Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch2 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch2 |Sandilyan | TamilNovel.in

114
0
Read Kadal Pura Part 2 Ch2 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch2 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch2 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 2 : துணிவின் எல்லை.

Read Kadal Pura Part 2 Ch1 |Sandilyan | TamilNovel.in

அக்ஷயமுனைக் கோட்டையின் துரிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கோட்டைக்கு முன்பாக மணல் வெளியில் கட்டப்பட்டிருந்த மூங்கில் குடிசைகளை நோக்கி விரைந்த மாலுமிக் கூட்டத்தின் குடும்பங்களையும், தனது மரக்கலப் பாய்மரத் தூணில் சாய்ந்த வண்ணமே கவனித்த அந்த அசுரக் கப்பலின் தலைவன் இதழ்களில் புன்முறுவலொன்று பெரிதாக விரிந்தது. அதைச் சேர்ந்து விரிந்த அவன் கண்களும், ஒருமுறை நாலாப்புறத்திலும் சுழன்று அந்தத் துறைமுகத்தின் தன்மையையும் பாதுகாப்புப் பலத்தையும் நிதானமாக அளவெடுத்தன.

தன் மரக்கலம் செல்லும் நீர் வழியைச் சுற்றிலும் ஐந்தாறு பெரும் மரக்கலங்கள் நிற்பதையும் அந்த மரக்கலங்களில், போர்க்கலங்களும் பொருத்தப்பட்டிருந்ததையும் கவனித்த அவன், வலுவுள்ள சிறு கடற்படையின் அரணுக்குள் தான் நுழைவதைப் புரிந்துகொண்டான்.

அதைத் தவிர அக்ஷயமுனைத் துறைமுகத்தை வளைத்தன போல் சக்கரவட்டமாகத் தூரத்தே தெரிந்த சிறுசிறு தீவுகளிலிருந்தும் புகை வந்துகொண்டிருந்ததால் அந்த இடங்களிலும் சின்னஞ்சிறு காவற்படைகளிருப் பதையும் அவன் புரிந்துகொண்டான். போதாக்குறைக்கு, சற்று எட்டத் தெரிந்த மலைச்சரிவிலிருந்த கோட்டை பலமான மதில்களை உடையதாகவும், வேலெறியும் பெரும் விற்கூடங்களையும் மற்றும் பல போர்ச் சாதனங்களை உடையதாகவும் காட்சி அளித்ததையும் கவனித்தான் அவன்.

தவிர அந்தக் கோட்டை மதிலின் தளமும் விசாலமாக இருக்க வேண்டுமென்பதைப் பாதுகாப்பை முன்னிட்டுத் திடீரென உலாவிய வீரர்கள் வரிசையிலிருந்தும் ஊகித்துக் கொண்டான் அந்த அசுரக்கப்பலின் தலைவன். இத்தகைய பெரும் பாதுகாப்புகளையும், இயற்கை யரண்களையும் உள்ள துறைமுகமும் கோட்டையும் பரம அயோக்கியன் ஒருவன் கையில் இல்லாமல் சொந்த நாட்டு நலனை மதிக்கும் ஒரு தியாகியின் கையில் இருந்தால் அந்த நாடு நிரந்தரப் பாதுகாப்பை அடைந்த நாடாக இருக்குமே என்று அவன் முதலில் எண்ணினாலும், அப்படிப்பட்ட நாட்டுப் பற்றுடையவன் கையில் அந்தத் துறைமுகம் மட்டுமிருந்தால் தன் எண்ணங்களும் திட்டங்களும் தவிடு பொடியாகி விடுமே என்பதை நினைத்து அக்ஷயமுனையின் அன்றைய நிலையைப் பார்த்துப் பெரிதும் திருப்தியடைந்தவனாய்ப் பெருமூச்சு ஒன்றும் விட்டான்.

இத்தனை பாதுகாப்பிருந்தும் பெரும் கொள்ளைக்காரர்கள் துறைமுகத்தின் முகப்பிலிருந்தும் தனது கப்பலின் கொம்புகள் ஊதியதும் அவர்கள் பயந்து பறந்தோடுவதைக் கண்டு அவன் ஆச்சரியம் சிறிதும் கொள்ளவேயில்லை. அப்படி அவர்கள் ஓடுவதற்குத் தன் வீரமும், கப்பலின் திறமையும் காரணமல்லவென்பதை அவன் சந்தேகமற உணர்ந்தே யிருந்தானாகையால் கப்பலைத் துறைமுகத்துக்குள் நன்றாகக் கொண்டுவந்து நங்கூரம் பாய்ச்ச முற்படு முன்பாக, தன் கையால் சமிக்ஞை செய்து, கப்பலின் பின்புறக் கோடியிலிருந்த இரு மாலுமி களை அருகே வரவழைத்தான்.

