Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch10 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch10 | Sandilyan | TamilNovel.in

95
0
Read Kadal Pura Part 3 Ch10 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch10 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch10 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 10 :கங்கதேவனின் விருப்பம்.

Read Kadal Pura Part 3 Ch10 | Sandilyan | TamilNovel.in

அக்ரமந்திரத்துக்குள் நுழைந்து உள்ளறை வாயிற்படியில் நின்ற கங்கதேவன், நினைவிழந்து கிடந்த பலவர்மனை விநாடிப் பொழுதில் அடையாளம் கண்டுபிடித்து விட்டதையும் அப்படி அடையாளம் தெரிந்துவிட்டதால் அவன் வாயிலிருந்து உதிர்த்த உக்கிரச் சொற்களையும் அந்தச் சொற்களைத் தொடர்ந்து தன்மீது திரும்பிய விபரீதப் பொருள் துலங்கிய பயங்கரப் பார்வையையும் கவனித்த இளையபல்லவன் மீண்டும் ஒரு புயல் உருவாகிறதென்பதைப் புரிந்துகொண்டாலும், தன் மனத்தில் ஓடிய எண்ணங்களை வெளிக்குக் காட்டாமல், “நாலைந்து நாட்களாகவே இப்படித் தான் படுத்திருக்கிறார்,” என்று கங்கதேவனிடம் கூறினான்.

கங்கதேவன் உடனே பதிலேதும் சொல்லாமல் அந்த உள்ளறையை ஒருமுறை துழாவிப் பார்த்தான். பிறகு பலவர்மன் தலைப்புறத்தில் உட்கார்ந்து அவனுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்த காஞ்சனாதேவியைக் கவனித்தான். கடைசியில் காஞ்சனாதேவியைச் சுட்டிக்காட்டி, “யார் இவள்?” என்று வினவினான்.

கங்கதேவன் பார்வையிலும் குரலிலும் இருந்த அவமரியாதையைக் கவனித்த போதும் உணர்ச்சிகளைப் பறக்கவிடாத இளையபல்லவன், “இவர்கள் தலைவரின் புதல்வி” என்று தன் குரலில் மரியாதையையும் ஓரளவு கண்டிப்பையும் காட்டிக் கூறினான்.

கங்கதேவனின் ஆழ்ந்த சிறுவிழிகள் பெரிதாகி விடுவன போல் ஒருமுறை பள்ளத்தில் உருண்டன. “என்னிடம் பொய் உதவாதென்று சொல்லவில்லை நான்?” என்று சீறினான் கங்கதேவன்.

“நான் பொய்யேதும் சொல்லவில்லை!” என்று அடக்கமாகவே வந்தது இளையபல்லவன் பதில்.

“பலவர்மனுக்குப் பெண் ஏது?” என்று மீண்டும் கேட்டான் கங்கதேவன்.

“சொந்தப் பெண் இல்லை. “

“இவள்?”

“வளர்ப்புப் பெண். “

“இவள் பெயர்?”

“உண்மைப் பெயர் எனக்குத் தெரியாது. ஆனால் அக்ஷய முனையில் இவளை மஞ்சளழகியென்று சொல்கிறார்கள். “

“மஞ்சளழகியென்று பேர் உண்டா ?”

“உண்மைப் பெயர் அல்ல, காரணப் பெயர். இவள் மேனி பொன்னைப்போல மஞ்சள் நிறம் பெற்றிருப்பதால் மஞ்சளழகி என்று அங்குள்ளவர்கள் அழைக்கிறார்கள். “

இதைக் கேட்டதும் கங்கதேவன் காஞ்சனாதேவி மீது தன் கண்களை ஓட்டினான். அவள் கையும் கழுத்தும் முகமும் அத்தனை மஞ்சளில்லை என்றாலும் பொன்னிறம் பெற்றுக் கண்ணைக் கவர்ந்ததைக் கண்ட கங்கதேவன் சித்தத்தில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்து உலாவின. அதன் விளைவாக அவன் வேறெந்தக் கேள்வியையும் கேட்காமல் அந்த அறையை விட்டு வெளியே கிளம்பினான். அவனைத் தொடர்ந்து தளத்துக்கு வந்த இளையபல்லவன் முகம் உணர்ச்சியற்று வெறும் கல்லாயிருந்தது.

