Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch16 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch16 |Sandilyan | TamilNovel.in

139
0
Read Kadal Pura Part 2 Ch16 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch16 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch16 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 16 : குறுக்கே புகுந்த குறுவாள்.

Read Kadal Pura Part 2 Ch16 |Sandilyan | TamilNovel.in

சீனத்துக் கொள்ளைக்காரனும், கடற் போரில் நிகரற்றவனென்று பிரசித்தி பெற்றவனுமான அகூதாவிடம் ஒரு வருட காலம் பழகியதால் எந்தச் சந்தர்ப்பத்திலும் உணர்ச்சிகளைக் கைவிடாமல் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளக்கூடிய திறனை எய்தியிருந்த இளையபல்லவனின் உணர்ச்சிகளையும் மஞ்சளழகியின் நடன மோகனாஸ்திரம் சிதற அடித்து மேடையை நோக்கி அவனை விரையச் செய்துவிட்டதென்றால், அந்த நடனத்தின் சிறப்பையும் மனிதர்களை இஷ்டப்படி வளைக்க அதற்கிருந்த அபூர்வ சக்தியையும் பற்றி விவரிக்கவா வேண்டும்? வேண்டுவதில்லையென்பதை நடனம் துவங்கிய சில நாழிகைக்குள் இளையபல்லவன் புரிந்துகொள்ளத்தான் செய்தான்.

மஞ்சளழகி சோகித்த போது கூட்டமே சோகித்ததும், அவள் மகிழ்ச்சி வெறி கொண்டபோது கூட்டமும் மகிழ்ச்சி வெறி கொண்டதையும் அவன் கவனிக்கவும் செய்தான். அன்று காலை கோட்டைத் தலைவன் அறையில் வாஜாங் நடனத்தைப் பற்றி உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய மஞ்சளழகி, “இன்றிரவு நான் ஆடும்போது வந்து பாருங்கள் உலகமே ஆடும்; அங்கு வரும் கள்வர்கள் ஆடுவார்கள்; கொலைகாரர் ஆடுவார்கள்; ஆண்கள் பெண்கள் சகலரும் ஆடுவார்கள்; உள்ளங்கள் புரண்டெழும்; உணர்ச்சிகள் அலை பெருக்கும்” என்று கூறியபோது அவள் ஒருவேளை மிகைப்படுத்திக் கூறுகிறாளோ என்று நினைத்த இளையபல்லவன் அந்த நிகழ்ச்சியை நேரிடையாகக் கண்டதும் அவள் சொன்னதெல்லாம் எத்தனை உண்மை என்று எண்ணவும் எண்ணினான்.

அப்படி எண்ணிக் கொண்டே நடனத்தில் மனத்தைப் பறிகொடுத்தவன் கொள்ளைக்காரரும் இதரரும் அவள் ஆட்டத்துக்குச் சரியாக ஆடி வெறி கொண்டதையும் கூச்சலிட்டதையும் கண்டு பெரிதும் பிரமிக்கவும் செய்தான். ஆனால் அங்குள்ள சூழ்நிலையைக் கண்டு பிரமித்துக்கொண்டே இருந்த தன்னையும் அந்த நடனம் மெய்மறக்கச் செய்யுமென்றோ உணர்ச்சி வசப்படுத்திவிடுமென்றோ ஆரம்பத்தில் தினையளவும் நினைக்காத காரணத்தினாலும், கலைசிறந்த தமிழகத்தின் ரத்தம் உடலில் ஓடியதால் உள்ளூர இருந்த கலாரசிகத் தன்மை மேலெழுந்து அவனைப் பூராவும் ஆட்கொண்டு விட்டதாலும், மேடையின் நடனமும் இசையும் உணர்ச்சிகளின் உச்சியைத் தொடத் தொடங்கி விட்டபடியாலும், அங்கு நிலவிய சூழ்நிலையோடு இரண்டறக் கலந்துவிட்ட இளையபல்லவன் சுயநிலையை அடியோடு இழந்தான்.

