Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch25 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch25 |Sandilyan | TamilNovel.in

160
0
Read Kadal Pura Part 2 Ch25 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch25 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch25 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 25 : மதி சொன்ன கதை.

Read Kadal Pura Part 2 Ch25 |Sandilyan | TamilNovel.in

இன்னோர் உருவமும் சற்று தூரத்தே கரையில் இழுக்கப்பட்டுத் தளைகளில் பிணைக்கப்பட்டிருந்த பெரும் படகுகளின் மறைவில் நின்று இமை கொட்டாமல் தங்களைக் கவனித்துக் கொண்டிருந்ததை அறியாமலும், தங்களிருவரைத் தவிர வேறோர் உலகம் சுற்றிலும் உண்டு என்பதைக்கூட நினையாமலும், தனித்த தங்கள் நிலையை மட்டுமே எண்ணி இன்பம் உடல் பூராவும் துழாவிக் கிளம்பிய ஏதேதோ இன்ப உணர்ச்சியால் தத்தளித்துக் கொண்டும், நீண்ட நேரம் பேசாமலே இளையபல்லவனும் மஞ்சளழகியும் நின்றபடி நின்றுவிட்டார்கள். அப்படி நின்ற அந்த இருவரில் இளையபல்லவன் நிலையே மிகவும் பரிதாபத்துக்குரியதாயிருந்தது. வாழ்க்கையின் இன்ப நாடகம் துவங்கும் சமயங்களில், பலவீனமான இனம் என்று கூறப்படும் பெண்ணினமே பலத்துடன் நிற்கிறது.

பலமுள்ள இனத்தைச் சேர்ந்த ஆண் வர்க்கத்தின் நிலைதான் அதிக சங்கடத்துக்கும் சித்திரவதைக்கும் இலக்காகிறது. இதற்குக் காரணம் பெண்ணினம் தன் கவர்ச்சியின் பலத்தையும் ஆணினத்தின் பலவீனத்தையும் உணர்ந்திருப்பது தான். பெண் இனத்துக்கே இலக்கணமாக விளங்கிய மஞ்சளழகியும் அந்தக் காலை வெய்யிலில், கடலலைகளை நோக்கி நின்ற அந்த நேரத்தில், தன் சக்தியையும் இளையபல்லவனின் பலவீனத்தையும் நன்றாகப் புரிந்துகொண்டிருந்தாள்.

அவனளித்த மேல்சீலையை வாங்கிக் கொண்டும் அவனுக்கும் கரைக்கும் முதுகைக் காட்டிக் கொண்டு பெருங்கடலின் நீர்ப்பரப்பை நோக்கித் தலை துவட்ட முயன்ற மஞசளழகி, பின்னால் நின்ற இளையபல்லவனின் கண்கள் தன் ஒவ்வோர் அசைவையும் கவனிக்கும் என்பதை உணர்ந்திருந்தாளாதலால், உள்ளுக்குள் நகைத்துக் கொண்டாளானாலும் அந்த உணர்வால் மிகுந்த நாணமும் அவளை ஆட்கொள்ளவே அவள் கைகளை நன்றாக மேலுக்குத் தூக்காமல் அவசியத்துக்குக் குறைவாகவே தூக்கித் தலையில் சீலையை விரித்துக் குழலில் சுற்றி முறுக்கி அதைத் தோள்புறமாக முன்னுக்கு இழுத்துப் பிழிந்தாள்.

குழலை நன்றாகச் சீலையால் முறுக்கிப் பிழிந்த பின் கூந்தலை நன்றாக உதறித் தட்டி மறுபடியும் முதுகுப் புறம் அதை விசிறிவிட்டாள். நீண்டு அடர்ந்த அவள் குழல்கள் நன்றாக முதுகுப்புறத்தில் படர்ந்து அதுவரை இளையபல்லவன் கண்களைப் பறித்துக் கொண்டிருந்த அவள் மஞ்சள்நிறத் தங்க முதுகுப்புறத்தை மட்டுமின்றி, இடுப்புச் சீலைக்கு வெகு தூரம் கீழிறங்கிய அழகிடங்களை அந்த ஆண்மகன் துஷ்டப் பார்வையிலிருந்து காக்க இஷ்டப்பட்டனபோல் மறைத்துத் திரையிட்டன.

அவள் கைகள் அசைந்தபோது கைகளின் அசைவால் முதுகுச் சதை அசைந்தபோது அந்த முதுகில் கிடந்த நீர் முத்துகளும் அசைந்ததைக் கண்ட சோழர் படைத்தலைவன், ‘இயற்கையும் பெரிய பொற் கொல்லன்தான். இல்லாவிட்டால் இந்த மஞ்சள் நிறத் தங்கத் தகட்டில் வெண் முத்துகளைப் பொருத்தி இப்படியும் அப்படியும் இழுத்துக் காட்டுவானா?’ என்று அந்த அசைவுக்குக் காரணமும் கூறினான்.

