Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch12 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch12 |Sandilyan | TamilNovel.in

153
0
Read Kadal Pura Part 2 Ch12 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch12 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch12 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 12 : நிகழ்ச்சியின் புரட்சி.

Read Kadal Pura Part 2 Ch12 |Sandilyan | TamilNovel.in

அக்ஷயமுனைக் கோட்டையின் அன்றைய இரவு நிகழ்ச்சியைப் பற்றித் தந்தையும் மகளும் திரும்பத் திரும்பப் பரிமாறிக் கொண்ட வார்த்தைகளிலிருந்தும், அதைப் பற்றித் தன்னைப் பயமுறுத்திய சொற்களிலிருந்தும், அந்த நிகழ்ச்சி ஏதோ என்னவோ எத்தனை பயங்கரமானதோ என்றெல்லாம் எண்ணமிட்டு அதை அறிந்துகொள்ளப்பிடிவாதம் பிடித்த இளையபல்லவன், அது என்ன என்பதை மஞ்சளழகி எடுத்துச் சொல்லியதும் ‘பூ! இதுதானா!’ என்ற நினைப்பிலும் ‘இதையா இத்தனை பிரமாதப்படுத்தினார்கள்’ என்ற வியப்பாலும் அந்த அறை அதிரும்படியாக இரைந்தே நகைத்தான்.

அவள் சொன்ன அந்த இன்பக் காட்சியை நினைத்து, ‘இத்தனை இன்பத்தில் பெரும் துன்பத்தையும் இவள் ஏன் பிணைக்கிறாள்?” என்ற மனக் கேள்வியின் காரணமாக, ‘இன்பத்தில் துன்பம், இன்பத்தில் துன்பம்’ என்ற சொற்களையும் தனது நகைப்புக்கு ஊடே உதிரவிட்டான்.

அவள் சொன்ன சொல் அவனுக்கு அத்தனை நகைப்பையும் அலட்சியத்தையும் அளித்தாலும், இரவு நிகழ்ச்சியைப் பற்றி அவன் கட்டிய முடிவு அத்தனை எளிதானதோ இன்பமானதோ அல்லவென்பதை உணர்ந் திருந்த மஞ்சளழகியும் அவள் தந்தையும், அந்த நகைப்பை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமலும், அவன் நிலையைப் பற்றி எண்ணியதால் ஓரளவு வருத்தத்துடனும் அவனை நோக்கினார்கள்.

அந்த வருத்தம் செவ்வரி படர்ந்த மஞ்சளழகியின் கண்களில் நன்றாகத் துளிர்த்துக் கிடந்தது. அவள் முழுமதி முகத்தையும் சஞ்சல மேக மொன்று படர்ந்து மெள்ள மகிழ்ச்சிக் களையை மறைத்தது. அவன் திரும்பத் திரும்ப இருமுறை நகைத்ததை அவள் மௌனத்துடனும் வருத்தத்துடனும் பார்த்துக்கொண்டேயிருந்தாள். ஆழமான இதயத்தை உடையவனும் அகூதாவின் சபதத்தைக் கேட்டது முதல் கிலி பிடித்துக் கிடந்தவனுமான அவள் தந்தையும் அந்தக் கிலியை மறந்து இளையபல்லவனை மிகுந்த வெறுப்புடன் நோக்கினான்.

இரவு வந்தால் நேரிட இருப்பதை அறியாமல் இவன் நகைக்கிறானே என்ற எண்ணத்தால் அக்ஷயமுனைக் காவலன் இதயத்தில் அந்த விநாடி துளிர்த்தது அனுதாப மில்லாவிட்டாலும், ‘இவன் பிடிவாதத்தால் இன்றிரவு அக்ஷயமுனையில் பெரும் பிரளயம் ஏற்படுமே’ என்ற நினைப்பால் பெரும் பயமே எழுந்து நின்றது. ஆகவே பயமும் வெறுப்பும் கலந்த பார்வையொன்றை அவன் இளையபல்லவன் மீது வீசினான்.

