Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch15 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch15 |Sandilyan | TamilNovel.in

190
0
Read Kadal Pura Part 2 Ch15 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch15 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch15 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 15 : நடனமாடினாள்!

Read Kadal Pura Part 2 Ch15 |Sandilyan | TamilNovel.in

வண்ணமதி வெள்ளிக் கிண்ணமென பின்னணி வானத்தில் எழுந்து நிற்க, அதன் வெண்ணொளியிலும் மறைய மறுத்த தாரகைகளில் சில கண் சிமிட்டி மண்டபத்தை உற்று நோக்க, வைத்த கண் வாங்காத மனிதக் கடல் மதிமயங்க, தேவலோக ரம்பைபோல் மேடைமீது பறந்து வந்த மஞ்சளழகி தலை தாழ்த்தி அந்தக் கூட்டத்தை வணங்கிக் கொண்டே, தன் மஞ்சள் நிற மங்களப் பாதங்களை மெள்ள மெள்ளத் தட்டித் தட்டிச் சதங்கையொலி ஜல்ஜல் என்று எங்கும் ஒலிபரப்ப, சிலம்பிலிருந்த முத்துப்பரல்கள் குலுங்கிக் குலுங்கி அதற்கு ஆதார சுருதி கூட்ட, தனது நடனத்தைத் துவங்கினாள்.

திக்குகள் நிர்மலமாயிருந்தன. எதிரேயிருந்த மனிதக் கடலுக்குப் புறம்பேயிருந்த அலைகடல்கூடத் தனது அலைகளின் சத்தத்தைப் பெரிதும் அடக்கிக்கொண்டு அந்த வண்ண மயிலின் கால் தாளத்துக்குச் சரியாக அலைகளைத் தரைமீது ‘சர்சர்’ரென்று தாக்கிக் கொண்டிருந்தது. அவள் மென்மையான பாதத்தின் அசைவினால் ஏற்பட்ட சதங்கை, சிலம்பு இவற்றின் இன்னிசை ஒலிகள் மட்டும் பின்னணி வாத்தியங்களின் லேசான ஸ்வர ஜாலங்களுடன் இழைந்து இழைந்து மேலெழுந்து நாதப் பிரம்மத்தை எங்கும் பரப்பத் தொடங்கின.

மஞ்சளழகியின் நடனத்தின் சொகுசை இன்பத்தை, சற்றுப் பலமாகத் தொட்டாலும் கெட்டுவிடக்கூடிய புஷ்ப இதழ்கள் போன்ற பாத விரல்களின் மென்மைத் தன்மையை உணர்ந்து கொண்ட பின்னணி வாத்தியங்கள் சுகத்தின் இருப்பிட மாக மிக மெதுவாகச் சப்தித்தன.

காமேலான் என்று சொர்ணத் தீவினர் அழைத்து வந்த அந்த நடன வாத்தியக் கோஷ்டியில் பெரும் தாளங்கள் இருந்தன. மிருதங்கத்தைவிடப் பெரிதும் பலமானவையுமான சரும வாத்தியங்கள் இருந்தன. புல்லாங்குழல் இல்லா விட்டாலும் அதைப்போல் துவாரங்களையுடைய நீளக்குழல் வாத்தியங்கள் இருந்தன. இவையனைத்துக்கும் தலைமை வகித்து வழி காட்ட ஒற்றைத் தந்தி வாத்திய மொன்றும் இருந்தது.

இத்தனை நாள், தோல் வாத்தியங்கள் சேர்ந்தும் அவற்றைக் கையாண்ட பின்னணி இசைப்பாளர்கள் அவற்றிலிருந்து கடுமை கடுகளவும் இல்லாத சுகமான நாதங்களையே எழுப்பினார்கள். ‘சொகசுகா மிருதங்கதாளமு’ என்று பிற்காலத்தில், தியாகய்யர் சங்கீதத்தில் சுகத்தின் அவசியத்தைக் குறிப்பிட்டுத் தாளமும், சரும வாத்தியங்களுங்கூட சொகுசாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியதற்கு முற்கால அத்தாட்சியாக விளங்கின அந்தப் பின்னணி வாத்தியங்கள்.

