Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch8 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch8 |Sandilyan | TamilNovel.in

84
0
Read Kadal Pura Part 2 Ch8 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch8 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch8 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 8 : மஞ்சளழகி.

Read Kadal Pura Part 2 Ch8 |Sandilyan | TamilNovel.in

“உமக்கு நான் உதவ மறுத்தால்?” என்ற கோட்டைத் தலைவனின் ஆக்ரோஷக் கூச்சலைக்கூட அறிவில் புகவொட்டாமல் தடுத்துத் தன்னைப் பெரும் பிரமைக்கு உள்ளாக்கிக் கொண்டு அறைக் கதவுக்கருகில் சிறிதும் அசையாமல் சிலையென நின்ற சித்தினிப் பெண்ணை இமை கொட்டாமல் பார்த்து நின்ற இளையபல்லவன், அந்த அழகுச்சிலை அசையவும் ஆரம்பித்தபின் அதன் நடை ஒய்யாரத்திலும் மனத்தைப் பறி கொடுத்தான். அதுவரையில் தான் வாழ்வில் கண்ட எந்தச் சாதியையும், அந்த வடிவழகி சேர்ந்தவளல்லவென்பதைப் பார்த்த மாத்திரத்தில் புரிந்துகொண்டாலும், அவள் எந்தச் சாதி, எந்த நாட்டவள் என்று தீர்மானிக்க முடியாத அளவுக்கு அவள் உடலழகு இடத்துக்கு இடம் மாறுபட்டிருந்ததைக் கவனித்த இளையபல்லவன் எங்கோ கானகத்தில் புகுந்தவன் என்றும் காணாத ஒரு புத்தம் புது மலரைக் கண்டு விட்டால் எந்த நிலையை அடைவானோ அந்த நிலையை அடைந்திருந்தான்.

அவள் முகத்தில் லேசாகச் சீனப் பெண்களுக்கு உள்ளகளை இருந்ததேயொழிய, நல்ல கூர்மையாயிருந்த நாசியும், அடர்த்தியாக வளர்ந்திருந்த புருவங்களும் அவள் சீனத்துப் பைங்கிளி அல்லவென்பதை அறிவுறுத்தின. அவள் சரீரச் சருமத்தில் ஓடியிருந்த லேசான மஞ்சள் நிறமும் சீனத்து மாதர் உடலிலுள்ள மஞ்சளைப் போலில்லாமல் மஞ்சள் பூசிக் குளித்த பின்னுள்ள உடல் வண்ணத்தை அடைந்திருந்ததால், ஏதோ பக்குவப்பட்ட தங்கம்போல் பளிச்சிட்டது. நன்றாக எழுந்து வளைந்திருந்த அவள் கன்னக் கதுப்புகளும் அதிக அகலமில்லாவிட்டாலும் மிக வசீகரமாகத் தெரிந்த நுதல் பிரதேசமும், உருண்டு தொங்கிய கைகளும், புத்தொளி யொன்றை இயற்கையாகவே பெற்றிருந்ததையும், தெரிந்தும் தெரியாமலுமிருந்த அந்த ஒளியும் அவளைச் சொர் ண தேவதையைப் போல அடித்திருந்ததையும் கவனித்த இளையபல்லவன் மனத்தை விட்டு அகற்ற முடியாத பெரும் விபரீத அழகுக்கு முன்பாகத் தான் நிற்பதை அறிந்து கொண்டான். அத்தனை அழகையும் தோற்கடிக்கும் படியாக அவனை உற்று நோக்கிய விழிகளில் கூட இனங்களிரண்டு கலந்து கிடந்தன.

