Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch11 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch11 | Sandilyan | TamilNovel.in

157
0
Read Kadal Pura Part 3 Ch11 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch11 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch11 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 11 : காதலெனும் உறவு.

Read Kadal Pura Part 3 Ch11 | Sandilyan | TamilNovel.in

கலிங்கத்தின் கிழக்குத் திசை கடற்படைத் தலைவனான கங்கதேவன் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறானென்பதை கருணாகர பல்லவன் எடுத்துச் சொன்னதும் மிதமிஞ்சிய கோபத்தின் வசப்பட்ட அமீர் தன் இடையிலுள்ள குறு வாளைப் பயங்கரமாக ஒரு முறைக்கு இருமுறை தடவியதன்றி கங்கதேவன் துணிச்சலை நினைத்து ஓரளவு ஆச்சரியம் கொண்டான். கங்கதேவன் விருப்பத்தை ஊகித்துக்கொண்ட பிறகு அவனை இளையபல்லவன் கொல்லாமல் உயிருடன் கடல்புறாவிலிருந்து அனுப்பி வைத்ததை எண்ணிப் பார்த்ததால் அமீரின் வியப்பு ஆயிர மடங்கு அதிகமாயிற்று.

கயவனான கங்கதேவன் தன்னிடமிருந்து எதிர்பார்ப்பது காஞ்சனாதேவியை என்று இளையபல்லவன் உணர்ச்சிகளைப் பெரிதும் அடக்கித் தன்னைக் கல்லாக்கிக் கொண்டு சொன்னதைக் கேட்டதும் அமீர் ஒரு விநாடி திகைத்தே போனான். இளையபல்லவன் தன் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு உணர்ச்சிகள் அவன் முகத்தில் தெரிய முற்பட்ட தற்குக் காரணம், கங்கதேவனின் அந்த விபரீத விருப்பமே என்பதை அறிந்து கொண்ட அமீர் இளையபல்லவனுடன் தானும் கரை சென்று விருந்தருந்தும் பாவனையில் கங்க தேவனைக் கொன்றுவிடத் தீர்மானித்தான்.

அவன் தீர்மானம் நன்றாகப் புரிந்தது இளையபல்லவ னுக்கு. காஞ்சனாதேவிமீது காமக்கண்ணை ஓட்டிய அந்தக் கணமே கங்கதேவனைக் கொன்றுவிடத் தன் கரங்கள் துடித்தனவானாலும் தான் மேற்கொண்டிருக்கும் பெரும் பணியும் தனது மரக்கலங்களின் நிலையையும், சுமார் இருநூறு மாலுமிகளின் உயிர்களையும் உத்தேசித்துத் தன் பொறுமையின் எல்லையைத் தொட வேண்டிய அவசியத்தை உணர்ந்து அதை முன்னிட்டுத் தன்னை அந்தச் சமயத்தில் அடக்கிக் கொண்ட இளையபல்லவன் அமீருக்கும் பொறுமையையே போதித்தான். “அமீர், கோபத்தைக் காட்ட இது சமயமல்ல. தந்திரத்துக்கும் பொறுமைக்குமே நேரம் இது. ” என்று சுட்டிக் காட்டிய கருணாகர பல்லவனை ஏறெடுத்து நோக்கிய அமீர் கேட்டான்: “உங்கள் ஊகம் சரிதானா?” என்று.

“பொறுத்துப் பார்! இன்று இரவில் விருந்தில் என்ன நடக்கிறது கவனி,” என்று இளையபல்லவன் கூறினான்.

“கங்கதேவன் உணர்ச்சிகளை அத்தனை பகிரங்கமாகக் காட்டினானா?” என்று வினவினான் மீண்டும் அமீர்.

“ஆம் அமீர்! அக்ரமந்திரத்தின் உள்ளறையில் படுத்திருந்த பலவர்மனைக் கண்டதும் முதலில் வெகுண்டான். பிறகு அவன் கண்கள் காஞ்சனாதேவியின் மீதே நிலைத்தன. அவளை விழுங்கிவிடுவதுபோல் பார்த்தான். ஒரு மனிதனின் பார்வையிலிருந்து அவன் எண்ணங்களை எடை போடுவது பிரமாதமல்ல. அந்த விந்தையில். “

“நீங்கள் நிகரற்றவர் படைத்தலைவரே! இருப்பினும் எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. கங்கதேவன் விருப்பம் அதுவா யிருந்தால் நமக்கு அத்தனை வசதிகளைச் செய்து கொடுப் பானேன்? மரக்கலங்களைப் பழுது பார்க்க அனுமதிக்கிறான், கடல் புறாவை துறைமுக வாயிலை அடைத்து வைக்கவும் ஒப்புக்கொள்கிறான். இதெல்லாம் சந்தேகத்தை அளிக்க வில்லையா உங்களுக்கு? முக்கியக் கடல்புறாவை துறைமுகத்தின் வெளியில் நிற்க அனுமதிப்பது வியப்பா யில்லையா?” என்று வினவினான் அமீர்.