அப்படிச் சுயநிலையை இழந்ததால் மஞ்சளழகியின் மோகன உருவமும், சுபத்திரையின் சோகபாவங்களும் சிருஷ்டித்த மாய வலையில் அவன் மனம் சிக்கி நின்றது. மேடையில் ஆடுவது மஞ்சளழகி என்ற நினைப்புகூட அவன் மனத்திலிருந்து மறைந்தது. யாரோ ஓர் அபலை அலறித் தன்னை அழைப்பதாகவே எண்ணும் ஸ்திதிக்கு அவன் மனம் புரண்டுவிட்டது. அங்கிருந்த கூட்டம், கூச்சல், பந்தங்கள், விளக்குகள் அனைத்தும் அவன் கண்களிலிருந்து மறைந்தன.

மேடைக்குப் பின் திரையிட்ட வெண்மதி வெள்ளி வானம், பரிதாபமாகத் தன்னைக் கை நீட்டிக் கைநீட்டி அழைத்த நடனப் பாவை, இவையே கண்களில் நின்றன. புத்தியை அந்தப் பாவையின் சோக கீதமும் அதற்குப் பின் மெருகு கொடுத்த ஒற்றைத் தந்தி வாத்தியத்தின் அழைப்பு நாதமும் இழுத்துக் கொண்டன. இந்த நிலையை அடைந்ததாலேயே மேடையை நோக்கி இரண்டடி விரைந்துவிட்ட இளையபல்லவனை ‘நில்’ லென்ற சொல்லொன்று சரேலென நிற்க வைத்தது.

இன்பமான வீணையின் தந்திகளில் சுண்டும் விரலொன்று செய்துவிட்ட தவறின் காரணமாக ஏற்படும் அபஸ்வரமொன்று எப்படி வீணா நாதத்தின் பூரண இன்பத்தையும் கலைத்துவிடுமோ, திவ்ய நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டுத் தியானத்தில் நிற்பவனைத் தம்பூரின் தந்தி ஒன்று திடீரென அறுந்து விபரீத ஒலி கிளப்பி எப்படி அவன் தியானத்தைக் குலைத்துவிட முடியுமோ அப்படி அந்த வாஜாங்கின் இன்னிசையை ஊடுருவி எழுந்த ‘நில்’லென்ற அதிகாரச் சொல் இளையபல்லவன் உணர்ச்சி மயக்கத்தைச் சட்டென்று உடைத்துவிடவே, ஒரே விநாடியில் சுயநிலை அடைந்து உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அடுத்த அடி மேடையை நோக்கி நகராமலும், மிக நிதானமாகவும் திரும்பி அந்தச் சொல் எழுந்த திக்கை நோக்கினான் இளையபல்லவன்.

அந்த ‘நில்’லென்ற சொல்லைத் தொடர்ந்து ‘கிளிங்’ என்ற மற்றொரு ஒலியையும், அந்த ஒலியைத் தொடர்ந்து தன் காலடியில் விழுந்த இரு குறுவாள்களையும் சற்று அசட்டையுடனேயே கவனித்த அந்த வாலிப வீரன் தன்னைக் குறி வைத்துக் கத்தி வீசியவனையும் அந்தக் கத்தி தன்மீது பாயவொட்டாமல் அதை நோக்கிக் குறுவாளொன்றை வீசித் தடுத்துவிட்ட அமீரையும் திரும்பத் திரும்ப நோக்கியதன்றிப் பலவர்மனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த அந்த நால்வர் மீதும் தன் கண்களை நிலைக்கவிட்டான்.

திடீரென்று ஏற்பட்ட அந்த நிகழ்ச்சி மேடை நடனத்தை மட்டுமல்ல, எதிரேயிருந்த கூட்டத்தையும், கூட்டத்தைச் சுற்றிக் காவல் புரிந்த அக்ஷயமுனைக் கோட்டைக் காவலரையும்கூட ஸ்தம்பிக்கச் செய்திருந்தது. கூட்டத்தையும் காவலரையும் மட்டுமல்லாமல், பலவர்மனையும் அவனுக்குப் பின்னால் நின்ற அந்த நால்வரையுங்கூட அது பெரும் பிரமிப்புக்குள் ஆழ்த்தியிருந்ததால் கடற்கரை பூராவும் பயங்கர அமைதி நிலவிக் கிடந்தது.

