Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch32 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch32 |Sandilyan | TamilNovel.in

163
0
Read Kadal Pura Part 2 Ch32 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch32 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch32 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 32 : வணங்காத தலை! இணங்காத குரல்!

Read Kadal Pura Part 2 Ch32 |Sandilyan | TamilNovel.in

வெளியே பெரும் புரட்சிக்கூட்டம் போல் வந்து கொண்டிருந்த கொள்ளையர் குழாத்தையும் நகர மக்கள் கும்பலையும் இளையபல்லவன் தனது மாலுமிகள் தலையில் தூக்கி வந்த அறு பெட்டிகளையும் மாளிகைச் சாளரத்தின் மூலமே கவனித்துவிட்டதால் வெகுவேகமாக மாளிகை வாயிலை அடைந்த அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவனான பலவர்மன் தன் காலடியில் இறக்கப்பட்ட அந்த ஆறு பெட்டிகளும் பெரும் நிதிப் பெட்டிகளென்பதை அறிந்ததும் தனது திட்டங்கள் அனைத்தையும் இளையபல்லவன் சுக்கல் சுக்கலாக உடைத்தெறிந்துவிட்டதை உணர்ந்து, அந்த ஆறும் நிதிப் பெட்டிகளா அல்லது தன்னைக் கவிழ்க்க வந்த சதிப் பெட்டிகளா என்பதை அறிய முடியாமல் கலங்கினானென்றால், அதற்குக் காரணம் இருக்கத்தான் செய்தது.

அந்தக் காரணத்தின் ஆரம்பப்பலனும் உடனே கிடைக்கும்படியான செயலில் இளையபல்லவனும் அடுத்த விநாடி இறங்கிவிடவே தன்னை விடப் பலமடங்கு அதிகப் புத்திக்கூர்மையும் தந்திரமும் படைத்த மனிதனைத் தான் சமாளிக்க வேண்டிய அவசியத்தைப் புரிந்துகொண்ட பலவர்மன், உள்ளூரக் கலங்கினாலும், உணர்ச்சிகளை அடக்கிக் கொள்வதில் பெரும் திறமை படைத்தவனாதலால் முகத்தில் ஓரளவு மகிழ்ச்சிக் குறியையே சில விநாடிகளுக்குள் தவழவிட்டுக் கொண்டான்.

மாளிகை வாயிலுக்குப் பலவர்மன் வந்ததுமே அவன் காலடியில் நிதிப்பெட்டிகளை இறக்கச் சொல்லி மாலுமி களுக்குக் கட்டளையிட்ட இளையபல்லவன், பலவர்மன் முகத்தில் ஆரம்பத்திலிருந்த குழப்பத்தையும் பிறகு நிலவிய மகிழ்ச்சிச் சாயையையும் கடைக் கண்ணாலேயே கவனித்து உணர்ச்சிகளை அடக்கிக் கொள்வதில் பலவர்மனுக்கிருந்த ஆற்றலைப் பற்றி உள்ளூர வியந்து கொண்டதன்றி அந்த ஆற்றல் வெளியே சொற்களின் மூலம் பிரதிபலிக்க இடம் கொடாமல், “உம்! திறவுங்கள் பெட்டிகளை,” என்று தனது மாலுமிகளுக்கு உத்தரவும் இட்டான். அவன் உத்தரவுப்படி சரேலெனப் பெட்டிகளின் மூடிகள் திறக்கப்பட்டதும் கூட்டத்திலே ஏற்பட்ட பெரும் மாறுதலையும் இளையபல்லவன் கவனிக்கவே செய்தானாகையால் எதிர் பார்த்தது முடிந்துவிட்டது என்ற காரணத்தால் உள்ளே உவகையும் கொண்டான்.

