Home Kadal Pura Read Kadal Pura Part 2 Ch9 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch9 |Sandilyan | TamilNovel.in

132
0
Read Kadal Pura Part 2 Ch9 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 2 Ch9 |Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 2 Ch9 |Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

இரண்டாம் பாகம், அத்தியாயம் 9 : முன்னேற்பாடு.

Read Kadal Pura Part 2 Ch9 |Sandilyan | TamilNovel.in

அன்றைய இரவு நிகழ்ச்சிக்குத் தன்னையும் அழைக்க வேண்டுமென அந்த அழகுச்சிலை கூற முற்பட்டு வார்த்தையை முடிக்கா முன்னமே, “உன்னை யார் வரச் சொன்னது இங்கே? போ உள்ளே!” என்று அக்ஷயமுனைக் கோட்டைத் தலைவன் அந்த அறையே அதிரும்படியாகக் கூவியதைக் கேட்டதும் சற்றுக் குழம்பவே செய்தான் இளையபல்லவன்.

எண்ணங்களைச் சிறிதும் புறத்தே காட்டாத ஆழ்ந்த உள்ளம் படைத்த அந்தக் கிராதகனே, கட்டுப்பட்ட தன் உணர்ச்சிகளைக் காற்றில் உதறிவிட்டுக் கூவும்படியான அந்த நிகழ்ச்சி யாதாயிருக்கும் என்று யோசித்து எதுவும் புரியாததால் கோட்டைத் தலைவனை நோக்கிக் கண்களைத் திருப்பிய இளையபல்லவன், அவன் முகத்தில் கோபம் மிதமிஞ்சித் தாண்டவமாடிக் கொண்டிருப்பதையும், சுடும் கண்களை அவன் தன் மகள் மீது திருப்பியிருப்பதையும் கண்டான்.

தந்தையின் அந்த உக்கிராகாரக் கோபத்துக்கு இலக்கான அந்த அழகியின் நிலை எப்படியிருக்கிறதென்பதைப் பார்க்க அவள் மீது திரும்பிய படைத்தலைவனின் கூரிய கண்கள் மறுகணம் பெரு வியப்பைக் கக்கின. தந்தையின் கூச்சலால் இம்மி யளவும் உணர்ச்சிவசப்படாத அந்த மஞ்சளழகி, கோட்டைத் தலைவனை நோக்கி மௌனமாகவே மந்த காசமே செய்தாள். தந்தையின் கூச்சலைக் கேட்டதும் அவள் தலை அவனை நோக்கித் திடீரெனத் திரும்பியதில், குழல் அசைந்து மயிரிழைகள் தோளின் இருபுறங்களிலும் விழுந்தன. மருண்ட அவள் செவ்வரி விழிகள் சற்றே திரும்பின. அவ்வளவுதான். மற்றபடி வேறெவ்வித மாறுதலும் அவளிடம் காணப்படவில்லை.

ஏற்பட்ட சிறு மாறுதல்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்தன வாகையால், அவை மாறுதல்களாகவே இளையபல்லவனின் கூரிய விழிகளுக்கு மட்டுமென்ன அறிவுக்குக்கூடப் புலப்படவில்லை. இடுப்பில் முட்டுக் கொடுத்த கையைக்கூட எடுக்காமல், இருந்த இடத்தை விட்டு அசையாமல், அஞ்சாமல் சிரித்துக்கொண்டே நின்ற அவள் கண்கள் கோட்டைத் தலைவன் மீதே பல விநாடிகள் நிலைத்தன.

அந்தக் கண்களில் ஏதோ பெரும் சக்தி இருக்க வேண்டுமென்பதைச் சில விநாடிகளுக்குள் புரிந்து கொண்ட இளையபல்லவனின் வியப்பு பன்மடங்கு விரியலாயிற்று. மஞ்சளழகியின் கண்கள், கோட்டைத் தலைவன்மீது நிலைத்த ஒவ்வொரு விநாடியிலும் அவன் முகத்தில் மாறுதல் ஏற்பட்டு வந்ததையும், ஆரம்பத்தில் அதில் விரவிக் கிடந்த கோபமும் சிறிது சிறிதாக மறைந்து விட்டதையும் கண்ட இளையபல்லவன், அந்தப் பெண் அந்த அறையில் மட்டுமல்லாமல் அக்ஷய முனையிலேயே ஒரு பெரும் சக்தியென்பதையும், தன் திட்டங்கள் நிறைவேற அவள் உதவி மிகவும் அவசியமென்பதையும் சந்தேகமற அறிந்து கொண்டான். புலியைப் பழக்குபவனுடைய கண்களைப் பார்க்க முடியாமல் அஞ்சி ஒடுங்கும் புலியைப்போல அந்தத் துஷ்டன் மெள்ள மெள்ள ஒடுங்கி விட்டதையும் கண்ட இளைய பல்லவன், வியப்பு நிரம்பி வழிந்தோடிய விழிகளை மஞ்சளழகிமீது நிலைக்க விட்டான்.

