Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch27 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch27 |Sandilyan | TamilNovel.in

157
0
Read Kadal Pura Part 2 Ch27 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch27 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch27 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 27 : பெண்ஜென்மம்.

Read Kadal Pura Part 2 Ch27 |Sandilyan | TamilNovel.in

மஞ்சளழகியின் செவ்வரி விழிகள் கடலை நோக்க, உடலும் உள்ளமும் நெருங்க இருவரும் உட்கார்ந்திருந்த அந்த இன்ப நிலையிலும் திடீரென அவள் உடல் லேசாக நடுக்கமெடுத்ததையும், “என்னை மணக்காவிட்டால் பெரும் விபரீதம் நேரிடும்” என அவள் சோகம் நிறைந்த சொற்களை உதிர்த்ததையும் கவனித்த இளையபல்லவன் அவளுக்கு ஆறுதலூட்டத் தன் இரு கைகளாலும் அவள் இடையை இறுக்கிப் பிடித்தானானாலும், அந்தப்பிடியிலும் ஆறுதலடையாத அந்த அக்ஷயமுனை அழகி, “அதோ அந்தப் படகுகளின் மறைவைக் கவனியுங்கள்,” என எச்சரிக்கவே அந்தப் பகுதியை நோக்கிக் கண்களைத் திருப்பினான்.

கண்களைத் திருப்பியவன் அந்த மறைவிலிருந்து ஓர் உருவம் எழுந்ததைக் கவனித்தது மட்டுமின்றி, அந்த உருவம் யாரென்பதைக் கண்டு கொண்டானாகையால் மஞ்சளழகியின் அச்சத்துக்கு ஓரளவு காரணமிருக்கிறதென்பதையும் புரிந்து கொண்டான். அத்தனை நேரம் மஞ்சளழகி சொன்ன சொற்களில் எத்தனை உண்மை புதைந்து கிடக்கிறதென்பதையும், இரண்டு நாடுகளின் சரித்திரத்தில் அவளை மட்டுமல்ல, தன்னையும் ஒரு வரலாற்றுக்காயாக நகர்த்தத் திட்டமிட்ட முயற்சி நடக்கிறதென்பதையும் சந்தேகமற உணர்ந்தான் சோழர் படைத்தலைவன்.

படகுகள் இருந்த இடத்துக்கும், தானும் மஞ்சளழகியும் உட்கார்ந்திருந்த இடத்துக்கும் கூப்பிடு தூரம் இருந்தபோதிலும், காலைக் கதிரவன் நன்றாக எழுந்துவிட்டதால் வாரி வீசிய கடுங்கதிர்களின் பேரொளி அந்தப் பிரதேசத்தை நன்றாகப் பளிச்சென்று அடித்திருந்ததால் படகுகளின் மறைவிலிருந்த உருவம் இளையபல்லவன் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தது. மறைவிலிருந்தபோதே தெரிந்த அந்த உருவம் சரேலென எழுந்து மறைவை விட்டு விலகியதும் கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகமும் இளையபல்லவன் நெஞ்சிலிருந்து நீங்கிடவே, “அது?” என்று சற்று தயக்கத்துடனேயே கேட்டான் அவன்.

அவன் எதைக் கேட்கிறான் என்பதை நன்றாக உணர்ந்துகொண்ட மஞ்சளழகி, “ஆம், என் தந்தைதான்,” என்று கூறியவள் மேற்கொண்டும் தந்தையின் போக்கை கவனிக்கும்படி இளையபல்லவனைத் தூண்டத் தன் காற்பெரு விரலினால் அவன் காலைச் சற்று அழுந்த மிதித்த தன்றி கண்களையும் தந்தை சென்ற புறத்துக்குத் திருப்பி உருட்டிக் காட்டினாள். அந்த திசையைக் கவனித்த இளையபல்லவன் தனக்குப் புரியாத பல விஷயங்கள் தூரத்தே நடப்பதைக் கண்டு பெரும் வியப்புக்குள்ளாகி, அதன் காரணத்தைப் பற்றி மஞ்சளழகியிடம் வினவி உண்மையை அறிந்ததும் பெரும் பிரமிப்புக்கும் குழப்பத்துக்கும் உள்ளானான்.

அது மட்டுமல்ல, பெரும் தந்திரசாலியும் எடுத்த காரியத்தைச் சாதிக்க எதையும் செய்யத் தயங்காதவனுமாகிய கொடூரமான ஒரு மனிதனைத் தான் சமாளித்தாலொழிய அக்ஷயமுனையை விட்டுத் தான் கிளம்புவது குதிரைக் கொம்புதான் என்பதையும் புரிந்து கொண்டான்.

