Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch7 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch7 |Sandilyan | TamilNovel.in

159
0
Read Kadal Pura Part 2 Ch7 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch7 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch7 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 7 : அசைந்த சிலை.

Read Kadal Pura Part 2 Ch7 |Sandilyan | TamilNovel.in

கச்சையிலிருந்த பட்டுப் பையை எடுத்து அவிழ்த்துக் கண நேரத்தில் தனது கையில் இளையபல்லவன் உருட்டி விட்ட நான்கு பெரும் நல்முத்துகளையும், விழித்த விழிகள் நிலைத்தபடியே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் அக்ஷயமுனைக் கோட்டையின் தலைவன். இயற்கையாகவே மிகப் பெரியதாக இருந்த அந்த நல்முத்துகள் மீது வடக்குச் சாளரத்தின் வழியாகப் பாய்ந்த காலைக் கதிரவனின் இருகதிர்கள் அந்த முத்துகளை ஏதோ பெரும் உயிர் வாய்ந்த பிம்பங்களைப்போல் ஜொலிக்க வைத்திருந்தன.

அவற்றின் இயற்கையமைப்பில், கதிரவன் கதிர்கள் அற்றின் மீது பாய்ந்து கிளம்பிய ஜாஜ்வல்யத்தில் அடியோடுலயித்துவிட்ட கோட்டைத் தலைவன், தனது கரங்களில் அக்ஷயமுனைக் கோட்டையையே விலைக்கு வாங்கக்கூடிய பெரும் செல்வம் உருண்டு கிடப்பதை உணர்ந்தான். அவற்றைப் பர்த்ததுமே அவற்றின் மதிப்பை மட்டுமின்றி, அவை சம்பந்தமாகக் கீழ்த்திசைப் பிராந்தி யங்களில் உலாவிய கதைகளையும் நினைத்துப் பார்த்த கோட்டைத் தலைவன், அவற்றைக் கொண்டு வந்த இளைய பல்லவன் அமானுஷ்யமான பிறவியாகத்தானிருக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான்.

அந்த நான்கு இணையற்ற முத்துகள் பாலித்தீவின் சிற்றரசனுக்குச் சொந்தமாயிருந்ததாகவும், அவற்றைப் பல நாட்டு மன்னர்கள் பல தலைமுறைகளாகக் கைப்பற்ற முயன்றும் பலிக்கவில்லையென்றும், பாலி மன்னர்கள் அவற்றை எங்கே மறைத்து வைத்திருந்தார்களென்பதும் அவன் கேட்டறிந்த விஷயம். ஆகவே இத்தகைய முத்துகள் இளைய பல்லவன் கையில் கிட்டியது பெரும் விந்தையென நினைத்த அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவன், ‘யாருக்கும் கிடைக்காத இந்த முத்துகள் இவனுக்கு எப்படிக் கிடைத்தன?’ என்று சந்தேகத்துடன் தன்னையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டான். அத்துடன் அந்த மாபெரும் செல்வத்தைத் தன்னுடையதாக்கிக் கொள்ள வேண்டுமென்ற ஆசையால் வெறிமிகுந்த பார்வையொன்றையும் அவற்றின் மீது உலாவவிட்டான்.

அவன் பார்வையையும், முகத்தில் ஓடிய சிந்தனைக் குறிகளையும் விடாமல் பார்த்துக் கொண்டு நின்ற இளைய பல்லவன், சற்றுத் தைரியத்துடன் கோட்டைத் தலைவனை முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு, “தலைவரே! எனது நட்பில் லாபமிருப்பதைப் புரிந்து கொண்டீரல்லவா?” என்று வினவினான் ஏளனம் கலந்த இளநகையுடன்.

