Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch18 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch18 | Sandilyan | TamilNovel.in

147
0
Read Kadal Pura Part 3 Ch18 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch18 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch18 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 18 : மேகத்திடையே சிறு மின்னல்.

Read Kadal Pura Part 3 Ch18 | Sandilyan | TamilNovel.in

சேந்தனிழைத்த பிழையால் காஞ்சனாதேவி பெரிதும் வெகுண்டு புயலென அக்ரமந்திரத்தின் பெரிய அறைக்குள் நுழைந்த ஒரு முழு நாழிகைக்கு பின்பே இளையபல்லவன் வெளியேயுள்ள தளத்துக்கு வந்தான். அந்த ஒரு முழு நாழிகை போனது ஒரு முழுநாளே போய்விட்டது போலிருந்தது கண்டியத்தேவனுக்கு. அக்ரமந்திரத்தின் சிற்றறையில் நடந்த தென்ன என்பதை முழுவதும் சொல்லாமல் காஞ்சனாதேவி இளையபல்லவன் அறைக்குச் சென்றுவிட்டதை மாத்திரம் சேந்தன் சொல்லியிருந்தான் சுயப் பாதுகாப்பை முன்னிட்டு. அவள் அந்தத் தகவலைச் சொல்லி ஒரே முழு நாழிகை ஆகியும் படைத்தலைவன் வெளியே வராததைக் கண்ட கண்டியத்தேவன் மிகவும் கோபத்தின் வசப்பட்டுச் சேந்தனை நோக்கி, “ஒழுங்காக விஷயத்தைச் சொன்னீரா கூல வாணிகரே?” என்று அரை மிரட்டலும் அரை கேள்வியுமாக சீறிக்கொண்டிருந்த சமயத்தில் அக்ரமந்திரத்தின் பிரதான வாசல் திறந்து இளையபல்லவன் வெளி வந்துவிடவே சேந்தனிடமிருந்து பிரிந்து, இளையபல்லவனை நோக்கி அமீர் பின்தொடர நடந்தான் கண்டியத்தேவன்.

அவன் வரும் வேகத்தை அக்ரமந்திரத்தின் வாயிலி லிருந்தே கவனித்த இளையபல்லவன் கண்டியத்தேவனையும் நோக்கி உச்சியிலிருந்து மேற்கு நோக்கிச் சாய்ந்துவிட்ட கதிரவனையும் நோக்கிப் புன்முறுவல் கொண்டான். இளைய பல்லவன் வதனத்தில் விசசித்த புன்முறுவலைக் கண்டான் கண்டியத்தேவன். அதுமட்டுமின்றிக் கரையிலிருந்து வந்த போதிருந்த குழப்பமும் அவன் முகத்தில் மறைந்துவிட்டதை யும் அவன் முகம் பழைய முகமாகிவிட்டதையும் கவனித்த கண்டியத்தேவன், அந்த மாற்றத்தினால் சிறிது தைரியம் அடைந்தான். இளையபல்லவன் முகமாற்றமும் முகத்தெளிவும் அவன் ஏதோ ஒரு பெரும் திட்டத்தை வகுத்துவிட்டதற்கு அறிகுறி என்பதை ஊகித்துக் கொண்ட கண்டியத்தேவன் இளையபல்லவனை அடைந்ததும், “கதிரவன் மேல்திசைப்புறம் சாய முற்பட்டு நான்கு நாழிகைகளுக்கு மேல் ஆகி விட்டது” என்று தைரியத்துடன் சுட்டிக்காட்டவும் செய்தான்.

இளையபல்லவன் கண்கள் மீண்டும் வானத்தை நோக்கி விட்டுக் கண்டியத்தேவன் மீது திருப்பி நிலைத்தன. “ஆம் தேவரே! பொழுது அதிகமாகத்தான் ஓடிவிட்டது” என்றான்.

“சீக்கிரம் நங்கூரம் எடுக்காவிட்டால் மரக்கலங்களைப் பொழுது சாயுமுன்பு கரைக்குக் கொண்டுபோக முடியாது” என்று உள்ள நிலையைச் சுட்டிக் காட்டினான் தேவன்.

“ஆம். ஆம். கஷ்டம்தான்” என்றான் இளையபல்லவன் அலட்சியமாக.

