Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch18 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch18 |Sandilyan | TamilNovel.in

144
0
Read Kadal Pura Part 2 Ch18 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch18 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch18 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 18 : எதிர்பாராத விபரீதம்.

Read Kadal Pura Part 2 Ch18 |Sandilyan | TamilNovel.in

இத்துடன் இந்த விழா முடிவடைகிறது” என்று இளையபல்லவன் கூறிய அதே சமயத்தில், “இல்லை ” என்ற சொல்லைப் பயங்கரக் குரலில் உதிர்த்து, நடன மேடைமீது ஒரு காலையும், மணல் தரையில் மற்றொரு காலையும் ஊன்றிக் கண்களில் கொலைக்குறியுடனும் கையில் உருவிப்பிடித்த வாளுடனும் நின்ற வில்வலனைக் கண்டதும் பெரும்பீதிக்கு உள்ளான மஞ்சளழகி, அந்தக் கொலைகாரனை எதிர்க்க இளையபல்லவன் இடையில் வாளும் இல்லாததைக் கவனித்ததும் தலை சுழலும் நிலைக்கு வந்து விட்டதால், தன் பக்கத்தில் நின்ற தோழி யொருத்தியின் தோளில் கையைப் போட்டுச் சற்று நிதானித்துக் கொள்ள முயன்றாள்.

உயிரையோ போர்த் தர்மங்களையோ சிறிதும் மதிக்காத பதக் இனத்தில் உதித்த வில்வலன், இளையபல்லவன் நின்ற இடத்திலேயே வாளால் குத்திக் கொன்றால் ஆச்சரியமில்லை யென்பதை அவள் நன்றாக அறிந்திருந்தாளாதலால், அவன் கதி அடுத்த கணம் என்ன ஆகுமோ என்று எண்ணிப் பெரிதும் கலங்கினாள். வில்வலன் மேற்கொண்டும் பேசத் தொடங்கி, “எடு வாளை!” என்று சொன்னதும் அவன் உடனடியாகக் கொலைத் தொழிலில் இறங்கமாட்டான் என்ற எண்ணத்தால் அவளுக்குச் சிறிது சுரணை வந்தாலும், எடுப்பதற்கு வாளேதும் இளையபல்லவனிடம் இல்லாததாலும், இடையில் செருகியிருந்த குறுவாளைக் கொண்டு வில்வலனுடைய பெருவாளுடன் போரிடுவது தற்கொலைக்குச் சமமென்று அவள் கருதியதாலும், ஆரம்பத்தில் ஏற்பட்ட அச்சம் அவளைக் கவ்வியே நின்றது.

அவளை மட்டுமல்ல அந்தக் கூட்டத்தையும் பேரச்சம் பீடித்திருந்தது சில விநாடிகளுக்கு. எந்த விபரீதம் அந்த வருடம் நடக்கா தென்று சிறிது நேரத்துக்கு முன்பு பலவர்மன் உட்படச் சகலரும் நினைத்தார்களோ, எந்த விபரீதத்தை தடுத்து விட்டதாக இளையபல்லவனின் சகாக்களும் கருதினார்களோ, அந்த விபரீதம் எப்படியும் நடந்தே தீருமென்ற நினைப்பும் அதற்கு முதல் பலி இளையபல்லவனாகிவிடப் போகிறானே என்ற அச்சமும், வில்வலனின் தோற்றத்தாலும் பேச்சாலும் கூட்டத்தாரிடையே துளிர்விடவே எங்கும் மௌனம் நிலவி நின்றது. ஆயிரக்கணக்கான கண்கள் மேடைமீது நிலைத்திருந்தன. மேடை விளக்குகளின் தீச்சுடர்கள் கூடக்கண் சிமிட்டாமல் அந்த விபரீதத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.

