Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch38 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch38 |Sandilyan | TamilNovel.in

154
0
Read Kadal Pura Part 2 Ch38 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch38 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch38 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 38 : முள்ளை முள்ளால் எடுக்கலாம்.

Read Kadal Pura Part 2 Ch38 |Sandilyan | TamilNovel.in

கடற்போரில் மரக்கலத்தோடு மரக்கலம் மோதும் போது, எதிரி மரக்கலத்தின் பலகைகளைப் பிளந்து சுக்கு நூறாக அடிக்கவல்ல பெரிய இரும்பு ஆணிகளை அடித்தளத்தில் உடைய அகூதாவின் சீனத்துக் கப்பலைப் பாரதத்தின் கப்பலாக மாற்றவும், அதன் எடையைக் குறைத்து அதற்குப் புறா முக முகப்பும், பறவைச் சிறகுகளும் அமைத்துக் கடல் புறாவாக அதை நீர்ப்பரப்பில் பறந்து செல்லும்படி ஏற்பாடு செய்யவும் உத்தரவிட்டு,

“இந்தக் கடல் புறா தமிழகத்தின் கடற் காவியத்துக்குப் பெரும் பொன்னேடு சேர்க்கும்” எனவும் கூறிவிட்டுச் சென்றதை எண்ணிப் பார்த்துப் பெரும் வியப்பைக் கண்டியத்தேவன் கடற்கரையில் அடைந்தானென்றால், இளையபல்லவன் இட்ட உத்தரவைக் கேட்டதும் விவரிக்க இயலாத பெரும் மலைப்பையும் திகிலையும் கூலவாணிகன் சேந்தன் கோட்டை மாளிகையில் அடைந்தான், அன்றைய காலையில், கடல்புறாவின் சிருஷ்டிக்கு உத்தரவை இட்டு விட்டு விடுவிடு என்று நடந்து கோட்டை மாளிகைக்கு நேராக வந்து சேர்ந்த சோழர் படைத்தலைவன்,

மேல் தளத்திலிருந்த தன் இரு வாசல் அறைக்குச் சென்றதும் சில நிமிஷங்கள் தீவிர யோனையில் இறங்கி அறையில் அங்குமிங்கும் உலாவினான். ஒரு முறை கடற்கரையை நோக்கியிருந்த வாயில் பக்கம் சென்று கடற்புறத்தை நோக்கிவிட்டு மீண்டும் அதன் எதிர்ப்புற வாயிலின் படியில் நின்று பகிட்பாரிஸான் மலைப்பகுதியையும் தன் கண்களால் ஆராய்ந்தான். பிறகு வடபுறச் சாளரத்தின் வழியாக நகரத்தின் பெரும் கட்டடங்களையும், வீதிகளில் உலாவிக் கொண்டு பணிபுரிந்து கொண்டுமிருந்த மக்களையும் பார்த்துத் திருப்தியுடன் தலையை இருமுறை அசைத்தும் கொண்டான்.

அடுத்தபடி அந்தத் திருப்தி முகத்தில் பூர்ணமாகப் பிரதிபலிக்க அறை நடுவிலிருந்த பஞ்சணையில் அமர்ந்து எதிர்ப்பக்கத்தில் இருந்த மதுக்குப்பியையும் வெள்ளிக் கிண்ணமொன்றையும் கையில் எடுத்துக் கொண்டு காவலனொருவனை அழைத்துக் கூலவாணிகன் சேந்தனை உடனடியாகக் கூப்பிட்டு வருமாறு உத்தரவிட்டான். அந்த உத்தரவின் விளைவாக அறைக்கு வந்த கூலவாணிகன் அங்கு தனக்குக் கிடைத்த பணியைக் கேட்டதும் பெரும் கிலிக்கு உள்ளாகி, “ஐயையோ! என்னால் முடியாது. பெரும் ஆபத்து. என் தலை போய் விடும்,” என்று கதறினானென்றால் அதற்குக் காரணம் இருக்கத்தான் செய்தது.