கண்டியத்தேவனின் முகத்தில் ஆச்சரியத்தின் சாயை அதிகமாகப் படர்ந்தது. இளையபல்லவன், ‘ஆம் ஆம், கஷ்டம் தான்’ என்று சர்வசகஜமாகச் சொன்னது பெரும் வியப்பா யிருந்ததால் இளையபல்லவன், ஒருவேளை நிலைமையின் கஷ்டத்தைப் பூரணமாக உணரவில்லையோ என்று நினைத்த கண்டியத்தேவன், “மரக்கலங்கள் மூன்றை நாம் துறைமுகத் துக்குள் செலுத்த வேண்டும்,” என்றான்.
இளையபல்லவன் விழிகள் கண்டியத்தேவன் மீது நிலைத்தன. “மூன்றிருந்தாலென்ன தேவரே?” என்று கேட்கவும் செய்தான் இளையபல்லவன்.

கண்டியத்தேவன் உடனே பதில் சொல்லவில்லை. வானத்தை நோக்கித் தலையை உயர்த்தி மெல்ல வரத் தொடங்கிய காற்றை இருமுறை நாசியில் இழுத்து சுவாசித்தான். பிறகு சொன்னான், “காற்றின் வேகம் கிளம்பத் துவங்கியிருக்கிறது” என்று.

“அதைக் கவனித்தேன். ” அசட்டையாகவே பதில் சொன்னான் இளையபல்லவன்.

“இன்னும் ஒரே நாழிகையில் காற்றின் வீச்சு மிகவும் அதிகப்படும். “

கண்டியத்தேவன் இச்சொற்களை உதிர்த்தபோது சிறிது உஷ்ணத்தையும் காட்டினான்.

“ஆம், ஆம். அதிகப்படும். ” சர்வ சாதாரணமாக வந்தது இளையபல்லவன் பதில்.

“அதிகப்பட்டால் அலைகளின் எழுச்சி…?”

“அதிகப்படத்தான் செய்யும். “

“அலைகள் அதிகமாக உருண்டால் மரக்கலங்களின் அசைவு அதிகப்படுமே. “
“படாமல் எப்படி இருக்கும்?”

“உருண்டு எழும் அலைகளில் கரையை நோக்கிக் கொண்டு போகப்படும் மரக்கலங்கள் அலை உருட்சியினால் கீழ்ப்பகுதி மணலில் சிக்கலாம். “

“சிக்கலாமென்ன? கண்டிப்பாய்ச் சிக்கும். “

“ஒரு மரக்கலம் சிக்கிவிட்டால் அதை எடுக்க இரண்டு நாளாகும். மீதி மரக்கலங்களை எப்படி உள்ளே கொண்டு போவது?”

“அவற்றையும் மணலில் சிக்க வைத்துவிட்டாலென்ன?”

இளையபல்லவனின் இந்தக் கேள்வியைக் கேட்டதும் கண்டியத்தேவன் அசந்தே போனான். இளையபல்லவன் முகத்தை ஒருமுறை கூர்ந்து கவனித்து அவனுக்கு மூளை பிசகவில்லை என்பதைத் தீர்மானித்துக் கொண்டான். இருப்பினும் கண்டியத்தேவனுக்குச் சந்தேகமுண்டாகக் கூடிய பாணியிலேயே பேசத் தொடங்கிய இளையபல்லவன், “தேவரே! மரக்கலங்களின் அடிகளைச் சுரண்ட வேண்டுமானால் என்ன செய்வீர்?” என்று கேட்டான்.

எதற்கு அந்தக் கேள்வியைக் கேட்கிறான் என்பதை அறியாத கண்டியத்தேவன், “கரையில் இழுப்பேன் மரக் கலங்களை” என்று பதில் கூறினான் குழப்பத்துடன்.

“நாம் கைப்பற்றிய இரு கலிங்கத்தின் மரக்கலங்களைக் கவனித்தீரா?” என்று எழுந்தது இளையபல்லவன் கேள்வி.
கண்டியத்தேவன் கடல் புறாவுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த இரு மரக்கலங்களையும் ஒருமுறை பார்த்து விட்டுத் திரும்பி, “பார்த்தேன். அவற்றுக்கென்ன? சேதப் பட்டிருக்கின்றன” என்றான்.

இளையபல்லவன் கண்கள் தேவனை நோக்கி நன்றாக எழுந்தன. “அவை போரில் சேதப்பட்டிருப்பது யாருக்கும் தெரியும் தேவரே. கண்ணுள்ள யாவருக்கும் அவற்றின் உடைந்த பாய்மரங்களும் தீப்புண் பட்டிருக்கும் இடங்களும் தெரியும். அவற்றைக் காணக் கப்பல் நிபுணரான கண்டியத் தேவர் தேவையில்லை” என்றான் படைத்தலைவன்.

“வேறெதைப் பார்க்கச் சொல்கிறீர்கள்?”

