Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch13 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch13 |Sandilyan | TamilNovel.in

117
0
Read Kadal Pura Part 2 Ch13 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch13 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch13 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 13 : மித்திரபேதம்.

Read Kadal Pura Part 2 Ch13 |Sandilyan | TamilNovel.in

பலவர்மனும் மஞ்சளழகியும் இரவு நடனக் காட்சியில் ஏற்படக்கூடிய பயங்கர விளைவுகளைப் பற்றிப் பலப்பல விதமாகப் பயமுறுத்தியும், அந்த அச்சுறுத்தலைப் பற்றி அணுவளவும் எண்ணிப் பார்க்காமல், “எப்படியும் இன்றிரவு நடன நிகழ்ச்சிக்கு வருகிறேன்” என்று திட்டமாகக் கூறிவிட்டு அவர்களிருந்த அறையை விட்டு வெளியேறிய இளையபல்லவன், விடுவிடுவென்று அக்கோட்டையின் தெருக்களில் நடந்து கடற்கரையை நோக்கி விரைந்தான். அவன் கோட்டைத் தலைவன் அறைக்குள் நுழைந்து நீண்ட நேரம் ஆகிவிட்டதை நினைத்து அவன், அதற்குமேல் வெளிவர வழியில்லை என எண்ணி அவனுக்கு ஒரு முடிவு கட்டிவிட்ட அரண்மனைக் காவலர், அவன் வெகு வேகத்துடன் வெளிப்போந்ததும் சில விநாடி திக்பிரமை பிடித்து நின்றுவிட்டனர்.

அந்த அரண்மனை வீதியில் சதா நடமாடிக் கொண்டிருந்த மற்ற வீரர்களும் இளையபல்லவன் சொந்த வீட்டிலிருந்து வெளியே வருபவன்போல் சர்வசகஜமாக வெளிவந்ததும், பிறகு அவனே கோட்டையின் சொந்தக்காரன் போல் யாரையும் லட்சியம் செய்யாமல் நடந்து சென்றதையும் கண்டு அத்தகைய விசித்திரம் அந்தக் கோட்டையிலும் நிகழ்ந் ததைப் பார்த்து மலைத்து வாயைப் பிளந்துகொண்டு நின்றனர். அவன் கோட்டை மதிலை அணுகிக் கோட்டை வாயில் வழியாக வெளிச் சென்றபோதும், அங்கிருந்த கோட்டை மதில் காவலர் முதலிலெறிந்ததைப் போல் அவன் மீது அம்பெறியாமலும், அவனை எந்த விதத்திலும் தடுக்காமலும் நின்றதன்றி, அவன் எந்த ஜாலவித்தையால் கோட்டைத் தலைவனிடமிருந்து தப்பி வந்திருக்க முடியும் என்பதை எண்ணி எண்ணி விடை தெரியாமல் வியப்பின் வசப்பட்டுச் செயலிழந்து நின்றார்கள்.

கோட்டை வாயிலைக் கடந்து அவன் கடற்கரை மணலில் பிரவேசித்தபோது சூரியன் உச்சிக்கு ஏறி, காலையிலிருந்த உஷ்ணத்தைவிடப் பன்மடங்கு அதிக உஷ்ணத்தை எங்கும் வீசித் தகித்துக் கொண்டிருந்தும், அத்தனை உஷ்ணத்தையும் சட்டை செய்யாத கடற்கரை வாசிகள் மீண்டும் குடிசைகளிலிருந்து அவனை நோக்கி ஓடிவந்து சூழ்ந்து கொண்டார்கள். யவனர், அராபியர், சீனர், தமிழர் எனப் பலவிதமான பிரிவுகளுடைய அந்தக் கூட்டம் அவன் கடற்கரையில் காலையில் கால் வைத்த போது அவனைத் தீவிர விரோதத்துடன் சந்தித்த தென்றால், அந்த உச்சி நேரத்தில் மிகுந்த சந்துஷ்டியுடனும், குதூகலத்துடனும் சந்தித்துப் பெரும் மகிழ்ச்சிக் கூச்சலை இட்டது. கலிங்கத்தின் தங்கக் கப்பலைக் கொள்ளையடிக்கலாமென அவன் காலையில் ஆசை காட்டியதை அந்த மாலுமிகள் மறக்கவில்லை .

