Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch41 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch41 |Sandilyan | TamilNovel.in

120
0
Read Kadal Pura Part 2 Ch41 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch41 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch41 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 41 : மரக்கலமல்ல… மனக்கலம்.

Read Kadal Pura Part 2 Ch41 |Sandilyan | TamilNovel.in

கடற்சிப்பியைக் கச்சையிலிருந்து எடுத்துக் காட்டி அது ஓர் ஊதுகுழல் என்பதைப் புலப்படுத்தி, அதை ஊதி விடும்படியும் உத்தரவிட்டு இளையபல்லவன் சென்ற இரவுக்குப் பிறகு மஞ்சளழகியின் நிலை பெரிதும் மாறு பட்டுவிடவே அவள் பழைய மஞ்சளழகியாயில்லாமல் புது மஞ்சளழகியாகி ஏதோ உணர்ச்சியற்ற ஒரு பதுமை உலாவுவது போல் உலவி வந்தாள்.

அவள் மாற்றத்தை அக்ஷயமுனை நகர மக்களும் கடற்கரைக் கொள்ளையரும், இளையபல்லவனைச் சேர்ந்த மாலுமிகளும் கண்டாலும் அதன் உண்மைக் காரணத்தை அறியாமல், இல்லாத காரணங்களையும் தாங்களாகவே கற்பித்துக்கொண்டு அவற்றைப் பகிரங்கமாகப் பேசவும் தலைப்பட்டார்கள். இளையபல்லவனிடம் அவளுக்கிருந்த காதலே அந்த மாற்றத்துக்குக் காரணமெனச் சிலர் நினைத்தார்கள்.

அந்தக் காதலும், இளையபல்லவன் குடி வெறியாலும் பண்பற்ற நடத்தையாலும் வெறுப்பாக மாறியிருக்க வேண்டுமென்று இன்னும் சிலர் நினைத்தார்கள். பூர்வ குடிகளின் விரோதத்தால் தன் தந்தைக்கும் இளைய பல்லவனுக்கும் என்ன தீங்கு நேரிடுமோ என்ற திகில்தான் காரணமென்றும் மற்றும் சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். காரணம் எதுவாயினும் பழைய மஞ்சளழகி மாறிவிட்டாள் என்பது மட்டும் தெளிவாகத் தெரியவே அவளை அறிந்த, அவள் நடனத்தை வருஷா வருஷம் ரசித்த, அத்தனை மக்களும் அவள் நிலை பற்றி வருந்தவே செய்தார்கள்.

கொள்ளையரின் துணைவிகள் அவளைக் கடற் கரையிற் பார்த்தபோதெல்லாம் அவளது வெறித்த பார்வையையும், கேட்டதற்குத் தாமதித்து வந்த அவள் பதிலையும், சிலசமயங்களில் திடீர் எனத் தூக்கி வாரிப் போட்டது போல மிரண்ட அவள் விழிகளையும் கண்டு பெரிதும் பரிதாபப்பட்டார்கள்.

அதே கடற்கரையில் அலட்சிய நடை நடந்து கொள்ளையரைத் தட்டிக் கொடுத்தும், கொள்ளையர் மாதரைக் கேலி செய்தும், சுதந்திரப் பறவையாக விஷமக்களஞ்சியமாக விளங்கிய அந்தக் கட்டழகி மறைந்துவிட்டாள். யாரிடமும் அணுகாத, அணுகினாலும் உடனடியாகப் பேசாத, பேசினாலும் சட்டென்று கத்தரித்துக் கொண்டு கடற்கரை நீர் முனைக்குச் சென்றுவிடும் புத்தம்புது பதுமையைக் கண்ட கொள்ளையர் பெரிதும் வருந்தினார்கள்.

கொள்ளையர் மட்டுமென்ன, இளையபல்லவனது மரக் கலத்தை வெகு துரிதமாக மாற்றியமைத்துக் கொண்டிருந்த தொழில் வல்லுநரும் கண்டியத்தேவனும் இதர மாலுமிகளுங்கூட அவள் நிலை கண்டு வருத்தப்பட்டார்கள்.