தந்தையைத் தன் பார்வையாலேயே அடக்கிவிட்ட மஞ்சளழகி மெள்ள இளையபல்லவனை நோக்கித் திரும்பி முகத்திலிருந்த மந்தகாசத்துடன் சிறிது வருத்தத்தின் குறியையும் கலந்துகொண்டு, “வீரரே! மன்னிக்க வேண்டும். தந்தை சில சமயங்களில் இப்படித் தான் நிதானத்தை இழந்துவிடுகிறார். உட்காருங்கள், நிதானமாகப் பேசுவோம்,” என்று கூறி, அவனை எதிரேயிருந்த மஞ்சத்தில் மீண்டும் அமரச் சொல்லி, தந்தையின் பக்கத்திலே இருந்த ஆசனத்தில் தானும் உட்கார்ந்து கொண்டாள்.

அதிக ஒடுக்கத்தைக் காட்டாமலும், அபரிமிதமான ஆடம்பரமின்றியும், அடக்கமும், கம்பீரமும் கலந்த பெரும் ராணி போல் மஞ்சத்திலமர்ந்து மடியில் கைகளைக் கோத்துத் தவழ வைத்துக் கொண்ட மஞ்சளழகி தந்தையை நோக்கி, “அப்பா! இதற்கு ஏன் இவ்வளவு கூச்சல்? உங்களுக்கு இஷ்டமில்லாவிட்டால் நிகழ்ச்சிக்கு இவரை அழைக்க வேண்டாம். அவ்வளவுதானே?” என்றாள். அவள் பேசிய போது சாதாரணமாகவே இன்ப நாதமாயிருந்த அவள் குரல் மிகவும் குழைந்து கிடந்தது.

வீணைத் தந்தியைச் சுண்டி விட்டவுடன் மறு கரத்தின் விரல்கள் இழைக்கும் மேக நாதம் போல் அவள் குரல் எத்தகைய கடுமையான இதயத்தையும் கரைக்கும் தன்மையை எய்திவிட்டதைக் கவனித்த இளையபல்லவன், ‘இவள் தந்தையைக் கண்டு அஞ்சாதவள் மட்டுமல்ல, அவனைச் சுண்டு விரலில் வைத்து இஷ்டப்படி சுற்றவும் வல்லவள்,’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். அவன் ஊகம் சரியென்பதைக் கோட்டைத் தலைவனின் அடுத்த வார்த்தைகள் நிரூபித்தன. அதற்காகச் சொல்லவில்லை … ” என்று பலவீனமான குரலில் பதில் சொல்ல ஆரம்பித்தான் கோட்டைத் தலைவன்.

“எதற்காகச் சொல்லவில்லை!” என்று ஏதும் புரியாத குழந்தைபோல் மஞ்சளழகி அவனைக் கேட்டாள்.

கோட்டைத் தலைவன் இம்முறை தைரியமாகத் தலைநிமிர்ந்து அவளை நோக்கினான். அவள் விழிகள் உதிர்த்த அந்தக் குழந்தைப் பார்வை இடையில் ஏற்பட்ட அவனுடைய அச்சத்தைத் தவிர்த்திருக்க வேண்டும். அவன் முகத்தில் மெள்ள மெள்ளப் பழைய களை படர்ந்து ஆழமும் வஞ்சகமும் நிறைந்த முன்னைய நோக்கு கண்களிலும் நிலவியது. அந்த வஞ்சகப் பார்வையிலும் பாசம் சிறிது பரவிநின்றது. சொற்களிலும் அந்தப் பாசம் தொனிக்கச் சொன்னான் கோட்டைத் தலைவன், “நான் இரைந்தது உன் மனத்தைப் புண்படுத்த அல்ல மகளே!” என்று.

