Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch16 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch16 | Sandilyan | TamilNovel.in

112
0
Read Kadal Pura Part 3 Ch16 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch16 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch16 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 16 : பெண் எனும் புயல்.

Read Kadal Pura Part 3 Ch16 | Sandilyan | TamilNovel.in

கடல் புறாவில் தலைவனுக்கெனப் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த அக்ரமந்திரத்திற்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்ட இளையபல்லவனைக் காஞ்சனாதேவி மூலம் அணுகத் தீர்மானித்த கண்டியத்தேவன் அந்தச் சமயத்தில் இருந்த எத்தனையோ வேதனையுடன் சிறிது தற்பெருமையும் கொண்டான். அக்ரமந்திரத்தைத் தான் சிருஷ்டித்த சமயத்தில் மற்ற சாதாரண அக்ரமந்திரங்களைப் போல் அதை நிறுவாமல் அதற்கு இரண்டு வாயிற்படிகளையும் கதவையும் வைத்தது எத்தனை சாமர்த்தியம் என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டதல்லாமல் அதைப் பற்றி அமீருடனும் பிரஸ்தாபிக்கத் தொடங்கி, “நல்லவேளை அமீர்! அக்ரமந்திரத்தை அடைய வாயில்கள் இரண்டை அமைத்தேன்” என்றான் கண்டியத்தேவன்.

அப்பொழுதிருந்த ஆபத்தான சமயத்தில் கண்டியத் தேவனின் கப்பல் கட்டும் திறனைப்பற்றிப் பாராட்டும் மன நிலையில் இல்லாத அமீர், “ஆமாம் ஆமாம்! உமது திறமை பாராட்டத் தக்கதுதான்” என்று ஏளனத்துடன் கூறினான்.

அந்த ஏளனத்தைப் பற்றிச் சிறிதும் லட்சியம் செய்யாத கண்டியத்தேவன், “நீ எள்ளி நகையாடலாம் அமீர்! ஆனால் அந்த இரண்டு வாயில்களை நான் அமைத்திராவிட்டால்…?” என்று ஏதோ புது அர்த்தம் பார்வையில் தொனிக்க அமீரை நோக்கினான்.

“அமைத்திராவிட்டால் குடி முழுகிப் போய்விடுமாக்கும்?” என்றான் அமீர் இகழ்ச்சி குரலில் பிரதிபலிக்க.

“ஆம். ” திட்டமாக வந்தது தேவனின் பதில்.

“யார் குடி?” எரிச்சலுடன் எழுந்தது அமீரின் கேள்வி.

“இந்தக் கடல் புறாவின் குடி இந்தக் கடல் புறாவைக் காப்பாற்ற இளையபல்லவரை அணுகவேண்டும். அவரோ அக்ரமந்திரத்தைத் தாழிட்டுக்கொண்டுவிட்டார். அணுகக் கூடிய காஞ்சனாதேவியோ…?” வாசகத்தை முடிக்காமலே நிறுத்தினான் கண்டியத்தேவன்.

“உம். சொல்லுங்கள். “

“அக்ரமந்திரத்தின் உள்ளறையில் இருக்கிறார்கள் பலவர்மனுடன். “

அப்பொழுதுதான் விளங்கியது அமீருக்கு நிலைமை. “அக்ரமந்திரத்தில் இருக்கும் இளையபல்லவனும் காஞ்சனா தேவியும் இத்தனை நேரம் எப்படிச் சந்திக்காமல் இருக்க முடியும்?” என்று நினைத்த அமீர் அதைக் கேட்டும் விட்டான் கண்டியத்தேவனை.

“பலவர்மனும் காஞ்சனாதேவியும் இருக்கும் உள்ளறைக்கும் அக்ரமந்திரத்திற்கும் இடையே கதவிருக்கிறது அமீர். ஆனால் இப்பொழுதுள்ள மனநிலையில் அதையும் படைத்தலைவர் தாழிட்டிருப்பார். சந்தேகமே வேண்டாம். ஆகவே அக்ரமந்திரத்தின் மறு பக்கத்தில் நான் அமைத் திருக்கும் சிறு ரகசிய வாயிலைத் திறக்கிறேன். அதன் வழியாகக் காஞ்சனாதேவி இருக்கும் உள்ளறையை அடையலாம்” என்றான் கண்டியத்தேவன்.

“அந்த வாயிலைப்பற்றி இதுவரை நீர் எதுவுமே சொல்ல வில்லையே!”

“இல்லை. சொல்லும் வழக்கமில்லை. “

“இதில் வழக்கம் வேறா?”