கோட்டைக்குள்ளும் கடற்கரையிலும் பலப்பல கண்கள் பலப்பல உள்ளங்கள் தன்னைக் குறித்துப் பரிதாபப்படுவதைக் கூடக் கவனியாமல் மஞ்சளழகி நகரத்துக்குள்ளும் வெளியிலும் உலாவினாள். அவள் சித்தம் சதா புரியாத பல விஷயங்களாலும் கேள்விகளாலும் தினம் தினம் பீடிக்கப்பட்டதால் அவள் அவற்றை அலசி அவற்றுக்கு விடை கண்டுபிடிக்கவே முயன்று கொண்டிருந்தாளாகையால் சுற்றுலகத்தை அவள் அடியோடு மறந்தாள்.

கடற்சிப்பியைத் தன் வாயில் பொருத்தி இப்படி ஊத வேண்டும் என்று இளையபல்லவன் காட்டியதையும், தான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் அவன் உத்தரவிட்டதையும் எண்ணி எண்ணிக் குழம்பினாள் அவள். அந்தக் கடற்சிப்பியை ஊதியபிறகு அதன் மர்மம் பெரிதும் உடைந்துவிட்டதானாலும், அது உடைந்த விதத்தை மட்டும் அவளால் மறக்க முடியவே இல்லை.

கடற் சிப்பியை ஊதினதும் திடீரென்று மாளிகைக்குள் கதவொன்று பெரும் சத்தத்துடன் திறந்ததும், சில விநாடி களுக்கெல்லாம் யாரோ ஓடிவரும் காலடியோசை கேட்டதும் ஏதோ சொப்பனத்தில் நடப்பது போல சதா அவள் சித்தத்தில் வலம் வந்துகொண்டிருந்தன. அந்தக் காலடியோசை தனது தந்தையின் காலடியோசைதானென்பது அவர் தோட்டத்துக்குள் வந்தபின்பு அறிந்ததும் தன் வியப்பு பன்மடங்காகி விட்டதன்றி அவர் காட்டிய கலவரமும் கேள்விகளைக் கேட்டுத் தன்னைத் திணறடித்து . விட்டதையும் எண்ணிப் பார்த்த அவள் அவற்றுக் கெல்லாம் காரணம் தெரியாமல் தவித்தாள்.

கடற்சிப்பி ஊதப்பட்டதும், ஆந்தைகள் அலறும் சத்தம் எழுந்ததே விசித்திரமாயிருந்தது அவளுக்கு. அந்தச் சத்தத்தைக் கேட்டுத் தந்தை ஓடி வந்தது அதை விட விசித்திரமாயிருந்தது மஞ்சளழகிக்கு. அப்படி ஓடி வந்த தந்தை கேட்ட கேள்விகள் அப்போது அவள் சித்தத்தில் எழுந்தன. மாளிகையிலிருந்து பலவர்மன் வேகமாகத் தோட்டத்துக்குள் வந்தவன், நேராக அந்த மரத்தை நாடி வந்தது அவள் மனக்கண்முன் நன்றாக எழுந்தது. அப்பப்பா அவர் முகத்தில்தான் எத்தனை கலவரம்? எத்தனைக் குழப்பம்! அப்படி பலவர்மன் நிலை குலைந்ததை அவள் கண்டதே இல்லை .

முகத்தில் குழப்பம், திகில், சந்தேகம் ஆகிய பல உணர்ச்சிகள் கலந்து பாய நேராக மரத்தடியை நோக்கி வந்த பலவர்மன் அங்கிருந்தது தன் மகளென்பதை அறிந்தவுடன், “யார்? நீயா? நீ இங்கே எதற்காக வந்தாய்?” என்று கோபம் கொழுந்துவிட்டெரிய சொற்களைக் கொட்டினான்.

“ஏன்? நான் இங்கு வரக்கூடாதா?” என்று கேட்டாள் அவள்.

“வரலாம், வரலாம். இரவில் ஏன் வர வேண்டும்?” என்று குழறினான் பலவர்மன்.

“இரவில் நான் இங்கு வருவது வழக்கந்தானே. புதிதல்லவே?”

“புதிதல்ல, புதிதல்ல, இருப்பினும் இந்த மரத்தடி, இந்த மரம்… ”

‘இந்த மரத்துக்கென்ன? நீண்ட நாளாக இருக்கிறது!”

“இருக்கிறது இருக்கிறது! இருந்தாலும் அதில் ஏன் சாய்ந்து கொண்டிருக்கிறாய்?”