அவர்கள் மனைவிமார்களும், மனைவிமார்களைப் போல் அவர்களுடன் வாழ்ந்து வந்த மற்ற பலதரப்பட்ட பெண்களும், அந்தக் கொள்ளையில் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஆடை யாபரணங்களை நினைத்துப் பெரும் கொம்மாளமிட்டார்கள். இளையபல்லவனிடம் நம்பிக்கையும், அந்தக் கூட்டத்துக்குப் பெரிதும் வலுத்திருந்தது. விஷ அம்பு மார்பில் பாய்ந்தும் மாளாத அவனிடம் ஏதோ ஒரு தெய்வீக சக்தி நிச்சயம் இருக்கிறது என்பதை நினைத்தது அந்தக் கூட்டம். அவன் கோட்டைத் தலைவன் மாளிகையிலிருந்து வெளிவந்ததைப் பிரமிக்கத்தக்க ஒரு விஷயமாக மதிக்கவேயில்லை. விஷ அம்பு தைக்க முடியாத மார்பை உடையவனை யாரும் கொல்ல முடியாது என்ற தீர்மானத்துடனிருந்த அந்த மாலுமிக் கூட்டமும், மாதர் கூட்டமும் அவனைச் சுற்றி வளைத்துப் பல கேள்விகளைக் கேட்டார்கள்.

“கோட்டைத் தலைவர் என்ன சொன்னார்?” என்று சிலர் கேட்டார்கள். “நீங்கள் இங்கு தங்குவது நிச்சயம் தானே” என்று மற்றும் சிலர் கேட்டார்கள். “கலிங்கத்துக் கப்பல் எப்பொழுது வரும்? எந்தத் திசையில் வருகிறது?” என்று இன்னும் சிலர் கேட்டார்கள். “அதில் காஷ்மீரத்துப் பட்டிருக்குமா? தமிழகத்துக் காசுமாலை இருக்குமா?” இப்படி இரு பெண்கள் கேட்டார்கள். அவரவர்களுக்குத் தேவையானதை அவரவர்கள் கேட்டார்கள்.

மிகுந்த கொடூர அநாகரிக வாழ்க்கையிலும் ஆசை உந்தியதால் குழந்தைகளைப் போலக் கேள்விகளைக் கேட்ட அந்தக் கூட்டத்தினர் மீது தன் விழிகளைப் பல திக்குகளில் திருப்பிய இளையபல்லவன் அவரவர்களுக்கு இனிப்பான பதில்களைச் சொல்லிக்கொண்டே நடந்தான். “நான் உங்களை விட்டு எங்கும் செல்லப்போவதில்லை. கலிங்கத்தின் கப்பல் சீக்கிரம் வரும், நாம் சேர்ந்து அதைக் கைப்பற்றுவோம்,” என்று மாலுமிகளுக்கும், “காஷ்மீரப் பட்டு என்ன, உலகம் புகழும் தமிழ்நாட்டு மெல்லிய வெள்ளைச் சல்லா, காசு மாலைகள், மகர கண்டிகள், இன்னும் புதுப்புது நகைகள் எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்,” என்று மாதர்களுக்கும் மாறி மாறிச் சொல்லிக் கொண்டு நீர்க்கரையை நோக்கி நடந்தான் இளையபல்லவன்.

அவன் சொற்களைக் கேட்டுக் கொண்டே அவனைச் சூழ்ந்தும், தொடர்ந்தும் வந்த அந்தக் கடற்கரை மாலுமிகள் கூட்டத்தை, நீர்க்கரையை அடைந்ததும் அங்கிருந்த தனது படகில் ஏறு முன்பு திரும்பிப் பார்த்த இளையபல்லவன், சில வினாடிகள் மௌனமாக நின்றான்.