காலை வெய்யிலில் கடலோரத்தில் உட்கார்ந்து காமன் கணைகளின் வசப்பட்டிருந்த மஞ்சளழகியையும் இளையபல்லவனையும் நீண்ட நேரம் படகுகளின் மறைவிலிருந்தே கவனித்த பலவர்மன், திடீரெனப் படகுகளின் மறைவை விட்டு வெளியேறி மிகவும் நிதானமாக யவன கொள்ளையர் இருந்த குடிசைகளை நோக்கி நடந்தான். பிறகு தூரத்தே வந்து கொண்டிருந்த இரு கொள்ளையரைச் சைகை செய்து அழைத்துத் தன் பக்கத்தில் நிறுத்திக்கொண்டு, இளையபல்லவனும் தன் மகளும் இருந்த இடத்தைத் தன் கையால் சுட்டிக் காட்டினான். அடுத்தவிநாடி அந்த இடத்தில் நிற்காமல் மிகுந்த வேகத்துடன் கோட்டை வாயிலை நோக்கி விரைந்து சென்றான்.

அவன் சென்ற சில விநாடிகளுக் கெல்லாம் கொள்ளையர் இருவரும் தங்கள் துணைவிகளை அழைத்து வந்து இளையபல்லவனையும் மஞ்சளழகியையும் சுட்டிக் காட்டினார்கள். பிறகு அந்த நால்வரும் ஏதோ புரிந்துகொண்டதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்து விட்டுத் தங்களிருப்பிடங்களை நோக்கிச் சென்று விட்டார்கள்.

பலவர்மன் அவர்களை அழைத்துத் தங்களைச் சுட்டிக் காட்டிச் சென்றதையும், பிறகு கொள்ளையரும் தங்கள் துணைவிகளை அழைத்து வந்து காட்டியதையும், அவர்கள் ஒருவருக்கொருவர் ஏதோ பேசிக் கொண்டதையும், பிறகு ஏதும் நடக்காதது போல் தங்கள் அலுவலைப் பார்த்துக் கொண்டு சென்று விட்டதையும் கண்ட இளையபல்லவன் அத்தனைக்கும் பொருள் என்னவென்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறினான். பருவப் பெண்ணொருத்தி, திடீரென அறிமுகமான ஒரு வாலிபனுடன் தனிமையை நாடுவதும் உடலுடன் உடலுராய உட்காருவதும் முறை பிசகான காரியமென்பதை அவன் உணர்ந்திருந்தான்.

அத்தகைய நிலையில் தன் பெண்ணைப் பார்க்கும் தந்தையின் மனம் எந்த நிலைக்குச் செல்லும் என்பதை அறிந்துகொள்வதும் அவனுக்கு ஒரு பெரிய காரியமில்லை. ஆனால் அப்படித் தங்களிருவரையும் பார்த்த பலவர்மன் அடுத்தபடி நடந்துகொண்ட முறை அவனுக்குப் பெரும் வியப்பையும் ஓரளவு குழப்பத்தையும் அளிக்கவே மஞ்சளழகியின் மீது தன் கண்களைத் திருப்பினான் இளையபல்லவன். அவன் முகத்தில் வியப்பும், குழப்பமும் விளைந்து கிடந்ததை அவள் கண்டாள். அவன் விழிகளில் எழுந்து கிடந்த கேள்வியையும் கண்டாள். ஆனால் பதிலேதும் சொல்லவில்லை அவள். பதிலுக்குப் பதில் சோகப் பெருமூச்சொன்றையே வெளியிட்டாள்.

அந்தப் பெருமூச்சிலிருந்தும் அந்தப் பெருமூச்சைத் தொடர்ந்து அவள் கையொன்று தன் கையை அழுத்திப் பிடித்ததிலிருந்தும் அவள் பெரும் வேதனைக்குட்பட்டிருக் கிறாளென்பதை அறிந்து கொண்ட இளையபல்லவன், அவளிடம் தன் உள்ளத்தே எழுந்த அனுதாபத்தால் தன் இடது கையைப் பிடித்திருந்த அவள் கையைச் சற்றே தன் வலது கையால் அழுத்திக் கொடுத்ததன்றி, தன் இடது கையை விடுவித்துக்கொண்டு அதை அவள் இடுப்பைச் சுற்றி வளையவிட்டு வலது கையை அத்துடன் கோத்துச் சுற்றிலும் ஒரு வளையத்தை ஏற்படுத்தினான். புருஷனுடைய அரவணைப்பும் பாதுகாப்பும் பெண்களுக்கு எத்தனை இன்றியமையாதவையென்பதை அந்தச் சில விநாடிகளில் உணர்ந்துகொண்டாள் அக்ஷயமுனைக் கோட்டை அழகி.