இடம், பொருள், ஏவல் ஆகிய எதையும் கவனிக்காமல் அத்துமீறி இருமுறை நகைத்த சமயத்திலும் இளையபல்லவன் கண்கள் மட்டும் எதிரேயிருந்த இருவர் முகங்களையும் ஆராய்ந்து கொண்டிருந்ததன் விளைவாக, அவ்விரண்டிலும் ஏற்பட்ட மாறுதல்களைச் சிரிப்புக்கு இடையே அவன் கவனிக்கத் தவறவில்லையாகையால் மஞ்சளழகி விளக்கிய இரவு நிகழ்ச்சி மேலுக்குத் தோன்றியதுபோல் அத்தனை இன்பமானதாயிருக்க முடியாதோ என்னவோ என்ற சந்தேகம் அவனையும் பீடிக்கலாயிற்று. அதுவும் மஞ்சளழகியின் வதனத்தில் படர்ந்த பரிதாபமும் சஞ்சலமும் அவன் சந்தேகத்தைத் தூண்டிவிடவே தனது நகைப்பை அடக்கிக் கொண்டு சில விநாடிகள் மஞ்சளழகியைக் கூர்ந்து நோக்கிவிட்டுக் கேட்டான், ‘தேவி! அக்ஷயமுனைக் கோட்டை பெரும் மர்மகூடம் போலிருக்கிறதே?” என்று.

மஞ்சளழகி தன் விழிகளைச் சற்றே உயர்த்தி அவனை நோக்கினாள். அவற்றில் விரிந்து கிடந்த துயரம் குரலிலும் ஒலிக்க, “ஆம்”, என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள் அவள். அந்த ஒரு வார்த்தையில் பதிந்து கிடந்த அனுதாபம் இளையபல்லவன் இதயத்தை ஊடுருவிச் சென்றது. சில நாழிகைகளுக்கு முன்பே சந்தித்த, முன்பின்னறியாத அந்தப் பெண் தன்னிடம் காட்டும் அனுதாபத்துக்குக் காரணம் புரியாமல் அவன் தவித்தான். எதிர்பாராத அனுதாபமும் அன்பும் அவளிடம் தனக்கு ஏற்பட்டிருப்பதை உணர்ந்த அவன் பெரிதும் குழம்பினான். பெரும் வியப்புக்கும் உள்ளானான்.

பெண்களைப் பார்த்ததும் உணர்ச்சிவசப் படக்கூடிய சுபாவம் உள்ளவனல்ல இளையபல்லவன். சென்ற ஓர் ஆண்டுக் காலத்தில் பல நாடுகளுக்குச் சென்று பல அழகிகளைப் பார்த்தும் சலிக்காத அவன் மனமும் மஞ்சளழகியின் அபூர்வ எழிலில் மட்டுமல்ல; அவள் பார்வையில், குரலில், அனைத்திலும் ஓரளவு லயிக்கவே செய்தது. ஆகவே சற்று சஞ்சலத்துடனேயே அவன் மீண்டும் கேட்டான், “அத்தனை மர்மங்களில் நீங்கள் சொன்ன இரவு நிகழ்ச்சி, அதுதான் அந்த இன்பக் காட்சி, அதுவும் சேர்ந்ததுதானா?” என்று.

“ஆம்”, என்று மீண்டும் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள் அவள்.

“இன்றிரவு முழு மதியின் நிலவில் நீங்கள் நடனமாடப் போவதாகச் சொன்னீர்களல்லவா?” என்று அவன் வினவினான் குரலில் குழப்பம் ஒலிக்க.

“ஆம். சொன்னேன். ” மிகவும் தீனமாகவே வந்தது அவள் பதில்.
“உங்களுடன் பல சேடிகளும் சேர்ந்து ஆடுவார்கள் என்று கூறினீர்கள்…’ என்று மேலும் தொடர்ந்தான் இளையபல்லவன்.

“ஆம் கூறினேன். ” இந்தப் பதிலிலும் மகிழ்ச்சி ஒலிக்க வில்லை அவள் குரலில்.

“என்ன விந்தை! முழுமதி நிலவு, அப்சரஸ் போன்ற ஒரு பெண் ஆடுகிறாள். அவளைச் சுற்றிலும் அழகிகளும் ஆடுகிறார்கள். அப்படியிருந்தும் அதில் துன்பமா?” என்ற இளையபல்லவனின் குரலில் ஆச்சரியம் எல்லை கடந்து ஒலித்தது.

