Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch14 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch14 | Sandilyan | TamilNovel.in

90
0
Read Kadal Pura Part 3 Ch14 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch14 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch14 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 14 : நண்பர்கள்.

Read Kadal Pura Part 3 Ch14 | Sandilyan | TamilNovel.in

கடல் மோகினியின் கரையில் காலை வைத்த சில விநாடிகளுக்குள்ளாகவே கங்கதேவனைப் பூரணமாக எடை போட்டுவிட்ட கருணாகர பல்லவன், எந்த முறையைக் கையாண்டால் அந்தக் கொடியவனைச் சமாளிக்க முடியும் என்பதைத் தீர்மானித்துக் கொண்டானாகையால் அதற்கேற்ப தன் நடவடிக்கைகளையும் பேச்சு முறையையும் அமைத்துக் கொண்டான். பலவர்மன் உளறலிலிருந்து கங்கதேவன் கலிங்க நாட்டவனென்பதையும், இருப்பினும் நாட்டுப் பற்றோ இனப் பற்றோ அற்ற பெரும் கயவனென்பதையும் புரிந்துகொண்ட தால், சுயலாபத்தைத் தவிர வேறெதிலும் சிரத்தை இல்லாத அவனை லாபத்தைக் காட்டியே தன் வழிக்கு இழுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் கருணாகரபல்லவன்.

தவிர, கடல் புறாவையும் மற்ற இரு கலிங்கத்து மரக்கலங்களையும் அவன் கவனித்த கவனிப்பிலிருந்தே அவனை ஏமாற்றுவது அத்தனை எளிதல்ல என்பதையும் அறிந்து கொண்ட சோழர் படைத்தலைவன் காரணமாகவே கலிங்கத்துக் கப்பல்களை ஆரம்பத்தில் கரையில் இழுத்துப் பழுது பார்க்கவும் கடல் புறாவைத் துறைமுகத்தை அடைத்து நிற்கச் செய்யவும் உத்தரவுகளைப் பிறப்பித்தான். அதை முன்கூட்டி ஊகித்துவிட்ட கங்கதேவன் துறைமுகத்திலிருந்த தனது நான்கு போர்க்கலங்களையும் இரண்டிரண்டாகப் பிரித்து நிற்கவைத்து இடையே இளையபல்லவன் மரக்கலங்களுக்கு வழிவிட்டான். அத்தகைய நிலையில் கடல் புறாவல்ல, அதைவிடப் பெரிய மரக்கலம் உள்ளே வந்தாலும் அக்கம் பக்கத்தில் தாக்கக் கூடும் நான்கு போர்க்கலங்களின் சக்தி யிலிருந்து அது மீள முடியாதென்பதை கங்கதேவன் உணர்ந் திருந்தான்.

இந்த உணர்வு இளையபல்லவனுக்கும் ஏற்படவே, கடல் புறா பழுது பார்க்கப்பட்டுத் திடமாகக் காயம் ஏதுமின்றி மீள வேண்டுமானால் கங்கதேவனின் நான்கு மரக்கலங்களும் துறைமுகத்திலிருந்து வெளியேற வேண்டும் அல்லது அழிக்கப் பட வேண்டும் என்று தீர்மானித்தான். அதுமட்டுமின்றி, கங்கதேவனைப் போன்ற ஒரு சிறந்த கடலோடியைச் சமாளிப்பதோ தோல்வியுறச் செய்வதோ அத்தனை எளிதல்ல என்பதையும் புரிந்துகொண்டான்.

ஆகவே தன் நடவடிக்கை எப்படி இருக்கவேண்டும் என்பதை ஓரளவு தீர்மானித்தும் கொண்டான். கங்கதேவனைப் பாதி ஆசை காட்டியும், பாதி மிரட்டியும், பாதி நட்புக் காட்டியும், பாதி விரோதமூட்டியும் தான் வெல்ல முடியும் என்பதைச் சந்தேகமற அறிந்து கொண்டான் சோழர் படைத்தலைவன். கலிங்கத்தின் கடல் வலிவை முறிப்பதற்கும் கடாரத்தை அணுகுவதற்கும் ஸ்ரி விஜயத்தின் அஸ்திவாரத்தை ஆட்டுவதற்கும் கடல்மோகினி எப்படியும் தேவை என்பதையும் உணர்ந்துகொண்டான் இளையபல்லவன்.