“வியப்பாகத்தான் இருக்கிறது அமீர்! அதனால்தான் இவனைப்பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று சொல்கிறேன்” என்றான் இளையபல்லவன்.

கடல்புறா போன்ற பெரும் கப்பல் துறைமுகத்துக்குக் குறுக்கே நின்று அடைத்துவிட்டால் அதை இயக்கும் தலைவன் கையில் இந்தக் கடல் மோகினி இருக்குமென்பது அவனுக்குத் தெரியாதா?” என்று மீண்டும் வினவினான் அமீர்.

“நன்றாகத் தெரியும்” என்றான் இளையபல்லவன்.

“அப்படியானால் ஏன் ஒப்புக்கொண்டான் உங்கள் ஏற்பாட்டுக்கு?”

“சொந்த ஆசையை உத்தேசித்து இருக்கலாம். “

“காஞ்சனாதேவியை உத்தேசித்தா?”

“அப்படித்தானிருக்கும். “

இந்த வழிகளில்தான் கங்கதேவன் எண்ணங்களை எடை போட்டான் இளையபல்லவன். ஆனால் அன்று பகலிலேயே தான் எடை போட்டது எத்தனை தவறானது என்பதையும் புரிந்து கொண்டான். கங்கதேவன் காஞ்சனாதேவியின் கட்டழகில் மனத்தைப் பறிகொடுத்திருந்தாலும் தன்னையும் தன்வசமுள்ள கடல் மோகினியையும் காப்பாற்றுவதில் எத்தனை சாமர்த்தியமாக நடந்துகொண்டிருக்கிறான் என்பதைக் கவனித்ததும் கடற்போரில் யாருக்கும் சளைக்காத ஒரு திறமைசாலியிடம் தான் சிக்கிக்கொண்டிருப்பதை இளையபல்லவன் உணர்ந்தான்.

கங்கதேவன் தன் வாக்கிலிருந்து இம்மிகூடப் பிசக வில்லையே தவிர தனது காவலையும் இம்மிகூடத் தளர்த்த வில்லையென்பதை, துறைமுக மரக்கலங்கள் நகர்த்தப்பட்ட முறையிலிருந்தே இளையபல்லவன் ஊகித்துக் கொண்டான். துறைமுகத்திலிருந்த கலிங்கத்தின் பெரும் மரக்கலங்கள் நான்கும் கங்கதேவன் படகுத் துறையை அடைந்த அரை ஜாமத்திற்குப் பிறகு அசையத் தொடங்கிவிட்டதைக் கடல் புறாவின் தளத்திலிருந்து கவனித்தான் சோழர் படைத் தலைவன்.

படகில் சென்ற கங்கதேவன் கரையை அடைந்ததுமே சட்டென்று கரையில் நின்றதையும் அங்கிருந்த சிலரைக் கூப்பிட்டு ஏதோ சொன்னதையும் கவனித்த இளைய பல்லவன் அடுத்து நடப்பதைக் கவனிக்கும்படி அமீருக்கும் கண்டியத்தேவனுக்கும் உத்தரவிட்டுக் காஞ்சனாதேவி இருந்த அக்ரமந்திரத்தை நோக்கி நடந்தான். கங்கதேவன் வந்து போனதன் விளைவாகப் பெரும் மனச்சங்கடத்துடன் உட்கார்ந்திருந்த காஞ்சனாதேவியைக் கண்டதும், “காஞ்சனா! கவலை எதற்கு நானிருக்கும்போது உனக்கு?” என்று ஆதரவு தரும் சொற்களைக் கொட்டவும் செய்தான் படைத் தலைவன்.

சொற்களைக் கொட்டி ஆதரவு தருவதாயிருந்தாலும் இளையபல்லவனின் குரலில் ஆதரவும் உறுதியுமில்லா திருந்ததைக் கவனித்த காஞ்சனாதேவி தன் கருவிழிகளை அவன் மீது திருப்பினாள். அந்த அழகிய விழிகளில் அந்தச் சந்தர்ப்பத்தில் அச்சமிருந்தது. முகம்கூடச் சற்று சிவந்திருந்தது உணர்ச்சி மிகுதியால். அவள் செவ்விய உதடுகள் மெல்ல அசைந்தன. “கவலை உண்மையில் தேவையில்லையா?” என்று உதிர்ந்த சொற்களில் கவலை மிதமிஞ்சிக் கிடந்தது.