மஞ்சளழகி மேடைமீது பறந்து வருமுன்பே அங்கு தோன்றிவிட்ட பின்னணி வாத்தியக்காரர்கள், பெண் குரலில் அதிக சுருதிக்குத் தக்க சுருதி அமைத்து மேல் ஷட்ஜத்தில் பாதி வாத்தியங்களையும், நேர் கீழ் ஷட்ஜத்தில் மற்றப் பாதி வாத்தியங்களையும், சுருதி கூட்டி ஒலிக்க விட்டதால் கீழே ‘பூம்பூம்’ என்ற சரும வாத்தியங்களின் ஆதார நாதமும், மேலே தந்தி வாத்தியம், நீள் குழல் வாத்தியங்கள், தாள வாத்தியங்கள் இவற்றின் கிண்கிண்கிணி ரீங்கார சப்தமும் கலந்து கிளம்பி நானாவித ஸ்வர ஜாலங்கள் கடற்கரை பூராவையும் ஆக்கிரமித்துக் கொண்டன. அப்படி எங்கும் பரவி நின்ற நாத வெள்ளத்தின் அபூர்வ சக்தியால் இழுக்கப்பட்ட தேவ அரம்பையென மேடைமீது மஞ்சளழகி வந்தாள்; வணங்கினாள்; பாதசர ஒலிகளைக் கிளப்பினாள்.

அந்த ஒலிகள், மெல்ல மெல்லக் கிளம்பின. கிளம்பிக் காற்றில் பறந்து வந்தன. வந்து புகுந்தன, பரவின, எதிரேயிருந்த மனித இதயங்களில், சித்தங்களில். காதுகள் மார்க்கம்தான், அனுபவம் இதயத்துக்கும் சித்தத்துக்குமே என்ற தத்துவம் அனைவருக்கும் புரிந்தது. நாதத்துக்குப் பேதமில்லை. கொள்ளையரையும் கோட்டைக்காவலனையும், அங்கிருந்த நல்லவர் பொல்லாதவர் அனைவரையும் அது ஆட்கொண்டது. அந்தக் கூட்டம் முழுமையும் நாதத்தின் வசப்பட்டது. சதங்கையொலி அனைவர் சித்தத்திலும் ஜல்ஜல் என்று ஒலித்தது.

திடீரென்று துவங்கிவிட்ட அந்த நடனத்தைக் கண்டதும் சில விநாடி பிரமித்து நின்றுவிட்டான் இளையபல்லவன். அந்தப் பிரமிப்பு அந்தச் சில விநாடிகளுக்குப் பிறகும் மாறாது அவன் மனத்தைப் பரிபூர்ணமாகப் பற்றிக்கொள்ளவே, பலவர்மன் காலடியிலேயே உட்கார்ந்து மேடைமீது நிகழ்ந்துகொண்டிருந்த அற்புதத்தைக் கவனித்துக்கொண்டிருந்தான். நடன உடையில் மஞ்சளழகி மோகனாகாரமாக விளங்கினாள்.

நடன உடைக்காக அவள் பிறந்தாளா, அவள் பிறக்கப்போகிறாள் என்பதை அறிந்தே அந்த நடன உடை சிருஷ்டிக்கப்பட்டதா என்பதை நிர்ணயிக்க முடியாத வண்ணம் அத்தனை அமைப்பாகவும் பிரமிக்கும்படியாகவும் அவளைப் பற்றி நின்றது அந்த உடை. பாரத நாட்டில் அணியப்படும் நடன உடை போன்றதல்ல அது. ஆனால் முழுவதும் வேறு நாட்டு உடையாகவும் அது தெரியவில்லை! பாரதத்தின் அமைப்பு ஓரளவு புகுந்து நின்றது.