அவள் கருவிழிகளைச் சுற்றியிருந்த இடம் அசல் வெளுப்பாயில்லாமல் சற்று செவ்வரி படர்ந்திருந்ததால் சாவகத்தின் குரூரமான பகத் இனத்தாரின் விழிகளைப் போல் அவை இருந்தாலும், விழிகளில் குரூரத்துக்குப் பதில் சாந்தமும் விஷமமும் நிலவிக் கிடந்தன. அவள் பார்வையிலிருந்து குணத்தைப் பற்றி எதுவும் சொல்ல முடியாதிருந்தது. வெறுத்த பார்வையல்ல, வஞ்சகப் பார்வையுமல்ல. இருந்தாலும் பார்ப்பவர்களுக்குச் சந்தேகம் தொனிக்கும் பார்வையை அந்த விழிகள் உதிர்த்தன.

காட்டுப் புஷ்பம் போலவே அவள் அவயவங்கள் செழித்துக் கிடந்தன. திண்மையான கழுத்தும், சிற்றிடைக்குக் கீழே முன்னும் பின்னுமிருந்த வளர்ச்சியும் இன்ப இச்சை நிறைந்த உள்ளத்துக்கு வெளிச்சான்றுகளாகக் காட்சியளித்தன. உறுதியாக நிலத்தில் ஊன்றிய அவள் கால்கள் மிகுந்த அழகு படைத்து, கட்டை விரலிலிருந்து மேல் நோக்கு நோக்கினால், சிறிதாகத்துவங்கிப் பெரிதாகக் கடலுக்கு அருகே விரியும் அழகுள்ள நதியையும் தோற்கடிக்கும் வண்ணம் அமைந்திருந்தன.

இத்தனை அழகுகளைத் தாங்கி, நல்லவளா, பொல் லாதவளா, சீனத்துப் பெண்ணா , வேறு நாட்டவளா என்று எதையும் ஊகிக்க முடியாத பெரும் புதிராகவும் அசைவற்றும் நின்ற அந்த அழகுச்சிலை அசைய முற்பட்டுத் தன்னை நோக்கி நடக்கத் துவங்கியதும், அவள் தேகத்தின் எழிலிடங்கள் மெல்ல ஆடியும் துள்ளியும் புரண்டும் கூட வந்து இளையபல்லவன் சித்தத்தை எங்கோ இழுத்துக் கொண்டு சென்றன. தலையில் இருந்த அவள் சுருண்ட மயிரில் பல இழைகள் பிரிந்து தொங்கித் தோளில் புரண்டதும், முழுப் பின்னல் மார்பில் தவழ்ந்ததும் சில இழைகள் கன்னத்தைத் தொட்டதும் பெரும் இம்சையை இளையபல்லவன் இதயத்தில் விளைவித்தன. அந்த உணர்ச்சிகள் அவன் சித்தத்தை ஒரு வருடத்துக்கு முன்பாகப் பாலூர்ப் பெருந்துறைக்கு இழுத்துச் சென்றன. வெளிநாட்டுப் பிரமுகர் வீதியின் மாளிகை அறையில் குதிக்க வைத்தது.

அங்கு தான் திரை மறைவிலிருந்த காட்சியும், ஆடை புனைய வந்த காஞ்சனாதேவியின் தெய்வீக அழகும், அவன் இதயக் கண் முன்னால் தாண்டவமாடின. அன்று தான் ஒளிந்திருந்த திரை அசைந்ததும் அவள் அஞ்சன விழிகள் திடீரென எழுந்து தானிருந்த இடத்தை நோக்கிய வீர நோக்கையும் கண்டான் அவன். இன்று எதிரேயிருந்த கண்களிலிருந்து பயமற்ற, ஆனால் வீரம் என்று சொல்ல முடியாத பேரழகுக் கண்களையும் பார்த்தான். ‘அங்கு அசைந்தது திரை. சீறின அஞ்சன விழிகள். இங்கு அசைந்தது ஒரு சிலை, மயக்கின அழகுக் கண்கள்’ என்று தனக்குள் எண்ணமிட்ட இளையபல்லவன் இரண்டு அழகிகளுக்கும் உள்ள ஏற்றத் தாழ்வையும் எடை போட முற்பட்டுத் தோல்வியே அடைந்தான். இரண்டும் வெவ்வேறு அழகாயிருந்ததையும், ஒன்றுக்கொன்று சளைக் காததாயிருந்ததையும் அறிந்து கொண்ட இளையபல்லவன் ஒன்று மட்டும் தீர்மானமாகப் புரிந்துகொண்டான்.

