Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch43 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch43 |Sandilyan | TamilNovel.in

160
0
Read Kadal Pura Part 2 Ch43 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch43 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch43 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 43 : இனிப்பும் கசப்பும்.

Read Kadal Pura Part 2 Ch43 |Sandilyan | TamilNovel.in

அக்ஷயமுனையில் இறுதியாக நடவடிக்கை தொடங்க வேண்டுமென்று இளையபல்லவன் அமீருடன் திட்டமிட்ட இரவுக்கும் அந்தத் திட்டப்படி நடவடிக்கை தொடங்கப்பட்ட இரவுக்கும் இடையே விரவிக்கிடந்த பதின்மூன்று நாள்களைப் படைத்தலைவன் பலவிதமாகக் கழித்தான்.

அவன் போக்கும் செய்கையும் உத்தரவுகளும் நாளுக்கு நாள் வித்தியாசப்பட்டு வந்தாலும் சில சமயங்களில் ஒன்றுக்கொன்று அடியோடு முரண்பட்டிருந்தாலும் எந்த யோசனையுடன் எதை உத்தேசித்து அவன் நடந்துகொள்கிறான் என்பது, அக்ஷயமுனைவாசிகளுக்கு மட்டுமல்ல, பலவர்மனுக்கும் மஞ்சளழகிக்குங்கூடப் புரியாத புதிராயிருந்தது. சில சமயங்களில் அவன் உத்தரவுகளைப் பிறப்பித்த போது பூரணமாக மது அருந்தியிருந்ததாலும் ஏதாவது யோசனையோ உத்தேசமோ அவனுக்கு இருக்கிறதா என்று சந்தேகங்கூடப் பலருக்கும் ஏற்படவே இத்தகைய குடிகாரனை நம்பியிருப்பது உசிதமா என்ற சந்தேகங்கூட அக்ஷயமுனை மக்கள் மனத்திலும் கடற்கரைக் கொள்ளைக்காரர் இதயத்திலும் எழுந்திருக்கவே செய்தது.

அவன் இட்டது போன்ற உத்தரவுகளை வேறு யார் இட்டிருந்தாலும் அக்ஷயமுனை மக்களும் கொள்ளைக்காரரும் புறக்கணித்திருப்பார்கள். ஆனால் என்ன காரணத்தாலோ இளையபல்லவன் இட்ட உத்தரவுகளை அத்தனை அவநம்பிக்கையிலும் நிறைவேற்றுவதிலேயே முனைந்தார்கள்.

ஒவ்வொரு முறையும் அவன் உத்தரவிட்டபோதும் அதை ஒப்புக்கொள்ளும்படி ஏதோ ஓர் இனம் புரியாத அபூர்வ சக்தி ஒன்று அவர்களை உந்தவே செய்தது. குடிவெறியில் உளறலுடன் உத்தரவுகள் வெளி வந்தபோது இடையிடையே திடீரெனக் கண்களில் தெரிந்த ஈட்டிப் பார்வைகள் உத்தரவை மீறுவது பெரும் அபாயம் என்பதை எச்சரிக்கை செய்தன. தடுமாறிய சமயங்களிலும் இடைஇடையே சுறீல் சுறீலென உதிர்ந்த சொற்கள் மேலுக்கு அர்த்தமற்றவைபோல் தெரிந்தாலும் உண்மையில் பொருள் உள்ளவை என்பது புலனாயிற்று. ஆகவே, படைத்தலைவன் இடும் எந்த உத்தரவையும் தீவிரமாக எதிர்க்காமல் அக்ஷய முனைவாசிகள் நிறைவேற்றியே வந்தார்கள்.

படைத்தலைவன் அன்றாடம் பிறப்பித்து வந்த உத்தரவுகளையும் அவற்றை நகர மக்களும் மற்றோரும் முழு மூச்சுடன் நிறைவேற்றி வந்ததையும் ஒற்றர்கள் மூலமும் நேரிலும் அறிந்த பலவர்மன், ‘இந்தப் பைத்தியக்கார உத்தரவுகளை எதற்காக நிறைவேற்றுகிறார்கள்?’ என்று பலமுறை தன்னைத்தானே கேட்டுக்கொண்டு விடை காணாமல் தவித்தான்.