பிழிந்து உதறிவிட்ட குழல்கள் ஒரே சீராக இருந்ததையும் அவற்றின் இணையற்ற கறுமையில் அடுத்திருந்த தோள்கள் இன்னுமதிக மஞ்சளுடன் ஒளிவிட்டதையும் கண்ட இளையபல்லவன் சற்றுத் துணிவுடன் அவளை நெருங்கி, பட்டையாகப் பின்னால் தொங்கிய அவள் குழல்களைத் தன் இரு கைகளாலும் கோதிக் கோதிப் பிரித்துவிடத் தொடங்கினான்.

‘இத்தனை சீராகக் குழல்களைப் பிரிக்க எங்கு கற்றுக் கொண்டார் இவர்? ஒருவேளை வேறு இடத்தில் இதே வித்தையைப் பயின்றிருக்கிறாரோ?’ என்ற நினைப்பால் ஓரளவு பொறாமையும் சந்தேகமும்கூடக் கொண்டாள் அந்தத் தங்கக் கிளி. அந்தப் பொறாமைக்கும் சந்தேகத்துக்கும், சந்தேகத்தால் ஏற்பட்ட கோபத்துக்கும் காரணமிருக்கவே செய்தது. தன் வளர்ப்புத் தந்தையால் தன் கணவனாக வரிக்கப்பட்டவர் இன்னொருத்தியிடமும் இந்தப் பணிகளைப் புரிந்திருக்க முடியும் என்று நினைத்த மாத்திரத்திலேயே வெகுண்டாள் அவள். வளர்ப்புத் தந்தையின் திட்டமும், யோசனையும் இளையபல்லவனுக்கு அடியோடு தெரியாதென்ற நினைப்புகூட அந்த சமயத்தில் இல்லை அவளுக்கு.

தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்ட உரிமையிலும் அதனால் விளைந்த கோபத்திலும் திளைத்த மஞ்சளழகி சரேலென்று தன் கைகளைப் பின்புறம் கொண்டு போய்க் குழல்களைத் தோள்புறமாக முன்னுக்கு வாங்கித் தன் இரு கைகளாலும் பிரிக்க ஆரம்பித்தாள். சிலையென அதுவரை நின்றிருந்தவள் திடீரென சிணுங்கியபடி தன் கையிலிருந்த குழல்களைப் பிடுங்கி முன்புறம் கொண்டு போய்விட்டதன் காரணத்தை அறியாத இளையபல்லவன், “மஞ்சளழகி!” என்று மெல்ல அழைத்தான்.

“ஏன்?” கோபத்துடன் வந்தது அவள் கேள்வி.
கோபத்துக்குக் காரணம் அவனுக்குப் புரியவில்லை . கோபித்துக் கொண்டவளுக்கும் அது புரியவில்லை. அந்த

நிலையில் புரியாத விஷயங்கள் நடக்குமென்பது மட்டும் அந்த இருவருக்கும் புரிந்திருந்தது. அப்படிப் புரிந்த நிலையிலும் குழம்பிய அந்த இருவரில் இளையபல்லவனே பேச்சைத் தொடர்ந்து, “இந்த இடத்தில் உன்னை நான் எதிர்பார்க்கவில்லை,” என்று ஏதோ சொல்ல வேண்டு மென்பதற்காகச் சொன்னான்.

மஞ்சளழகியின் பதில் பட்டென்று வெளிவந்தது. “நான் யாரையுமே எதிர்பார்க்கவில்லை?” என்றாள் அவள்.

“யாரையுமே எதிர்பார்க்கவில்லையா!” அவன் குரலில் வியப்பு ததும்பி நின்றது.

“இல்லை”

“ஏன்?”

“இந்த இடத்திற்கு யாரும் வருவது கிடையாது. அக்ஷயமுனைத் தீவின் ஒதுக்குப்புறம் இது. “

“ஆமாம். “

“என்ன ஆமாம்?”

“ஒதுக்குப்புறமாகத்தானிருக்கிறது. “
“இப்பொழுதுதான் தெரிந்ததா அது?”

“இல்லை, முன்பே தெரிந்தது. “

“முன்பே தெரிந்ததா!” என்று சீறினாள் மஞ்சளழகி.

“ஆம், தெரிந்ததால்தான் நான் இங்கு நீராட வந்தேன்,” என்று நகைத்தான் இளையபல்லவன்.

அதற்குமேல் என்ன சொல்வதென்றும் மஞ்சளழகிக்குப் புரியவில்லை .

“ஒதுக்குப் புறமென்பதால்தான் நானும் நீராட வந்தேன் என்று சொல்வதா? சே! சே! என்ன கேவலம்?” என்று நினைத்தாள் அவள். அந்த நினைப்பிலும் தனக்கும் அவனுக்கும் எத்தனை ஒற்றுமையிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்து மகிழ்ச்சியும் கொண்டாள். இருந்தாலும் அந்த மகிழ்ச்சியை வெளிக்குக் காட்டாமல் பொய்க்கோபத்துடன் கேட்டாள், “வந்தபின் இங்கு நான் நீராடு வதைப் பார்த்தீர்களல்லவா?” என்று.