கோட்டைத் தலைவனும் கூட்டமும் நடன கோஷ்டியும் அனைவருமே நிலைகுலைந்துவிட்ட அந்தச் சமயத்தில் இளையபல்லவன் மட்டும் சிறிதுகூட நிதானத்தை இழக் காமலும், இதழ்களில் இளநகையுடனும் வில்வலனைத் தன் கூரிய கண்களால் நோக்கினான். அங்கு சூழ்ந்திருந்த மௌனத்தையும் அவனே மெள்ளக் கலைத்து, “மன்னிக்க வேண்டும், நடனமளித்த மயக்கத்தில் உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை மறந்துவிட்டேன்,” என்று வில்வலனை நோக்கிக் கூறியதன்றி, “நான் இங்கு நடன நிகழ்ச்சிக்கு வந்தேன். இந்தப் புது நிகழ்ச்சியை எதிர் பார்க்காததால் வாளை எடுத்து வரவில்லை.

ஒரு நிமிஷம் அவகாசம் கொடுங்கள்,” என்று பணிவுடன் சொல்லிக் கொண்டே அவன் என்ன செய்யப்போகிறான் என்பதை வில்வலன் ஊகிக்குமுன்பே வில்வலன் கைவாளைத் தன் இடது கையால் ஒதுக்கிவிட்டு அவனைத்தாண்டி மணலில் குதித்து கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டியத்தேவனை அணுகி அவன் இடையில் இருந்த வாளை உருவிக் கையிலெடுத்துக் கொண்டான்.

இளையபல்லவனின் கூர்மையான கண்கள் நோக்கிய போதே இந்தப் பார்வையின் காந்த சக்தியில் சிக்கிய வில்வலனின் பயங்கரக் கண்கள் சற்று சலனப் பட்டதாலும், அந்தச் சலனம் தீருமுன்பாகவே இளையபல்லவன் பேச்சுக் கொடுத்துக்கொண்டு சாதாரணத் தடையைத் தள்ளுவதுபோல தன் வாளை ஒதுக்கித் தள்ளிவிட்டு மணலில் குதித்து, தான் திரும்புமுன்பாகவே வேறொருவன் வாளைக் கையில் பிடித்துக் கொண்டதைக் கண்டதாலும், அப்படி ஓர் அசாதாரணத் துணிவையும் துரிதத்தையும் அவன் கனவிலும் அன்றுவரை காணாத தாலும் சில விநாடிகள் அசந்தே போனான்.

அந்த அசதி தீருவதற்குள் பிரமிப்பிலிருந்து விடுபட்ட கூட்டமும் அவர்களை நோக்கிக்கவியத் தொடங்கவே பெரும் சீற்றத்துக்குள்ளான வில்வலன், “நெருங்காதீர்கள், யார் நெருங்கினாலும் பிணமாகிவிடுவீர்கள்,” என்று கொஞ்ச நஞ்சமிருந்த நிதானத்தையும் காற்றில் பறக்கவிட்டுப் பெரும் குரலில் கூவினான். வாளைப் பிடித்திருந்த தன் கையை முழு நீளத்துக்கு நீட்டிச் சக்கர வட்டமாகச் சுழன்று, கவிந்து வந்த கூட்டத்தைச் சற்று எட்டவே நிற்க வைத்தான். பிறகு வாளை உருவிக்கொண்டு நின்ற இளையபல்லவன் மீது பாயவும் முற்பட்டான்.

வில்வலனின் நிதானமிழந்த நிலையையும், அவசரத் தையும் கவனித்த இளையபல்லவன் தன் இடது கையால் அவனைப் பொறுக்கும்படி சைகை காட்டியதன்றி, “அமைதியாயிருங்கள், தள்ளி நில்லுங்கள்” என்று கூட்டத் தையும் எச்சரித்துவிட்டு, வலது கையிலிருந்த வாளைப் பிடித்த வண்ணமே தனது மேலங்கியைக் கழற்றி அமீரிடம் கொடுத்தான். புத்தி மாறாட்டங்கூட ஏற்பட்டுவிடும் போலிருந்தது வில்வலனுக்கு.