இளையபல்லவன் பதில் சொல்ல முடியாமல் சங்கடப் பட்டான். கவலைக்குக் காரணம் நிரம்ப இருக்கிறதென்று அவன் உணர்ந்திருந்தபடியாலும், அவளிடம் பொய் சொல்ல இஷ்டப்படாததாலும், “கவலைக்கிடமான நிலைதான். ஆனால் இதைவிட மோசமான நிலைமையைச் சமாளித்தது இல்லையா நான்?” என்று வினவினான் அவன்.

காஞ்சனாதேவி பெருமூச்சு விட்டாள், “ஆம், சமாளித் திருக்கிறீர்கள். பாலூர்ப் பெருந்துறையின் பிரமுகர் வீதியையும் கடற்கரை வாயிலையும் நான் எப்படி மறக்க முடியும்?” என்று சொன்ன அவள் உதடுகள் உணர்ச்சியால் மடிந்தன.

பஞ்சணையில் உட்கார்ந்திருந்த அந்தப் பைங்கிளியின் அருகே சென்று அவள் தோள் மீது தன் இடக்கையை ஆதரவுடன் வைத்த படைத்தலைவன் அவள் தோளை வலிக்கும்படி சற்று இறுக்கிப் பிடித்தான். அவன் வலது கை அவளது குழல்களை மெல்ல வருடியது. அவள் அழகிய முகம் அவன் மார்புக்கருகில் இருந்தது. சற்று நெருங்கினால் அந்தக் கொவ்வை இதழ்கள் தன் மார்பு அங்கியில் புதையும் என்பதைப் புரிந்துகொண்டான் இளையபல்லவன். அந்த நிலையில் ஆபத்து உணர்ச்சி மறைய ஆசை உணர்ச்சி மேலோங்கக் கேட்டான்: “ஏன் காஞ்சனா! வேறு இடங்கள் உனக்கு நினைவில்லையா?” என்று.
காஞ்சனாதேவிக்கு நினைப்பு இருக்கத்தான் செய்தது. ஆயினும் அவள் அதை ஒப்புக்கொள்ள மறுத்தாள். தன் தலையைச் சற்றுத் திருப்பிப் பின்னால் மயக்கமாகப் படுத்திருந்த பலவர்மனை நோக்கினாள். மீண்டும் இளையபல்லவனிருந்த பக்கம் திரும்பி, “வேறு எந்த இடத்தைக் குறிப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டாள் மிக மெதுவாக.

“இடத்தையல்ல, இடங்களை என்று சொன்னேன்” என்றான் இளையபல்லவன் ரகசியமாக.

“உம் உம். சரி! இடங்கள், எந்த இடங்கள்” என்று குழைந்தது காஞ்சனாதேவியின் குரல்.

“முதலில் கோதாவரிப் புனல். அங்கு… ”

‘அங்கு. “

“புனலாடினாய். என்னைத்தான் மறைவில் இருத்தி விட்டாய். “

“உம். “

“பிறகு அதற்கடுத்த புஷ்பச்சோலை. அதன் வழியாக நடந்து வந்தோம். அப்புறம்..”

“சொல்வதுதானே?”

“கோதாவரிக் கரை தோப்புக் குடிசை… அதன்– அதன் உட்புறம்… ”
காஞ்சனாதேவி மௌனம் சாதித்தாள். பேச முடிய வில்லை அவளால். அவள் தலை மெள்ள அவன் மார்பில் சாய்ந்தது. அவன் அவளருகில் உட்கார்ந்தான் பஞ்சணை முகப்பில். பின்னால் கிடந்த பலவர்மனைப் பற்றிய கவலை அந்தச் சமயத்தில் அவ்விருவருக்கும் இல்லை. அவர்கள் இருவரும் எங்கோ பழைய சம்பவங்கள் எழுப்பிய காற்றில் பறந்து கொண்டிருந்தார்கள். அவள் பக்கத்திலமர்ந்த இளைய பல்லவன் இடதுகை அவள் இடையைச் சுற்றி வளைத்து அருகில் இழுத்தது. முகம் குனிந்து அவள் காதுக்கருகில் வந்தது. “சிறு வணிகர் வீதி காஞ்சனா” என்றான் அவள் காதில் கருணாகர பல்லவன்.

“உம். “

“அந்தச் சிறு வணிகர் வீதி- அங்கு. “

“அங்குதான் – அமீர்..”

