Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch12 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch12 | Sandilyan | TamilNovel.in

103
0
Read Kadal Pura Part 3 Ch12 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch12 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch12 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 12 : விசித்திர வரவேற்பு.

Read Kadal Pura Part 3 Ch12 | Sandilyan | TamilNovel.in

காஞ்சனாதேவியின் கேள்விகளால் சிதறுண்டு போன சித்தத்துடன் திண்டாடிய இளையபல்லவன் மீது அமீர் வீசிய வெடி அதுவரை படைத்தலைவனுக்கு இருந்த பல குழப்பங்களைத் தகர்த்துத் தள்ளிவிடவே, “என்ன! என்ன! உண்மையாகவா?” என்று வியப்பும் திகைப்பும் மிகுந்த குரலில் வினவினான் அவன். படைத்தலைவன் உணர்ச்சிகளைக் கண்டும் சிறிதும் தளராமலே பேசத் துவங்கிய அமீர், “உண்மை தான் படைத்தலைவரே! தளத்துக்கு வந்து பாருங்கள். கடல் புறாவைச் சிறைப்படுத்த ஏற்பாடுகள் பலமாக நடக்கின்றன துறைமுகத்தில்” என்று வலியுறுத்தவும் செய்தான்.

அந்தச் செய்தியின் விளைவாக கட்டிலில் உட்கார்ந்து அவன் பதிலுக்காக எதிர்பார்த்திருந்த கடாரத்துக் கட்டழகி யையும் ஏறெடுத்துப் பார்க்காமல் விடுவிடு என்று அறை யிலிருந்து வெளிக் கிளம்பித் தளத்துக்கு வந்த இளைய பல்லவன் துறைமுகத்தின் மீது தன் கண்களை ஓடவிட்டான். கண்கள் கண்ட காட்சி, எதற்கும் கலங்காத அந்தக் கருணாகரனையும் ஒரு கலக்கு கலக்கியது. அதுவரை துறைமுகத்தை அடைத்துக்கொண்டு நின்ற, கலிங்கத்தின் நான்கு பெரும் கப்பல்களும் தனது மரக்கலங்களுக்கு வழிவிட, துறைமுகத்தின் ஒரு பக்கமாக ஒதுங்குவதற்குப் பதில் இரண்டு இரண்டாகப் பிரிந்து துறைமுகத்தின் கிழக்குப் பகுதியில் இரண்டும் மேற்குப் பகுதியில் இரண்டுமாகப் பிரிந்து கொண் டிருந்ததைக் கண்டான் படைத்தலைவன்.

அப்படி அவை இரண்டு பகுதிகளாகப் பிரிந்து இருபுறத்திலும் அணிவகுக்கும் காவலர்போல் நின்றுவிட்டால் இடையே போகும் எந்த மரக்கலமும் அவற்றின் தாக்குதலுக்கு இருபக்கமும் இலக்காகு மாதலால் அவை எக்காரணத்தைக் கொண்டும் துறைமுகத் திலிருந்து தப்பி வெளிவர முடியாதென்பதைப் புரிந்து கொண்ட இளையபல்லவன் அமீரை நோக்கி, “அமீர்! இந்தத் துறைமுகத் தலைவனைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று வினவினான்.

“கடற் போருக்கு இவன் புதியவனல்ல என்று தெரிகிறது” என்றான் அமீர்.

“புதியவனல்ல என்பது மட்டுமல்ல, கடல்போரில் முழுக்க முழுக்கத் திளைத்தவன். அதன் நுணுக்கங்களை நன்கு அறிந்தவன்” என்று இளையபல்லவன் கங்கதேவனைப் பாராட்டினான்.

அந்தப் பாராட்டுதலைக் கேட்ட அமீர், “ஆம் படைத் தலைவரே! இவன் தங்கள் பாராட்டுக்குரியவன்தான். ஆனால் இவன் திறமை பெரும் பாதகமாயிற்றே. அதோ கவனித் தீர்களா அவன் மரக்கலங்களைப் பிரிக்கும் முறையை?” என்று வினவினான்.

“கவனித்தேன். தனது மரக்கலங்களை இரண்டு வரிசைகளாக நிற்க வைத்து இடையே புகும் நம்மை அசைய வொட்டாமல் நிறுத்திவிட ஏற்பாடு செய்கிறான்” என்றான் இளையபல்லவன்.