எதிரி, வாளுடன் பாய இருக்கும் ஆபத்தான சமயத்தில் மிகவும் நிதானமாக, சீடனுக்கு வாள் பயிற்சி அளிக்கும் குருவைப்போல் பலமான முன்னேற்பாடுகளைச் செய்ய இளையபல்லவன் முயன்றது அவனுக்குப் பெரும் குழப்பத்தை விளைவித்தது. வாளை எடுத்ததுமே எதிரி வாள் மீது மோதி பழக்கப்பட்ட வில்வனுக்கு, அதுவும் ஒரு குழப்பத்தைத் தொடங்கியதுமே பல கொலைகள் திடீரென ஏற்படும் காட்சியை மட்டுமே வருடா வருடம் கண்டிருக்கும் அந்தப் பூர்வகுடித் தலைவனுக்கு, இந்த நிதானமும் ஏற்பாடும் புதிதாயிருந்ததால், நிதானமிழந்த நிலையிலும் அவன் பெரும் ஆச்சரியத்துக்கு உள்ளானான்.

அப்படி அவன் ஆச்சரியத்தின் வசப்பட்டு நின்ற சமயத்தில் போரிடத் தயாரான அந்த இருவருக்கும் இடையில், பலவர்மன் தன் காவலர் இருவருடன் புகுந்தான். பெரும் வேல்களை ஏந்தி நின்ற காவலர் கோட்டைத் தலைவன் கண்ணசைத்தால் வில்வலன் மீது வேலெறிவதற்குத் தயாராயிருந்தார்கள். தன்னை நோக்கிய அந்த ஈட்டி முனைகளையும் கல்லென உணர்ச்சி ஏதுமற்ற முகத்தை வைத்துக்கொண்டு எதிரே நின்ற பலவர்மனையும் கண்ட வில்வலன் சித்தத்தில் வியப்பு மறைந்து மீண்டும் கோபம் தலைதூக்கியது.

“பலவர்மா! இதில் நீ தலையிடாதே; அகன்றுவிடு. இல்லையேல்… ” என்ற வில்வலன் மீதிப் பேச்சை முடிக்காமல் விட்டாலும், அவற்றின் முடிவு எதுவாயிருக்கும் என்பதை உணர்ந்துகொண்ட பலவர்மன் உணர்ச்சி ஏதுமற்ற வறண்ட குரலில் சொன்னான்: “வில்வலா! இத்தனை வருடங்களாக உன் செய்கை எதையும் நான் ஆட்சேபித்ததில்லை. நீ செய்த கொலைகளில் கூட நான் தலையிடவில்லை. அவற்றைப்பற்றி விசாரித்ததும் இல்லை. ஆனால் இந்தச் சண்டையில் தலையிட வேண்டிய அவசியம் இருக்கிறது,” என்றான்.

“என்ன அவசியம்?” என்று சீறினான் வில்வலன்.

“இந்தக் கோட்டையின் நலன், உன் இனத்தாரின் நலன், இந்தக் கடற்கரை வாசிகளின் நலன், எல்லாம் இந்தச் சண்டையைத் தடைசெய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது,” என்றான் பலவர்மன்.

இப்படிப் பலவர்மன் பேசிக்கொண்டிருக்கையில் வில்வலனின் சகாக்கள் மூவரும் உருவிய வாளுடன் வில்வலனுக்குப் பின்னால் நெருங்கி வந்துவிட்டார்கள். அவர்கள் அழைத்து வந்த ஐம்பது வீரர்களும் அவர்களைக் காத்து அடைபோல் பின்னால் அணிவகுத்துத் தொடர்ந்தார்கள். அதைக் கண்ட கொள்ளைக் கூட்டத்தின் ஒரு பகுதி அந்த ஐம்பது பூர்வகுடி மக்களையும் நோக்கி நகர்ந்தது. பலவர்மன் கண்கள் நாற்புறமும் சுழன்றன. அவற்றின் ஜாடை கண்ட கோட்டைக்காவலர் இருபது முப்பது பேர் திடீரென வந்து கொள்ளையருக்கும் பூர்வ குடிகளுக்கும் இடையே தடையாக நின்றார்கள்.

“தடுக்காதே, விடு வழியை,” என்று கொள்ளைக்காரன் ஒருவன் கத்தினான்.

மற்றும் பலர், “தடுக்காதே, தடுக்காதே!” என்று கூவினார்கள்.