அமாவாசை தோன்றுவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பே இளையபல்லவன் மரக்கலம் பூரணமாகப் பழுது பார்க்கப்பட்டுப் புது உருப்பெற்று அக்ஷயமுனையை விழுங்க வந்திருக்கும் அசுரப்பறவை போல் நின்றதைக் கண்டு பெரிதும் கலங்கிய பலவர்மன், அதை நீரில் மிதக்கவிட வேண்டாமென்று கரையில் இழுத்தது இழுத்தபடியே கிடக்கட்டுமென்று படைத்தலைவன் பிறப்பித்த உத்தரவைக் கேட்டு, பெரும் நிம்மதியடைந்தானென்றாலும், அந்த உத்தரவை இளைய பல்லவன் சுயபுத்தியோடு பிறப்பித்தது மட்டும் பெரிய வியப்பையே கொடுத்தது அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவனுக்கு. அந்த உத்தரவைத் தன் முன்னிலையிலே

பிறப்பிக்கப்பட்டது. விந்தையிலும் விந்தையாயிருந்தது அந்த வஞ்சகனுக்கு. இளையபல்லவனும் அமீரும் நடவடிக்கைக்குத் திட்டமிட்ட இரவிலிருந்து ஒன்பதாவது நாள் மாலையில் நடந்த நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சி உண்மையில் பெரும் மகிழ்ச்சியையே பலவர்மனுக்கு அளித்தது.

அமாவாசை இருள் கவிய அடுத்து ஐந்து நாள்கள் இருந்த அந்த மாலை நேரத்தில் அக்ஷயமுனைக் கோட் டையை நோக்கி ஒரு கண்ணையும், கடலின் பெரும் நீர்ப்பரப்பை நோக்கி மற்றொரு கண்ணையும், காட்டிக் கொண்டு பெரும் இறக்கைகளுடனும், சற்றே மழுங்கிய பின்பகுதியின் காரணமாகப் பயங்கரத்துடன் அழகையும் இணைத்துக் கொண்டு நின்ற அந்தப் பெரும் மரக்கலத்தை நோக்கி இளையபல்லவன் நடந்து செல்வதை உப்பரிகையிலிருந்து கவனித்த பலவர்மனும் அந்த மரக்கலத்தால் கவரப்பட்டவனாகி உப்பரிகையிலிருந்து இறங்கிக் காவலரையும் அழைத்துக் கொள்ளாமல் தனது புரவியிலேறிக் கடற்கரையை நோக்கிச் சென்றான்.

கடற்கரையை நோக்கியிருந்த கோட்டை வாசலுக்கு வந்ததும் கொம்புகளை ஊத எடுத்த காவலரையும் வேண்டாம் என்று சைகை செய்து, புரவியிலிருந்து இறங்கி எந்த ஆடம்பர அறிவிப்புமின்றிக் கடற்கரை மணலில் நடந்து மரக்கலம் இருந்த இடத்தை நோக்கிச் சென்றான்.

அவன் செல்வதை, கடற்கரைக் கொள்ளையரும் நோக்கியதால் அவர்களில் சிலரும் அவனைத் தொடர்ந்து சென்றார்கள். பலவர்மன் முன் செல்ல, பின்னால் கொள்ளையர் தொடரச் சென்ற கூட்டம் மரக்கலமிருந்த இடத்துக்கு வந்ததும் மரக்கலத்தை நோக்கிக் கொண்டிருந்த இளையபல்லவன் நீண்ட நேரம் மட்டும் அவர்கள் யாரையும் கவனிக்காமல் மரக்கலத்தையே நோக்கிக் கொண்டு நின்றான். அவன் அப்படி மரக்கலத்தைப் பார்த்து மயங்கி நின்றதற்குக் காரணம் இருக்கிறதென்பதைப் புரிந்துகொண்ட பலவர்மனும், “ஆம் ஆம்! மிகப் பலமான மரக்கலம், என்ன அழகு! எத்தனை கவர்ச்சி!” என்று வாய்விட்டுச் சிலாகித்தான்.