மனிதர்களின் எண்ணங்களை எடை போடுவதில் நிகரற்ற வல்லமை படைத்த இளையபல்லவன் பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்ற தமிழ்ப் பழமொழி எத்தனை உண்மையாது என்பதை எண்ணி எண்ணி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான். மூடிகள் திறக்கப்பட்ட அறு பெட்டிகளுக்குள்ளிருந்து மேல் நோக்கி விழித்த பெரும் செல்வத்தைக் கண்ட கொள்ளையர் கூட்டமும் நகர மக்கள் கும்பலும் நீண்ட நேரம் திகைத்தே நின்றனர்.

அவர்கள் ஆயுளில் கண்டிராத செல்வம், பல வகை நகைகள், பலவகை நவ மணிகள், பலவகை நாணயங்கள், ஏதேதோ பண்டங்கள், பாத்திரங்கள் இவையனைத்தும் கண்ணுக்கெதிரே மின்னியதும் பெரும் பிரமையை அடைந்தது கூட்டம். விழித்த கண்கள் விழித்தபடி நின்றன. திறந்த வாய்கள் திறந்தபடி இருந்தன. கைகால்கள் கூட அசைவற்றுச் சில விநாடிகள் ஸ்தம்பித்து விட்டன. ஏதோ அணுகத்தகாத பெரும் புதையலைக் கண்டு பயப்படுபவர்கள் போல் அருகில் நின்ற கொள்ளையர் கடைசியில் சற்றுப் பின்னும் அடைந்தனர். ஆறு பெட்டிகளில் ஒன்றில் தங்க நாணயங்களும் வெள்ளி நாணயங்களும் கலந்து வழிந்தன.

இன்னொன்றில் வைர, கோமேதக, நீலவைடூரிய, மாணிக்கங்களும் அவை பதிக்கப்பட்ட பற்பல ஆபரணங்களும் நிரம்பி நின்றன. மற்றொரு பெட்டியில் மன்னர் மாளிகைகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பற்பலவித தங்க வெள்ளிப் பத்திரங்கள் காட்சியளித்தன. இன்னொரு பெட்டி பட்டுகளாலும் பீதாம் பரங்களாலும் நானாவித வண்ணச் சேலைகளாலும் நிரம்பிக் கிடந்தன. கடைசி இரண்டு பெட்டிகளில் வாள்கள், குறுவாள்கள், கேடயங்கள் இவை தானிருந்தன வென்றாலும் ஒவ்வொரு குறுவாள் பிடியிலும் வாள் பிடியிலும் கேடயச் சக்கரங்களிலும் பதிக்கப்பட்டிருந்த மணிகளும் செய்யப்பட்டிருந்த வேலைப்பாடுகளும் அவை ஒவ்வொன்றும் மன்னர்கள் அரண்மனையிலும் மந்திரிகள் படைத்தலைவர் இல்லங்களிலும் இருக்கத் தக்கவை என்பது சந்தேகமறத் தெரிந்தது. அந்தப் பெட்டிகள் தந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சியுற்று நின்றது எதிரேயிருந்த கும்பல் மட்டுமல்ல, அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவனான பலவர்மனும் அச்சமுற்று அவற்றை நோக்கினான்.

எதிரே வாயைப் பிளந்துகொண்டு நின்ற கொள்ளையரை மரக்கலங்களில் அனுப்பிப் பல நாள்களாகத் தான் கடலில் சம்பாதித்த கொள்ளைப் பொருள்களைவிடப் பத்து மடங்கு அதிக மதிப்புப் பெற்ற பெரும் செல்வம் தன் கண்முன்னே விரிந்ததும் அச்சம் அவன் இதயத்தில் எழுந்ததற்குக் காரணங்கள் இரண்டு இருந்தன. ஒன்று அபரிமித செல்வம் தன் கண்முன்னே எழுந்தது. இன்னொன்று அந்தச் செல்வத்தைக் கொள்ளையரும் மற்றோரும் கண்டதால் தன் திட்டத்தில் ஏற்பட்ட பெரும் தோல்வி.