“நாம் இடையே புகமறுத்தாலென்ன?” என்று அமீர் கேட்டான், தன் பெரு விழிகளால் படைத்தலைவனை ஏறெடுத்து நோக்கி.
“நாம் எப்படி மறுக்க முடியும்? நம் கைவசமிருக்கும் கலிங்கத்து மரக்கலங்கள் இரண்டையும் பழுது பார்க்க வேண்டுமே?”

“அவற்றை மட்டும் கரைக்குக் கொண்டு போவோம். கடல் புறா மட்டும் துறைமுகத்துக்கு வெளியிலேயே நிற்கட்டும். “

“எத்தனை நாள் நிற்க முடியும்?”

“இரண்டு மரக்கலங்களும் பழுது பார்க்கப்படும் வரை. “

“பழுது பார்க்க நான்கு நாட்கள் ஆகாதா?”

“ஆகும். “

“அது மட்டும் நாம் கடல் புறாவிலிருந்து தரைக்குப் போய்ப் போய்த் திரும்ப முடியுமா?”

“திரும்புவதில் என்ன கஷ்டம்?”

அமீரின் கேள்வி இளையபல்லவன் முகத்தில் பெரும் கவலைக்குறியைப் பரப்ப வைத்தது. தீவிர சிந்தனைக்குப்பின் சொன்னான் படைத்தலைவன் அமீரை நோக்கி, “அமீர்! பெரும் கயவனொருவனிடம் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். அவனுடைய மரக்கலங்கள் பிரிந்து நிற்பதன் காரணத்தை நாம் புரிந்து கொண்டதை அவன் உணர்ந்தால் நாம் போருக்கு முனையுமுன்பே நம்மை அவன் அழித்து விடுவான். “

அமீரின் பெரு விழிகளில் ஆச்சரியம் மண்டியது. “அவன் எப்படி நம்மை அழிக்க முடியும் படைத்தலைவரே? கடல் புறாவின் சக்தி உங்களுக்குத் தெரியாதா?” என்று வினவினான் அந்த அரபு நாட்டான்.

“நன்றாகத் தெரியும் அமீர். ஆனால் நீ ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். கடல் புறாவும் சென்ற கடற்போரில் சிறிது சேதப்பட்டிருக்கிறது. அதையும் பழுது பார்த்துவிட வேண்டும். அதுமட்டுமல்ல. நாம் கடல் புறாவில் இருக்கும் வரை கங்கதேவன் நம்மை எதுவும் செய்ய முடியாது. ஆனால் கரையில் இருக்கும்போது எதையும் செய்யலாம்,” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.

“நாம் கரைக்குப் போகாவிட்டால்” என்று வினவினான் அமீர்.

“கடல் புறாவைத் தாக்க நான்கு மரக்கலங்களையும் நடத்திக்கொண்டு கங்கதேவன் வருவான்” என்று பதில் கூறினான் இளையபல்லவன்.

“அந்த நான்கு மரக்கலங்களைக் கடல் புறா சமாளிக்காதா?”

“சமாளிக்கும், ஆனால் வேறு விஷயங்களையும் நாம் சிந்திக்க வேண்டும். “

“என்ன விஷயங்கள். அவை?”
“பலவர்மன் நினைவிழந்து படுத்திருக்கிறான். அவனுக்குச் சிகிச்சை செய்ய கடல் புறாவிலுள்ள வசதிகள் போதா?”

“அவனுக்காக நாம் நமது தலையை வெட்டுப்பாறையில் நீட்ட வேண்டுமா?”

இளையபல்லவன் இதழ்களில் மெள்ளப் புன்னகை யொன்று விரிந்தது. அதுவரை அவன் மனத்திலுள்ள கவலையும் சற்றுத் தளர்ந்திருக்க வேண்டும் என்பதை முகச் சாயைகூட விளக்கியது. “யார் தலையையும் வெட்டுப் பாறையில் கொடுக்க வேண்டியதில்லை அமீர்! நமக்கு இந்தக் கடல் மோகினி தேவை. நமக்கும் நமது பிற்காலத் திட்டத் துக்கும் இது நம் கைவசமாவது இன்றியமையாதது. இதை நோக்கி ஏன் வந்தோம். நினைப்பில்லையா உனக்கு?” என்று வினவினான் இளையபல்லவன்.

