Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch17 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch17 | Sandilyan | TamilNovel.in

87
0
Read Kadal Pura Part 3 Ch17 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch17 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch17 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 17 : சரணாகதி.

Read Kadal Pura Part 3 Ch17 | Sandilyan | TamilNovel.in

அக்ரமந்திரத்தின் பிரதான அறைக்கும் உள்ளறைக்கு மிடையேயிருந்த சிறு கதவைத் திறந்துகொண்டு மிதமிஞ்சிய கோபத்துடன் புயலென உள்ளே நுழைந்த பெண்ணரசியான காஞ்சனாதேவியின் கண்கள் இளையபல்லவனைக் கண்டதும் சில விநாடிகள் அச்சத்தின் வசப்பட்டபடியால் அவள் அடைந்திருந்த கோபத்தின் ஊடே திகிலும் ஓரளவு புகுந்து கொண்டதன் விளைவாகக் கால்கள் சட்டென்று தேங்கி நிற்கவே செய்தன. இளையபல்லவன் முகத்தில் அன்றுவரை தான் காணாத கோபத்தின் ஜ்வாலை கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்ததையும், தான் உள்ளே நுழைந்ததும் காதல் அம்சம் என்பது சிறிதும் இல்லாத கடுமையான கண்கள் தன் கண்களை வெட்டி விடுவனபோல் சந்தித்ததையும் பார்த்த காஞ்சனாதேவி சில விநாடிகள் பிரமித்தே போனாள்.

அவன் கண்களிலிருந்த சீற்றம் தன் சீற்றத்தை ஒரு நிலையில் நிற்க முடியாதபடி அடித்துவிட்டதையும் கண்ட அவள், பெண்கள் முன்பு எப்பொழுதும் பல்லிளிக்கும் புருஷர்களின் உறுதி சில சந்தர்ப்பங்களில் பெண்களை வெறுக்கவும் வல்லது என்பதையும் அந்தச் சில விநாடிகளில் புரிந்துகொண்டாள். ஆகவே அவள் வந்த வேகம் தடைப்பட்டது. கோபமும் தடைப்பட்டது. அப்படித் தடைப்பட்டு நின்ற காஞ்சனா தேவியை நோக்கி, “இங்கு எதற்கு வந்தாய்?” என்று இளைய பல்லவனின் சுடுசொற்கள் சீறி வந்தன.

அந்தச் சொற்களைக் கேட்ட காஞ்சனாதேவி ஒரு விநாடி திகைத்தாள். அடுத்த விநாடி அந்தத் திகைப்பை உதறிக் கொண்டு மஞ்சளழகியின் மணவாளனாக இருந்தவன் இளையபல்லவன் என்ற கருத்தை மீண்டும் இதயத்தில் ஏற்றுக் கொந்தளிப்பு அடைந்தாள். ஆகவே, “இங்கு வந்தாலென்ன!” என்று வினவினாள் அந்தக் கொந்தளிப்பைக் குரலில் நன்றாகப் பாய்ச்சி.

இளையபல்லவன் கண்களில் சீற்றம் சிறிதும் குறைய வில்லை. காஞ்சனாதேவியைக் கண்டதும் அவன் மனம் கங்கதேவனை நினைத்தது. கங்கதேவனை நினைத்ததும் அவன் கேட்ட வரத்தை நினைத்தது. ஆகவே உள்ளம் கடலெனப் பொங்கியது. அந்தப் பொங்கிய கடலின் அலைகளிலிருந்து உஷ்ணத் துளிகள் சொற்களாக அள்ளித் தெளித்தன எதிரே இருந்த அஞ்சுகத்தின்மீது. “இங்கு யாரும் வரக்கூடாது என்று கட்டளை பிறப்பித்திருக்கிறேன்” என்றான் இளையபல்லவன் காஞ்சனாதேவியை நோக்கி.

காஞ்சனாதேவியின் கண்கள் சரேலென அவனை ஏறெடுத்து நோக்கின. “அந்தக் கட்டளையைப் பற்றி எனக்கு அக்கறையில்லை” என்றாள் கோபமும் அலட்சியமும் கலந்த குரலில்.