எதிரே வாயைப் பிளந்து கொண்டு பிரமித்து நின்ற கொள்ளையர் இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் இளையபல்லவனுக்கு எதிராகத் திரும்பமாட்டார்கள் என்பதை தனது ஒரே பார்வையால் தீர்மானித்துக் கொண்ட பலவர்மன், தான் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளாவிட்டால் இளையபல்லவன் தனது பிடியில் சிக்குவதற்குப் பதில் தான் இளையபல்லவன் பிடியில் சிக்க வேண்டியிருக்குமென்பதைச் சந்தேகமறப் புரிந்துகொண்டான்.

நிதிப் பெட்டிகளைக் கொண்டு வந்ததற்கும், மாளிகை வாயிலில் அந்தக் கூட்டத்திற்கு முன்னால் அவற்றை இளையபல்லவன் திறந்து காட்டியதற்கும் காரணம் கொள்ளையரையும் நகரத்தாரையும் பிரமிக்க அடித்துத் தன் வசப்படுத்திக் கொள்ளவே என்பதையும் பலவர்மன் உணர்ந்துகொண்டான். முதல் நாள் நாட்டியத்திற்கு முன்பமாக சீலைகளையும் ஆபரணங்களையும் கொள்ளையருக்கும் அவர்கள் துணைவிகளுக்கும் பரிசளித்ததிலிருந்து அவனிடம் பெரும் பிரமை கொண்டிருந்த கொள்ளையர், நாட்டியத்திற்குப் பிறகு ஏற்பட்ட நிகழ்ச்சிகளாலும் பூர்வகுடிகளிடமுள்ள கிலியாலும் சிறிது மாறுபட்டிருந்தாலும் மஞ்சளழகியும் இளையபல்லவனும் தனித்திருந்ததைச் சுட்டிக் காட்டி, படைத்தலைவன் நடத்தையிலும் உண்மை எண்ணத்திலும் அவர்களுக்குத் தான் சற்றுச் சந்தேகத்தை விளைவித்திருந்தாலும், அந்தக் கிலி, சந்தேகம் அனைத்தும் பணத்தைக் கண்ட மாத்திரத்தில் பறந்து விட்டதென்பது அவர்களின் முக பாவத்தில் தெள்ளென விளங்கியதையும் கண்டான் பலவர்மன்.

அப்படிக் கண்டதால் தன் செல்வாக்குப் பெரிதும் மங்கிவிட்டதையும் இளையபல்லவன் மதிப்பு அவர்களிடம் ஓங்கிவிட்டதையும்கூடப் புரிந்துகொண்டு மனிதர்களை மாற்றுவதில் செல்வத்துக்குள்ள திறமையைக் கண்டு உள்ளூர வியக்கவும் செய்தான்.

அந்த வியப்பை மேலும் உயர்த்த இளையபல்லவன் பலவர்மனை நோக்கி, “கோட்டையின் காவலரே! அகூதாவிடம் ஓராண்டு உப தலைவனாயிருந்த நான் சம்பாதித்த செல்வம் இது. சரியாக மதிப்பீடு செய்பவர்கள் மட்டும் இங்கிருந்தால் இதைக் கொண்டு ஒரு பெரும் அரசை விலைக்கு வாங்கலாமென்பதை உணர்த்துவார்கள். அப்படி மதிப்பீடு செய்ய இங்கு யாருமில்லையென்றால், இதோ இருக்கும் எங்கள் நாட்டுக் கூலவாணிகன் சேந்தன் அவற்றின் மதிப்பைக் கூறுவான்,” என்று சொன்னான்.

அப்படிச் சொல்லிக்கொண்டே அந்தப் பெட்டிகளில் ஒன்றிலிருந்து ஒரு பெரும் மாணிக்கத்தை எடுத்துத் தன் கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் அதைச் சூரிய வெளிச்சத்தில் பளபளக்க விட்டு அது எழுப்பிய செங்கதிர்களை அனைவருக்கும் காட்டிக்கொண்டே, “சேந்தா! இந்த மாணிக்கம் என்ன பெறுமானமுள்ளது?” என்று வினவினான்.