“ஆம் அமீர். கப்பலில் உள்ள ரகசிய அறைகள், இதர சூட்சுமங்கள், கப்பலை அமைப்பவனுக்கும் அதை இயக்கும் தலைவனுக்கும் மட்டுமே தெரியலாம் என்பது சாத்திரம். இப்பொழுது ஆபத்து நம்மை எதிர்நோக்கி இருப்பதால் அந்த வாயிலைத் திறக்கிறேன். சேந்தனைக் கூப்பிடு” என்றான் கண்டியத்தேவன்.

அமீரின் முகத்தில் வியப்பு விரிந்தது. “கூலவாணிகனா! அவனெதற்கு?” என்று வினவினான் அமீர், வியப்பு குரலிலும் ஒலிக்க.

“அவன்தான் நமது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். “

“ஏன்?”

“அவன்தான் காஞ்சனாதேவியின் அறைக்குள் நுழைய முடியும். “

“ஏன்? நாம்…?”

“நுழையலாம். நுழைந்த காரணத்தைச் சட்டென்று விவரிக்க முடியாது. விவரித்தாலும் நாம் சொல்வதைக் காஞ்சனாதேவி எடுத்துக்கொள்ள மறுத்தால் நிலைமை சீர் கெட்டுவிடும். சேந்தன்தான் இதற்குத் தகுதி. அவன் பலவர்ம னுக்குச் சிகிச்சை செய்யும் காரணத்தால் சதா காஞ்சனா தேவியுடன் இருக்கிறான். அவன் விரிவாகப் பேசுகிற அளவுக்கு நாம் பேச முடியாது” என்று விளக்கினான் கண்டியத்தேவன்.

கண்டியத்தேவன் கருத்து சரியென்றே பட்டது அமீருக்கு. ஆகவே சேந்தனையே காஞ்சனாதேவியிடம் தூதனுப்பத் தீர்மானித்து அவனை வரவழைக்கவும் செய்தான் அமீர். அவர்கள் அழைப்புக்கிணங்கித் தளத்துக்கு வந்த சேந்தனை, “எங்கிருந்து வருகிறீர் கூலவாணிகரே?” என்று வினவினான் அமீர்.

“கீழிருந்து” என்றான் கூலவாணிகன்.

“கீழே எங்கிருந்து?”

“சமையலறையிலிருந்து. கரையில் விருந்தில் மண் விழுந்து விட்டது. கடல்புறாவிலும் அதற்கு ஏன் தடையிருக்க வேண்டுமென்று யோசித்தேன். “

“நல்ல யோசனை கூலவாணிகரே! உணவு அருந்தி விட்டீரா?” என்று குறுக்கே சம்பாஷணையில் புகுந்தான் கண்டியத்தேவன்.

“இல்லை, உட்கார்ந்தேன். அமீர் அவசரமாக அழைத்ததாகச் செய்தி வந்தது. எழுந்து வந்துவிட்டேன்” என்றான் சேந்தன் வருத்தத்துடன்.

“நல்ல வேலை செய்தீர்” என்று அமீர் பாராட்டினான்.

“எது நல்ல வேலை? பட்டினி கிடப்பதா?” என்று சீறினான் சேந்தன்.

“ஆம். சில வேளைகள் உபவாசம் உடலுக்கு நல்லது” என்ற கண்டியத்தேவன், மேற்கொண்டு அந்த சம்பாஷணையைத் தொடர இஷ்டப்படாமல், “நன்றாகக் கவனியுங்கள் கூலவாணிகரே! நாம் பேராபத்திலிருக்கிறோம். இன்று இருட்டுவதற்குள் மரக்கலங்கள் துறைமுகத்துக்குள் செல்ல வேண்டும். பொழுது ஓடுகிறது. ” என்று சுட்டிக் காட்டினான்.

“அதற்கு நான் என்ன செய்யட்டும்? நான் என்ன கப்பல் தலைவனா!” என்று வினவினான் சேந்தன் குழப்பத்துடன்.

“நல்ல வேளையாக அந்த துர்பாக்கியம் கடல் புறாவுக்கு ஏற்படவில்லை” என்று குறுக்கிட்டான் அமீர்.

“அமீர்!” சேந்தன் சொல் ஆத்திரத்துடன் உதிர்ந்தது.

