Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch35 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch35 |Sandilyan | TamilNovel.in

108
0
Read Kadal Pura Part 2 Ch35 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch35 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch35 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 35 : குடிப் பழக்கம்.

Read Kadal Pura Part 2 Ch35 |Sandilyan | TamilNovel.in

இடும்பனிடம் தன் வஞ்சகத் திட்டத்தைக் கூறிவிட்டு அதை நிறைவேற்றும் காலத்தையும் குறிப்பிட்டுவிட்டு மாளிகைக்குள் புகுந்த அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவன் அன்றிரவில் மிகுந்த நிம்மதியுடன் உறங்கினான். அந்த நிம்மதி மறுநாளும் அதைத் தொடர்ந்த மற்ற நாள்களிலும் மிக வெளிப்படையாகத் தெரிந்தது.

ஏதோ பெரும் மனச்சுமை இறங்கியவன் போல் அதி நிம்மதியுடனும் சந்துஷ்டியுடனும் மாளிகையில் மட்டுமல்லாமல் நகரத்திலும் கடற்கரையிலும்கூட தினப்படி உலாவ முற்பட்ட பலவர்மன், போர்ப் பயிற்சி பெற்ற மக்களை உற்சாகப்படுத்தியும், இளையபல்லவன் மரக்கலத்தைச் செப்பனிட்டு வந்த அக்ஷய முனைத் தொழிலாளர்களைப் பாராட்டியும் தன் சந்துஷ்டியை வெளிப்படையாகவும் காட்டிக் கொண்டான்.

அந்தச் சந்துஷ்டியும் மனத்திருப்தியும் அவனுக்கு மட்டுமல்ல, இளையபல்லவனுக்கும் இருந்ததைச் சாதாரண மக்களும் மற்றோரும் கண்டார்கள். மறுநாள் முதல் முன்னைவிட அதிகச் சாந்தியுடனும் பரம திருப்தியுடனும் நகரத்தைப் பாதுகாக்கும் ஏற்பாடுகளிலும் தன் மரக்கலத்தைப் பழுது பார்க்கும் முயற்சியிலும் இறங்கினான் இளையபல்லவன். நகரத்துக்குப் பூர்வகுடிகளிடமிருந்து ஏற்படவிருந்த ஆபத்தின் விளைவாகக் கோட்டை மக்களை எச்சரிக்கையுடன் இருக்கச் செய்வதற்காக, அங்கிருந்த சூதாட்ட அரங்கங்களையும் மதுக் கடைகளையும் ஆரம்பத்தில் அடியோடு அனுமதிக்காத இளையபல்லவன், சில நாள்களில் இரவு நேரங்களில் மட்டும் சிற்சில கடைகள் திறக்கப்படுவதற்கு அனுமதி கொடுத்தான்.

அனுமதி கொடுத்ததன்றி, தானும் அமீருடன் அக்கடைகளுக்குச் சென்று மற்றவர்களுடன் லேசாக மது அருந்தியும், சொக்கட்டானாடியும் பெரிதாகச் சிரித்தும் மக்களைத் திருப்தி செய்து வந்தான். இளையபல்லவனின் இந்த லேசான மாறுதல் மக்களுக்கு மட்டுமல்ல, பலவர்மனுக்கும் மிகுந்த திருப்தியை அளித்தது. பலவர்மன் அடிக்கடி இளையபல்லவனைத் தனது அறைக்கே அழைத்துத் தன்னிடமிருந்த சிறந்த மதுவகைகளை அவ னருந்தும்படி செய்தான்.

இளையபல்லவன் அவனிஷ்டப்படி அந்த மது வகைகளை லேசாக ருசி பார்த்தானானாலும் அவ்வளவாக அவற்றில் ஆசை காட்டாததைக் கண்ட பலவர்மனுக்கு இளையபல்லவன் ரசிகனா என்பதில் பெரும் சந்தேகமுண்டாகவே அதை வெளிப் படையாகவே கேட்க முற்பட்டு, “படைத்தலைவரது நாட்டில் சிறந்த மது வகைகள் கிடையாதா?” என்று வினவினான்.