“ஏன், சாயக்கூடாது?”

“சாயலாம். சரி சரி, இங்கு யார் வந்தார்கள்?”

“யாரும் வரவில்லையே!”

பலவர்மன் கோபம் கட்டுக் கடங்காததாயிற்று. “பொய்! பொய்! சுத்தப் பொய். ஆந்தை அலறிய சத்தம் என் காதில் விழுந்தது. ” என்றான் பலவர்மன் சொற்களில் உஷ்ணம் ஊடுருவி நிற்க.

“பட்சியைச் சொல்கிறீர்களா? பட்சி வந்திருக்கலாம்,” என்றாள் அலட்சியத்துடன் மஞ்சளழகி.

“பட்சியல்ல, வந்தது மனிதன். ஆந்தைக் குரல் கேட்டது எனக்கு,” என்று சீறினான் பலவர்மன்.

“மனிதன் ஆந்தையா!” உள்ளத்திலே சஞ்சலமிருந் தாலும் வறட்டுச் சிரிப்பை உதடுகளில் வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டு கேட்டாள் மஞ்சளழகி.

“விளையாடாதே! மனிதன் ஆந்தையல்ல. “

“அப்படியானால் ஏன் பதறுகிறீர்கள்?”

“இங்கு ஒருவன் வந்திருக்கிறான், அவன். “

“அவன் ஆந்தை போல் கூவுவானாக்கும்… ”

“ஆம். கூவுவான். “

“அவனை எனக்குத் தெரியும். “

“தெரியுமா? எங்கு போய்விட்டான்?”

“எங்கும் போகவில்லை. இங்குதான் இருக்கிறான். “

“எங்கே? எங்கே?” இப்படிக் கேட்டுக்கொண்டு சுற்று முற்றும் நோக்கினான் பலவர்மன்.

“இங்கே! இங்கே,” என்று அதுவரை மறைத்து வைத்திருந்த கடற்சிப்பியைக் காட்டினாள் மஞ்சளழகி.
அதை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்ட பலவர்மன் மிகுந்த சந்தேகத்துடன் மகளை நோக்கினான். “இதை நீதான் ஊதினாயா?” என்றும் கேட்டான்.

“ஆம். ” என்றாள் மஞ்சளழகி.

“இது ஏது உனக்கு?” கடுமையுடன் எழுந்தது பலவர்மன் கேள்வி.

“இங்கு மரத்தடியில் கிடந்தது” என்றாள் அவள்.

பலவர்மன் பெரும் சுமையை இறக்கியவன் போல் பெரு மூச்சு விட்டான். அத்துடன், “மடையன்! மடையன்! எத்தனை அஜாக்கிரதை! நல்லவேளை, இது இவள் கையில் கிடைத்ததே,” என்று சற்று இரைந்தே சொன்னான்.

“யார் போட்டுவிட்டது இதை?” என்று கேட்டாள் அவள்.

“இடும்பன். ” என்று வாய் தவறி அசப்பில் சொல்லி விட்ட பலவர்மன் சட்டென்று பேச்சை நிறத்திவிட்டு, “யாராயிருந்தால் உனக்கென்ன? வா உள்ளே!” என்று அவளைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு மாளிகை நோக்கி நடந்தான். மனத்தில் பல யோசனைகள் அலைபாய அவனுடன் சென்றாள் அன்று மஞ்சளழகி. அந்த இரவின் நிகழ்ச்சிகள் அவள் மனத்தை விட்டு அகலவேயில்லை.

நான்கு நாள்களுக்குப் பிறகு கடற்கரையில் உலாவிய போது கூட ஏதோ நாடகம் நடப்பது போல் அவள் மனக்கண்ணில் அந்தச் சம்பவம் எழுந்து உலாவிக் கொண்டிருந்தது! இடும்பன் பெயரை உச்சரித்ததி லிருந்து பல விஷயங்கள் அவளுக்கு வெட்ட வெளிச்சமாயின. மெள்ள மெள்ளக் கொள்ளைகாரர்களை விசாரித்ததில் சூளூ இனத்தார் கடலோடுபவர்களால்தான் கடலாழத்தில் இருந்து ஏதோ புதுவிதக் கடற்சிப்பியை எடுத்து வருவது வழக்கமென்றும் அதில் ஊதல் செய்து ஊதி, தங்கள் சகாக்களை அழைப்பது வழக்கமென்றும் அறிந்தாள் மஞ்சளழகி.