வந்த மாலுமிகள் இருவர் முகத்திலும் ஈயாடவில்லை . அக்ஷயமுனைக்கு வந்ததில் தங்கள் தலைவன் ஆழம் தெரியாமல் காலிட்டுக் கொண்டிருக்கிறான் என்ற நினைப்பாலும், கப்பல் யாருடையது என்று தெரிந்த மாத்திரத்தில் அக்ஷய முனைக் கொள்ளைக்காரரும் காவலனும் அதைச் சில நிமிஷங்களில் அழித்துவிடுவார்களென்பதும், கப்பலைச் சேர்ந்தவர்கள் உடல்களிலிருந்து உயிர்கள் பயங்கர முறையில் நீக்கப்பட்டுச் சடலங்கள் கழுகுகள் கொத்த மலைப் பாறைகளில் வைக்கப்படுமென்பதையும் அறிந்திருந்த அவர்கள் முகங்களில் பெரும் கிலி பரவியிருந்தது.

அந்தக் கிலியைக் கண்ட கப்பலின் தலைவன் சற்றுப் பெரிதாகவே நகைத்து, “அமீர்! கண்டியத் தேவரே! உங்கள் உள்ளங்களிலும் அச்சமிருக்கிறதென்பதை இன்றுதான் புரிந்துகொண்டேன். உங்கள் முகங்களைப் பார்த்தால் தூக்கு மேடைக்குச் செல்லும் பயங் கொள்ளிகளைப் பார்க்கத் தேவையில்லை” என்றான்.

அக்ஷயமுனையின் பயங்கரத்தை அறிந்திருந்தும் அப்படி அநாயாசமாக நகைத்த தங்கள் தலைவனை ஏறெடுத்து நோக்கிய அந்த இரு மாலுமிகளில் அமீரே துணிவுடன் சொன்னான், “துணிவு அறிவை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும், இளைய பல்லவரே” என்று.

அந்தச் சொற்களையும், அதில் தொனித்த வெறுப்பையும் கவனித்த இளையபல்லவன் நகைப்பைச் சற்று நிறுத்திக் கொண்டானானாலும் புன்முறுவலை மட்டும் உதடுகளிலிருந்து விலக்காமலே மீண்டும் அமீரை உற்று நோக்கி விட்டு, “அறிவை மனிதன் அளவுக்கதிகமாக உபயோகப் படுத்தும்போது துணிவு விலகிவிடுகிறது. எதற்கும் அளவு வேண்டும்” என்று ஏளனம் சொட்டும் குரலில் கூறினான்.

இதைக் கேட்ட அமீரின் பெரு உடல் ஒருமுறை அசைந்தது. ராக்ஷச விழிகள் விரிந்தன. இதழ்களிலும் ஏளன நகையொன்று விரிந்தது. “அறிவு அதிகம் கூடாது என்கிறீர்களா? அறிவாளியான நீங்களே இதைச் சொல்வது வியப்பாயிருக்கிறது எனக்கு” என்றான் அமீர்.

“அறிவுக்கு அளவு வேண்டுமென்று கூறவில்லை அமீர், அதை உபயோகப்படுத்துவதில் அளவு வேண்டுமென்று கூறினேன். அதியுக்தி ஆபத்து என்பது வடமொழிப் பழமொழி. எதிலும் அதிகப்படியைக் கைவிட வேண்டு மென்று வடமொழி சுலோகமும் இருக்கிறது” என்று இளையபல்லவன் தனது வடமொழி வல்லமையைக் காட்டினான்.

மொழி வளத்திலோ அதன் ஆராய்ச்சியிலோ சிரத்தை காட்டாத அமீர், ‘இப்பொழுது எந்த அளவில் அறிவைக் காட்ட வேண்டுமென்று அபிப்பிராயப்படுகிறீர்கள்?” என்று விசாரித்தான்.