‘காஞ்சனாதேவியின் அழகு தூய்மையான ஒற்றை நாட்டு அழகு. அக்ஷயக்கோட்டைச் சித்தினியின் அழகில் எத்தனையோ உயர்விருந்தும் அதில் இரண்டு நாடுகளோ இனங்களோ கலந்திருக்க வேண்டும்” என்று உறுதி செய்து கொண்ட இளையபல்லவன், ‘எந்த இனம் கலந்தாலும் விவகாரங்களைக் கலக்காமல் அந்த இனங்களின் அழகுகளை மட்டும் இணைத்து எதற்காக ஆண்டவன் இந்த அற்புதத்தைச் சிருஷ்டித்தான்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். அதில் ஒரு முடிவுக்கும் வந்தான். ‘இது அழகுதான். ஆனால் அஞ்சத்தக்க அழகு,” என்று முடிவு செய்த இளையபல்லவன் எதிரேயிருந்த கோட்டைத் தலைவன் மீது தன் கண்களைத் திருப்பினான். ஆனால் கோட்டைத் தலைவன் அவன் கண்களுக்குப் புலப்படவில்லை .

இளையபல்லவன் சிந்தனையைப் பலவிதங்களில் புரட்டிக்கொண்டே அசைந்து அசைந்து நடந்து வந்த அந்தப் பேரழகி அவன் ஆராய்ச்சி முடிவதற்குள் கோட்டைத் தலைவனுக்கும் இளையபல்லவனுக்கும் இடையே வந்துவிட்டதல்லாமல், கோட்டைத் தலைவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு இளையபல்லவனை நோக்கித் திரும்பியும் நின்றதால், சோழர் படைத் தலைவன் தன் கண்களைத் தூக்கியபோது எதிரே அவள் எழில் அவனை நோக்கிற்று. சிருங்கார ரஸமடங்கிய பெரும் கவியின் ஏட்டுப் பிரதிகளைச் சுவையுடன் பார்க்கும் ரஸிகனின் பார்வையுடன் அவளை நோக்கிய இளையபல்லவன், தன் சித்தத்தை அடியோடு சீரழிக்கும் நோக்கத்துடன் இயற்கை வளர்த்துவிட்ட பெரும் புஷ்பங்களைத் தாங்கிய ஒரு பூவுடற் செல்வி தன் விழிகளுக் கெதிரெ நிற்பதைக் கண்டான். சிறிது சலனமும் அடைந்தான். சலனம் என்ன? சங்கடமும் அடைந்தான்.

அவளை அப்படி நோக்குவதும், சலனத்துக்கு உட்படுவதும் காஞ்சனாதேவியிடம் தான் கொண்டுள்ள காதலுக்குப் பெரும் இழுக்கு என்று நினைத்துச் சிந்தனையை வேறு திக்கில் இழுக்க முயன்ற இளையபல்லவன் எப்படிச் சிந்தனை தன் வசமில்லை என்பதை அந்தச் சில விநாடிகளில் புரிந்துகொண்டான். புத்தியின் புறத்தோற்றமான கண்ணெனும் வாயில் வழியாக அவள் எழில் தன் சித்தத்துக்குள் நுழைந்து வேறு நினைப்புக்கே அங்கு இடமில்லாமல் செய்து விட்டதைப் புரிந்துகொண்ட இளையபல்லவன் செய்வதறியாமல் திணறினான்.

