Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch6 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch6 |Sandilyan | TamilNovel.in

105
0
Read Kadal Pura Part 2 Ch6 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch6 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch6 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 6 : உருண்டது நான்கு, புரண்டது?

Read Kadal Pura Part 2 Ch6 |Sandilyan | TamilNovel.in

பிரசித்தியால் விளைவது ஆபத்தே என்ற தத்துவத்தைச் சுட்டிக்காட்டியதன்றி அதற்குத் தக்க சான்று தரும் முறையில், ‘சந்தேகமிருந்தால் திரும்பிப் பாருங்கள்’ என்று சர்வ சகஜமாகக் கூறிய கோட்டைத் தலைவன் சொற்களைத் தொடர்ந்து தனது ஆசனத்திற்குப் பின்புறம் தலை திரும்பிப் பார்த்த இளையபல்லவன், அங்கு உருவிய வாள்களுடன் நின்றிருந்த இரு வீரர்களைக் கண்டதும் அவர்களை ஒரு முறை ஏற இறங்க நோக்கிவிட்டு மீண்டும் ஆசனத்தில் திரும்பி எதிரேயிருந்த கோட்டைத் தலைவனை மிக இன்பமான புன்முறுவல் படர்ந்த வதனத்துடனும், அந்தப் புன்முறுவலை விஷமச் சிரிப்பாக உதிர்த்த கண்களுடனும் நோக்கினான்.

அத்தகைய மந்தகாச வதனத்தையும், ஆபத்தைக் கண்டும் இளையபல்லவன் பார்வை மூலமே உணர்த்திய அலட்சியத்தைக் கண்ட கோட்டைத் தலைவன் பெரும் வியப்புக்குள்ளானான். அந்தத் தனது அந்தரங்க அறையில் வந்த சில பிரசித்தி பெற்ற கொள்ளைக்காரர்கள் மறைந்து மடிந்த விவரங்களை எடுத்துச் சொல்லி, படிப்படியாக அச்சத்தை உயர்த்திக்கொண்டே போய், அவற்றுக்குச் சிகரம் வைத்தது போல் லேசான சமிக்ஞையினாலேயே உருவிய வாள்களுடன் காவலரை வரவழைத்துக் காட்டியும் அதைப்பற்றி லவலேசமும் கவலைப்படாமல் தன்னைப் பார்த்து வாய்விட்டு நகைக்காவிட்டாலும் கண்களின் பார்வையால் நகைத்த படைத் தலைவன் மீது ஆச்சரியம் ததும்பும் விழிகளை நிலைக்கவிட்டான் அக்ஷயமுனைக் கோட்டையின் தலைவன்.

அந்த ஆச் சரியத்துடன் சிறிது சிந்தனையும் அவன் சித்தத்தில் எழுந்ததற்கு அறிகுறியாகப் புருவங்கள் சிறிது மேலே ஏற மூன்று வரிக்கோடுகள் பக்தர்களின் கீற்றுச் சந்தனம் போல் அவன் முகத்தில் விழுந்தன. இம்முறை இளையபல்லவன் பிரமிப்பு பன்முறை அதிகமாயிற்று. இதே மூன்று கோடுகளை அவன் பாலூர்ப் பெருந்துறையின் வெளிநாட்டுப் பிரமுகர் வீதியிலிருந்த மாளிகையில் முதல் நாள் இரவு கண்டிருந்தான். அந்த மூன்று வரிகள் முகத்தில் உதயமானதும் அந்த அயோக்கியன் எப்படி சாட்சாத் குணவர்மன் போலவே காட்சியளித்தான் என்பதை நினைத்து விவரிக்க இயலாத ஆச்சரியத்தின் வசப்பட்டான் இளைய பல்லவன். அதிலிருந்து ஒரு முக்கிய உண்மையும் வெளியாயிற்று சோழர் படை உபதலைவனுக்கு. “குணவர்மனுக்கு அந்த மூன்று வரிக்கோடுகள் கவலை உழுது விட்ட சின்னங்கள். ஆனால் படாடோபத்திலும் கொள்ளைக்காரர் கொண்டு குவித்த பணத்திலும் காலங்கழிக்கும் இவனுக்கென்ன கவலையிருக்க முடியும்?” என்று எண்ணிப் பார்த்த இளையபல்லவன், ‘சாந்திக்கும் பணத்துக்கும் படாடோபத்துக்கும் சம்பந்தமில்லை. சாந்தியை அளிக்கும் அம்சமே வேறு,’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