சேந்தனின் ஆராய்ச்சிக் கண்கள் அந்த மாணிக்கத்தைப் பயபக்தியுடன் பார்த்தன; “ஸ்ரி விஜயத்தின் தங்க நாணயங்களில் ஐயாயிரம் நாணயங்கள் பெறும்” என்றான் அவன் சில விநாடிகளின் ஆராய்ச்சிப் பார்வைக்குப் பிறகு.

இளையபல்லவன் ஏதோ வித்தை காட்டுபவன் போல் அந்தக் கல்லை நாற்புறமும் காட்டிக்கொண்டு கொள்ளையரை நோக்கி, “இதைப்போல் சுமார் ஆயிரம் கற்கள் இந்தப் பெட்டியில் இருக்கின்றன. தவிர ஏராளமான நகைகள் இருக்கின்றன” என்று கூறிவிட்டு மிக அலட்சியமாக அந்த மாணிக்கத்தைப் பெட்டியில் விட்டெறிந்தான். பிறகு மற்றொரு பெட்டியைச் சுட்டிக் காட்டி, “இதிலுள்ள தங்கப்பாத்திரங்களை ஸ்ரி விஜய நகரத்தின் கடைத்தெருவில் வெளிநாட்டவருக்கு விலை கூறினால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அக்ஷயமுனைக் கோட்டையைக் காக்க இப்பொழுது இருப்பதுபோல் இரண்டு மடங்கு படையைத் திரட்டலாம். ஆனால் அது என் உத்தேசமல்ல… ” என்று மேலும் ஏதோ இருக்கிறதென்பதை ஊகத்துக்கு விட்டுப் பேச்சைப் பாதியில் நிறுத்தினான்.

அதுவரை கூட்டத்தைப் பற்றி நின்ற பிரமை மெள்ள மெள்ள விலகியது. அவ்வளவு பெரும் செல்வத்தை இளையபல்லவன் என்ன செய்ய உத்தேசிக்கிறான் என்பதில் எண்ணம் போகவே கூட்டத்திலிருந்தவர்கள் கசமுசவென்று ஏதோ பேசத் துவங்கினார்கள். குளத்தில் சிறு கல் வீசப்பட்டதும் மெள்ளத் துவங்கும் ஓர் அலை பல அலைகளைக் கிளப்பி விடுவதுபோல் சலசலப்பு அதிகமாகக் கூட்டத்தில் ஏற்படத் தொடங்கியதன்றிச் சில விநாடிகளில் கேள்விகளும் சற்று பலமாகவே எழுந்தன. “இத்தனை நகைகளையும் பொன் நாணயங்களையும் என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டான் கொள்ளையரில் மிக உயரமாக நின்ற யவனன் ஒருவன்.

“இவற்றை இருக்க வேண்டிய இடத்தில் வைத்துச் செய்ய வேண்டிய பணிக்கு உபயோகப்படுத்துவதாக உத்தேசம்” என்றான் இளையபல்லவன் அந்த யவனன் மீது கண்களைத் திருப்பி.

“இருக்க வேண்டிய இடம் எது? செய்ய வேண்டிய பணி எது?” கொள்ளையர் கூட்டத்தில் நின்ற அரபு நாட்டான் ஒருவன் இந்தக் கேள்வியை வீசினான்.

“இருக்க வேண்டிய இடம் கோட்டைத் தலைவனின் மாளிகையிலுள்ள பொக்கிஷ அறை. செய்ய வேண்டிய பணி இந்தக் கோட்டையிலுள்ள மக்களைக் காப்பது,” என்று இளையபல்லவன் கூறினான் அந்த அராபியனைப் பார்த்து.

“செய்ய வேண்டிய பணி இந்தக் கோட்டை மக்களைப் பாதுகாப்பதானால் படை திரட்ட வேண்டும். அதைத்தான் நீங்கள் செய்ய உத்தேசிக்கவில்லையே?” என்று சந்தேகம் கிளப்பினான் சீனன் ஒருவன்.

