Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch4 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch4 |Sandilyan | TamilNovel.in

162
0
Read Kadal Pura Part 2 Ch4 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch4 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch4 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 4 : சொப்பனமா!

Read Kadal Pura Part 2 Ch4 |Sandilyan | TamilNovel.in

அக்ஷயமுனைக் கோட்டைத் தளத்திலிருந்து அதி துரிதமாக வீசப்பட்ட விஷ அம்பு இளையபல்லவனின் மார்பில் தைத்ததும் அது அவன் உயிரைக் குடித்து விட்டதாகவே எண்ணித் துடிதுடித்த அமீரும் கண்டியத் தேவனும் அடுத்த விநாடி வியப்பின் எல்லை வசப்பட்டுத் தங்கள் கண்களையே நம்பாமல் ஏதோ இந்திர ஜாலத்தைப் பார்ப்பது போல் கரையைப் பார்த்து வாயைப் பிளந்து கொண்டு கப்பல் தளத்தில் நின்றார்கள். சென்ற ஒரு வருடத்தில் அகூதாவிடம் இளையபல்லவன் மரக்கலப் போர்க் கலையை மட்டும்தான் கற்றானா அல்லது மந்திரமும் கற்றானா என்ற எண்ண அலையில் புரண்ட அவர்கள், அவனது ஆயுள் அற்ப ஆயுளாக அடிக்கும் சக்தி உலகில் இல்லையென்று தங்களுக்குள்ளேயே சொல்லிக் கொண்டார்கள். விஷ அம்பிலிருந்தும் தப்பி, கோட்டையை நோக்கி அலட்சியமாக மேலும் நடந்த படைத் தலைவனின் துணிவு பயங்கரத் துணிவாகவேபட்டது, அவ்விருவரின் பதைபதைத்த உள்ளங்களுக்கு.

ஆனால் கோட்டைக்குள் செல்லத் தீர்மானித்த விநாடியிலிருந்து இளையபல்லவன் மட்டும் பின்னேற்படும் அபாயங்களை முன்கூட்டியே யோசித்துவிட்டானாகையால் சிறிதளவும் அச்சமில்லாத இதயத்தினனாய், நிதானம் லவலேசமும் கலங்காதவனாய், தனது பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து கொண்ட பின்பே கப்பலை விட்டுக் கிளம்பினான். அவன் கப்பலின் மேல்தளத்திலிருந்தபோது மார்பைப் பாதி திறந்து காட்டிய அரை அங்கியை அணிந்திருந்தாலும் தனது அறைக்குப் போய்ப் பிரயாணச் சித்தனாய் வந்தபோது கழுத்திலிருந்து முழந்தாள்வரை தொங்கிய உடலைப் பூரணமாக மறைத்து நின்ற ராஜரீக உடையையே அணிந்திருந்தான்.

அதுவும் தன் வசமிருந்த உடைகளில் பெரும் சரிகை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட மிகவும் படாடோபமான உடையையே பொறுக்கி அணிந்திருந்தான். அந்த உடையின் கச்சையும், விலையுயர்ந்த மணிகளும் முத்துகளும் பதிப்பிக்கப் பெற்றிருந்ததன்றி, கச்சையில் செருகப்பட்டிருந்த சிறுவாளின் பிடியிலும் ரத்தினங்கள் இழைக்கப்பட்டிருந்தன. அந்தக் கோலத்திலிருந்த ஒரே பழைய அம்சம் அவன் வாள் ஒன்றுதான். சென்ற ஒரு வருட காலத்தில் பல போர்களைக் கண்டிருந்த அந்த வாளை மட்டும் மாற்றாமல் மற்ற சகலத்தையுமே மாற்றிக்கொண்டு பெரும் தோரணையுடனேயே அவன் கப்பல் தளத்திலிருந்து கீழிருந்த படகில் இறங்கினான். எப்பொழுதும் அதிக படாடோபத்தை விரும்பாத கருணாகர பல்லவன் அன்று படாடோபத்தின் சின்னமாய் விளங்கியதைக் கண்டு பிரமிப்பும் வியப்பும் கொண்டதல்லாமல் எதிர் நோக்கியிருந்த ஆபத்தை முன்னிட்டு, கலவரமும் அடைந்த அமீரும் கண்டியத்தேவனும் அவன் போவதைக் கண்டு அசைவற்று நின்று கொண்டிருந்தார்கள்.