தவிர அதுவரை தன் எண்ணங் களையோ, குறைகளையோ காட்டாமல் சமாளித்துக் கொண்ட கோட்டைத் தலைவன், அபாயத்தின் முனையிலும் தான் அலட்சியம் காட்டியதைப் பார்த்து வெளிக்கு வியப்பையும் உள்ளுக்குள் கவலையையும் எய்திவிட்டதை நினைத்த இளையபல்லவன், மேலுக்கு மிகவும் துணிவுள்ள வனாகத் தெரியும் இவன் துணிவு உண்மையானதல்ல, வஞ்சகத்தின் துணை கொண்டது. ஆகவே வயிரம் பாயாது,’ என்று உள்ளத்தே தீர்மானித்துக் கொண்டான். இப்படிக் கோட்டைத் தலைவனின் பலாபலத்தை எடை போட்டு விட்ட இளையபல்லவன் நன்றாகத் தனது ஆசனத்தில் சாய்ந்துகொண்டு கால்களையும் சாவதானமாக நீட்டிக் கொண்டான்.

தனது அந்தரங்க அறைக்கு இளைப்பாறவே வந்தவன் போல் இளையபல்லவன் ஆசுவாசப்படுத்திக் கொள்வதைக் கண்ட கோட்டைத் தலைவன் அவன் நிதானத்தையும் நெஞ்சுரத்தையும் கண்டு மேலும் மேலும் வியப்புக்கும், இத்தகையவன் அக்ஷயமுனையில் காலூன்றினால் தனக்கு ஏற்படக்கூடிய பலவீனத்தை நினைத்துக் கவலைக்கும் உள்ளானாலும் அந்த உணர்ச்சிகளை வெகு சீக்கிரம் மறைத்துக் கொண்டான்.

கொள்ளைக்காரர்களின் பணத்தாசையும் சில்லறை இன்பங்களில் அவர்களுக்கிருந்த வெறியுமே தன் சக்தியென்பதையும், அறிவாளி எவனை விட்டாலும் பல திசைகளில் தனக்கு ஆபத்து உண்டென்பதையும் உணர்ந்ததாலேயே ஏற்கெனவே பல அறிவாளிகளை அவன் தீர்த்துக் கட்டியிருந்தான். அவர்கள் பிரதாபங்களையும் தலைகளையும் பட்டயங்களில் வரைந்து அந்தரங்க அறையில் பதித்திருந்ததற்குக் காரணம், அந்த அறைக்கு வருபவர்கள் ஆரம்பத்திலேயே நடுக்கம் கொள்ளட்டும் என்பதுதான். அப்படி ஏற்கெனவே பலர் நடுங்கியும் இருக்கிறார்கள்.

படங்களைப் பார்த்தும் தான் ஆபத்தைச் சுட்டிக் காட்டியும், இரு வீரர் வாள் பிடித்து நின்றும் அசையாத துணிவு கொண்ட ஒருவன் தனது கோட்டைக்கு வந்துவிட்டான் என்ற நினைப்பு மட்டு மின்றி, அவன் பெரும் அறிவாளியும் ராஜதந்திரியுங்கூட என்ற எண்ணமும் கோட்டைத் தலைவனுக்குப் பெரும் கவலையை அளித்தன. அத்தகையவனை ஒழிப்பதானாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டுமென்பதையும் உணர்ந்துகொண்ட கோட்டைத் தலைவன், உள்ளூர இருந்த உணர்ச்சிகளை மறைத்து இளையபல்லவனை நோக்கி மகிழ்ச்சிப் புன்முறுவலும் கொண்டான். அத்துடன் பாராட்டவும் முற்பட்டு, “உங்கள் துணிவைப் பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்று என் கோட்டையில் நேரில் கண்டேன். ” என்றான்.

