Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch13 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch13 | Sandilyan | TamilNovel.in

124
0
Read Kadal Pura Part 3 Ch13 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch13 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch13 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 13 : கடல் நமது நாடு.

Read Kadal Pura Part 3 Ch13 | Sandilyan | TamilNovel.in

கடல் மோகினித் தீவுக் கும்பலின் தென்முனைத் தீவான மாநக்காவரத்தின் மண்ணில் காலை வைத்தவுடன் இளைய பல்லவனை நோக்கி ஆயுதம் தாங்கிய வீரர் பத்துப் பேர் நகர்ந்ததைக் கண்டதும் அமீரும் சேந்தனும் மற்ற இரு உபதலைவர்களும் சினத்தின் வசப்பட்டார்களானாலும், இளையபல்லவன் மட்டும் அதைப்பற்றிச் சிறிதும் லட்சியம் செய்யாமல் அந்த வீரர் இரு புறமும் காவல் புரிந்து வர கங்கதேவனை நோக்கி நான்கடி நடந்து சென்று, “கலிங்கத்தின் கடற்படைத் தலைவரின் வரவேற்பு புது முறையில் அமைந் திருக்கிறது” என்று கூறி, மெல்ல அவனை நோக்கி நகைக்கவும் செய்தான்.

இளையபல்லவனின் அலட்சியத்தையும் நகைப்பையும் கண்ட கங்கதேவன் ஒரு விநாடி அசந்தே போனாலும் மறு விநாடி தன்னைச் சமாளித்துக்கொண்டு, “புதுவகை அபாயங்களை எதிர்நோக்கும்போது புதுமுறைகளை வரவேற்பிலும் கையாளுவதுதான் விவேகம்” என்று கூறினான். இம்முறை அவன் பேச்சில் நகைப்பில்லை. கடுமை பலமா யிருந்தது.

“புதுவகை ஆபத்தா?” ஏதுமறியாததுபோல் வினவினான் இளையபல்லவன்.

“ஆம்” என்று பதில் கூறினான் கங்கதேவன் குரலில் கடுமையைச் சிறிதும் குறைக்காமல்.
“கடற்படைத் தலைவர் கூறுவது விளங்கவில்லை எனக்கு” என்று முகத்தில் வேண்டுமென்றே குழப்பத்தை விளைய விட்டுக்கொண்ட இளையபல்லவன் தன் புருவங்களைச் சந்தேகத்துடன் முகத்தில் உயர்த்தினான்.

“ஒரு விஷயம் விளங்கியிருக்க வேண்டும் உங்களுக்கு” என்ற கங்கதேவன் இளையபல்லவனை மட்டுமின்றி, சற்று எட்ட நின்றிருந்த அமீரையும் சேந்தனையும் மற்ற இரு உபதலைவர்களையும்கூடத் தன் கண்களால் சுடுநோக்கு நோக்கினான்.

அந்தச் சுடுநோக்கைக் கண்டு சிறிதும் அசையாத இளைய பல்லவன், “அது எந்த விஷயமோ?” என்று வினவினான்.

“நான் முட்டாளல்லவென்பது” என்று கங்கதேவன் சற்று இரைந்தே கூறினான்.

“இதைத் தாங்கள் வற்புறுத்த வேண்டிய அவசியமென்ன? இளையபல்லவன் கேள்வியில் பணிவிருந்தது. அந்தப் பணிவுடன் ஏளனமும் கலந்திருந்தது.

கங்கதேவன் கண்கள் இளையபல்லவன் முகத்தைச் சில விநாடிகள் ஆராய்ந்தன. பிறகு அதிலிருந்து விலகி, தூரத்தே இருந்த கடல் புறாவையும் மற்ற இரு மரக்கலங்களையும் நோக்கின. கடைசியாக அவன் பெரு உதடுகள் வெறுப்புடனும் கோபத்துடனும் வார்த்தைகளை உதிர்த்தன. “அந்த அவசியத் தைக் கற்பித்தது நீ” என்று சீறினான் கங்கதேவன்.
பதிலுக்கு இளையபல்லவனும் சற்றுக் கோபத்தைக் காட்டத் தொடங்கி, “மரியாதையைக் கைவிட்டுப் பேசுகிறீர்கள்” என்றான் சீற்றம் தொனித்த குரலில்.