“அச்சத்தைத் தவிர்க்கும் அளவுக்கு,” மிகவும் நிதானமாக வந்தது இளையபல்லவன் பதில். அவன் குரலிலும் தோரணையிலும் உதித்த நிதானத்தைக் கண்டு அமீர் மட்டுமல்ல கலிங்கத்தின் சுங்க அதிகாரியாயிருந்த கண்டியத்தேவன் கூட வியப்படைந்தான். கலிங்கத்தின் பாலூர்ப் பெருந்துறையில் கால் வைத்த முதல் நாளன்று சுங்கச் சாவடியில் தான் பீமனைப் பற்றிக் கூறியதுமே வெகுண்டு முன் கோபத்துடன் இரைந்து பலத்த ஆபத்துக்குள்ளான இளையபல்லவன் ஒரு வருட காலத்துக்குள் அடைந்துவிட்ட நிதானத்தை எண்ணி ஆச்சரியப்பட்டான்.

அமீர் அதற்காக மட்டும் ஆச்சரியப்படவில்ல. தனது குருநாதரான அகூதாவின் குணங்களில் சிறந்தவற்றை ஒரே வருட காலத்தில் கைக்கொண்டுவிட்ட இளையபல்லவனின் அபாரத் திறமையைப் பற்றி எண்ணியதோடு மனிதர்களைத் திறமைசாலிகளாக அடிக்க அகூதாவுக்கு இருந்த வல்லமையையும் எண்ணி வியப்படைந்தான்.

கிறிஸ்துவுக்குப் பிறகு ஏற்பட்ட சகாப்தத்தின் 1063ஆவது வருஷத்தில் கலிங்கத்தின் பாலூர்ப் பெருந் துறையில் வந்திறங்கிய இளைய பல்லவனுக்கும், சரியாக ஒரு வருஷம் கழித்துப் பெரும் மரக்கலத்தின் தலைவனாய் இணையற்ற துணிவுடன் சொர்ணபூமியின் அக்ஷயமுனைத் துறைமுகத்தில் நுழைந்து நங்கூரம் பாய்ச்ச முற்பட்ட இளைய பல்லவனுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கத்தான் செய்தது. ஒரு வருடத்துக்கு முன்னால் அவன் முகத்திலிருந்த துடிப்பும் முன்கோபமும் மறைந்து அவற்றின் இடத்தைப் பெரும் நிதானமொன்று ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.

முகத்தில் பெரும் சாந்தமும் எல்லையற்ற நிதானமும் தெரிந்தாலும் உள்ளம் சதா ஊசி முனையில் மிகுந்த எச்சரிக்கையுடனிருப்பதைப் பளிச்சு பளிச்சென்று ஜொலித்த ஈட்டி விழிகள் நிரூபித்தன. அந்த ஒரு வருடத்தில் தனக்கேற்பட்ட நிதானத்தைப் பற்றி இளையபல்லவனே ஆச்சரியப்பட்டான். அத்தனை நிதானத்துக்கும் தனக் கேற்பட்ட கப்பலோட்டும் திறமைக்கும் சீனக் கொள்ளைக் காரனான அகூதா அளித்த பயிற்சியே காரணமென்பதை அவனும் அடிக்கடி தன்னுள் சொல்லிக் கொண்டிருந்தான். அந்த ஒரு வருடத்தில் அவன் அடைந்த அனுபவங்கள் பலதரப்பட்டவை.

ஒரு வருடமாகத் தான் உயிரோடு இருப்பதே பெரும் பிரம்மப்பிரயத்தனம் என்று நினைத்தான் அவன். பாலூர்ப் பெருந்துறையில் காஞ்சனாதேவியையும், அநபாயரையும் காப்பாற்றத் தான் தன்னைப் பலி கொடுக்கத் தீர்மானித்துத் தன்னந்தனியே பீமனையும் அவன் வீரர் கூட்டத்தையும் எதிர்த்து நின்றதை நினைத்துப் பார்த்த இளையபல்லவன், அந்தப் போரில் தான் மடியப் பல தடவை வழியிருந்தும், எப்படியோ தப்பிவிட்டதை எண்ணிப் பார்த்தான்.

