Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch15 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch15 | Sandilyan | TamilNovel.in

147
0
Read Kadal Pura Part 3 Ch15 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch15 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch15 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 15 : ஒரு சொல்.

Read Kadal Pura Part 3 Ch15 | Sandilyan | TamilNovel.in

“பொய்யுடையொருவன் சொல் வன்மையினால் மெய்போலுமே” என்ற தமிழ் மூதுரைக்கு ஏதாவது விளக்கம் தேவையாயிருந்தால் அந்த விளக்கத்தை இளையபல்லவன் கங்கதேவனிடம் கையாண்ட பேச்சு முறையில் காணலாம். பொய்கள் பலவற்றை ஆங்காங்கு சிற்சில உண்மைகளுடன் கலந்து கலந்து இளையபல்லவன் பரிமாறியதால் அவன் சொன்ன அனைத்தும் மெய்யே என நம்பிய கலிங்கத்து கங்கதேவன் அவனுடன் நட்புக் கொள்ளவே தீர்மானித்தான்.

கொள்ளையை முன்னிட்டே இளையபல்லவன் கடல் மோகினிக்குத் தனது துணைபெற வந்திருக்கிறானென்பதை அறிந்துகொண்டதால் மட்டுமின்றி, தங்கள் இருவர் கூட்டுறவால் ஏற்படக்கூடிய பெரும் லாபத்தை அவன் சுட்டிக் காட்டியதாலும், வந்திருப்பவன் அகூதாவின் உபதலைவன் என்ற காரணத்தாலும், இளையபல்லவன் விரோதத்தைவிட நட்பே தனக்குப் பலனளிக்கவல்லது என்பதை உணர்ந்து கொண்ட கங்கதேவன், விரோதத்தின் எல்லையிலிருந்து மனக்கப்பலை நட்பின் துறைமுகத்திற்கு இழுத்து நங்கூரம் பாய்ச்சினான். அந்த முடிவின் விளைவாகத்தான், “நண்பரே” என்று ஆர்வத்துடன் கூவி இளையபல்லவன் இரு கரங் களையும் பிடித்துக்கொண்டான்.

அத்துடன் விஷயம் நின்றிருந்தால் இந்தக் கதைப் போக்கும் கடல்மோகினியின் சரித்திரப் போக்கும் வேறு துறையில் திரும்பியிருக்கும். கங்கதேவன் நட்பை உறுதிப் படுத்தியதோடு நிற்காமல் மேலும் தனது எண்ணங்களை வெளியிட்டு வரம் ஒன்றையும் கேட்டான். வரத்தைக் கேட்ட வகையில் பணிவுகூட ஓரளவு இருந்தது. ஆனால் அந்த வரம் இளையபல்லவன் இதயத்தைப் பெரிதும் கலக்கியது. கங்கதேவன் அத்தனை துரிதமாக அந்த வரத்தைக் கேட்டு விட்டான். கேட்க ஆரம்பித்தது சற்றுத் தாமதமாயிருந்தாலும் முடிவு திடீரென வந்தது. இளையபல்லவன் கையைப் பிடித்துக்கொண்டு, “நண்பரே” என முதலில் துவங்கிய கங்கதேவன், “உங்களை நான் மிகவும் பாராட்டுகிறேன்” என்றான்.

கங்கதேவன் வாசகத்துக்குப் பொருள் புரியாத இளைய பல்லவன் புருவங்களைச் சற்றே நெரித்து, “எதற்குப் பாராட்டு கிறீர்கள் தேவரே?” என்று வினவினான்.

கங்கதேவன் மெள்ள நகைத்து, “உங்கள் முடிவுக்கு” என்று பதிலிறுத்தான்.