“ஆம் ஆம்! பின் என்ன செய்ய உத்தேசம்?” என்று பல குரல்கள் கிளம்பின.

இளையபல்லவன் அவர்களைச் சுற்றித் தன் கண்களை ஓடவிட்டான். “படை எதற்காகத் திரட்ட வேண்டும்? இந்தக் கோட்டையில் எத்தனை காவல் வீரர்கள் இருக்கிறார்கள்?” என்று வினவினான் குரலில் ஏதோ புது அர்த்தம் தொனிக்கும் முறையில்.

“இரண்டாயிரம் பேர்தான் இருக்கிறார்கள்,” என்றான் நகர மக்கள் கூட்டத்திலிருந்து முன்னணிக்கு வந்த ஒருவன்.

அவனைக் கூர்ந்து நோக்கிய இளையபல்லவன், “நகர மக்களாகிய உங்கள் தொகை எவ்வளவு?” என்று வினவினான்.

“அதிகமில்லை, சுமார் ஆயிரம் குடும்பங்கள் தான் உண்டு,” என்றான் அந்தக் குடிமகன்.

“அவற்றில் சுமார் ஐந்நூறு பேர் போருக்குத் தேற மாட்டார்கள்?”

“தேறுவார்கள். ஆனால்… ”

“என்ன ஆனால்… ”

“போர்ப் பயிற்சி இல்லை அவர்களுக்கு. “

இதைக் கேட்டதும் இளையபல்லவன் ஆச்சரியம் ததும்பும் விழிகளைப் பலவர்மன் மீது திருப்பி, “இது உண்மையா கோட்டைத் தலைவரே?” என்று வினவினான்.

எதற்காக அந்தக் கேள்வியை இளையபல்லவன் அத்தனை பேர் முன்னிலையில் தன்னைக் கேட்கிறான் என்பதைப் புரிந்துகொண்டதால் உள்ளூரக் கோபத்தால் கொந்தளித்த பலவர்மன் உணர்ச்சிகளை வெளிக்குக் காட்டாமலே ‘ஆம்’ என்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் அசைத்தான்.

இளையபல்லவன் முகத்தில் ஆச்சரிய ரேகை பலமாகப் படர்ந்தது. “என்ன விந்தை இது! ஸ்ரி விஜயத் தலை நகரத்திலிருந்து வெகு தூரத்திலிருக்கிறது இந்தக் கோட்டை. பின்னாலுள்ள காட்டைத் தாண்டி நெடுந்தூரம் சென்றால் தான் நாகரிகத்தையும் பெரு நகரங்களையும் கண்ணால் பார்க்கலாம். இங்கோ சதா பூர்வகுடிகளைப் பற்றிப் பயமும் இருக்கிறது.

இத்தனை இருக்கையில் நகரமக்களைப் போர்ப் பயிற்சியின்றி எப்படி வைத்திருக்கிறீர்கள்!” என்று வியப்பு பெரிதும் குரலில் மண்ட பலவர்மனை நோக்கி வினவிய இளையபல்லவன் மீண்டும் கூட்டத்தை நோக்கித் திரும்பி, “ஆட்களின் தொகையால் மட்டும் ஒரு நகரம் பாதுகாக்கப்படுவதில்லை. அவர்கள் துணிவு, எச்சரிக்கை இவற்றாலேயே காக்கப்படுகிறது.