காவலன் அழைப்புக்குப் பணிந்து மாடியறையில் நுழைந்தபோது இளையபல்லவன் இரு கைகளிலுமிருந்த மதுக் குப்பியையும் வெள்ளிக் கிண்ணத்தையும் முகத்தில் பிரதிபலித்த லேசான வெறிக் குறியையும் கண்டதுமே தனது முகத்தைக் கசப்பாக்கிக் கொண்ட கூலவாணிகன், படைத்தலைவன் பேச ஆரம்பித்ததும் பெரும் பிரமிப்பின் வசப்பட்டான். கூலவாணிகன் உள்ளே வந்ததுமே, “சேந்தா! அதோ அந்தக் கிண்ணத்தை எடுத்துக்கொள். உனக்கும் சிறிது மது தருகிறேன்,” என்று படைத்தலைவன் செய்த குடி மரியாதையை வேண்டாமென்று கை யாட்டத்தினாலேயே உணர்த்திய கூலவாணிகன் சேந்தன், “எதற்கு அழைத்தீர்கள் படைத்தலைவரே!” என்று ஆரம்பத்திலேயே நேரிடையாகக் கேள்வி வீசினான்.

“என்ன அவசரம் சேந்தா? உட்கார்,” என்று எதிரேயிருந்த மஞ்சத்தைக் காட்டிய இளையபல்லவன், அப்படித் தான் சொன்னபிறகும் சேந்தன் நின்றுகொண்டேயிருந்ததைக் கவனித்ததும் மதுக்குப்பி, கிண்ணம் இரண்டும் இரு கைகளிலும் துலங்க எழுந்திருந்து, இரண்டு கைகளாலும் சேந்தனைத் தள்ளிக்கொண்டு போய், தோளைப் பிடித்து அழுத்தி எதிரேயிருந்த மஞ்சத்தில் உட்கார வைத்தான். அந்த உபசரணையால் பெரும் அவஸ்தை அடைந்த சேந்தன், இளையபல்லவன் தனது தோளைப் பிடித்து அழுத்தியபோது மதுக்குப்பியிலிருந்து உடைமேல் அருவியாக ஓடிய சிவந்த மதுவை மிகுந்த வெறுப்புடன் ஒரு கையால் துடைத்துக்கொண்டான்.

“துடைக்காதே சேந்தா! மது சிவந்தது. ரத்தம் போன்றது!” என்று நகைத்தான் இளையபல்லவன்.

“ஏன் துடைக்கக் கூடாது?” என்று சற்று வெறுப்புடன் சீறவும் செய்தான் சேந்தன்.

“இப்போது மது ஓடுகிறது, துடைக்கிறாய். இதே சிவப்புடன் ரத்தம் ஓடினால் என்ன செய்வாய்?” என்று மறுபடியும் நகைத்தான் இளையபல்லவன்.

“ஏன் ரத்தம் ஓட வேண்டும்?” சேந்தன் குரலில் திகைப்பிருந்தது.

“கத்தியால் உன்னைக் குத்தினால் ரத்தம் வராதா?”

“வரும். ஆனால் யார் குத்தப் போகிறார்கள்?”

“யாரும் குத்தலாம். பூர்வகுடிகள் குத்தலாம் பலவர்மன் குத்தலாம். “
“பலவர்மன் எதற்குக் குத்துவான்?”

“அவனுக்கு இஷ்டமில்லாத பணியைச் செய்வதற்காக!”

“பொக்கிஷத்தைக் கையாள்கிறேனே அதற்காகவா?”

“அதற்கு மட்டுமல்ல. அவன் பொக்கிஷத்தையும் நமது பொக்கிஷத்தையும் ஒன்று சேர்த்துவிட்டாய். “

“ஐயோ! அப்படிச் செய்ய நீங்கள் தானே உத்தர விட்டீர்கள்?”

