Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch19 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch19 |Sandilyan | TamilNovel.in

143
0
Read Kadal Pura Part 2 Ch19 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch19 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch19 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 19 : புதிய பொறுப்பு.

Read Kadal Pura Part 2 Ch19 |Sandilyan | TamilNovel.in

மனிதனை எது விட்டாலும் விடாவிட்டாலும் இளமையில் ஏற்படும் பழக்க வழக்கங்கள் மட்டும் விடுவ தில்லை. இயற்கையின் காரணமாகவோ, செயற்கையின் காரணமாகவோ, பரம்பரையின் காரணமாகவோ, பக்கச் சூழ்நிலையின் காரணமாகவோ, இளவயதில் மனிதனைப் பிடித்துக்கொள்ளும் குணாதிசயங்கள் ஆயுள் முடியுமட்டும் அவனைப் பீடிக்கவே செய்கின்றன. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்ற தமிழ்ப் பழமொழி காரணமில்லா மலா ஏற்பட்டிருக்கிறது?

வாழ்க்கையின் அனுபவத்தின் காரணமாக ஆன் றோர்களால் வகுக்கப்பட்ட அந்தப் பழமொழியை இளைய பல்லவன் அறிந்து தானிருந்தான். ஆனால் அத்தகைய ஒரு தொட்டில் பழக்கம் சுடுகாட்டையே அன்று கடற்கரை மணலில் சிருஷ்டிக்கும் என்பதை அவன் கனவில்கூட எதிர்பார்க்கவில்லை. அப்படி எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட அந்த விபரீதம் எதற்கும் கலங்காத அவனை மட்டுமல்ல, கடற்கரையில் குழுமி நின்ற அந்த மாபெருங்கூட்டத்தையே திக்பிரமையில் ஆழ்த்திவிட்டது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்துவிட்ட அந்த விபரீதத்துக்குக் காரணம் அனைவருக்கும் புரிந்திருந்தாலும், குற்றம் யாருடையது என்பதும், சந்தேகத்துக்கு இடமில்லா திருந்தாலும், கண்ணெதிரே மணலில் சாய்ந்து கிடந்து குருதியில் தரையை நனைத்துக் கொண்டிருந்த அந்த மனிதனுடைய மரணத்தால் எந்த விநாடியிலும் அந்தக் கொலையைவிடப் பன்மடங்கு அதிகமான விபரீத நிகழ்ச்சிகள் அந்தக் கடற்கரையில் ஏற்படலாம் என்ற நினைப்பு அங்குக் குழுமியிருந்த மக்களிடையே பெரும் கிலியை விளைவித்திருந்ததால் மூச்சு விடும் சக்தியைக் கூட இழந்தது போல் அந்தக் கூட்டம் நின்றிருந்தது.

திடீரென மின்னல் வேகத்தில் அமீரின் குறுவாள் விளைவித்துவிட்ட அந்தக் கோரக் கொலைக்கு அமீரை எந்தவிதத்திலும் குறைகூற முடியாதென்பதை இளைய பல்லவன் உணர்ந்தே இருந்தான். வெகு வேகமாகத் தன் தலைமேல் இறங்கிய வில்வலன் வாளைத் தன் வாளால் தடுத்துச் சரேலென்று கீழே இறக்கி, பாலூர்ப் பெருந் துறையில் காஞ்சனாதேவி தன்னிடம் கையாண்ட அதே முறையைக் கையாண்டு தன் வாளால் வில்வலன் வாளை ஒரு சுழற்று சுழற்றிக் கையை விட்டுப் பறந்து போகும்படி செய்ததும், அன்றைய இரவு நிகழ்ச்சியின் முடிவு இன்பம் ததும்பும் சுபமுடிவாக இருக்குமெனவும் நினைத்தான் இளையபல்லவன்.