இந்தக் கோட்டையின் இரண்டாயிரம் வீரர்களையும், நீங்கள் கூறும் ஐந்நூறு பெரு மக்களையும் திரட்டி, சரியான போர் முறைகளையும் பாதுகாப்பு முறைகளையும் சொல்லிக் கொடுத்தால் இந்தக் கோட்டையைப் பெரும் சைன்னியங்களிடமிருந்தும் பாதுகாக்கலாம். உள்ளே இரண்டாயிரத்து ஐந்நூறு பேர். வெளியே கடற்கரையில் குடிசை போட்டுத் தங்கியுள்ள இந்த ஆயிரம் கொள்ளையர் – அனைவரையும் ஒன்று கூட்டினால் பதக்குகளாகட்டும், சூளூக்களாகட்டும் என்ன செய்ய முடியும்? இங்கு தேவை ஆள் பலமல்ல, ஆள் பலம் இருக்கிறது. சரியான ஆயுதங்கள் தேவை. பயிற்சி தேவை. பயிற்சி பெற்றவர்களை நடத்த படைத்தலைவன் தேவை. துணிவு தேவை. எதையும் சாதிக்கப் பணம் தேவை. அது இதோ இருக்கிறது,” என்று மீண்டும் பெட்டிகளைச் சுட்டிக் காட்டினான்.

மீண்டும் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. எல்லோரும் ஏக காலத்தில் பேச முற்பட்டதால் ஓரளவு குழப்பமும் ஏற்பட்டது. அந்தக் குழப்பத்தின் ஒலிகளுக்கு மேல் எழுந்தது இளையபல்லவன் குரல்: “சொல்வதை அமைதியுடன் கேளுங்கள். இந்த அக்ஷயமுனைக்குக் காரணத்துடன் வந்தேன். இந்தக் கோட்டையின் பலத்தைப் பற்றியும், பலவர்மனின் திறமையைப் பற்றியும் நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆகவே அத்தகைய ஒரு சிறந்த தளபதியின் கீழ் எனது வாழ்வை வளப்படுத்திக்கொள்ளத் தீர்மானித்தேன். இங்குள்ள கொள்ளையரைப் பற்றியும் கேள்விப்பட்டேன். அவர்கள் செல்வம் பறி போவது, பூர்வகுடியால் ஏற்படும் அட்டகாசம், அதனால் வருஷா வருஷம் நடக்கும் கொலைகள் அனைத்தையும் கேள்விப்பட்டேன். இங்கு கொலைகள் விழாமல் தடுத்து இந்தத் தளத்தை இங்குள்ள மக்களைக் கொண்டு பலப்படுத்த முடியுமானால் திரை கடலோடும் கொள்ளையர் படை சரியான கடற்படையாக மாற்றப்படுமானால் இங்கு செல்வமும் அமைதியும் கொழிக்கும் என்று தீர்மானித் தேன்.

நிலத்திலும் நீரிலும் இது ஸ்ரி விஜயத்தின் பெரும் பாதுகாப்பாக அமையும் என்பதையும் முடிவு செய்தேன். என் எண்ணங்களை நிறைவேற்றவே இங்கு வந்தேன். முதலில் கடற்கரையில் கொள்ளையர் மத்தியில் குடிசையிட்டு உறையவும், என் மரக்கலத்தைச் செப்பனிடவும் எண்ணினேன். ஆனால் நிகழ்ச்சிகள் என் எண்ணங்களை அதிதுரிதமாக மாற்றிவிட்டன. விதியின் கரங்கள் என்னை உங்கள் கோட்டைக்குள் பிடித்துத் தள்ளின. ஆகவே நான் சம்பாதித்த முழுச் செல்வத்தை உங்கள் நலனுக்கும் இந்தக் கோட்டையின் நலனுக்கும் செலவிட முடிவு செய்தே இந்தப் பெட்டிகளை இங்கு கொண்டு வந்தேன். உங்களுக்காக இந்த ஆறு பெட்டிகளையும் பலவர்மனிடம் ஒப்படைக்கிறேன்,” என்று சற்று நிறுத்திய இளையபல்லவனின் பேச்சு கூட்டத்தின் பெரும் கூச்சலில் மூழ்கியது.

கூச்சலைக் கையமர்த்தி அடக்கிய இளையபல்லவன், “ஆனால் ஒரு நிபந்தனை,” என்றான்.

“என்ன நிபந்தனை?” உணர்ச்சிகளை வெளிக்குக் காட்டி முதன் முதலாகக் கோபத்துடன் கேட்டான் பலவர்மன்.