அவன் நடையிலும் ஒரு கடுமை இருந்ததை மற்ற மாலுமிகள் மட்டுமின்றி அமீரும் கண்டியத்தேவனும்கூட கவனித்தார்கள். இளையபல்லவன் அக்ரமந்திரத்துக்குள் சென்ற சமயத்தில் மருந்துக் கலவை போடக் கீழறைக்குச் சென்றிருந்த சேந்தனும் அந்தச் சமயத்தில் உயரத் தளத்துக்கு வந்து இளையபல்லவனின் உணர்ச்சிகளின் இறுக்கத்தைப் புரிந்துகொண்டு அதற்குக் காரணம் புரியாமல் மிரண்ட விழிகளை மற்றவர் மீது ஓடவிட்டான்.

இளையபல்லவன் உக்கிரத்துக்குக் காரணம் சொல்லும் நிலையில் யாருமில்லையென்றாலும், அவனைக் கடும் சீற்றத்துக்குள்ளாக்கக் கூடிய சம்பவம் ஏதோ அக்ரமந்திரத்தில் நடந்திருக்கிறதென்பதை அமீர் மட்டும் தெளிவாகப் புரிந்து கொண்டானாகையால், கங்கதேவனைத் தொடர்ந்து நடந்த இளையபல்லவனைப் பின்பற்றித் தானும் நடந்து சென்றான். கடல்புறாவின் தளத்தை மீண்டும் இருமுறைகள் சுற்றிப் பார்த்த கங்கதேவன் தன்னைத் தொடர்ந்து வந்த இளைய பல்லவனை நோக்கித் திடீரெனத் திரும்பி, “இதில் ஏதோ சூட்சுமங்கள், யந்திர வசதிகள் இருப்பதாகச் சொன்னாயே? என்று வினவினான்.
“ஆம். இருக்கின்றன தலைவரே,” என்றான் இளைய பல்லவன் வரட்டுக் குரலில்.

“காட்டு பார்க்கிறேன்,” என்று கங்கதேவன் கேட்டான் இளையபல்லவனை.

இந்தச் சொற்களைக் கேட்டதும் அமீர் சற்று அயர்ந்து விட்டானே தவிர, சிறிதும் அயராத இளையபல்லவன், “தளத்தில் நின்றபடி சூட்சுமங்களை நீங்கள் அறிய முடியாது தலைவரே, படகில் கடல்புறாவிலிருந்து சிறிது தூரம் தள்ளி நின்றால் இதன் சூட்சுமங்களைப் பார்க்க முடியும், புரிந்து கொள்ளவும் முடியும்” என்றான்.

“ஏனப்படி?” என்று வினவினான் கங்கதேவன்.

“இருக்கிற சூட்சுமங்கள் இறக்கைகளுக்கு அடியில் இருக்கின்றன. தளத்திலிருந்து உருளைகளைத் திருப்பினால் இறக்கைகள் எழுந்து விரியும். அவற்றின் அடியிலிருக்கும் யந்திர வசதிகளை மேலிருந்து நீங்கள் எப்படிப் பார்க்க முடியும்?” என்று பதிலுக்கு இளையபல்லவன் கேட்டு வைத்தான்.

கங்கதேவன் அதைப்பற்றிப் பிறகு சிரத்தை ஏதும் காட்ட வில்லை. மீண்டும் யோசனையில் ஆழ்ந்து தனது பெரும் மீசையைத் தடவி விட்டுக்கொண்டான். அடுத்தபடி அவன் உதடுகளில் பழைய மந்தகாசம் நிலவியது. “சரி கங்கதேவா! உன் மரக்கலங்களை இனி நீ துறைமுகத்துக்குள் கொண்டு வந்துவிடலாம். போரில் ஏதாவது மரக்கலங்கள் சேதப் பட்டிருந்தால் பழுதும் பார்க்கலாம். உனக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தருகிறேன். என்ன வேண்டும் உனக்கு?” என்று கேட்டான் இளையபல்லவன் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு.