ஆனால் வில்வலன் எச்சரிக்கையால் கட்டுப்பட்டிருந்தாலும், பூர்வகுடித் தலைவர்களின் இயற்கைக் குணம் போகாதென்பதையும், அவர்கள் ஆக்ரோஷமும் கோபமும் வந்தால் எதற்கும் குறுவாளை எடுத்து வீசிவிடும் பழக்கமும் அவர்களை விட்டு விலகாதென்பதையும் எள்ளளவும் எண்ணாத இளையபல்லவன், வில்வலன் நிராயுதபாணியாய் இரைக்க இரைக்க எதிரில் நின்றதும் தன் வாளைப் பக்கத்திலிருந்த கண்டியத்தேவன் கையை நோக்கி எறிந்துவிட்டு வில்வலனைச் சமாதானப் படுத்தும் நோக்கத்துடன அவனை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தான்.

வில்வலன் போரில் சளைக்க ஆரம்பித்ததுமே, செய்த ஆணையையும் சொந்த நிதானத்தையும் இழந்துவிட்ட மற்ற மூன்று பூர்வகுடித் தலைவரிகளில் ஒருவன், வில்வலன் வாள் ஆகாயத்தில் பறந்ததுமே அடியோடு நிலைகுலைந்து போய், தன் குறுவாளை இடைக் கச்சையிலிருந்து உருவி இளையபல்லவனை நோக்கிக் குறிவைத்துக் கையை ஓங்கினான். நால்வர் வந்த சமயத்திலிருந்தே அவர்களிடம் சிறிதும் நம்பிக்கை வைக்காமல், அவர்கள் மீதும் ஒரு கண் வைத்துக் கொண்டேயிருந்த அமீரின் பெரு விழிகள், அந்தத் தலைவனின் முகபாவத்தையும் அவன் கை இடையை நாடிக் குறுவாளைச் சரேலென எடுத்ததையும் கவனித்தன.

அந்தத் தலைவன் அந்தக் கையைக் குறி வைக்கும் மட்டுமே பொறுத்த அமீரின் வலது கை மின்னல் வேகத்தில் தனது இடையிலிருந்து எடுத்த குறுவாளை வீசிவிடவே, குறி வைத்த கை குறி வைத்தபடியே ஆகாயத்தை நோக்கி நிற்க, அலற முயன்ற வாய் அகலத் திறந்தபடியே நின்றுவிட, பேச்சு மூச்சில்லாமல் வேரற்ற மரம் போல் மணலில் ‘தட்’ என்ற சத்தத்துடன் சாய்ந்துவிட்டான் அந்தப் பூர்வகுடித் தலைவன். இம்மிகூட அப்படியோ இப்படியோ அகலாமல் சரியாக இதயத்தின் மத்தியில் ஒரு எலும்பையும் முறித்துக் கொண்டு ஊடுருவிப் பாய்ந்துவிட்ட அமீரின் குறுவாளின் பிடி, மிகப் பயங்கரமாக மல்லாந்து கிடந்த அந்தத் தலைவனின் மார்பில் நட்டுக்கொண்டு நின்றது. அதிலிருந்து குமிழியிட்ட குருதி மணலில் ஊறிக் கொண்டிருந்தது.

மிகப் பயங்கரமாக நிகழ்ந்துவிட்ட அந்த விபரீதத்தில் இளையபல்லவன் மட்டுமல்ல, வில்வலனும் பலவர்மனுங்கூடத் திக்பிரமையடைந்து சில விநாடிகள் என்ன செய்வ தென்றறியாமல் நின்றுவிட்டார்கள். திக்பிரமையடைந்த அந்த அத்தனை பேரையும் ஊடுருவியது அமீரின் ராட்சதக் குரல். “எங்கள் தலைவர் இங்கு யாரையும் கொல்ல வரவில்லை . கொலையைத் தடுக்க வந்தார். அவர் முதுகுப் புறத்தில் முதலில் கத்தி வீசப்பட்டது. இப்பொழுது அறப்போரிட்டு வில்வலனைக் கொல்ல இஷ்டப்படாமல் நிராயுத பாணியாக்கிப் பிழைக்கவிட்ட அவர் மார்புக்குக் கத்தி குறி வைக்கப்பட்டது.