“நன்றாக நினைப்பிருக்கிறது படைத்தலைவரே. கடல் மோகினி தமிழர் வசமிருப்பதாக நினைத்தோம். இங்கு வந்து தங்கி வேறு கப்பல்களையும் வாங்கிச் சிறுபடை நிறுவி கடாரத்துக்குச் செல்ல உத்தேசித்தோம். ஆனால் கடாரத்தில் நாம் பார்க்க வேண்டியவர்கள் இடையிலேயே கிடைத்து விட்டார்கள். தவிர, கடல் மோகினி நமது எண்ணத்துக்கு மாறாகக் கலிங்கத்தின் வசம் சிக்கிக் கிடக்கிறது… ” என்று இன்னும் ஏதோ சொல்லப்போன அமீர் சட்டென்று பேச்சை நிறுத்திக்கொண்டு அந்த ஆட்சேபணைகளுக்குப் படைத் தலைவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்பதை அறியத் தன் கண்களைப் படைத்தலைவன் முகத்துக்காக உயர்த்தினான்.
அமீரின் ஆட்சேபணைகளுக்குப் பதில் சொல்லுமுன்பாக சில விநாடிகள் மௌனம் சாதித்த இளையபல்லவன் கடல் மோகினியின் துறைமுகத்தையே பார்த்துக்கொண்டு நின்றான். பிறகு சரேலென அமீரை நோக்கித் திரும்பி, “அமீர்! தமிழர் வசமிருந்த இந்தக் கடல்மோகினி கலிங்கத்தின் வசமாகி விட்டது. இது மீண்டும் தமிழர் வசம் ஆகிவிட வேண்டியது அவசியமல்லவா?” என்று வினவினான்.

அமீரின் முகத்தில் வியப்புக்குறி விரிந்தது. “அவசியம்தான். ஆனால் முடிகிற காரியமா?” என்று கேட்டான் அவன், இளையபல்லவன் இதயத்தில் ஓடிய எண்ணங்களைப் புரிந்து கொண்டு.

இளையபல்லவன் யோசனையில் மீண்டும் ஆழ்ந்தான். அவன் யோசனை கலைந்து பேசியபோது குரலில் திடம் இருந்தது. “முடியவேண்டும் அமீர், முடியாவிட்டால் நமது லட்சியங்கள் நிறைவேறா” என்ற இளையபல்லவன் அமீரைப் பொருள்பட உற்று நோக்கினான்.

“கலிங்கத்தின் கடற்படையை உடைப்பதுதானே லட்சியம்?”

“ஆம். ” தடையின்றி வந்தது இளையபல்லவனின் பதில்.

“அதற்குத்தான் கடல்புறா இருக்கிறதே?”

“கடல்புறா மட்டும் போதாது, கடல்புறா அபூர்வ சிருஷ்டி கண்டியத்தேவனின், ஏன் பாரதத்தின் கப்பல் கட்டும் கலையின் இணையற்ற சிருஷ்டி. இருப்பினும் அதுமட்டும் இந்தப் பெருங்கடலில் உலாவும். கலிங்கக் கடற்படைப் பிரிவுகளைச் சமாளிப்பது முடியாது. துணைக் கப்பல்கள் நான்காவது வேண்டும். இரண்டு கைவசமிருக்கின்றன… ”

“மீதி இரண்டை …!”

“இங்கே சம்பாதிக்கலாம். “

இளையபல்லவன் போக்கு நன்றாகப் புரிந்தது அமீருக்கு. கடல்மோகினியை வசமாக்குவது; தவிர, அங்கிருந்த கலிங்கத்தின் மரக்கலங்கள் நான்கையும் விழுங்கப் படைத் தலைவன் திட்டமிடுகிறானென்பதையும் சந்தேகமறப் புரிந்து கொண்ட அமீர் மிதமிஞ்சிய வியப்பிலேயே மூழ்கினான்.

கங்கதேவனிடமிருந்து தாங்கள் மீள்வதே கஷ்டம் போலிருக்க, அவன் ஊன்றிக்கொண்ட தளத்தைத் தங்கள் கைவசமாக்குவதும், அவன் மரக்கலங்களைக் கைப்பற்றுவதும் எப்படி முடியும் என்று எண்ணிப்பார்த்த அமீர், படைத் தலைவன் அளவுக்கதிகமாக ஆசைப்படுகிறானென்பதை எண்ணினான். ஆகவே மீண்டும் இளையபல்லவனை ஏதோ கேள்விகள் கேட்க நினைத்து, “படைத்தலைவரே… ” என்று துவங்கினான்.