பீமன் எறிந்த வேலினால் ஏற்பட்ட காயத்தின் இரத்தப் போக்கினாலும் கட்டுக் கடங்காத வெறி பிடித்த அரபுப் புரவிகள் தன்னைத் தள்ளி அவற்றின் குளம்புகள் இரண்டு மண்டையில் தாக்கியதாலும் தான் மரணவேதனையுடன் மூர்ச்சையாகித் தரையில் விழுந்ததையும் சிந்தித்தான். ‘அதிலேயே நான் மரணமடைந்திருக்கலாம். அப்படி மரணமடையாவிட்டாலும், பீமனின் வீரர்கள் வாள் பாய்ச்சி என்னைக் கொன்றிருக்கலாம். கொல்லவில்லை. நான் மரணமடைந்து விட்டதாக நினைத்து அவர்கள் போயிருக்க வேண்டும். இல்லையேல்–‘ என்று நினைத்துப் புன்முறுவல் கொண்டான்.

அப்படி நிலத்தில் குளம்படி பட்டு வீழ்ந்தபிறகு நடந்த காரியங்கள் ஏதோ சொப்பனம்போல் அவன் நினைப்பில் இருந்து கொண்டிருந்தன. குளம்படி பட்டு மூர்ச்சையானதான் இரண்டு விநாடிகளுக்கெல்லாம் மூர்ச்சை தெளிந்து எழுந்ததும், தள்ளாடித் தள்ளாடிக் குறுக்கே வந்த ஒரு வெறி பிடித்த புரவிமீது சிரமப்பட்டுத் தாவிப் படுத்துக் கொண்டதும், அந்தப் புரவி தெய்வச் செயலாக நீர்க் கரையை நோக்கி விரைந்ததும், லேசாக நினைப்பிலிருந்தது அந்த வாலிப வீரனுக்கு.

அதற்குப்பின் தான் பல நாள்கள் ஸ்மரணையற்றிருந்ததையும் அந்தப் பல நாள்களில் தன்னைத் தாங்கிய அகூதாவின் பெரும் கப்பல் அலை கடலில் பாய் விரித்து ஓடிக்கொண்டிருந்ததையும் அமீர் சொல்லக் கேட்டிருந்தான் இளையபல்லவன். “இளைய பல்லவரே! அகூதாதான் உங்களைக் காத்த தெய்வம். நான் ஓட்டி வந்த வண்டிக்கு ஒருவேளை ஆபத்து நேர்ந்து தப்ப முடியாவிட்டால் நம்மை வேறு வழியில் தப்புவிக்கவும் ஏற்பாடு செய்திருந்தார் என் குருநாதர். இதற்காக, கோதாவரி சங்கமத்திலிருந்து பல அடிகள் தள்ளி ஒரு தனிப்படகையும் தன் மாலுமிகள் சிலரையும் நிறுத்தித்தானும் நின்று போரின் நிலையைக் கவனித்துக் கொண்டிருந்தார். நீங்கள் போரில் மூர்ச்சையாகி விழுந்ததும் முரட்டுப் புரவி மீது படுத்ததும் அது கரை நோக்கி வந்ததும் எதையும் கவனிக்கத் தவறாத அவர் விழிகள் கவனித்தன.

ஆகவே எங்கள் வண்டி மடக்கப்பட்டு காஞ்சனாதேவியும் அநபாயரும் தப்பியதும் எங்களைத் தன் படகுக்கு வரும்படி சைகை செய்தார். நாங்கள் ஓடினோம். அதற்குள் உங்களைத் தாங்கிய புரவியும் நீர்க்கரை வந்து திடீரெனத் திரும்பியது. நீங்கள் புரவியிலிருந்து உருண்டு விழுந்தீர்கள். அகூதா உங்களை இரு கைகளால் தாங்கிக் கொண்டார். எங்களைத் துரத்திய வீரர்களைச் சீன மாலுமிகள் வெட்டிப் போட்டனர். வெகு துரிதமாகப் படகில் உங்களையும் எங்களையும் ஏற்றிக் கொண்டு அகூதா தன் மரக்கலத்துக்கு வந்து சேர்ந்தார். மரக்கலம் நங்கூரமெடுத்துப் பாய் விரித்தது. பிறகு பல நாள்கள் நீங்கள் காய்ச்சல் வசப் பட்டீர்கள். ஏதேதோ பிதற்றினீர்கள்” என்று அமீர் ஒரு வருஷத்துக்குமுன் அகூதாவின் கப்பலில் விளக்கிச் சொன்னது அன்றும் நினைப்பில் எழுந்தது இளைய பல்லவனுக்கு.