இப்படித் திரும்பத் திரும்ப விஷயத்தை அலசிப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்த இளையபல்லவன், ஆரம்பத்தில் கங்க தேவன் விரோதத்தை விட நட்பே பலனளிக்கும் என்பதைப் புரிந்துகொண்டானாகையால் நட்பு வலையை முதன்முதலில் அவன்மீது விரித்தான். நட்பு வலையில் முதலில் விழ கங்க தேவன் மறுத்தான். ஆனால் இளையபல்லவன் அந்த வலையை வீசியதற்குக் காட்டிய காரணம், கண்ணியில் பளபளத்த ஆகாரம், எதையும் நம்பாத கங்கதேவனையும் அந்த வலைக்குள் இழுத்தது.

அந்த வலையை மிகுந்த சாமர்த்தியத் துடன் வீசத் துவங்க முற்பட்ட இளையபல்லவன், “இங்கு நான் உமது நண்பராகத்தான் வந்திருக்கிறேன்” என்று திடமாகச் சொற்களை உதிர்த்தான்.

கங்கதேவன் புருவங்கள் வியப்புடன் மேலெழுந்தன. இளையபல்லவன் பேச்சை அவன் அடியோடு நம்பவில்லை யென்பது அவன் முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. அதைக்கவனித்தும் கவனிக்காதவன்போல இளையபல்லவன் கங்க தேவனை நோக்கி, “தலைவரே! நான் சொல்வது உமக்கு வியப்பாயிருக்கலாம். ஆனால் உம்மைப்போல ஓர் அறிவாளி எதையும் ஊன்றிப் பார்க்கவேண்டும். பார்த்தால் உண்மை விளங்காமல் போகாது” என்றான்.

கங்கதேவன் புத்தி குழம்பி இருந்தது. அந்தக் குழப்பத் திலும் சந்தேகம் மேலெழுந்து நின்றது. அந்தச் சந்தேகத்தின் சாயை பூரணமாக முகத்தில் படர, குரலிலும் அது லேசாக ஒலிக்கக் கேட்டான் கங்கதேவன், “எதை ஊன்றிப் பார்க்க வேண்டும்?” என்று.

“நான் இங்கு வந்த காரணத்தை!” என்றான் இளைய பல்லவன்.

“என்ன காரணம்?”

“உமது நட்பைப் பெறவென்று முன்னமே சொன்னேன். “

“நட்பைப் பெறுபவன் குறுவாளெறியக் கொலைகாரன் ஒருவனைக் கூட அழைத்து வருவானா?”
“அது தற்காப்புக்காக. இல்லையேல் இந்த விநாடி நான் சிறையிலிருப்பேனோ சொர்க்கத்திலிருப்பேனோ சொல்ல முடியாதல்லவா?”

இளையபல்லவனின் சமாதானம் சரியே என்று பட்டது கங்கதேவனுக்கு. ஆபத்து நெருங்கும் சமயத்தில் தானும் அத்தகைய தீவிர முறையைக் கையாண்டிருக்க நேரிடும் என்பதைப் புரிந்துகொண்ட கங்கதேவன், “நட்புக்கு வந்திருக் கிறீர்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி? நீர் சொல்வதை நான் எப்படி நம்புவது?” என்று வினவினான்.

இளையபல்லவன் அவனை நெருங்கி அவன் தோள் மீது கையை வைத்தான். பிறகு சொன்னான், “நண்பரே! சற்று கடற்புறம் பாருங்கள்?” என்று.

கடற்புறத்தைச் சாளரத்தின் மூலம் நோக்கினான் கங்கதேவன். கீழ்க்கடலின் கதிரவனொளியில் கடல் புறா பயங்கரமாகத்தான் மூக்கைக் காட்டிக் கொண்டு நின்றிருந்தது. அதை கங்கதேவன் கவனிப்பதை இளையபல்லவனும் கவனித்ததால் சொன்னான், “அது பெரும் மரக்கலம் கங்கதேவரே. தளத்தில் மட்டும் இருபது விளக்குகளையும் பந்தங்களையும் உடையது” என்று.