“ஆம், துன்பந்தான்,” என்றாள் மஞ்சளழகி உறுதியுடன்.

“இந்த நாட்டு நடனக் காட்சி அத்தனை துன்பமான காட்சியா!”

“இல்லை, வாஜாங் என்ற வாயாங் நடனத்தைவிட இன்பம் தரும் கலைக் காட்சி உலகத்தில் எதுவுமில்லை. ” இதைச் சொன்னபோது மஞ்சளழகியின் கண்களில் புத்தொளியொன்று பளிச்சிட்டது. நடனத்தை நினைத்த மாத்திரத்தில் அவள் உடலெங்கும் மயிர்கூச்செறிந்தது. முகத்திலிருந்த சஞ்சலங்கூடச் சிறிது மறைந்தது.

அவள் முக மாறுதல்களை அவன் கவனிக்கத்தான் செய்தான். நாட்டியத்தை நினைத்ததுமே அவள் முகத்தில் ஏற்பட்ட புதுப் பொலிவையும் கண்டான். அவள் உடலிலேயே நாட்டியம் ஊறிக்கிடக்கிறதென்பதைப் புரிந்து கொண்டான். ஆகவே அந்த நாட்டியத்தைப் பற்றிய தகவல்களையும் அதனால் ஏற்படக் கூடுமென அவன் எதிர்பார்க்கும் விபரீத விளைவுகளையும் அறிந்து கொள்ள அவன் மேலும் பேச்சைத் தொடர்ந்து, “வாஜாங்கா, வாயாங்கா… ஏதோ நாட்டிய முறை சொன்னீர்கள். ” என்று ஆரம்பித்தான்.

அவனை இடைமறித்த மஞ்சளழகி, “இரண்டு விதமாகவும் அதை அழைப்பதுண்டு. வாஜாங், வாயாங் இரண்டும் ஒரே நாட்டிய முறை, சொர்ணத் தீவின் தேசிய சொத்து, கலைச் சிகரம் அது,” என்றாள்.

“அதிலென்ன, துன்பகரமான காட்சிகளைத்தான் ஆடுவீர்களா?” என்று கேட்டான் இளையபல்லவன்.

“இல்லை இல்லை” என்று சட்டெனப் பதில் சொல்லிய மஞ்சளழகி, “மிக இன்பமான காட்சிகளைத் தான் ஆடுவோம். ” என்றாள்.

“இன்பமான காட்சிகளா!”

“ஆம், புராணக் கதைகளை ஆடுவோம். வேறு வகை வீர, காதற் சுவைக் கதைகளையும் ஆடுவோம்” என்று அவள் நாட்டியத்தை நினைக்க நினைக்க உணர்ச்சி மேலிட்டுப் பேசினாள்.

அவள் உணர்ச்சிகளை மேலும் தூண்டக் கேட்டான் அவன், “புராணக் கதைகளா? இந்த ஊருக்கென்று தனிப் புராணங்கள் உண்டா ?” என்று .

“இல்லை. தனிப்பட்ட புராணங்கள் கிடையாது. ராமாயண, மகாபாரதக் கதைகளைத்தான் ஆடுகிறோம்” என்று அவள் கூறினாள்.

“அவை எங்கள் நாட்டுப் புராணங்களாயிற்றே!”

“ஆம். அந்தப் புராணங்கள் தான் இங்கும் நடமாடு கின்றன. பாரதத்தின் புராணங்களாலும் கலைகளாலும் புத்துயிர் பெற்றது சொர்ணபூமி. சொர் ண பூமியின் தீவுகளில் முதலில் பாரதத்தின் ஸநாதன தர்மமும் பிறகு புத்த மதமும் பரவின. நீங்கள் ஊன்றிப் பார்த்தால் உங்கள் நாட்டுக் கலாசாரத்துக்கும் இந்த நாட்டுக் கலாசாரத்துக்கும் அதிக வேற்றுமையிருக்காது. பாரதத்திலிருந்து வந்த கலைகள் இங்குள்ள கலைகளுடன் பிணைந்தன, பாலுடன்தேன் கலந்தது போல். பழைய வாஜாங்கில் நிழலாட்டந்தான் காட்டுவார்கள்.