பலவர்மன் சிலாகித்த சொற்கள் காதில் விழுந்த பின்னும் சில நிமிஷங்கள் பேசாமலே நின்று கொண்டிருந்த இளையபல்லவன் கடைசியில் பலவர்மனை நோக்கித் திரும்பி, “ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தின் பிரதான கோட்டைத் தலைவருக்கு என் மரக்கலம் பிடித்திருப்பது பற்றி நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்,” என்றான்.

“ஸ்ரி விஜயத்தின், பிரதான கோட்டை இதுவல்ல,” என்று புன்முறுவலுடன் பதிலுரைத்தான் பலவர்மன்.

“யார் சொன்னது?” என்று வினவினான் இளைய பல்லவனும் குறுநகை கொண்டு.

“நான் தான் சொல்கிறேன். ஸ்ரி விஜய நகரத்தின் துறைமுகத்தை நீங்கள் பார்த்ததில்லை. பார்த்திருந்தால் இதைப் பாராட்டமாட்டீர்கள்” என்றான் பலவர்மன்.

“அத்தனை பெரிதா தலைநகரக் கோட்டை?” என்று வினவினான் இளையபல்லவன்.

“ஆம். அதைவிடப் பலமான கோட்டையோ சிறந்த துறைமுகமோ ஸ்ரி விஜய சாம்ராஜ்யத்தில் வேறெங்கும் கிடையாது” என்ற பலவர்மன் சொற்களில் பெருமையிருந்தது.
“ஆனால் அதன் பலமும் அழகும் பயனற்றதா யிருக்கிறதே!” என்று பெருமூச்சு விட்டான் இளையபல்லவன்.

“ஏன்?” வியப்புடன் எழுந்தது பலவர்மன் கேள்வி.

“நீங்களே சொல்லியிருக்கிறீர்கள் சூளூ இனத்தார்தான் ஸ்ரி விஜயத்தின் கடல் பலம் என்று. “

“ஆம் சொன்னேன். அதுதான் உண்மையுங்கூட. “

“அந்தச் சூளூக்கள் இந்தத் தீவின் மேற்குப் பகுதியில் வசிக்கிறார்கள். அங்குள்ள துறைமுகங்களிலிருந்து அவர்கள் மரக்கலங்கள் ஓடுகின்றன. அவற்றுக்கு ஆதரவாகவும், அவற்றைப் பழுது பார்க்கவும் எதிரிக் கப்பல்கள் அதிகமாக வந்து மறைந்து நிற்கவும் இருப்பது இந்த அக்ஷய முனை தான். “

“ஆம், ஆம்”

“ஆகையால் ஸ்ரி விஜயத்தின் சார்பாக நடத்தப்படும் கடற்போரோ கடற்கொள்ளையோ இந்தத் துறைமுகத்தி லிருந்துதானே நடக்கிறது. “

“கடற்கொள்ளையென்று அதற்குப் பெயரல்ல, தற் காப்புக்காக நடத்தப்படும் போர். “

“பெயரில் என்ன இருக்கிறது? நடப்பது எதுவாயிருந் தாலும் இங்கிருந்துதானே நடக்கிறது?”

“ஆம். “

“அத்தனை பாதுகாப்பை நீரில் அளிக்கும் இந்தத் துறைமுகத்தைவிட ஸ்ரி விஜய நகரத் துறைமுகம் எப்படிச் சிறந்ததாகும்?”

இந்தக் கேள்வி ஓரளவு திருப்தியைத் தந்தாலும் பலவர்மன் அதை வெளிக்குக் காட்டாமல், “இருப்பினும் தலைநகரத் துறைமுகத்தின் முக்கியத்துவம் இதற்கு வருமா?” என்று கேட்டான்.

“முக்கியத்துவமென்பதும் அல்லாததும் உபயோகத்தைப் பொறுத்திருக்கிறது. இது அத்தனை முக்கிய மென்று நினைக்காவிட்டால் நான் இங்கு வருவேனா?” என்று கூறிப் பெரிதாக நகைத்தான் இளையபல்லவன். அவன் சிரிப்புக்குக் காரணம் தெரியாததால் பிரமிப்புடன் அவனைப் பார்த்த பலவர்மனை மீண்டும் நோக்கிச் சொன்னான் இளையபல்லவன். “பலவர்மரே! இந்தக் கோட்டை அத்தனை முக்கியமல்ல என்று நினைத்திருந்தால் நான் இங்கு வந்திருக்கவும் மாட்டேன். இத்தனை பெரிய இணையற்ற கப்பலை இந்த இடத்தில் நிர்மாணம் செய்திருக்கவும் மாட்டேன்,” என்று.