அந்தச் சமயத்தில்தான் மதுக்கிண்ணத்தை வாயில் வைத்து ஓர் உறிஞ்சு உறிஞ்சி முகத்தைப் பரம கசப்பாக அடித்துச் சுளித்துக்கொண்ட இளையபல்லவன், “சிறந்தது எது என்பது அவரவர் ருசியைப் பொறுத்தது கோட்டைத் தலைவரே” என்று கூறினான், கிண்ணத்தைச் சட்டென்று எதிரே இருந்த மஞ்சத்தில் வைத்து.

“என்னிடமுள்ள மது வகைகளைவிடச் சிறந்தவை உலகத்தில் வேறெந்த நாட்டிலும் கிடையாது இளைய பல்லவரே” என்றான் பலவர்மன் மிகப் பெருமையுடன்.

“தவறு பலவர்மரே! சுத்தத் தவறு,” என்றான் இளைய பல்லவன் திட்டமாக.

“தவறா?” கோபத்துடனும் ஏளனத்துடனும் எழுந்தது பலவர்மன் கேள்வி.

“ஆம். தவறு. முக்காலும் தவறு. “

“வேறு எந்த இடத்தில் இதைவிடச் சிறந்த மதுவை அருந்தியிருக்கிறீர்?” என்று எதிரேயிருந்த மதுக் கலயத்தைக் காட்டினான் பலவர்மன்.

“இந்த ஊரிலேயே அருந்தியிருக்கிறேன். ” “உனக்குச் சித்தப் பிரமைதான். “

“எனக்கல்ல சித்தப்பிரமை, உமக்குத்தான் வீண் மயக்கம். உமது நகரத்தை நீரே சரிவர அறியவில்லை . “

“இந்த ஊரில் மது வகைகள் கடைகளுக்குச் செல்லு முன்பு என்னிடம் காட்டப்படுகின்றன. தெரியுமா உமக்கு?”

“இந்த ஊரில் கொள்ளையரும் இருக்கிறார்கள். உமது கண்ணில் மண்ணைத் தூவியும், உமது வீரர்களை வசப் படுத்தியும் புது மது வகைளை ஊர்க் கடைகளுக்குக் கொண்டு செல்லலாம். “

“எப்படித் தெரிந்து கொண்டீர்?”

“சாப்பிட்டேன், தெரிந்துகொண்டேன். “

இதைக் கேட்ட பலவர்மன் உண்மையிலேயே கோபத்தின் வசப்பட்டான். எந்தப் பெரிய மனிதனுக்கும் சில சில்லறைப் பெருமைகள் உண்டு. அந்தப் பலவீனம் மது சம்பந்தப்பட்ட வரையில் பலவர்மனுக்கு இருந்ததால், அவன் விடாப்பிடியாகத் தன் மாளிகை மதுவே சிறந்த தென்று அடம்பிடிக்க, அது இல்லையென இளையபல்லவன் திட்டமாகக் கூற, இருவருக்கும் வார்த்தை வளர்ந்தது. வார்த்தை தடித்ததால் எந்த இடத்தில் சிறந்த மது இருக்கிறதென்பதைக் காட்டும்படி பலவர்மன் கேட்க அன்று முதல் ஊரில் மதுக்கடைகளுக்கு இரண்டு பேருமே விஜயம் செய்ய ஆரம்பித்தார்கள். இப்படிக் கடைகளுக்கு அழைத்துச் சென்று குடிக்கத் தூண்டிய இளையபல்லவன் வலையில் மட்டும் விழாமல், பலவர்மன் லேசாக.