“கப்பலில் தலைவன் கட்டளையை மீறுபவர்களுக்குத் தண்டனை உண்டு. ” இளையபல்லவன் குரலில் உஷ்ணம் ஏறிக்கொண்டு போயிற்று.

“தெரியும் எனக்கு” என்றாள் காஞ்சனாதேவி.

“தெரிந்துமா வந்தாய்?”
“ஆம். “

“நான் தனிமையை விரும்புகிறேன். “

“யாரிடமிருந்து?”

“எல்லோரிடமிருந்தும். “

“இல்லை, இல்லை, என்னிடமிருந்து. “

இதைக் கேட்டதும் இளையபல்லவனின் கண்கள் விசித்திரப் பார்வையொன்றை அவள்மீது வீசின. “என்ன உளறுகிறாய்?” என்று வினவினான் அவன் குரலில் சிறிது குழப்பத்துடன்.

“உளற எனக்குத் தலையில் அடியுமில்லை; காய்ச்சலு மில்லை” என்றாள் காஞ்சனாதேவி மீண்டும், உள்ளத்தில் உஷ்ணம் ஏறியதால் சொற்களிலும் சூடு ஒலிக்க.

“உன் சிறிய தகப்பனுக்கு இருக்கிறது. “

“இருக்கிறது. ஆனால் அந்தக் காயமும் காய்ச்சலும் ஓட்டுவாரொட்டியல்ல. “

“அப்படியா!”

“ஆமாம்! ஆமாம்!”

“இரண்டு தடவை வந்த ‘ஆமா’மில் குரோதம் பொங்கி வந்து கொண்டிருந்ததை இளையபல்லவன் கவனித்தான். அந்தக் குரோதச் சொற்கள் உதிர்ந்தபோது உதடுகள் துடித்ததையும் கண்டான். துடித்தபோது அந்த உதடுகள் இருந்த அழகையும் கண்டான். அந்த அழகிய உதடுகளை விரும்பும் கங்கதேவனை எண்ணினான் அந்தத் தருணத்தில். அந்தச் சமயத்தில் அங்கு கங்கதேவனிருந்தால் அவன் கழுத்தை இளையபல்லவன் நெரித்துக் கொன்றிருப்பான். அதற்குப் பதில் காஞ்சனாதேவியைக் கடுவேகத்துடன் நெருங்கி அவள் தோள்மீது தனது இருகைகளையும் வைத்து இரு கைக்கட்டை விரல்களாலும் அவள் பொன்னிறக் கழுத்தைத் தடவினான்.

அந்தத் தடவலில் எத்தனையோ இன்பம் இருந்தது காஞ்சனாதேவிக்கு. இருப்பினும் அந்தச் சமயத்தில் அதை இன்பம் என்று உள்ளம் ஒப்புக்கொள்ளவில்லை. அவன் தன் கழுத்தைத் தடவியதற்குக் காரணம் மஞ்சளழகியின் நினைப்பும் அவள் கழுத்தும் என்றே நினைத்தாள் அந்தக் காரிகை. ஆகவே வேகத்துடன் சொன்னாள், “கட்டை விரல்களை நன்றாக அழுத்துங்கள்” என்று.

இளையபல்லவன் முகம் வெகு அருகிலிருந்ததால் அவன் உஷ்ண மூச்சுக்காற்று அவள் முகத்தில் பாய்ந்தது. அந்த உஷ்ணக் காற்று உண்மையில் அவள் சிந்தைக்கு இதமான ஒத்தடமாக இருந்திருக்கும் சாதாரண சமயத்தில். அந்தச் சமயத்தில் அது வெறும் வெறுப்பாக இருக்கவே அந்த வெறுப்பு அவள் முகத்திலும் தெரிந்தது. அதை இளையபல்லவன் கவனிக்கவே செய்தான். அதன் காரணம் புரியாமல், “கட்டை விரல்களை எதற்கு அழுத்தச் சொல்கிறாய்?” என்று கேட்டான்.
“கட்டை விரல்கள் கழுத்தின் இருபுறங்களிலும் இருக்கின்றன” என்றாள் காஞ்சனாதேவி.