பலவர்மன் எதிரேயிருந்த மரக்கலத்தின் மீது சில விநாடிகள் கண்களை ஓட்டினான். “மரக்கலம் மிகவும் அழகாயிருக்கிறது இளையபல்லவரே! ஆனால் இணையற்றது என்று சொல்லும்படி இதில் என்ன இருக்கிறது?” என்று வினவவும் செய்தான்.

இளையபல்லவன் கண்கள் பலவர்மன் முகத்தை விட்டு எதிரே நின்ற மரக்கலத்தின் மீது சஞ்சரித்தன. அதைப் பார்க்கப் பார்க்க அவன் கண்களில் பெருமை பெரிதாக விரிந்து அந்தப் பெருமையின் சாயை முகத்தையும் பூராவாக ஆக்ரமித்துக் கொண்டது. ஏதோ கனவில் பேசுவது போல் பேசினான் இளையபல்லவன். “பல வர்மரே! கப்பல்களைப் பற்றியோ கடற்போரைப் பற்றியோ நீண்ட நாள் வரை நான் ஏதும் அறியாதவன். சோழ நாட்டுத் தரைப்படைகளைப் பல சமயங்களில் நடத்தியிருக்கிறேன். பெரும் போர்களில் பங்கு கொண்டிருக்கிறேன்.

ஆனால் தென்கலிங்க மன்னன் பீமன் உதவியால் கடலோடும் வசதி பெற்றேன். அவன் தமிழர்களைத் துன்புறுத்தி, என்னையும் என் துணைவர்களையும் தெலைக்கத் திட்டமிட்டிருக்காவிட்டால் மரக்கலமேறும் பாக்கியமோ கடற் போர் பயிற்சி பெறும் வசதியோ எனக்குக் கிடைத்திருக்காது. கடலோடிய பின் அகூதாவிடமிருந்து பலவிதப் போர் முறைகளைக்கற்றேன். நான் இஷ்டப்பட்டால் இந்தத் துறைமுகத்தை ஒரே இரவில் அழித்துவிடும் வல்லமை எனக்குண்டு. நான் அதைச் செய்யாததற்குப் பலத்த காரணங்கள் உண்டு. இந்தத் துறைமுகம் எனக்குப் பெரிதும் பயன்பட்டிருக்கிறது. என் மரக்கலத்தைப் புதிதாக அமைக்க இடம் கொடுத்திருக்கிறது. அப்படி இடம் கொடுத்ததால் நான் பெரும் பலம் பெற்றிருக்கிறேன். ” இந்த இடத்தில் பேச்சைச் சிறிது நிறுத்தினான் இளைய பல்லவன்.

பலவர்மன் ஏதும் விளங்காமல் இளையபல்லவனை நோக்கினான். பிறகு கேட்டான்; “என்ன பெரும் பலம் அது?” என்று.

இளையபல்லவன் முகத்தில் கனவும் பெருமையும் கலந்து தாண்டவமாடின.“இதோ காட்டுகிறேன் பாருங்கள் பலவர்மரே!” என்று கனவில் பேசுபவன் போல் கூறிய இளையபல்லவன் பக்கத்திலிருந்த கண்டியத் தேவனை நோக்கி, “கோட்டைத் தலைவர் கேட்டது காதில் விழுந்ததா தேவரே?” என்று வினவினான்.

“விழுந்தது. ” சங்கடத்துடன் வெளிவந்தது கண்டியத் தேவன் பதில்.

“சரி, நமது பலத்தைப் புலப்படுத்துங்கள்,” என்று உத்தரவிட்டான் இளையபல்லவன்.

அந்த உத்தரவை நிறைவேற்றத் . தயங்கினான்” கண்டியத்தேவன் “இப்போது என்ன அவசரம் அதற்கு?” என்றும் வினவினான்.

“கோட்டைத் தலைவர் விரும்புகிறார்” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.

“அவர் விரும்பினால்?”

“அவர் கோட்டையின் உபதளபதி என்ற முறையில் அவர் விருப்பத்தை நிறைவேற்றுவது எனது கடமை அல்லவா?”