வாள் வீரர் இருவரை அவன் வரவழைத்தது தன்னை வெட்டிப் போட, அல்லது சிறையில் தள்ள என்பதை உணர்ந்திருந்த இளையபல்லவன், கோட்டைத் தலைவன் திடீரெனத் தன் துணிவைப் பாராட்ட முற்பட்டதில் ஆழ்ந்த கருத்து ஏதோ இருக்க வேண்டுமென்ற எச்சரிக்கையுடனேயே பதிலும் சொன்னான் : “உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி. ஆனால் துணிவு எதையும் நான் காட்ட வில்லையே. “

கோட்டைத் தலைவன் இதழ்களில் இருந்த புன் முறுவல் மேலும் விகசித்தது. “என்ன! துணிவைக் காட்ட வில்லையா?” என்று வினவினான் குரலில் வியப்பு ஒலிக்க.

“இல்லை,” என்றான் இளையபல்லவன் சகஜமாக.

“இந்தச் சுவரிலுள்ள பட்டயங்களைப் படிக்க வில்லையா?” என்று மறுமுறை வினவினான் கோட்டைத் தலைவன்.

“படித்தேன். ” இந்தப் பதிலும் சம்பிரதாய முறையில் நிதானமாக வந்தது.

“இவை மாண்டவர்கள் பட்டயங்கள். “

ஆம். அவற்றிலேயே குறிப்புகளிருக்கின்றன. “

“இந்த அறைக்கு வந்ததும் மறைந்தவர்கள். “

“அதை நீங்களே கூறினீர்கள். “

“அவர்களை நான் ஏன் கொன்றிருக்கக் கூடாது?”

“கொன்றிருக்கலாம்!”

“கொன்றிருக்கலாமா! அதிலும் சந்தேகமா?”

“ஆம். அவசியமிருந்தால் கொன்றிருப்பீர்கள். அவசிய மில்லாவிட்டால் ஏன் கொல்ல வேண்டும்?”

இளையபல்லவனின் இந்தக் கடைசிக் கேள்வியும், அது வெளியிடப்பட்ட போதிருந்த தொனியும் முகபாவமும் கோட்டைத் தலைவனை ஓர் உலுக்கு உலுக்கின. தான் கொலை செய்ததைக் கிட்டத்தட்டச் சரியென்று இளையபல்லவன் ஒப்புக்கொள்வதைக் கவனித்த கோட்டைத் தலைவன் இயத்தில், ‘நம்மைவிட இவன் பெரிய கொலைகாரனோ?’ என்ற சந்தேகம் உதயமாயிற்று. இருப்பினும் அதை வெளிக்குக் காட்டாமல், “கொலையை ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று வினவினான்.

“ஆம். “

“நீங்களும் கொலை செய்வீர்களா?”

“எவ்வளவோ பேரைக் கொன்றிருக்கிறேன். “

“அவசியத்தாலா?”

“அவசியமில்லாமல் நான் எதையும் செய்வதில்லை. உதாரணமாக……” என்று மெள்ள இழுத்தான் இளைய பல்லவன் கண்களைச் சற்றுக் கீழே தாழ்த்திய வண்ணம்.

தாழ்த்திய கண்களை அந்தக் கண்களுடன் கலக்க முயன்ற கோட்டைத் தலைவனின் வஞ்சகக் கண்கள் தோல்வியடைந்தன, கண்களைத் தன் மடியை நோக்கி நன்றாகத் தாழ்த்திக் கொண்டான் இளையபல்லவன். ஏதோ உதாரணம் சொல்ல முயன்று நிறுத்திக்கொண்ட இளையபல்லவன் குரலிலிருந்த ஏளனமும் கோட்டைத் தலைவனைப் பெரிதும் திகைக்க வைத்தது. “ஏதோ சொல்ல முற்பட்டு நிறுத்திவிட்டீர்கள்,” என்றான் கோட்டைத் தலைவன்.

“உதாரணம் சொல்ல முற்பட்டேன்,” என்றான் இளையபல்லவன்.

“சொல்லுங்கள்,” என்றான் கோட்டைத் தலைவன்.