படைத்தலைவன் உரையாடலில் இறங்கும் மனப் பக்குவத்தில் இல்லை. சிந்தனையில் பல விநாடிகள் திளைத்து, கடல்மோகினித் துறைமுகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். கடைசியில் முடிவுக்கு வந்து, “அமீர்! நீயும் நானும் இன்னும் இரு உபதலைவர்களும் கரைக்குப் புறப்படச் சித்தமாகுங்கள். நாம் நால்வரும் ஆளுக்கொரு விலை உயர்ந்த ஆபரணத்தை அணிய வேண்டும். கங்கதேவன் பார்த்துப் பிரமிக்க வேண்டும். முன்பு பலவர்மனைப் பார்க்கப் போனபோது எத்தனை ஆடம்பரமாகப் போனோமோ அத்தனை ஆடம்பரம் இப்பொழுதும் வேண்டும். அழைப்பு வந்ததும் அதிக ஆலசியம் வேண்டாம். கண்டியத்தேவரைக் கூப்பிடு,” என்றான்.

அமீருக்கு இளையபல்லவன் உத்தரவு வியப்பையே அளித்தாலும் படைத்தலைவரின் இதயத்தில் ஏதோ புதிய புதிய திட்டம் உருவாகி விட்டதென்பதைப் புரிந்து கொண்டதால், அதற்குமேல் பேசாமல் தூரத்தே மாலுமிகளுக்கு ஏதோ உத்தரவு இட்டுக் கொண்டிருந்த கண்டியத் தேவனை அருகில் வரும்படி சைகை செய்தான். கண்டியத் தேவன் அருகில் வந்ததும் இளையபல்லவன் பிறப்பித்த உத்தரவுகளைக் கேட்ட அமீர் அசந்து போனான். எதற்காகப் படைத்தலைவன் தன் தலையைக் கொண்டு போய் எதிரியின் வலையில் நுழைக்கிறான் என்பது அவனுக்குப் புரியவில்லை. கண்டியத்தேவனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அவன் மிரண்டு விழித்தான். இளையபல்லவனின் முதல் உத்தரவே அவனைத் தூக்கிவாரிப்போட்டது.

அருகில் வந்த கண்டியத்தேவனிடம், “தேவரே! முதன் முதலில் நீர் நாம் கைப்பற்றியுள்ள கலிங்கத்தின் கப்பல் களிரண்டையும் கரைக்குச் செலுத்தும், பழுது பார்க்க. கடல் புறாவும் அதோ இரண்டாகப் பிரியும் கங்கதேவன் போர்க் கலங்களுக்கு இடையே தலையை மட்டும் நுழைக்கட்டும். ஏன், பாதிவரையில் கூட கங்கதேவன் மரக்கலங்களுக் கிடையே இருக்கலாம். புரிகிறதா?” என்றான் இளைய பல்லவன்.

உண்மையில் கண்டியத்தேவனுக்குப் புரியவில்லை அந்தப் பைத்தியக்கார உத்தரவைப் படைத்தலைவன் ஏன் பிறப்பிக் கிறானென்பது. கைப்பற்றி இருக்கும் இரு மரக்கலங்களையும் கரையில் இழுத்துவிட்டுக் கடல்புறாவின் தலையையும் கங்க தேவன் போர்க்கலங்களின் அணிவகுப்புக்கிடையே புகுத்த முயல்வது மூன்று மரக்கலங்களையும் கங்கதேவனிடம் ஒப்படைப்பது போலத்தான் என்பதை உணர்ந்த கண்டியத் தேவன் முகத்தில் பிரமிப்பே மண்டியது. இளையபல்லவனின் அடுத்த உத்தரவு அந்த வியப்பை உச்சநிலைக்குக் கொண்டு சென்றது. “நமது இரண்டு மரக்கலங்களும் பழுது பார்க்கப்பட்டதும் அவற்றை வெளிக்கொணர்ந்து கடல்புறாவைக் கரைக்குக் கொண்டுபோய்ப் பழுது பார்க்கலாம்” என்றான் இளையபல்லவன்.