“தவிர இரண்டையும் உண்மையாக நீ கலக்கவில்லை: கலப்பது போல் பாசாங்கு செய்தாய்… ”

“அது உங்கள் உத்தரவுதானே?”

“செலவுக்கு நமது பொக்கிஷப் பணத்தை எடுக்காமல் அவன் பொருளாகப் பார்த்து விரயம் செய்கிறாய்… ”

“என்ன அநியாயம்! இதுவும் நீங்கள் இட்ட உத்தரவு தானே!”

“இப்படியே போனால் பலவர்மன் ஓட்டாண்டியாகி விடுவான்… ”

“ஐயையோ! ஆக்கச் சொன்னது நீங்கள் தானே? எல்லாப் பழியையும் என்மேல் போடுகிறீர்களே!”

இந்தச் சம்பாஷணை ஒரு பக்கம் உக்கிரமாகவும் குற்றச்சாட்டாகவும் இன்னொரு பக்கம் கெஞ்சலாகவும் பயத்துடனும் நடந்தது. இடையிடையே இளையபல்லவன் குடித்தான். நகைத்தான். குற்றம் சாட்டினான். கூலவாணி கனோ கெஞ்சினான். அஞ்சினான். அந்தக் கெஞ்சலையும், அவன் அச்சத்தையும் சிறிதும் லட்சியம் செய்யாத இளைய பல்லவன் குற்றச்சாட்டுகளை அடுக்கிவிட்டு, கூலவாணி கனின் பரிதாப நிலையைப் பார்த்தும் மனமிளகாதவனாய், “சேந்தா! அறையின் கதவுகளைத் தாழிடு,” என்று கடைசியாக உத்தரவொன்றையும் பிறப்பித்தான். உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தோரணை மறுப்புக்கு இடங்கொடாததாயிருக்கவே வேறு வழியின்றிக் தவுகளைத் தாழிட்ட சேந்தன், அடுத்துக் கிடைத்த உத்தரவைக் கேட்டுச் சிறிது கலங்கவும் செய்தான்.

எதிரேயிருந்த மஞ்சத்தில் உட்காரப் போனவனைக் கையைக் காட்டித் தடுத்த படைத் தலைவன், “இப்படி வா! உட்கார் என் பக்கத்தில், மஞ்சத்தை விடப் பஞ்சணை சிறந்தது,” என்றான்.

குடிபோதை படைத்தலைவனுக்கு நன்றாக ஏறி விட்டதைப் புரிந்துகொண்ட சேந்தன் சிறிது தயங்கினான். தயக்கத்தைக் கண்ட இளையபல்லவன், “வா இப்படி! மஞ்சளழகிகூட இல்லை ; அவளுக்குப் பதில் நீ உட்கார்,” என்று இரைந்து கூறி, கட்டடம் அதிரும்படியாக நகைக்கத் துவங்கினான். அந்த நகைப்பைக் கேட்டுக் கதிகலங்கிய கூலவாணிகன் சேந்தன் வேறு வழியின்றிப் பஞ்சணையின் முகப்பில் மெள்ள உட்கார்ந்து அச்சம் மிகுந்த பார்வை யொன்றை இளையபல்லவன் மீது வீசினான்.

அப்படி அவன் உட்கார்ந்தபிறகு இளையபல்லவனின் அட்டகாசம் சிறிது அடங்கியது. நீண்ட நேரம் பேசாமல் உட்கார்ந்திருந்த இளையபல்லவன் அனாவசிய மாக மீண்டும் ஒருமுறை நகைத்தான். பிறகு ரகசியமாகத் தானே ஏதோ வார்த்தைகளைப் பேசிக் கொண்டான். பிறகு அறைக் கதவைத் திறந்துகொண்டு சென்று அங்கிருந்த காவலரை விரட்டி அவர்களில் ஒருவனை மாடிப்படியில் உருட்டியும் விட்டான்.