நீர்க்கரையை அடைந்ததும் அவன் சட்டென்று நின்றதும், படகில் ஏறாமல் தங்களை நோக்கித் திரும்பியதையும் கவனித்த மாலுமிகள் கூட்டம் அவன் ஏதோ சொல்ல முயல்கிறானென்பதைக் கண்டதும் சட்டென்று கூச்சலை அடக்கிக் கொண்டது. இளையபல்லவனின் காந்தக் கண்கள் அந்தக் கூட்டத்தை நன்றாக ஊடுருவிப் பார்த்தன. அந்தப் பார்வையால் ஸ்தம்பித்துவிட்ட கூட்டத்தை நோக்கி அவன் இதழ்களிலிருந்து திடமான வார்த்தைகள் உதிர்ந்தன. “நீங்கள் சிறந்த மாலுமிகள் என்பதைப் புரிந்து கொண்டேன். ” என்று தொடங்கினான் இளையபல்லவன்.

அந்தக் கூட்டத்திலிருந்து அதற்குப் பதிலேதும் வரவில்லை. அவன் மேற்கொண்டு என்ன சொல்லப் போகிறானென்பதை எதிர்பார்த்து நின்றார்கள் அந்த மாலுமிகள். இளையபல்லவன் வார்த்தைகள் இரும்பைக் கொண்டு இரும்பிலடித்தால் ஏற்படக்கூடிய தொனியுடனும் உறுதியுடனும் மீண்டும் கிளம்பின. “உங்களை வீணாகப் புகழவோ உங்கள் தயவைச் சம்பாதிக்கவோ நான் இதைச் சொல்லவில்லை. யார் தயவும் எனக்குத் தேவையுமில்லை. நான் அகூதாவின் உபதலைவன். என்னுடைய தாரைகள் ஊதப்பட்டதிலிருந்தே அதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள்,” என்றான் இளைய பல்லவன்.

இந்த வார்த்தைகளைக் கேட்டதும், அந்தக் கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. சிலர் பயத்தால் நடுங்கவும் செய்தார்கள். அந்தப் பயத்தைத் தூண்ட மேற்கொண்டு சொன்னான் இளையபல்லவன், “உங்கள் கோட்டைத் தலைவன் என்னைக் கொல்லவில்லை; சிறை செய்யவில்லை; மீண்டும் சுதந்திரமாக நான் எனது கப்பலை நோக்கிப் போகிறேன்.

ஏன் தெரியுமா? கோட்டைத் தலைவனிடம் சொன்னதை உங்களிடமும் சொல்லுகிறேன், கேளுங்கள். இந்த அக்ஷயமுனையில் எனக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால் இதை அழித்து விடுவதாக அகூதா சபதம் செய்திருக்கிறார். என்னை அழிப்பது இந்தக் கோட்டையை அழிப்பதாகும். ஆனால் இந்த அழகிய கோட்டையையும், நகரத்தையும் அழிக்கும் விருப்பம் எனக்குமில்லை, அகூதாவுக்குமில்லை. அக்ஷய முனை பலப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இங்கு எல்லோருக்கும் சுபிட்சத்தில் சம பங்கு வேண்டும் என்று நினைக்கிறோம். கோட்டைக்குள் மாட மாளிகைகளும் வெளியே குடிசைகளும் இருக்கக்கூடாது என்று எண்ணுகிறோம்.

இதைச் சொன்ன இளைய பல்லவன் அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் குடிசைகளையும் நோக்கி, கோட்டைக்குள்ளிருந்த பெரும் கட்டடங்களையும் நோக்கினான். அவன் பேச்சும் பார்வையும் அந்தக் கொள்ளைக்காரரிடை பெரும் சலசலப்பை உண்டாக்கின. அதைத் தூண்ட இளையபல்லவன் மேலும் பேச்சைத் தொடர்ந்து, “நீங்கள் கடலோடுகிறீர்கள். உயிரைப் பணயம் வைத்துக் கொள்ளையடித்துச் செல்வத்தைக் கொண்டு வருகிறீர்கள்.