அவர்கள் கலவரத்தையோ, எதிர்நோக்கியிருந்த ஆபத்தையோ, சிறிதளவும் பொருட்படுத்தாமல், கப்பலின் நூலேணி மூலம் படகிலிறங்கி அதில் இருந்த இரு மாலுமி களையும் படகைக் கரையை நோக்கிச் செலுத்துமாறு உத்தரவிட்டான் இளையபல்லவன். படகு சென்று கொண்டே இருக்கையில் மீண்டுமொருமுறை அந்தத் துறைமுகத்தின் அமைப்பையும், கோட்டையின் அமைப்பையும் நன்றாகக் கவனித்தான். அதன் பெரும் பாதுகாப்புகளையும் பலத்தையும் அவன் ஏற்கெனவே எடை போட்டிருந்தானாகையால் படகில் சென்ற சமயத்தில் அவன் கண்ணுக்குத் தெரிந்ததெல்லாம் இன்பமான காட்சிகள் தான்.

அவனது மரக்கலம் துறை முகத்துக்குள் வந்து நங்கூரம் பாய்ச்சிப் படகில் இறங்கு வதற்குச் சுமார் இரண்டு நாழிகைகளுக்கு மேல் பிடித் திருந்தபடியால் அதிகாலையிலிருந்த பெரும் உஷ்ணம் முன்னைவிடப் பன்மடங்கு அதிகமாகி, எங்கும் பெரும் ஒளியையும் பெரும் திகைப்பையும் ஏற்படுத்தியிருந்ததால், கடலலைகள் தரையருகில் வருமுன்பாக மடிந்து மடிந்து ஏற்படுத்திய பெரும் திரைகள் பிரமாதமான ஒலியைப் பெற்றுக் கண்ணைப் பறித்தன. அத்துடன் படகிலிருந்த வண்ணம் பக்கத்து நீரில் கைவைத்த இளையபல்லவன் அதுவும் லேசாக உஷ்ணப்பட்டிருந்ததைக் கண்டு ‘இத்தகைய உஷ்ணத்திலும் பலமான ஜீவராசிகள் வளரு கின்றனவே!’ என்று ஆச்சரியத்துடன் தனக்குள் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில் பலமான வாளை மீன் ஒன்று அலை மட்டத்தில் துள்ளியெழுந்து மீண்டும் நீரில் மூழ்கியதைக் கவனித்தான்.

அதைத் தவிர அத்தனை கடலோசையையும் பிளந்துகொண்டு பகிட்பாரிஸான் மலைக்காட்டுப் பகுதியிலிருந்து துஷ்ட மிருகங்களின் கர்ஜனைகளும் கேட்பதைக் காதில் வாங்கிய இளைய பல்லவன், “உஷ்ணம் உயிரைக் குடிப்பதில்லை: உயிரை அளிக்கவே செய்கிறது; உயிரை அளிப்பது மட்டுமல்ல, உடலைத் திடமாகவும் அடிக்கிறது” என்று சொல்லிக் கொண்டவன் அதற்கு அத்தாட்சி கடலிலும் மலையிலும் மட்டுமில்லாது கடற்கரையிலும் கிடப்பதைக் கண்டான்.

தனது படகு தன்னந்தனியாக வருவதைக் கண்டதும் கடற்கரைக் குடிசை வட்டாரங்களில் நடவடிக்கை துரிதமாக ஏற்பட்டதையும், மூடிய குடிசைக் கதவுகள் திறக்கப்பட்டதையும் அவற்றிலிருந்து திடகாத்திரமான தலைகள் எட்டிப் பார்த்ததையும் கண்ட இளையபல்லவன், ‘நல்ல பலத்தை இந்த அக்ஷயமுனை உஷ்ணம் கொடுக்கத் தான் செய்கிறது. நல்லவேளை அதிக தைரியத்தை மட்டும் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் நாம் தப்புவது பெரும் கஷ்டம்’ என்று தனக்குள் எண்ணமிட்டுச் சிறிது புன்முறுவலும் கொண்டான். எதிரே பிரிவு பிரிவாக இருந்த குடிசைகளில் வசித்திருந்த கொள்ளைக்காரரின் உரத்தை அவன் ஓரளவு எடை போட்டுவிட்டதால் சிறிதும் லட்சியம் செய்யாமலே படகில் உட்கார்ந்து படகுக்கும் நாவாய்க்குமிடையிலிருந்த தூரத்தைக் கடந்ததன்றி, படகுகரையை அடைந்ததும் அந்த அலட்சியத்துடனேயே கரையில் குதித்து, “படகைத் திருப்பி மரக்கலத்துக்குக் கொண்டு செல்லுங்கள்” என்று தனது வீரர் இருவருக்கும் கட்டளையிட்டுத் தான் மட்டும் தனியாகக் கோட்டையை நோக்கி நடக்கலானான். அப்படி நடந்த சமயத்தில் அவன் எதையும் கவனிக்காதவன் போல், நடந்துகொண்டாலும் அவன் கண்கள் எதிர்நோக்கி வந்த ஆபத்தின் ஒவ்வோர் அசைவையும் கவனித்துக் கொண்டுதானிருந்தன.