“இருப்பினும் மரக்கலத்தின் சக்தி, அதன் மர்மம்… ”

“பலவர்மருக்குத் தெரிந்தாலென்ன? அவர் மகளையே எனக்கு மணம் செய்விக்கப் போகிறார், அவரிடமிருந்து ரகசியமெதற்கு நமக்கு?”

இளையபல்லவனைத் தீய்த்து விடுபவன்போல் பார்த்தான் கண்டியத்தேவன். வஞ்சகனான பலவர்மனுக்கு மரக்கலத்தின் ரகசியத்தைக் காட்டுவது எத்தனை அபாயம் என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. அதுவும் அத்தனை கொள்ளைக்காரர் முன்னிலையிலும் ரகசியத்தை விளக்கினால் அது ரகசியமாகுமா என்ற நினைப்பும் ஏற்படவே தேவன் கண்கள் நெருப்பைக் கக்கின. அவன் சீற்றத்தைக் கண்ட இளையபல்லவன் மெல்ல நகைத்து விட்டுச் சொன்னான்: “தேவரே! மனிதன் மனிதனை நம்ப வேண்டும். நம்பாவிட்டால் உலகம் வாழ்வது கஷ்டம். “

“நம்பத்தகாத மனிதர்களும் உண்டு. வெளியிடக் கூடாத ரகசியங்களும் உண்டு,” என்றான் தேவன்.

“என் மாமன் நம்பத் தகுந்தவர். இதோ இருக்கும் எனது நண்பர்களும் நம்பத் தகுந்தவர்கள்,” என்றான் இளையபல்லவன்.

இதைக் கேட்ட பலவர்மனுக்கும் சரி, கொள்ளை யருக்கும் சரி, அவன் தங்களைப் பாராட்டுகிறானா அல்லது ஏளனம் செய்கிறானா என்பது புலப்படாததால் சற்று நேரம் ஏதும் பேசாமல் நின்றனர். இளையபல்லவன் அடுத்து இட்ட உத்தரவு அவர்களிடை நம்பிக்கையை விளைவித்தது. “ஆகட்டும் தேவரே! இந்த மரக்கலம் என்ன செய்ய முடியும் என்பதை அவர்களுக்குக் காட்டும்” என்றான். அவன் குரலிலிருந்த கடுமையைக் கண்ட கண்டியத்தேவன் அதற்குமேல் ஏதும் பேசாமல், மரக்கலத் தின் மீதிருந்த மாலுமிகளை நோக்கி, “எல்லோரும் அவரவர் இருப்பிடம் செல்லுங்கள். யந்திரங்கள் சுழலட்டும்,” என்று இரைந்து கூவினான்.

பலவர்மனையும் கொள்ளையரையும் பிரமிக்க வைக்கும் சம்பவங்கள் அடுத்த விநாடிகளில் நிகழ்ந்தன. மாலுமிகள் சிலர் திடுதிடுவென அந்தக் கடற்புறாவின் தளத்தில் ஓடுவது அனைவர் காதிலும் விழுந்தது. “உம்! தள்ளுங்கள்! தள்ளுங்கள்!” என்று எச்சரித்துக்கொண்டே கண்டியத்தேவன் மரக்கலத்திலிருந்து பல அடிகள் பின்னுக்கு நகர்ந்தான். அவன் சைகையைத் தொடர்ந்து இளையபல்லவனும் மற்றோரும் பின்னடைந்தனர்.

அடுத்த விநாடி கப்பல் தளத்திலிருந்து பெரும் மர உருளைகள் திருப்பப்பட்டதால் விபரீதமான பல சப்தங்கள் காதில் விழுந்தன. அந்தச் சப்தங்கள் காதில் விழுந்து கொண்டே யிருக்கையில் கடல் புறா தனது பெரும் இறகுகளை மெள்ளத் தூக்கியது. கடல் நீர்ப்பரப்பை நோக்கியிருந்த இறகு கரையில் நின்றவர் கண்களுக்குப் புலனாகா விட்டாலும் கரைப்பக்கமிருந்த இறகு புலனானதால் அதைக் கண்டவர் பிரமித்தனர்.