கங்கதேவனின் அடுத்த சொற்களில் கோபத்துக்குப் பதில் ஏளனம் தொனித்தது. “தங்களை நீ என்று அழைக்கக் கூடாதாக்கும்?” என்றான் கங்கதேவன்.

“ஆம். “

“ஏன்?”

“கலிங்கத்தின் கடற்படைத்தலைவர் அதன் உபதலைவரை மரியாதையுடன் அழைக்கக் கடமைப்பட்டவர். “

இதைக் கேட்டதும் இடி இடியென நகைத்த கங்கதேவன், “நீ கலிங்கத்தின் உபதலைவனாயிருந்தால் தானே உன்னை மரியாதையுடன் அழைப்பதற்கு? நீ கலிங்கத்தின் உப தலைவனுமல்ல, அதோ அந்த மரக்கலம் கலிங்கத்தின் மரக் கலமுமல்ல. அதுமட்டுமல்ல, அதோ நிற்கின்றனவே இரண்டு மரக்கலங்கள், அவை சோழநாட்டு மரக்கலங்களுமல்ல. இந்தப் பிராந்தியத்தில் எத்தனையோ அயோக்கியர்களை நான் பார்த்திருக்கிறேன். உன்னைப் போன்ற அயோக்கியனை இன்றுவரை நான் பார்த்ததில்லை” என்று நகைப்புக்கிடையே கூறிவிட்டுத் தன் வீரர்களை விட்டு, “இவனையும் இவன் சகாக்களையும் சிறைக்கோட்டத்தில் அடைத்து வையுங்கள்” என்று உத்தரவு இட்டான்.

அந்த உத்தரவைக் கேட்ட இளையபல்லவன் முகத்தில் எந்தவிதக் கலவரமோ அச்சமோ இல்லாதிருந்ததைக் கண்ட கங்கதேவன், “உன் அயோக்கியத்தனத்துக்கு ஏற்ற துணிவும் உன்னிடமிருக்கிறது” என்று பாராட்டவும் செய்தான்.

இளையபல்லவன் பதில் சர்வ சாதாரணமாக வெளி வந்தது. “இந்தச் சமயத்தில் என் துணிவைப் பாராட்டுவதை விட, தங்கள் அபாயத்தை எண்ணிப் பார்ப்பது நல்லது” என்றான் இளையபல்லவன்.

“எனக்கா! அபாயமா! வியப்புடன் எழுந்தது கங்கதேவன் கேள்வி.

“ஆம். சற்றுத் திரும்பிப் பாருங்கள்” என்றான் இளைய பல்லவன்.

திரும்பிச் சுற்றுமுற்றும் பார்த்த கங்கதேவனுக்கு ஏதும் புரியாததால், “எங்கு பார்க்கச் சொல்கிறாய்?” என்று எரிந்து விழுந்தான்.

தங்களிருவருக்கும் சம்பாஷணை நிகழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் மெள்ள மெள்ள நழுவி, சற்றுத் தூரத்தில் போய்க் கொண்டிருந்த அமீரை கங்கதேவனுக்குக் காட்டிய இளைய பல்லவன் கேட்டான், அது யார் தெரியுமா தங்களுக்கு?” என்று .

“தெரியாது. “

“எத்தனை நாட்களாக இந்தப் பகுதிகளில் இருக்கிறீர்கள்?”

“பல வருடங்களாக. “

“அகூதா என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா?”