அந்த நால்வரில் இளையபல்லவனை நோக்கிக் குறுவாளை வீசினவன், தனது குறுவாளை அதிவேகமாகப் பாயும் மற்றொரு குறுவாள் தடுக்க முடியுமென்பதைக் கனவில் கூட நினைக்காதவனாகையால், அவன் கண்களில் பிரமிப்புடன் ஆச்சரியமும் மிதமிஞ்சித் துலங்கியது. நடன நிகழ்ச்சியில் ஏற்படும் கலவரங்களுக்கும் கொலைகளுக்கும் அந்தச் சமயத்தில் நடந்த அத்தகைய எதிர்பாராத சம்பவமே வருடா வருடம் காரணமாயிருந்ததால், அதை அடுத்துப் பெரும் கலவரம் ஏற்படலாமென்று எண்ணி யிருந்த பலவர்மன் இதயத்தில், அடுத்து ஏற்பட்ட நிகழ்ச்சிகள் பேராச்சரியத்தை விளைவித்தன.

குறுவாளினால் இளையபல்லவன் மாண்டுவிட்டான் என்றே ஒரு விநாடி நினைத்த பலவர்மன், அடுத்த விநாடி அந்தக் குறுவாள் அமீரின் குறுவாள் வீச்சால் தடுக்கப்பட்டதைக் கண்டதும், ‘தூரத்திலிருக்கும் மனிதர்மீது குறி வைப்பதே கஷ்டம். அப்படியிருக்கக் குறுவாள்மீது இவன் எப்படிக் குறி வைத்தான்!’ என்று தனக்குள் கேட்டுக்கொண்டு ஆச்சரியத்தில் திளைத்தான். அந்த இரண்டு குறுவாள்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக் காலடியில் விழுந்ததும் திரும்பிய இளையபல்லவன், அத்தனை ஆபத்திலும் நிதானமாகத் தன் பின்னால் நின்ற அந்த நால்வரை ஏறெடுத்துப் பார்த்ததைக் கவனித்ததும் ஆச்சரியத்தின் எல்லையை எட்டினான் பலவர்மன்.

அவனுக்குப் பின்னால் நின்ற பதக் சாதியாரின் தலைவர் இருவரும், சூளூ இனக் கொள்ளைத் தலைவர் இருவருங்கூட அந்த வியப்பில் பங்கெடுத்துக் கொள்ளவே செய்தார்கள். இளையபல்லவன் அங்கு தோன்றியதில் அவர்களுக்கு வியப்பேதுமில்லை. அக்ஷயமுனைக்குப் புதிதாக மரக்கலம் ஒன்று வந்திருந்ததும், அதன் தலைவனொருவன் கோட்டையிலிருந்து எய்யப்பட்ட விஷ அம்பினால் சாகாத வினோத மனிதனென்றும், அக்ஷயமுனைக் கோட்டைக்குள் பகலெல்லாம் பேச்சாயிருந்ததால், நடன நிகழ்ச்சியை முன்னிட்டுப் பகலிலேயே நகரத்துக்கு வந்துவிட்ட அந்த நால்வரும் இளையபல்லவனைப் பற்றிய வதந்திகளைக் கேட்டிருந்தார்கள்.

அவன் கோட்டைத் தலைவனை அவன் மாளிகையிலேயே சந்தித்து வெளியில் மீண்டும் சுதந்திரமாகச் சென்றதையும் இரவு நடன நிகழ்ச்சிக்கு வரவும் அவனுக்கு அனுமதி உண்டென்பதையும் மக்கள் பேசிக்கொண்டதிலிருந்து அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் அந்த வினோதங்களுக்குக் காரணத்தை மட்டும் அவர்களால் ஊகிக்க முடியவில்லை. எந்த அபாரமான சக்தியால் புதிதாக வந்தவன் கோட்டைத் தலைவனைத் தன் வலைக்குள் வளைத்து விட்டானென்பதைப் புரிந்துகொள்ள அவர்களால் இயலவில்லையாதலாலும், அது சம்பந்தமாக இல்லாத பொல்லாத வதந்திகள் ஊரில் பரவிக் கிடந்ததாலும், ஓரளவு கோபத்துடனும் வந்தவனை ஒழித்துக்கட்டும் எண்ணத்துடனுமே சொர் ண பூமியின் பூர்வகுடிகளின் தலைவர்களான அந்த நால்வரும் நடன நிகழ்ச்சிக்கு வந்தார்கள்.

