Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch42 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch42 |Sandilyan | TamilNovel.in

139
0
Read Kadal Pura Part 2 Ch42 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch42 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch42 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 42 : பலப் பரீட்சை.

Read Kadal Pura Part 2 Ch42 |Sandilyan | TamilNovel.in

மயக்கமுற்ற மஞ்சளழகியைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வந்த இளையபல்லவனை மாளிகை வாயிலில் சந்தித்த பலவர்மன், “ஏன் தூக்கி வருகிறீர்கள் என் மகளை? இவளுக்கு என்ன நேர்ந்துவிட்டது?” என்று கவலையுடன் வினவிய சமயத்திலும் அவன் குரலில் மித மிஞ்சிய கவலைக்குப் பதில் ஓரளவு குதூகலமே ஊடுருவி நின்றதைக் கவனித்த இளையபல்லவன் அதைக் கவனித்தும் கவனிக்காதவன்போல், “கோட்டையின் உஷ்ணம், அதனால் மூர்ச்சையடைந்து விட்டாள்” என்று பதில் கூறினான்.

பலவர்மன் முகத்தில் கவலைக் குறியையே அதிகமாகக் காட்டி, “உங்கள் நாட்டைவிட இந்த நாட்டில் உஷ்ணம் அதிகம்” என்றான்.

“ஆம். ஆம். அப்படித்தான் தெரிகிறது” என்று பதில் சொன்ன இளையபல்லவன் மாளிகைக்குள் நுழைய முயன்றான்.

அவனுக்கு வழி விடாமலே நின்ற பலவர்மன், “இந்த அபரிமித உஷ்ணத்துக்குக் காரணம் தெரியுமா?” என்றும் வினவினான்.

“தெரியும். பூமத்தியரேகை இந்தத் தீவின் குறுக்கே ஓடுகிறது” என்றான் இளையபல்லவன்.

“அது அத்தனை பெரிய காரணமல்ல. “

“வேறு எது?”

“பகிட்பாரிஸான். “

“எரிமலையா?”

“ஆம். அது உள்ளூர எப்பொழுதும் குமுறிக் கொண் டிருக்கிறது. அது எப்பொழுது வெடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. “

“எரிமலைகளின் தன்மையே அப்படித்தான். “

“அல்ல அல்ல. சில எரிமலைகள் வெடிப்பதற்குப் பூர்வாங்கமாகப் பெரும் ஜ்வாலைகளை இரண்டு நாள்கள் வீசும். பகிட்பாரிஸான் அத்தனை அவகாசம் கூடக் கொடுக்காது. திடீரெனச் சீறும். சீறினால் அதைச் சமாளிப்பது கஷ்டம். அக்ஷயமுனையும் அப்படித்தான். “

“இந்தத் துறைமுகமா?”

“ஆம் இளையபல்லவரே! இதன் அரசியலும் எரி மலையைப் போன்றது. திடீரென மாறவல்லது. திடீரென இங்கு சம்பவங்கள் ஏற்படும். எதிர்பாராத மாற்றங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் இங்கு ஏற்பட்டிருக்கின்றன. இதுவும் ஓர் எரிமலை! இதன் உஷ்ணத்தையும் இதன் விவரம் அறியாதவர்கள் சகிக்க முடியாது. “

“பலவர்மன் மேலுக்குக் கவலையுடனும் உள்ளே உற்சாகத்துடனும் பேசிய பேச்சின் பொருள் இளைய பல்லவனுக்குப் புரிந்தாலும், காரணம் மட்டும் புரியாததால், “உங்கள் துறைமுக உஷ்ணத்தின் முதல் பலியாக மகள் மூர்ச்சையாகி விட்டாள். உங்களையும் பாதிக்கப் போகிறது.

எச்சரிக்கையாயிருங்கள்” என்று சொல்லிவிட்டு பலவர்மனை இடித்துத் தள்ளி வழி ஏற்படுத்திக்கொண்டு மாளிகைக்குள் சென்று மஞ்சளழகியின் அறைப் பஞ்சணையில் அவளைக் கிடத்தினான். பிறகு அவள் தோழிகளை அழைத்து அவளை ஜாக்கிரதையாகக் கவனிக்கும்படி உத்தரவிட்டு மீண்டும் கடற்கரையை நோக்கிச் சென்றான். கடற்கரையில் கடற்புறா நிர்மாணிக்கப்பட்டு வந்த இடத்துக்கு வந்ததும் அதை நீண்ட நேரம் ஏறிட்டு நோக்கிய இளையபல்லவன் புறாவின் அழகிய மூக்கையும் பெரும் இறக்கைகளையும் கண்களிருக்க வேண்டிய இடத்திலிருந்த பெரும் துவாரங்களையும் பார்த்துப் பூர்ண திருப்திக்கு அடையாளமாகத் தலையை ஆட்டிக் கொண்டான்.