இந்தக் கேள்வி வெளிவந்ததும் கங்கதேவன் முகத்தில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. அதிலிருந்த தைரியம் மறைந்து அச்சம் அந்த இடத்தைக் குடிகொண்டது. அதைக் கவனித்த இளையபல்லவன் கங்கதேவன் பதிலுக்காகக் காத்திராமல் மேலும் சொன்னான்: “அகூதாவின் வலது கரம் போன்றவன் இந்த அரபு நாட்டு அமீர். வெகு தூரத்திலிருந்தாலும் குறி தவறாமல் குறுவாளெறியக் கூடியவன். எப்பொழுது கச்சை யிலிருந்து வாளெடுக்கிறான், எப்பொழுது எறிகிறான் என்பது கூடத் தெரியாமல் கண்ணிமைக்கும் நேரத்தில் காரியத்தை முடிக்கக் கூடியவன். இப்பொழுது அவன் கை கச்சையிலிருக் கிறது, கண் தங்கள் மேலிருக்கிறது. “

இந்த வார்த்தைகளை மிக நிதானமாகவும் திடமாகவும் சொன்ன இளையபல்லவன் இதுவரை கையாண்ட மரியாதை யைக் கைவிட்டு, “கங்கதேவா! நீ முட்டாளல்ல என்பதைக் கடல் புறாவின் தளத்தில் வந்தபோதே நான் புரிந்து கொண்டேன். நீ கடல் புறாவின் தளத்தைச் சுற்றி வந்த போதும், நீ மற்ற இரு கப்பல்களை ஆராய்ந்த போதும் உன்னைத்தான் நான் கவனித்துக் கொண்டிருந்தேன். நீ உண்மையை உணர்ந்து கொண்டதை அப்பொழுதே அறிந்து கொண்டேன். இருப்பினும் இதோ இங்கே வந்திருக்கிறேன். தானாகத் தலையை அபாயத்தில் நுழைக்கும் அத்தனை முட்டாளல்ல இளையபல்லவன்” என்று சொற்களை ஒன்றன்பின் ஒன்றாக கங்கதேவன் புத்தியில் உறையும்படி உச்சரித்தான்.

இளையபல்லவன் வார்த்தைகளைக் கேட்ட கங்கதேவன் அப்படியே மலைத்துப் பல விநாடிகள் நின்றுவிட்டான். “இளையபல்லவன்! இளையபல்லவன்!” என்று மீண்டும் மீண்டும் மந்திரத்தை உச்சரிப்பவன் போல் இளையபல்லவன் பெயரை உச்சரித்தான் நீண்ட நேரம். இப்படி மலைத்துக் குழம்பிய பிறகு, “நீ! நீ! அகூதாவின்… ” என்று ஆரம்பித்து வார்த்தையை முடிக்காமல் விடவும் செய்தான்.

“ஆம், உபதலைவன்!” என்று கங்கதேவன் தொடங்கிய வார்த்தைகளைப் பூர்த்தி செய்த இளையபல்லவன், “இனி உனக்கு என் துணிவைப் பற்றி வியப்பு ஏற்படக் காரணமில்லை. நாம் பேசவேண்டியது ஏதாவது இருந்தால் உணவருந்தும்போது பேசலாம்! தவிர என்னிடம் மரியாதை காட்டுவது உனக்கு நல்லது. என்னிடம் அவமரியாதை காட்டும் யாரையும் என் மாலுமிகள் விடுவதில்லை” என்று அத்துடன் சம்பாஷணையை முடிவுகட்டிய இளையபல்லவன் அமீரை நோக்கி ஏதோ சைகை செய்யவே அமீர் இளையபல்லவனை நெருங்கி வந்தான்.

இளையபல்லவன் கூறிய சொற்கள் கங்கதேவனை மட்டுமல்ல, இளையபல்லவனைச் சிறை செய்ய வந்த பத்து வீரர்களையுங்கூடப் பெருமலைப்பிலும் பயத்திலும் ஆழ்த்தி விடவே அவர்களும் செயலற்று நின்றுவிட்டனர். அதைக் கவனித்த சோழர் படைத்தலைவனே அவர்களுக்கு உத்தர விட்டான், “இனி நீங்கள் தேவையில்லை. போகலாம்” என்று. அதை ஆமோதிக்கும் வகையில் கங்கதேவனும் தலை யாட்டவே வீரர்கள் கலைந்து சென்றனர்.