அக்ஷயமுனைத் துறைமுகத்துக்குள் கப்பல் நுழைந் ததும் ஊதப்பட்ட கொம்புகளால் அதை அகூதாவின் கப்பலென்று நினைத்து ஓடி ஒளிந்த அக்ஷயமுனைக் கடலோரக் குடிசை வாசிகள் தூரத்தில் தங்கள் குடிசை களிலிருந்து கப்பலில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கவனிக்கத் தவறவில்லையாகையால், கப்பல் நங்கூரம் பாய்ச்சியதையும் அதன் தளத்திலிருந்து அகூதாவின் தோற்றத்துக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத ஒரு வாலிபன் படகிலிறங்கியதையும் பார்த்ததும், தாங்கள் வீண் கலவரப் பட்டுவிட்டதை உணர்ந்துகொண்டார்கள். அத்துடன் அந்த மரக்கலத்தின் வாலிபத் தலைவன் தன்னந்தனியே படகில் கரை நோக்கி வந்ததும், அவர்களுக்குக் கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகமும் அச்சமும் நீங்கிவிடவே அவர்கள் குடிசைகளை விட்டு வெளிவந்தனர்.

தனித்தனியான குடிசைக் கூட்டங்களிலிருந்து திடுதிடுவென்று வெளிப்போந்த அந்த நானாவிதத் தோற்றமுள்ள பல நாட்டுக் கொள்ளைக்காரர்கள் திடீரெனப் பெருங் கூச்சலிட்டு, கத்திகள், பெரும் ஈட்டிகள், பின் புறத்திலிருந்து மண்டையில் தாக்கக்கூடிய வயிரம் பாய்ந்த மரக் கட்டைகள் முதலிய ஆயுதங்களுடன் கரையை நோக்கி விரைந்து வந்தார்கள். வந்தது அவர்கள் மட்டுமல்லாமல் அந்தக் குடிசையிலிருந்த பல நாட்டுப் பெண்களும் அவர்களுடன் ஓடி வந்தார்கள். மனிதக் கதம்பம்போல் பல வர்ணங்களுடன் தூரத்தே வந்த அந்தக் கூட்டத்தைக் கவனித்தும் அதைப்பற்றிச் சிறிதளவும் சிந்திக்காதவன் போல் மணலில் அவர்களை நோக்கி நடந்தான் இளையபல்லவன்.

அந்தக் கொள்ளைக்காரர்கள் பலப்பல பிரிவுகளாக இருந்த குடிசைகளிலிருந்து தனித்தனிக் கூட்டங்களாகப் பிரிந்து கிளம்பினாலும் சற்று தூரத்தில் ஒன்று சேர்ந்து விட்டதன்றி, நானாவிதக் கூச்சலுடனும், கேலிச் சிரிப்புடனும் வெகு வேகமாக இளையபல்லவனை அணுகினார்கள். அப்படி அணுகிய அந்த மனித அலை, இளைய பல்லவனை நெருங்கியதும் நல்ல மலைப் பகுதியைத் தாக்கும் கடலலை போலச் சிறிது உடைந்து பின்வாங்கியது. அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் முன் பகுதியிலிருந்தவர்கள் தங்கள் கூட்டத்தைப் பார்த்தும், ஆயுதங்களைப் பார்த்தும், சிறிதும் லட்சியம் செய்யாமல் வரும் அந்த வாலிபனின் துணிவைக் கண்டு சிறிது தயங்கினார்கள். அந்தத் தயக்கத்தின் விளைவாகக் கூட்டமும் சிறிது திடீரெனத் தேங்கியது. முன்வரிசை தேங்கியதால் பின் வரிசைகள் சிறிது சலனப்பட்டன. அத்தனையையும் கவனிக்கத் தவறாத கருணாகர பல்லவன், அவர்களை ஒருமுறை தன் கூரிய கண்களால் அளவெடுத்தான்.