“ஆம். இருக்கின்றன. “

“அப்படியே அழுத்தினால்… அழுத்தினால்… ”

“அழுத்தினால். “

“நெஞ்சுக்குழியில் அவை அழுந்தும். “

“எதற்கு அழுந்த வேண்டும்?”

“என்னைக் கொல்ல. “

“உன்னை எதற்குக் கொல்ல வேண்டும்?”

“உங்கள் திருமணத்தைப் பார்க்காதிருக்க. “

“யாருடன் எனக்குத் திருமணம்?”

“மஞ்சளழகியுடன். பொன்னிற மேனியுடன் இருப்பாளே என் தந்தையின் வளர்ப்பு மகள்! அவளுடன்தான். அவளுடன்தான். இளையபல்லவரே! மோசக்காரரே!” என்று திடீரென்று கோபம் உடைய, கனிவு மனம் குழையத் தேம்பித் தேம்பி அழுதாள் காஞ்சனாதேவி.

இளையபல்லவனின் இருண்ட மூளையில் திடீரென அப்பொழுதுதான் ஒளி வீசியது. அவள் போக்குக்கும் கோபத்துக்கும் அப்பொழுதுதான் அவன் காரணத்தைப் புரிந்து கொண்டான். அதைப் புரிந்துகொண்டதால் அதுவரை அவன் சித்தத்தைத் தழுவியிருந்த கோபமும் அகன்றது. கங்கதேவனை அழிப்பதைவிடத் தான் முதலில் காஞ்சனாதேவியைத் திருப்தி செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்த அவன், அவள் கழுத்திலிருந்த கையை நீட்டி, உடல் முழுவதையும் தன் நீண்ட கரங்களில் சிக்க வைத்தான்.

பலமான அவன் கரங்கள் அவள் உடலை இரண்டு மூன்று முறை மாறிமாறிச் சுற்றிச் சென்றன. பிறகு இரு கரங்களும் மாறிப் பிணைந்து அவள் உடலை இறுக்கவும் செய்தன. அந்தக் கரங்களின் வேகத்தையும் அவற்றின் இறுக்கத்தையும் இறுக்கத்தின் விளைவாகத் தன் உடல் அவன் உடலுடன் நெருங்குவதையும் புரிந்துகொண்ட காஞ்சனாதேவி ஒரு விநாடி பரவசப்பட்டாலும் அடுத்த விநாடி அந்தப் பரவசம் வெறுப்பாக மாறவே கூவினாள், “விடுங்கள் என்னை ” என்று .

அவன் விடவில்லை. அவளை இறுக்கி அணைத்தபடியே அருகிலிருந்த மஞ்சத்துக்கு இழுத்துச் சென்று தான் மட்டில் அதில் உட்கார்ந்துகொண்டு அவளை எதிரே நிற்க வைத்தான். அந்த நிலை அவளுக்குப் பெரும் சங்கடமாய் இருந்தது. அதிலிருந்து விலகச் சற்றுத் திமிறினாள். ஆனால் அந்த இரும்புக் கரங்கள் விடவில்லை அவளை. அந்தப் பிடிப்புடன் கேட்டான் இளையபல்லவன், “மஞ்சளழகியை நான் மணம் செய்துகொள்ளப் போவதாக யார் சொன்னது?” என்று.

“யார் சொன்னாலென்ன? உண்மை உண்மைதானே?” என்றாள் காஞ்சனாதேவி கோபத்தால் உதடுகள் துடிக்க.
“உண்மை உண்மைதான். ஆனால் சொன்னவர்கள் முழு உண்மையையும் சொல்லி இருக்கிறார்களாவென்பதுதான் கேள்வி” என்றான் இளையபல்லவன்.

“முழு உண்மையைச் சொல்லாமல் பாதி உண்மையைச் சொல்வார்களா?” “ஏன் சொல்லக்கூடாது?”