அதில் மட்டுமல்ல, அந்தப் பின்னணி இசையிலும் பாரதம் உறைந்து கிடந்தது. பாரதத்தின் நாகரிகம் ஆத்மாவாக இருந்தது. உடலில்தான் சிறு வித்தியாசங்கள். ஆனால் அந்த வித்தியாசங்களிலும் ஒரு புதுமையும் இன்பமும் இருந்தது.

மஞ்சளழகியின் சின்னஞ்சிறு இடையைக் கொஞ்சங் கூட அனுதாபமில்லாமல் இறுகப் பிடித்திருந்த பட்டாடை பாவாடைபோல் கீழே பாய்ந்து சென்று பாதங்களுக்கு இரண்டு சாண்களுக்கு முன்னதாக நின்றுவிடவே, அவள் பாதங்கள் மட்டுமின்றி அழகிய கணுக்காலும் ஆடுசதையின் அடிப்பாகமும் கண்ணுக்குப் புலப்பட்டுக் கொண்டிருந்தன. இடுப்புக்கு மேலே இடைஞ்சலிரண்டின் மீது தாவிச் சென்ற மெல்லிய மேலாடை அவள் இடது தோள் வழியே பாய்ந்து வர அதன் கடைசிப் பாகத்தை மஞ்சளழகி தன் இடது கையை வளைத்து ஏந்தி நின்றாள். தலையின் அழகிய குழல்களை அணைத்து நின்றது வெண்மையான கற்கள் வைத்த கிரீடமொன்று.

அந்தக் கிரீடத்துக்கு மேலே படிப்படியாக எழுப்பப்பட்ட குழல் கொண்டையை மும்முறை வலம் வந்தது முத்து மாலையொன்று. அந்த முத்து மாலைக்குக் கீழிருந்த கிரீடத்தின் முகப்பிலிருந்து இழுத்து விடப்பட்டிருந்த சல்லாவினும் மெல்லிய சின்னஞ்சிறிய சீனத்துச் செம்பட்டு ஒன்று கிரீடத்திலிருந்து புறப்பட்டு அவள் அழகிய வலது தோளில் தொங்கித் தடவிக் கொண்டிருந்தது. அவள் பழைய கால முறைப்படி மார்புக்குக் கச்சையே அணிந்திருந்ததால் அவள் கழுத்தும் மார்பின் ஆரம்பமும் மயக்கமான காட்சியைத் தந்தன. கரங்கள் தோளிலிருந்து திறந்தே கிடந்தன. கைகளிரண்டிலும் கல் வளையல்கள் பல மின்னிக் கொண்டிருந்தன.

அவள் அணிந்திருந்த ஆபரணங்களும் சரி, ஆடைகளும் சரி, அவள் ஒவ்வோர் அழகையும் பூர்ணமாக எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தன. அவள் கழுத்தில் அணிந்திருந்த நவரத்தின மாலையொன்று நீளமாக மார்பில் தொங்கி அவள் அசைய அசைய ஆசையுடன் அப்படியும் இப்படியும் அடையாளம் காட்டிக்காட்டி அசைந்தது. ஆடவர் மதிமயங்க, பெண்டிர் பொறாமை கொள்ள வைத்தது.