உங்களால் அதோ அந்தக் கோட்டை செழித்திருக்கிறது, நீங்கள் செழிக்கவில்லை , ஏன்?” என்று கேட்ட இளையபல்லவன் மீண்டும் அவர்களைக் கூர்ந்து நோக்கினான். பிறகு இகழ்ச்சிப் புன்முறுவல் செய்து கூறினான். “இருப்பினும் கோட்டைத் தலைவனை எதிர்க்க உங்களுக்கு அச்சமிருக்கிறது. காரணம் பல தந்திரங்களால் அவன் உங்கள் பணத்தைப் பறித்து விடுகிறான். உங்கள் வீரத் தலைவர்களை அப்புறப்படுத்தி விடுகிறான். அந்தப் பயத்தை நீக்கவும், இந்த அநீதியைத் தவிர்க்கவும் நான் இங்கு தங்கத் தீர்மானித்திருக்கிறேன். கோட்டைக்குள் அல்ல, உங்கள் குடிசைகளுக்கு நடுவில் எனது குடிலும் அமையும்.

இனி நாம் சகோதரர். ஆபத்திலும், சம்பத்திலும், கஷ்டத்திலும், நஷ்டத்திலும் சகோதரர்” என்று பெரும் உணர்ச்சியுடன் கூவிய இளையபல்லவன் தன் கரத்தை உயரத் தூக்கினான். அதே கணத்தில் அந்த மாலுமிகள், அவர்கள் துணைவிகள் அத்தனை பேர்கரங்களும் உயர்ந்தன! “ஆம், ஆம்,” “சகோதரர், சகோதரர்!” என்று பலவிதக் கூச்சல்கள் வானைப் பிளந்தன.

அத்துடன் படகில் ஏற முற்பட்ட இளையபல்லவன் கடைசியாக அவர்களை நோக்கிச் சொன்னான்: “இரவு நடன நிகழ்ச்சிக்கு நானும் வருகிறேன்,” என்று. இதைக் கேட்டதும் அந்தக் கூட்டத்தில் சட்டென்று கூச்சல் நின்றது. நிசப்தம் நிலவியது. அச்சம் அவர்கள் இதயங்களைக் கவ்விக் கொண்டதைக் கவனித்த இளையபல்லவன், “அச்சத்தை விடுங்கள். உங்கள் அச்சம் எதிரிகளின் பலம், ‘பதக்’குகளா யிருந்தாலென்ன, ‘குளூ’க்களாயிருந்தாலென்ன, அவர்களும் மனிதர்கள் தானே? என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். நாமனைவரும் ஒரே கூட்டம், கொள்ளைக் கூட்டம் என்பது நினைவிருக்கட்டும். நம்மில் யாராவது ஒருவரைத் தொட்டால் பலபேர் காவு ஆவது நிச்சயம். என் மாலுமிகளையும் இரவு நிகழ்ச்சிக்கு அழைத்து வருகிறேன். பயப்படாதீர்கள்.

இன்றிரவு நிகழ்ச்சி நீங்கள் இதுவரை காணாத புது நிகழ்ச்சியாயிருக்கும். புது சகாப்தமொன்று இன்று இந்த அக்ஷயமுனையில் உதயமாகும்” என்று சீறிய குரலில் கூறிவிட்டுப் படகிலேறினான் இளைய பல்லவன். படகோட்டிகள் துடுப்புகளைத் துழாவினார்கள். படகு அவன் மரக்கலத்தை நோக்கி விரைந்தது. அதைப் பார்த்துக் கொண்டே அந்தக் கொள்ளைக்கூட்டம் நீர்க்கரையில் நீண்ட நேரம் நின்றிருந்தது. அதற்குப்பின் அவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்ற இளையபல்லவன், தன் மரக்கலத்தைப் பெரும் சந்துஷ்டியுடன் அடைந்தான்.