பக்கப் பகுதியிலிருந்து பெரிதாக எழுந்த அந்த இறகு அங்கிருந்த அனைவருக்கும் பந்தலிடுவது போல் அவர்களின் தலைகளின் மீது பரந்து நின்றது. திரும்பி அந்த இறகு மட்டும் திடீரெனக் கீழே இறக்கினால் தாங்கள் அனைவரும் அதன் இறகுக்கும் இறகு தாங்கியிருந்த பக்கப் பெரும் பலகைக்கும் இடையே அரைக்கப்படலாமென்பதைக் கொள்ளையரும் பலவர்மனும் புரிந்துகொண்டதன்றி, இறகு விரிந்து எழுந்ததால் மேற்பகுதியில் தளமும் விரிந்துவிட்டதென்பதையும், அந்த இறகில் மட்டும் நூறு வீரர்களுக்கு மேல் நின்று சண்டையிடலாமென்றும் அறிந்து கொண்டார்கள்.

அந்த இறகின் எழுச்சியைத் தொடர்ந்து மற்றும் சில உருளைகள் சுழன்ற சத்தம் மீண்டும் கேட்டது. அடுத்த விநாடி பக்கப் பலகையில் சில பகுதிகள் சின்னஞ்சிறு கதவுகளாகத் திறந்ததன்றி அவை ஒவ்வொன்றிலிருந்தும் பெரும் ஈட்டியொன்றும் வெளிவந்தது. மறுபடியும் ஈட்டிகள் திடீரென உள்ளடங்கின. அனைவரையும் மேலும் பின்னடையச் செய்து கண்டியத்தேவன் இறகுகளைப் பழையபடி இறக்க உத்தரவிட்டான். இறகுகள் இறங்க, பயங்கர ஈட்டிகள் மறைய, பழையபடி அழகு பெற்ற அந்தக் கடல் புறாவைப் பெரும் மலைப்புடன் பார்த்தான் பலவர்மன். எந்த உணர்ச்சியையும் காட்டாத அவன் வஞ்சக முகத்திலும் உணர்ச்சிகள் தாண்டவமாடின. “பயங்கரம்! பயங்கரம்!” என்ற சொற்களும் பயத்துடன் அவன் இதழ்களிலிருந்து உதிர்ந்தன.

இளையபல்லவன் இதழ்களில் இளநகை விரிந்தது. “பலவர்மரே! இந்தப் பறவையும் இந்தக் கோட்டையைப் போலத்தான். அழகும் பயங்கரமும் நிறைந்தது. இந்த மரக்கலத்தைப் போரில் வெல்வது எளிதல்ல. இதன் சூட்சுமத்தில் ஒரு பகுதியைத்தான் உமக்குக் காட்டியிருக் கிறேன்; இது முழுதும் தயாராகட்டும். மீதியைக் காட்டுகிறேன்,” என்றான் படைத்தலைவன் குரலில் மகிழ்ச்சி ததும்ப.

“முழுதும் தயாராகிவிட்டது படைத்தலைவரே” திடீரெனக் குறுக்கே புகுந்தது கண்டியத்தேவனின் குரல்.

இளையபல்லவன் அவனை ஒரே விநாடி நோக்கினான். “நல்லது நல்லது தேவரே! இத்தனை சீக்கிரம் மரக்கலத்தை அமைத்துவிடுவீர் என்று நான் எதிர்பார்க்க வில்லை” என்றும் சொன்னான். ஏதோ விளங்காத ஒலி படைத்த குரலில்.
“முடிந்துவிட்டது படைத்தலைவரே, இன்றே கடலோடவும் போர் புரியவும் இந்த மரக்கலத்தால் முடியும். உங்கள் உத்தரவுக்குத்தான் காத்திருக்கிறேன்,” என்றான் கண்டியத்தேவன்.

“எதற்கு உத்தரவு?” என்று வினவினான் படைத் தலைவன்.

“நீரில் மரக்கலத்தை மிதக்கவிட,” என்றான் தேவன்.

இதைக் கேட்ட பலவர்மன் முகத்தில் திடீரெனப் பயத்தின் சாயை படர்ந்தது. அதைக் கணநேரத்தில் கவனித்த இளையபல்லவன் திருப்திக்கு அடையாளமாகப் பெருமூச்சு விட்டான். பிறகு கூறினான்; “சில நாள்கள் போகட்டும் தேவரே,” என்று.