அவள் பாதங்கள் மண்டப மேடையில் மெள்ள மெள்ள அசைந்தன. விரல்கள் எழுந்து எழுந்து கீழ்ப் பலகையை மெல்ல மெல்லத் தட்டின. ஜதியின் அந்த அசைவில் அவள் பாதத்தின் மீது தீட்டப்பட்டிருந்த செம்பஞ்சுக் குழம்புகூட அசைவதாகத் தோன்றியது இளையபல்லவனுக்கு. எழுந்து எழுந்து தாழ்ந்த பாதங்கள் சட்டென்று ஒரு புறம் வளைந்தன. கணுக்கால் பட் பட்டென்று திரும்ப மேலிருந்த ஆடு சதைகள் அசைந்தன. மஞ்சளோடிய வழவழத்த அந்த ஆடுசதைகளின்மீது பின்னாலிருந்து பாய்ந்த சந்திரனின் வெண்மைக்கிரணங்கள், அவற்றுக்கு மஞ்சளோ வெளுப்போ இல்லாத ஏதோ ஒரு மோகனப் புது நிறத்தை அளித்துவிட்டதாகத் தோன்றியது இளையபல்லவனுக்கு. அந்தக் கால்களிலிருந்து கண்ணை மேலுக்கு உயர்த்தக்கூட சக்தி இல்லாமல் அவன் உட்கார்ந்திருந்தான். அவள் அசைவுகள் மேலே ஏறஏறத்தான் அவன் கண்களும் உயர்ந்தன.

முதன் முதலில் தலைவணங்கிப் பாதங்களை மட்டும் தட்டி நடனத்தைத் துவங்கிய மஞ்சளழகி மெல்ல மெல்ல அசைவுகளை மேலுக்குக் கொண்டு சென்றாள். கணுக்காலும் கணுக்காலுக்குப் பிறகு பாவாடைக்குக் கீழே தெரிந்த ஆடுதசையும் அசைந்த அதே நேரத்தில் வணங்கிய தலையுடன் மெள்ளத் தன் சிற்றிடையை வளைத்தாள். அவள் இடை அசைந்தது. அதை அடுத்து அவள் உடலின் ஒவ்வொரு பாகமும் அசையத் தொடங்கியது. நீண்ட கால சாபத்தின் வசப்பட்டுக் கல்லாகிக் கிடந்த தேவலோக ரம்பை திடீரென சாபம் நீங்கி முழுத்துடிப்புடன் எழுவது போல மஞ்சளழகி தலையை நிமிர்ந்து எழுந்தாள்.

அவள் உடல் பூராவும் நடனக் கலையால் புதுமையான உயிர்த்துடிப்பைப் பெற்றது போல் உணர்ச்சி வேகத்தில் அசைந்தது. அழகுகளின் திண்மையும் மென்மையும் மஞ்சளோடிய வெண்மையுங்கூட ஓரளவு புலப்பட்டன. கலையெனும் உயிர் அவள் உடலில் ஊடுருவி வெகு வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. அந்த வேகத்தில் அவள் அங்கங்கள் துரிதமாக பாவங்களை வெளியிட்டன. கண்கள் பின்னணி இசைப் பாவங்களை ஒட்டிச் சுழன்றன, சிமிட்டின, வெட்கப்பட்டன, வருத்தப்பட்டன.

புருவங்கள் நிமிர்ந்தன, தாழ்ந்தன, சுருங்கின, விரிந்தன. தலை ஒருபுறம் சாய்ந்தது பிறகு நிமிர்ந்தது. இடை திடீரெனத் துவண்டது, திடீரென நிமிர்ந்தது. நவ ரஸங்களும் அந்த ஆரம்ப ஜதியிலேயே தாண்டவமாடத் துவங்கின. மெள்ள ஆரம்பித்த ஜதிகள் தாளங்களில் காலப் பிரமாணம் மாற மாற அதிக வேகம் பெற்றன. வேகம் பெறப் பெற அவள் அழகிய உடல் வேகம் பெற்றது. ஆட்டத்தில் எழில்கள் துடித்தன. துடித்தது அவள் எழில் மட்டுமல்ல, பார்த்துக் கொண்டிருந்தவர்களின் இதயங்களுந்தான்.