மஞ்சளழகியும் கொஞ்சிய வண்ணமே, “என் மனத்தை நீங்கள் ஒருநாளும் புண்படுத்த மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியாதா?” என்று பதில் சொன்னாள்.

அடுத்தபடி இளையபல்லவன் எதிரே கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருக்கிறான் என்பதைப் பற்றிச் சற்றும் நினைக்காமல் தந்தையும் மகளும் ஒருவருக் கொருவரே பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

“இன்றிரவு நிகழ்ச்சி சாமான்யமானதா?” என்று பெண்ணின் கையை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டு செல்லமும் கவலையும் கலந்த குரலில் கேட்டான் கோட்டைத் தலைவன்.

“இல்லை,” என்று மஞ்சளழகி பதில் கூறினாள்.

“அக்ஷயமுனையின் பிரத்யேக நிகழ்ச்சி இது,” என்றான் கோட்டைத் தலைவன்.

“ஆமாம்,” என்றாள் அவள்.

“சித்ரா பௌர்ணமியன்று பிரதி வருஷம் நடக்கிறது. “

“ஆமாம். “

“நீ இல்லாவிட்டால் நிகழ்ச்சி இல்லை. “

“ஆமாம். “

“நிகழ்ச்சிகள் இல்லாவிட்டால் முடிவுகள் இல்லை. “

“உண்மை. “

“முடிவுகளில்லாவிட்டால்….?”

“நீங்களில்லை, நானில்லை, இக்கோட்டையுமில்லை. “

“இத்தனையும் தெரிந்தா இந்தப் புது மனிதரை இன்றைய இரவு நிகழ்ச்சிக்கு அழைக்க விரும்புகிறாய்?”

இந்தக் கடைசிக் கேள்வியைக் கோட்டைத் தலைவன் வீசியபோதுதான் இளையபல்லவனொருவன் எதிரே யிருக்கிறான் என்ற உணர்வடைந்த மஞ்சளழகி அவனை ஏறெடுத்து நோக்கினாள். அப்படி நோக்கிய அந்தக் கண்களில் சிறிது குழப்பம் இருந்ததை இளையபல்லவன் கவனித்தான். அந்த இருவர் சம்பாஷணையையும் கேட்க ஏதோ பெரு மர்மங்களடங்கிய ஒரு பிரதேசத்துக்குத் தான் வந்துவிட்ட உணர்ச்சி ஏற்பட்டதால், சித்தத்தில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்து சுழல, இளையபல்லவனும் ஓரளவு குழப்பமே அடைந்திருந்தான்.

அந்த இரவு நிகழ்ச்சியைப் பற்றித் தந்தையும் மகளும் பேசி முடித்த பிறகு நிலைமை தெளிவாவதற்குப் பதில் மர்மம் முன்னைவிட வலுத்து விட்டதைக் கவனித்த இளையபல்லவனின் இதயத்தில் அந்த நிகழ்ச்சி எதுவாயிருக்கும் என்பதை அறிய ஏற்பட்ட ஆவலுடன், அதில் எப்படியும் கலந்து கொண்டு விடுவது என்ற உறுதியும் ஏற்பட்டது. அவன் இதயத்திலோடிய எண்ணங்களைப் புரிந்துகொண்டதாலோ என்னவோ, மஞ்சளழகியின் கண்களிலிருந்து குழப்பம் மறைந்து இதழ்களில் புன்னகை அரும்பியது. உள்ளத்தே ஊடுருவிச்சென்ற சங்கடமான உணர்ச்சிகளைச் சமாளித்துக் கொள்ளச் சற்று வாய்விட்டுச் சிரிக்கவும் செய்தாள் அவள்.

மேலும் மௌனமாயிருப்பதால் பலன் இல்லை என்பதை உணர்ந்துகொண்ட இளையபல்லவன் கேட்டான், “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று.

“உங்கள் நிலையை எண்ணிச் சிரித்தேன்,” என்றாள் அவள், வேடிக்கையாக.

“ஏன்? என் நிலைக்கு என்ன?”

“நீங்களும் தந்தையும் ஏதோ பேசிக்கொண்டிருந்தீர்கள். குறுக்கே நான் வந்து குளறிவிட்டேன்,” என்றாள் அவள்.