“வீடு இருக்கிறது.. இருந்தது, அந்த விடுதியில். “

“உம். “

“இரவில் நிலா!”

“சாளரத்தருகே கொடிகள் – பூங்கொடிகள். “

“ஊம்… ஊம். “

“அதனூடே புகுந்த பால் இரவு. “
காஞ்சனாதேவி பதில் சொல்லவில்லை. பதில் வராத காரணத்தைப் புரிந்துகொண்ட இளையபல்லவன் மேலும் ஓதினான் அவள் காதுகளில், “கட்டிலில் ஒரு பெண்புறாஅதை நோக்கிச் சாளரத்தின் மூலம் புகுந்தான் ஒருவன்… ” என்று.

காஞ்சனாதேவியின் கை இளையபல்லவன் கையுடன் இழைந்தது. வாய் பேச மறுத்ததைக் கைகள் பேசின.

“அங்குதான் காஞ்சனா-” என்று கடைசியாகச் சொல்லிப் பெருமூச்சு விட்டான் இளையபல்லவன்.

காஞ்சனாதேவி மறுபுறம் திரும்பி அவனை நன்றாகப் பார்த்தாள்; “அங்குதான்… என்ன?” என்றும் கேட்டாள்.

“எனக்கு ஞானோதயம் ஏற்பட்டது” என்றான் இளைய பல்லவன்.

“உங்களுக்கா! ஞானோதயமா?”

“வீட்டுப் புறா, காட்டுப் புறா, கடல் புறா என்று அங்குதான் சொன்னேன், நினைவிருக்கிறதா உனக்கு?”

“இருக்கிறது. “

“இந்த மரக்கலத்தை அதனால்தான்… ”

“கடல் புறாவென்று அழைக்கிறீர்கள். அதை அன்றே புரிந்துகொண்டேன். “
“என்று?”

“நீங்கள் என்னை மீட்டு இங்கு கொண்டு வந்த அன்று. “

“நல்லது காஞ்சனா. இப்பொழுது தெரிகிறதா உனக்கு என் மன உறுதி?” என்று கேட்டான் இளையபல்லவன்.

கடாரத்துக் கட்டழகி காஞ்சனாதேவி அவனை மீண்டும் தன் விழிகளால் அளந்தாள். “புரிகிறது படைத் தலைவரே. ஆனால் ஒரு சந்தேகமும் இருக்கிறது” என்றாள் பிறகு.

இளையபல்லவன் விழிகள் அவள் விழிகளுடன் கலந்தன. இடது கை இடையைக் கன்னிச் சிவக்கப் பிடித்தது. “என்ன சந்தேகம்?” என்று வினவினான்.

“நாம் பிரிந்து ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிறது… ” என்று நீட்டினாள் காஞ்சனாதேவி.

“ஆம்,” என்று தலையை ஆட்டினான் இளைய பல்லவன்.

“இந்த ஓர் ஆண்டில் நீங்கள் பல நாடுகளைப் பார்த் திருப்பீர்கள்” என்றாள் அவள்.

“பார்த்திருக்கிறேன். “

“நாடுகளை மட்டுந்தானா?”
“வேறெதைப் பார்த்திருப்பேன்?”

“பல பெண்களைப் பார்த்திருப்பீர்கள். “

“பார்த்திருப்பேன். “

“பார்த்தது மட்டும் தானா?”

“வேறென்ன?”

“கொள்ளைக்காரராக இருந்திருக்கிறீர்களே, கொள்ளைக் காரர் நடத்தை … ”

இளையபல்லவன் புன்முறுவல் கொண்டான். “அப்படி என்மீது சந்தேகம் ஏற்படுகிறதா உனக்கு?” என்று வினவினான்.

“சந்தேகமில்லை. ” என்று இழுத்துப் பேசினாள் காஞ்சனா தேவி.

“ஏன் இழுக்கிறாய்? திட்டமாகத்தான் சொல்லேன்” என்றான் இளையபல்லவன்.

“சந்தர்ப்பங்கள் மனிதர்களைக் கெடுக்கின்றன” என்றாள் காஞ்சனாதேவி சற்றுத் திடமான குரலில்.

இதைக்கேட்ட இளையபல்லவன் பஞ்சணை முகப்பி லிருந்து எழுந்து அவளெதிரே நின்று சற்று முரட்டுத் தனமாகவே கூறினான், “சந்தர்ப்பங்களுக்கு இடங்கொடாத வீரர்களும் உண்டு காஞ்சனா!” என்று.
அந்தப் பதிலில் புதைந்து கிடந்த ஆவேசம், முரட்டுத்தனம் இரண்டும் பெரும் திருப்தியைத் தந்தது காஞ்சனாதேவிக்கு. அந்தத் திருப்தியின் விளைவாகச் சற்றுக் குழைந்தது அவள் குரல். “உண்மையாக… ” என்று ஏதோ ஆரம்பித்தாள்.