பரதநாட்டியம் கலந்த பிறகு நடனக் கலைஞர்கள் நேரிடையாக ஆடுகிறார்கள். வாஜாங்கில் இருவகை உண்டு. வாஜாங் பூர்ணா என்பது புராணக் கதைகளை ஆடுவது. வாஜாங் கோதக் என்பது வேறு வகை காதற் கதைகளை ஆடுவது. இரண்டும் மகோன்னதமா யிருக்கும் இளையபல்லவரே. வாஜாங் நிகரற்ற நாட்டிய முறை. அதன் பின்னிசை பிரமிக்கத்தக்கது. வெளிச் சூழ்நிலையில் ஆடப்படும் இந்த நடனத்தைப் பார்த்த பின்பு நீங்களே புரிந்து கொள்வீர்கள்,” என்ற மஞ்சளழகியின் கண்கள் கனவுலகில் சஞ்சரிக்கத் தொடங்கின. அந்த நாட்டிய முறையைப் பற்றியும், பாரதம், சொர் ண பூமி இவற்றின் கலாசாரத்தைப் பற்றியும் பேசப் பேச அவள் முகத்தில் உணர்ச்சிகள் பலவாக விரிந்தன.

கை கால்கள் கூட உணர்ச்சியால் மெல்ல மெல்ல அசைந்தன. அந்த அசைவைத் தொடர்ந்து சரேலென ஆசனத்திலிருந்து எழுந்த அவள், மஞ்சத்தின் கைப்பிடியில் ஒரு கையை வைத்துக்கொண்டு இடை துவளச் சிறிது நேரம் நின்றாள்.

அவள் நின்ற நிலை மனத்தை அப்படியே பறித்து விடும்படியாயிருந்ததை இளையபல்லவன் கவனித்தான். இடை துவள, ஒரு கரம் நீண்டு மஞ்சத்தின் பிடியில் மலர் விரல்கள் அமர, இன்னொரு கை இடையில் பொருந்த, கால்கள் சற்றே ஒருபுறம் வளைய, பக்கவாட்டில் தலை சாய்த்து அவள் நின்ற கோலமே முதல்தரமான நாட்டியக் கோலமாக அமைந்திருந்ததைக் கவனித்த இளைய பல்லவன், என்ன நேரிடுவதாயிருந்தாலும் அன்றைய நடனத்தைப் பார்த்து விடுவதென உறுதி பூண்டான். அவன் உறுதியை மேலும் வலுப்படுத்தவும், உணர்ச்சிகளை அலைக்கழிக்கவும் அவள் மேலும் விவரித்தாள்.

“இளைய பல்லவரே! உங்கள் நாட்டு பரதத்தை நான் பார்த்திருக்கிறேன். மிகச் சிறந்த நாட்டிய முறை; ஆனால் அதிலிருந்து முளைத்த, அதனால் செழிப்புற்ற வாஜாங்குக்கு இணையான நாட்டியம் உலகில் எங்குமே கிடையாது. இன்றிரவு நான் ஆடும்போது பாருங்கள், உலகமே ஆடும்; அங்கு வரும் கள்வர்கள் ஆடுவார்கள்; வீரர்கள் ஆடுவார்கள்; பெண்கள் ஆடுவார்கள்; இன்னிசை எழுந்து கலக்கும்; அந்தத் தாண்டவத்தில் உள்ளங்கள் புரண்டெழும்; உணர்ச்சிகள் அலை பெருகும்; வந்து பாருங்கள் – வந்து பாருங்கள். “