“எந்த முடிவைக் குறிப்பிடுகிறீர்கள்?” என்று எழுந்தது இளையபல்லவன் கேள்வி. கங்கதேவன் குரலிலிருந்த ஏதோ ஓர் ஒலி இளையபல்லவன் இதயத்தில் சற்றுச் சந்தேகத்தைக் கிளப்பியது. இருப்பினும் மேற்படி கேள்வியைத் தொடுத்த இளையபல்லவன் அந்தச் சந்தேகம் முகத்தில் லவலேசமும் பிரதிபலிக்காமல் சர்வசகஜமாகவே நோக்கினான் கங்க தேவனை.

கங்கதேவன் இளையபல்லவன் கரங்களை அதிகமாக இறுக்கிப் பிடித்துத் தன் நட்பின் உறுதியைக் காட்டி, “கடல் மோகினிக்கு வர நீங்கள் செய்த முடிவைத்தான் குறிப்பிடு கிறேன்” என்றான்.
“வேறு எந்த முடிவை நான் செய்ய முடியும்?” என்று கேட்டான் இளையபல்லவன்.

“முடியாது. வேறு எந்த முடிவையும் செய்ய முடியாது. கடல் மோகினியைத் தளமாக அடைவதைவிடச் சிறந்த முடிவு கிடையாது. இந்தத் துறைமுகத்தின் வசதிகள் பல” என்றான் கங்கதேவன்.

“தெரியும் எனக்கு!” இளையபல்லவனின் குரலில் வியப்பு தெரிந்தது.

கேள்வியில் தொனித்த வியப்புச் சாயை பற்றிச் சிறிதும் லட்சியம் செய்யாமலே கேட்டான் கங்கதேவன், “கடல் மோகினித் தீவு கிடைத்தற்கரிய இடம் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று.

“கண்டிப்பாய் ஒப்புக் கொள்கிறேன்” என்றான் இளைய பல்லவன், கங்கதேவன் பேச்சின் போக்குக்குக் காரணம் புரியாமலே.

“என் நட்பு?”

“அதுவும் கிடைத்தற்கரியதுதான்?”

“அதையும் ஒப்புக் கொள்கிறீர்கள்?”

“ஆம். “

“இளையபல்லவரே!”
“உம். “

“ஸ்ரி விஜயத்துக்கும் பாரதத்துக்கும் இடையே உள்ளதும் யாரும் சுலபத்தில் நெருங்க முடியாததுமான சிறந்த தளத்தில் உமக்குப் பங்கு தருகிறேன். கடற் போரில் வல்ல நானும் எனது மாலுமிகளும் உமது சகாக்களாகிறோம். இத்தனை நான் செய்வதற்குப் பதில் என்ன எனக்குத் தருவீர்கள்?” என்று வினவினான் கங்கதேவன்.

“கடற் கொள்ளையில் கிடைக்கும் எதிலும் பாதி” என்றான் இளையபல்லவன்.

“அதை நீங்கள் கொடுக்க வேண்டியதில்லை. நாளை நாம் செய்துகொள்ளப்போகும் ஒப்பந்தத்தில் அதெல்லாம் தெளிவு படுத்தப்படும். எனக்குச் சேர வேண்டியதை நானே எடுத்துக் கொள்வேன். “

“சரி. “

“அப்படியானால் நீங்களாக என்ன தருவீர்கள்?”

“என்னிடமுள்ள எதையும், என்னால் கொடுக்கக் கூடிய எதையும் தருவேன்.

“நிச்சயமாக?

“நிச்சயமாக. “

“அப்படியானால் அந்தப் பெண்ணை எனக்குக் கொடுங்கள். இந்த வரம் தேவை எனக்கு. “

எதிர்பாராதவிதமாக இடி தலையிலிறங்கினால் கூட அசையாத இளையபல்லவன் அந்த வரத்தைக் காதில் வாங்கியதும் பேரதிர்ச்சி அடைந்தான். பலவர்மன் அறையில் கங்கதேவன் காஞ்சனாதேவியைப் பார்த்த பார்வையிலிருந்தே அவன் துர் எண்ணத்தைப் புரிந்துகொண்ட இளையபல்லவன், கங்கதேவன் தாங்கள் கரை சேர்ந்த பிறகு ஏதாவது துர்ச்செய்கைகளில் இறங்குவானென்று பதிர்பார்த்தானே யொழிய இத்தகைய பகிரங்க முறையில், அதுவும் தனது நட்புக் காணிக்கையாகக் காஞ்சனாதேவியைக் கேட்பான் என்பதை எதிர்பார்க்கவில்லையாதலால், “என்ன கேட்கிறீர்கள் கங்கதேவரே!” என்று உணர்ச்சிகளைக் கைவிட்டுச் சீற்றத்துடன் கேட்டான்.