கூட்டத்தில் பல நாட்டுச் சாதிகளிருப்பதையும், ஆனால் நெறி மருந்துக்குக்கூட அவர்களிடமில்லாததையும் அவர்கள் முகபாவத்திலிருந்தே அறிந்த சோழநாட்டுப் படைத்தலைவன் கூட்டத்தின் உட்புறத்திலிருந்த பல நாட்டுப் பெண்கள் மீதும் கண்களை ஓட்டி அவர்களில் பெரும்பாலோர் பிற நாடுகளிலிருந்தும் பிற நாட்டுக் கப்பல்களிலிருந்தும் கவரப்பட்டு வந்தவர்களென்பதையும், கற்புக்கும் அவர்களுக்கும் அதிக சம்பந்தமிருக்க முடியாதென்றும் தீர்மானித்துக் கொண்டான். அத்தனை பெண் முகங்களிலும் சில தூய முகங்களிருப்பதையும் கண்டு, “உலகத்தில் எங்கும் எப்பொழுதும் தூய்மைக்கும் இடமிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டான்.

முன்னணியில் தன் எதிரே ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டு நின்ற கொள்ளைக்காரர்கள் குறை எதுவாயிருந்தாலும் அச்சம் அந்தக் குறைகளில் ஒன்றல்ல என்பதைத் திட்டமாக உணர்ந்து கொண்டான் சோழர்களின் படைத்தலைவன். அந்த முகங்களில் தன்னைக் கண்டதால் சற்றுக் குழப்ப மிருந்ததேயொழிய அச்சத்தின் சாயை சிறிதுமில்லாததைக் கவனித்து, தான் சிறிது நிதானம் பிசகினாலும் தன் உயிர் செல்லாக்காசு பெறாதென்பதையும் தீர்மானித்துக் கொண்டான். கொம்புகள் ஊதப்பட்டதும் அவர்கள் ஓடி ஒளிந்து கொண்டதற்குக் காரணம் அச்சமேயென்றாலும் பெரும் படைகளே கேட்டு அஞ்சிய அகூதாவின் கொம்புகளின் சப்தத்தை அந்தக் கொள்ளைக்காரர்கள் செவி என்பதையும் புரிந்துகொண்டான்.

கொள்ளைக்காரர்களின் பலாபலத்தை இப்படி எடை போட்டுக் கொண்ட இளையபல்லவன், அவர்கள் தன்னை அணுகியதும் அவர்களைக் கூர்ந்து ஒருமுறை நோக்கினான். பிறகு அவர்கள் கைகளிலிருந்த பலவித ஆயுதங்களை நோக்கினான். “தனி மனிதனைக் கொல்ல எதற்கு இத்தனை ஆயுதங்கள்?” என்று படைத்தலைவன் ஒருவன் தன் வீரர்களைக் கேட்கும் அதிகாரத் தொனியில் அந்தக் கொள்ளைக் கூட்டத்தை நோக்கிக் கேட்டான்.

அவன் தோரணையையும் கேள்வியில் தொனித்த அதிகாரத்தையும் கண்ட கொள்ளைக்காரர்கள் ஒரு விநாடி மிரண்டனர். பிறகு அவர்களில் ஒரு தமிழன், “நீ யார்?” என்று பதில் கேள்வியொன்றை வீசினான்.

“உங்களில் ஒருவன்” என்றான் இளையபல்லவன் தீர்க்கமான, நிதானமான குரலில்.

“உங்களில் ஒருவனா?” ஆச்சரியத்துடன் அந்தக் கொள்ளைக்காரன் மறுமுறையும் கேட்டான்.

அடுத்த விநாடி அந்த முன்னணிக் கொள்ளைக் காரனுக்குப் பின்னாலிருந்து, “பொய்! பொய்! அவன் உடையைப் பார்” என்று பல குரல்கள் எழுந்தன. இதையடுத்து அர்த்தமில்லாத கூச்சலும் மிரட்டலும் அந்தக் கொள்ளைக்காரர்களிடமிருந்தும் அங்கிருந்த பெண்களிட மிருந்தும் கிளம்பின.