திடீரென்று அந்த அறையே சுழல்வது போலிருந்தது கோட்டைத் தலைவனுக்கு. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்துவிட்ட அந்தத் துணிகரச் செயல் எதற்கும் சலனப்படாத அவன் புத்தியைப் பெரிதும் குழப்பியதன்றி இணையற்ற பீதியையும் விளைவித்தது. அத்தனையும் ஏதோ ஜால வித்தைபோல் நிகழ்ந்தது.

“சொல்லுங்கள்” என்று தன் வாயிலிருந்து வார்த்தை உதிருமுன்பாக இளையபல்லவன் கச்சையில் இருந்த குறுவாள் இமை கொட்டு வதற்குள் தன்னை நோக்கிப் பறந்துவிட்டதையும், அப்படிப் பறந்த குறுவாள், தன் கழுத்தின் வலப்புறத்துக் கருகில் உராய்ந்து சருமத்தை இம்மியும் தொடாமல் கழுத்தை மறைத்த அங்கியை மட்டும் பிரித்து ஆசனத்தில் வைத்துத் தன் கழுத்தை அப்படியோ இப்படியோ அசையாமல் தடுத்துவிட்டதையும் கண்டு, சிந்திக்கவும் சக்தியில்லாமல் பிரமை பிடித்து ஆசனத்தில் அப்படியே சாய்ந்துவிட்டான் கோட்டைத் தலைவன்.

அறைக்குள் வகையாகத் தங்களிடம் சிக்கியிருப்பவன் தங்கள் தலைவன் மீது குறுவாளைத் திடீரென எடுத்து வீசுவானென்பதைச் சொப்பனத்திலும் எதிர் பார்க்காத வாள் பிடித்த வீரரும் கையிலிருந்த வாள்களை உபயோகிக்கவும் அஞ்சி சில விநாடிகள் அசைவற்று நின்றனர். முதல் கலவரம் நீங்கியதும் வாள்களை உருவப்போன அந்த வீரர்களை, கோட்டைத் தலைவனின் கரம் செய்த சமிக்ஞை தடுத்தது.

அந்தச் சமிக்ஞையைக் கண்ட இளையபல்லவன் கோட்டைத் தலைவனை நோக்கி, “தலைவரே! நீங்கள் தீரம் மிகுந்த அறிவாளிதான்,” என்று பாராட்டினான்.

“எந்த விதத்தில் அறிவாளி?” தான் குறுவாளை வீசிக் கழுத்தை அசைய முடியாமல் ஆசனத்தில் புதைத்ததும் அடைந்த பிரமிப்பை வெகு சீக்கிரம் விலக்கிக் கொண்டு தனக்குக் கேள்வி போடத்துவங்கிய கோட்டைத் தலைவன் நிதானத்தைக் கண்டு பெரும் வியப்பெய்திய இளையபல்லவன் மிகுந்த அபாயமான ஒரு மனிதனுடன் தான் உறவாட வேண்டுமென்பதைப் புரிந்து கொண்டானாகையால், “வாள்களை உபயோகப்படுத்த வேண்டாமென வீரர்களுக்குச் சமிக்ஞை செய்தது அறிவாளியின் செய்கை,” என்றான் இளையபல்லவன் உணர்ச்சி ஏதும் காட்டா மலே.

“உங்களை அவர்கள் கொல்லாமல் தடுத்தது அறிவின் அத்தாட்சியா!” கோட்டைத் தலைவன் கேள்வியில் ஏளனமிருந்தது.

“இல்லை, உங்களை நான் கொல்லாமல் தடுத்தது” என்றான் இளையபல்லவன்.