அதன் பக்கப்பகுதியில் தொங்கிக் கொண்டிருந்த நூலேணியின் வழியாக அந்தப் பெரும் மரக்கலத்தின் தளத்துக்கும் ஏறிச் சென்று அங்கு நடந்து கொண்டிருந்த வேலை முறையையும் கவனித்தான். அந்த மரக்கலத்தின் தளத்தில் பக்கப் பலகைகளுக்கு அருகில் மறைந்து கிடந்த போர்க்கலங்களையும் அவற்றைத் தூக்கி நிறுத்தவும், படுக்க வைக்கவும் பல கோணங்களில் சாய்க்கவும் அமைக்கப்பட்டிருந்த மர உருளைகள், இரும்புச் சலாகைகள், இவற்றையும் ஊன்றிப் பார்த்த இளையபல்லவன் இதழ்களில் திருப்தியின் புன்னகை யொன்று படர்ந்தது. அதையொட்டி முகத்திலும் பெருமிதச் சாயை விரிந்தது.

இளையபல்லவன் தளத்திலேறியதும், அவனை எதிர் கொண்ட கண்டியத்தேவனும், அவனைப் பின்பற்றித் தளத்தில் உலாவி, அவன் முகத்தில் விரிந்த பெருமிதச் சாயையைக் கண்டு உள்ளத்தில் உவகை கொண்டான். அத்துடன், “நன்றி இளையபல்லவரே!” என்றும் கூறினான்.

இளையபல்லவன் தன் கூரிய விழிகளை அவன் பக்கம் திருப்பி, “எதற்கு நன்றி தேவரே?” என்று வினவினான்.

“உங்கள் முகத்தில் திருப்தியின் குறி தெரிகிறது?” தயக்கமின்றி வந்தது கண்டியத்தேவன் பதில்.

“உள்ளத்தில் திருப்தி ஏற்பட்டால் முகத்தில் தெரியாதா?” என்று கேட்டான் இளையபல்லவன்.

“தெரிந்தது. அதற்குத் தான் நன்றி கூறினேன். “

“நன்றி எதற்கு?”

“தொழில் செய்பவனுக்கு, தன் தொழில் பிறருக்குத் திருப்தியளிக்கிறது என்பதைவிடப் பெரும் ஊதியமோ பரிசோ கிடையாது. “

“உண்மை. “

“அதிலிருக்கும் மகிழ்ச்சி வேறெதிலும் இல்லை. “

“ஆமாம். “

“என் வேலையைப் பற்றி நீங்கள் திருப்தியடைந்திருக் கிறீர்கள். பெருமையும் அடைந்திருக்கிறீர்கள். அது எனக்குப் பெரும் சன்மானமல்லவா?”

“ஆம். “

“அதற்காகத்தான் நன்றி தெரிவித்தேன். ஆனால் இதில் முழு பெருமை என்னுடையதல்ல. உங்கள் கருத்துப் படி மாற்றியமைக்கிறேன். அவ்வளவுதான். “

“கருத்துக்கு உருக்கொடுப்பது அத்தனை எளிதல்ல தேவரே. உமது முயற்சியில்லையேல் இத்தனைத் துரிதமாக இந்த மரக்கலம் தயாராகாது. அதுவும் இத்தனை அழகாகத் தயாராகாது… ” என்று சிலாகித்த இளையபல்லவனை இடைமறித்த கண்டியத்தேவன் சொன்னான்: “இதற்குள் சிலாகித்துவிடாதீர்கள் படைத்தலைவரே, இன்னும் ஐந்து நாள்கள் கழித்துப் பாருங்கள். “

இளையபல்லவன் சரேலென இமைகளை வியப்புடன் தூக்கினான். “என்ன? இன்னும் ஐந்து நாள்கள் கழித்தா?” என்றும் வினவினான் குரலில் வியப்பின் ஒலி மண்டிக்கிடக்க.

“ஆம். ஐந்தே நாள்கள்!” என்றான் கண்டியத்தேவன்.

“அதற்குள்.?” என்று கேட்டான் இளையபல்லவன்.

“மரக்கலம் தயாராகிவிடும்,” என்றான் தேவன்.

