில் பரவிக் கிடந்ததன்றி அந்த ரசாயன உலோகப் பொருள்கள் அணுமாத்திரமாக மணலில் கலந்து தணல் போன்ற உருவத்தை மட்டுமின்றி குணத்தையும் கடலோர மணலுக்கு அளித்திருந்ததால், மணல் நல்ல வெள்ளை நிறமாக இல்லாமல் சற்று செந்நிறமாகவே காட்சியளித்த தல்லாமல், காலைத் தரையில் வைக்க முடியாத நிலைமையையும் ஏற்படுத்தியிருந்தது.

இத்தனை உஷ்ணத்தையும் கவ்விக் கரைத்துவிட இஷ்டப்பட்டன போல் அக்ஷய முனையை முப்புறத்திலும் பேரிரைச்சலுடன் தாக்கிய கடலலைகளை ஏளனம் செய்வதுபோல் தூரத்தே புகைந்து கொண்டு நின்ற எரிமலை அவ்வப்போது தன் தீ நாக்கை வெளியே நீட்டி நீட்டி உள்ளுக்கு இழுத்துக் கொண்டிருந்தது. வாழ்வில் மலைபோல் வரும் துன்பத்தின் ஊடே சுகமும் உண்டென்று குறிப்பிடுவது போல் அத்தனை உஷ்ணத்தையும் மீறி மலைப்பகுதியிலிருந்த காட்டிலிருந்து சில்லென்ற காற்றும் நீண்ட நேரத்திற்கு ஒருமுறை இரு விநாடிகள் வீசிவிட்டுச் சென்று கொண்டிருந்தது.

அந்த இன்பக் காற்று வீசிய நேரங்களில் மலைக் காட்டுப் பகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாகப் பறந்து வந்த பற்பல வர்ணப் பட்சிகள் கரையோரத்திலும், நீர்மீதும் விதவிதமாகச் சஞ்சரிக்கத் தொடங்கியதால் அத்தனை உஷ்ணத்திலும் தாபத்திலும் அந்தக் கடலோரம் கண்கொள்ளாக் காட்சியாகவே இருந்தது. அந்தக் காட்சியை உச்ச நிலைக்குக் கொண்டு போகவோ என்னவோ பாராபடூ நதி பல கிளைகளாகப் பிரிந்து அந்த அக்ஷயமுனைக் கடலுக்குள் வெகு கம்பீரத்துடன் பாய்ந்து கொண்டிருந்தது.

பாராபடூ நதி அப்படிப் பல பிரிவுகளாகப் பாய்ந்ததால் அக்ஷயமுனைக்குப் பெரும் லாபமே இருந்தது. சொர் ண பூமியின் வடக்குப் பகுதியிலுள்ள ஐந்து துறைமுகங்களில் வடமேற்குப் பகுதியிலிருந்த அக்ஷய முனைத் துறைமுகத்தில் கடலாழம் அதிகமாயிருந்ததன்றி, பாராபடூவின் பிரிவுக் கால்களும் ஆழமாயிருந்தபடியால் கிட்டத்தட்ட அக்ஷயமுனை நகரத்துக்கு வெகு அருகில் மரக்கலங்கள் வர முடிந்தது. அப்படி வந்த மரக்கலங்களிலிருந்து வர்த்தகப் பொருள்களை இறக்க நதிப் பிரிவுகளுக்கு இடையிடையே இருந்த மணற் குன்றுகள் உதவின.

அது மட்டுமல்ல, அக்ஷயமுனைத் துறைமுகப் பகுதியைச் சுற்றிலும் சற்று எட்ட சமுத்திரத்தில் சக்கர வட்டமாக அமைந்திருந்த சிறுசிறு தீவுகளும் அந்தத் துறைமுகத்துக்குப் பாதுகாப்பு அரண்களாக அமைந்திருந்தன. அக்ஷய முனையின் நகரமும் கடலுக்கு எதிரே இருந்த மலைச் சரிவில் அமைந்திருந்ததால் அந்த மலைக்கோட்டையிலிருந்து தூரத்தில் வரும் மரக்கலங்களை அறிய முடிந்த தாகையால் வர்த்தகத்துக்கும் பாதுகாப்புக்கும் சிறந்த ஓர் இடமாக அக்ஷயமுனை பிரசித்தி பெற்றிருந்தது.