“இப்பொழுது எதையும் பார்க்கச் சொல்லவில்லை. “

“பின் எப்பொழுது பார்ப்பது?”

“நாம் அவற்றைக் கைப்பற்றி வந்தபோது பார்த்திருக்க வேண்டும். “

“என்ன பார்த்திருக்க வேண்டும்?”

“அவற்றின் ஓட்டத்தை, வேகத்தின் நிலையை. “

இளையபல்லவன் மனப்போக்கு நன்றாகப் புரிந்துவிட்ட படியால் திடீரெனப் பெரும் பிரமிப்புக்குள்ளானான் கண்டியத்தேவன். “படைத்தலைவரே! நீங்கள் விளையாட வில்லையென நினைக்கிறேன்” என்று துவங்கினான் கண்டியத் தேவன்.

“விளையாட இது நேரமென்று நினைக்கிறீரா தேவரே?” என்று பதில் சொன்ன இளையபல்லவன் குரலில் ஏளன மிருந்தது.

“விளையாட்டு இல்லையென்றால் இது பெரும் வினை” என்றான் தேவன்.

“யாருக்கு வினை?”

“இந்த மரக்கலங்களிலுள்ள அனைவருக்கும். “

“என்ன அப்படி அபாயமான யோசனையைச் சொல்லி விட்டேன் நான்?”

கண்டியத்தேவன் முகத்தில் அச்சத்தின் சாயை படர்ந்து கிடந்தது.

“வேறு என்ன சொல்ல வேண்டும் படைத்தலைவரே? பிடித்த மரக்கலங்களின் வேகத்தைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள்” என்றான் தேவன் பயம் குரலிலும் ஒலிக்க.

“ஆம். “

“இரு கப்பல்களின் வேகமும் மட்டுத்தான். “

“அவை நீண்ட காலம் கடலிலேயே சஞ்சரித்திருக்க வேண்டும் தேவரே. “

“ஆம் படைத்தலைவரே. “

“அவற்றின் அடிப்புறங்கள் பாசியும், கடற்கிளிஞ்சல்கள், சங்குகள், பூச்சிக்கூடுகள் இவையும் பிடித்துக் கனத்திருக் கின்றன. “

“ஆம். அவற்றால்தான் மரக்கலங்களின் வேகம் குறைந் திருக்கிறது. “

“அவற்றைக் கரையில் இழுத்துச் சுத்தம் செய்தால் வேகம் சரிப்பட்டுவிடும். “

“புரிகிறது படைத்தலைவரே, புரிகிறது” என்ற கண்டியத் தேவன் அந்த இரு மரக்கலங்களையும் நோக்கிக் கையை நீட்டி, “அவை இரண்டையும் கரையில் இழுத்து மணலில் சிக்க வைத்துச் சுத்தம் செய்ய நாள் எத்தனை பிடிக்கும் தெரியுமா?” என்று வினவினான்.

“தெரியும்’ என்பதற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டிய இளையபல்லவன், “குறைந்த பட்சம் ஒரு வாரம் ஆகும்” என்றான்.

“அப்படியானால் ஒரு வாரத்துக்கு இங்கேயே தங்குவதாக உத்தேசமா?” என்று கேட்டான் தேவன்.

“குறைந்தபட்சம் ஒரு மாதம் தங்க உத்தேசம். முடிந்தால் காலத்தைச் சற்று நீட்டவும் செய்யலாம்” என்றான் இளைய பல்லவன்.

கண்டியத்தேவன் கோபம் தெளிவாக அவன் முகத்தில் தெரிந்தது. “இந்தப் பயங்கர எதிரியுடன் ஒரு மாதம் இங்கு தங்கப் போகிறீர்களா?” என்று வினவினான் கோபம் பூரணமாகக் குரலில் தொனிக்க.

இளையபல்லவன் இதழ்களில் புன்னகை விரிந்தது. “கங்கதேவனை எதிரி என்று புகல்வது சரியல்ல” என்றான் குரலில் வருத்தத்துடன் படைத்தலைவன்.

கண்டியத்தேவன் முகத்தில் கோபம் மறைந்து ஆச்சரியம் அது இருந்த இடத்தை ஆக்ரமித்துக் கொண்டது. “அப்படி யானால் அவர்!” என்று இழுத்தான் கண்டியத்தேவன்.

“நண்பர்” என்றான் இளையபல்லவன்.

“நண்பரைப் பிரிந்து வந்தபோது ஏன் அத்தனை குழப்பத் துடன் வந்தீர்கள்?” கண்டியத்தேவன் கேள்வியில் ஏளனம் தொனித்தது.