கோட்டைத் தலைவன் தலை தூக்கி அவனைப் பார்த்தாலும் அவன் கண்கள் எதிரேயிருப்பவனை ஆராயும் சக்தியை இழந்திருந்தனவாகையால் இளைய பல்லவனின் இதழ்களில் தவழ்ந்த இளநகையையோ ஏளனத்தையோ அவை கவனிக்கவில்லை. ஏதோ சொப்பனத்திலிருப்பவன் குரலில் கேட்டான் கோட்டைத் தலைவன், “உமது நட்பில் என்ன பலன் இருக்கிறது?” என்று.

“உமது கைகளிலிருப்பதே போதிய பலனல்லவா?” என்று மெல்ல வினவினான் இளையபல்லவன்.

இளையபல்லவன் கேள்வியில் எத்தகைய பதற்றமோ இகழ்ச்சியோ இல்லாவிட்டாலும், அதைக் கேட்ட கோட்டைத் தலைவன் ஏதோ விஷக்கடி பட்டவன் போல துள்ளி ஆசனத்தில் உட்கார்ந்தான். “என்ன? இன்னொரு முறை சொல்லுங்கள்?” என்று வினவினான் அவரச அவசரமாக.

“உங்கள் கையிலிருப்பதே போதிய பலனல்லவா என்றேன்!” என்று கேள்வியை மீண்டும் திருப்பிச் சொன்னான் இளையபல்லவன்.

“அப்படியானால்…?” மென்று சிரமப்பட்டு மீதி வார்த்தைகளை விழுங்கினான் கோட்டைத் தலைவன்.

“முத்துகள் உங்களுக்கு நான் அளிக்கும் பரிசு,” சாதாரண தானமளிப்பவன் போல் பதில் சொன்னான் இளையபல்லவன்.

“உண்மையாகவா?”

“ஆம். “

“நான்குமா!”

“ஆம். “

“இவற்றின் மதிப்பு உமக்குத் தெரியுமா?”

“முத்துகள் கொழிக்கும், முத்துகள் எடுக்கும் தமிழகத்தில் பிறந்தவன் நான். “

“இவை அத்தகைய சாதாரண முத்துகள் அல்ல. இன்று நேற்று எடுக்கப்பட்டவை அல்ல. “

“நெடுநாட்களுக்கு முன் எடுக்கப்பட்டதானாலும் தமிழகத்தின் முத்துகள் இவை. “

“எப்படித் தெரியும் உமக்கு?”

“இவற்றின் வெண்மையிலிருந்து கதிரவன் கதிர்களோ, விளக்கின் சுடரொளியோ படும்போது வைரங்கள் போல் மாறுவதிலிருந்து. “

இதைக் கேட்டதும் மீண்டும் தனது கைகளை நோக்கினான் கோட்டைத் தலைவன். கதிரவன் ஒளியில் அந்த முத்துகளின் பிரகாசம் ஆயிரம் மடங்கு உயர்ந்திருந்தது. ‘உண்மைதான் உண்மைதான்’ என்று தனக்குத் தானே பைத்தியக்காரன் போல் சொல்லிக்கொண்ட கோட்டைத் தலைவன், “இந்த முத்துகள் பாலித் தீவிலிருந்தன?” என்றான் இளையபல்லவனை நோக்கி.

‘ஆம்’ என்பதற்கு அறிகுறியாக தலையசைத்தான் இளைய பல்லவன்.

“இவை எப்படி உமக்குக் கிடைத்தன?”

“பாலி மன்னர் கொடுத்தார். “

“தாமாகவா?”

“ஆம். “

“இதை நான் நம்பவில்லை. ” கோட்டைத் தலைவன் முத்துகளைக் கைகளில் இறுகப் பிடித்த வண்ணம் ஆசனத்திலிருந்து எழுந்து இளையபல்லவனை நன்றாக ஏறிட்டு நோக்கிவிட்டுச் சொன்னான்: “இந்த முத்துகளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். “

“நீங்கள் முத்துகளை ஆராய்ந்தபோதே புரிந்து கொண்டேன்,” என்று இளையபல்லவன் ஆமோதித்தான்.