என்ன காரணத்தாலோ சூளூக்களின் தலைவனான இடும்பன் தனது தந்தையை நந்த வனத்துக்கு அழைத்திருக்கிறானென்றும், போகும்போது தவறிக் கடற்சிப்பியைப் போட்டுவிட்டுப் போயிருக்க வேண்டுமென்றும் அனுமானித்தாள் அவள். ஆனால் அந்தச் சிப்பி இளையபல்லவனிடம் எப்படி அகப்பட்டது? அதை ஊதும் முறை அவனுக்கு எப்படித் தெரிந்தது என்ற விஷயங்களை மட்டும் அவளால் ஊகிக்க முடியவில்லை.

இடும்பன் தானாகவே வந்து தந்தையைக் காண முயன்றானா அல்லது தந்தைதான் அவனை வரவழைத்தாரா? வரவழைத்தால் இளையபல்லவன் நகரத்தைச் சுற்றி ஏற்படுத்தியிருக்கும் கடுங்காவலை மீறி அவன் எப்படி வர முடிந்தது? இப்படிப் பல கேள்விகளைக் கேட்டும் அவளுக்கு ஏதும் பதில் கிடைக்கவில்லை . ஒன்று மட்டும் அவளுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. அனைவரையும் மீறிய பெரும் மர்மம் அக்ஷயமுனையை வளைத்துக் கொண்டிருக்கிறது. அதற்குப் பலவர்மன், இளையபல்லவன் ஆகிய இருவரில் ஒருவரோ இருவருமோ காரணம், என்பதுதான் அது.

அத்தகைய எண்ணங்களுடனும், எண்ணங்களால் ஏற்பட்ட கவலையுடனும் அடுத்த சில நாள்கள் அவள் மாளிகையில் அதிக நேரம் இருக்காமல் கோட்டைக்குள்ளும் கடற்கரையிலும் நடமாடி வந்தாள். கடற்கரையில் அவள் கவலையைத் தீர்க்க எழுந்த தெய்வப் பறவைபோல் எழுந்து கொண்டிருந்தது, இளையபல்லவன் கடல்புறா. கண்டியத்தேவன் மேற்பார்வையில் பிரதிதினம் தொழில் வல்லுநர் மிக மும்முரத்துடன், கப்பலை மாற்றியமைத்து வந்ததையும் அந்த மரக்கலத்தின் அமைப்பே புதுவிதமாக இருந்ததையும் கவனித்த மஞ்சளழகி தான் மனக் கவலையை மாற்றிக் கொள்ளத் தினந்தோறும் நீண்ட நேரம் நீர்க்கரையின் முகப்பிலேயே கழித்து வந்தாள். வேலை நடந்துகொண்டிருந்த இடத்திற்குச் சற்றுத் தள்ளி நீர்க் கரையில் அமர்ந்த அக்ஷயமுனையின் அழகி அந்தக் கப்பலின் அழகைக் கண்டு வியந்தாள்.

கண்டியத்தேவன் கடற்புறாவுக்கு வெகு துரிதமாக உருக்கொடுத்துக் கொண்டிருந்தான். கரையில் நன்றாக இழுக்கப்பட்டு, பாதி நீரிலும் பாதி தரையிலுமாகச் சற்றே சாய்ந்திருந்த அந்தப் பெரும் மரக்கலத்தில் தளங்களின் பழைய பாய்மரங்கள் நீக்கப்பட்டு, பகிட்பாரிஸான் காட்டுப் பகுதியின் வயிரம் பாய்ந்த மரங்கள் பாய் கட்டப் பொருத்தப்பட்டபடியால் சில நாள்களுக்குள்ளாகவே இணையற்ற கம்பீரத்தை அடைந்தது அந்த மரக்கலம்.