அக்ஷய முனைக் கோட்டைப் பகுதியும் அதிலிருந்த சிறந்த வீடுகளையும் கவனிப்போர்களுக்கு அக்ஷயமுனை நகரத்தில் செல்வத்துக்குக் குறைவில்லையென்பது தெரிய வரும். அப்படி வீடுகளைப் பார்த்து நிலையைப் புரிந்து கொள்ளாத மந்த புத்தியுள்ளவர்கள் கூடக் கோட்டைச் சுவருக்குப் பின்புறத்தில் மலை உச்சியை ஒட்டித் தெரிந்த பெரும் மாளிகையின் சொர் ண கலசத்தைப் பார்த்தால் உண்மையைப் புரிந்து கொள்வார்கள்.

நதியின் பல பிரிவுகளுடன் மணற்பாதையொன்றும் கூச்சாகக் கடலுக்குள் நீண்ட தூரம் இயற்கையாகவே ஓடியதால் அக்ஷயமுனை என்ற பெயர் பெற்ற அந்தத் துறைமுகம் அக்ஷய நகரத்துக்கு வெளியே கால் காத தூரத்திலிருந்ததென்றாலும் மலை உச்சிக்கருகிலிருந்த மாளிகைத் தலைவன் கண்களுக்குத் தென்படாமல் அந்தத் துறைமுகத்தில் எதுவும் நடக்க முடியாத முறையிலேயே அக்ஷயமுனை அமைந்திருந்தது.

கோட்டைக்கும் கடலுக்கும் இடையே இருந்த மணற் பிரதேசம் பார்வைக்கு அத்தனை செல்வச் செழிப்புள்ளதாகப் புலப்படாமல் மூங்கில் வீடுகளின் கூட்டங்களால் நிரப்பப்பட்டிருந்தாலும், அந்த மூங்கில் வீடுகளில் மறைந்து கிடந்த செல்வம் கோட்டைக்குள்ளிருந்த பெரும் வீடுகளிலும் இருப்பது சந்தேகம் என்பதை அக்ஷய நகரத்தார் அறிந்திருந்ததன்றி, அந்த மூங்கில் குடில்களைச் சிறிதளவு கூட நெருங்காமல் எச்சரிக்கையாகவே இருந்தார்கள்.

அந்த மூங்கில் வீடுகள் கூட்டம் கூட்டமாக அந்தத் துறை முகத்தின் பல பகுதிகளிலும் பிரிந்து காணப்பட்டதற்கும் காரணமிருந்தது. சொர்ணபூமியிலும், சாவகத்திலும், பொற்கிரிஸேயிலும், பாலியிலும் காணப்பட்ட பலதரப் பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றிப் பாரத நாட்டிலிருந்தும் ஆப்பிரிக்க, அரபு நாடுகளிலிருந்தும் பல வகுப்பினரும் அங்குக் கூட்டம் கூட்டமாக வசித்து வந்தார்கள். அப்படி வசித்து வந்த அவர்கள் அனைவருமே கடலோடும் பொதுத் தொழிலைச் செய்து வந்தாலும் வசிப்பதில் மட்டும் பிரிவினையைக் காட்டித் தனித் தனிக் கூட்டமாக மூங்கில் வீடுகளை அமைத்திருந்தார்கள்.

அத்தகைய அந்தப் பிரிவினர் எல்லோருமே மாலுமிகளாத லாலும், எந்த நாட்டுப் பற்றுமில்லாதவர்களாதலாலும், அக்ஷயமுனைப் பகுதியிலும், அக்கம் பக்கத்திலும் வரும் மரக்கலங்களை மடக்குவதையே தொழிலாகக் கொண் டிருந்ததாலும், அக்ஷய நகரத்தில் தங்குவதற்குச் செலுத்திய பங்கு போக மீதிப் பங்கு அந்தக் குடிசைவாசிகளிடம் மிதமிஞ்சி இருக்கவே குடிசையில் வாழ்ந்தாலும் பணத்துக்கு எக்குறையும் இல்லாதவர்களாகவே அவர்கள் காலங்கழித்து வந்தார்கள்.