இந்தச் சமயத்தில் கோட்டைத் தலைவனாவது உதவிக்கு வந்திருக்கலாம். ஆனால் என்ன காரணத்தாலோ கோட்டைத் தலைவன் ஆக்ரோஷக் கூச்சல் திடீரென அடங்கியது. “உனக்கு உதவ மறுத்தால்?” என்று அவன் ஆரம்பத்தில் இட்ட கூச்சலுக்குப் பின் அவன் எதுவுமே பேசவில்லை . இளையபல்லவன் கண்கள் சென்ற திக்கையும், அவன் பிரமையையும் கவனித்த கோட்டைத் தலைவன் முகத்தி லிருந்த ஆக்ரோஷம் திடீரென மறைந்து வதனத்தை மந்தகாசம் ஆட்கொண்டது. அந்த மந்தகாசத்தின் ஊடே வஞ்சகப் பார்வையொன்றும் புகுந்தது. அவன் முகத்தில் திடீரென ஏதேதோ எண்ணங்கள் புகுந்து மறைந்து கொண்டதற்கான அறிகுறிகள் ஒரு விநாடி தெரிந்தன. பிறகு அவன் ஏதோ முடிவுக்கு வந்துவிட்டதையும் அந்த முடிவில் அவனுக்குப் பெரும் திருப்தியும் இருந்ததும் மந்தகாசத்தில் விரிந்து கிடந்தது.

இளையபல்லவனின் அழகு ஆராய்ச்சியைக் கோட்டைத் தலைவன் மிகுந்த நிதானத்துடன் பார்த்துக் கொண்டே நின்றான். அந்தப் பெண்ணின் அழகுக்கடலில் இளையபல்லவன் அமிழ்ந்து போவதைக் கண்டு அக மகிழ்ந்து போனதற்கு அறிகுறியாக அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவனின் அதரங்கள் மெல்லப் புன் முறுவல் கோட்டின. அந்த ஆனந்தப் புன்முறுவல், அவன் இளையபல்லவனை வலியப் பிணைக்கவல்ல பல திட்டங்களை வகுத்து விட்டதற்கான சாந்தியையும் அவன் மனத்தில் நிரப்பியது. ஆகவே அந்த அழகி தங்களிருவருக்கும் இடையே வந்து தனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்றதைப்பற்றி அவன் சிறிதும் லட்சியம் செய்யாமல் இரண்டடி பின் சென்று பழையபடி தன் ஆசனத்தில் உட்கார்ந்துகொண்டு, அவர்களிருவர் பேச்சின் போக்கைக் கவனிக்க முற்பட்டான்.

இளைய பல்லவனுக்கு முன் வந்து திடமாகவும், ஆனால் பெரும் ஒய்யாரத்துடனும் இடையில் ஒரு கையை முட்டுக் கொடுத்து நின்ற அந்த அழகுச் சிலை தன் செவ்விய அதரங்களைப் பிரித்து, “நீங்கள் மகா வீரர் என்பதைப் புரிந்து கொண்டேன். ” என்ற சொற்களை உதிர்த்ததன்றி, தன் தலையையும் ஒருபுறம் வணக்கத்துக்கு அறிகுறியாக ஒருக்களித்தாள்.

அதரத்தின் அபரிமிதச் சிவப்பு, தான் சற்று முன்பு கோட்டைத் தலைவனுக்குப் பரிசளித்த முத்துகளை விடச் சிறந்த நான்கு பற்கள், வீணையின் நாதம் போல் உதிர்ந்த சொற்கள் எல்லாம் இளையபல்லவன் இதயத்தைக் கொள்ளை கொண்டன. அந்த அழகுச் சிலைக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தான் அவன். பிறகு மெள்ள ஒற்றைச்சொல்லை வெளியிட்டான், “நன்றி” என்று .

அவள் மெல்ல நகைத்துவிட்டுப் பதில் சொன்னாள் : “உங்களுக்கு அடக்கமும் இருக்கிறது,” என்று.

“நன்றி,” இரண்டாம் முறையும் இளையபல்லவன் அதே பல்லவியைப் பாடினான்.

அவளது பெரும் புருவங்கள் நெற்றியை நோக்கி வியப்புக்கு அறிகுறியாக எழுந்தன. “வெட்கமும் இருக்கிறது உங்களுக்கு,” என்றாள் அவள் மறுபடியும் நகைத்து.