“பார்த்தேன். ” இளையபல்லவனின் குரலில் சங்கடம் ஒலித்தது.

“பார்த்தபின் உங்கள் கடமை என்ன?” என்று வினவிய அவள் குரலில் அப்பொழுதும் கோபம் தெரிந்தது.

“கடமையா!” மென்று விழுங்கினான் இளைய பல்லவன்.
“ஆம், கடமை. “

“எந்தக் கடமையைச் சொல்கிறாய்?”

“பண்பாடு உணர்த்தும் கடமை. “

“விளங்கத்தான் சொல்லேன். “

“இன்னும் என்ன விளக்கிச் சொல்ல வேண்டும்? பெண்ணொருத்தி நீராடுவதைப் பார்த்தபின் அந்தப் பகுதியை விட்டு அகல வேண்டியதுதானே பண்புள்ள ஆண்மகன் கடமை?”

வேகத்துடனும், ஆணித்தரமாகவும் எழுந்த அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத இளையபல்லவன் அவளது இன்னொரு தோளையும் பற்றி, “மஞ்சளழகி! இன்று காலையில் சூரிய உஷ்ணந்தான் அதிகமாயிருக்கிறது என்று எண்ணினேன்,” என்று பேச்சை மாற்றினான்.

“வேறு எந்த உஷ்ணம் அதை மீறியிருக்கிறது?” என்று கேட்டாள் அவள்.

“உன் சொற்களின் சூடு”, என்று சொல்லிக் கொண்டே அவளைப் பின்னுக்கு இழுத்த அவன் அவளையும் மணலில் உட்கார வைத்துத் தானும் அவள் பக்கத்தில் அமர்ந்துகொண்டான். நீட்டிய கால்கள் நான்கையும் அலைகள் வந்து வந்து தடவிச் செல்ல, உட்கார்ந்த அவ்விருவரும் ஒருவரையொருவர் பாராமல் கடலையே பார்த்துக் கொண்டு பேசினார்கள்.

“இப்பொழுது கொஞ்சம் உஷ்ணம் குறையும்” என்றான் இளையபல்லவன்.

“எப்படிக் குறையும்?” என்று மஞ்சளழகி கேட்டாள்.

“அலைகள் கால்களில் பாய்கின்றன. “

“ஆம்! அலைகள் பாய்கின்றன. மெய் குளிரும் உள்ளம் குளிருமா?”

“குளிரப் பண்ணிக்கொள். “

“என்னால் முடியாது. “

“வேறு யாரால் முடியும்?”

“விதியால் முடியும். ” “விதியா!”

“ஆம். இதோ பாருங்கள்; இந்த அலை வந்து காலைத் தடவுகிறது. மீண்டும் போய் விடுகிறது. மறுபடியும் வருகிறது, போகிறது. அற்ப கால ஸ்பரிசம் இது. விட்டு விட்டு விலகும் நிலை. என் வாழ்க்கையில் நீங்களும் இப்படித்தான் மோதியிருக்கிறீர்கள். அலை போலப் போய்விடுவீர்களா? போய்ப் போய் வருவீர்களா? போகாமல் பகிட் பாரிஸான் மலைபோல் நிலைத்து நிற்பீர்களா? எனக்குத் தெரியவில்லை . அது உங்களுக்கும் தெரியாது. விதிதான் அதை நிர்ணயிக்கும். காலம்தான் முடிவு சொல்லும். ஆனால் என் மதி மட்டும் ஒரு கதை சொல்கிறது,” என்றாள் மஞ்சளழகி.

“என்ன சொல்கிறது உன் மதி?” என்று கேட்டான் இளையபல்லவன்.

ஆழ்கடலிலிருந்து பார்வையை அவன் மீது திருப்பினாள் மஞ்சளழகி. நீண்ட நேரம் அவள் கண்கள் அவனை உற்று நோக்கின. அந்தக் கண்களில் பெரும் மயக்கம் இருந்தது. கனவும் பரந்து கிடந்தது. “மதி சொல்லும் கதையைச் சொல்லட்டுமா?” என்று கனவிலிருந்து கேட்பவள் போல் கேட்டாள் அவள்.

“சொல் மஞ்சளழகி!” என்றான் அவன் சஞ்சலத்துடன்.

கதையை அவள் சொன்னாள். மதி சொன்ன கதையானதால் உண்மை புதைந்து கிடந்தது. அந்த இருவரைப் பற்றிய உண்மை மட்டுமல்ல அது. இரு நாடுகளைப் பற்றிய உண்மை . இரு நாடுகளின் வரலாறுகளைப் பற்றிய பேருண்மை அக்கதையில் விரிந்தது.

Previous articleRead Kadal Pura Part 2 Ch24 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch26 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here