இளையபல்லவன் பதில் திட்டமாகவும் மிக வேகமாகவும் வெளிவந்தது. “கூடாது, கூடாது. இன்னும் பத்து நாள்களுக்கு இது முடியக்கூடாது. “

“ஏன் கூடாது?” கண்டியத்தேவன் ஆச்சரியத்துடன் கேட்டான்.

“மரக்கலத்தை மாற்றியமைக்க ஒரு மாதம் கேட்டீரே?”

“ஆம். கேட்டேன். “

“இன்னும் ஒரு மாதம் ஆகவில்லையே. “

“பத்து நாள்களில் ஆகிவிடும். “

“சரி, பத்து நாள்கள் எடுத்துக் கொள்ளும். “

“அத்தனை நாள்களுக்கு வேலை இல்லையே?”

“வேலையில்லாவிட்டால் கப்பலை அழகுபடுத்தும். ஏதாவது செய்யும். வேலை மட்டும் பத்து நாள்களுக்கு முன்பு, முடியக்கூடாது. “

“ஏன்?”

“அமாவாசைக்கு எத்தனை நாள் இருக்கிறது?”

“இன்றுதான் பௌர்ணமி, இன்னும் பதினைந்து நாள்கள் இருக்கின்றன. “

“அதுவரையில் காலம் கடத்தலாம். “

இளையபல்லவனின் இந்தக் கண்டிப்பான உத்தரவு களுக்குக் காரணம் தெரியாத கண்டியத்தேவன் வியப்பின் எல்லையைத் தொட்டான். ‘தாமதத்துக்குத்தான் தார்க் கோல் போடுவார்கள். துரிதத்துக்குத் தடைபோடும் படைத்தலைவனை இதுவரையில் நான் கண்டதில்லை. ‘ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான் கண்டியத்தேவன்.

அப்படித் திட்டமாக உத்தரவிட்ட இளையபல்லவன் மரக்கல வேலை முழுதும் முடிந்தபிறகு தனக்குச் சொல்ல வேண்டுமென்றும், தனக்குச் சொல்லாமல் நீருக்குள் இழுத்து மிதக்கவிட வேண்டாமென்றும் ஆணையிட்டு மீண்டும் கோட்டைக்குச் சென்றான். கோட்டைக்குள் சென்றவன் நேராக மாளிகைக்குச் செல்லாமல், அங்கிருந்த மதுக்கடையொன்றில் குடித்து விட்டு நகரத்தைச் சுற்றுவதிலும், பகிட்பாரிஸான் மலையும் காடும் அணைத்திருந்த கோட்டைச் சுவர்ப் பகுதியிலும் காலம் கழித்தான்.

ஏதோ அர்த்தமில்லாத பல பேச்சுக்களை அமீருடன் பேசிக் கொண்டிருந்தான். காவல் வேளையில் தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று அமீர் பலபேர் எதிரில் கடிந்துகொண்டு பிடித்துத் தள்ளிய பின்புதான் இளையபல்லவன் மாளிகைக்கு வந்து மாடியறையிலுள்ள தன் பஞ்சணையில் பொத்தென்று விழுந்தான். விழுந்தவன் அலுப்பால் கண்களையும் மூடி உறங்கினான்.

அப்படி உறங்கியவன், யாரோ பிடித்து உலுக்கவே கண் விழித்ததும் பஞ்சணையின் பக்கத்தில் நின்றிருந்த கூலவாணிகனைப் பார்த்ததும், பேராச்சரிய மடைந்தான். கூலவாணிகன் முகத்தில் கோபத்தின் குறி கொந்தளித்துக் கொண்டிருந்தது.
“ஏன் சேந்தா? ஏன் என்னை எழுப்புகிறாய்?” என்று வினவினான் இளையபல்லவன்.

“தீபம் வைத்து இப்பொழுது இரண்டு நாழிகைகள் ஆகிவிட்டன,” என்றான் சேந்தன் கோபத்துடன்.

“ஆகட்டும்,” என்றான் இளையபல்லவன்.

“உறக்கத்துக்கு இது சமயமல்ல. ” என்றான் சேந்தன்

“ஏன்?”

“மற்றவர்கள் விழித்திருக்கிறார்கள். “

“யார் அந்த மற்றவர்?”

“எதிரிகள். “

“பூர்வகுடிகளா?”

“அவர்களை விடக் கொடியவன். “

“யார், பலவர்மனா?”

“ஆம். “

“அவனால் நமக்கென்ன ஆபத்து. “

“நம்மைப்போல் உறங்காததுதான் ஆபத்து. “

“உறங்காமல் என்ன செய்கிறான்?”

“நம்மைக் கண்காணித்து வருகிறான்,” என்ற சேந்தன் குரல் கவலையுடன் ஒலித்தது.