பிறகு மீண்டும் அறைக்குள் வந்து கதவைத் தாழிட்டுவிட்டுப் பஞ்சணையில் அமர்ந்தான்.
இளையபல்லவன் சேஷ்டைகள் எதுவுமே புதிதாயில்லை கூலவாணிகன் சேந்தனுக்கு. இத்தகைய ஆர்ப்பாட்டமும் கூத்தும் மாளிகை மாடியில் தினசரி நிகழ்ச்சிகளாகி விட்டதை அவன் உணர்ந்தேயிருந்தான். ஆகவே அது எதுவுமே சேந்தனுக்கு வியப்புமில்லையென்றாலும், கதவு தாழிட்டதும் தொடர்ந்த இளையபல்லவன் பேச்சு பெரும் பிரமிப்பை அளிக்கவே செய்தது அவனுக்கு. தலையைக் குனிந்து கொண்டு பஞ்சணையில் உட்கார்ந்திருந்த சேந்தனை, “சேந்தா!” என்ற இன்சொல் திடீரெனத் தலை நிமிர வைத்தது. அந்தச் சொல்லை விடுத்த இளையபல்லவன் குரலில் தொனித்த ஒலியும் பெருவியப்பை விளைவித்தது சேந்தனுக்கு.

சற்று முன் இருந்த வெறி ஒலி இல்லை அந்தக் குரலில். அன்பு ஒலிதானிருந்தது. ஓரளவு நிதானங்கூட இருந்தது. அதனால் நிமிர்ந்து இளைய பல்லவனை நோக்கிய கூலவாணிகனின் கண்களில் வியப்பும் பிரமிப்பும் கலந்து படர்ந்தன.

இளையபல்லவன் கண்கள் குடியால் சிவந்து கிடந்தாலும் முகத்தில் சாந்தம் நிலவிக் கிடந்தது. பேச்சிலும் அந்த சாந்தம் பரவியிருந்தது. “சேந்தா!” என்று மறுபடியும் அழைத்தான் இளையபல்லவன்.

“ஏன் படைத்தலைவரே?” என்று கேட்டான் சேந்தன்.

“உன்னை மிகவும் சோதனை செய்துவிட்டேன்,” என்றான் இளையபல்லவன் நிதானத்துடன்.

“ஆம், ஆம். ” ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காகச் சொன்னான் சேந்தன்.

“என் உத்தரவுகளை… ” என்று இழுத்தான் இளைய பல்லவன்.

“சொன்னபடி நிறைவேற்றி விட்டேன்,” என்றான் கூலவாணிகன்.

“இல்லை நிறைவேற்றவில்லை,” என்ற இளைய பல்லவன் குரலில் நிதானமிருந்தாலும், குற்றச்சாட்டும் இருந்தது.

“எதை நிறைவேற்றவில்லை?” என்று கோபத்துடன் கேட்டான் சேந்தன்.

“பலவர்மன் பொக்கிஷப் பெட்டிகளையெல்லாம் திறந்துவிட்டாயா?”

“ஆகா! திறந்துவிட்டேன்.
“இல்லை! இன்னும் பாக்கியிருக்கிறது. “

“கிடையாது. பொக்கிஷ அறையில் பலவர்மன் பெட்டிகள் பத்து இருந்தன. அவை அனைத்தையும் திறந்து விட்டேன். அவற்றில் ஆறு பெட்டிகளையும் இந்த மாத முடிவுக்குள் தீர்த்துக் கட்டிவிடுவேன். அப்புறம் பலவர்மன் பிச்சை எடுக்க வேண்டியதுதான். “

இளையபல்லவன் கூலவாணிகன் பேச்சைத் திருப்தி யுடன் கேட்டாலும் முடிவில் மெல்லச் சொன்னான். “இல்லை சேந்தா! பலவர்மன் உன்னை ஏமாற்றிவிட்டான்” என்று.