அன்றைய நிகழ்ச்சிகள் அவனுக்குப் பெரும் ஆறுதலையளித்தன. பலவர்மன், மஞ்சளழகி, கடற்கரைக் கொள்ளைக் கூட்டம் இந்த மூன்று தரப்பட்ட பிரிவுகளை எண்ணிப் பார்த்து ஒவ்வொன்றையும் தான் ஓரளவு சமாளித்துக் கொண்டு வந்துவிட்டதை நினைத்து மனசாந்தி அடைந்தான். அன்றிரவு நடன நிகழ்ச்சியில் சொர்ணத் தீவின் பூர்வகுடிகளால் ஏற்படக்கூடிய ஆபத்துக்குத் தான் பரிகாரம் தேடிவிட்டதை எண்ணிப் பார்த்து மகிழ்ச்சியும் அடைந்தான். “நான் சொன்னதைக் கடற்படை மாலுமிகள் அவசியம் எண்ணிப் பார்ப்பார்கள். குறை எனும் விதையை அவர்கள் இதயத்தில் விதைத்திருக்கிறேன்.

இரவுக்குள் அது மரமாக வளராவிட்டாலும் கண்டிப்பாய்ச் செடியாகவாவது வளர்ந்துவிடும். தற்சமயம் இந்த மித்ரபேதம் போதும். கோட்டைத் தலைவனிடம் இவர்களுக்குள்ள அச்சத்தை அறுத்து அதிருப்தியை உண்டாக்கினாலே அக்ஷயமுனைப் பாதுகாப்பு இரண்டாகப் பிளக்கும். இடையே நான் நுழைவேன்” என்று எண்ணமிட்டவாறே நூலேணியில் ஏறி மரக்கலத்தின் தளத்தில் காலை வைத்த இளையபல்லவனை அமீரும் கண்டியத்தேவனும் கையைப் பிடித்துத் தூக்கி விட்டார்கள்.

அப்படித் தன்னைத் தூக்கிவிட்ட அந்த இருவர் முகத்திலும் இருந்த வியப்புக் குறியைக் கண்ட கருணாகர பல்லவன் கேட்டான், “ஏன் நான் திரும்பி வந்தது வியப்பா யிருக்கிறதா உங்களுக்கு” என்று.

“அதுமட்டுமல்ல வியப்புக்குக் காரணம். அந்தக் கொள்ளைக் கூட்டத்தார் உங்களிடம் நீண்ட நாள்கள் பழகியவர்களைப்போல் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்களே, அதுவும் விசித்திரமாயிருந்தது,” என்றான் அமீர்.

கண்டியத்தேவனும் ஏதோ கேள்வி கேட்க முற்பட்டான். “கண்டியத்தேவரே! சூரியன் உச்சியை எட்டி விட்டான். உணவருந்திக் கொண்டே பேசுவோம்,” என்று அவன் கேள்வி பிறக்குமுன்னரே தடுத்துவிட்ட கருணாகர பல்லவன் தன் அறையை நோக்கி அந்த இருவரும் பின் தொடர நடந்தான்.

அறையில் மறுஉடையணிந்து, அமீர், கண்டியத்தேவன், கூலவாணிகன் சேந்தன் முதலியோருடன் உணவருந்த உட்கார்ந்த இளையபல்லவன் மிகவும் நிதானமாகவும் அவர்கள் மனத்தில் ஆழ்ந்து படியும்படியாகவும், தான் கப்பலிலிருந்து புறப்பட்டது முதல் நடந்த நிகழ்ச்சிகளை விவரித்தான். அவன் பேசுவதைச் சிறிதும் தடை செய்யாமல் கேட்டு வந்த அமீரும், மற்றோரும் உள்ள நிலைமையைத் தெள்ளெனப் புரிந்துகொண்டனர்.