இரவு நிகழ்ச்சியைப் பற்றிய பிரஸ்தாபத்தை ஒதுக்கி விட அவள் தீர்மானித்திருக்கிறாளென்பதையும், அதை முன்னிட்டே அதற்கு முற்பட்ட பகுதிக்குச் சம்பாஷணையை இழுத்துச் செல்கிறாளென்பதையும் அறிந்து கொண்ட இளையபல்லவனும் அவள் வழியே போகத் தொடங்கி, “உங்கள் குறுக்கீடு எனக்குத் தடையாயில்லை, உதவிதான்,” என்றான்.

“எப்படி உதவி?” என்று கேட்டாள் அவள்.

“உங்கள் தந்தையிடம் சில உதவிகளை நாடி வந்ததாகத் தெரிவித்தேன். “

“ஆம், சொன்னீர்கள். “

“பதிலில்லை என்றும் கூறினேன். “

“ஆம், அதையும் தெரிவித்தீர்கள். “

“தந்தை உதவுவார், உங்களைப் போன்ற வீரருக்கு எதையும் மறுக்க மாட்டார் என்று நீங்கள் தான் உறுதி கூறினீர்கள். “

“உண்மைதான், கூறினேன். “

“இதைவிடப் பெரிய உதவி என்ன வேண்டும்? உங்கள் குறுக்கீடு எனக்கு நன்மை விளைவித்திருக்கிறது. அது மட்டுமல்ல… ”

“பின்னும் என்ன?”

இளையபல்லவனின் விழிகள் திடமாக எழுந்து அவளை நோக்கின. “சிருஷ்டியின் சிறந்த அழகையும் நான் வாழ்வில் கண்டேன். ” என்று மெள்ளச் சொற்களை உதிர்த்தன உதடுகள். அவள் ஏதோ பதில் சொல்ல முயன்று பவள இதழ்களைத் திறந்தாள். அவளைப் பேசாமல் சைகையினாலேயே தடுத்த இளையபல்லவன் மேலும் பேசத் தொடங்கி, “உங்களைப் பாராட்டவோ, இல்லாததைச் சொல்லி முகஸ்துதி செய்து உங்கள் தந்தையிடம் நான் கோரியதைப் பெறவோ பேசப்படும் வீண் வார்த்தைகளல்ல இவை; உண்மையைத்தான் சொன்னேன்.

உங்களைப் பாராட்டாமலும், உங்கள் தந்தையிடம் கெஞ்சாமலும் நான் கோரிவந்த உதவியைப் பெற என்னால் முடியும். இது தற்புகழ்ச்சியென்று நினைக்க வேண்டாம். இந்த அக்ஷயமுனைக் கோட்டையைப் பற்றியும் உங்கள் தந்தையைப் பற்றியும் பூரணமாகத் தகவல்களறிந்தே இங்கு நான் வந்திருக்கிறேன். உங்கள் தந்தை இஷ்டப்பட்டால் என்னையும் என் மரக்கலத்தையும் என் மாலுமிகளையும் இன்றே அழித்து விட முடியும். ஆனால் கதை அத்துடன் முடியாது. என்னை அழிப்பது சுலபமல்ல. அப்படியே அழிப்பதாக வைத்துக் கொண்டாலும் பயங்கர விளைவுகள் ஏற்படும். ஒன்று மட்டும் நினைவு இருக்கட்டும். சரியான முன்னேற்பாடுகள் இல்லாமல் நான் சிங்கத்தின் வாய்க்குள் தலையிடுபவன் அல்ல… ”

இந்த இடத்தில் சற்று நிதானித்த இளையபல்லவன், கோட்டைத் தலைவனை உற்றுப் பார்த்துவிட்டு, மஞ்சளழகியை நோக்கிக் கேட்டான், “இந்த அக்ஷயமுனைத் துறையில் தனியாக இறங்கிச் செல்ல வேண்டாமென்று என் மாலுமிகள் தடுத்தார்கள். அதையும் மீறித்தான் நான் இறங்கினேன், தெரியுமா உங்களுக்கு?” என்று.

“அது துணிவைக் காட்டுகிறது. முன்னேற்பாட்டைக் காட்டவில்லை,” என்றாள் மஞ்சளழகி இகழ்ச்சியுடன்.

“கடற்கரைக் கொள்ளைக்காரர்கள் என்னை வெட்டிப் போட வந்தார்கள். கலிங்கத்துக் கப்பல் தங்கத்துடன் வருகிறது. கொள்ளையடிக்கலாம் என்றேன். அவர்கள் என் பக்கம் சேர்ந்து கொண்டார்கள்,” என்று சுட்டிக் காட்டினான் படைத் தலைவன்.