அவன் சீற்றத்தைக் கண்ட கங்கதேவன் மெல்ல நகைத்து “இளையபல்லவரே! உலகத்தில் பெண்களால் பல சிறந்த காரியங்கள் கெட்டிருக்கின்றன. அந்தப் பட்டியலில் நமது நட்பும் சேரவேண்டாம்” என்று கூறினான்.

அப்பொழுதும் எச்சரிக்கை அடையாத இளையபல்லவன், “தேவரே, நீர் கேட்பது..” என்று ஏதோ சொல்லப்போனான். அவன் சொற்களைப் பாதியிலேயே வெட்டிய கங்கதேவன், “அப்படியொன்றும் கைக்கெட்டாததல்ல” என்றான்.

அவன் சொற்களின் பொருளை நன்றாகப் புரிந்து கொண்டான் சோழர் படைத்தலைவன். அவசியமானால் பலாத்காரமாகத் தன்னிடமிருந்து காஞ்சனாதேவியை அவன் பறிக்க முடியுமென்பதையே கங்கதேவன் சுட்டிக் காட்டுகிறா னென்பதை உணர்ந்துகொண்ட சோழர் படைத்தலைவன், பலவர்மன் காய்ச்சல் உளறலில் உதித்த சொற்களின் உண்மை எத்தனை பலமானது என்பதையும் அறிந்து கொண்டதால் வெகு சீக்கிரத்தில் எச்சரிக்கையடைந்து அதுவரை பேசி வந்த குரலையும் தோரணையையும் மாற்றிக்கொண்டு, “கங்கதேவரே! நான் உங்களுக்குத் தருவதாகச் சொன்னது என் வசத்திலிருப்பதைத்தான். இந்தப் பெண் அப்படியில்லை. இவள்… ” என்று மேலே பேசுமுன்னே , “பலவர்மன் வளர்ப்பு மகள்தானே?” என்று கேட்டான் கங்கதேவன்.

“ஆம்” என்றான் படைத்தலைவன்.

“அவள் பெயர்? ஏதோ சொன்னீர்களே!”

“மஞ்சளழகி. “

“மஞ்சளழகி! மஞ்சளழகி! என்ன அழகான பெயர்! அவள் உடல் பொன்னாகத்தானிருக்கிறது. கண்கள், ஆகா எத்தனை கருமை! அந்தக் கண்களைக் கவனித்தேன். அவற்றில் தெரிந்தது..”

“என்ன தெரிந்தது?”

“உண்மை. “

“என்ன உண்மை ?”
கங்கதேவன் பெருவிழிகள், இளையபல்லவனைக் கூர்ந்து நோக்கின. “சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா?” என்று அவன் பெரு உதடுகள் அகன்று சொற்கள் உதிர்ந்தன.

“உண்மை எதையும் ஒப்புக்கொள்வேன்” என்றான் இளையபல்லவன்.

“அவள் கண்களில் தெரிந்தது உண்மை. இளைய பல்லவரே! அந்தப் பெண்ணுக்கும் உமக்கும் ஏற்கெனவே உறவு உண்டு என்பது தெளிவாகத் தெரிந்தன. உங்களை ஏதோ விழுங்கி விடுவதுபோல் எத்தனை தடவை பார்த்தாள்? என்ற கங்கதேவன், “கங்கதேவனை ஏமாற்ற முடியாது இளைய பல்லவரே! அதுவும் பெண்கள் சம்பந்தப்பட்டவரை ஏமாற்ற முடியவே முடியாது. எத்தனை நாட்டுப் பெண்களைப் பார்த்திருக்கிறான் கங்கதேவன்! பெண்களின் கண்கள் அவர்களைக் காட்டிக் கொடுக்கின்றன இளையபல்லவரே! மஞ்சளழகியின் பார்வையிலிருந்து தெரிந்து கொண்டேன் அவள் உமது அடிமை என்பதை” என்றான்.