“கோபம் வேண்டாம் கூலவாணிகரே! அமீர், சும்மா இரு” என்று இருவரையும் சமாதானப்படுத்திய கண்டியத்தேவன், “கூலவாணிகரே! உமது உதவி இருந்தால்தான் கப்பல் துறைமுகத்தில் நுழைய முடியும்” என்றான்.
கூலவாணிகன் முகத்தில் பெருமை மிதமிஞ்சிப் பரவியது. “என்னால் முடிந்ததைச் செய்கிறேன் தேவரே!” என்று பெருமை குரலில் தாண்டவமாடச் சொன்ன சேந்தன் அதே பெருமை நிலவிய பார்வையை அமீர் மீதும் வீசினான். அமீரின் இதழ்களில் இகழ்ச்சிக் குறி படர்ந்தது. அவன் ஏதோ பதில் சொல்லப் போனதைத் தடுத்த கண்டியத்தேவன், “நமது சச்சரவுகளுக்குச் சமயம் இதல்ல” என்று கண்டித்துவிட்டு சேந்தனை நோக்கி, “கூலவாணிகரே! படைத்தலைவர் அக்ர மந்திரத்துக்குள் சென்று கதவை மூடிக்கொண்டுவிட்டார்” என்றான்.

“ஆம். தெரியும். “

“யாரும் தன்னைத் தொந்தரவு செய்யக் கூடாதென உத்தரவு இட்டிருக்கிறார். “

” அதுவும் தெரியும். “

“அவர் உத்தரவில்லாமல் கப்பல்களை எப்படிக் கரையை நோக்கிச் செலுத்துவது?”

“முடியாது முடியாது” என்ற சேந்தன், நிலைமையைப் புரிந்து கொண்டதோடல்லாமல், கண்டியத்தேவன் அழைத்த காரணத்தையும் புரிந்து கொண்டதால், இந்தப் பணி நம்மால் முடியாது தேவரே,” என்றான்.

“எந்தப் பணி?” கோபத்துடன் எழுந்தது கண்டியத்தேவன் கேள்வி.
“நீங்கள் கோபித்துப் பயனில்லை தேவரே! தலைவர் உத்தரவுக்கு மாறாகக் கதவைத் தட்டி அவரை அணுகச் சொல்கிறீர்கள் என்னை. தலைவருக்குக் கோபம் வந்தால் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அவர் கோபத்துக்கு என்னைக் காவு கொடுக்க நீங்களிருவரும் சதி செய்கிறீர்கள்?” என்று குரல் நடுங்கச் சொன்னான் சேந்தன்.

இத்துடன் பொறுமை இழந்த அமீர் திடீரென சேந்தன் அங்கியைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கி, “முட்டாள்! உன்னை யார் போகச் சொன்னது தலைவரிடம்?” என்று சீறினான்.

அமீரின் பிடியிலிருந்து சேந்தனை விலக்கிய கண்டியத் தேவன், “கூலவாணிகரே! நீங்கள் படைத்தலைவரைச் சந்திக்கத் தேவையில்லை. உள்ள நிலைமையை நீங்கள் காஞ்சனாதேவிக்கு எடுத்துச் சொல்லவேண்டும். அவ்வளவு தான் உமது வேலை” என்றான்.

அப்பொழுதும் கண்டியத்தேவனைச் சந்தேகத்துடன் பார்த்த சேந்தன், “காஞ்சனாதேவி உள் அறையிலிருக்கிறார் களே! அவர்களை எப்படி அணுகுவது?” என்று வினவினான்.

“வேறு வழி இருக்கிறது” என்று கூறிய கண்டியத்தேவன், “கூலவாணிகரே, கவனமாகக் கேளுங்கள். கப்பல்களை நங்கூர மெடுத்துத் துறைமுகத்துக்குள் கொண்டு செல்லப் படைத் தலைவர் அனுமதி வேண்டுமென்பதையும் பொழுது ஓடுகிற தென்பதையும் காஞ்சனாதேவியிடம் விளக்கிச் சொல்லுங்கள். அதுமட்டுமல்ல, கங்கதேவனிடம் பேசிவிட்டு வந்த தலைவர் மிகவும் குழப்பத்திலிருப்பதாகவும் அவரை அணுக நாம் பயப்படுவதாலேயே அவரை அந்தப் பணியைச் செய்யும்படி நாம் கேட்பதாகவும் சொல்லுங்கள். அக்ரமந்திரத்தின் உள்ளறைக்கும் பிரதான அறைக்குமிடையே உள்ள வாயிலைத் தட்டி, படைத்தலைவரைச் சந்திக்கச் சொல்லுங்கள். எப்படியும் தலைவர் உத்தரவு இன்னும் ஒரு நாழிகைக்குள் தேவையென்று சொல்லுங்கள்” என்று கூறினான்.