மது வகைகளை ருசி பார்த்ததன்றி இளையபல்லவனை மாத்திரம் அதிகமாகக் குடிக்கப் பழக்கினான். இளைய பல்லவனும் மெள்ள மெள்ள அந்தப் பழக்கத்தில் விழுந்து குடித்துத் தள்ளாடித் தள்ளாடித் தெருக்களில் நடப்பதை மக்கள் பார்த்தனர்; மாலுமிகள் பார்த்தனர்; கொள்ளையர் பார்த்தனர். பார்த்துக் கவலையும் கொண்டார்கள். எல்லோரையும்விட அதிகக் கவலை கொண்டாள் மஞ்சளழகி.

சுமார் பத்து நாள்களுக்கு முன்பு கடற்கரையில் ‘தன்னைக் கைப்பிடித்து அழைத்து வந்து கொள்ளையரிடம் கொடுத்து, ‘இவளை நான் மணம் செய்துகொள்வதாகப் பலவர்மனிடம் கூறுங்கள்’ என்று கூறிவிட்டுச் சென்ற தினத்திலிருந்து மஞ்சளழகி இளையபல்லவன் கண்களில் அதிகமாகப் படவில்லையென்றாலும் அவன் நடவடிக்கை களை மட்டும் ஊக்கத்துடன் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.

அவன் நகர மக்களுக்குத் தைரியமூட்டியது, கோட்டையைப் பாதுகாக்க ஏற்பாடுகளைச் செய்தது, அனைத்தையும் பார்த்துப் பார்த்து இத்தகைய சிறந்த வீரனை மணாளனாக அடையப்போகிறோமென்ற எண்ணத்தால் மனம் பூரிக்கவும் செய்தாள். இடையிடையே அவள் மனத்தில் ஒரு சந்தேகம் மட்டும் உதித்துக் கொண்டிருந்தது. இளையபல்லவன் தனக்குமுன் வேறொருத்தியிடம் மனத்தைப் பறி கொடுத்திருக்கிறானென்பது மட்டும் அவளுக்கு உறுதியாகத் தெரிந்தது.

வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து கிடைத்த வதந்தியிலிருந்து பாலூர்ப் பெருந் துறை விஷயங்களை ஓரளவு பலவர்மனைப் போலவே அவளும் உணர்ந்திருந்ததால், அந்தப் பெண் கடாரத்து இளவரசியான காஞ்சனா தேவியாகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் அடிக்கடி அவள் மனத்தே எழுந்துகொண்டிருந்தது. ஆனால் அவன் தன்னைத் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்துவிட்டதால், மணம் மட்டும் முடிந்து விட்டால் தான் அவனைத் தன்மீது அன்பு கொள்ளச் செய்யலாமென்ற நம்பிக்கையும் அவளுக்கிருந்தது. அந்த நம்பிக்கை ஊறிக்கிடந்த அவள் இதயத்துக்கு இளைய பல்லவன் திடீரெனக் கற்றுக்கொண்ட குடிப்பழக்கம் பெரும் வேதனையைத் தந்தது. அந்தக் குடிப்பழக்கத்தைத் தந்தையும் அதிகமாக ஆதரிப்பதைக் கண்டு பெரும் சந்தேகமும் சஞ்சலமும் கொண்டாள் மஞ்சளழகி.

வேண்டு மென்றே தந்தை இளையபல்லவனுக்குப் பெரும் குழியைப் பறிக்கிறார் என்பதையும் புரிந்து கொண்டதால் எல்லையற்ற கவலையும் பயமும் அடைந்து, அவரை எப்படி மீட்கலாமென்ற யோசனையிலும் இறங்கி, என்ன செய்வ தென்று தெரியாமல் திணறினாள் அந்தப் பசும் பொன்னிறப் பைங்கிளி.