நடனத்துக்கு வந்தபோது அவனை ஒழித்துக் கட்டுவது பிரமாதமான காரியமாகவும் தெரியவில்லை அவர்களுக்கு. வருஷா வருஷம் இயற்கையாகவோ, பலவர்மனால் காரியார்த்தமாகத் தூண்டப்பட்டோ நடனம் முடிவடையும் தருணத்தில் ஏற்படும் குழப்பம் அந்த வருஷமும் ஏற்படுமாகையால், அதைப் பயன்படுத்திக் கொள்ளலாமென்று வந்த அந்த நால்வரும், தாங்கள் எதிர்பார்த்ததற்கு முற்றும் மாறான ஒரு மனிதனைப் பலவர்மன் காலடியில் கண்டார்கள்.

பயங்கரத் தோற்ற முள்ள ஒரு பெரும் கடற்படைத் தலைவனுக்குப் பதில், ஓர் அழகிய வாலிபன் அங்கு உட்கார்ந்திருந்ததைக் கண்டதும் அவன் வேறு யாரோ என்று நினைத்துத் தங்கள் பார்வையை ராட்சதன்போலிருந்த அமீரின் மீது திருப்பினார்கள். இசையிலோ நடனத்திலோ அதிக ஆர்வ மில்லாத அரபுநாட்டு அமீர், அவர்கள் வந்த தோரணையைக் கவனித்ததுமே அவர்கள் நம்பத் தகாதவர்கள், தீயவர்கள் என்ற தீர்மானத்துக்கு வந்து எச்சரிக்கையடைந்தான்.

அமீரின் சுபாவத்தில் மற்ற எந்த அம்சங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விஷமம் மட்டும் பூர்ணமாக இருந்ததால், அந்த நால்வர் தன்னையும் பார்த்து இளையபல்லவனையும் பார்த்ததையும் பிறகு ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு தன்னை நோக்கித் தலை அசைத்ததையும் கவனித்தான். அவர்கள் என்ன தீர்மானிக்கிறார்கள் என்பதை நொடிப் பொழுதில் ஊகித்துக் கொண்ட அமீர், தலைவன் தான் அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்த மார்பில் கையை வைத்தும் தலையை ஆட்டியும் விஷயத்தை விளக்கி, இளையபல்லவன் தான் தலைவன் என்பதைத் தன் ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டியும் மரியாதைக்கு அறிகுறியாகத் தலையை வணங்கியும் அறிவித்தான்.

அந்த அறிவிப்பு அந்த நால்வரிடை பெரும் வியப்பை விளைவித்ததை அவர்கள் முகபாவத்திலிருந்து புரிந்து கொண்ட அமீர், அந்த விநாடியிலிருந்து அவர்களிடமிருந்து தன் கண்களை அகற்றவேயில்லை. அவர்கள் பார்வையிலிருந்த ஏதோ ஓர் அம்சம் அவனுக்குப் பெரும் சந்தேகத்தை விளைவித்திருந்தது. அப்படி அவர்களைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த அமீர், அந்த நால்வரில் முதலில் நின்றவன் கச்சையில் கையை வைத்துக் குறுவாளை எடுத்தவுடனேயே, தன் இடையில் வரிசையாக இருந்த குறுவாள்களில் ஒன்றை எடுத்து மின்னல் வேகத்தில் வீசிவிட்டான். அதனால் செயலிழந்த எதிரியின் குறுவாள் நிலத்தில் விழுந்ததும், இருப்பிடத்தை விட்டுப் பயங்கரப் பார்வையுடன் எழுந்த அமீர், மற்றொரு குறுவாளையும் எடுக்கக் கச்சையில் கையை வைத்தான். அந்த விநாடியில் தான் இளையபல்லவன் கரம் எழுந்து, வேண்டாம்’ என்று அவனுக்கு சைகை செய்து தடுத்தது.