அப்படி மிஞ்சிய பணத்தையும் நகைகளையும் கவர நகரத்துக்குள் பல வசதிகளை அந்த மாலுமிகளுக்கு அக்ஷய நகரத்தின் காவலன் செய்து கொடுத்திருந்தானாகையால், அந்தக் குடிசைகளின் செல்வம் ஒரேயடியாகத் தன் கைக்கு வரும் என்ற நிச்சயத்துடனேயே இருந்தான். அதன் காரணமாகவே அவர்களைத் தன் வீரர்களைக் கொண்டு எந்தவித இம்சையும் செய்யாமல் நிம்மதியும் சந்துஷ்டியும் மிக்க நிலைமையிலேயே வைத்திருந்தான்.

அவன் அவர்களை இம்சை செய்யாமலும் சுமுகமாகவும் வைத்திருந்ததற்கு முக்கியமான காரணம் வேறு ஒன்றும் உண்டு. அந்தக் குடிசையிலிருந்த மாலுமிகள் கடற்போரில் மட்டுமின்றி நிலப் போரிலும் நிகரற்றவர்களாகையால் அவர்கள் ஒன்று சேர்ந்து நகரத்தின்மீது பாய்ந்தால் நகரத்தை அரைவிநாடி தன்னால் காப்பாற்ற முடியாதென்பதை அவன் சந்தேகமற உணர்ந்து கொண்டிருந்தான்.

அதன் விளைவாகக் கூடியவரையில் அந்தக் குடிசைவாசிகளிடம் மிக அன்பாக இருந்த அக்ஷய நகரத்தின் காவலன் அடிக்கடி அவர்களிடை ஏதாவதொரு சண்டையைக் கிளப்பிவிட்டு இரண்டொருவரைப் பலி கொடுத்து ஆட்சியை அங்கு ஸ்திரப்படுத்திக் கொண் டிருந்தான். தன்னையும் மீறி அவர்களிடை ஒற்றுமை ஏற்படும் சமயங்களில் கடலில் ஏதோ பெரும் பொக்கிஷக் கப்பல்கள் வருவதாகத் தனக்குச் செய்தி வந்திருப்பதாக ஆசை காட்டி அந்த வேட்டைக்கு அவர்களை விரட்டி விடுவான்.

அத்தகைய செய்தியை அவன் மிகுந்த நாசூக்காகப் பரப்பிய அடுத்த சில நாழிகைகளில் பல மரக்கலங்கள் பாய் விரித்துக் கடலில் ஓடும். அப்படி ஓடும் கப்பல்களிடம் வேறு கப்பல்கள் அகப்பட்டால் அக்ஷ யத்தின் காவலனுக்கும் லாபம். அவர்களுக்கும் லாபம். இல்லையேல் குடிசைவாழ் மாலுமிகளுக்குத்தான் நஷ்டம். அக்ஷய நகரத்தின் காவலனுக்கு எந்தவித நஷ்டமுமில்லை. அவர்கள் மரக்கலத்தை மடக்காமல் திரும்பி வந்த மடமைக்காக அவர்களைத் தூஷிப்பான். அதிகக் கவடு சூதில்லாத அந்த மாலுமிக் கூட்டமும் அதை ஒப்புக் கொள்ளும்.