மஞ்சளழகி மெய்மறந்து ஆவேசத்துடன் பேசினாள். அந்த ஆவேசத்தில், அவள் நின்ற நடனத் திருக்கோல அழகில், இளையபல்லவன் வசப்பட்டு நின்றான். அந்த இருவருமே அந்தச்சமயத்தில் சுயநிலை இழந்து நின்றார்கள். அத்தனையிலும் சுயநிலை இழக்காத ஒரு குரல் இன்பத்தின் இடையே பாய்ந்து துன்ப அஸ்திரமெனக் குறுக்கே புகுந்தது. “இன்பம் மட்டுமல்ல அந்த நடனத்தில்” என்ற உக்கிரமான சொற்கள் அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவன் வாயிலிருந்து புறப்பட்டு அவர்கள் எண்ண அலைகளை உடைக்கவே, மஞ்சளழகியும் இளையபல்லவனும் ஏககாலத்தில் தலைவனை நோக்கித் திரும்பினார்கள். முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாத அக்ஷய முனைத் தலைவன் இகழ்ச்சி தொனித்த குரலில் சொன்னான் இளையபல்லவனை நோக்கி, “இரவு நிகழ்ச்சியின் இன்பக் கிளையைப் புரிந்துகொண்டு விட்டீர்கள்,” என்று.

“அப்படியானால் அதற்கு… ” என்று துவங்கிய இளைய பல்லவனை இடைமறித்த அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவன், “ஆம், துன்பக்கிளையும் ஒன்று உண்டு. நீங்களே சொன்னீர்களல்லவா இன்பத்தில் துன்பம் என்று” எனக் கூறினான்.

“ஆம் சொன்னேன்,” என்றான் இளையபல்லவன்.

“நீங்கள் சொன்னது உண்மை. ஆனால் துன்பத்தின் எல்லையைப் புரிந்துகொள்ளாமல் சொன்னீர்கள்” என்றான் அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவனான பலவர்மன்.

“புரிந்து கொள்கிறேன், சொல்லுங்கள். “

“இப்பொழுது நீங்கள் மயக்கத்தின் பிடியிலிருக்கிறீர்கள், இரவு நிகழ்ச்சிக்கு வந்தால் மரணத்தின் பிடியிலிருப்பீர்கள்” என்று உணர்ச்சி ஏதுமற்ற வறண்ட குரலில் மரண ஓலை வாசிப்பவன்போல் பதில் கூறினான் பலவர்மன்.

இளையபல்லவன் மஞ்சளழகியின் முகத்தைத் திரும்பி நோக்கினான். அப்பொழுது அதில் நாட்டியக் கனவில்லை. இன்பத்தின் நினைப்பில்லை. அச்சத்தின் சொரூபமாயிருந்தது அவள் வதனம். “சற்று நிலை தடுமாறி விட்டேன் தந்தையே” என்று அவள் தந்தையைப் பார்த்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள். . “அது பெண்ணாகிய உனக்குச் சகஜந்தான்” என்று அலட்சியமாகப் பதில் சொல்லிவிட்டு மஞ்சளழகியைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் இளையபல்லவன் முகத்தில் மட்டும் தனது கண்களை நாட்டிக்கொண்டு சொன்னான் பலவர்மன்: “இளையபல்லவரே! உங்கள் நாட்டுச் சாத்திரப்படி இன்று சித்திரா பௌர்ணமி. இன்றைய இரவு நாட்டியத்தை நாங்கள் என்றும் கைவிட்டதில்லை.

இதைப் பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம். இது உண்மையில் சித்திரா பௌர்ணமி விழாவல்ல, ஒருவகை அரசியல் விழா. இந்த விழாவின் முழு மர்மத்தை நீங்கள் அறிந்து கொள்ளச்சில வருஷங்கள் பிடிக்கும். இந்த விழா இன்பமாகத்தான் ஒவ்வோர் ஆண்டும் துவங்குகிறது. இறுதியில் பத்துப் பதினைந்து கொலைகளாவது விழாமல் இதுவரை இந்த விழா முடிந்ததில்லை. வாஜாங் மிக இன்பமான நாட்டியம். ஆனால் அதைப் பார்க்க மட்டும் வருவதில்லை கொள்ளைத் தலைவரும், மற்றக் காட்டு மிராண்டிகளும். தங்கள் பழைய விரோதங்களைத் தீர்த்துக் கொள்ளும் ஸ்தலமாகவும் விழா அரங்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள்.