“எதிரிகள் சொல்லலாம். நண்பர்கள் சொல்ல மாட்டார்கள். “

“ஏன் சொல்ல மாட்டார்கள்?”

“உன்னிடம் எனது நண்பர்களில் ஒருவர்தான் சொன்னாராக்கும்?”

“ஆம். நீங்கள் மஞ்சளழகியைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டதாகச் சொன்னார். “

“அப்படியானால் திருமணம் ஏன் நடக்கவில்லையாம்? பெண் ஒப்புக்கொள்ளவில்லையா?” இளையபல்லவன் கேள்வியில் ஏளனத்தின் ஒலியிருந்தது. அதைக் காஞ்சனா தேவி கவனித்தாள். அவளும் ஏளனத்துடனேயே பதில் சொன்னாள், “பெண் எப்படி ஒப்புக்கொள்ளாமலிருப்பாள் ஒரு கட்டழகரைக் கைப்பிடிக்க, அதுவும் தமிழகத்தின் மகாவீரரை?” என்று.

“பெண்ணுக்குப் பிடித்து, பிள்ளைக்கும் பிடித்தும் திருமணம் ஏன் நடக்கவில்லையாம்?” என்று வினவினான் இளையபல்லவன்.
“வேறு சந்தர்ப்பங்கள் குறுக்கிட்டனவாம்” என்ற காஞ்சனாதேவி சேந்தன் சொன்ன வாசகத்தையே திருப்பிச் சொன்னாள்.

இளையபல்லவன் சிறிது யோசனைக்குப் பின் கேட்டான், “வேறு சந்தர்ப்பங்கள் திருமணம் நடைபெறுவதற்கு மட்டும்தான் குறுக்கிடுமா?” என்று.

காஞ்சனாதேவியின் இதயத்தில் இளையபல்லவனின் அந்தக் கேள்வி சிறிது சந்தேகத்தைக் கிளப்பியது. அந்தச் சந்தேகம் குரலில் ஒலிக்க, “வேறு எதற்குக் குறுக்கிடும்?” என்று கேட்டாள் அவள்.

இளையபல்லவன் பதில் நிதானமாகவும் திடமாகவும் கேள்வி ரூபத்தில் எழுந்தது. “திருமணத்திற்கு ஒப்புக் கொள்வதற்கே சந்தர்ப்பங்கள் வழிவகுக்கக் கூடாதா?” என்று வினவினான் அவன்.

காஞ்சனாதேவி, “ஆம் ஆம், வகுக்கலாம்” என்றாள்.

“காஞ்சனாதேவி!” என்றழைத்தான் இளையபல்லவன் அதற்குப் பிறகு சற்று உறுதியான குரலில்.

“உம்?” பதில் அந்த ஒலி மட்டும்தான். இருப்பினும் அதில் சற்றே மாறுதலிருந்தது. இதயம் சற்றுக் கனிந்ததற்கான அடையாளமிருந்தது.

அதைக் கவனித்த இளையபல்லவன் மிகுந்த நிதானத் துடன் வார்த்தைகளை உதிர்த்தான். “காஞ்சனா! மஞ்சளழகி யைப் பற்றி உன்னிடம் நான் ஏற்கெனவே சொல்லியிருக் கிறேன்” என்று கூறினான் அவன்.

“இல்லை! சொல்லவில்லை. ” கண்டிப்புடன் வந்தது அவள் பதில்.

“நேரில் சொல்லவில்லை. “

“பின் எப்படிச் சொன்னீர்கள்?”

“உன் காதுபடச் சொன்னேன். “

“எப்பொழுது?”