“ஆம்” என்று கங்கதேவன் ஒப்புக்கொண்டான்.

“அந்த மற்ற இரு மரக்கலங்கள் இவ்வளவு பெரிதல்ல. இருப்பினும் சிறியவையுமல்ல. தீர்க்க வகையைச் சேர்ந்த தாரிணிகள். இரண்டும் போர்க்கலங்கள்” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.
ஆமோதிப்பதற்கறிகுறியாகத் தலையை அசைத்தான் கங்கதேவன். இளையபல்லவன் மேலும் தொடர்ந்தான். “இரண்டிலுமாகச் சேர்ந்து இருபது விளக்குகளும் இருபது பந்தங்களும் இருக்கின்றன. “

இந்தத் தகவல்களை எதற்காக இளையபல்லவன் சொல்கிறான் என்பதை அறியாத கங்கதேவன், “இருக்கலாம்” என்றான்.

கங்கதேவன் தோளிலிருந்து கையை எடுத்த இளைய பல்லவன் தானும் பஞ்சணையில் கங்கதேவன் பக்கத்திலமர்ந்து சாளரத்தில் சாய்ந்து, மொத்தம் நாற்பது விளக்குகள், நாற்பது பந்தங்கள் அந்த மூன்று மரக்கலங்களில் இருக்கின்றன” என்று கையால் அந்த மரக்கலங்களைச் சுட்டிக் காட்டிக் கூறினான்.

“அதற்கென்ன?”

“நீங்களே சொல்லுங்கள் கங்கதேவரே! கடல்மோகினித் தீவுக்கருகில் எங்கள் கப்பல்கள் வருகின்றன. கடல்புறாவின் மரத்தண்டின் உயரத் தட்டிலிருக்கும் மாலுமி கடல்மோகினித் “துறைமுகத்தில் விளக்குகளைக் காணோம் என்று அறிவிக் கிறான். கடல்மோகினி அதுவரை தமிழர்கள் கையிலிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் மாலுமிகளில் சிலர் கடல் புறாவின் சுக்கானைத் திருப்பித் திசை திருப்ப வேண்டுகிறார்கள். மற்றும் சிலர் கடல் புறாவின் தளத்திலுள்ள விளக்குகளை அணைக்கக் கூக்குரலிடுகிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர் தலைவனாயிருக்கும் கடல் புறாவின் உபதலைவன் என்ன செய்வான்?”
கங்கதேவன் மெள்ளத் திரும்பி இளையபல்லவனை நோக்கினான். அவன் முகத்தில் பழைய அவநம்பிக்கை லேசாக மறைந்திருந்தது. “அவர்கள் சொல்வதைத்தான் செய்வான்” என்று ஒப்புக்கொள்ளவும் செய்தான் கங்கதேவன்.

இளையபல்லவன் நம்பிக்கைத் தாக்குதலை மேற் கொண்டும் நடத்தினான். “அதுமட்டுமல்ல கங்கதேவரே!” என்று மெள்ளக் கூறினான்.

“வேறென்ன?” கங்கதேவன் குரலில் ஆவலிருந்தது.

“என் மரக்கலத்தை அந்த இரு மரக்கலங்களும் தாக்கின அல்லவா?”

“உம் உம்… ”

“அப்பொழுது பலவர்மன் தலையில் பலமான அடி பட்டது. “

“உம். “

“அந்த அடியில் ஜன்னி பிறந்தது. “

“உம். “

“ஜன்னியில் மனிதர்கள் என்ன செய்வார்கள்?”

“உளறுவார்கள். “
இதைக் கேட்டதும் கங்கதேவனை உற்று நோக்கினான் இளையபல்லவன். பிறகு சொன்னான் மெதுவாக, “பலவர்மனும் உளறினான். “

“என்ன உளறினான்?” என்று கேட்டான் கங்கதேவன்.

“அதைச் சொல்ல யோசனையாயிருக்கிறது. என்னைத் தூற்றினால் பாதகமில்லை. ஆனால் உங்களைத் தூற்றினான். ” இளையபல்லவன் வேண்டுமென்றே வாசகத்தை முடிக்க வில்லை .