“இவை பாலி அரசர்களின் குடும்ப தனம்,” என்று சுட்டிக் காட்டினான் கோட்டைத் தலைவன்.

“ஆம். “

“இவற்றை அவரிடமிருந்து விலைக்கு வாங்கப் பல அரசர்கள் முனைந்தார்கள். “

“அப்படித்தான் கேள்வி. ” ‘ஆனால் பாலி மன்னர்கள் கொடுக்கவில்லை. “

‘அதுவும் கேள்வி உண்டு. “

“உமக்கு மட்டும் ஏன் கொடுத்தார்கள்?”

“இப்பொழுது பாலியிலுள்ள மன்னருக்கு யாரும் செய்ய முடியாத உதவியைச் செய்தேன். “

கோட்டைத் தலைவன் முகத்தில் கேள்விக்குறி பலமாக எழுந்து நின்றது. “கொள்ளைக்காரன் என்ன உதவியைச் செய்ய முடியும் அரசருக்கு?”
‘மற்றவர்கள் செய்யமுடியாத உதவியைக் கொள் ளைக்காரன் செய்ய முடியும். கொள்ளைக்காரன் செய்ய முடியாத உதவியை மற்ற யாரும் செய்ய முடியாது,” என்று புதிர் போட்ட இளையபல்லவன் மெல்ல நகைக்கவும் செய்தான்.

“அத்தகைய பெரும் உதவிதான் என்ன?” என்று கேட்ட கோட்டைத் தலைவனின் குரலில் சந்தேகம் துளிர்த்தது.

இளையபல்லவன் அந்தச் சந்தேகத்தைக் கவனித் தானானாலும் கவனிக்காதவன் போல், “தலைவரே! உமது இந்தக் கோட்டை பாழாக்கப்படாமலும் உமது குடும்பப் பெண்கள் கற்பழிக்கப்படாமலும் பாதுகாக்க என்ன கொடுப்பீர்கள்?” என்று கேட்டான்.

“எதையும் கொடுப்பேன். ” விநாடி நேரத்தில் எழுந்தது கோட்டைத் தலைவன் பதில்.

“அப்படிக் கொடுக்கப்பட்ட முத்துகள் இவை. ” என்று விடையிறுத்த இளையபல்லவன் ஒரு விநாடி ஏதோ சிந்தித்துவிட்டு, “தலைவரே! பாலித்தீவு அகூதாவின் கொள்ளைக் கூட்டத்தால் தாக்கப்பட்டதை அறிவீர் களல்லவா?” என்று வினவினான்.

“ஆம் அறிவேன்,” என்றான் கோட்டைத் தலைவன்.

“அந்தத் தாக்குதலை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தவன் நான். அதற்காக அகூதா தமது பெரும் போர்க் கப்பல்களில் ஒன்றை எனக்கு வெகுமானமாகக் கொடுத்தார். அகூதாவின் கொள்ளைக்காரர்கள் பாலித் தலைநகரில் புகுந்து கொள்ளையடித்துச் சூறையாடிப் பெண்களை நாசம் செய்ய முற்பட்டார்கள். என்னிடமிருந்த வீரர்களைக் கொண்டு அந்த பாதகச் செயல்களை நிறுத்தினேன். கொள்ளைக் கூட்டம் சூழ்ந்திருந்த அரண் மனைக்குள் புகுந்து மன்னரையும் அவர் குடும்பத்தையும் காப்பாற்றினேன். அவருக்கும் அகூதாவுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தத்தையும் முடித்து, கொள்ளைக்காரரைக் கட்டுப்பாட்டுடன் பாலியிலிருந்து வெளியேற்றினேன். தமது குடும்பத்தையும் நகரத்தையும் சீரழிவதிலிருந்து காப்பாற்றியதற்காகப் பாலி மன்னர் இந்த முத்துகளைப் பரிசாக அளித்தார்,” என்று இளையபல்லவன் முத்துகள் தனது கைக்கு வந்த வரலாற்றை விவரித்தான்.