“புரியவில்லை எனக்கு. “

“புரியச் சொல்கிறேன் கேளுங்கள், கோட்டைத் தலைவரே! என் கச்சையின் குறுவாள் மட்டுமல்ல, இதோ இடையில் தொங்கும் நீண்ட வாளும் வேகத்துடன் வினை விளைக்க வல்லது. இஷ்டப்பட்டிருந்தால் குறுவாளை உங்கள் கழுத்தின் நடுப்பகுதியை நோக்கி வீசி உங்கள் ஆயுளை நான் முடித்திருக்கலாம். என் உறுதியை உங்களுக்குக் காட்டவும் உங்கள் அந்தரங்க அறைகூட உங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கவுமே குறுவாளை உங்கள் கழுத்தின் இடது பக்கத்துக்காக வீசி அங்கியை ஆசனத்தில் புதைத்தேன். உங்கள் வீரர்கள் வாள்களை ஓங்கியிருந்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் என் நீண்ட வாள் உங்கள் ஊட்டியில் பாய்ந்திருக்கும். உங்களுக்கு அது புரிந்திருக்கிறது. மனிதர்களையும் அவர்கள் திறமையையும் ஆராயும் சக்தி உங்களுக்கிருக்கிறது.

இதையெல்லாம் அறிந்துதான் உங்கள் நட்பையும் உதவியையும் நாடி நான் அக்ஷயமுனை வந்தேன். நீங்கள் என்னையோ நான் உங்களையோ கொல்லும் நிலையில் இல்லை,” என்று சர்வசாதாரணமாக ஏதோ கதை சொல்பவன் போல் விளக்கிய இளையபல்லவன் திடீரென ஆசனத்திலிருந்து எழுந்து கோட்டைத் தலைவன் கழுத்தை அசையவொட்டாமல் செய்திருந்த குறுவாளை எடுத்துத் தன் கச்சையில் மீண்டும் செருகிக் கொண்டான். அது மட்டுமின்றி, “ஏன் இவர்களை அனுப்பிவிடலாமே,” என்று வீரர்களைக் கையால் சுட்டியும் காட்டினான்.

இளையபல்லவனின் செயல்களும் பேச்சும் பெரும் விந்தையாயிருந்தன கோட்டைத்தலைவனுக்கு. அத்தகைய ஒரு விசித்திர மனிதனை அவன் அதுவரை கண்டதில்லை. அந்த மனிதனால் தன்னைத் தாழ்த்தவோ உயர்த்தவோ நிச்சயமாய் முடியும் என்று தீர்மானித்துக் கொண்ட கோட்டைத் தலைவன், தன் வீரர்களைக் கொண்டு அந்த அறையிலேயே அவனை ஒழித்துவிடலாமா என்று மீண்டும் சிந்தித்தான். ஆனால் அதனால் விளையக்கூடிய ஆபத்தை எண்ணி, ‘இவனை ஒழிப்பதானால் அதற்கு இடம் இந்தக் கோட்டையல்ல, சமயமும் இதுவல்ல’ என்று தீர்மானித்துக் கொண்டு இளையபல்லவன் கூறியபடி அறையை விட்டுச் செல்லுமாறு வீரர்களுக்குப் பணித்தான்.

வீரர்கள் சென்றதும் கோட்டைத் தலைவனுக்கு நேர் எதிரில் வந்து நின்றுகொண்ட இளையபல்லவன்,

“தலைவரே! நான் பயங்கர விரோதி என்பதை உங்களுக்கு நிரூபித்தாகிவிட்டது. சிறந்த நண்பன் என்பதை நிரூபிக்கிறேன். உங்கள் கையிரண்டையும் ஏந்துங்கள்,” என்று உத்தரவிடும் தோரணையில் கூறினான்.

அதன்படி கையேந்திய கோட்டைத் தலைவனின் கைகளில் இளையபல்லவன் கச்சையிலிருந்த பட்டுப் பையிலிருந்து கொட்டப்பட்ட நான்கு பொருள்கள் உருண்டன. உருண்ட அந்தப் பொருள்களைப் பார்த்த கோட்டைத் தலைவனின் கண்கள் அவற்றைப் பார்த்துக் கொண்டே இருந்தன. அறையில் அதுவரை நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் அவன் சித்தத்திலிருந்து மறைந்தன. கண்களில் விவரிக்க இயலாத வியப்பும் வெறியும் படர்ந்தன. அந்த வியப்பும் வெறியும் கலந்த கண்கள் பயபக்தியுடன் இளைய பல்லவனையும் ஏறெடுத்து நோக்கின. உருண்டவை நான்கு, அவற்றில் புரண்டது பெருங்கதை.

Previous articleRead Kadal Pura Part 2 Ch5 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch7 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here