இளையபல்லவன் ஏதும் பேசாமல் சில விநாடிகள் நின்றான். பிறகு கேட்டான், “நண்பன் விரும்பும் பெண்ணைக் கேட்பதுதான் உமது பண்பாடா?” என்று.

கங்கதேவன் இடி இடியென நகைத்தான். “பண்பாடு! என்ன அர்த்தமற்ற வார்த்தை! அதுவும் ஒரு கடற் கொள்ளைக்காரன் மற்றொரு கொள்ளைக்காரனிடம் சொல்லும் வார்த்தையா அது? அந்தச் சம்பிரதாய வார்த்தைக்கு இந்தப் பிராந்தியங்களில் பொருள் ஏது? கற்பழித்தல், களவாடல், கொள்ளையிடுதல் ஆகியவை கடல் பிராந்தியத்தில் நமது வர்க்கத்தின் வழக்கங்கள் அல்லவா? ஆகவே இளையபல்லவரே! சொல்லுங்கள். இந்தப் பெண்ணை என்னிடம் நீர் ஒப்படைக்க முடியுமா?” என்று கூறினான் நகைப்புக்கிடையே.

“அந்தப் பெண்ணை நான் ஒப்படைக்க முடியாது கங்கதேவரே!” என்று திட்டமாகக் கூறினான் இளையபல்லவன் பதிலுக்கு.

“ஏன்?”

“நீர் நினைப்பதுபோல் அந்தப் பெண் எனது அடிமை யல்ல. தவிர… ”

“தவிர?”

“அவள் தந்தை நினைவிழந்து படுத்திருக்கிறார். “

“அதற்கும் அவளை நான் அடைவதற்கும் என்ன சம்பந்தம்?”

“பெண்களைப்பற்றி எல்லாம் தெரிந்ததாகச் சொல் கிறீர்கள். ஆனால் முக்கியமானது தெரியவில்லை உங்களுக்கு. “

“என்ன முக்கியமானது?”

“அவர்கள் மனோபாவம். தந்தையின் நிலை அபாயமா யிருப்பதால் மனம் கலங்கியிருக்கும் பெண்ணைத் துன்புறுத்துதல் கயவர் செய்யும் வேலை. “

இதைக்கேட்ட கங்கதேவன் சற்று யோசித்தான். இளைய பல்லவன் சொன்ன சொற்களில் சிறிது உண்மை இருப்ப தாகவே புலப்பட்டது அவனுக்கு. அதுவும், துன்பப்படும் பெண்ணைப் பலவந்தப்படுத்துவதில் இன்பமிருக்க முடியாது என்பதையும் உணர்ந்துகொண்ட அவன், “சரி இளைய பல்லவேர! அவள் தந்தை தேகநிலை குணப்பட்ட பிறகு?” என்று வினவினான்.

“உங்களிஷ்டம்போல் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் தலையிடவில்லை. ஆனால் மீண்டும் சொல்கிறேன். அந்தப் பெண்ணிடம் எனக்கு எந்த உரிமையும் கிடையாது” என்று இளையபல்லவன் கூறினான்.