“மிதக்கவிடவா!” தேவன் குரலில் வியப்பு ஒலித்தது.

“ஆம். “

“தண்ணீரிலிருந்தால்தான் மரக்கலத்துக்குச் சக்தி உண்டு. “

“தெரியும். “

“கரையில் கிடக்கும் மரக்கலம் கரையிலிருக்கும் முதலையைப் போன்றது. சக்தியற்றது. “

“அதுவும் தெரியும். “

“தெரிந்துமா…!” மேற்கொண்டு பேசவில்லை தேவன். அவன் முகத்தில் வெறப்பு அதிகமாக மண்டிக் கிடந்தது.

“ஆம், தெரிந்துதான் சொல்கிறேன். இன்னும் சில தினங்கள் இது கரையில் இருக்கட்டும். நீரில் இருந்தால் இது துறைமுகத்தைத் தடுத்து நிற்கும். மற்ற மரக்கலங்கள் துறைமுகத்தில் நுழைய முடியாது,” என்றான் இளைய பல்லவன்.

அவன் உத்தரவு மேலும் மேலும் பிரமிப்பையே அளித்தது கண்டியத்தேவனுக்கு. ‘மற்ற மரக்கலங்களைத் தடை செய்வதுதானே போர்க்கலத்தின் தொழில்! அதை ஏன் தடுக்கிறார் இவர்? அதுவும் அபாயம் எதிர்நோக்கியிருக்கும் இந்த நிலையில்?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான் கண்டியத்தேவன். கண்டியத் தேவனுக்குக் கசப்பாயிருந்த அந்த உத்தரவு, இனிப்பாயிருந்தது பலவர்மனுக்கு.

அவனுக்கு மேலும் கரும்பாயிருக்கும் வார்த்தைகளைச் சொன்னான் இளைய பல்லவன். “தேவரே! வேறு எந்த மரக்கலம் துறைமுகத்தில் நுழைந்தாலும் நீங்கள் தடை செய்ய வேண்டாம். தடை செய்ய நமக்கு என்ன உரிமையிருக்கிறது? தடை செய்ய வேண்டியவர் இவர்!” என்று பலவர்மனைக் காட்டி விட்டுக் கோட்டையை நோக்கி நடக்கத் துவங்கினான் இளைய பல்லவன்.

அவன் போகும் திக்கைச் சில விநாடிகள் பார்த்து விட்டுக் கடல்புறாவையும் நோக்கிவிட்டு மனத்திலிருந்து இறங்கிய சுமையுடன் மாளிகை அறைக்குத் திரும்பி ஆசனத்தில் பொத்தென்று விழுந்தான் பலவர்மன். அப்பொழுது இரவு மூன்டு தீபங்கள் எரிந்துகொண்டிருந்தன. ‘தப்பினேன் இன்று, நல்லவேளை, இளையபல்லவன் முட்டாள் தனமாக உத்தரவை இட்டான். இல்லையேல் நாளை இரவு வரவேண்டிய இடும்பன் எப்படி வருவான்? அந்த அசுரப் பறவையை யார் தாண்டி வர முடியும்? அப்பப்பா! சோழ நாட்டு மரக்கல வித்தையில்தான் எத்தனை மர்மங்கள்! இப்பொழுது புரிகிறது. ஏன் சோழர்களுக்குக் கடாரம் பணிந்ததென்று’ என்று தனக்குள்ளேயே பலமுறை சொல்லிக்கொண்டான்.

அப்படிச் சொல்லிக்கொண்டே, அந்த நினைப்பிலேயே கண்களை மூடினான். மூடியவன் தூக்கத்திலும் பேசினான். “உத்தரவு நல்லது. கண்டியத்தேவனுக்குக் கசப்பு எனக்கு இனிப்பு,” என்று முணுமணுத்தான். அப்படி முணுமுணுத் தவன் யாரோ தன்னை உலுக்குவதை உணர்ந்து கண் விழித்தான். அவன் கண்களுக்கெதிரே மஞ்சளழகி நின்றிருந்தாள். அவள் நிலையைக் கண்டு பலவர்மன் அதிர்ச்சியடைந்தான்.

Previous articleRead Kadal Pura Part 2 Ch42 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch44 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here