இந்தக் கொலைகளில் அரசாங்கத்துக்கும் பங்கு உண்டு. வேண்டாதவர்களை ஒழித்துக் கட்டுவதற்கும் இந்த விழா பயன்படுகிறது. வாஜாங்கின் பின்னிசையைப் பற்றிச் சொன்னாள் என் மகள். பிறகு கலவரம் ஏற்படும்போது விளையும் விபரீத ஒலிகளைப்பற்றி மட்டும் குறிப்பிடவில்லை அவள். அந்த ஒலிகள் அகூதாவின் உபதலைவரான உமது உணர்ச்சிகளைக்கூட உலுக்க வல்லவை. “

பலவர்மனின் சொற்களை மிக அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த இளையபல்லவன் இறுதியாக வினவினான்! “இத்தகைய விழாவை நீங்கள் ஏன் நிறுத்தக்கூடாது?”

“நிறுத்த எனக்குச் சக்தியில்லை!” அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவன் திட்டமாகச் சொன்னான்.

“கலவரத்தை அடக்குவதும் அமைதியை நிலை நாட்டுவதும் உமது கடமையல்லவா?”

“ஆம். “

“பின் ஏன் ஒழுங்கைக் குலைக்கும் மரணத்தை விளைவிக்கும் இந்த விழாவை நடத்துகிறீர்கள்?”

“தலைமுறை தலைமுறையாக இது நடந்து வருகிறது. “

“பழைய பழக்கத்தை மாற்றினால்?”

“இந்தக் கோட்டை தவிடுபொடியாகிவிடும். இந்த விழா இந்த நகரத் தேவதைக்காக ஆடப்படுகிறது. அந்தத் தேவதையால் தங்களுக்குப் பெரும் லாபமும் சுபிட்சமும் கிடைப்பதாக இந்த நாட்டுப் பூர்வகுடிகள் நினைக்கிறார்கள். ஆகையால் இதை நிறுத்த முடியாது. நிறுத்தினால் பதக் சாதியார் இந்த நகரத்தில் புகுந்து இதை அழிப்பார்கள். சூளூக்கள் அரசாங்கத்துக்கு உதவ மாட் டார்கள். பிறகு கடலில் மற்றவர்கள் வைத்தது சட்டம். “

நிலைமையை நன்றாகப் புரிந்துகொண்டான் இளைய பல்லவன். விழாவின் விளைவும் தெள்ளெனப் புரிந்தது அவனுக்கு. அதைத் திட்டமாக விளக்க, “அதுமட்டுமல்ல இளையபல்லவரே! புதிதாக இந்தத் துறைமுகத்துக்குள் காலடி எடுத்து வைக்கும் யாரையும் இங்குள்ளவர்கள் விரும்புவதில்லை,” என்றும் சுட்டிக் காட்டினான் கோட்டைத் தலைவன்.

தனக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை அவன் சுட்டிக் காட்டுகிறானென்பதை உணர்ந்துகொண்ட இளையபல்லவன் சில விநாடிகள் சிந்தனையில் இறங்கினான். பிறகு ஒரு முடிவுக்கு வந்து, “தலைவரே! நிலைமை விளங்கி விட்டது எனக்கு. மரணத்தின் வாயில் எனக்குப் புதிதல்ல. பலமுறை அதை நான் மிதித்து மீண்டிருக்கிறேன். இன்றிரவு நடனத்துக்கு வருகிறேன். மற்ற விஷயங்களை நாளை பேசிக்கொள்வோம்,” என்று கூறிவிட்டு மஞ்சளழகியையும் தலை தாழ்த்தி வணங்கிவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த மஞ்சளழகியின் முகத்திலும் பலவர்மன் முகத்திலும் பெரும் திகில் விரிந்தது. அவன் அன்றிரவு நிகழ்ச்சிக்கு வந்தால் அவன் மரணம் நிச்சயம். அவன் மாண்டால் அகூதாவினால் கோட்டையின் அழிவு நிச்சயம். இந்த இரண்டு நிச்சயங்களையும் எண்ணி எண்ணித் திகிலுக்கு உள்ளா னார்கள் அவ்விருவரும். ஆனால் அன்றைய இரவு நிகழ்ச்சி பெரும் புரட்சியாயிருந்தது. அவர்கள் நினைத்தது வேறு. நடந்தது வேறு. நடந்தது ஒரு கொலை, விளைந்தது வேறு நிலை.

Previous articleRead Kadal Pura Part 2 Ch11 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch13 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here