“எப்படித் தெரியும் உனக்கு?” இளையபல்லவன் கேள்வி வியப்புடன் எழுந்தது.

சேந்தன் சுற்றுமுற்றும் பார்த்தான். பிறகு மெல்லச் சென்று அறைக் கதவைத் தாளிட்டு வந்தான். “நீங்கள் அவன் கழுத்துச்சாவியில் மெழுகை ஒற்றி எடுக்கக் கட்டளையிட்டீர்கள் அல்லவா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.

“ஆம்,” என்றான் படைத்தலைவன்.

“அது பலவர்மனுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது,” என்று கூறிய சேந்தன் இளையபல்லவனை உற்றுநோக்கி னான். அவன் எதிர்பார்த்த ஆச்சரியமோ திகைப்போ இளையப்பல்லவன் முகத்தில் உதயமாகாதிருக்கவே, “ஏன் இது உங்களுக்கு முன்பே தெரியுமா?” என்று வினவினான்.

“எது?” புதிதாகக் கேட்பவன் போல் கேள்வியை வீசினான் இளையபல்லவன்.

“பலவர்மனுக்குத் தெரியுமென்பது. ” “எனக்கெப்படித் தெரியும்?”

“பின் ஏன் பதற்றப்படாதிருக்கிறீர்கள்?”

“ஏன் பதற்றப்பட வேண்டும்?”

“நம் திட்டம் எதிரிக்குத் தெரிந்துவிட்டதே?”

“அந்தத் திட்டம் நிறைவேறவில்லையே?”

“நிறைவேறியிருந்தால் நன்றாயிருக்கும். “

“ஏன்?”

“அப்பொழுது நாலுபேர் பரிகாசத்துக்கு நான் இலக்காகியிருக்க மாட்டேன். “

“யார் பரிகசித்தார்கள் உன்னை?”

“நீங்களும் அமீரும் முதலில். இப்பொழுது இந்தப் பலவர்மன். “

இதைக் கேட்டதும் இளையபல்லவன் விழிகள் திடீரெனப் பளிச்சிட்டன. “உன்னைப் பலவர்மன் பரிகசித் தானா!” என்றும் வினவினான் படைத்தலைவன் சந்தேகம் தொனித்த குரலில்.

படைத்தலைவனையும் உணர்ச்சி பெறச் செய்து விட்டதால் உள்ளூர மகிழ்ச்சியடைந்த சேந்தன், “ஆம் படைத்தலைவரே! பரிகசித்தான். முதலில் அல்ல கடைசியில்,” என்றான்.

“முதலில் என்ன கேட்டான்?” இதற்குள் இளைய பல்லவன் சாதாரண நிலையை அடைந்துவிட்டதால் கேள்வியும் சர்வ சகஜமாகவே எழுந்தது.

“நேற்றிரவு பலவர்மன் என் அறைக்குள் சர்வசகஜமாக வந்தான். பொக்கிஷத்தை நான் பாதுகாக்கும் முறையைப் பற்றிப் பெரிதும் பாராட்டினான். பிறகு… ” இங்கு சற்றுத் தயங்கினான் சேந்தன்.

“பிறகு?” இளையபல்லவன் பஞ்சணையில் மீண்டும் சாய்ந்துகொண்டு கேட்டான். “திடீரெனத் தன் கழுத்துச்சங்கிலியிருந்த சாவியைக் காட்டினான்” என்று சேந்தன் பயத்துடன் சொன்னான்.

இளையபல்லவன் முகத்தில் ஆழ்ந்த சிந்தனை நிலவியது.

“உம். ” என்ற சத்தம் மேற்கொண்டு விஷயங்களைச் சொல்லச் சேந்தனைத் தூண்டியது.

சேந்தன் சொன்னான்: “சாவியைக் காட்டி அது எப்படி இருக்கிறது என்று கேட்டான். நன்றாயிருக்கிறது என்று சொன்னேன். ‘ஏற்கெனவே இதைப் பார்த்திருக்கிறாயா’ என்று கேட்டான். சற்றுத் தயங்கினேன். பிறகு பார்த்திருப்பதாகச் சொன்னேன். எப்பொழுது என்று கேட்டான். அவனை யாரோ குத்திக் கொலை செய்ய முயன்றபோது பார்த்ததாகச் சொன்னேன். அவன் பெரிதாக நகைத்தான்.