இப்படிப் பலவிதமாகக் கபட நாடகம் ஆடிவந்த அக்ஷயத்தின் காவலன் ஒன்று மட்டும் உணர்ந்திருந்தான். என்றாவது ஒருநாள் மூர்க்கத்தனமில்லாத புத்திசாலியான மரக்கலத் தலைவன் எவனாவது ஒருவன் அந்த அக்ஷயத்துக்கு வந்து சேர்ந்தால் தன்பாடு பெரும் திண்டாட்டமென்பதை அறிந்திருந்தானாகையால், கூடிய வரை அத்தகைய மரக்கலத் தலைவர்களை அந்தப் பகுதியில் அனுமதிக்காமல், முரட்டுக் கொள்ளைக்காரர்களுக்கு மட்டுமே அந்த அக்ஷயமுனையில் இடம் கொடுத்திருந்தான். அப்படி அவன் எச்சரிக்கையையும் மீறி அக்ஷய முனைக்குள் நுழைந்துவிட்ட இருபெரும் மரக்கலத் தலைவர்கள் துர்மரணமடைந்தார்கள்.

என்ன காரணத் தாலோ அவர்கள் மரக்கலமும் தீப்பிடித்து எரிந்து போயிற்று. அப்படி எரிந்தது பெரும் துற்சகுனமென்று அக்ஷயத்தின் காவலன் பெரிதும் வருந்தினான். அதற்குப் பிராயச்சித்தமாக அந்த நகரத் தேவதைக்கு விழா நடத்தி பிரசித்தியான “வாஜாங் நடனத்தையும் செய்து கடற்கரை மாலுமிகளை திருப்தி செய்து விட்டான்.

இத்தகைய விழாக்களாலும் குடிமக்களின் குண விசேஷத்தாலும் வங்கக் கடல் பிராந்தியத்தில் மட்டுமின்றி தூரக்கிழக்குத் தீவுகளின் பிராந்தியம் முழுவதிலுமே அக்ஷயமுனை பெரும் பிரசித்தி அடைந்திருந்தது. அந்த முனையில் மற்ற சாதிகளோடு தமிழர்களும் இருந்தார் களானாலும், அவர்கள் மிகச் சொல்பமாக இருந்தபடியால் அக்ஷயமுனைத் தலைவனின் கிருத்திரமங்களைச் சரியாக அறிந்திருந்தாலும் ஏதும் செய்ய முடியாத துர்பாக்கிய நிலையிலேயே வாழ்ந்து வந்தார்கள்.

அக்ஷயமுனைத் துறைமுகத்தில் அவர்களுக்கு இருந்த வீடுகள் சுமார் பத்து. மரக்கலம் ஒன்றே ஒன்று. அதுவும் பெரும் மரக்கலமல்ல. மற்ற வகுப்பினரின் மரக்கலங்களுக்கு இடையில் அது நிற்கும்போது ஏதோ சாதாரணப் படகு ஒன்று நிற்பது போலவே இருக்கும். என்ன காரணத்தாலோ தமிழகத்தின் மாலுமிகள் அந்த அக்ஷயமுனையை அடையாமலே சென்றார்கள். தமிழகத்தின் மரக்கலங்கள் கூட அந்த வழியில் வராமல் பாலூரிலிருந்து பொற்கிரிஸேயிலிருந்த தலைத் தக்கோலத்துக்குப் போய் அங்கிருந்து தெற்கே ஸ்ரீவிஜயத் துறைமுகத்துக்குச் சென்றுகொண்டிருந்தன.

சூளூ என்ற கடற் கொள்ளைக்காரர்களிடத்திலுள்ள பயத்தில் தமிழ் மாலுமிகள் இப்படி ஊர் சுற்றிப் போய்க் கொண்டிருந்ததாகச் சரித்திர ஆசிரியர்கள் சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் சூளூக்கள் மட்டுமல்ல அந்தக் கொள்ளைக்காரர்கள் பல நாட்டவரும் அந்தக் கொள்ளையில் பங்கெடுத்துக் கொண்டுதானிருந்தார்கள். கொள்ளையடித்தவர் யாராயிருந்தாலும், காரணம்யாதாய் இருந்தாலும், அக்ஷயமுனைத் தலைவனுக்கு மட்டும் தமிழகத்தின் கப்பல்கள் அக்ஷயமுனையிலிருந்து விலகிச் சென்றது பெரும் மன நிம்மதியை அளித்திருந்தது.