அடுத்தபடி செய்யவேண்டியது என்ன என்பதைக்கூட அறியும் சக்தியை இழந்துவிட்ட கங்கதேவன் இளைய பல்லவனை ஏறெடுத்து நோக்கினான். “தங்கள் மாளிகையில் மீதி விஷயங்களைப் பேசுவோம் தலைவரே!” என்று இளைய பல்லவன் கூற, கங்கதேவன் மாளிகையை நோக்கி வழி காட்டி நடந்தான். அவனும் சரி, அவனைத் தொடர்ந்தவர்களும் சரி, மாளிகையை அடையும் வரையில் எதுவுமே பேசாமல் மௌனமாகவே நடந்தார்கள். கங்கதேவன் மாளிகை கடற் கரையை அடுத்து நின்ற சிறுமலைச் சரிவொன்றில் கட்டப் பட்டிருந்ததால் அதன் உப்பரிகையில் இருந்து கடலை வெகு தூரம் ஆராயலாம் என்பதை இளையபல்லவன் அறிந்து கொண்டான்.

மாளிகை அப்படியொன்றும் பெரிதல்ல, இருப்பினும் நல்ல வசதியாகவும் பாதுகாப்புடனும் இருந்தது. பின்னாலிருந்த மலைச்சரிவும் அதன் வடக்குப் பாகத்துக்கு அரணாக அமைந்திருந்தது. கிழக்கு மேற்குமிருந்த பகுதி களிலும் பாறைகள் இருந்ததால் சுலபமாக அந்த மாளிகையை அந்த இரு பக்கங்களிலும் அணுகுவதும் சிரமம் என்பதை இளையபல்லவன் புரிந்துகொண்டான். வாயிலில் மட்டுமே காவல் இருந்தாலும் அதுவே அந்த மாளிகைக்குப் போதும் என்பதை இளையபல்லவன் உணர்ந்துகொண்டிருந்தான்.

இந்த மாளிகைக்குச் சற்றுத் தள்ளியே மாநக்காவரத்தின் ஊர் இருந்தது. அதில் வீடுகள் சுமார் நூறுக்கு மேலில்லை என்பதை மாளிகை வாயிலில் கால் வைத்துச் சுற்றுமுற்றும் பார்த்த வுடனேயே புரிந்துகொண்ட இளையபல்லவன், அந்த நூறு வீடுகளும் கடல்மோகினிக்கு வந்து சேர்ந்த தமிழர்கள் இல்லங்களாக இருக்க வேண்டுமென்றும் சமீபத்தில் கடல் மோகினியைக் கைப்பற்றிய கங்கதேவனின் மாலுமிகள் பலருக்கும் இன்னும் வீட்டு வசதி ஏற்படவில்லை என்பதை யும் உணர்ந்துகொண்டான். கங்கதேவனின் மாலுமிகள் பலருக்கு வீட்டு வசதியில்லாத காரணத்தால் அவர்கள் கடற்கரைப் பகுதிகளிலேயே கூடாரங்களை அடித்துக் குடிசைகள் போட்டுத் தங்கி இருந்ததையும் பார்த்த இளையபல்லவன் உள்ளூரத் திருப்தியும் கொண்டான்.

இப்படிச் சூழ்நிலையை எடை போட்டுக்கொண்டு மாளிகைக்குள் நுழைந்த இளையபல்லவன் கங்கதேவனை நோக்கி, “தேவரே! விருந்து தயாராயிருக்குமென்று நினைக் கிறேன். விருந்துண்ட பிறகு பேசுவோமா, முன்னமே பேசுவோமா?” என்று வினவினான்.

அவன் எதைப் பேச இஷ்டப்படுகிறான் என்பதைப் புரிந்துகொண்ட கங்கதேவன், “விருந்துக்குச் சிறிது நேரமாகும். முன்னரே பேசுவது நல்லது” என்று கூறினான்.