பலவர்மனின் அதிகார விழிகள் மிகுந்த வஞ்சகத் துடனும், பயங்கரத்துடனும் அந்தக் கொள்ளைக் கூட்டத்தை நோக்கின. “இந்தப் பூர்வகுடியில் ஒருவர் தொடப் பட்டாலும் உங்களில் பத்துப் பேர் வெட்டுப் பாறைக்கு வர வேண்டியதிருக்கும்” என்று கடுமையுடன் சொற்களை அவன் உதடுகளும் உதிர்த்தன. அவன் கொடுமையின் எல்லையை உணர்ந்ததாலோ என்னவோ முன்னேறிய கொள்ளையர் சற்றுத் தேங்கி நின்றனர்.

இந்தச் சமயத்தில் வில்வலன் பயங்கரமாக நகைத் தான். “அவர்களைத் தடுக்க வேண்டாம் பலவர்மா! அவர்கள் வரட்டும். என் வீரர்கள் பதில் சொல்வார்கள்” என்று அந்தப் பயங்கர நகைப்புக்கிடையே பேசிய அந்தப் பதக் இனத் தலைவன், “என்னையும் தடுக்காதே, வழியை விட்டு விலகி நில்,” என்று இரைந்தான்.

பலவர்மன் நின்ற இடத்தை விட்டு நகரவில்லை , “நீ கொல்ல முயலும் இந்த வாலிபன் யார் தெரியுமா?” என்று வினவினான் அவன்.

“தெரியாது, தெரியவேண்டிய அவசியமில்லை,” என்றான் வில்வலன்.

“அவசியமிருக்கிறது. ” பலவர்மனின் சொற்களில் எச்சரிக்கை ஒலித்தது.

“என்ன அவசியம்?”

“கோட்டை நலனைப்பற்றிய அவசியம். “
“இவன் அழிந்தால் கோட்டை அழிந்துவிடுமா?”

“ஆம். “

“ஏன்?”

“இவன் அகூதாவின் உபதலைவன். “

உறுதியுடனும், தெளிவுடனும் எல்லோருக்கும் கேட்கும்படியாகவும் உதிர்க்கப்பட்ட அந்த மூன்று சொற்கள், அங்குக் கூடியிருந்த அனைவருடைய உள்ளத்திலும் விவரிக்க இயலாத திகிலை விளைவித்தது. அதுவரை எதற்கும் அசையாத வில்வலன்கூடச் சற்று அசைந்தான். அவனுடன் வந்த மற்ற மூன்று தலைவர்களும் சங்கடத்தாலும், அச்சத்தாலும் லேசாக நடுங்கினார்கள். அந்த அச்சத்தையெல்லாம் நொடிப்பொழுதில் எடை போட்ட பலவர்மன் அவர்கள் மேற்கொண்டு யோசிப்பதற்கு இடங் கொடாமல், “அதுமட்டுல்ல; இன்னும் சில நாள்களில் அகூதா இங்கு வருகிறார். அந்தச் சமயத்தில் அவருடைய உபதலைவர், இந்த இளையபல்லவர், இங்கு இல்லாவிட்டால் இந்த ஊரையும் இவருக்குக் கேடு விளைவித்த அனைவரையும் ஒழித்துக் கட்டிவிடுவதாகச் சபதம் செய் திருக்கிறார். நிலைமை உனக்குப் புரிகிறதென்று நினைக் கிறேன் வில்வலா!” என்றும் கூறினான்.

பேரமைதி அந்தக் கடற்கரையைச் சில விநாடிகளுக்குச் சூழ்ந்தது. அதை, மீண்டும் இளையபல்லவனே உடைத்தான். “அதற்காகக் கோட்டைத் தலைவர் அஞ்ச வேண்டுவதில்லை. நான் இறந்தால் அகூதாவினால் எந்தக் கஷ்டமும் நேரிடாதிருக்க நான் ஏற்பாடு செய்கிறேன்” என்று அந்த அமைதியைக் கிழித்தது இளையபல்லவனின் குரல்.

பலவர்மன் திரும்பி இளையபல்லவனை நோக்கினான். சிந்தையிலிருந்த குழப்பம் அவன் முகத்தில் தெரிந்தது. ‘வில்வலனிடம் பிராணனை விடுவதில் இத்தனை ஆசை எதற்கு இவனுக்கு?’ என்று தனக்குள் கேட்டுக் கொள்ளவும் செய்தான் பலவர்மன்.