அதற்காக இளையபல்லவனைத் திருட்டுத்தனமாகச் சந்திக்க முயன்ற ஓரிரண்டு சமயங்களிலும் அவள் நிலை மிகக் கேவலமாகத் திரும்பியது. ஒருநாள் இரவு குடித்து விட்டுத் தள்ளாடித் தள்ளாடி மாளிகைக்குள் நுழைந்த இளையபல்லவனை உப்பரிகையிலிருந்து கண்ட மஞ்சளழகி அவனது அறைக் காவலரை வெளியே செல்லும்படி உத்தரவிட்டுத் தான் மட்டும் அறைவாயிலில் தனித்து நின்றாள். மெள்ள மெள்ள மாடிப்படிகளில் தள்ளாடி ஏறிவந்த இளையபல்லவன் அறை வாயிலில் நின்ற மஞ்சளழகியைச் சில விநாடிகள் மயங்கிய பார்வையுடன் பார்த்தான். “நீ…நீ மனைவி… ” என்று ஏதோ உளறி, தன் கையை நீட்டி விரலால் அவளைச் சுட்டியும் காட்டினான்.

மஞ்சளழகியின் வதனத்தில் வருத்தத்தின் சாயை பூரணமாகப் படர்ந்திருந்தது. அவள் கண்களில் நீர் திரண்டெழாவிட்டாலும் அது திரண்டெழுவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. செவ்விய அவள் அதரங்கள் மெல்லத் துடித்தன. “நீ… மனைவி… நான்.. கணவன்… உம்” என்று உளறிக்கொண்டே அவளை நெருங்கிய இளையபல்லவன் அவளை முரட்டுப்பிடியாகத் தன் கைகளால் பிடித்தான். அவனது வலிய உடலும் அவள்மீது சாய்ந்தது. செவ்வரி படர்ந்த மஞ்சளழகியின் கண்கள் குடிவெறிமிகுந்து நின்ற அவன் கண்களை ஊன்றிப் பார்த்தன. அவள் அழகிய கரங்கள் அவனை ஜாக்கிரதையாகப் பிடித்தன.

அவள் பூவுடல் அவன் முரட்டு உடலுக்குச் சாந்தியளிப்பது போல், சாய்ந்த அவன் உடலை மெள்ள எதிர்த்து நகர்த்தியது. அப்படி அவன் உடலை எதிர்த்துத் தள்ளியும், கைகளால் அவனை இறுகப் பிடித்தும் அறைக்குள் அவனை அழைத்துச் சென்று மஞ்சளழகி மெள்ள அவனை மஞ்சத்தில் படுக்க வைத்தாள். அவள் எத்தனையோ லேசாகப் படுக்க வைத்தும் திடீரெனப் படுக்கையில் விழுந்த இளையபல்லவன் அவளை நோக்கி வெறிச் சிரிப்புச் சிரித்தான். “நீ.. இங்கே … வா வா..” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து மஞ்சத்தில் தன் பக்கத்திலும் உட்கார வைத்துக் கொண்டான். அதற்குப் பிறகு கைகளை அவளை விட்டு விலக்கி மஞ்சத்தில் போட்டுக்கொண்டு பெருமூச்செறிந்தான்.

மஞ்சளழகி அவனைப் பார்த்து அவன் செயல்களைப் பார்த்து வியந்தாள். அத்தனை குடியிலும் அவன் தன்னை அணைக்கவோ, அணைத்துப் படுக்கைக்கு இழுக்கவோ முயலவில்லையென்பதைக் கண்டாள். அவன் கைகள் கூடத் தன்னைத் தொடாமலே மஞ்சத்தில் விழுந்து கிடந்ததைப் பார்த்து, ‘மது மயக்கத்திலும் நடத்தை பிறழாத பெரும் பண்பு இவர் ரத்தத்தில் ஊறியிருக்கிறது. எத்தனை சிறந்த மனிதர்!’ என்று அவனைச் சிலாகித்த மஞ்சளழகி, ‘இத்தனை சிறந்த மனிதரைத் தந்தை அழித்துவிடப் பார்க்கிறாரே?’ என்று தனக்குள் பெரும் துக்கத்தையும் பிறப்பித்துக் கொண்டாள்.