ஆகையினால்தான் இன்பமாக முடிய வேண்டிய இந்த விழாவில் இப்படியொரு அனாவசியக் கொலை நடந்தது. எனது கச்சையில் இன்னும் மூன்று குறுவாள்கள் இருக்கின்றன. எங்கள் தலைவருக்குத் தீங்கிழைக்க யார் அசைந்தாலும் அதோ அந்தக் கொலைஞனுக்கு ஏற்பட்ட முடிவு ஏற்படுமென்பதில் சந்தேகம் வேண்டாம்,” என்று கடுமையுடனும் கரகரப்புடனும் அரம் அரத்தோடு ராவினால் ஏற்படும் ஒலியில் எழுந்த அமீரின் சொற்களைக் கேட்ட வில்வலனும் பலவர்மனும் மற்றும் பலரும் அமீர் இருந்த இடத்தை நோக்கினார்கள்.

வட்டமாக நின்ற கூட்டத்திலிருந்து இரண்டடி முன்னால் தள்ளியும், சண்டையிட்ட இருவர், பலவர்மன், முடிந்தவன் ஒருவன் போக மீதியிருந்த இரண்டு பூர்வகுடித் தலைவர்கள், இவர்கள் அத்தனை பேரையும் கூடிய வரையில் கவனிக்கும் வகையிலும், குறுவாள்கள் செருகியிருந்த இடைக்கச்சையை வலது கையால் தடவிக் கொண்டும் நின்றிருந்தான், அமீர். அவன் இதழ்களில் குரோதக் குறுநகை மண்டிக் கிடந்தது. பெரிய விழிகளில் பயங்கரப் பார்வையிருந்தது.

அங்கிருந்த பெரும் கூட்டத்தையே நாசமாக்கி விடக்கூடிய பெரிய அரக்கன் போல் காட்சியளித்த அமீரைக் கண்டு எதற்கும் அஞ்சாத பூர்வகுடி வீரர்களும் அச்சமடைந்தார்கள். யார் இளைய பல்லவனை நோக்கி அசைந்தாலும் அங்கேயே பிணமாக்கி விடவல்ல அரக்கன் கட்டளையை மீறி அசையத் தைரியமில்லாமல் அந்தக் கூட்டம் முழுதுமே பீதியடைந்து சலனமற்று நின்றது.

திடீரென நிகழ்ந்துவிட்ட கொலையின் விளைவாகத் திகைப்பெய்திய வில்வலனை அணுக எடுத்த முயற்சியைக் கைவிட்டுச் சட்டென்று நின்ற இடத்திலேயே ஒரு விநாடி நின்றுவிட்ட இளையபல்லவன், அமீர் மற்றவர்களை எச்சரித்து முடிந்ததும் தனது கண்களால் பலவர்மனையும் மற்றவர்களையும் ஒருமுறை ஏறெடுத்து நோக்கினான். அமீரின் வன்சொற்கள் வெற்றுச் சொற்களல்ல என்பதை அவர்கள் அனைவரும் உணர்ந்து கொண்டிருப்பதையும், அத்தனை பேரும் அப்பொழுது நிகழ்ந்த கொலையைவிட அடுத்து நிகழ இருக்கும் விளைவுகளைப்பற்றியே கவலையுடனிருப்பதையும் புரிந்துகொண்டு தனது நடைமுறையை நிர்ணயித்துக் கொண்டான்.

அனைவரையும் அமைதியுடனிருக்கும்படி கையமர்த்திய இளையபல்லவன் வில்வலனை ஏறெடுத்துச் சில விநாடிகள் நோக்கிவிட்டுக் கேட்டான்: “இந்த விபரீதத்தை இத்துடன் நிறுத்தலாமா மேற்கொண்டு இதன் விளைவுகள் தொடர வேண்டுமா?” என்று.