“இதோ இந்த சேந்தன் உங்கள் பொக்கிஷத்தின் அதிகாரியாயிருப்பான்” என்று இளைய பல்லவன் சேந்தனைச் சுட்டிக் காட்டினான்.
“இப்பொழுது என்னிடமுள்ள பொக்கிஷ அதிகாரிக் கென்ன?” என்றான் பலவர்மன் கோபத்துடன்.

“உங்கள் பொக்கிஷ அதிகாரி இதுவரை பணத்தைச் சேர்த்து வந்தான். இவன் செலவிடுவான்,” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.

“அவ்வளவு ஊதாரியா?”

“ஊதாரியா! சேந்தனா! ஒருக்காலுமில்லை. பணத்தில் மிகவும் கெட்டி. ஆனால் பூட்டி வைப்பவனல்ல. அதை உபயோகிக்கும் முறை இவனுக்குத் தெரியும். ஆயுதங்களைத் தயாரிக்கவும், கோட்டையைப் பாதுகாக்கவும் இவன் இந்தப் பணத்தை இங்குள்ள மக்களுக்கே செல வழிப்பான். “

“இளையபல்லவரே! நீர் சொல்வது விளங்குகிறது எனக்கு. உங்கள் கையாள் பொக்கிஷத்தை வசப்படுத்திக் கொள்வான், நீங்கள்…. “

“கோட்டைக் காவல் பொறுப்பை ஏற்பேன்; எல்லாம் உங்கள் திட்டப்படிதான் நடக்கிறது. “

“என் திட்டமா?” பலவர்மன் கேள்வி உக்கிரத்துடன் எழுந்தது. “

“ஆம், உங்கள் திட்டம்தான். நடன நிகழ்ச்சியால் பதக்குகள், சூளூக்கள் பகை உங்களுக்கு ஏற்பட்டுவிட்டது. கோட்டை மக்களைக்காக்க உங்கள் வீரர்களால் முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். ஆகையால் என்னை உங்கள் வலையில் சிக்க வைக்க முயன்றீர்கள். அதற்காக ஏதும் அறியாத உங்கள் மகளையும் என்னையும் கொள்ளையருக்குச் சுட்டிக்காட்டிச் சாட்சியம் சேகரித்தீர்கள். உங்களுக்கு ஏன் அத்தனை கஷ்டம்? அத்தனை பொறுப்பையும் நானே ஏற்கிறேன். பெரும் கோட்டைகளைப் பாதுகாத்தும் எனக்குப் பழக்கம் உண்டு.. தகர்த்தும் எனக்குப் பழக்கம் உண்டு. ” என்று பலவர்மனை நோக்கிக் கூறிய இளையபல்லவன் கொள்ளையரை நோக்கி, “உங்களுக்குச் சம்மதம்தானே?” என்று வினவினான்.

“சம்மதம், சம்மதம்,” என்று கொள்ளையரிடமிருந்து மட்டுமின்றி நகர மக்களிடமிருந்தும் குரல்கள் கிளம்பி வானைப் பிளந்தன.

பலவர்மன் உள்ளம் பெரும் எரிமலையாகிக் கொண் டிருந்தது. இளையபல்லவன் கூறிய திட்டம், தான் வகுத்த திட்டம் தானென்றாலும், பெண்ணை மணக்கக் கட்டாயம் செய்து கோட்டைப் பாதுகாப்பையும் அவனிடம் ஒப்படைக்கத் தான் திட்டம் வகுத்தது உண்மைதானென்றாலும் அந்தத் திட்டத்தில் இளையபல்லவன் அத்தனை வலுவில் வந்து வேண்டுமென்று விழுந்ததன் காரணம் புரியவில்லை பலவர்மனுக்கு.