அடுத்தடுத்து இடையில் செருகப்பட்டிருந்த குறுவாள் களை எறிந்து அந்த நால்வரையும் பட்பட்டென்று மண்ணில் சாய்த்துவிட முடிவு செய்த அமீரைத் தடை செய்த இளையபல்லவன், மிக நிதானமாக அந்த நால்வரையும் ஏற இறங்க நோக்கினான். நன்றாகத் தீட்டப்பட்ட ஈட்டியின் முனைகளை விடப் பளிச்சிட்ட அவன் பார்வையைக் கண்ட அந்த நால்வர் மேலும் வியப்பே அடைந்தார்கள்.

அவர்களுக்கு மட்டுமல்ல வியப்பு, இளையபல்லவன் கூட அவர்களைக் கண்டு உள்ளூர வியப்பே எய்தினான். பதக் சாதியாரும் சூளூக்களும் காட்டுமிராண்டிகளென்றும் மனிதர்களைத் தின்பவர் களென்றும் கேள்விப்பட்டிருந்த இளையபல்லவன் அநாகரிக உடையணிந்த சில பயங்கர மனிதர்களையே அந்த நடன நிகழ்ச்சியில் எதிர்பார்த்திருந்தான். பலவர்மனும் மஞ்சளழகியும் அவர்கள் வருகை குறித்துப் பயந்ததிலிருந்தும், அது சம்பந்தமாகத் தன்னை அச்சுறுத்தியதிலிருந்தும் வருபவர்கள் நாகரிக மனிதர்களாயிருக்க முடியாதென்ற முடிவுக்கே வந்திருந்தான். ஆகவே, முகங்களில் கடுமையும் பயங்கர மீசைகளும் இருந்தாலும், மிகுந்த நாகரிகமான உடைகளணிந்து அரசாங்கத்துப் படைத்தலைவர்களைப் போல வந்திருந்த அந்த நால் வரைக் கண்டதும் ஒரு விநாடி வியப்பின் வசப்பட்டான் இளையபல்லவன்.

ஒருவேளை இவர்கள் பலவர்மன் குறிப் பிட்ட நால்வராயிருக்க முடியாதோ என்ற சந்தேகங்கூட அவன் இதயத்தில் எழுந்தது. ஆனால் அவர்களுக்குப் பின்னால் நின்ற ஐம்பது வீரர்களின் தோற்றத்தையும், முன்னால் அசைவற்று ஆசனத்தில் உட்கார்ந்திருந்த பலவர்மன் முகத்தில் லேசாகத் தெரிந்த பயத்தையும் கண்டதும், ‘அந்த நால்வர் இவர்கள் தான். சந்தேகமில்லை, என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அவன் எண்ணங்கள் இந்தத் திக்குகளில் சுழன்றது இரண்டொரு விநாடிகளேயென்றாலும், அந்த இரண்டொரு விநாடிகளில் எதிரேயிருந்த கூட்டத்தின் ஆரம்ப அச்சமும், மௌனமும் கலைந்துவிடவே கொள்ளைக்காரரில் சிலர் பெரும் கூச்சலிட்டு எழுந்தார்கள். உணர்ச்சிகள் புரண்டுவிடும் நிலை எய்திவிட்டதை உணர்ந்த பலவர்மன் தனது காவல் வீரர்களுக்கு ஏதோ சைகை செய்யவே அவர்களில் சிலர் இளைய பல்லவனிருந்த இடத்தை அணுக அடியெடுத்து வைத்தனர்.

அடுத்த விநாடி அந்தக் கடற்கரையை மிக உறுதியுடன் ஊடுருவிய இளையபல்லவன் சொற்களும் அதிகாரத்துடன் நாற்புறமும் அவனது பார்வையும் கொள்ளையரை நோக்கி எழுந்த அவன் கையின் சைகையும் அமைதியைச் சிருஷ்டித்தன. “உயிர்மீது ஆசையுள்ள எவரும் இருக்கு மிடத்தை விட்டு அசைய வேண்டாம்,” என்று கூறிவிட்டுத் தன் கூரிய பார்வையை நாற்புறமும் திருப்பிய இளைய பல்லவன் தனக்கு உதவ எழுந்த கொள்ளையரையும் சைகை காட்டி அடக்கியதன்றி, “உட்காருங்கள். எனக்கு ஆபத்தை விளைவிக்க இவர்கள் யாராலும் முடியாது. விஷ அம்பு என் மார்பில் பாய்ந்ததே, என்னைக் கொன்றதா?” என்று கேட்கவும் செய்தான்.