இளையபல்லவனுக்குப் புத்தி சுவாதீனத்திலிருக்கிறதா என்பதில் பெருத்த சந்தேகம் ஏற்பட்டது கண்டியத்தேவனுக்கு. ஆகவே சற்றுச் சினத்துடன் வினவினான் கண்டியத்தேவன், “அடுத்தபடி பழுதுபார்க்கப்பட்ட இரு மரக்கலங்களையும் கங்கதேவன் அணிவகுப்புக்கிடையில் நிறுத்த வேண்டுமா?” என்று .

“சரியாகப் புரிந்து கொண்டீர் கண்டியத்தேவரே. அதேதான் என் உத்தேசமும்” என்றான் இளையபல்லவன், சர்வ சாதாரணமாக.

“அதேதான் உங்கள் உத்தேசமா?” கண்டியத்தேவன் கேள்வியில் கடுப்பு இருந்தது.

“ஆம். “
“அப்படியானால் கடல் புறாவிலிருப்போரை என்ன செய்ய உத்தேசமோ?”

“பலவர்மனுக்குச் சிகிச்சை செய்ய கங்கதேவன் அவன் மாளிகையில் இடம் கொடுப்பான்… ”

“காஞ்சனாதேவி?”

“பலவர்மன் மகள் அவனருகில் இருக்காமல் வேறெங்கு இருக்க முடியும்?”

“கடல்புறாவிலுள்ள மாலுமிகள்?”

“பாதிப்பேர் கடல்புறாவிலிருக்கட்டும். “

“இன்னும் பாதி?”

“கரையில் அவர்களுக்கு விடுதி வசதி தரமாட்டானா கங்கதேவன்?”

“தருவான், தருவான். ஏன் தரமாட்டான்? தானாக வலிய வந்து வலையில் சிக்கும் பறவைகளை எந்த வேடன்தான் வரவேற்கமாட்டான்?” என்று உறுமினான் கண்டியத்தேவன்.

அவன் உறுமலில் அமீரும் கலந்துகொண்டான். “நீங்கள் தானே காஞ்சனாதேவியை அவன் விரும்புவதாகக் கூறினீர்கள்” என்று அமீர் வினவினான்.

“ஆம் சொன்னேன்” என்று ஒப்புக்கொண்ட இளைய பல்லவனை மற்ற இருவரும் வியப்புடன் நோக்கினார்கள்.

“அப்பேர்ப்பட்ட கயவன் கையில் கடாரத்து இளவரசியை ஒப்புவிப்பது விவேகமா?” என்று ஏககாலத்தில் இருவரும் கேட்டார்கள்.

இருவரையும் மாறிமாறிப் பார்த்த இளையபல்லவன், “அவனிடம் காஞ்சனாதேவியை ஒப்படைக்கப் போவதாக யார் சொன்னது?” என்று பதிலுக்குக் கேள்வியொன்றை வீசினான்.

“அவன் விடுதியில் காஞ்சனாதேவி சிக்கினால்?” சந்தேகத்துடன் எழுந்தது அமீரின் கேள்வி.

“அவள் மட்டுமல்ல, நானும் சிக்கப் போகிறேன். நமது மாலுமிகளில் பாதிப் பேர் சிக்குவார்கள். இப்படியாகப் பல பறவைகள் அவன் வலைக்குள் அகப்பட்டுவிடும்” என்று பதில் சொன்னான் இளையபல்லவன்.

“அப்படிச் சிக்குவது பறவைகளுக்குக் கேடல்லவா?” என்று வினவினான் தேவன்.

“அது தலைமைப் பறவையைப் பொறுத்தது” என்றான் படைத்தலைவன்.

“வலையில் அகப்பட்ட பின் தலைமைப் பறவைதான் என்ன செய்ய முடியும்?” அமீரின் கேள்வி பளீரென எழுந்தது.

“வழி சொல்ல முடியும்” என்று இளையபல்லவன் பதில் சொன்னான்.

“எதற்கு? தப்பிச் செல்லவா?” மீண்டும் கிளம்பியது அமீரின் கேள்வி.

“வலையைத் தூக்கிக்கொண்டு பறவைகள் பறந்தோட முடியும். பறந்தோடியதாக ஒரு கதையும் நமது நாட்டில் உலவுகிறது!” என்று குறிப்பிட்ட இளையபல்லவன், “தேவரே! அமீர்! இருவரும் நன்றாக உற்றுக் கேளுங்கள். இங்கிருந்து நாம் மரக்கலங்களை நகர்த்து முன்பு மற்ற இரண்டு மரக் கலங்களிலும் நாம் சிறைசெய்து வைத்திருக்கும் கலிங்கத்து மாலுமிகளைக் கடல்புறாவின் கீழ்ப்பகுதி அறையில் அடைத்துவிடுங்கள். அவர்களைக் காவல் புரியவும் பொதுவாகக் கடல் புறாவைப் பாதுகாக்கவும் சுமார் இருபது மாலுமிகள் கடல் புறாவில் இருக்கட்டும்.