பாலூர்ப் பெருந்துறையில் காஞ்சனாதேவிக்கும் இளையபல்லவனுக்கும் ஏற்பட்ட உறவைப் பற்றி வந்த வதந்திகளை அறிந்திருந்த பலவர்மன், அத்தனை எளிதில் மஞ்சளழகியை மணக்க இளைய பல்லவன் ஒப்புவானென்பதை எதிர்பார்க்கவில்லை. கலிங்கத்தின் படைபலத்தை அழிக்க வந்ததாகவும், அதற்காகவே கடற்படை திரட்டத் தன் உத்தேசமென்றும், தன்னிடம் நேரிடையாக அறிவித்த இளையபல்லவன், மறுநாளே கலிங்கத்துடன் நட்பு கொண்டு சோழரிடம் தீராப் பகைமையுள்ள ஸ்ரி விஜய சாம்ராஜ்யாதிபதியின் கோட்டைத் தளபதியிடம் பணிபுரிய ஏன் தீர்மானித்தான் என்பது விளங்கவில்லை பலவர்மனுக்கு.

ஒன்றுமட்டும் விளங்கியது அவனுக்கு. ஏதோ பெரும் சூது இளையபல்லவன் போக்கின் அடிப்படையாக அமைந்துள்ளது என்பதை மட்டும் புரிந்துகொண்டான் பலவர்மன். அது என்ன என்பதை உடனே அறிந்துகொள்ள முடியாததால் பொறுத்துப் பார்க்க முடிவு செய்தான். ஆகவே இளையபல்லவன் மேற்கொண்டு செய்ய முயன்ற எதையும் அவன் தடை செய்யவில்லை.

கோட்டையைப் பாதுகாப்பதாக இளையபல்லவன் அந்தக் கூட்டத்துக்கு உறுதி கூறிவிட்டு நிதிப்பெட்டிகளை மாளிகைக்குள் எடுத்துச் செல்லத் தன் மாலுமிகளுக்கு உத்தரவிட்டதையும் அவன் தடை செய்யவில்லை. மாளிகைத் தளத்தில் கடற்கரையையும் பகிட்பாரிஸான் மலையையும் நோக்கியிருந்த இரு வாசல் அறையை படைத்தலைவன் ஆக்கிரமித்துக் கொண்டதையும் அவன் தடை செய்யவில்லை. அடுத்த மூன்று நாள்களில் கோட்டைப் பாதுகாப்பில் நடந்த மாறுதல்களையும் அவன் தடுக்க வில்லை.

ஆனால் இளையபல்லவன் நடவடிக்கை ஒவ்வொன்றையும் அவன் ஒற்றர்களால் கவனித்து வந்தான். சுமார் ஒரு வாரம் கழிந்தது. அந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் எதையோ எதிர்பார்த்துக்கொண்டு நள்ளிரவு வரை விழித்துக்கொண்டே அவன் உட்கார்ந்திருந்தான். வாரம் முடிவடையும் நாள் அது. அந்த நாளிரவில் அவன் எதிர்பார்த்தது நடந்தது. நள்ளிரவு வந்ததும் இரண்டு கோட்டான்கள் தூரத்திலிருந்து பலமாகக் கூவின. அதைக் கேட்டதும் பலவர்மன் தன் மஞ்சத்திலிருந்து எழுந்து பெரும் போர்வையொன்றால் தன் தலைக்கு முக்காடிட்டு உடலையும் போர்த்திக்கொண்டு மாளிகையின் பின்புறம் சென்றான்.

அங்கிருந்த மரத்தின் நிழலில் இருவர் நின்றிருந்தனர். அவர்களில் ஒருவன் பலவர்மனுக்குத் தலை வணங்கினான். மற்றொருவன் வணங்காத தலையுடனும் அலட்சியமும் கோபமும் நிரம்பிய பார்வையுடனும் நின்றிருந்தான். பலவர்மனைக் கண்டதும் பலவர்மன் கருத்துக்குச் சற்றும் இணங்காத குரலில் சொற்களும் அவன் உதடுகளிலிருந்து உதிர்ந்தன.

Previous articleRead Kadal Pura Part 2 Ch31 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch33 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here