அவள் எண்ணங்களைப் புரிந்துகொள்ளும் நிலையில் இளையபல்லவன் இல்லாததைப் புரிந்துகொண்ட மஞ்சளழகி, அவனுக்குச் சுரணை வரச் செய்தவற்காகச் சற்று எட்ட இருந்த தங்கப் பாத்திரத்தில் இருந்த நீரில் தன் சேலைத் தலைப்பை நனைத்து வந்து மஞ்சத்தில் உட்கார்ந்து இளையபல்லவன் முகத்தில் நீர்த்துளிகளைப்பிழிந்தாள். அந்த நீர்த்துளிகளுக்கும் அசையும் நிலையில் படைத்தலைவன் இல்லாததால், அவன் அறிவைத் தொட்டுத் துலக்க உரையாடல் முறையைக் கையாண்டாள். அதை முன்னிட்டு, “இளையபல்லவரே! சோழர் படைத்தலைவரே,” என்று அவன் காதுக்கருகில் குனிந்து மந்திரம் போல் சொற்களை உதிர்த்தாள்.

அதைக் கேட்டதும் இளையபல்லவன் முகத்தில் அசட்டுச் சிரிப்பின் ரேகை படர்ந்தது. “ஆம்! நான் இளைய பல்லவன்… ஏன் தெரியுமா? பல்லவ மன்னன்…. என் அண்ணன்.. நான் அவனுக்கு இளையவன்… இதுதான் தெளிவு- தெளிவு… ” என்றான்.

“ஆம் ஆம். நீங்கள் இளையபல்லவர்தான். உங்களுக்குக் கடமை இருக்கிறது. அதுவும் கலிங்கத்தின் கடற்படைப் பலத்தை உடைக்கும் கடமை இருக்கிறது. விழித்துக் கொள்ளுங்கள் படைத் தலைவரே!” என்று தன் கண்களால் அவன் கண்களை உற்று நோக்கிக்கொண்டு சொற்களை உறுதியுடன், திடமாக, ஒவ்வொன்றாக அவன் புத்தியில் உறையும்படி உதிர்த்தாள்.

சொற்கள் அவன் புத்தியில் உறையவில்லை. அறிவு மங்கியே கிடந்தது. “ஆம் ஆம்! கலிங்கத்தின் கடற்படை கடலில் தவிடு பொடி…. அதற்குப் போர்க்கப்பல்…. ஆம் போர்க்கப்பல் வேண்டும்…. . கூப்பிடு கண்டியத்தேவனை. ” என்று இரைந்தான் இளையபல்லவன்.

“இப்பொழுது இரவு. “

“சதியாலோசனை- இரவு அல்ல.- இது பகல், கூப்பிடு கண்டியத்தேவனை. “

“சும்மா இருங்கள். இது இரவுதான். “

“இல்லை.. அதோ சூரியன்,” என்று தூரத்திலிருந்த தூங்கா விளக்கைக் காட்டினான் இளையபல்லவன்.

“அது விளக்கு. “

“சூரியனும் ஒரு விளக்கு… இரண்டும் ஒன்று… கண்டியத் தேவனைக் கூப்பிடு… உம், கூப்பிடு… ”

“மாட்டேன்”

“நீ…என் மனைவி… கற்பெனப்படுவது சொற்றிறம் பாமை… தமிழ். தமிழ்ப் பழமொழி… சொற்படி செய். கூப்பிடு… ”

“எதற்குக் கண்டியத்தேவர்?”

“போர்க்கப்பல்… போர்க்கப்பல்…?”

“இப்பொழுதிருப்பது?”

“அதுவும் போர்க்கப்பல்…. அப்படி வேண்டாம்… ”

“வேறு எப்படி வேண்டும்?”