அவள் நகைப்பு பெரும் இன்பமாகத்தானிருந்தது, இளையபல்லவனுக்கு. இருந்தாலும், திரும்பத் திரும்ப அவள் தன் குணாதிசயங்களை விவரித்ததால் பொறுக்காத அவன் தன் கைவரிசையையும் காட்டத் தொடங்கி, “சில சமயங்களில் அந்தக் குணம் ஆண்களுக்கும் தேவையாயிருக்கிறது,” என்றான் மெதுவாக.

அவன் பதிலில் புதைந்து கிடந்த பொருளை நொடிப் பொழுதில் புரிந்துகொண்டாள் அவள். பெண்கள் சில சமயங்களில் காட்டும் நாணக்குறைவைக் குத்திக்காட்டவே அவன் அப்படிப் பதில் சொல்லியிருக்கிறானென்பதை அறிந்துகொண்ட அவள், “உங்களுக்கு விஷமமும் இருக்கிறது” என்றாள் நான்காம் முறையாக.

“என்ன!” வியப்புடன் கேட்டான் இளையபல்லவன்.

“நீங்கள் மாவீரர் என்றேன் – அடக்கத்தைக் காட்டி னீர்கள். உங்களுக்கு அடக்கமிருக்கிறதென்றேன் – வெட் கத்தைக் காட்டினீர்கள். வெட்கமிருக்கிறதென்றேன் – என்னைக் குத்திக் காட்டி உங்களுக்கு விஷமமும் உண்டு என்பதை நிரூபித்தீர்கள். அடக்கம், வெட்கம், விஷமம் ஆகிய குணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றாள் அவள் உள்ளத்தைத் திறந்து காட்டி.

“ஏன்?” அவளுக்குப் பதில் சொல்லத் தெரியாததால் ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காக அந்த ஒற்றைச் சொல்லை உதிர்த்தான் இளையபல்லவன்.

“அடக்கம் வீரத்துக்கு அடையாளம். வெட்கம் பண்பாட்டுக்கு அடையாளம். விஷமம் ரசிகத் தன்மைக்கு அடையாளம்,” என்று அவள் பதில் சொல்லி அவனைப் பயமின்றி ஏறெடுத்துப் பார்த்தாள்.

இத்தனை சம்பாஷணைக்குப் பிறகும் இளையபல்லவன் ஒரு நிலையை அடையாமலே தத்தளித்தான். இருப்பினும் சமாளித்துக்கொண்டு, “மனோதத்துவத்தை நீங்கள் நன்கு அறிந்து கொண்டிருக்கிறீர்கள்,” என்று கூறினான்.

பதிலுக்கு அவள் அடக்கத்தைக் காட்டவுமில்லை, நன்றி கூறவுமில்லை. “ஆம்” என்று சர்வசாதாரணமாக ஒப்புக்கொண்டாள். அந்த ‘ஆம்’ அந்தப் பாராட்டுதல் தனக்குத் தகும் என்பதை ஒப்புக்கொள்வதுபோல் இருந்தது. இதனால் வியப்புடன் அவளை ஏறெடுத்துப் பார்த்த இளையபல்லவனை நோக்கி அவள் நகைத்துவிட்டு, “உங்கள் பாராட்டுதலை நான் ஒப்புக்கொண்டது உங்களுக்கு வியப்பாயிருக்கலாம். ஆனால் நீங்கள் சொன்னதில் தவறேதுமில்லை. எனக்கு மனோதத்துவம் தெரியாதிருந்தால் இந் அக்ஷயமுனையில் நான் ஒருநாள் ஜீவித்திருக்க முடியுமா? கொள்ளையர் நடுவில் பயமின்றி உலாவ முடியுமா?” என்றாள்.

“கொள்ளையர் நடுவில் உலாவுவீர்களா!” மிகுந்த ஆச்சரியத்துடன் எழுந்தது இளையபல்லவன் கேள்வி. ‘கற்பையோ ஒழுக்கத்தையோ இம்மியளவும் மதிக்காத கொள்ளையர் கூட்டத்தில் இத்தகைய ஒரு பெண் சிக்கினால்…?” நினைக்கவும் பயந்தான் இளையபல்லவன்.