இளையபல்லவன் எத்தனையோ சாமர்த்தியமாகக் காரியங்களைச் சாதித்திருந்தாலும் அந்தப் பயங்கரத் துறைமுகத்திலுள்ள ஆபத்து எல்லையற்றது என்பதையும், அன்றிரவு நிகழ்ச்சியும் அத்தனை சாமான்யமாகக் கடக்கக்கூடியதல்ல வென்பதையும் அவர்கள் புரிந்துகொண்டார்களாகையால் அவர்கள் முகங்களில் கவலை பெரிதும் தாண்டவமாடியது. அந்தக் கவலைக் குறியைக் கவனித்த இளையபல்லவன் சொன்னான்: “அமீர்! மிகவும் பயங்கரமான அபூர்வ குடிகளும், கொள்ளைக் கூட்டமும் வஞ்சகத்தில் இணையற்ற ஒரு கோட்டைத் தலைவனும் உள்ள இடத்துக்கு நாம் வந்திருக்கிறோம். இருப்பினும் கலிங்கத்தின் கடலாதிக் கத்தை ஒழிக்க இதைவிடச் சிறந்த இடம் கிடையாது.

சொர் ண பூமியின் இந்த அக்ஷயமுனை வடக்கு நோக்கித் தனது மூக்கை நீட்டிக்கொண்டு பாலூரிலிருந்து கடாரம் செல்லும் மரக்கலங்களை மோப்பம் பிடிப்பதுபோல் அமைந்திருக்கிறது. இது ஒன்றுதான் நமது லட்சியத்துக்குத்தகுந்த தளம். ஆகவே இங்குள்ள ஆபத்தை நாம் சமாளித்துத்தான் ஆகவேண்டும். சரியான ராஜதந்திரத்தாலும், வீரத்தாலும் ஆகாத காரியங்கள் உலகில் எதுவும் கிடையாது. இதை நினைப்பில் வைத்துக்கொள்ளுங்கள். இங்கு பலவர்மன் ஆதிக்கம் ஒழிந்து என் ஆதிக்கம் நிலைக்க வழிவகுக்கும் பொறுப்பை எனக்கு விட்டுவிடுங்கள். “

அமீர் பதிலேதும் சொல்லவில்லை. கண்டியத்தேவன் மட்டும் சொன்னான்: “எப்படியும் நாம் இங்கு தங்கித்தான் ஆகவேண்டும். நமது மரக்கலம் மீண்டும் கடலில் நீண்ட தூரம் பயணம் செய்யமுடியாது. அதைப் பழுது பார்க்க அவசியமிருக்கிறது,” என்று.

அக்ஷயமுனையில் தங்குவதற்கு அமீருக்கு ஏதாவது ஆக்ஷேபணையிருந்தால் அது கண்டியத்தேவன் பேச்சுடன் நின்றுவிட்டது. ஆகவே அடுத்துச் செய்யவேண்டியது என்னவென்பதை அறிய அவன் கருணாகரனை நோக்கித் தன் பெருவிழிகளைத் திருப்பினான். கருணாகர பல்லவனின் கட்டளைகள் திட்டமாயிருந்தன. “சேந்தா! நமது பொக்கிஷப் பெட்டிகளில் நகைகளும் சிறந்த குறுவாள்களும் வேறு ஆயுதங்களும் எத்தனை இருக்கும்?” என்று வினவினான் இளையபல்லவன், தன் கட்டளையை இடுமுன்பு.

“பாலித் தீவில் தங்களுக்குக் கிடைத்த பொக்கிஷத்தைத் தவிர, அவ்வப்பொழுது அகூதா கொடுத்ததே இரண்டாயிரம் பேருக்கு வழங்கலாம். நாலு பெட்டி நகைகள் இருக்கின்றன. இரண்டு பெட்டி பட்டாடைகள், இரண்டு பெட்டி விலை உயர்ந்த ஆயுதங்கள் இருக்கின்றன. எல்லாம் பல லட்சம் பொற்காசுகள் பெறும்” என்றான் கூலவாணிகன் சேந்தன்.