இளையபல்லவன் சந்தேகத்துக்கிடமின்றி நிலைமையைப் புரிந்துகொண்டான். தனக்கு விருந்தளிக்கும் நோக்கம் கங்கதேவனுக்குச் சிறிதும் கிடையாதென்பதையும், கரைக்கு அழைத்துத் தன்னைச் சிறைப்படுத்தி, தனது மரக்கலத்தையும் காஞ்சனாதேவியையும் கைப்பற்றுவதே அவன் நோக்க மென்பதையும் தெரிந்துகொண்ட இளையபல்லவன், “விருந்து தயாராயில்லை என்பது புரிகிறது கங்கதேவரே! கடல் புறாவுக்கு வருகிறீர்களா அங்கு தயாராயிருக்கும்” என்றான்.

“வேண்டாம்! வேண்டாம்! இங்கேயே தயார் செய்யச் சொல்கிறேன்” என்று கூறி, பணியாள் ஒருவனை விளித்து, உணவைச் சீக்கிரம் தயார் செய்ய உத்தரவிட்ட கங்கதேவன் இளையபல்லவனை அழைத்துக்கொண்டு அந்த மாளிகைத் தளத்தின் அறையொன்றுக்குச் சென்றான். மாடிப்படிகளில் ஏற முற்பட்டதும் தன் சகாக்களை நோக்கிய இளையபல்லவன், “கங்கதேவர் என்னிடம் ரகசியமாகப் பேச விரும்புகிறார். ஆகவே நீங்கள் இங்கேயே தங்கி இருங்கள். அமீர் மட்டும் வரட்டும்” என்று கூறி அவர்களை அந்த முகப்பு மண்டபத்திலேயே இருக்க உத்தரவிட்டு, அமீர் பின்தொடர தான் மட்டும் கங்கதேவனைத் தொடர்ந்து சென்றான்.

மாடித் தளத்திலிருந்த தனது சொந்த அறைக்கே கங்கதேவன் இளையபல்லவனை அழைத்துச் சென்றான்.

அந்த அறை விசாலமாய் இருந்தது. படுத்தபடியே கடலை நீண்ட தூரம் நோக்கப் பஞ்சணைக்கருகில் சாளரமும் அமைக்கப்பட்டிருந்தது. அதில் அந்த சாளரத்தையும் பஞ்சணை அமைப்பையும் கண்ட இளையபல்லவன், இந்த இடத்திலிருந்தே விளக்குகளுடன் வந்த எனது மரக்கலத்தை கங்கதேவன் கவனித்திருக்க வேண்டும்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். அந்தச் சமயத்தில் உள்ளேயிருந்த அமீரை நோக்கி, “அமீர்! நீ அறைக்கு வெளியே இரு!” என்றும் உத்தரவிட்டு அவனை வெளியே அனுப்பிவிட்டு கங்க தேவனை நோக்கித் திரும்பினான்.

கங்கதேவனும் இளையபல்லவனும் சிறிது நேரம் ஒருவரையொருவர் நோக்கினர். பிறகு கங்கதேவனைப் பஞ்சணையில் அமரச் சொல்லிய இளையபல்லவன் தான் மட்டும் நின்றுகொண்டு பேச்சைத் துவங்கினான், “கங்கதேவரே! நீங்கள் சற்று அவசரப்பட்டுவிட்டீர்கள்” என்று.

கங்கதேவன் மனம் பெரிதும் குழம்பிக் கிடந்தது. சுமார் ஐந்நூறு மாலுமிகளையும் நான்கு போர்க்கலங்களையும் வைத்துக்கொண்டிருந்தும் மூன்றே பேருடன் கரை வந்த இளையபல்லவனைச் சிறை செய்ய முடியாத நிலையை அவன் ஏற்படுத்திவிட்டதை நினைத்துப் பெரிதும் குழம்பிக் கொண்டிருந்தான் அவன். கடல் புறா கலிங்கத்தின் மரக் கலமல்ல என்பதையும், மற்ற இரு மரக்கலங்களும் சோழ நாட்டு மரக்கலங்கள் அல்ல என்பதையும் சொன்ன மாத்திரத்தில் எதிரி திகிலடைந்து விடுவானென்று தான் நம்பியதற்கு மாறாக அவன் தன்னையே தன் வீரர்களுக்கு எதிரில் மிரட்டி மாளிகைக்கு அழைத்து வரவேண்டிய அவசியத்தை ஏற்படுத்திவிட்டதை நினைத்து அந்தக் குழப்பத்தினூடே ஆச்சரியமும் அடைந்தான்.