“அக்ரமந்திரம்… அக்ரமந்திரம்.. அக்ர… மந்திரம்,” என்று இறைந்து கூவிய இளையபல்லவன் அவளை மஞ்சத்தின் முனையிலிருந்து அப்புறப்படுத்திவிட்டுத் தள்ளாடி எழுந்து வாயிற்படியை நோக்கிச் சென்று, “டேய்? யாரங்கே!” என்று காவலாளியை அழைத்தான். வந்த காவலாளியிடம், “போ… போ! கண்டியத்தேவனைக் கூப்பிடு… ” என்று உத்தரவிட்டு அறைக்குள் தள்ளாடி வந்து, “மஞ்சளழகி… மனைவி.. எடு அந்த மதுவை… ” என்று அறை மூலையிலிருந்த ஒரு குப்பியைக் காட்டினான். அவள் கொடுக்காது போகவே நீள வாயுடனிருந்த அந்த அரபு நாட்டுக் குப்பியை அவனே எடுத்து வாயில் வைத்து மதுவைச் சிறிது குடித்துக்கொண்டே மீண்டும் மஞ்சத்தில் வந்து உட்கார்ந்து மஞ்சளழகியையும் பக்கத்தில் உட்காரச் செய்தான். “மனைவி.

மது அறிவை இயக்கும். இயக்கும்” என்று உளறி, குப்பியை இன்னொரு கையால் தட்டிக் காட்டினான். மீண்டும் போதையில் உளற ஆரம்பித்து, “மனைவி, மரக்கலங்கள் பலவிதம். ஒன்று ஸர்ப்ப மந்திரம்… இன்னொன்று மத்திய மந்திரம்… இன்னொன்று அக்ர மந்திரம், பிறகு தீர்க்க ம், உன்னாகம்… தவிர, தாரணி… லோலா, காமினி, தாரி, பேகினி, ஜங்கலா.. ஊர்த்வா , அனூர்த்வா , ஸ்வர்ணமுகி, மந்தரா. உம் தெரிகிறதா?– நீ சொல்… சொல்,” என்று மதுக் குப்பியில் விரலால் அடித் தடித்துச் சொன்னான்.

மஞ்சளழகி பதிலேதும் சொல்லவில்லை. தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். “சொல்ல மாட்டாய். உம். ஏன்? தெரியும் தெரியும். நான் படித்திருக்கிறேன்… நீ படிக்கவில்லை … போஜன் எழுதியிருக்கிறான். நூலின் பெயர் யுக்தி கல்பதரு.* மரக்கல சாத்திரம் முழுமையும் அதில் உண்டு. உண்டு.- மணம் செய்துகொள். சொல்லித் தருகிறேன்… உம்” என்று மீண்டும் உளறிவிட்டுப் பஞ்சணையில் திடீரென விழுந்தான்.

மஞ்சளழகி நீண்ட நேரம் அவனைப் பார்த்துக்கொண்டே நின்றாள். அவன் பஞ்சணையில் மயங்கிக் கிடந்தான். அவள் குனிந்து தன் செவ்விய இதழ்களை அவன் நெற்றியில் புதைத்தாள். துக்கம் பீறிட்டதால் அவள் கண்களிலிருந்து நீர்த்துளிகள் பொல பொலவென சுடச்சுட அவன் முகத்தில் உதிர்ந்தன. அந்த நீர்த்துளிகளின் உஷ்ணங்கூட அவனை எழுப்ப வில்லை. மஞ்சளழகி மனவேதனையுடன் அந்த அறையை விட்டு அகன்றாள். குடிப்பழக்கம் இளையபல்லவனை அழித்து விட்டதென்றே தீர்மானித்தாள்.

அதில் ஏதாவது சந்தேகமிருந்தால் அதை அடுத்த நாள் கண்டியத்தேவன் தீர்த்துவிட்டான். மறுநாள் கடற்கரையில் உலாவிய மஞ்ளழகி, இளையபல்லவன் மரக்கலம் பழுது பார்க்கப்படும் இடத்திற்குச் சென்றவள் அங்கு நடந்து கொண்டிருந்த வேலையைப் பார்த்து திக்பிரமை பிடித்து நின்றாள். தன் பிரமையைவிடப் பெரும் பிரமை கண்டியத்தேவன் முகத்தில் இருந்ததையும் கவனித்தாள் மஞ்சளழகி. இளையபல்லவனைத் தன் தந்தை தொலைத்து விட்டார் என்ற முடிவுக்கு வந்தாள்.

Previous articleRead Kadal Pura Part 2 Ch34 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch36 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here