கூலவாணிகன் முகத்தில் ஆச்சரியம் மூண்டது. “இல்லை! ஏமாற்றவில்லை. பெட்டிகள் அனைத்தும் என்னிடமிருக்கின்றன,” என்றான் அவன்.

“இல்லை, உன்னிடமில்லை,” திட்டமாக வந்தது படைத்தலைவன் பதில்.

“பத்துப் பெட்டிகளின் சாவிகளும் இதோ இருக்கின்றன,” என்று மடியிலிருந்த சாவிக் கொத்தைத் தட்டிக் காட்டினான் சேந்தன்.

“பெட்டிகள் பதினொன்று,” என்று கூறி இளைய பல்லவன் கூர்ந்து நோக்கினான் கூலவாணிகனை.

“பதினொன்றா!”

“ஆம். “

“பதினொறாவது பெட்டி எங்கிருக்கிறது?”

“பலவர்மனின் அந்தரங்க அறையில் இருக்கிறது. “

“அந்த அறையில் எங்கே?”

“தரையில் புதைக்கப்பட்டிருக்கிறது அந்த இரும்புப் பேழை. இந்தப் பத்து பெட்டிகளில் இருக்கும் செல்வத்தை விட அதில் அதிகச் செல்வமிருக்கிறது. “

“அதன் சாவி?”

“பலவர்மன் கழுத்திலுள்ள தங்கச் சங்கிலியில் இருக்கிறது. “

“அத்தனை பத்திரமாக வைத்திருக்கிறானா?”

“ஆமாம். “

“அதை… ” என்று கூறிய கூலவாணிகன், இளைய பல்லவனை அச்சத்துடன் நோக்கினான்.

‘ஆம்’ என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத் தான் இளையபல்லவன். அந்தத் தலையசைப்பைக் கண்ட சேந்தன் முகத்தில் ஈயாடவில்லை . “அதை.. அதை.-எடுக்க என்னால் முடியாது…படைத்தலைவரே!” என்று பயத்தால் குரல் நடுங்கக் கூறினான் சேந்தன்.

“எடுக்க வேண்டாம் சேந்தா! வேறு வழியிருக்கிறது. ” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.

“என்ன வழி?” என்று வினவினான் சேந்தன், அச்சம் சிறிதும் அகலாமலே.

“உன்னிடம் மெழுகு இருக்கிறதல்லவா?” என்று கேட்டான் இளையபல்லவன்.

“எந்த மெழுகு?”

“நம் நாட்டில் பிரதிமைகள் செய்ய அமைப்பு எடுக்கும் மெழுகு. “

“இருக்கிறது. “

“அதை எதற்கு உபயோகப்படுத்துகிறாய்?”

“பூட்டின் வாயமைப்பு எடுத்து… ” என்று ஏதோ சொல்லப்போன கூலவாணிகன் முகத்தில் பெரும் கிலி படர்ந்தது. திடீரெனத் திகைத்த அவன், “பலவர்மன் கழுத்துச் சாவியில் மெழுகை அமர்த்தி-” என்று ஆரம்பித்து மேலே சொல்ல முடியாமல் திகைத்தான்.

“கழுத்துச் சாவியில் மெழுகை ஒட்டி அமைப்பு எடுத்துக்கொள். அதை வார்ப்படக்காரனிடம் கொடுத்து, சாவி ஒன்று செய்,” என்றான் படைத்தலைவன்.

“இத்தனைக்கும் கழுத்தைக் காட்டிக் கொண்டிருப்பானா பலவர்மன்?” என்று வினவினான் சேந்தன்.

“உம் காட்டிக் கொண்டிருப்பான். இன்றிரவே அந்தப் பணியைச் செய்!”

கூலவாணிகன் முகத்தில் பெரும் திகில் படர்ந்தது. “முடியாது. என்னால் முடியாது. பெரும் ஆபத்து. என் தலை போய்விடும்” என்று கதறினான்.