“அவனைக் கொல்லுங்கள், கொல் லுங்கள்!” என பலமான கூச்சல்கள் கடலலைகளையும் அடக்கும் வகையில் எழுந்தன. அத்தனைக்கும் அசையாமல் நின்ற இடத்திலேயே நின்றான் இளையபல்லவன். அவனது கூரிய விழிகளில் ஏளன ஒளி மண்டிக் கிடந்தது. அந்தக் கூக்குரலைக் கேட்டு அவன் கை அவன் பெருவாளையோ, கச்சையிலிருந்த சிறு வாளையோகூட நோக்கிச் செல்லாததைக் கண்ட கொள்ளைக்காரர் குழப்படைந்தனர். அடுத்தவிநாடி பேசாமலே அவர்களை நோக்கி இரண்டடி முன்னெடுத்து வைத்தான் இளையபல்லவன். சிங்கத்தைக் கண்டு பின் வாங்கும் ஆட்டு மந்தை போல அந்தக் கொள்ளைக்கூட்டம் பின்வாங்கியது. “குலைக்கிற நாய்கள் கடிப்பதில்லை” என்று சீற்றத்துடன் கூவிய இளையபல்லவன் சட்டென்று நின்றான். அந்த கூட்டமும் நின்றது. கூச்சலும் மந்திரத்தில் கட்டுப்பட்டது போல் நின்றது.

சென்ற ஒரு வருடத்தில் அகூதாவிடமிருந்து மனோ தத்துவ சாத்திரத்தை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தான் அந்த வாலிப வீரன். “பெரும் கூட்டங்களை ஆயுத பலத்தால் சமாளிக்க முடியாது. புத்திபலத்தாலும் உறுதியாலும் சாமர்த்தியத்தாலுமே சமாளிக்க முடியும்” என்று அகூதா பலமுறை கூறியிருப்பதை அந்தச் சமயத்தில் நினைத்துக்கொண்ட இளையபல்லவன் அந்தக் கொள் ளைக்காரர்களில் முதலில் பேசிய தமிழனை அருகே அழைத்து, “இவர்களுக்குச் சொல் நான் அகூதாவின் உபதலைவன் என்று. அகூதாவை விட்டு விலகிவிட்டேன் என்பதையும் தெரிவி!” என்று உத்தரவிட்டான்.

அந்தப் பிராந்தியத்தில் அதிகமாகப் பரவியிருந்த *காவி பாஷையில் அதை மொழி பெயர்த்தான் அந்தத் தமிழன். பதிலும் காவி பாஷையிலேயே வந்தது. “இங்கு ஏன் வந்தான்?” என்று மீண்டும் பல குரல்கள் கிளம்பின. அதையும் மொழிபெயர்த்தான் தமிழன்.
“உங்களுடன் வசிக்க. உங்கள் உதவியைப் பெற. உங்களுக்கு அளவற்ற செல்வத்தையும் அளிக்க. உங்க ளுக்குத் தெரியுமா பெரும் பொருளை ஏற்றிக்கொண்டு கலிங்கத்துக் கப்பலொன்று செல்லப்போகிறதென்று!” என்று வினவினான் படைத்தலைவன்.

இது மொழிபெயர்க்கப்பட்டதும் அந்தக் கூட்டத்தின் பயங்கரக் கூச்சலுக்குப் பதில் களிவெறிக் கூச்சல் எழுந்தது. பொன்னை எதிர்பார்த்ததால் ஏற்பட்ட வெறி அவர்கள் எதிர்ப்பை நிமிட நேரத்தில் நட்பாக மாற்றவே அவர்களில் சிலர் அவனைக் கட்டிக் கொண்டார்கள்; அவன் இஷ்டப்பட்டிருந்தால், அவனைத் தூக்கிக்கொண்டும் கோட்டைக்குச் சென்றிருப்பார்கள். இளையபல்லவன் அதை அனுமதிக்காமல் அவர்களை விலக்கிக்கொண்டு, முன்னே நடந்தான். அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டும், ஆடிப்பாடிக் கொண்டும் அவனைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.