‘என்னென்ன பிதற்றினோம்!’ என்று எண்ணிப் பார்த்த அவன் முகத்தில் அப்பொழுதும் மந்தகாசம் விரிந்தது. பிதற்றியதை அமீர் ஜாடை மாடையாகத்தான் சொன்னானென்றாலும் மீதியைப் புரிந்துகொள்வதில் எந்தவிதக் கஷ்டமும் ஏற்படவில்லை அந்த வாலிபனுக்கு. “ஏதோ சாளரத்துக்குள் குதித்ததைச் சொன்னீர்கள். ஆடை… ஆடை… என்றீர்கள். பிறகு கோதாவரியில் நீராடு நீராடு என்றீர்கள். ஆடை உலர்கிறது என்றீர்கள்” என இப்படிப் பிதற்றலை விவரித்தான் அமீர். ஆனால் அமீர் முழுவதையும் சொல்லவில்லையென்பதைப் புரிந்து கொண்ட இளையபல்லவன், காரணத்தை உணர்ந்து பெருமகிழ்ச்சி கொண்டான்.

வெளிநாட்டுப் பிரமுகர் வீதியின் மாளிகைச் சாளரத்தில் ஏறிக் குதித்த போது தன்னெதிரே ஆடை புனைய வந்த பூங்கோதையும், கோதாவரியில் நீரில் திளைந்துவிட்டு மறைவில் ஆடை உலர்த்திய மோகனவல்லியும், கோதாவரிக் கரைக் குடிசையில் தன்னருகே நின்று நிரந்தரமாகத் தன்னை அடிமையாக்கிக் கொண்ட அந்தக் கட்டழகிக் கள்ளியும் ஒருத்தியே யென்றாலும் அவள் பல உருவங்களில் தன் மனத்தே எழுந்திருக்க வேண்டுமென்றும், சுரவேகத்தில் அவற்றைத் தான் விளக்கி வர்ணித்திருக்க வேண்டு மென்றும் விஷமியான அமீர் விஷயத்தை முழுதும் சொல்லாமல் மறைக்கிறானென்பதையும் எண்ணிய அவன் இதயத்தில் மகிழ்ச்சி நிரம்பி நின்றது.

இந்தச் சம்பவங்களும், அதையடுத்துத் தான் அகூதாவின் கப்பலில் காய்ச்சலாக இருந்து பிழைத்தபின் அகூதா தனக்குக் கப்பலோட்டவும் கப்பல் போர் புரியவும் அளித்த பயிற்சியும், நிதானத்தின் அவசியத்தை அவன் திரும்பத் திரும்ப வலியுறுத்தித் தன்னைப் பதனிட்ட திறமையையும் அந்தச் சமயத்தில் எண்ணிய இளைய பல்லவன், இத்தனை பயிற்சியுடைய தான் அக்ஷயமுனைத் தளத்தை எண்ணி அச்சப்பட அவசியமில்லையென்று நினைத்தான்.

சென்ற ஒரு வருட காலத்தில் சொர் ண பூமி வட்டாரங்களிலும் சீனக் கடல் வட்டாரங்களிலும் அகூதா செய்த பெரும் போர்களில் பங்கெடுத்துக் கொண்டுயாருக்கும் கிடைத்தற்கரிய பயிற்சியைப் பெற்றிருந்த இளையபல்லவன், எத்தனை எத்தனையோ அமானுஷ்யமான காரியங்களை அகூதா செய்திருப்பதை எண்ணிப் பார்த்தான். அகூதா அத்தகைய பெரும் சாதனைகளைச் சாதிக்க முடியுமானால் தான் மட்டும் ஏன் சாதிக்க முடியாது என்று நினைத்தும் பார்த்தான்.

செய்ய முடியும் என்ற உறுதி அவனுக்குப் பரிபூரணமாக இருந்ததற்கு அவன் முகத்தில் காணப்பட்ட நிதானமே சான்றாக நின்றது. தன் கப்பலின் கொம்புகள் ஊதப்பட்டதும் அக்ஷயமுனைக் கடற்பகுதியில் திரண்டிருந்த மாலுமிக் கூட்டங்களும் அவர்கள் குடும்பங்களும் ஓடியதும், கோட்டைக் கதவு பலமாகச் சாத்தப்பட்டதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்பட்டதையும் பார்த்த இளையபல்லவன், அகூதாவின் கொம்புகளுக்கு இருந்த பலத்தை எண்ணி மகிழ்ச்சியடைந்தது மட்டுமல்ல, பெருமிதமும் அடைந்தான்.