இதைக்கேட்ட சேந்தன், “இதை நீங்களே காஞ்சனாதேவி யிடம் கூறினால் என்ன?” என்று வினவினான்.

“கூறலாம். ஆனால் அக்ரமந்திரத்தின் பிரதான வாசல் அடைத்திருக்கிறது. திட்டிவாசல் வழியாக நுழைகிறோம். நாங்கள் நுழைவதைவிட நீர் நுழைவது பொருந்தும். நீர் மருத்துவரல்லவா?” என்றான் கண்டியத்தேவன்.

சேந்தன் இதயத்தில் மீண்டும் பெருமை எழுந்தது. மருத்துவனாயிருப்பதால் எத்தனை பேர் தனது தயவை நாடுகிறார்களென்று உணர்ந்து மகிழ்ந்து கண்டியத்தேவன் கட்டளையை நிறைவேற்ற உடன்பட்டான். அத்துடன் மற்ற மாலுமிகளைக் கப்பலை நகர்த்துவதற்கு வேண்டிய ஏற்பாடு களுக்குத் தூண்ட அமீரை அனுப்பிவிட்ட கண்டியத்தேவன், அக்ரமந்திரத்தின் மறுபுறத்துக்குச் சேந்தனை அழைத்துச் சென்று அங்கிருந்த சூட்சும ஆணியொன்றை அழுத்த ஒரு பலகை நகர்ந்து திட்டிவாசல் திறந்தது. அந்த வாயில் மூலமாகச் சேந்தன் உள்ளே நுழைந்தான்.

திடீரெனப் பின்பக்கத்தில் ஒரு வாயில் திறந்ததும் அதன் வழியாகச் சேந்தன் நுழைந்ததும் பிரமிப்பாயிருந்தது காஞ்சனா தேவிக்கு. பலவர்மன் பஞ்சணை முகப்பில் உட்கார்ந்திருந்த காஞ்சனாதேவி வியப்புடன் அந்தப் புது வாயிலையும் பார்த்து சேந்தனையும் பார்த்தாள். பிறகு கேட்டாள், “இப்படி ஒரு வாயில் இருக்கிறதா இங்கு!” என்று வியப்பு குரலில் பூரணமாகப் பிரதிபலிக்க.

“ஆம், இருக்கிறது” என்று தான்தான் அதைக் கண்டு பிடித்ததுபோல் கூறிய கூலவாணிகள் நேராக மஞ்சத்திடம் சென்று பலவர்மன் நாடியைப் பரிசோதித்தான். பிறகு, “பாதக மில்லை! நாடி திட்டமாகவும் சரியான வரையறையுடனும் துடிக்கிறது” என்றான்.

“சீக்கிரம் குணமாகுமா இவருக்கு?” என்று கேட்டாள் காஞ்சனாதேவி.

குணமாகும் அல்லது நாள் பிடிக்கும் என்று பதில் சொல்லவேண்டிய சேந்தன் வேண்டுமென்றே சொற்களைக் கூட்டி, “கரைக்குச் சென்று சிகிச்சை செய்தால் சீக்கிரம் குணப்படும்” என்றான்.

“கரைக்குப் போவதில் இன்னும் ஏன் தாமதம்?” என்று வினவினாள் காஞ்சனாதேவி கவலையுடன்.

“கரைக்குப் போகத் தலைவர் உத்தரவு வேண்டுமல்லவா?” சாதுர்யத்துடன் பேசினான் சேந்தன்.

“ஏன், தலைவர் கட்டளையிடவில்லையா?” என்று கேட்டாள் காஞ்சனாதேவி.

“இல்லை . “

“ஏன்?”

“தலைவரை யாரும் பார்க்க முடியவில்லை. “

“ஏன் பார்க்க முடியவில்லை ?”

“அக்ரமந்திரத்துக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு விட்டார். யாரும் கதவைத் தட்டக்கூடாதெனக் கண்டிப்பான உத்தரவும் பிறப்பித்திருக்கிறார். “

சேந்தன் பதில் காஞ்சனாதேவிக்குக் குழப்பத்தையும் ஓரளவு கவலையையும் விளைவிக்கவே அவள் சென்று இரண்டு அறைகளுக்குமிடையே இருந்த கதவைச் சற்றுத் தள்ளிப் பார்த்தாள். கதவு அந்தப்புறம் தாழிடப்பட்டிருந்தது. அதைக் கண்டு சற்று நேரம் நின்று நிதானித்து உற்றுக் கேட்டாள். அடுத்த அறையில் இளையபல்லவன் நடமாடும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டுத் திரும்பிய காஞ்சனாதேவி, “கூலவாணிகரே! இளையபல்லவர் பெரும் குழப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது” என்றாள்.