அவன் முகபாவத்தை அந்த அழகி கவனித்தாள். நகைத்துவிட்டுச் சொன்னாள் : “உங்கள் வியப்புக்குக் காரணமிருக்கிறது. என்னுடன் பழகிய பலரும் உங்களைப் போல் வியப்படைந்திருக்கிறார்கள்… ஆனால் இதில் எனக்கு வியப்பில்லை. கொள்ளைக்காரரிடம் எனக்கு அச்சமில்லை. அவர்களுக்குத்தான் என்னிடம் அச்சமிருக்கிறது. நான் இஷ்டப்பட்டால் அவர்கள் என்னைச் சுற்றி வளைக்கலாம். இல்லையேல் தொலை தூரத்தில் நிற்க வேண்டும்” என்ற அவள் சரேலெனப் பின்னடைந்து, தன் தந்தையும் இளைய பல்லவனும் ஒருவரையொருவர் நேரில் பார்த்துக்கொள்ள இடம் விட்டுத் தன் இடது கையைக் கோட்டைத் தலைவனை நோக்கிச் சுட்டிக்காட்டி, வலது கையைத் தன் மார்பின் மீது வைத்து, “இதோ இருக்கும் என் தந்தை கோட்டையின் தலைவராயிருக்கலாம். கொள்ளைக் காரர்களின் தலைவர் இவரல்ல, நான்தான்!” என்றாள்.

ஏதோ ‘நாட்டிய முத்திரைபோல் மார்பில் வைக்கப்பட்ட இந்தக் கையும், அபிநய பாவங்கள் முகத்தில் துளிர்த்த அழகுக் குறிகளும் இளையபல்லவனைக் கவர்ந்ததன்றி அவள் சொற்களில் தொனித்த எல்லையற்றதுணிவும் அவனுக்கு வியப்பையே அளித்தன. உடல் முழுவதும் மயக்கந்தரும் மஞ்சள் நிறமோடிய அந்த மஞ்சளழகியை நன்றாக ஏறெடுத்து நோக்கிய இளைய பல்லவன் வணக்கத்துக்கு அறிகுறியாகத் தலை தாழ்த்தி, “அப்படியானல் நான் வந்த அலுவல் சுலபமாகிறது?” என்றான்.

“எந்த அலுவல்?” என்று கேட்டாள் அவள்:

“சில முக்கிய கோரிக்கைகளுடன் தங்கள் தந்தையிடம் வந்தேன். “

“என்ன சொன்னார். “

“இன்னும் சரியான பதில் இல்லை . “

“உங்களைப் போன்ற கொள்ளைக்காரருக்கு… மன்னிக்க வேண்டும்… வீரருக்கு என் தந்தை எதையும் மறுக்க மாட்டாரே!”

“மறுக்கவில்லைதான். இருந்தாலும்..”

“யோசிக்கிறார். அது சகஜம்தானே? ஒரு நாள் அவருக்கு அவகாசம் கொடுங்கள். இன்றிரவு நிகழ்ச்சி முடியட்டும்,” என்ற அவள் திடீரெனத் தன் தந்தையின் பக்கம் திரும்பி, “ஏனப்பா! இன்றைய இரவு நிகழ்ச்சிக்கு இவரையும்… ” என்று தொடங்கினாள்.

அடுத்த விநாடி அறை அதிர்ந்தது. “போ உள்ளே, உன்னை யார் வரச் சொன்னது இங்கே?” என்று கூவினான் கோட்டைத் தலைவன். அவன் உணர்ச்சிகளைத் திடீரென அத்தனை தூரம் உலுக்கிவிடக்கூடிய அந்த நிகழ்ச்சி எதுவாயிருக்கும்? ஏதும் புரியாமல் கோட்டைத் தலைவனை நோக்கினான் சோழர் படைத் தலைவன். கோட்டைத் தலைவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.

Previous articleRead Kadal Pura Part 2 Ch7 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch9 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here