வில்வலன் முகம் கோபத்தால் கொதித்ததா, பயத்தால் வியர்த்ததா, துன்பத்தால் துக்கித்ததா என்று சொல்ல முடியாதபடி பலவித மாறுபாடுகளை அடைந்து கொண்டிருந்தது. சற்று தூரத்தே இறந்து கிடந்த தன் சக தலைவனையும் பார்த்துப் பலவர்மனையும் பார்த்தான் அவன் ஒரு விநாடி. அமீர் எச்சரிக்கை செய்து முடிந்ததுமே தன் உணர்ச்சிகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அர்த்தபுஷ்டியுடன் தன் காவல் வீரர்களையும் பார்த்துவிட்ட அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவன் முகத்திலிருந்து அவனது மனப்போக்கை எந்தவிதத்திலும் புரிந்துகொள்ள முடியாத வில்வலன் தனது மற்ற இரு சகாக்களையும் நோக்கினான். அவர்கள் முகத்தில் கோபத்திற்குப் பதில் அச்சமே நிலவிக் கிடந்ததைக் கண்டதும் மிகுந்த வெறுப்புடன் மறுபடியும் இளைய பல்லவனை ஏறிட்டு நோக்கினான். அந்த வெறுப்பு பூர்ணமாக மண்டிய குரலில், “எனது நண்பர்களில் ஒருவன் இறந்து கிடக்கிறான்,” என்று கூறவும் செய்தான்.

“வருந்துகிறேன். ஆனால் குற்றம் என்னுடையதல்ல. ” திட்டமாக வந்தது இளையபல்லவன் பதில்.

“குறுவாளெறிந்தவன் உனது உப தலைவன்,” என்று எரிச்சலுடன் சுட்டிக் காட்டினான் வில்வலன்.

“தலைவனின் கொலையை விரும்பாத உப தலைவன் அவன்,” என்று பதிலிறுத்தான் இளையபல்லவன்.

“இறந்த எனது நண்பனுக்குச் சுற்றம் அதிகம். அவர்களுக்கு என்ன பதிலை நான் சொல்வது!”

“செய்த குற்றத்தை எடுத்துச் சொல். “

“கொலை முயற்சியைக் குற்றமென்று எங்கள் குலத்தார் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். “

“ஏன்?”

“கொலை எங்களுக்குச் சர்வ சகஜம். அது எங்களுக்குப் பழக்கம். “

“அந்தப் பழக்கத்தையும், இங்கு வருடா வருடம் ஏற்படும் குழப்பத்தையும், தடுக்க அகூதாவின் உபதலைவன் வந்திருக்கிறானென்று உன் குலத்தாருக்குச் சொல். “
“சொல்கிறேன். ஆனால் அதன் விளைவு-” “விளைவு என்ன?”

“பலவர்மனுக்குத் தெரியும்,” என்று கூறிய வில்வலன், இளையபல்லவனை நோக்கி முதுகைத் திருப்பிக் கொண்டு தூர விழுந்து கிடந்த தனது கத்தியைக்கூடத் திரும்பிப் பெற முயலாமல் விடுவிடுவென தனது சகாக்களை நோக்கி நடந்தான். தனது வீரர்களில் இருவருக்குக் கண்ணால் சமிக்ஞை செய்து இறந்தவன் சடலத்தைத் தூக்கிவரச் செய்து அந்தக் கூட்டத்தை விட்டு வெளியேறினான். அவன் சகாக்கள் இருவரும் துணைவீரர் ஐம்பதின்மருங்கூட அவனைத் தொடர்ந்து சென்றார்கள். அவர்கள் கண்ணுக்கு மறையும் வரையில் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த கூட்டம் அவர்கள் உருவங்கள் மெள்ள மறைந்ததும் இளையபல்லவனை நோக்கின. இளையபல்லவன் ஏதோ பெரும் சங்கடம் நீங்கியதற்கு அறிகுறியாக சாந்திப் பெருமூச்சு விட்டுப் பலவர்மனை நோக்கினான்.