அவள் திடீரென நடனத்தின் போக்கை மாற்றி இடை துவளச் சாய்ந்து சாய்ந்து சோகத்தால் ஆடினாள். கண்கள் பஞ்சடைந்து விட்டன போல் தோன்றின. அவள் கால்கள் கூட தளர்ந்துவிட்டனவா! ஐயோ! அவள் மேடை மீது விழுந்துவிடப் போகிறாளே! இந்தப் பயம் கூட்டத்தைக் கவ்விக்கொண்டது. பயத்தை உயர்த்த பின்னணி மேல் ஸ்தாயி வாத்தியங்கள் தாழ்ந்து கீழ் ஸ்தாயி சரும வாத்தியங்கள் மட்டும் பயங்கர ஒலிகளைக் கிளப்பின. கூட்டம் மூச்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது. பளீரென்று அவள் நடனத்தை மாற்றினாள். அவள் கண்கள் திடீரெனப் பளிச்சிட்டன. முகவாட்டம் எங்கோ மறைந்தது.

குறுகிக் கிடந்த புருவங்கள் பழையபடி எழுந்து வளைந்தன. மாணிக்கக் கனி வாயிதழ்கள் மலர்ந்தன. ஆனந்தத்தின் சாயைகளைக் காட்டத் தொடங்கினாள் மஞ்சளழகி. அவள் இடை நெகிழ்ந்தாலும் உடல் நிமிர்ந்தது. கலகலவென ஒரு சிரிப்பும் உதிர்ந்தது அவளிடமிருந்து. பின்னணி இசையும் அவள் கால் சதங்கையும் அந்தச் சிரிப்புக்கு எப்படித்தான் ஒத்துப் பாடின!

அவள் அங்கங்கள் ஆனந்த உயிர் பெற்றன. வாத்தியங் களின் வேகமும் சப்தமும் அதிகரித்தன. கிர்ரென்று அவள் ஒருமுறை மண்டபத்தின் நடுவில் சுழன்றாள். பாவாடை சக்கரவட்டமாகக் கூட்டத்தின் முன்பு விசிறி எழுந்து படிந்தது. மேலாடை படிந்தபடியே சற்றுப் பறந்தது. தலையில் கிரீடத்தில் தொங்கிய மெல்லிய பட்டும் மந்த மாருதத்தில் மெல்லப் பறந்தது. ஒருமுறை சுழன்றவள் மற்றுமிருமுறை சுழன்றாள். பிறகு காலைத் தட்டித்தட்டி, கைகளைக் கொட்டிக் கொட்டி, மேடைமீது அசைந்து அசைந்து, நடந்து நடந்து, நின்று நின்று ஆடினாள். பின்னணி வாத்தியங்கள் பீறிட்டு எழுந்தன. கூட்டத்தின் மௌனமும் கலைந்தது.

அவள் உயிர் பெறக் கூட்டம் உயிர் பெற்றது; அவள் கால் தட்டலுக்கும் கைக் கொட்டலுக்கும் சரியாகக் கொள்ளைக்காரர்கள் கைத்தாளம் போட்டார்கள். அவள் அசைய அசைய அவர்களும் அசைந் தார்கள். அவர்கள் கைத்தாளம் அந்தக் கடற்கரை பூராவும் பரந்து அலைகளின் சத்தத்தைக்கூட அடக்கிவிட்டது. அந்தச் சத்தம் உச்சஸ்தாயியை அடைந்து கொண்டிருந்தது. வெறி பிடித்த கொள்ளைக்காரர் விட்ட பெருமூச்சும் ஹூங்கார சப்தமுங்கூடப் பின்னணி வாத்திய ஒலிகளை அடக்கும் ஸ்திதிக்கு வந்தது. அத்துடன் அந்த நாட்டியம் முடிந்தது என்று நினைத்தான் இளையபல்லவன். அந்த நினைப்பு எத்தனை தவறு என்பதை அடுத்த விநாடி புரிந்துகொண்டான். நடனத்தால் மனிதர்களைத் தன் இஷ்டப்படி வளைக்கவல்ல மஞ்சளழகி சரேலென நடன முறையை வேறு வழியில் திருப்பினாள்.