இளையபல்லவன் தொடர்ந்து சொன்னான்: “வில்வலன் ஆசையைத் தீர்க்க நான்தான் ஒப்புக்கொண்டேன். ஆகவே இந்த வாள்போரில் நான் இறந்தால் இந்தக் கோட்டைக்கு எவ்வித ஆபத்தும் நேரிடாமல் காப்பது என் கடமை. இதோ இருக்கும் எனது உபதலைவன் அமீர், இந்தச் சண்டை எனது வேண்டுகோளால் நடந்தது என்பதை அகூதாவுக்குச் சொல்லுவான். இதன் விளைவாக யாருக்கும் தீங்கு ஏற்படக்கூடாதென்பது என் கோரிக்கை யென்பதும் தெரிவிப்பான். அகூதா இதுவரை என் கோரிக்கையைத் தட்டியதில்லை. இதோ உங்களைக்காக்க அகூதாவின் இதய நண்பன் அமீர் இருக்கிறான்,” என்று.

அத்துடன் அமீரையும் அழைத்து அந்தக் கோட்டையைக் காப்பதாகத் தன்மீது ஆணையும் இடச் சொன்னான்.

இளையபல்லவன் போக்கு எதுவும் அமீருக்கோ, அவன் சகாக்களுக்கோ, பலவர்மனுக்கோ புரியவில்லை. எதற்காக அந்த ஆபத்தில் இளையபல்லவன் சிக்கிக்கொள்ளப் பிரயத்தனப்படுகிறான் என்பதை உணராத மஞ்சளழகிகூட அச்சம் மிகுந்த கண்களை மண்டபமேடையிலிருந்து அவன் மீது வீசினாள். பிரதி விநாடி நாற்புறமும் நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த இளையபல்லவனின் கண்கள் ஒரே ஒரு விநாடி மட்டும் மஞ்சளழகியின் கண்களோடு உறவாடின. தன்னைப் போரிட வேண்டா மென்று மன்றாடிய அந்தக் கண்களின் கெஞ்சிய தோற்றத்திலிருந்த அழகை, ஆபத்தான அந்தச் சமயத்திலும் அவன் ரசித்தான்.

அவள் தன் நிலையைப் பற்றிக் கவலைப்பட்டது பெரும் ஆறுதலையும், மகிழ்ச்சியையும் பெருமையையும் கூட அளித்தது அவனுக்கு. அவன் அவளை நோக்கித் தைரியமூட்டும் புன்சிரிப்பொன்றை மட்டும் வீசிவிட்டு மீண்டும் அமீரை நோக்கினான். கனவில் நடப்பவன் போல் அவனிருப்பிடத்தை அடைந்த அமீர் அவன் இஷ்டப்படி ஆணையிட்டான். இளையபல்லவன் குரல் மீண்டும் எழுந்தது பலமாக. “நான் மட்டும் ஆணையிடச் சொல்லிப் பலன் இல்லை. இந்த இடத்தில் குழப்பத்தையும், மேற்கொண்டு கொலையையும் தடுக்க வேண்டுமானால் இதோ இருக்கும் அந்த மூவராலும் அவர்களைச் சார்ந்த ஐம்பது வீரர்களாலும் இங்கு யாருக்கும் எவ்விதத் தீங்கும் நேரிடா தென்பதற்கு வில்வலனும், உறுதி கூற வேண்டும்?” என்றான் இளைய பல்லவன்.

போருக்குச் சித்தமாயிருந்த வில்வலன் கண் சாடை காட்ட, மற்றத் தலைவர் மூவரும் தங்கள் வாள்களை முத்தமிட்டு ஆணையிடவே பலவர்மனை அகலும்படி உத்தரவிட்டான் இளையபல்லவன். பலவர்மனுக்கு என்ன செய்வதென்று தெரியாததாலும், இளையபல்லவன் உறுதிக்கு மேல் நிலைமையும் அவன் கையைவிட்டு மீறியபடியாலும் அவன் அவ்விருவருக்குமிடையில் இருந்து விலகியதன்றி வேல் தாங்கிய காவலரையும் விலகச் செய்தான்.