அத்தனை பாதுகாப்பிலிருந்தும் தன் வாழ்வில் ஏற்படக்கூடிய அபாயங்களை அவள் இதயம் எண்ணிப் பார்த்து நடுங்கியது. மனம் சொன்ன கதை பொய்க்கதை அல்லவென்பதை புத்தி மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியது. காலைத் தொட்டுச் செல்லும் அலைபோல் அப்பொழுது அணைத்துள்ள புருஷனும் தன்னைத் தொட்டுச் சென்றுவிடுவான் என்பதை மறுபடியும் மறுபடியும் அவள் எண்ணவே செய்தாள். அந்த எண்ணம் எழுந்த அந்த நிலையிலும் தொட்டுச் சென்றுவிடக்கூடிய அந்தப் புருஷனுக்கு ஏற்படக்கூடிய அபாயமே அவள் மனத்தில் ஓங்கி நின்றது. பெண் மனத்தின் உயர்வு பெண்ணான அவளுக்கு அந்தத் தருணத்தில் புலனாகி அவளைப் பெரும் வியப்புக்குள் ஆழ்த்தியது.

‘இவர் என்னைத் தொட்டுவிட்டுச் சென்றுவிடுவார் என்பது எனக்குத் தெரிகிறது. இருப்பினும் இவருக்கு என் தந்தையால் ஏற்படும் ஆபத்தே எனக்குக் கவலையை அளிக்கிறது. எனக்குத் துரோகம் செய்யக்கூடிய இவருக்கு ஏன் என் மனம் இரங்குகிறது! பெண் ஆணுக்கு அன்பளித்துச் சீரழியவே பிறந்தவளா? சீரழிந்தாலும் அவன் சீரையும் உயிரையும் காப்பாற்றக் கடமைப்பட்டவளா? அப்படித்தான் தோன்றுகிறது. நல்ல ஜன்மம் பெண் ஜன்மம்! தியாகமே அதன் கடமையா?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் மஞ்சளழகி. பதில் அவளுக்குப் புரிந்திருந்தது. கடமை அதுதானென்பதை உணர்ச்சிகள் சந்தேகமற உணர்த்தின. அந்த வினோத உணர்வை எண்ணி அவள் மெல்ல நகைத்தாள். நகைத்த வண்ணம் தன் தலையை அவன் தோள்மீது தைரியமாகச் சார்த்தியும் கொண்டாள்.

பலவர்மனும் கொள்ளைக்காரரும் நடந்துகொண்ட விசித்திர முறையைப் பற்றித் தனது கண்கள் கேட்ட கேள்விக்குப் பதிலேதும் சொல்லாமல் மஞ்சளழகி சிந்தனையில் இறங்கியதும் பிறகு நகைத்ததும், தன்மீது தலையைச் சாய்த்துக் கொண்டதும் இளையபல்லவனுக்கு விந்தையாயிருக்கவே அவன் கேட்டான், “ஏன் நகைக்கிறாய் மஞ்சளழகி?” என்று.

செவ்விய உதடுகளை விரித்துச் சொன்னாள் அவள், “என் ஜன்மத்தை நினைத்துச் சிரித்தேன்,” என்று.

“ஏன், உன் ஜன்மத்திற்கு என்ன?”
“பெண் ஜன்மம்,” என்றாள் அவள்.

“அதென்ன குறைவா?” என்று கேட்டான் அவன்.

“குறைவுதான்,” என்றாள் அவள்.

“அறிவீனர்கள் தான் அப்படிச் சொல்வார்கள். ” பதிலிறுத்தான் படைத்தலைவன்.

“அப்படியா?”

“சந்தேகமென்ன?”

“உங்களுக்குச் சந்தேகமில்லைபோல் இருக்கிறது!”

“எனக்கென்ன யாருக்குமே இருந்ததில்லை. வேதத் துக்கு இருந்ததில்லை, சாத்திரத்துக்கு இருந்ததில்லை, புராணங்களுக்கும் இருந்ததில்லை. பெண்குலம், தாய்க்குலம். “

“அது சரிதான்,” மீண்டும் சிரித்தாள் அவள்.