அந்தப் பெருமிதம் அவன் முகத்தில் தாண்டவமாடி யதையும், அதன் விளைவாக, சற்றே விரிந்த வதனத்தின் கன்னத்திலிருந்த வெட்டுத் தழும்பும் நுதல் உச்சியிலிருந்த குதிரைக் குளம்புகளின் வட்டத் தழும்பும் சற்றே குறுகி அவன் முகத்துக்குப் பெரும் கம்பீரத்தை அளித்ததையும் கண்ட அமீர், “இளையபல்லவரே! அந்த மக்கள் ஓடியதால், நமது அபாயம் நீங்கிவிடவில்லை ” என்று சுட்டிக் காட்டி னான் ஏளனத்துடன்.

“அது தெரியும் எனக்கு” என்றான் இளையபல்லவன்.

“அவர்கள் ஓடுவது நமது மரக்கலத்தைக் கண்டு அல்ல” என்று மீண்டும் குறிப்பிட்டான் அமீர்.

“பின் எதைக் கண்டு?”

“கொம்புகளைக் கண்டு. அவற்றின் பெரும் அலறலைக் கேட்டு. “

“அதுவும் தெரியும் எனக்கு. “
“அகூதாவின் கப்பலிலிருந்துதான் இத்தகைய கொம்புகள் ஊதப்படுவது வழக்கம். “

“ஆம். “
“இது அகூதாவின் கப்பலென்று அஞ்சி மாலுமிகள் ஓடுகிறார்கள். அவர் பெயரைக் கேட்டாலே இந்தக் கடல் பிராந்தியத்தில் சிம்ம சொப்பனம். “

“சென்ற ஒரு வருடக் காலத்தில் அதை நானும் பார்த்திருக்கிறேன். “

“இது அகூதாவின் கப்பல் இல்லை என்று தெரிந்ததும் மாலுமிகள் படகுகளில் வந்து மரக்கலத்தை வளைத்துக் கொள்வார்கள். அல்லது… ”

“அல்லது?”

“நாம் இறங்கிச் சென்றால் நம்மை வெட்டிப் போடுவார்கள். “

“அப்படியா?”

“ஆம். “

“அதைச் சோதிப்போம்” என்று மிகுந்த நிதானத்துடன் சொன்னான் இளையபல்லவன்.

அந்தச் சோதனை பெரும் அபாயமானது என்பதை உணர்ந்த அமீரும் கண்டியத்தேவனும் திடுக்கிட்டார்கள். அதைவிடத் திடுக்கிடும்படியான செய்தியொன்றையும் அடுத்துச் சொன்னான் இளையபல்லவன். “சோதிப்போம் என்பதால் சோதனையில் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்று சற்று அழுத்தியும் சொற்களை உதிர்த்தான்.

“நீங்கள் சொல்வது புரியவில்லை” என்றான் கண்டியத்தேவன்.

“இந்தச் சோதனை என் உயிர் சோதனை. இதுதான் என் திட்டம். கவனமாய்க் கேளுங்கள்” என்று திட்டத்தை விளக்கிய இளையபல்லவன் அந்தப் பயங்கரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளிலும் துரிதமாக இறங்கி னான். அன்றுடன் இளையபல்லவன் ஆயுள் முடிந்துவிட்ட தென்றே நினைத்தார்கள் அமீரும், கண்டியத்தேவனும்.

அது மட்டுமல்ல, அவன் ஆயுள் முடிந்த சில நாழிகைகளில் தங்கள் ஆயுளும் முடியும் என்பதையும் திண்ணமாக நம்பினார்கள். அதனால் அவர்கள் முகத்தில் ஏற்பட்ட கிலியையோ தன் திட்டத்தின் பலாபலன்களையோ லட்சியம் செய்யாத இளையபல்லவன், “உம்! நங்கூரம் பாய்ச்சுங்கள். நான் கரைக்குச் செல்லப் படகு ஒன்று இறக்குங்கள்” என்று இரைந்து கூவினான். அந்த உத்தரவைக் கேட்ட அமீரும் கண்டியத்தேவனும் பேயறைந்தது போல அசைவற்று நின்றார்கள்.

துணிவுக்கும் எல்லையுண்டு என்று நினைத்த அவர்கள் துணிவின் எல்லையையும் மீறி அபாய அலுவலில் இறங்கிய இளையபல்லவனின் கதியை எண்ணி எண்ணிப் பெரும் கலவரத்துக்கும் உள்ளானார்கள்.

Previous articleRead Kadal Pura Part 2 Ch1 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch3 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here