அடுத்தபடி இருவரும் போர் செய்ய வசதியாயிருக்கும்படி அமீரையும் கண்டியத் தேவனையும் விட்டுக் கூட்டத்தை விலக்கிச் சக்கரவட்டமாக இடம் செய்து கொண்ட இளையபல்லவன், தன் கையிலிருந்த வாளை, அப்படியும் இப்படியும் இருமுறை திருப்பிப் பதம் பார்த்து விட்டு எதிரேயிருந்த வில்வலனை நோக்கி, “இனி உங்கள் ஆசையைப் பூர்த்தி செய்துகொள்ளலாம்” என்றான். அடுத்தவிநாடி உருவிய தன் பெருவாளை ஓங்கிக் கொண்டு அதிவேகமாக இளையபல்லவன் மீது பாய்ந்துவிட்டான் வில்வலன்.

அந்த இருவரின் வாள்போர் பார்ப்பதற்குக் கண் கொள்ளாக் காட்சியாய் இருந்தது. பயங்கரத்திலும் ஒரு இன்பமிருக்க முடியும் என்பதைக் கொள்ளைக்காரர் மட்டுமின்றி அங்கிருந்த அநாகரிகப் பூர்வகுடிகளும் உணர்ந்து கொண்டார்கள். அந்தப் பூர்வகுடிகளின் தலைவர்களுக்கு இளையபல்லவன் போர் முறை புதிதாகவும் படிப்பினையைத் தருவதாகவும் இருந்தது.

வில்வலனுடைய பயங்கரமான ஆகிருதிக்கு முன்பு அங்கியைக் கழற்றியதும் சிவந்து அழகாகத் தெரிந்த மேனி யுடனும் வீரக்களை சொட்டும் அழகிய முகத்துடனும் காட்சியளித்த அந்த வாலிபனின் மெல்லிய கரங்கள் எதைத்தான் சாதிக்க முடியும் என்று நினைத்தார்கள். பூர்வ குடித் தலைவர்கள் மூவரும் எத்தனையோ பயங்கரப் பிரகிருதிகளை இரண்டு மூன்று நிமிடங்களில் வீழ்த்தி யிருக்கும் வில்வலனின் பெரும் பட்டாக் கத்திக்கு முன்பு இளையபல்லவன் நீட்டித்து நின்ற நீள வாள் அரை விநாடி நிற்க முடியாது என்று தீர்மானித்து, இளையபல்லவனின் முடிவைச் சண்டை துவங்கிய சில விநாடிகளுக்குள்ளாகவே எதிர்பார்த்தார்கள். முடிவு அப்படித்தான் இருக்குமென்று பலவர்மன்கூடப் பயந்தான். ஆனால் போர் தொடரத் தொடர வியப்பு பலவர்மனை மட்டு மின்றி, கூட்டத்தையும் ஆட்கொண்டது.

பெரும் முள்ளம்பன்றி போல் வெகு வேகத்துடன் தன் ராட்சத சரீரத்தைக் கொண்டு பாய்ந்த வில்வலனின் பட்டாக் கத்தியைச் சற்றுத் தூரத்திலேயே தடுத்து நின்றது இளையபல்லவனின் நீண்ட வாள். அந்த வாள் தன் வாளைப்போல் அத்தனை பட்டையில்லையென்றாலும் அது மிகவும் உறுதியாயிருந்ததை அதன் தாக்குதலினாலேயே உணர்ந்துகொண்ட வில்வலன் மீண்டும் மீண்டும் தன் வாளை இளையபல்லவனை நோக்கி வீசினான். ஒவ்வோர் முறையும், சர்வ சாதாரணமாக அந்த வாளைத் தடுத்தது இளையபல்லவன் வாள்.