“இல்லை, இல்லை” என்று எழுந்தன கொள்ளைக் காரர் குரல்கள்.

“அப்படியிருக்க இந்த அற்பன் வீசிய குறுவாள் எப்படி என்னைக் கொல்ல முடியும்?” என்று மீண்டும் கேட்டான் இளையபல்லவன் கொள்ளைக் கூட்டத்தை நோக்கி.

“முடியாது. முடியாது” என்று கூச்சலிட்டனர் கொள்ளைக் கூட்டத்தினர்.

“குருவாளெறிந்தவனைக் கொல்லுங்கள்,” என்று இடையே எழுந்தது ஒரு கொள்ளைக்காரன் மனைவியின் கீச்சுக் குரல்.

“ஆமாம், கொல்லுங்கள், கொல்லுங்கள்,” என்று எழுந்தன பல மாதர்களின் குரல்கள்.

குழப்பம் ஏற்படும் நிலை மீண்டும் வந்தது. பதக்குகளும் சூளூக்குகளும் தங்கள் இடையிலிருந்த கத்திப் பிடிகளில் கையை வைத்தார்கள். இளையபல்லவன் குரல் பலமாக எழுந்தது. “யாரும் யாரையும் கொல்லக்கூடாது. இத்தகைய இன்ப நிகழ்ச்சியில் கொலை எனும் கோரம் தலையெடுக்கக் கூடாது. உட்காருங்கள்” என்று கொள்ளைக்காரர்களுக்குக் கட்டளையிட்ட இளையபல்லவன், “நான் இஷ்டப்பட்டிருந்தால் இந்த நால்வரும் இத்தனை நேரம் மடிந்திருப்பார்கள்.

இதோ உள்ள அமீரின் இடையில் இன்னும் ஐந்து குறுவாள்கள் உள்ளன. அவன் கை மின்னல் வேகமுடையது. நான் அடக்கினேன் அமீரை. இல்லையேல் இந்த நால்வரும் மண்ணில் சாய்ந்திருப்பார்கள்,” என்று விளக்கி, அமீரைச் சுட்டிக்காட்டினான்.

கொள்ளைக்காரர்கள் அமீரை நோக்கிப் பெரும் ஆரவாரம் செய்தார்கள். அமீர் நாடகமேடைக் கதாநாயகன் போல் இரண்டு மூன்று முறை தலை தாழ்த்தித் தாழ்த்திக் கூட்டத்தை வணங்கினான். கொள்ளையர்கரகோஷம் வானைப் பிளந்தது. தனது வலது கரத்தை உயர்த்தி அந்தக் கரகோஷத்தையும், கூச்சலையும் அடக்கிய இளையபல்லவன், “நடனம் அற்புதமாயிருக்கிறது, அதை நாம் இடையில் நிறுத்த வேண்டாம்,” என்று சொல்லி நடனம் தொடங்கட்டும் என்பதற்கு அறிகுறியாக மேடையை நேநாக்கியும் கையை ஆட்டினான்.

“நில்!” அந்தப் பழைய சொல் மீண்டும் அதிகாரக் குரலில் ஒலித்தது, இம்முறை நடன மண்டபத்தில் நடனத்தைத் துவங்கிய மஞ்சளழகியை நோக்கி.

“இங்கு உத்தரவிட நீ யார்?” என்று அமைதியுடன் வினவினான் இளையபல்லவன்.

“என் பெயர் வில்வலன்” என்றான் அந்த நால்வரில் முதல்வன். அதைச் சொல்லித் தன் பயங்கர மீசையையும் ஒருமுறை தடவினான்.