இளையபல்லவன் மிகுந்த நிதானத்துடன் கூல வாணிகனைச் சில விநாடிகள் நோக்கினான். பிறகு அவன் காதுக்கருகில் குனிந்து, “சேந்தா! இன்றிரவு பலவர்மன் அந்தரங்க அறைக்குள் செல். உனக்கு எந்தவித எதிர்ப்பும் இருக்காது. மெழுகைச் சாவியில் ஒத்தி எடுத்துக்கொள். அவசரப்படாதே; நிதானமாகச் செய். மெழுகின் அமைப்பு சிறிது தப்பினாலும் அந்தப் பெட்டியைத் திறக்க முடியாது. அந்தப் பெட்டியில் பெரும் செல்வம் இருக்கிறது. அந்தச் செல்வம் எனக்கு வேண்டும்,” என்றான்.

கூலவாணிகன் கைகால்கள் நடுங்கின. “பலவர்மன் கொடியவன், வஞ்சகன்,” என்று கலக்கத்துடனும் நடுக்கத் துடனும் சொற்களை உதிர்த்தான், சேந்தன்.

“வஞ்சகத்தை வஞ்சகத்தால் வெல்ல வேண்டும். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்,” என்ற இளைய பல்லவன் குரல் திடமாக இருந்தது. “இன்று இரவு நள்ளிரவில் அந்த அறையில் நுழைந்துவிடு, புரிகிறதா,” என்ற படைத்தலைவன் உத்தரவும் கெடுபிடியுடனிருந்தது.

அந்த உத்தரவைப் பெற்ற சேந்தன் பெரும் கலக்கத் துடனும், வேதனையுடனும் தன் இருப்பிடம் சென்றான்.

அன்றைய பொழுது வழக்கத்துக்கு விரோதமாக வேகு வேகத்துடன் ஓடியது. நள்ளிரவில் மெள்ள மெள்ள நடந்தான் கூலவாணிகன் பலவர்மன் அறையை நோக்கி.

வழியிலோ அறைவாயிலிலோ காவலர் இல்லை. ஏன் இல்லையென்பதற்கு மாடியில் கேட்ட இளையபல்லவன் குடி வெறிக் கூச்சலும் காவலர் கொம்மாளமும் விளக்கம் காட்டின. காவலர் இல்லை என்ற தைரியத்தால் மெள்ள உள்ளே நுழைந்த சேந்தன் அறையில் இருந்த கோரக்காட்சியைக் கண்டு அடியோடு நிலைகுலைந்து போனான். பலவர்மன் ஒரு மஞ்சத்தின் மீது குப்புற விழுந்து கிடந்தான். அவன் முதுகு பூராவும் செங்குருதி ஓடியிருந்தது.

அந்தக் குருதி அறையின் மங்கலான விளக்கொளியில் மிகப் பயங்கரமாகத் தெரிந்தது. சுவரிலிருந்த படங்கள் வேறு அந்த பயங்கரத்தை அதிகப்படுத்தின. அந்தக் காட்சியின் பயங்கரத்தால் கை, கால் வெலவெலக்க, மார்பு துடி துடிக்க, உடல் வியர்க்க, திரும்பி ஓடிவிட எத்தனித்தான் கூலவாணிகன். அறை மூலையிலிருந்து கிளம்பிய “நில்” என்ற சொல் கூலவாணிகன் கிலியை உச்சநிலைக்குக் கொண்டு சென்றது. கால்கள் நடுங்க, உணர்ச்சிகள் சிதறியோட, சொல்லவொண்ணாப் பயம்பிடித்து வாட்ட, நின்ற இடத்திலேயே நின்ற கூலவாணிகன் அந்தச் சொல் வந்த திசையில் கண்களை ஓடவிட்டான். அறையின் இருண்ட மூலையிருந்து அவனை நோக்கி ஓர் உருவம் அசைந்து அசைந்து மெள்ள மெள்ள நடந்து வந்தது.

Previous articleRead Kadal Pura Part 2 Ch37 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch39 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here