சீனத்து மரக்கலத்தின் நான்கு பாய்மரங்களுக்குப் பதில் ஆறு பாய்மரங்கள் அந்த மரக்கலத்தில் பொருத்தப்பட்டன. அவற்றில் மூன்று சிறியதாகவும் மூன்று பெரியதாகவும் இருந்ததையும் கண்ட மஞ்சளழகி அப்படியேன் பலபடி பாய்மரங்களை அமைக்கிறார்கள் என்பதை அறியாமல் குழம்பினாள். அதுமட்டுமல்ல, நடுவிலிருக்க வேண்டிய கப்பல் தலைவன் அறையைக் கப்பலின் முகப்பில் அமைத்துக் கொண்டிருப்பது அத்தனை உசிதமா என்ற சந்தேகமும் அவளுக்கு எழுந்தது. அந்தச் சந்தேகத்தைக் கண்டியத்தேவனையே கேட்டாள் அவள்.

“முகப்பில் தலைவர் அறை இருப்பது உசிதமா தேவரே!” என்ற அவள் கேள்விக்கு, “அக்ரமந்திரத்தை அமைப்பது இப்படித்தான்” என்று கண்டியத்தேவன் பதில் சொன்னான்.

“அப்படியானால் மரக்கலத் தலைவனும் முகப்பில் தானே இருக்கமுடியும்?” என்று வினவினாள் மஞ்சளழகி.

“ஆம்,” என்றான் தேவன்.

“போர் ஏற்படும்போது முகப்பில் இருப்பவருக்கு ஆபத்து ஏற்படுமே,” என்று அவள் கவலையுடன் கேட்டாள்.

“அக்ரமந்திரத்தில் முகப்பில் ஆபத்தில்லை,” என்றான் தேவன்.

“ஏன்?” என்று வினவினாள் அவள்.

“அறையின் அமைப்பு அப்படி. மரக்கலத்தின் அமைப்பும் அப்படி. எதிரிகள் அம்புகளையோ வேல்களையோ வீசும்போது முகப்பைத் தாழ்த்த இந்த போர்க்கப்பலில் வசதி உண்டு. அதற்காகவே இதன் முன்புறத்தைச் சற்றுத் தாழ்த்தியும் பின்புறத்தைச் சற்றுத் தூக்கியும் அமைக்கிறோம்.

அமைப்பே இப்படி. தவிர துடுப்புகள் துழாவும் போது பின்புறத் துடுப்புகளை ஆழத்தில் துழாவி, சுக்கானையும் அழுத்திப் பிடித்தால் மரக்கலம் முகப்பைச் சற்றுத் தாழ்த்திக்கொண்டு மீனைப் பிடிக்கச் செல்லும் மீன்கொத்தி போல் விர்ரென்று நீரைப் பிளந்து செல்லும். தூர இருந்து பார்ப்பவர்களுக்குக் கப்பல் மூழ்கிப் போய் விடுவது போலத் தோன்றும். ஆனால் அந்தச் சமயத்தில் தான் இந்த மரக்கலம் அபாயமானது. இதன் மீது வீசப்படும் அம்புகளும் வேல்களும் முகப்பு தாழ்ந்திருப்பதால் அக்ரமந்திரத்தைத் தொடாமல் பின்பக்கம் சென்றுவிடும். இங்கு இருந்து எய்யப்படும் அம்புகள், நேராக எதிரிக் கப்பலைத் தாக்கும். ” என்று விளக்கினான் தேவன்.

இப்படிச் சில நாள்கள் பல விஷயங்களைப் பற்றி விவாதித்த மஞ்சளழகி பாரத நாட்டு மரக்கலக் கலையைப் பற்றியும் கடற்போர் முறைகளைப் பற்றியும் பல விஷயங்களை அறிந்துகொண்டாள். அவள் மரக்கலக் கலையில் காட்டிய சிரத்தையைப் பற்றிக் கண்டியத்தேவன் பெரிதும் ஆச்சரியப்பட்டான். மரக்கலத்தைப் பற்றிய பல விஷயங்களை அவள் ஏற்கெனவே அறிந்திருந்ததும் அவனுக்கு வியப்பாயிருந்தது.