“பாதகமில்லை, சொல்லுங்கள்” என்று உக்ரமாக எழுந்தன கங்கதேவன் சொற்கள்.

“‘அடே மடையா; இளையபல்லவா!’ என்று கூவினான் உளறலில்” என்றான் இளையபல்லவன்.

“வேறென்ன கூறினான்?”

“கடல்புறாவைத் திருப்பு, கடல்மோகினியில் இருப்பவன் கங்கதேவன், கலிங்க நாட்டவன், இருப்பினும் கொலைகாரன், கொள்ளைக்காரன், கயவன்- இப்படியெல்லாம் உளறினான். தாங்கள் விரும்பக்கூடிய சொற்களல்லதான். இருப்பினும் அந்தச் சொற்கள் எனக்கு ஊக்கத்தை அளித்தன. “

“எதற்கு?”

“இங்கு வருவதற்கு. “
“இங்கு வர ஏன் விரும்பினீர்!”

“அகூதாவிடமிருந்தவன் எதை விரும்புவான்?”

“கொள்ளையையா?”

“திரும்பவும் அந்த அநாகரிகச் சொல் எதற்கு? கடல் தொழில் என்று சொல்லுவோம். அந்தத் தொழில் என் இஷ்டப்படி நடக்க எனக்குத் தளம் தேவையாயிருந்தது. கடல் மோகினி அந்தத் தளம் என்று முன்னமே முடிவு கட்டினேன். அதனால்… ”

“அதனால்?”

“விளக்குகளையும் பந்தங்களையும் நீங்கள் பார்க்கும்படி மரக்கலங்களில் கொளுத்தினேன். அது மட்டுமல்ல… ”

“வேறென்ன?”

“நேராக மரக்கலத்தை இங்குக் கொண்டு வந்தேன். “

இதற்குப் பின் சிறிது மௌனம் சாதித்த இளைய பல்லவன் கங்கதேவன் புத்தியில் தன் பேச்சு உறைய அவகாசம் கொடுத்தான். கங்கதேவன் நீண்ட நேரம் ஆழ்ந்த யோசனையில் இறங்கினான். இளையபல்லவன் சொன்ன அனைத்தும் கோவையாயிருந்தது. எந்தப் பிசகையோ துர்எண்ணத்தையோ கண்டுபிடிக்க அவனால் முடியவில்லை. ஆகவே கேட்டான், “என்னிடமிருந்து நீங்கள் என்ன எதிர் பார்க்கிறீர்கள்?” என்று. “முதலில் இங்கு தங்க வசதி. “

“பிறகு?”

“உங்கள் கூட்டுறவு. “

“எதற்கு?”

“கூடித் தொழில் செய்ய. நீங்கள் மட்டும் என் ஏற்பாட்டுக்கு உடன்பட்டால்… ”

“என்ன ஏற்பாடு?”

“என்னிடம் மூன்று போர்க்கலங்கள் இருக்கின்றன. தங்களிடம் நான்கு போர்க்கலங்கள் இருக்கின்றன. ஏழு போர்க்கலங்கள். ” வாசகத்தை முடிக்கவில்லை இளைய பல்லவன். தூரக்கிழக்கில் சிறந்த கடலோடிகளில் ஒருவனான கங்கதேவன் மனத்தில் உண்மை விளக்கு பளிச்சென்று பிரகாசித்தது. அவன் கண்களிலும் உள்ளத்தின் ஒளி தெரிந்தது. “கடற்படையின் ஒரு பிரிவு” என்றான் குதூகலத்துடன்.

“கூட்டுறவில்தான் அது ஏற்பட முடியும்” என்று வலியுறுத்தினான் இளையபல்லவன்.