கொள்ளையர் வெறிக்கூச்சலுக்கும் கைத் தாளத்துக்கும் இடையே எழுந்த இனிய குரல் மந்தமாருதத்தில் பறந்து வந்தது. கைத்தாளங்கள் சரேலென அடங்கின. வெறிக்கூச்சல் மறைந்தது. எதிர்பார்க்க முடியாத அமைதியும் மௌனமும் மீண்டும் அந்தக் கடற்கரையை ஆட்கொண்டது. மஞ்சளழகியின் இனிய குரல் ஸ்தாயியில் எழுந்தது வேறு எந்த சாரீரமும் எட்டமுடியாத இடங்களைத் தொட்டுத் தொட்டுக் காட்டியது. பல வீணைகளும் குழல்களும் ஒலித்தாலும் கொடுக்க முடியாத இன்பத்தை அவள் குரல் கொடுக்கத் துவங்கியது. பின்னணி வாத்தியங்கள் அப்பொழுதும் முழங்கிக் கொண்டுதானிருந்தன.

ஆனால் மங்சளழகியின் குயில் குரலுக்கு முன்பு அவை இருப்பதாகவே தெரியவில்லை. மெள்ள மெள்ள அவள் மேல் ஸ்வரங்களை தொடத் துவங்கினாள். மேல் ஷட்ஜத்தைத் தொட்டு அதற்கு மேலுள்ள பஞ்சமத்தையும் தொட்டாள். பஞ்சமத்தைத் தொட்டு மீள்வதே கஷ்டம். அந்தப் பஞ்சமத்தில் அவள் சாரீரம் வண்டு போல் ரீங்காரம் செய்து நீண்ட சஞ்சாரத்துக்கு இடம் கொடுத்தது.

அவளது குயில் சாரீரம் இழைந்து இழைந்து குழைந்து மேலே ஏறியும் பெரும் நீர்வீழ்ச்சி போல் கம்பீரமாக விடுவிடு என்று கீழே இறங்கியும், இடையே பற்பல அற்புத புஷ்பங்களை வீசியும், பெரும் மயக்கத்தையே தந்தது. இளையபல்லவனுக்குப் புரியாத சொர்ணத் தீவின் ராகப் பிரஸ்தாரத்தைச் சில நிமிஷங்களே செய்தாள் அவள். பிறகு சரும வாத்தியங்கள் முழங்க, ஒற்றையடி தந்தி வாத்தியம் டங் டங்கென ஒலிக்க, தாள வாத்தியங்கள் ஜல் ஜல் என சப்திக்கக் காவி மொழியில் ஒரு காதற்பாட்டையும் அவள் துவங்கினாள். காவி மொழியை நன்றாக அறிந்த இளையபல்லவன் அந்தப் பாட்டிலிருந்து அந்த நடனம் வாஜாங் பூர்ணா என்பதைத் தெரிந்து கொண்டான்.

வாஜாங் பூர்ணா புராணக் கதை நடன முறையாகையால், பாட்டு, புராணத்தைப் பற்றியதாயிருந்தது. சுபத்திரை அர்ஜுனனை நினைத்து ஏங்குவதாக இருந்தது பாட்டின் கருத்து. ராமாயண மகாபாரதக் கதைகள் வாஜாங்கின் அஸ்திவாரம் என்பதை அறிந்த இளையபல்லவன், தனது நாட்டை நினைத்துப் பெருமிதம் கொண்டான். அடுத்த விநாடி நாடு மறைந்தது, பெருமிதம் மறைந்தது, நின்றது ஒன்றுதான். எதிரே இருந்த மஞ்சளழகியின் நடனந்தான் அது.