என் கோபம் எல்லை மீறியது. அவன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை நான் கண்டதாகக் கூறினேன். அவன் முதுகைத் திறந்து காட்டினான். அதில் கத்திக் குத்தின் அடையாளம் ஏதுமில்லை. அப்படியானால் ரத்தம் எங்கிருந்து வந்தது என்று கேட்டேன். உன் களிமண் மண்டையிலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று கூறி என் மண்டையிலும் இரண்டு தட்டுத் தட்டிவிட்டுச் சென்றான். “

“அப்புறம்?” இளையபல்லவன் கேட்டான், குரலில் சிறிது சாந்தியுடன்.

“அவன் வெளியில் நகைப்பது என் காதுக்கு விழுந்தது. யாரிடமோ எனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று சொல்லிச் சென்றான். எனக்கு அவமானம் தாங்க முடியவில்லை ,” என்றான்.

“சரி, தொலையட்டும்,” என்றான் இளையபல்லவன்.

“எது தொலையட்டும்? என்னை அந்த அயோக்கியன் நகையாடியதா?”

“அவன் வேறு என்ன செய்ய முடியும்?”

“என்ன செய்ய முடியுமா?”

“ஆமாம் சேந்தா. உயிருடனிருப்பவனைச் செத்து விட்டதாகச் சொன்னால் அவன் வேறு எப்படி நினைக்க முடியும்?”

“அப்படியானால் நான் கண்ணால் பார்த்தது பொய்யா?”

இளையபல்லவன் சேந்தனை உற்றுப் பார்த்து நகைத் தான். “சேந்தா! பலவர்மன் சொன்னது ஒருவேளை… ” என்று இழுத்தான் நகைப்புக்கிடையே.

“உண்மையாயிருக்கும் போல் தோன்றுகிறதா? இளையபல்லவரே, நான் பைத்தியமல்ல… ”

“எந்தப் பைத்தியம் தன்னைப் பைத்தியமென்று ஒப்புக்கொண்டது?”

இதைக் கேட்ட சேந்தன் இளையபல்லவனை எரித்து விடுபவன் போல் பார்த்துவிட்டு அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே வெகு வேகமாகச் சென்றுவிட்டான். அதுவரை இளையபல்லவன் இதழிலிருந்த ஏளனச் சிரிப்பு மறைந்தது. அதன் இடத்தைத் தீவிர யோசனை ஆக்கிரமித்துக் கொண்டது. அறையின் மூலை மஞ்சத்திலிருந்த மதுக்குப்பியைக் கையிலெடுத்துக் கொண்ட இளையபல்லவன் காவலரில் ஒருவனை அழைத்து அமீரை உடனே கூப்பிடும்படி உத்தரவிட்டான்.

இரவின் முதல் ஜாமம் முடியும் நேரத்தில் வந்த அமீரை நோக்கிய இளையபல்லவன், “அமீர்! பலவர்மன் நம்மைச் சந்தேகிக்கிறான்,” என்றான்.

“எதைப்பற்றி?” என்று அமீர் கேட்டான்.

“ஓலைபற்றிச் சேந்தனை ஏதோ விசாரித்திருக் கிறான். “

“உன்மை தெரிந்துவிட்டதா?”

“இல்லை, இன்னும் இல்லை. ஆனால் பலவர்மனைப் போன்ற ஒரு வஞ்சகனுக்கு உண்மையை ஊகிப்பது கஷ்டம் அல்ல . “

“ஆகவே. “

“இன்றிலிருந்து பதினான்காவது நாள் இரவு நட வடிக்கை தொடங்க வேண்டும். “

“அன்றுடன் ஒன்றரை மாத காலம் ஓடிவிடுகிறது. ” “சரியாயிருக்கும். “

இருவர் கண்களும் சந்தித்தன. “அதற்குள்… ” என்று கவலை மிகுந்த குரலில் கேட்டான் அமீர்.

“எல்லாம் தயாராகிவிடும். “

“அன்றிரவு?”

“பலப்பரீட்சை நடக்கும். நமது பலம் அதிகமா பலவர்மன் பலம் அதிகமா என்பது புலப்பட்டுவிடும். “

“புலப்பட்டுவிடும். ஆனால் அதனால் எத்தனை பேர் உயிர்… ” என்று வருந்தினான் அமீர்.

“பெரும் சாதனைகளின் அஸ்திவாரமே தியாகம்” என்று ஆழ்ந்த மந்திரம் போல் ஒலித்த குரலில் கூறினான் இளையபல்லவன்.

இருவரும் நினைத்து நினைத்து ஓரளவு அச்சமும் பட்ட அந்த இரவு மெள்ள மெள்ள வந்தது.

Previous articleRead Kadal Pura Part 2 Ch41 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch43 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here