பெரும் விபரீதம் நிகழக்கூடியதான அறிகுறிகள் எங்கும் தென்பட்டன. அந்தப் பெயரைக் கேட்ட சாதாரண நகர மக்கள் நடுங்கினர். கொள்ளைக்காரர்கள் முணுமுணுத்தார்கள். அத்தனைக்கும் அசங்காமல் அதுவரை ஆசனத்தில் இடித்த புளியாக உட்கார்ந்திருந்த பலவர்மனும் ஆசனத்தில் சங்கடத்துடன் அசைந்தான். இந்தக் குறிகளைக் கவனித்தாலும் கவனிக்காதவன் போலவும், இருந்த இடத்தை விட்டு அசையாமலும் இளையபல்லவன் சர்வ சாதாரணமாக நால்வர் தலைவனை நோக்கிக் கேட்டான். “அந்தப் பெயரில் என்ன அத்தனை விசேஷம்?” என்று .

அதுவரை கோபம் துளிர்க்காத வில்வலன் முகத்திலும் கோபம் துளிர்த்தது. “அந்தப் பெயரைக் கேட்டால் இந்த அக்ஷயமுனை வட்டாரமே நடுங்கும்,” என்றான் வில்வலன் கோபத்தின் உஷ்ணம் சொற்களில் உறைந்து நிற்க.

“அத்தனை கொடியவனா நீ?” என்று மீண்டும் கேட்டான் இளையபல்லவன்.

இதைக் கேட்டபோது இளையபல்லவன் குரலில் ஏளனம் இருந்ததை வில்வலன் கவனிக்கத் தவறவில்லை . அவனும் விஷமமாகப் பேசத் துவங்கி, “நான் மட்டுமல்ல, என் வாளும் கொடியது” என்று தன் கச்சையில் இருந்து தொங்கிய நீண்ட வாளைத் தட்டியும் காட்டினான்.

“குறுவாளைப் போலவே கொடியதா?” என்று வினவினான் இளையபல்லவன்.

தன் குறுவாள் பயனற்றுப் போனதைக் கண்டதால் ஏற்கெனவே சீற்றமடைந்திருந்த வில்வலன், அதைப் போலத்தான் தன் பெருவாளும் இருக்கும் என்பதை இளையபல்லவன் சுட்டிக் காட்டியதும் சீற்றத்தின் எல்லையை அடைந்தான். “பேச்சிலுள்ள சாமர்த்தியம் உனக்குச் சண்டையில் உண்டா ?” என்று வினவவும் செய்தான் வில்வலன் சீற்றத்தால் துடித்த உதடுகளுடன்.

“அதைப் பரீட்சிக்க ஆசையாயிருக்கிறதா உனக்கு?” என்று மீண்டும் அமைதியுடன் வினவினான் இளைய பல்லவன்.

“ஆம். ஆசையாயிருக்கிறது,” என்றான் வில்வலன்.

“அப்படியானால் இப்படி வா,” என்று வில்வலனைத் தன்னருகில் அழைத்த இளையபல்லவன், “இப்படி உட்கார்,” என்று ஓர் இடத்தையும் அவனுக்குக் காட்டினான்.

“எதற்கு உட்கார வேண்டும்?”

“நடனம் முடியட்டும். நல்லதொரு நிகழ்ச்சியை மற்றவர்கள் அனுபவிப்பதை நாம் கெடுக்க வேண்டாம். நடனம் முடிந்தபின்பு உன் ஆசையை நான் தீர்த்து வைக்கிறேன். “

இதைக் கேட்டதும் ஏதோ யோசித்த வில்வலனைப் பார்த்து நகைத்த இளையபல்லவன், “முதுகுப் புறத்தில் குறுவாள் எறியும் பரம்பரையில் பிறந்தவனல்ல நான். பயப்படாதே வா,” என்றான்.

அந்தச் சொற்களால் வெட்கம் உள்ளத்தை வாட்ட சீற்றம் தலைக்கேறத் தனது சகாக்களை விட்டுப் பிரிந்து வந்த வில்வலனைத் தனக்குப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்ட இளையபல்லவன், “நடனம் துவங்கட்டும்,” என்று மஞ்சளழகியை நோக்கிக் கூறினான்!
சுபத்திரையின் காதல் நடன நாடகம் மீண்டும் துவங்கி மகிழ்ச்சியுடன் முடிந்தது. அது முடிந்த மறு விநாடி அந்தக் கடற்கரை மணலில் துவங்கியது ஒரு கோர நாடகம்.

Previous articleRead Kadal Pura Part 2 Ch15 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch17 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here