“இது போதும் எனக்கு” என்று கூறிய கங்கதேவன் அதற்கு மேல் உரையாடலை வளர்த்த இஷ்டப்படாமல் இளைய பல்லவனுடன் கைகோர்த்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்து வெளியே நின்ற காவலரை விளித்து இளைய பல்லவனுக்குத் தேவையான சகல வசதிகளையும் அளிக்க உத்தரவிட்டான். அத்துடன் கங்கதேவனிடம் விடைபெற்றுக் கொண்ட இளையபல்லவன், அமீர் பின்தொடர மாளிகைக்கு வெளியே வந்து தன்னுடன் வந்த மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு துறைமுகத்தின் முனைப்புக்கு வந்து நீண்ட நேரம் கடலையே பார்த்துக்கொண்டு நின்றான். பிறகு திரும்பி காளத்தி நதி பாயும் இடங்களையும் அங்கிருந்த கடற்கோரைகளையும் கவனித்தான். அடுத்தபடி படகைக் கொண்டுவரச் சொல்லி, கடல் புறாவுக்குத் தனது சகாக்களுடன் வந்து சேர்ந்தான்.

கங்கதேவன் அறையிலிருந்து வெளிவந்தது முதல் இளைய பல்லவன் மனம் பெரிதும் குழம்பிக் கிடந்ததை முகபாவத்திலிருந்தே அமீர் அறிந்துகொண்டான். கடற்கரையில் வந்தும் கூட இளையபல்லவன் உடனே படகைக் கொண்டுவரச் சொல்லாமல் நீண்ட நேரம் கடற்கரையையும், காளத்தி நதியையும் வெறித்து வெறித்து நோக்கியதையும் கண்டு இளையபல்லவன் இதயத்தை ஏதோ பெரும் துன்பம் சூழ்ந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டான்.

அதைப்பற்றி இருமுறை கேட்க அவன் முற்பட்டும் இளையபல்லவன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாததிலிருந்து இளையபல்லவன் அடியோடு சுயநிலை இழந்துவிட்டதைப் புரிந்து கொண்ட அமீர் பிரமித்தான். பெரிய பெரிய அபாயங்கள் நேர்ந்த போதெல்லாம் நிதானமிழக்காத இளையபல்லவனே நிதானத்தை இழக்க வேண்டுமானால் கங்கதேவன் ஏதோ பெரும் வெடியை இளையபல்லவன் மீது வீசி இருக்கிறான் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் அமீர்.

இளையபல்லவன் யார் உணர்ச்சியையும் கவனிப்பதிலோ லட்சியம் செய்வதிலோ சிறிதும் சிரத்தை காட்டாமல் கடல் புறாவை அடைந்து நேரில் தனது அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டான். பல நாழிகைகள் அடைத்த கதவு அடைத்தபடியே இருந்தது. அறைக்குள் நுழையுமுன்பு கண்டியத்தேவனை அழைத்து யாரும் தன் அறைக்கு வர வேண்டாமென்றும் இளையபல்லவன் உத்தரவிட்டுச் சென்ற படியால் யாரும் அந்தப் பக்கம் போகவே இல்லை.

இளைய பல்லவன் உத்தரவும் போக்கும் கண்டியத்தேவனுக்கும் புதிரா யிருக்கவே அவன் அமீரை அதற்குக் காரணம் விசாரித்தான். அமீர் தனக்குத் திட்டமாகக் காரணம் தெரியாதென்றும், கங்கதேவன் அறையிலிருந்து வெளிவந்த இளையபல்லவன் கங்கதேவன் பணியாட்கள் தயார் செய்திருந்த விருந்தைக் கூட மறந்து நேராகக் கடற்கரை வந்துவிட்டானென்றும் அறிவிக்கவே கண்டியத்தேவன் மேலும் குழம்பினான். நாழிகைகள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. மாலைப் பொழுதும் துரிதமாக அணுகிக்கொண்டிருந்தது. சீக்கிரம் மரக் கலங்களைத் துறைமுகத்துக்குக் கொண்டு போகாவிட்டால் ஒருநாள் வீணாகும் என்பதை நினைத்துப் பார்த்த கண்டியத் தேவன் நிலைமையைப் பற்றி அமீருடன் கலந்து பேசத் தொடங்கி, “அமீர்! பொழுது போகிறதே” என்றான்.

ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் அமீர். “கடல்மோகினியில் நாம் காலை வைக்க வேண்டுமானால் பகல் வெளிச்சம் இருக்கும்போதே கால்வைப்பது நல்லதல்லவா?” என்று கேட்டான் கண்டியத்தேவன்.

“ஆம். “

“தலைவரை எப்படி அணுகுவது!”

“அணுகமுடியாது. அவர் உத்தரவுதான் திட்டமா யிருக்கிறதே. “

“அவர் பழைய உத்தரவை வைத்துக்கொண்டு கலிங்கத்தின் இரு மரக்கலங்களையும் கரைக்குக் கொண்டு போய்விட்டாலென்ன?”
“உங்கள் பொறுப்பில் வேண்டுமானால் அதைச் செய்யுங்கள். “

“ஏன்?”

“நான் பொறுப்பில் பங்குகொள்ள மாட்டேன். “

“ஏன்?”

“கரையிலிருந்து திரும்பிவந்த பிறகு படைத்தலைவர் எண்ணமோ திட்டமோ மாறியிருக்கலாம். ‘

அமீர் சொன்னதில் அர்த்தமிருப்பதாகவே பட்டது கண்டியத்தேவனுக்கு. படைத்தலைவன் உத்தரவின்றிக் கப்பல்களை நகர்த்துவதும் பிசகு. நகர்த்தாதிருந்தாலும் பிசகு. சீக்கிரம் கரையை அடைந்து பழுது பார்க்கும் வேலையைச் சீக்கிரமாகத் துவங்குவதே அப்பொழுது செய்ய வேண்டிய முக்கிய வேலை. இந்த எண்ணங்களால் என்ன செய்வதென்று அறியாமல் திணறினான் கண்டியத்தேவன். திடீரென அவனுக்கு யோசனை தோன்றவே அமீரின் தோளைப் பலமாகத் தட்டி, “அமீர்! ஒரு யோசனை தோன்றுகிறது எனக்கு” என்றான்.

“என்ன யோசனை தேவரே?” என்று கேட்டான் அமீர்.

“நாம்தான் படைத்தலைவரைத் தொந்தரவு செய்ய முடியாது. “

“யாரும் செய்யக் கூடாதெனப் படைத்தலைவர் உத்தரவு. “
“எந்த உத்தரவுக்கும் ஒரு விலக்கு உண்டு அமீர். “

“இந்த உத்தரவுக்கு?”

“காஞ்சனாதேவி விலக்கு” என்று கூறினான் கண்டியத் தேவன்.

“ஆம் ஆம். அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி படைத் தலைவர் கருத்தை அறியலாம்” என்று அமீரும் ஒப்புக் கொண்டான்.

நல்ல திட்டத்தைத்தான் வகுத்தான் கண்டியத்தேவன். நிறைவேறக்கூடிய திட்டம்தான். திருப்திகரமாக நிறைவேறக் கூடிய திட்டமும்கூட. ஆனால் எந்தத் திட்டமும் நிறை வேற்றுபவனைப் பொறுத்திருக்கிறது. கண்டியத்தேவன் தன் திட்டத்தை நிறைவேற்றப் பொறுக்கிய மனிதன் சரியானவ னல்ல. அவனால் பெருவினையே விளைந்தது. முடிவு விபரீதமாயிருந்தது. தன் திட்டத்தை நிறைவேற்ற சேந்தனைத் தேர்ந்தெடுத்துக் காஞ்சனாதேவியிடம் அனுப்பினான் கண்டியத்தேவன். சேந்தன் தனது முட்டாள்தனத்தை மிகத் தெளிவாகக் காட்டினான். அவன் சொன்ன ஒரு சொல் பேராபத்தை, விபரீதத்தை விளைவித்தது. முட்டாளின் ஒரு சொல்லுக்கு எத்தனை வலிமை உண்டென்பதைக் கண்டியத் தேவன் மட்டுமல்ல, இளையபல்லவன் கூடப் புரிந்து கொண்டான்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch14 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch16 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here