தன்னை மிரட்டிய இளையபல்லவனுக்குத் தான் பணிய நேரிட்டதற்கு மூலகாரணம் அகூதாவின் பயங்கரப் பெயரே என்பதை நிர்ணயித்துக்கொண்டதால் அந்த ஆச்சரியத்துடன் ஓரளவு சாந்தியும் அடைந்த கங்கதேவன், ‘அகூதாவுக்குத்தான் நான் அஞ்சுகிறேன், அவன் பெயரைக் கேட்டு அஞ்சாதார் யார்?” என்று தன் அச்சத்துக்குச் சிறிது சப்பைக் கட்டும் போட்டுக் கொண்டான். இருப்பினும் அகூதா தொலை தூரத்தில் இருக்கிறானென்பதையும் தன்னிடம் வந்து அகப்பட்டுக் கொண்டிருக்கும் இளையபல்லவனைத் தான் பத்து நாட்களுக்குள் முடிவுகட்டிவிட முடியும் என்றும் தன்னைத் தானே தைரியப்படுத்திக் கொண்ட கங்கதேவன், “எதற்கு அவசரப்பட்டு விட்டேன்?” என்ற கேள்வியொன்றையும் வீசினான்.
இளையபல்லவன் பதில் நிதானமாக வந்தது. அதில் வருத்தமும் தோய்ந்திருந்தது. “என்னை உமது எதிரியாக நினைத்தது அவசரம்” என்றான்.

“சோழ நாடு கலிங்கத்துக்கு விரோதியல்லவா?” என்று வினவினான் கங்கதேவன்.

“இரண்டு நாடுகளும் தொலை தூரத்திலிருக்கின்றன” என்று கூறிய இளையபல்லவன் கங்கதேவனை உற்று நோக்கினான்.

அவன் நோக்கின் பொருள் புரியாததால், “ஆம்” என்று ஏதோ சொல்லி வைத்தான் கங்கதேவன்.

“எனது நாடு சோழ நாடுமல்ல. உமது நாடு கலிங்கமு மல்ல” என்றான் இளையபல்லவன்.

‘பின் நமது நாடு-” என்று இழுத்தான் கங்கதேவன்.

“கடல் நமது நாடு, கொள்ளை நமது தொழில், நாமிருவரும் ஒரே குலம், ஒருவனே நமக்குத் தலைவன். “

“யாரந்தத் தலைவன்?”

“பொன். “

“பொன்னா ?”
“ஆம். அதை நாடித்தான் மனிதர்கள் கடலோடுகிறார்கள். அதை நாடித்தான் நமது கொள்ளைக் குலம் கடலில் சஞ்சரிக் கிறது. ஆகவே. “

“சொல்லுங்கள். “

“நான் உமது நண்பனாக இங்கு வந்திருக்கிறேன். விரோதி யாக அல்ல. ” இளையபல்லவன் சொற்கள் திடமாக உதிர்ந்தன.

வியப்புடன் இளையபல்லவனை ஏறெடுத்து நோக்கி னான் கங்கதேவன். தான் கடல்மோகினிக்கு வந்த காரணத்தை விளக்கினான் இளையபல்லவன். அந்த விளக்கத்தின் முடிவில் பேருவகையைக் காட்டினான் கங்கதேவன். இளையபல்லவனை வலிய அணைத்துக்கொள்ளவும் செய்தான்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch12 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch14 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here