மரக்கலத்தைக் கட்டும் பெரும் பொறுப்புச் சுமை மஞ்சளழகியின் சம்பாஷணையாலும் சிரத்தையாலும் பெரிதும் மட்டுப்பட்டது கண்டியத்தேவனுக்கு. அடிக்கடி அவளைத் தளத்துக்கு அழைத்துச் சென்று மரக்கலத்தைத் தான் அமைக்கும் முறைகளைக் காட்டினான். மரக்கலத்தின் பாய்மரங்களையும் மரக்கலத்தின் வளைந்த ஓரங்களில் படுத்துக்கிடந்த பெரும் விற்களையும், வேல் வீசும் யந்திரங்களையும், எரியம்பு வீசும் சாதனங்களையும், அவற்றை இயக்கும் முறைகளையும் விளக்கினான். கண்டியத்தேவன் திறமையைப் பெரிதும் பாராட்டினாள் மஞ்சளழகி. ஆனால் அந்தப் பாராட்டு தலை ஒப்பாத கண்டியத்தேவன், “என்னைப் பாராட்டிப் பயன் இல்லை மகாராணி! நீங்கள் பாராட்ட வேண்டி யவர் இளையபல்லவர்,” என்றான் ஒருநாள்.

“இளையபல்லவரா இந்த மரக்கலத்தை அமைக்கிறார்” என்று கேட்டாள் அவள்.
“ஆம். “

“அவருக்கு என்ன தெரியும் இதில்?”

“அப்படித்தான் நானும் முதலில் நினைத்தேன். தரைப்படையை நடத்தும் தலைவருக்கு மரக்கலத்தின் மர்மங்கள் எப்படித் தெரியும் என்று. ஆனால் அவருக்குச் சகலமும் தெரிந்திருக்கிறது. அவர் ஆலோசனைப்படியே இந்த மரக்கலத்தின் ஒவ்வோர் அணுவும் மாற்றி அமைக்கப் பட்டிருக்கிறது. “

மஞ்சளழகி பிரமித்தாள். அத்துடன் கேட்டாள், “இதை ஏன் புறாவைப்போல் அமைக்கிறீர்கள்?” என்று.

“இளையபல்லவர் உத்தரவு. “

“சுயபுத்தியோடு உத்தரவு போடுகிறாரா அவர்?”

“முதலில் குடிவெறியில் ஏதோ சொல்கிறாரென்று நினைத்தேன். பிறகு யோசித்துப் பார்த்ததில் மிகுந்த நினைப்புடன் அவர் முடிவுகளைச் செய்வது புரிகிறது. “

“இதற்கு என்ன பெயரிடப் போகிறீர்கள்?”

“‘கடல் புறா’ என்று. “

“அதையும் இளையபல்லவர்தான் சொன்னாரா?”

“ஆம். “

“ஏன் அப்படிப் பெயரிட வேண்டும்?”

“நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஊகம்தான்… ” என்று இழுத்தான் கண்டியத்தேவன்.

“ஊகத்தைத்தான் சொல்லுங்களேன்,” என்று கேட்டாள் மஞ்சளழகி.

“அவரும் காஞ்சனாதேவியும் முதலில் பாலூர்ப் பெருந்துறையில் சந்தித்தார்கள்… ” மென்று விழுங்கினான் தேவன்.

“ஆம் ஆம். அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ” மஞ்சளழகியின் குரலில் மகிழ்ச்சியற்றிருந்தது.

“அவர்கள் வெளிநாட்டுப் பிரமுகர் வீதி மாளிகையி லிருந்தபோது தூதுப் புறா ஒன்றை அநபாயர் அனுப்பினார். “

“அநபாயரா?”

“ஆம். சோழமண்டலத்தின் இளவரசர். “

“உம். “

“அந்தத் தூதுப் புறா மர்மத்தை விளக்கியவர் இளைய பல்லவர். “

“அப்படியா?”

“ஆம். அந்தப் புறா மிக அழகாயிருக்கும். “

“ஊஹும்?”

“அதைப்பற்றி, சென்ற ஒரு வருடத்தில் பலமுறை இளையபல்லவர் பேசியிருக்கிறார்?”

“என்ன பேசியிருக்கிறார்?”