“ஆம். கூட்டுறவில்தான் ஏற்பட முடியும். தூரக்கிழக்கில் கேந்திரமான இடத்தில் ஒரு கடற்படைப் பிரிவு. அதை நடத்த இரு கடற்போர் வல்லவர்கள். இன்னும் என்ன தேவை? அவசியமானால் இந்தச் சாதனத்தைக் கொண்டு இங்கு ஓர் அரசையே ஸ்தாபிக்கலாம்” என்று படபடவென்று பேசிய கங்கதேவன் பஞ்சணையிலிருந்து எழுந்தான்! அவன் முகத்தில் பேராசையும் மகிழ்ச்சியும் பரவிக்கிடந்தது. அடுத்த விநாடி அந்த மகிழ்ச்சி மறைந்தது. சற்று வருத்தத்துடன் கூவினான் அவன், “இளையபல்லவரே, நான் இந்தக் கடல் மோகினியைத் தமிழர்களிடமிருந்து பிடித்துப் பதினைந்து நாட்களே ஆகின்றன” என்று.

அதனாலென்ன?”

“இங்கு நூறு வீடுகளே இருக்கின்றன. அதிலிருந்த தமிழரில் பாதிப் பேர் போரில் மாண்டுவிட்டார்கள். “

இதைக்கேட்ட இளையபல்லவன் இதயம் கொதித்தது. இருப்பினும் அதை வெளிக்குக் காட்டாமலே சொன்னான், “அதனாலென்ன?” என்று.

“உணவு போதிய அளவு இந்தத் துறைமுகத்தில் இல்லை” என்றான் கங்கதேவன்.

“என்னிடமிருக்கிறது. “

“எவ்வளவிருக்கும்?”

“அக்ஷயமுனையிலிருந்து கலிங்கம் செல்ல எவ்வளவு தேவையோ அவ்வளவு இருக்கிறது. “

“கடற்போர் யந்திரங்கள்?”

“கடல் புறாவில் பூரணமாயிருக்கிறது. அதன் சக்தியை முன்பே தங்களுக்குச் சொன்னேன். “

“மற்ற இரண்டு மரக்கலங்களின் நிலை?”

“அதிகமாகச் சேதப்படுத்தாமல் கைப்பற்றியிருக்கிறேன். “

கங்கதேவன் முகம் திருப்தியைக் காட்டியது. இருப்பினும் ஒரு சந்தேகம் வரவே கேட்டான், “நீங்கள் கைப்பற்றிய இரு மரக்கலங்களும் கலிங்கத்துக்குச் சொந்தம். உங்கள் மரக் கலமோ கலிங்கம் செல்லும் மரக்கலம். அப்படியிருக்க, அவை தங்களைத் தாக்குவானேன்?” என்று.

கங்கதேவன் கேள்வி இளையபல்லவனை உள்ளூர அசர வைத்தாலும் அதை அவன் வெளிக்குக் காட்டவில்லை. “அந்த இரு மரக்கலங்களும் கடல் புறாவைத் தாக்கியிருக்கலாம். கடல் புறாவும் அந்த இரண்டு மரக்கலங்களைத் தாக்கியிருக்கலாம். கடல்புறாவின் உடலில் அது எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதற்கு எந்த அடையாளமும் கிடையாது” என்று சுட்டிக் காட்டிய இளையபல்லவன் பொருள்பட கங்கதேவனை நோக்கினான்.

“பலவர்மன் காயமடைந்தது?” என்று மற்றுமொரு கேள்வியை வீசினான் கங்கதேவன்.

“போரில் என்று மாலுமிகளுக்குச் சொன்னேன்” என்ற இளையபல்லவன் போலிச் சிரிப்புச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் கங்கதேவனும் கலந்து கொண்டான். சிரிப்பின் ஊடே இளையபல்லவனையும் அணைத்துக்கொண்டு, “நண்பரே!” என்று அழைத்தான். பிறகு நட்பை ஏற்றதற்கறிகுறியாக இளையபல்லவன் கைகளிரண்டையும் பற்றிக்கொண்டான் கங்கதேவன். அத்துடன் ஒரு வரமும் கேட்டான். அந்த வரத்தைக் கேட்ட இளையபல்லவன் பெரும் பீதியடைந்தான். ஏதோ நினைத்துக் காலை வைக்கப்போகப் பாதாளத்தில் இறங்கிவிட்டதை உணர்ந்த படைத்தலைவனுக்கு என்ன செய்வது என்று அடியோடு விளங்கவில்லை.

Previous articleRead Kadal Pura Part 3 Ch13 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch15 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here