“குழப்பம் என்பதைவிட வேதனை என்பது பொருந்தும்” என்றான் கூலவாணிகன்.

“அவரை இப்பொழுது… ” என்று இழுத்தாள் காஞ்சனா தேவி.

“உங்களைத் தவிர வேறு யாரும் அணுக முடியாது” என்றான் சேந்தன்.

இதைக்கேட்ட காஞ்சனாதேவியின் உள்ளத்தில் கவலை யுடன் ஆனந்தமும் கலந்து பிரவாகித்தது. இளையபல்லவன் மீது தனக்குள்ள சக்தியை அவள் உணர்ந்திருந்தாள். காதலனிடம் தனக்குள்ள சக்தியை உணராத காதலி உலகத்தில் யார்? ஆகவே அந்த எண்ணத்தால் ஏற்பட்ட பெருமிதத்துடன் கேட்டாள், “இப்பொழுது நான் என்ன செய்யவேண்டும் கூலவாணிகரே?” என்று.

“படைத்தலைவரை அணுகி, கப்பல்களை நகர்த்த அனுமதி பெறவேண்டும். “

“வேறு யாரும் அவரை அணுக முடியாதா?”

இந்தச் சமயத்தில் சேந்தன் தனது முட்டாள்தனத்தைக் காட்டினான். அதைச் சாமர்த்தியமென்று நினைத்து, “வேறு ஒருவரும் உண்டு..” என்று இழுத்தான்.

“யாரது?” கடுமையாக எழுந்தது காஞ்சனாதேவியின் கேள்வி.

அந்தக் கடுமையைக் கவனிக்காமலே சொன்னான் கூலவாணிகன், “மஞ்சளழகி” என்று.

“யாரது மஞ்சளழகி?” காஞ்சனாதேவியின் குரலில் சினம் பெரிதும் ஒலித்தது.

“பலவர்மன் புதல்வி. “

“என் சிறிய தந்தைக்குக் குழந்தைகள் கிடையாது. “

“வளர்ப்புப் பெண் உண்டு. “

“அவள்தான். “

“மஞ்சளழகி. “

“அவளுக்கும் தலைவருக்கும் என்ன சம்பந்தம்?” இந்தக் கடைசிக் கேள்வி மிகுந்த சினத்துடன் எழுந்தது.

அவள் கோபத்தைக் கண்ட சேந்தன் தனது தவறை உணர்ந்து கொண்டான். ஆனாலும் அதை மறைக்கவோ பின்வாங்கவோ வழியில்லாமல், இருவருக்கும்… இருவருக்கும்” என்று உளறினான்.

“என்ன இருவருக்கும்?” இடியென எழுந்தது காஞ்சனா தேவியின் கேள்வி.

“மணமாக இருந்தது. மன்னிக்க வேண்டும் தேவி, ஆனால் மணம் நடக்கவில்லை… சமயத்தில்… சமயத்தில்” உளறினான் சேந்தன்.

“உம்! சொல். “

“வேறு சந்தர்ப்பங்கள் குறுக்கிட்டன. “

காஞ்சனாதேவியின் கோபம் எல்லை கடந்தது. எல்லை கடந்த கோபம் வெளியில் தெரியவில்லை. ‘சந்தர்ப்பங்கள் குறுக்கிட்டன. இல்லாவிட்டால் அவளை மணம் செய்து கொண்டிருப்பார்?’

“அப்படியா சரி சரி. நீ போ வெளியே” என்று உத்தரவிட்ட அவள் இரண்டு எட்டில் அக்ரமந்திரத்தின் இடைக் கதவைத் தடதடவெனத் தட்டினாள்.

அது திறந்ததும் புயல் புகுவதுபோல் உள்ளே புகுந்தாள். அந்தப் புயலில் அகப்பட்ட படைத்தலைவன் தத்தளித்தான். அவன் மட்டுமல்ல, கடல்புறாவும் தத்தளித்தது. கடல்புறா மட்டுமல்ல, அதிலிருந்த சகலரும் தத்தளித்தார்கள். ‘பெண் எனும் புயல் இத்தனை பயங்கரமானதா?’ என்று அமீர் தன்னைத்தானே பலமுறை கேட்டுக்கொண்டான் அன்றும் மறுநாளும்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch15 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch17 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here