அவன் உணர்ச்சிகளின் திடீர் மாறுதல், திடீரெனத் தோள் மீது கையைப் போட்டு அவன் காட்டிய நேசப்பான்மை அனைத்தும் நல்லதற்கல்ல என்பதைப் புரிந்துகொண்ட இளையபல்லவன், கங்கதேவன் போலவே நடிக்கத் தொடங்கி, “தலைவர் உத்தரவுப்படி எதை வேண்டுமானாலும் செய்கிறேன். முதலில் சோழர் மரக்கலங்கள் இரண்டைத்தான் பழுது பார்க்க வேண்டும். அவைதான் போரில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைத் துறைமுகக் கரையில் உடனே இழுக்க அனுமதி வேண்டும்” என்றான்.

“அனுமதி கொடுக்கப்பட்டது. ” இதைச் சொல்லி இளையபல்லவனின் முதுகை ஆதரவுடன் தட்டினான் கங்கதேவன்.

“தலைவர் அன்பு நிகரற்றது” என்று பணிவைக் காட்டினான் இளையபல்லவன்.

“சரி, அடுத்தபடி கடல்புறாவை என்ன செய்ய உத்தேசம்?”

“தங்கள் நான்கு கப்பல்களும், பழுது பார்க்க வேண்டிய சோழர் கப்பல்கள் இரண்டும் ஆ க ஆறு கப்பல்கள் தான் துறைமுகத்தில் நிற்கமுடியும். சோழர் கப்பல்கள் பழுது பார்க்கப்படும் வரை கடல்புறா துறைமுக வாயிலிலேயே நிற்பது நலமல்லவா?” என்று இளையபல்லவன் தனது கருத்தையும் சொல்லி, கங்கதேவனை யோசனை கேட்பது போல் கேள்வியாகவும் வசனத்தைத் தொடுத்தான்.
கங்கதேவன் தனது கையை இளையபல்லவன் தோளி லிருந்து எடுத்துவிட்டுத் திரும்பி அவனை நோக்கினான்.

“உனக்குக் கடற்பழக்கம் நிரம்ப இருக்கிறது” என்று சிலாகிக்கவும் செய்தான்.

இளையபல்லவன் புன்முறுவல் செய்துவிட்டுச் சொன்னான், “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று தமிழர் சொல்வார்கள், கடற்பழக்கமும் அப்படிப்பட்டது தான்” என்று.

“உண்மை, உண்மை!” உற்சாகத்துடன் உதிர்ந்தன கங்கதேவன் சொற்கள்.

“ஆகவே கடலில் சிறு வயது முதல் பழகிவிட்டவர்களுக்கு எங்கு சென்றாலும் துறைமுக அமைப்பு, அங்குள்ள இடவசதி இவற்றைக் கவனிப்பது வழக்கமாகிவிடுகிறது” என்று தான் பிறவி மாலுமியென்ற ஒரு பெரும் பொய்யைச் சர்வ சாதாரணமாகச் சொன்னான் இளையபல்லவன்.

இதற்குப் பிறகு கங்கதேவன் போக்கு அடியோடு மாறி விட்டது. அவன் முகம் திடீரென மலர்ச்சி பெற்றது. “கங்கதேவா! நானும் உன்னைப் போலத்தான் சிறு வயது முதல் கடலோடுகிறேன். எனக்கு நிலத்தைக் கண்டாலே பிடிப்பது கிடையாது. கடலோடுவதிலும் போராடுவதிலுமே என் இன்பமெல்லாம் இருக்கிறது. நம்மிருவர் மனப்போக்கு, வாழ்க்கை எல்லாம் ஒரே விதம். பெயரிலும் பொருத்தம் இருக்கிறது. இனி இந்தக் கடல் மோகினி சம்பந்தப்பட்டவரை நீ வேறு நான் வேறு அல்ல. நீ இடும் கட்டளைகள் என் கட்டளைகளைப் போல நிறைவேற்றப்படும். ஆனால் நீ ஒருசில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்றான் அன்பு ததும்பும் குரலில்.

“சொல்லுங்கள் தலைவரே” என்றான் சோழர் படைத் தலைவன்.

“எனக்கும் கடற்போர் தெரியும். “

“சந்தேகமென்ன?”

“கப்பல்கள் எந்த இடத்தில் எப்படி நிறுத்தப்பட்டால் எனக்குப் பாதகம் என்பதும் தெரியும். “

“இது தெரியாதிருக்க முடியுமா?”