“கங்கதேவன் உன் அறை வாயிற்படியில் நின்றபொழுது உன்னைக் காட்டித்தான் பலவர்மன் பெண் மஞ்சளழகியென்று அவரிடம் சொன்னேன். “

காஞ்சனாதேவி ஒரு விநாடி யோசித்தாள். அந்தப் பெயர் காதில் விழுந்தது அவளுக்கு நினைப்பிலிருந்தது. உள்ளறையில் நுழையாத கங்கதேவன் வாயிற்படிக்கு வெளியே நின்றே பலவர்மன் உற்றுப் பார்த்ததையும் அவனைப் பற்றி ஏதோ கேட்டதையும் அவள் கவனித்திருந்தாள். கங்கதேவன் வரவாலும் அவன் தன்னை உற்று உற்றுப் பார்த்ததாலும் வெட்கித் தலைகுனிந்து விட்ட தனக்கு இளையபல்லவன் கங்கதேவனிடம் கூறிய சொற்கள் அரைகுறையாகவே காதில் விழுந்ததை அவள் உணர்ந்து கொண்டாள்.

அந்தச் சொற்களில் “பலவர்மன்….. வளர்ப்புப் பெண் மஞ்சளழகி” என்று சில சொற்கள் காதில் விழுந்ததும் கங்கதேவனை ஏமாற்றுவதற்காக இளையபல்லவன் ஏதோ சொல்கிறானென்று அவள் நினைத்திருந்தாள். அதைப் பற்றி அவள் அத்தனை! உறுதியாக எண்ணிப் பார்க்காததால், கூலவாணிகன் சொற்கள் அவளை உக்ர நிலைக்குக் கொண்டு போயின. அந்த உக்ரத்திலிருந்து இளைய பல்லவன் விளக்கத்தால் மெள்ள மெள்ள மீளவே அவள் மௌனம் சாதித்தாள்.

அதுவரை இளையபல்லவன் கைகளிலிருந்து திமிறிய அவள் திமிறலை லேசாக நிறுத்தவும் செய்தாள்.

அந்த மாறுதலைக் கவனித்த இளையபல்லவன் ஓரளவு சாந்தியடைந்தான். இருப்பினும் அவள் இதயத்தில் இருந்த சந்தேகத்தை அடியோடு அகற்றக் கேட்டான், “இப்பொழுது நினைப்புக்கு வருகிறதா, நான் மஞ்சளழகியைப் பற்றிக் கூறியது?” என்று.

“ஆம் ஆம். அப்படி ஏதோ சொன்னீர்கள். “

“ஏதோ என்றால்? நான் சொன்னது தெளிவாகக் கேட்க வில்லையா உனக்கு?”

“இல்லை. “

“ஏன்?”

“நான் கவனிக்கவில்ல. “

“ஏன் கவனிக்கவில்லை?”

“அவன் என்னை உற்று உற்றுப் பார்த்தான். “

இதற்குமேல் காஞ்சனாதேவி பேசவில்லை. அவள் மூச்சு சாதாரணமாக வந்துகொண்டிருந்தது. அதுவரை இதயத்தி லிருந்த புயல் அடங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து கொண்ட இளையபல்லவன் உள்ளே கொஞ்ச நஞ்சமும் இருந்த புயலையும் வெளியே விரட்ட அவள் பூவுடலை வலிக்கும்படி இறுக்கினான்.

காஞ்சனாதேவியின் உடல் அந்த இரும்புக் கரங்களின் இறுக்கலில் பெரிதும் வலித்தது. வலியில் வேதனை இருந்தது. வேதனையில் சுகம் பெரிதும் கலந்திருந்தது. அந்த வேதனை எத்தனை அவசியம் என்பதை அந்தப் பெண் அந்தச் சில விநாடிகளில் உணர்ந்தாள். அந்த வேதனையை அதிகப்படுத்த இளையபல்லவன் அவள் காதுக்கருகில் உதடுகளைக் கொண்டுபோய், “காஞ்சனா!” என்று இன்பமாக அழைத்தான்.

“ஏன்?” என்றாள் அவளும் ரகசியமாக. அந்த ‘ஏனைச்’ சொன்னபோது தனக்கிருந்த பலவீனத்தை அவள் நன்றாக உணர்ந்தாள். “புருஷர்கள் கையில் சிக்கும்போது பெண்ணுக்கு எத்தனை கோபமிருந்தும் ஏன் பறந்துவிடுகிறது? எத்தனை பலவீனம் இந்தப் பெண் ஜன்மம்!” என்று தன் வர்க்கத்தைக் கண்டித்தாள்.