சுபத்திரையின் வேதனையைத் திரும்பத் திரும்பப் பலவிதமாக ஆடிக் காட்டினாள் மஞ்சளழகி. அவளுக்குத் தேறுதல் சொல்லப் பக்கத் திரையிலிருந்து பல தோழிகளும் வந்தார்கள். நக்ஷத்திரக் கூட்டத்திடையே தவழ்ந்த முழுமதி யென அந்தத் தோழிகளின் இடையே ஆடினாள் மஞ்சளழகி. அந்த அழகிய தோழிகளின் ஆறுதலையும் சகியாத அவள் காட்டிய பாவங்கள் கூட்டத்தின் இதயத்தைக் கரைத்துக் கொண்டிருந்தன. கடினமான இதயமுடைய கொள்ளைக்காரர் கண்களிலும் கற்பைப் பற்றி அதிகமாகக் கவலைப்படாத அவர்கள் துணைவிகள் கண்களிலும் துக்க நீர் பெருகியோடியது.

அத்தனை அழகாக ஆடினாள் அவள். அவள் சாய்ந்து சாய்ந்து, துக்கித்துத்துக்கித்து, பாடிப் பாடி எதிரே திரும்பத் திரும்பக் கைகளை நீட்டினாள். பரந்தாமன் எங்கேயென்று ஆகாயத்தில் கண்களை வீசிப் பரிதவித்தாள். அவள் கண்கள் மீண்டும் இளையபல்லவனைப் பார்த்தன. கரங்களும் அவனை நோக்கியே நீண்டன. இளைய பல்லவன் இதயம் படபடத்தது. சரும வாத்தியங்கள் அந்தப் படபடப்புக்கு ஆதாரம் தருவனபோல் டமடமவென மெள்ள சப்தித்தன. மதியை அடியோடு இழக்கும் நிலைக்கு வந்துவிட்டான் இளையபல்லவன்.

திடீரென அவள் சோககீதம் மகிழ்ச்சிக் கீதமாக மாறியது. கண்ணன் வந்துவிட்டதாகச் சுபத்திரை அபிநயித்தாள். சற்றே வெட்கம் காட்டினாள். கண்ணன் ஆசி கிடைக்கவே, ஆனந்தத் தாண்டவம் துவங்கினாள். மேடையில் அவள் சுழன்றாள், சுற்றிச் சுற்றி ஓடினாள், ஆடினாள், பாடினாள், பறந்தாள், தோழிகளைக் கட்டித் தழுவினாள். தலையை நிமிர்த்தி முத்துப் பற்கள் தெரிய நகைத்தாள். பின்னணி வாத்தியங்கள் சப்தித்தன. மகிழ்ச்சி உச்சஸ்தாயிக்குப் போய்க் கொண்டிருந்தது.

இளைய பல்லவனைக் கைகளை நீட்டி ‘வாவா’வென்று பகிரங்கமாக அழைத்தாள் மஞ்சளழகி. அது நாட்டியத்தில் சுபத்திரை கனவில் அழைக்கும் கட்டமென்பதை அறியாத இளையபல்லவன் திடீரென இருப்பிடத்தை விட்டு எழுந்தான். மேடை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தான்.

அவ்வளவுதான், அதுவரை இருந்த அமைதி குலைந்தது. “நில்” என்ற சொல்லொன்று அதிகாரத்துடன் ஒலித்தது. சொல்லுக்குடையவன் பலவர்மனா என்று திரும்பிப் பார்த்தான் இளையபல்லவன். பலவர்மன். ஆசனத்தில் பேசாமல் அமர்ந்திருந்தான். அவனுக்குப் பின்னால் பயங்கரத் தோற்றத்துடனும் பார்வையுடனும் நால்வர் நின்றிருந்தார்கள். அவர்களில் ஒருவனிடமிருந்த கத்தியும் அடுத்த விநாடி இளையபல்லவனை நோக்கி வெகு வேகமாகப் பறந்து வந்தது.

Previous articleRead Kadal Pura Part 2 Ch14 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch16 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here