“இதுவரை நீ தெரிந்து கொண்டால் போதும். தவிர இன்னொரு விஷயம். “

“என்ன தலைவரே!”

“பலவர்மனை என்ன செய்யப் போகிறாய்?”

“கடல் மோகினியில் இறக்கி, சிகிச்சை செய்ய வேண்டும். அது என் கடமை” என்று இளையபல்லவன் கூறி, கங்கதேவனை ஏறெடுத்து நோக்கினான்.

தயக்கமின்றி மிகுந்த அன்புடன் வந்தது கங்கதேவன் சொற்கள்.
“உன் கடமை மட்டுமென்ன, என் கடமையும் அதுதான். பலவர்மனைக் கொல்ல எனக்குக் காரணமிருக்கிறது. ஆனால் தென் கலிங்க மன்னருக்கு மரக்கலம் கொண்டு செல்லும் இவனைக் கொல்வது அரசத் துரோகமாகும். ஆகவே இம்முறை இவனைத் தப்ப விடுகிறேன். கடல் மோகினியில் இவனுக்குத் தீங்கு ஏதும் நேரிடாது. என் விடுதியிலேயே இவனை வைத்து சிகிச்சை செய்யலாம். மருத்துவர்கள்கூட இருக்கிறார்கள்” என்றான் கங்கதேவன்.

“மருத்துவர் தேவையில்லை. என்னிடம் ஒருவன் இருக்கிறான்” என்று பதில் கூறினான் இளையபல்லவன்.

“நல்லது, நல்லது, அவனைக்கொண்டே சிகிச்சை செய்து கொள்” என்ற கங்கதேவன், “கங்கதேவா! நீ துறைமுகத்துக்குள் உன் மரக்கலங்களை இன்று மாலை கொண்டு வந்துவிடலாம். எனது நான்கு கப்பல்களையும் சற்று விலக்கி, சோழர் மரக் கலங்களுக்கு வழிவிடப் பிற்பகல் வரை பிடிக்கும்” என்று கூறிவிட்டுப் புறப்படச் சித்தமானான்.

அவன் புறப்பட முற்பட்டு விட்டதைக் குறிப்பாலுணர்ந்த கடல் புறாவின் மாலுமிகள் வெகு சீக்கிரம் நூலேணியைத் தொங்கவிட்டு இழுத்துப் பார்த்துச் சரி செய்தார்கள். அத்துடன் இளையபல்லவனிடம் விடைபெற்றுக்கொண்டு நூலேணியில் இறங்க முற்பட்ட கங்கதேவன், “கங்கதேவா!” என்று இளையபல்லவனை அருகில் வரும்படி அழைத்தான். அருகில் வந்த இளையபல்லவனிடம் அவனுக்கு மட்டுமே கேட்கும்படி சொன்னான்: “இதோ பார் கங்கதேவா! யாருக்கும் நான் ஆயுளில் அளிக்காத வசதிகளை உனக்கு அளிக்கிறேன்” என்று.
அந்த முன்னுரைக்குக் காரணத்தை அறியாத இளைய பல்லவன், “ஆம், தலைவரே! அதற்கு நான் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறேன்” என்று கூறினான்.

கங்கதேவன் புன்முறுவல் செய்து ரகசியமாகக் கேட்டான், “கடமைப்பட்டிருப்பதை எப்படிக் காட்ட உத்தேசம்?” என்று.

இளையபல்லவன் மூளை துரிதமாக வேலை செய்தது. “எப்படிக் காட்டச் சொன்னாலும் காட்டுகிறேன்” என்று உதடுகள் உணர்ச்சியின்றிச் சொற்களை உதிர்த்தன.

“எதைச் செய்யச் சொன்னாலும் செய்வாயா?” கங்க தேவன் கேள்வி ஆவலுடன் வந்தது.

“முடிந்ததைக் கண்டிப்பாய்ச் செய்வேன்” என்று பதில் சொன்ன இளையபல்லவன், “என்ன செய்ய வேண்டும் உத்தரவிடுங்கள்” என்று கேட்கவும் செய்தான்.