வாள்போர் தொடங்கிய விநாடியிலிருந்தே ஆச னத்தைவிட்டு வேறுபக்கம் வந்துவிட்ட பலவர்மன் அத்தனைக்குப் பிறகும் திரும்ப ஆசனத்தை நாடாமல் நின்ற இடத்திலேயே நின்றான். வில்வலன் இருந்தவரையில் கட்டுண்டு கிடந்த அவன் உணர்ச்சிகள் வில்வலனின் தலை மறைந்ததும் சிதறிவிடவே இளையபல்லவனை எரித்து விடுவதுபோல் பார்த்தன அவன் கண்கள். “இளைய பல்லவரே! இன்றைய நிகழ்ச்சியில் நீங்கள் நெருப்பை அணைத்துவிட்டதாக மனப்பால் குடிக்க வேண்டாம்.

இப்பொழுதுதான் நெருப்பைக் கிண்டி விட்டிருக்கிறீர்கள். அந்த நெருப்பு இந்தக் கோட்டை, இங்குள்ள மக்கள், உமது கப்பல் அனைத்தையும் சுட்டெரிக்கப் போகிறது. இதுவரை வருடா வருடம் ஒருநாள் மட்டும் இந்தக் கடற்கரையில் சில கொலைகள் நடக்கும். இனி ஒவ்வொரு நாளும் கொலை, களவு, மக்கள் கடத்திச் செல்லப்படுதல் அனைத்தும் அக்ஷயமுனையில் நடக்கும். பதக் இனத்தாரின் பழி வாங்கும் சுபாவம் எத்தன்மையது என்பதை நாமனைவரும் வெகு சீக்கிரம் உணருவோம்” என்ற சொற்களைக் கனற்பொறிகள் போல் உதிர்த்தான் பலவர்மன்.

அவன் வார்த்தைகள் அங்கு குழுமியிருந்த கோட்டைக் குடிகளிடமும் கடற்கரைக் கொள்ளைக் கூட்டத் திடமும் மிகுந்த அச்சத்தை விளைவித்ததை அவர்கள் முகபாவங்களிலிருந்து கண்டுபிடித்த இளையபல்லவன், மிகுந்த நிதானத்துடன் பதில் சொன்னான்; “மக்களைக் காக்க வேண்டியது மன்னன் கடமை. ஸ்ரி விஜய மன்னனின் பிரதிநிதி இங்கு நீர். இங்கு நாகரிக நிர்வாகம் நடக்காததால் அநாகரிகப் பூர்வகுடிகளின் கொடுமைக்குச் சாதாரண குடிமக்கள் பலியாக வேண்டியிருக்கிறது.

உங்கள் காவலரைப் பலப்படுத்துங்கள் பலவர்மரே! ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியொருவன் காட்டிமிராண்டிகளுக்குப் பயந்து அநாகரிக அரசாங்கம் நடத்தினான் என்ற அவப்பெயர் சரித்திரத்தின் ஏடுகளில் ஏறாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். மக்களின் துணிவும் அரசாங் கத்தின் திறமையும் இணைந்தால் சாதிக்க முடியாதது உலகத்தில் எதுவும் இல்லை. என்னைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நான் இந்தக் கொள்ளையருடன் கடற்கரையில் தங்கப்போகிறேன். இன்னும் சில நாள்களுக்குள் இந்தக் கடற்கரையில் பூர்வகுடிப் பிசாசுகளின் நடமாட்டம் ஒடுக்கப்படும். மனிதனைத் தின்னும் அந்த அநாகரிக வர்க்கத்தின் காற்று இந்தப் பக்கத்தில் அடிக்காது. நீங்கள் ஒத்துழைத்தால் கோட்டைக்குள்ளும் அவர்கள் நடவடிக்கையை நாங்களே ஒடுக்குவோம். “

மிகுந்த அலட்சியத்துடனும், துணிவுடனும் இளைய பல்லவன் கூறிய அந்தச் சொற்களுக்குப் பதில் சொல்லும் நிலையில் பலவர்மன் இல்லை. அவன் உள்ளத்தில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்து சுழன்று கொண்டிருந்தன. அந்த இரவு நிகழ்ச்சியில் அதுவரை ஏற்படாத பல அரசியல் சிக்கல்கள் ஏற்பட்டுவிட்டதை அறிந்ததால் விவரமான பதிலேதும் சொல்லாமல், “மீண்டும் நாம் சந்திப்போம்,” என்று கூறிவிட்டுக் கடற்கரையை விட்டுச் செல்ல வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யத் தன் வீரர்களுக்கு உத்தரவிட்டான் பலவர்மன். இரண்டே நிமிடங்களில் அவனது பொன்னிறப் புரவியும் மஞ்சளழகியின் வெண்ணிறப் புரவியும் கொண்டு வரப்பட்டன.