மற்ற மாலுமிகள் அனைவரும் கரைக்கு வந்துவிடட்டும். இஷ்டப்படி இந்தத் துறைமுகத்தில் உலாவட்டும். நடுப்பகலில் மட்டும் ஒவ்வொரு நாளும் அவர்கள் கடற்கரையில் வந்து கூடவேண்டும். நிலைமைக்குத் தகுந்தபடி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்” என்று உத்தரவிட்டான். அத்துடன் கண்டியத்தேவனை விளித்து, “தேவரே! அதோ காளத்தி நதி பாய்கிறது பார்த்தீரா?” என்று நதியின் முகத்துவாரத்தைச் சுட்டிக் காட்டினான்.

“தெரிகிறது” என்றான் தேவன்.

“அதன் இக்கரையில் என்ன தெரிகிறது?”

“பெரும் காடாகக் கோரைகள் முளைத்திருக்கின்றன. “

“கோரைகள் எங்கிருக்கின்றன?”

“கடற்கரையை அடைத்திருக்கின்றன. “

“பாதி நீரிலும் இருப்பதைக் கவனியுங்கள். “

“ஆம், ஆம். “

“அவற்றில் ஒரு மரக்கலத்தின் அடி சிக்கினால் என்ன ஆகும். “

“ஆவதென்ன? அதோகதிதான். மரக்கலத்துக்கு மாத்திரமல்ல இளையபல்லவரே, மனிதன் அதில் சிக்கி னாலும் மீள்வது கஷ்டம்” என்று திகில் குரலில் தொனிக்கக் கூறினான் கண்டியத்தேவன்.

“கரைக்குச் சென்றதும் அந்தப் பகுதியைச் சுற்றிப் பாரும், நானும் பார்க்கிறேன்” என்றான் இளையபல்லவன்.

அந்த அபாயப் பிரதேசத்தை எதற்காகப் பார்க்கச் சொல்கிறான் இளையபல்லவன் என்பது புரியவில்லை கண்டியத்தேவனுக்கு. இருப்பினும், ‘சரி’ என்று ஆமோதிப்ப தற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான். அத்துடன் அமீரைச் சேந்தனுடன் துறைமுகப் பயணத்துக்குத் தயார் செய்யுமாறு உத்தரவிட்ட படைத்தலைவன், தானும் அக்ர மந்திரத்தை நோக்கிச் சென்றான் பயணத்துக்குச் சித்தமாக.

இளையபல்லவன் எதிர்பார்த்தபடி நடு உச்சிக்குக் கதிரவன் வருவதற்குச் சிறிது முன்பாகவே கங்கதேவன் படகு வந்தது அவனை அழைத்துச் செல்ல. இளையபல்லவன், அமீர், சேந்தன், இன்னுமிரு உபதலைவர்கள் ஆகிய ஐவரும் கரையை நோக்கி அந்தப் படகில் சென்றனர். படகு வேகமாகச் சென்றது. அதைவிட வேகமாக ஓடின இளையபல்லவன் எண்ணங்கள். கடல் மோகினியின் இன்பக் காட்சி வழிநெடுக அவன் மனதைப் பறித்தது. துறைமுகத்தை அடைந்ததும் கங்கதேவன் அளித்த வரவேற்பு அவன் மனத்தைக் குலைத்தது.

வரவேற்பு மிகுந்த விசித்திரமாயிருந்தது. கடற்கரை யிலேயே அவனை வரவேற்கச் சித்தமாயிருந்த கங்கதேவன், “வரவேண்டும், வரவேண்டும்” என்று போலிப் பணிவும் உண்மை நகைப்பும் கலந்த குரலில் படைத்தலைவனை வரவேற்றான்.

அவனுக்கருகில் ஆயுதம் தாங்கி நின்ற பத்துக் கலிங்க மாலுமிகள் படைத்தலைவனை நோக்கி நகர்ந்தனர்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch11 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch13 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here