“அவற்றில் ஒரு பெட்டி நகைகளையும், ஒரு பெட்டி பட்டாடைகளையும் கரைக்குக் கொண்டு சென்று கொள்ளைக் கூட்டத்தாருடன் இருக்கும் பெண்களுக்கு வழங்கிவிடு. அமீரையும் அழைத்துப் போ. தகுதிக்குத் தக்கபடி ஆபரணங்களைக் கொடு. கொள்ளைத் தலைவர்களுக்குக் குறுவாள்களைப் பரிசாக அளி. இரவு நாட்டியத் தின்போது அவர்கள் அழகு என் கண்களைப் பறிக்க வேண்டுமென்று பெண்களிடம் சொல்,” என்று உத்தரவிட்டான் கருணாகர பல்லவன்.

அமீரும், சேந்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். உணவை முடித்துக் கொண்ட இளைய பல்லவன் அவர்கள் யாரையும் கவனிக்காமல், எழுந்து அறையை விட்டுத் தளத்துக்குச் சென்றான். அமீரும் சேந்தனும் ஏதோ ஆழ்ந்த யோசனையுடன் இளைய பல்லவன் நடந்து கொள்கிறானென்பதை மட்டும் புரிந்து கொண்டார்களேயொழிய அது என்னவாயிருக்கக்கூடும் என்பதை மட்டும் அறிய அவர்களால் முடியவில்லை.

ஆகவே சொன்னபடி உத்தரவை நிறைவேற்றுவதில் முனைந்தார்கள். அடுத்த சில நாழிகைகளுக்கெல்லாம் பெரும் மரப்பெட்டிகளிரண்டு கப்பலிலிருந்து படகில் இறக்கப்பட்டுக் கரையை நோக்கி விரைந்தன. மீண்டும் படகு வருவதைக் கவனித்ததும் ஆரவாரத்துடன் ஓடிவந்த கொள்ளைக் கூட்ட ஆண்களும், பெண்களும் அமீரும் சேந்தனும் வழங்கிய பரிசுகளைப் பெற்று நானாவிதமாக மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர். கப்பலின் தளத்தில் நின்று தங்களைக் கவனித்துக் கொண்டிருந்த இளையபல்லவனை நோக்கிக் கைகளை ஆட்டிக் கூச்சலிட்டு நன்றி தெரிவித்தனர். பட்டாடைகளைச் சிலர் விசிறி ஆகாயத்தி லெறிந்து பிடித்தார்கள். சில அழகிகள் முத்து மாலைகளைக் கொண்டையில் வைத்து அழகு பார்த்தார்கள்.

கடற்கரையில் சூரியனின் மிதமிஞ்சிய வெப்பத்திலும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு புன்முறுவல் செய்த இளையபல்லவன் மிகுந்த திருப்தியுடன் தன் அறைக்கு மீண்டான். மீண்டவன் பஞ்சணையில் படுத்து நன்றாக உறங்கினான். அதிகக்களைப்பால் நீண்ட நேரம் உறங்கிவிட்ட அந்தத் தமிழகப் படைத் தலைவன் மஞ்சள் வெயில் அடிக்கத் தொடங்கிய சமயத்திலேயே கண்விழித்து மறுபடியும் தளத்துக்கு வந்து கடற்கரையை நோக்கினான்.

நோக்கியவன் நோக்கிக் கொண்டே நின்றான். கண்களை இருமுறை கசக்கிப் பார்த்தான். கடற்கரை பழைய கடற்கரையாயில்லை. அங்கிருந்த குடிசைகள் மாயமாய் மறைந்துவிட்டன. இருப்பது அக்ஷயமுனையே அல்லவென்று தோன்றியது அவனுக்கு. பிரமிப்பு அவன் முகத்தில் மேலும் மேலும் படர்ந்தது.

Previous articleRead Kadal Pura Part 2 Ch12 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch14 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here