தனது புரவியில் ஏறிக்கொண்ட பலவர்மன் அனைவரும் செல்லலாம் என்பதற்கு அறிகுறியாகக் கூட்டத்தை நோக்கிக் கையை ஆட்டினான். அதுவரை பலதரப்பட்ட உணர்ச்சிகளின் வசப்பட்டு நடன மேடையில் நின்ற மஞ்சளழகி மேடையைவிட்டு இறங்கித் தனது புரவியருகில் வந்தாள். இளையபல்லவன் அவளை அணுகி அவளுக்குக் கைலாகு கொடுத்து இடையையும் மற்றொரு கையால் தாங்கி அவள் புரவிமீது ஏற உதவினான். புரவி மீதமர்ந்த அவள் அவனை நோக்கிப் புன்முறுவல் கோட்டினாள். தன் இடையில் அப்பொழுதும் பதிந்து நின்ற அவன் கையைத் தன் கை விரல்களால் லேசாக அழுத்தவும் செய்தாள். அடுத்த விநாடி பெரும் குழப்பத்துக்குள்ளானவள் போல் திடீரெனப் புரவியைத் தட்டிவிட்டாள். அந்தப் புரவியின் வேகத்துக்கிணையாகப் பலவர்மன் புரவியும் விரைந்தது. முன்னும் பின்னும் காவலர் சென்றனர்.

அவர்கள் கோட்டையை அணுகிக் கோட்டைக்குள் நுழையும்வரையில் அவர்களையே பார்த்துக்கொண்டு நின்ற இளையபல்லவன் கடைசியாகத் திரும்பி அந்தக் கொள்ளைக் கூட்டத்தை நோக்கினான். அங்கு யார் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை. அச்சமும் துன்பமுமே மண்டிக் கிடந்தன. இன்பத்தில் துன்பமிருப்பதால் மஞ்சளழகி சொன்னது எத்தனை உண்மையென்பதை நினைத்த இளையபல்லவன் மிகுந்த மனச் சங்கடத்துடனேயே தனது மாலுமிகளுடன் தனது மரக்கலத்தை அடைந்தான். மரக்கலத்தை அடைந்தவன் நேராகத் தனது அறைக்குச் சென்று பஞ்சணையில் படுத்தான்.

படுத்து நிலைமையைச் சிந்திக்கச் சிந்திக்கத் தனக்குச் சம்பந்த மில்லாத பெரும் பொறுப்புகள் தனது தலையில் சுமத்தப் படுவதை உணர்ந்தான். அவன் எத்தனையோ பொறுப்புகளைப் பற்றி நினைத்தான். ஆனால் அவன் அடியோடு நினைக்காத, அணுவளவும் எதிர்பார்க்க முடியாத, மற்றொரு பொறுப்பும் அன்றிரவில் அக்ஷயமுனைக் கோட்டைக்குள் உருவாகிக் கொண்டிருந்ததை அவன் உணரவில்லை. அதை மட்டும் அவன் உணர்ந்திருந்தால் கண்டியத்தேவன் இஷ்டப்பட்டாலும் இஷ்டப்படா விட்டாலும் அன்றிரவே அந்தத் துறைமுகத்தை விட்டுத் தன் மரக்கலத்தை வெளிக்கிளப்பியிருப்பான். விதி அவனை ஓட விடவில்லை. அந்தப் பொறுப்பெனும் தளையை அவன் கால்களுக்குப் பூட்டவே செய்தது.

Previous articleRead Kadal Pura Part 2 Ch18 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch20 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here