அவன் பேச்சைக் கேட்கக் கேட்கப் பெரும் வியப்பா யிருந்தது கோட்டைத் தலைவனுக்கு. ‘நகரங்களைச் சூறை யாடலிலிருந்து காப்பாற்றுவதும், மன்னர் குடும்பத்தையும், பெண்களையும் மானபங்கத்திலிருந்து காப்பதும் கொள் ளைக்காரன் செய்கையாக இல்லையே?’ என்று உள்ளுக்குள் எண்ணமிட்ட கோட்டைத் தலைவன், “நீர் கொள்ளைக்காரரா, அரசாங்கக் கடற்படைத் தளபதியா?” என்று வெளிப்படையாகக் கேட்கவும் செய்தான்.

“இரண்டுமாக இருக்க உத்தேசிக்கிறேன்,” என்று இளையபல்லவன் பதில் கூறினான்.

. இதைக் கேட்டதும் வியப்புடன் விழிகளை உயர்த்திய கோட்டைத் தலைவன், “அதெப்படி முடியும் இளைய பல்லவரே! அரசாங்கங்களின் கடற்படை, சில கட்டுப்பாடுகளுக்கும் நீதி வரம்புகளுக்கும் உட்பட்டது. கொள்ளைப்படை அத்தகைய வரம்புகளுக்கு உட்படாதது,” என்று விளக்கினான்.
“இரண்டிலுமிருக்கிற நல்ல அம்சங்களை எடுத்துக் கொள்கிறேன். கொள்ளைக்காரர், கட்டுப்பாடுடைய மாலுமிகளைவிடத் துணிவுள்ளவர்கள்; உயிரைப் பணயம் வைத்து எந்த அளவிலும் ஈடபடக்கூடியவர்கள். கட்டுப் பாடுடைய கடற்படை கண்டபடி எல்லோர் மரக்கலங்களையும் தாக்க முடியாது. சில நெறிகளுக்கும் உத்தரவுகளுக்கும் அந்தந்த அரசாங்க உடன்படிக்கைகளுக்கும் உட்பட்டது. கொள்ளைக்காரர்களுக்குள்ள துணிவையும் அரசாங்கக் கடற்படையின் கட்டுப்பாட்டையும் நெறியையும் இணைக்க நான் முயற்சிக்கிறேன்,” என்று கூறினான் இளையபல்லவன்.

“இரண்டையும் இணைக்க முடியுமா?”

“முடியும். “

“இணைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?”

“சிறு கடற்படையைச் சொந்தமாக நிறுவப் போகிறேன். “

“நிறுவி?”

சற்று யோசித்த இளையபல்லவன் நிதானமும், உறுதியும் தொனித்த குரலில், “கலிங்கத்தின் கடலாதிக்கத்தை உடைக்கப் போகிறேன்,” என்று கூறினான். கூறிவிட்டுச் சில விநாடிகள் கோட்டைத் தலைவனைக் கூர்ந்து நோக்கவும் செய்தான்.

கோட்டைத் தலைவன் சில விநாடிகள் யோசித்துக் கொண்டு அறையில் அங்குமிங்கும் உலாவினான். பிறகு நின்று கேட்டான், “கலிங்கத்தின் மீது அத்தனை வெறுப்பா உங்களுக்கு?” என்று.

“ஆம். ” என்று திட்டமாகக் கூறினான் இளைய பல்லவன்.

“ஏன்?”

“கலிங்கத்தின் கடலாதிக்கம் சோழநாட்டுக் கடல் வாணிபத்துக்குப் பெரும் ஆபத்து. இப்பொழுது கடலில் உலவும் தமிழ் வணிகரின் உயிர்களுக்கே உலை வைக்கிறது கலிங்கம். இதை ஒடுக்க வேண்டும். “

“கொள்ளைக்காரருக்கு நாடு, நீதி, அபிமானம் என்பது உண்டா?”