“சமயத்தில் உத்தரவு வரும் தேவா! சமயத்தில் வரும்” என்று கூறிவிட்டு நூலேணியில் இறங்கிச் சென்று விட்டான் கங்கதேவன்.

அடுத்த சில விநாடிகளில் கங்கதேவன் படகு கடல்நீரைக் கிழித்துக்கொண்டு துறைமுகத்தை நோக்கி வெகு வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. அந்தப் படகு செல்வதைப் பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் தளத்திலேயே நின்றுகொண்டிருந் தான் இளையபல்லவன். அமீர் படைத்தலைவனை அணுகி, “படைத்தலைவரே! இவன் எப்படி?” என்று வினவினான்.
“நான் இதுவரை சந்தித்த எதிரிகளுள் மிகவும் அபாய மானவன்” என்று லேசாகக் கவலை பாய்ந்த குரலில் பதில் வந்தது இளையபல்லவனிடமிருந்து.

“பலவர்மனை விடவா?” என்ற அமீரின் கேள்வியில் வியப்பு பிரதிபலித்தது.

“பலவர்மனை விடப் பன்மடங்கு அபாயமானவன்” என்றான் இளையபல்லவன்.

“வெறும் முரடனாயிருக்கிறானே பார்ப்பதற்கு?”

“ஆம். “

“பண்பாடுகூட இருப்பதாகத் தெரியவில்லை. “

“அந்தச் சொல்லுக்கே அங்கு இடமில்லை. “

“அப்பேர்ப்பட்டவன்….” வாசகத்தை அமீர் முடிக்க வில்லை .

இளையபல்லவனே இடைமறித்து முடித்தான். “அப்பேர்ப் பட்டவன் எப்படிப் புத்திசாலியாயிருக்க முடியுமென்று கேட்கிறாய் அமீர். எனக்கும் வியப்பாகத்தான் இருக்கிறது. இவன் முரடன், பண்பே அறியாதவன். இருப்பினும் கூரிய புத்தி இருக்கிறது. நமது எண்ணங்களை நிமிட நேரத்தில் அலசிவிடுகிறான். இவனிடம் நமது திறமை முழுவதையும் செலுத்த வேண்டிய அவசியமிருக்கிறது. ஆகவே எச்சரிக்கை யுடன் இரு அமீர். மற்றவர்களையும் எச்சரிக்கைப்படுத்தி வை. சீக்கிரம் அவனிடமிருந்து நான் செய்தி எதிர்பார்க்கிறேன். “

அமீரின் முகத்தில் கவலை தெரிந்தது. “என்ன செய்தி எதிர்பார்க்கிறீர்கள்?” என்று வினவினான்.

“என்னைச் சீக்கிரம் விருந்துக்கழைப்பான். “

“எதற்கு விஷம் வைத்துக் கொல்லவா?”

“அல்ல. என்னைத் திருப்தி செய்ய. “

“எதற்கு உங்களைத் திருப்தி செய்ய வேண்டும்?”

“ஏதோ ஒன்றை என்னிடம் எதிர்பார்க்கிறான் அவன். “

“என்ன என்று ஊகிக்க முடியுமா உங்களால்!”

“ஓரளவு ஊகிக்க முடியும். முழுவதும் ஊகிக்க முடிய வில்லை . “

“அவன் எதிர்பார்ப்பது?”

இளையபல்லவன் பதில் சொன்னான். அந்தப் பதில் அமீரை அப்படியே தூக்கி வாரிப் போட்டது. தங்கள் அபாயம் உச்ச நிலைக்குச் செல்வதை உணர்ந்து கொண்டான் அமீர். அந்த உணர்வால் பெரும் கோபமும் அவன் முகத்தில் துளிர்விட்டது. “விருந்துக்கு உங்களுடன் நானும் வருகிறேன்” என்றான் அமீர் உக்கிரத்துடன்.
“எதற்கு?” என்று வினவினான் இளையபல்லவன்.

“அந்தப் பாதகனைக் கொல்வதற்கு?” என்றான் அமீர். அவன் சொற்கள் நெருப்புத் துண்டங்களென உதிர்ந்தன. அவன் வலது கையும் இடையிலிருந்த குறுவாளொன்றைப் பயங்கரமாகத் தடவியது.

Previous articleRead Kadal Pura Part 3 Ch9 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch11 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here