தமிழர்களை அறவே வெறுத்தான் அக்ஷயத்தின் காவலன். அவர்கள் நுண்ணறிவைக் கண்டு அவன் ஓரளவு அஞ்சவும் செய்தான். அதிக நுண்ணறிவு படைத்தவர்களுக்கும் தன் சுரண்டல் கொள்கைக்கும் சரிப்பட்டு வராது என்பதை அறிந்திருந்தானாகையால் அக்ஷயத்தின் தலைவனுக்குத் தமிழர் எண்ணிக்கைக் குறைவாகவும் பலவீனமாகவும் இருந்தது பெரும் திருப்தியை அளித்தது.

அப்படி அவர்களில் ஓரிருவர் தங்கள் அறிவைக் காட்ட முற்பட்டால் அவர்களை அப்புறப்படுத்த வேண்டிய முயற்சிகளையும் எடுத்தான் அவன். இத்தகைய பயங்கரக் கொலைகாரனுக்கு அஞ்சியே தமிழர்கள் அங்கு காலம் கழித்து வந்தார்கள்.

அக்ஷயமுனைத் தலைவனின் கொடூரத்துக்குச் சாட்சி சொல்லுவதைப்போல் சுட்டெரித்த அந்தக் கோடை கால காலை நேரத்தின் கொடுமையைப் பிளக்க முயன்றது ஒரு பெருங் காற்று. திடீரென எழுந்த அந்தப் பெரும் காற்று இரண்டொரு நாழிகை விடாமலே அடித்ததால் கடற்கரைக் குடிசையில் உள்ள மக்கள் திடீரென வெளியே வந்து ஆகாயத்தைக் கவனித்தார்கள்.

அக்ஷயமுனையில் திடீரென வரும் கோடை மழைக்கு இத்தகைய பூர்வாங்கக் காற்று வீசுவது உண்டு. ஆனால் அன்று காலை எழுந்த காற்று வழக்கமான பெரும் காற்றாகவுமில்லை. மழை பொழியும் மேகங்களைக் கொண்டு வரவுமில்லை. பலத்த கொள்ளைக்கும் எண்ணற்ற கொலைகளுக்கும் காரண பூதனான அக்ஷய முனைத் தலைவனுக்கும் பெரும் காலன் ஒருவனைக் கொண்டு வந்தது.

அந்தக் காலனைத் தாங்கி வந்த பெரும் மரக்கலமொன்று தூரத்தே கடலில் வெகு வேகமாக உந்தப்பட்டுக் கரையை நோக்கி அதிவேகத்துடன் விரைந்தது. அந்தக் கப்பலின் மேல்தளத்தில் பெரும் பாய்மரத் தூணில் சாய்ந்து நின்ற அந்தக் காலனும் எதிரே தெரிந்த அக்ஷயமுனைத் தோற்றத்தைக் கண்டு பேருவகை கொண்டதற்கு அறிகுறியாகப் புன்முறுவலொன்றைத் தன் இதழ்களில் தவழவிட்டான். அடுத்த விநாடி அவன் அரச தோரணையில் தன் கையை அசைக்கவே, மரக்கலத்தளத்தின் மூலையிலிருந்து இரு கொம்புகள் பலமாக அக்ஷயமுனைத் துறைமுகத்தை நோக்கி ஊதப்பட்டன. அந்த ஊதலைக் கேட்ட துறைமுக மக்கள் நடுங்கினர். கரையில் கப்பலைப் பார்க்க குழுமியவர் மீண்டும் குடிசையை நோக்கி ஓடினர்.

மலைச் சரிவிலிருந்த நகரத்தின் கோட்டைக் கதவும் திடீரென மிகுந்த வேகத்துடன் சாத்தப்பட்டது; அக்ஷய நகரக் கோட்டையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டன. அத்தனை மக்களும் கண்டு நடுங்கிய அந்த அசுரக் கப்பல் எதையும் லட்சியம் செய்யாமல் துரிதமாகத் துறைமுகத்தில் நுழைந்துவிட்டது.

Previous articleRead Kadal Pura Part 1 Ch37 | Kadal Pura Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch2 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here