“சாதாரணமாகக் கிடையாது. ஆனால் அவையும் உண்டு என்பதற்கு நான் அத்தாட்சியாக இருக்க விரும்புகிறேன். “

மறுபடியும் சில வினாடிகள் மௌனம் சாதித்த கோட்டைத் தலைவன், “நான் உமக்கு உதவுவேனென்று எதிர்பார்க்கிறீரா?” என்று வினவினான்.

“எதிர்பார்த்துத்தான் இங்கு வந்தேன். “

“நான் ஸ்ரி விஜய சாம்ராஜ்யாதிபதியின் சேவகன், அவர் கோட்டையின் தளபதி. “

“அது தெரியும் எனக்கு. “

“ஸ்ரி விஜயத்தின் சக்கரவர்த்தி கலிங்கத்துடன் நட்பு கொண்டவர். “

“அதுவும் நீங்கள் ஏற்கெனவே சொல்லி இருக்கிறீர்கள். “

“அப்படியிருக்க நான் உங்களுக்கு உதவுவது ராஜத் துரோகமாகாதா!”

‘ஆகும்…. ஆனால்… ” என்று இழுத்த இளையபல்லவன் குரலில் விபரீத தொனி துளிர்த்தது.

அதைக் கோட்டைத் தலைவனும் கவனித்தான். ஆகவே, “ஆனால் என்ன?” என்று சீற்றத்துடன் வினவினான்.

“ஆனால் நீங்கள் எந்தப் பக்கம் நியாயமிருக்கிறது என்பதை அறிந்து நடப்பவர் என்பதைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இந்த அறைக்கு வந்ததும் அதைப் புரிந்துகொண்டேன்,” என்ற இளையபல்லவன் எதிரேயிருந்த பட்டயங்களில் ஒன்றைச் சுட்டிக்காட்டி, “அந்தப் பட்டயத்திலிருப்பவர் பெயர் ஸ்ரி விஜயத்தின் உபதளபதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவரையும் கொலை செய்திருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் அவரவர்களுக்குத் தகுதி யாகவும் சமய சந்தர்ப்பங்களை முன்னிட்டும் முடிவுகளைச் செய்வீர்கள் என்பதை உணர்ந்தேன்” என்று கூறினான்.

இதைக் கூறியபோது இளைய பல்லவன் குரலிலிருந்த ஏளனத்தைக் கோட்டைத் தலைவன் கவனிக்கத் தவறவில்லை. சுயநலத்துக்குத் தான் எதையும் செய்ய வல்லவன், யார் பக்கமும் சேர வல்லவன் என்பதை இளையபல்லவன் புரிந்து கொண்டு விட்டானென்பதை உணர்ந்துகொண்ட கோட்டைத் தலைவன் உள்ளத்தில் பெரும் சீற்றம் உருவெடுத்தது. எந்த அயோக்கியனும், தனது அயோக்கியத்தனத்தைப் பிறன் உணர்த்த விரும்புவதில்லை. ஆகவே தன் ஆத்மாவையே உற்றுப் பார்த்துத் தன் குணவிசேஷங்களை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இளையபல்லவன் அலசிவிட்டதும் அதில் ஆக்ரோஷமடைந்த கோட்டைத் தலைவன், “உமக்கு உதவ நான் மறுத்தால்?” என்று இரைந்து அந்த அறையே கிடுகிடுக்கும் படியாகக் கூவினான்.

அந்தக் கூச்சலை இளையபல்லவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அறைகூட அவன் நினைப்பிலிருந்து நீங்கியது. அவன் கண்கள் அந்த அறையின் ஒரு மூலையை நோக்கி நிலைத்தவை நிலைத்தபடி நின்றன. அங்கிருந்தது ஒரு சிலை. அது மெள்ள அசையவும் செய்தது. ஏதோபிரமை பிடித்தவன் போல் அதைப் பார்த்துக்கொண்டே நின்றான் இளையபல்லவன்.

Previous articleRead Kadal Pura Part 2 Ch6 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch8 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here