“நகைப்பதற்கு ஏதுமில்லை மஞ்சளழகி! தெய்வத் துக்கு அடுத்தபடியாகத் தாய்க்குலத்தை வணங்கும்படி வேதம் சொல்லுகிறது. ‘மாத்ரு தேவோ பவ. பித்ரு தேவோ பவ. ஆசார்ய தேவோ பவ’ என தாய்க்குலத்துக்கு முதலிடத்தையும், தந்தைக்கு இரண்டாமிடத்தையும், குருவுக்கு மூன்றாமிடத்தையும் வேதமளிக்கிறது. ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ எனத் தமிழ் மூதுரையும் உண்டு” என்று சுட்டிக் காட்டினான் படைத் தலைவன்.

“கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ” என்றாள் மஞ்சளழகி.

“எங்கள் நாட்டில் செயலிலும் அது உண்டு. “

“எது உண்டு?” என்று கேட்டாள் அவள்.

“தாய்க்குலத்தை மதிக்கும் வழக்கம். “

“களவொழுக்கமும் அந்தச் செயலில் ஒன்றா?” ,

“மஞ்சளழகி!” கோபத்துடன் எழுந்தது இளைய பல்லவன் குரல்.

“கோபிக்காதீர்கள். உங்கள் நாட்டு இலக்கியத்தைப் பற்றியும், புராணங்களைப் பற்றியும் நான் கேட்டிருக்கிறேன். காதலின் வழியில் களவொழுக்கம் சிலாகிக்கப்படுகிறது உங்கள் இலக்கியத்தில். தாய் தந்தையர் அறியாமல் தலைவியைத் தலைவன் சந்திப்பது உயரிய காப்பியமென்று கூறப்படுகிறது. அவன் கைவிட்டால் அவள் கதியென்ன வென்பதை யார் யோசித்தார்கள்? முதலில் கோவலன், கண்ணகியைப் புறக்கணித்த போது அவள் கதியென்ன? பிறகு மாதவியைக் கைவிட்டபின் அவள் கதியென்ன? இருவர் கதியும் விரும்பத்தக்கதல்ல படைத்தலைவரே? அது மட்டுமா? வேதம் சொல்லிவிட்டுச் சென்றது பெண்குலத்தின் உயர்வை.

ஆனால் பெருவியாதிக் கணவனை வேசி வீட்டுக்கு மனைவி சுமந்து செல்ல வேண்டிய அவசியத்தையும், அரக்கனிடம் அவதிப்பட்ட மனைவியை அக்னியில் விழச் சொன்ன பெருமையும், ஊர் வம்புக்காகக் கர்ப்பிணியைக் காட்டுக்கு ஓடச் சொன்ன உன்னதத்தையும், புராணங்கள் வர்ணிக்கின்றன. புராணங்கள் புகல்வது தான் நடைமுறை படைத்தலைவரே? பெண் ஜன்மம் கேவலமானது. ஆடவனுக்கு ஆடும் பாவை பெண் ஜன்மம். கணவனுக்குக் கைப்பொம்மையின் நிலைதான் கட்டிக் கொண்டவள் நிலை. அவளுக்குச் சுதந்திரம் கிடையாது. சுய வாழ்வு கிடையாது. அவள் பரதந்திரை என்று உங்கள் சாத்திரங்கள் கோஷிக்கின்றன. ஆனால் ஒன்று பார்த்தீர்களா ?”

“என்ன மஞ்சளழகி?”

“இத்தனைக்குப் பிறகும் புருஷனுக்கு அடிமையா யிருப்பதையே பெண் விரும்புகிறாள்!”

“உண்மையாகவா?”

“ஆம். புராணத்தைப் பாருங்கள்; விதேகன் குமாரியை விடுவிக்கிறேன் என்று தூதன் துடித்த போதும் ‘எனக்குச் சுதந்திரமில்லை உன்னுடன் வர, அவர் வந்து விடுவிக் கட்டும்’ என்று சிறையிலேயே கிடந்தாளே அந்தப் பெண். “

“ஆம் கிடந்தாள். “

“அதுதான் உண்மை நிலை படைத்தலைவரே! இயற்கையே பெண்களுக்கு விரோதி. ஆண்களுக்கு அடிமை யாக அவர்களைப் படைத்திருக்கிறது. ஆகவே பெண் ஜன்மம் மட்ட ஜன்மம். இல்லையேல்… ” மேலே ஏதோ சொல்லப் போனவள் சட்டென்று பேச்சை நிறுத்தினாள்.

“சொல் மஞ்சளழகி,” என்று கேட்டுக் கொண்டான் இளையபல்லவன்.