“அது தந்திரத்தைக் காட்டுகிறது. முன்னேற்பாட்டை அல்ல,” என்றாள் மஞ்சளழகி மீண்டும், இதழில் அரும்பி நின்ற இகழ்ச்சி குரலிலும் ஒலிபாய.

அடுத்த அஸ்திரத்தை மிகப் பலமாக வீசினான் இளையபல்லவன்: “கோட்டைத் தளத்திலிருந்து வீசப்பட்ட விஷ அம்பு என் மார்பில் தைத்தும் நான் இறக்காமல் அதைப் பிடுங்கி எறிந்துவிட்டு இங்கே வந்திருக்கிறேன், அது எதைக் காட்டுகிறது? மந்திரத்தையா?”

இளையபல்லவனுக்கு ஏதும் பதில் சொல்ல முடியாமல் விழித்தாள் மஞ்சளழகி.

திடீரெனத் தன் அங்கியை விலக்கி மார்பைத் திறந்து காட்டிய இளையபல்லவன், “இது எதைக் காட்டுகிறது தேவி, மந்திரத்தையா, முன்னேற்பாட்டையா?” என்றான் இகழ்ச்சி குரலில் பூரணமாகத் தொனிக்க.

மஞ்சளழகி மட்டுமல்ல, அவள் தந்தையும் படைத் தலைவன் மார்பைக் கண்டு பிரமித்தான். விஷ அம்பு அவனைக் கொல்லாத மர்மம் அவர்களுக்குத் தெள்ளெனப் புரிந்தது. அவன் மார்பை அணைத்து நின்ற யவனர் இரும்புக் கவசத்தை இமை கொட்டாமல் அவ்விருவரும் பார்த்தார்கள். அவன் அங்கிக்குள் மறைந்து கிடைந்த அந்த இரும்புக் கவசமே அவன் உயிரைக் காத்தது என்பதைப் புரிந்துகொண்ட தந்தையும் மகளும் அவன் தீர்க்காலோசனையையும் முன்னேற்பாட்டையும் கண்டு வியப்பின் எல்லையை எய்தி, அந்த வியப்பு முகங்களிலும் படர இளையபல்லவனை ஏறெடுத்து நோக்கினார்கள்.

உணர்ச்சிகளைப் பெரிதும் கட்டுப்படுத்தக்கூடிய அவ்விருவரையுமே மலைக்க வைத்தது பற்றி மகிழ்வெய்திய சோழர் படைத் தலைவன் மஞ்சளழகியை நோக்கி, “தேவி! வாழ்வில் பேராபத்துகளில் சிக்கி அனுபவப்பட்டவன் நான். ஆகையால் எப்பொழுதும் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்கிறேன். இந்தக் கவசம் போட்டுக் கொண்டு வந்த முன்னெச்சரிக்கையைப் பற்றி நீங்கள் வியப்படைய வேண்டாம். இன்னொரு முன்னேற்பாடு செய்திருக்கிறேன். அதைக் கேட்டால் நீங்கள் திகைத்துப் போவீர்கள். அது மட்டுமல்ல; இளையபல்லவன் அத்தனை முட்டாளல்ல என்பதையும் புரிந்துகொள்வீர்கள்,” என்றான்.

“அதையும் சொல்லுங்கள்,” என்று அவள் கேட்டாள் அச்சம் குரலில் லேசாகத் தொனிக்க.

“இப்படி வாருங்கள்,” என்று அவளை அந்த அறையில் ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று சில வார்த்தைகள் தான் சொன்னான் இளையபல்லவன். அவன் சொன்ன வார்த்தைகள் அவள் முகத்தில் மிதமிஞ்சிய கிலியைப் பரவ விட்டன.

“வேண்டாம், வேண்டாம். அது மட்டும் வேண்டாம்” என்று கதறினாள் மஞ்சளழகி.

“இன்றிரவு நிகழ்ச்சிக்கு?” இகழ்ச்சியுடன் எழுந்தது இளையபல்லவன் கேள்வி.

“அவசியம் வாருங்கள். அவசியம் வாருங்கள்,” என்று திகில் நிரம்பிய சொற்களை மிகுந்த பலவீனத்துடன் உதிர்த்தாள் மஞ்சளழகி.

Previous articleRead Kadal Pura Part 2 Ch8 |Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 2 Ch10 |Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here