நேரம் ஓடியதே தவிர, சண்டை ஒரு முடிவுக்கு வர வில்லை . வில்வலன் ஓடி ஓடித் தாக்கினான். இளைய பல்லவனைச் சுற்றி சுற்றி வந்து பல திக்குகளிலும் தாக்கினான். ஆனால் நின்ற இடத்தை விட்டு இரண்டு அடிகளுக்கு மேல் நகராத சோழர் படைத்தலைவன் வில்வலனின் வாளை மெள்ளத் திருப்பியே தன் வாளால் மடக்கினான். அந்தப் போர் செல்லும் முறையைச் சந்தேகத்துக்கு இடமின்றிப் புரிந்துகொண்ட பலவர்மன் ஓரளவு சாந்தியடைந்தான்.

அதிகமாகக் குதிப்பதாலும், தாவுவதாலும், கையை வேகம் வேகமாகத் தூக்கித் தூக்கிக் கீழே கொண்டு வருவதாலும் வில்வலன் தன் சக்தியின் பெரும் பாகத்தை இழந்துவிட்டதையும் உடலெல்லாம் வியர்த்து உடை நனைந்து பெருமூச்சு விட ஆரம்பித்து விட்டதையும், இளையபல்லவனோ தன்னை எந்த விதமாகவும் சளைக்கும்படி செய்துகொள்ளாமலும் தற்காப்புப் போர் செய்வதையும் கண்டு முடிவு பயங்கரமாயிருக்காதென்று தீர்மானத்துக்கு வந்தான் அக்ஷய முனைத் தலைவன்.

போரின் போக்கு, கொள்ளையருக்கும் புரிந்ததால் அவர்கள் ஆனந்தக் கூச்சலிட்டார்கள். ஆரம்பத்தில் திகைத்த அவர்கள் மாதர்களிற் சிலர், வில்வலன் ஓடிக் குதிப்பதைக் கண்டு கேலி செய்து நகைக்கவும் முற்பட்டார்கள். வில்வலன் நிதானமிழந்தான். முன்னை விட அதிவேகத்துடன் போரிட்டான். போரிடப் போரிட எதிரே வாளைச் சுழற்றிய வாலிபனின் பலமும் சாமர்த்தியமும் அவனுக்குத்தெள்ளெனப் புரியலாயிற்று.

தான் அதுவரை வாழ்வில் சந்திக்காத ஓர் இணையற்ற வாள் வீரனைச் சந்தித்துவிட்டதையும், ஆழம் தெரியாமல் காலிட்டுக்கொண்டதையும் உணர்ந்த வில்வலன், வேண்டு மென்றே எலியுடன் விளையாடும் பூனைபோலத் தன்னுடன் இளையபல்லவன் விளையாடுகிறான் என்பதையும் புரிந்து கொண்டான். ஆனால் அவன் இதயத்தில் அச்சமும் புகுந்து கொண்டது. தன் மரணம் சமீபித்துவிட்டதை அறிந்த வில்வலன் வீர மரணம் எய்தத் துணிந்து, இளையபல்லவனை வெகு அருகில் நெருங்கித் தன் வாளை நன்றாக வானில் ஓங்கி திடீரென இளையபல்லவனின் தலையின் மீது இறக்கினான்.

வில்வலன் பார்வையிலிருந்த உறுதி, வாள் இறங்கிய வேகம், இரண்டையும் கண்ட கூட்டம் இளையபல்லவன் இறந்தான் என்றே தீர்மானித்தது. அந்தத் தீர்மானத்தால் சோக மூச்சுவிட முயன்ற மறுகணமே கூட்டத்தின் சோக மூச்சு மகிழ்ச்சிக் கூச்சலாக மாறியது. அடுத்தகணம் வில்வலனின் பெரிய வாள் ஆகாயத்தில் பறந்து பந்த ஒளிகளில் பளபளத்து வெகு தூரத்தில் போய் விழுந்தது. இரவு நிகழ்ச்சி அந்தக் கட்டத்துடன் முடிந்திருந்தால் மகிழ்ச்சி முடிவு அன்று ஏற்பட்டிருக்கும். ஆனால் அடுத்த விநாடியே எதிர்பாராத விபரீதமொன்று அங்கு நிகழ்ந்தது. ஒரு கொலை நடக்கவே நடந்தது. ரத்தக்கறை மணலில் படிந்தது.

Previous articleRead Kadal Pura Part 2 Ch17 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch19 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here