அந்தக் கண்டனத்திலும் தன் இனத்தின் பலவீனத்தை உணர்ந்ததிலும்கூட ஓர் இன்பம் இருந்தது அவளுக்கு.

இளையபல்லவன் மேலும் தேனொழுகப் பேசினான். “காஞ்சனா! வாழ்வு இன்புற எது தேவை தெரியுமா?” என்று கேட்டான்.

“எதுவாம்?”

“நம்பிக்கை. “

“தேவைதான். “

“அதை நம்மிருவரில் ஒருவர் இழந்தாலும்… ”

“வாழ்வு நாசப்பட்டுவிடும். “

“ஆம். எதனால் தெரியுமா?”

“எதனால்?”

“நம்மிருவரைப் பிரிக்கும் சக்தி… ”

“சொல்லுங்கள். “

“பிறருக்குக் கிடையாது. “

“ஆம். “

“ஆனால் நமக்குண்டு. “

“நமக்கா?”

“ஆம். பரஸ்பர அவநம்பிக்கையால் நாம் பிரியலாம். “

“உண்மைதான். ஆனால் ஒருவர் அதிகமாக நம்பி இன்னொருவர் துரோகம் செய்தால். “

“விளைவு விபரீதம் காஞ்சனா! ஆனால் அதைவிட விபரீத நம்பிக்கையின்மையால் இருவர் தங்கள் வாழ்வைத் தாங்களே நாசம் செய்து கொள்வது. உண்மைதான் நம்மிருவரையும் உறுதிப்படுத்தி ஒன்றுபட்டிருக்கச் செய்ய முடியும். நம்பிக்கைக்கு உண்மை அஸ்திவாரம். “

காஞ்சனாதேவியின் உடல் அவனை நோக்கித் தானாகவே நெருங்கியது. “அப்படியானால் உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் அந்த மஞ்சளழகியைக் காதலித்தது உண்டா இல்லையா?” என்று கேட்டாள் அவள்.

இளையபல்லவன் பொய் சொல்ல மறுத்தான். “காதலித்த தாக நான் நினைத்தது உண்டு. நாட்டிலிருந்து தொலை தூரம் வந்தேன். அபலையொருத்தியைப் பார்த்தேன். அவளிருந்த சூழ்நிலையைக் கண்டேன். அவள் தாயற்றவள். தந்தை இன்னாரென்று அறியாதவள். அந்த நிலையில் அனுதாபம் மூண்டெழுந்தது. அவளைக் காட்டி என்னை அழிக்கத் திட்டமிட்டான் பலவர்மன். அதற்காகப் பல நாடகங்கள் ஆடினேன். அந்த நாடகங்களின் குறுக்கே பலமுறை வந்தாள் அந்த அபலை. அவள் இதயதாபம் என் இதயத்தில் அனுதாப மாக வடிந்தது.

அதைக் காதலென்றும்கூட நினைத்தேன் ஒரு சமயம். ஆனால் உன்னைக் கண்டதும் புரிந்துகொண்டேன், அது காதலல்ல அனுதாபந்தான் என்று. புரிந்து கொண்டாயா காஞ்சனா; என் இதயத்தைத் திறந்து காட்டிவிட்டேன் உன்னிடம். இனி என்ன செய்தாலும் என் உயிரெல்லாம் உன்மீதுதான். நான் உன்னிடம் சரண். எது வேண்டு மானாலும் செய் என்னை,” என்று மெள்ள மெள்ள உணர்ச்சியுடன் உள்ளதை உள்ளபடி சொன்னான் இளையபல்லவன். நீண்ட நேரம் காஞ்சனாதேவியிடமிருந்து பதில் வரவில்லை. உதடுகள் பேச மறுத்தன. ஆனால் அவள் பூக்கரங்கள் அவன் கழுத்தைச் சுற்றி வளைத்தன.

Previous articleRead Kadal Pura Part 3 Ch16 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch18 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here