“இயற்கை அப்படியில்லையேல் நான் என்ன செய்து கொள்ள வேண்டும் தெரியுமா?”

“தெரியவில்லை எனக்கு?”

“என் தந்தையின் செய்கையில் திருப்தியடைய வேண்டும். “

“என்ன செய்திருக்கிறார் உன் தந்தை?”

“நாம் இருவரும் நெருங்கி உட்கார்ந்திருப்பதை மறைந்திருந்து பார்த்திருக்கிறார். “

“ஆமாம். “

“பிறகு இரு கொள்ளைக்காரர்களை அழைத்து அவர்களுக்கும் நமது நிலையைக் காட்டியிருக்கிறார். “

“அதையும் கவனித்தேன். “

“அவர்கள் தங்கள் துணைவிகளை அழைத்துக் காட்டினார்கள். “

“ஆம். அதையும்தான் பார்த்தேன். “

“இதில் ஒன்றும் புரியவில்லையா உங்களுக்கு?”

“இல்லை. புரியவில்லை . “

மஞ்சளழகி அவன் தோளிலிருந்து தலையை நீக்கி அதன் விளைவாக நிமிர்ந்த அவன் முகத்தைத் தன் அழகிய விழிகளால் ஏறிட்டு நோக்கினாள். “உங்கள் அசட்டுத்தனத்தை என்ன சொல்லட்டும்!” என்று பரிதாபத்துடன் சொல்லவும் சொன்னாள்.

இளையபல்லவன் அந்தச் சமயத்தில் உண்மையாக அசட்டுப் பார்வையாகப் பார்த்தான். “என் அசட்டுத்தனமா?” என்று கேட்டான் குழப்பத்துடன்.

“ஆமாம். “

“என்ன அசட்டுத்தனம்?”

“ஒன்றும் புரியவில்லையே உங்களுக்கு?” “என்ன புரியவில்லை?”

“மகளை இன்னொருவன் அணைப்பில் பார்க்கும் எந்தத் தந்தையும் என்ன செய்வார்?”
“உம். “

“எரிமலையாக மாறுவார். அணைத்தவனைக் கொல்ல முயல்வார். ஏதும் செய்யாமல் மற்றவர்களையும் கூப்பிட்டு அந்தக் காட்சியைக் காட்டுவாரா? காட்டி விட்டுத் தனக்குச் சம்பந்தமில்லாதது போல் வீட்டை நோக்கி நடக்கத்தான் செய்வாரா?”

இளையபல்லவன் மூளையில் அப்பொழுதுதான் ஏதோ விபரீதத்துக்குப் பலவர்மன் விதை விதைக்கிறான் என்பது உதயமாயிற்று. “ஆம் மஞ்சளழகி! தந்தையின் போக்கு விசித்திரமாகத்தானிருக்கிறது,” என்றான்.

அவன் சொன்ன பதில் அவளைத் தூக்கி வாரிப் போட்டது. “விசித்திரம் என்பதல்ல அதற்கு வார்த்தை.

பயங்கரம் என்று சொல்லுங்கள் பொருந்தும்,” என்றாள் மஞ்சளழகி.

“என்ன பயங்கரமிருக்கிறது இதில்!” என்று கேட்டான் இளையபல்லவன்.

“இந்த நாட்டுப் பழக்கம் விளைவிக்கும் பயங்கரம். ” என்று அவள் கூறினாள்.

“என்ன பழக்கம் அது?” என்று அவன் வற்புறுத்திக் கேட்டான்.

அவள் விளக்கினாள் நாட்டுப் பழக்கத்தை, பழக்கத்தின் விளைவை, விபரீதத்தை. அச்சமென்னவென்பதையே அறியாத இளையபல்லவன் இதயத்திலும் அந்த விளக்கம் சிறிது அச்சத்தை விளைவித்தது. அந்த அச்சத்திலும் ஒன்று அவன் நினைவில் நிலைத்தது. பெண் ஜன்மத்தின் உயர்வுதான் அது. பெண் ஜன்மம் சிறந்த ஜன்மம். அதற்கு இணை எதுவுமில்லை. அதற்கு உவமை இந்த மஞ்சளழகியைவிட யாருமில்லை,’ என்று அவன் இதயத்துக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்திக் கொண்டான்.

அவள் தனக்குச் செய்யத் துணிந்த மகத்தான தியாகத்தை எண்ணி எண்ணி வியப்பும் திகிலும் ஒருங்கே அடைந்தான் படைத் தலைவன்.

Previous articleRead Kadal Pura Part 2 Ch26 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch28 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here