“அந்தத் தூதுப் புறாவே அவர்கள் இருவரையும் இணைத்ததாக… ”

“சரி சொல்லும்… ”

“அந்த நினைப்பின் அடையாளமாக, கடாரத்துக் கட்டழகியின் நினைவாக, இந்தக் கடல் புறா சிருஷ்டிக்கப் படுகிறது என்பது என் ஊகம். “

மஞ்சளழகி கண்டியத்தேவனை எரித்துவிடுவது போல் பார்த்தாள். “போதும் உங்கள் ஊகம், நிறுத்துங்கள்” என்று இரைந்து கூவிவிட்டு வெகு வேகமாகத் தளத்தின் பலகைகளில் ஓடிப் பக்கவாட்டு நூலேணியில் வெகு அவசரமாக இறங்கி, துடியிடை துவள, உடலும் உணர்ச்சி களும் குலுங்கக் கோட்டையை நோக்கிப் பறந்தாள் அந்தப் பைங்கிளி.
மூச்சுத் தெறிக்க ஓடிய அவள், கோட்டை வாயிலில் யார்மீதோ திடீரென மோதிக்கொண்டாள். தலை நிமிர்ந்து நோக்கினாள். இளையபல்லவன் அவளை இறுக்கிப் பிடித் திருந்தான்.

“விடுங்கள் என்னை” என்று திமிறினாள் அவள்.

அந்த இரும்புக் கரங்கள் அவளை அசையவிட வில்லை . “எங்கு ஓடுகிறாய் மஞ்சளழகி?”

“உங்கள் காதலியைக் கேளுங்கள்!”

“பதறாதே மஞ்சளழகி. யார் என் காதலி!” என்று கேட்டான் அவன்.

“அதோ இருக்கிறாள்” என்று கடல் புறாவைச் சுட்டிக் காட்டினாள் அவள். ‘

“மரக்கலமா?”
“மரக்கலமல்ல. உங்கள் மனக்கலம் அது. அதில் வீற்றிருக்கிறாள் உங்கள் காதலி. அதுவே உங்கள் மனப்பெண். அதோ தெரிகிறதே கடல்புறா, கடல் கன்னி” என்று ஒரு கையைத் திமிறி அவன் மார்பில் அடித்தாள் மஞ்சளழகி.

அவளைப் பிடித்த பிடியை விடாமல் கடற் புறாவை நோக்கினான் இளையபல்லவன். கடற் புறாவின் முகப்பு மூக்கை அப்பொழுதுதான் பொருத்தத் துவங்கினான் கண்டியத்தேவன். அதன் அழகிய மூக்கு மஞ்சளழகியை நோக்கியது. மூக்குப் பலகைகளில் ஆணிகளை வைத்து தச்சர் இறுக்கினர்.

ஆணிகள் இறங்கிய சத்தம் மஞ்சளழகியின் காதில் பெரிதாக ஒலித்தது. அந்த ஆணிகள் தன் இதயத்தில் இறங்குவதாகவே அவள் நினைத்தாள். உணர்ச்சி மிகுதியால் மூர்ச்சை போட்டு இளையபல்லவன் மார்பில் சாய்ந்துவிட்டாள். அவளைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு மாளிகையை நோக்கி நடந்தான் இளையபல்லவன். அவனை வரவேற்க வாயிலில் காத்திருந் தான் பலவர்மன் முகத்தில் வெற்றிக் குறியுடன்.

அந்தக் குறிக்குக் காரணம் முதலில் விளங்கவில்லை இளைய பல்லவனுக்கு. அன்று மாலை சேந்தன் சில விவரங்களை உளறிக் கொட்டியபோதுதான் இளையபல்லவன் காரணத்தைப் புரிந்துகொண்டான். புரிந்து கொண்டதும் அமீரை வரவழைத்து, “அமீர்! நமது நடவடிக்கைக்குச் சமயம் நெருங்கிவிட்டது” என்று அறிவித்தான். அதை அறிவித்த இளையபல்லவன் குரல் வறண்டு கிடந்தது.

வறட்சிக்குக் காரணம் புரிந்தது அமீருக்கு. அடுத்த நடவடிக்கை அக்ஷயமுனைக் கோட்டையின் கதியை நிர்ணயிக்கும் என்பதை உணர்ந்துகொண்ட அமீர், “உத்தர விடுங்கள் படைத்தலைவரே” என்றான். உத்தரவுகள் மிகத் துரிதமாகவும் திட்டமாகவும் விளக்கமாகவும் வெளிவந்தன. “பயங்கரமான உத்தரவுகள் தான். ஆனால் வேறு வழியில்லை” என்று அமீர் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

Previous articleRead Kadal Pura Part 2 Ch40 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch42 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here