“உண்மையாக! கேள் காஞ்சனா” என்று வந்தது இளைய பல்லவன் பதில்.

“நீங்கள் எந்தப் பெண்ணையும் இந்த ஓர் ஆண்டில் சந்தித்ததில்லையா? பலதரப்பட்ட அழகிகள் உள்ள இந்தக் கிழக்கு நாடுகளில் உங்களைப் போன்ற கொள்ளைக்காரரை மயக்கும் அழகி ஒருத்திகூட கிடைக்கவில்லையா?”

இதைக்கேட்ட இளையபல்லவன் மனத்தில் திகில் பரவியது. அந்தக் கேள்வியைத் தொடர்ந்து மஞ்சளழகி அவன் இதயத்தில் எழுந்து நகைத்தாள். அவள் கால்கள் கரை அலையோரத்தில் நின்றுகொண்டிருந்தன. அந்த அழகிய கால்களை அலைகள் தடவித் தடவிச் சென்றன. இளைய பல்லவன் இதயத்தில் கடல் மோகினிக்குப் பதில் எழுந்தாள் அக்ஷயமுனை மோகினி. அவளை இதயத்திலிருந்து அழிக்க முயன்று ஒருமுறை அந்த அறையின் வாயிலுக்குச் சென்று திரும்பினான் இளையபல்லவன்.

அவன் சங்கடத்தைக் கவனித்த காஞ்சனாதேவியின் இதயத்தில் சந்தேகம் பெரிதும் கொழுந்துவிடத் துவங்கியது. “சரியாகப் போய்விட்டது. நான் நினைத்தது சரியாகப் போய்விட்டது” என்றாள் காஞ்சனாதேவி கடுமையான குரலில்.

“என்ன சரியாகப் போய்விட்டது. “
“யாரோ ஓர் அழகி உங்கள் வாழ்க்கையில் புகுந்திருக் கிறாள் என்பது. “

“பலர் புகலாம். ” கருணாகர பல்லவன் காரணமின்றி உறுமினான்.

“பன்மையிலிருக்கிறதா விவகாரம்?”

“இதில் விவகாரம் ஏதுமில்லை. ஒரு மனிதன் வாழ்வில் தாய் தலையிடுகிறாள், சகோதரிகள் தலையிடுகிறார்கள், அந்தச் சந்தர்ப்பங்கள் வேறு, உறவுகள் வேறு. ஆனால் ஒரு குறிப்பிட்ட உறவில்… ”

“சொல்லுங்கள். “

“காதலெனும் உறவில் ஒருத்திதான் தலையிட முடியும். “

“என்ன உறவு சொன்னீர்கள்?”

“காதலெனும் உறவு. “

“அதில் நான் ஒருத்திதானா உங்களுக்கு?”

“ஆம்… ஆம்… ” தடுமாற்றத்துடன் வந்தது இளைய பல்லவன் பதில். அவன் கண்கள் அவள் கால்களை நோக்கித் தாழ்ந்தன.

“என் கண்களைப் பார்த்துச் சொல்லுங்கள். ” காஞ்சனா தேவி கேட்டாள்.
அந்தக் கேள்வி ஏதோ பெரும் சத்தியத்தைச் செய்யச் சொல்வதுபோல் அவன் காதுகளில் ஒலித்தது. பெரும் திகைப்படைந்தான் அந்தச் சில விநாடிகளில் படைத்தலைவன். அந்தத் திகைப்புடன் அதிர்ச்சியையும் சேர்க்கத் தடதடவென்று உள்ளே நுழைந்தான் அமீர்.

அமீர் வந்தது பெரும் ஆறுதலாயிருந்தது இளைய பல்லவனுக்கு. “என்ன அமீர்?” என்று வினவினான் இளையபல்லவன் அமீரை நோக்கி.

“தளத்துக்கு வாருங்கள்” என்றான் அமீர்.

“ஏன்?”

“துறைமுகத்தைப் பார்க்க வேண்டும். “

“ஏன்?”

பதிலுக்குப் பெரும் அதிர்வெடியை எடுத்து வீசினான் அமீர். அந்த வெடி, காதலெனும் உறவையும் அது அளித்த கனவுலகத்தையும் விநாடியில் தகர்த்தெறிந்தது.

Previous articleRead Kadal Pura Part 3 Ch10 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch12 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here