வானைப் பிளந்த அவர்கள் களிவெறிக் கூச்சல் திடீரென நின்றது. கோட்டை மீதிருந்து வீசப்பட்ட விஷ அம்பு அவன் மார்பில் பாய்ந்ததும் கூச்சல் ஸ்தம்பித்தது. பயத்தின் மூச்சுக்காற்று மட்டும் ‘ஹா’ என்ற சப்தத்துடன் எழுந்தது. அடுத்த விநாடி அதுவே ஆச்சரியத்துக்கு அடிகோலியது. விஷ அம்பு மார்பில் தைத்திருக்க, கண்ணிமைக்கும் நேரம் நின்ற கருணாகர பல்லவன் தள்ளாடித் திடீரென விழுவானென்று அவனைப் பிடிக்கப்போன இரு கள்வரும் அவன் உதடுகளிலிருந்து உதிர்த்த திடீர்ச் சிரிப்பைக் கேட்டுத் திகைத்தனர். அடுத்த விநாடி அந்த அம்பை மார்பிலிருந்து பிடுங்கி அலட்சியமாக அவன் எறிந்துவிட்டு மேலே நடக்க முற்பட்டதையும் அம்பு தைத்த இடத்தில் சிறிது ரத்தம்கூட வராததையும் கண்டு பெரும் பயமும் வியப்பும் அடைந்தனர் கள்வர். அதன் விளைவாகச் சிலர் அவனைத் தொடர்ந்தனர்; சிலர் கைகளை ஆகாசத்தில் ஆட்டி மேற்கொண்டு அம்பு வீச வேண்டா மென்று கோட்டைக் காவலருக்கு எச்சரித்தார்கள். அத்துடன் ஏதோ மந்திரத்தால் வசப்பட்டவர்கள் போல் தேவபுருஷனைத் தொடரும் மானிடப் பிறவிகளென இளையபல்லவனைத் தொடர்ந்து சென்றார்கள்.

அவர்கள் செய்த சைகைகளாலும் அவர்கள் கூட்டமாக இளையபல்லவனைத் தொடர்ந்து வந்ததாலும் அபாயமேதுமில்லை என்பதைப் புரிந்துகொண்ட கோட் டைக்காவலர் மேற்கொண்டு அம்புகளை வீசாமல் கோட்டைக் கதவுகளையும் திறந்தார்கள்.

அங்கிருந்த கோட்டைக் காவலரின் தலைவனை நோக்கிய கருணாகர பல்லவன் கோட்டைத்தலைவனை அவசரமாகப் பார்க்க வேண்டுமென்று கேட்டான்.

காவலர் தலைவன் சில விநாடிகள் இளையபல்லவனை ஏற இறங்கப் பார்த்தான்.

அவன் உடையின் உயர்வையும் தோரணையின் கம்பீரத்தையும் கண்டு, ‘சரி பின்னால் வா’ என்பதற் கறிகுறியாகச் சைகை செய்துவிட்டு முன்னால் நடந்தான். கொள்ளையர் புடை சூழக் காவலர் தலைவனைப் பின்பற்றி அந்த மலைச் சரிவின் சில வீதிகளைத் தாண்டி உச்சியிலிருந்த மாளிகைக்கு வந்த இளையபல்லவன் கடைசியாக அந்த மாளிகையின் பெரும் அறையொன்றில் உட்கார வைக்கப்பட்டான். விநாடிகள் சில ஓடின. தீவிர சிந்தனையில் ஆழ்ந்து அந்த அறையைச் சுற்றுமுற்றும் பார்த்த இளையபல்லவன் பயங்கரமான ஒரு மனிதனின் இருப்பிடத்திற்குத் தான் வந்திருப்பதை உணர்ந்து கொண்டான். அத்தகைய மனிதனைத் தான் சரிபடுத்த வேண்டுமானால் தன் சாமர்த்தியத்தில் பெரும்பகுதியை உபயோகிக்க வேண்டியிருக்குமென்பதையும் புரிந்து கொண்டான்.

இப்படி அவன் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்த சமயத்தில் தூரத்தே இருந்த சிறு கதவு ஒன்று திறக்கப்பட்டு, கோட்டைத் தலைவன் உள்ளே நுழைந்தான்.

அவனைக் கண்டதும் இளையபல்லவனின் சிந்த னைகள் எங்கெங்கோ பறந்தன. விவரிக்க இயலாத பெரும் திகைப்பு அவன் இதயத்தைச் சூழ்ந்து கொண்டது. தான் இருப்பது உண்மையில் அக்ஷயமுனை தானா என்பது பற்றிப் பெரும் சந்தேகம் துளிர்த்தது அவன் இதயத்தில். தான் காண்பது சொப்பனமா என்று கூடச் சிந்தித்தான் அவன்.

Previous articleRead Kadal Pura Part 2 Ch3 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch5 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here