“நண்பரைப் பிரிவதில் குழப்பமும் வருத்தமும் ஏற்படுவது இயற்கைதானே?” இளையபல்லவன் சொற்களில் நகைப்பொலி இருந்தது.

கண்டியத்தேவன் ஓரளவு நிலைமையைப் புரிந்து கொண்டான். இளையபல்லவன் மனத்தில் ஏதோ ஆழமான திட்டம் உருவாகி விட்டதென்பதையும், அதையொட்டியே அவன் இரு மரக்கலங்களையும் கரையில் இழுத்துப் பழுது பார்க்கச் சொல்கிறான் என்பதையும் புரிந்து கொண்டாலும் அந்தத் திட்டம் என்ன என்பது மட்டும் அவனுக்குப் புரிய வில்லை. இளையபல்லவன் பேச்சிலிருந்தும் போக்கிலிருந்தும் அவன் ஏதோ ஒரு முடிவுக்கு வந்துவிட்டானென்பதை மட்டுமே அறிந்து கொண்ட கண்டியத்தேவன் அந்தத் திட்டத்தின் விவரங்களைக் கேட்பதில் பயனில்லை என்பதை உணர்ந்துகொண்டிருந்தானாகையால், “படைத்தலைவர் உத்தரவுதானென்ன? நான் என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினான்.

இளையபல்லவன் உத்தரவுகள் தெளிவுடன் வெளிவந்தன. “தேவரே! அதோ அந்த இரு மரக்கலங்களையும் ஒன்றன்பின் ஒன்றாகத் துறைமுகத்துக்குள் கொண்டுபோய்க் கரைக்கருகே அக்கம்பக்கத்தில் நிறுத்துங்கள். நாளைக் காலையில் அவற்றைக் கரையில் இழுத்துப் பழுது பார்க்கத் தொடங்கலாம். அவை இரண்டையும் கொண்டு சென்றபிறகு கடல்புறாவின் நங்கூரத்தை எடுத்து அதையும் துறைமுகத் திற்குள் கொண்டு சென்று… ” என்று சொல்லிக்கொண்டு போன இளையபல்லவனை எதிர்த்துப் பேசவிடாமல், கண்டியத்தேவன் குரல் மட்டுமல்ல, அவனை விட்டு இரண்டடி தள்ளி அதுவரை மௌனமாக நின்று கொண்டிருந்த அமீரின் குரலும் எழுந்தது.

“படைத்தலைவரே?” என்று இருவரும் இளையபல்லவன் பேச்சைக் குறுக்கே மறுத்து ஏககாலத்தில் கூவினார்கள்.

இளையபல்லவன் கண்கள் ஒருமுறை எழுந்து கண்டியத் தேவனுக்குப் பின்னால் இருந்த அமீரை நோக்கின. பிறகு மீண்டும் தேவரை ஆராய்ந்தன. “ஏன் இந்தப் பதற்றம் அமீர்? தேவரே! ஏன் இப்படிக் கூவுகிறீர்… ” என்ற சொற்கள் உறுதியுடனும் சற்று உணர்ச்சியுடனும் வெளிவந்தன அவன் உதடுகளிலிருந்து.

அமீர் சொன்னான் உறுதியான குரலில், “கடல்புறாவைத் துறைமுகத்தை அடைத்து நிற்க வைக்க வேண்டுமென நீங்கள் தான் ஏற்கெனவே கூறினீர்கள்” என்றான்.

“கூறினேன். ” இளையபல்லவன் ஒப்புக்கொண்டான் தலையை அசைத்து.

“மரக்கலங்களிரண்டை எதிரிகள் நாசப்படுத்தாதிருப் பதற்குக் கடல்புறா துறைமுக வாயிலில் காவல் செய்ய வேண்டியது அவசியமென வற்புறுத்தினீர்கள்” என்றான் தேவன்.

“ஆம். “

“இப்பொழுது கடல்புறாவையும் துறைமுகத்திற்குள் கொண்டு செல்லச் சொல்லுகிறீர்கள். “

“ஆம். “

“கடல்புறா உள்ளே சென்றால் இரண்டிரண்டாகப் பிரிந்திருக்கும் எதிரி மரக்கலங்களுக்கு இடையில் நிற்க வேண்டியிருக்கும். “
இதைக்கேட்ட இளையபல்லவன் கண்டியத்தேவனை நோக்கி, “முதலில் அப்படித்தான் நினைத்தேன் தேவரே” என்றான்.

“இப்பொழுது நிலைமை மாறிவிட்டதா? எப்படி மாறி விட்டது?” என்று கேட்டான் தேவன்.

“நிலைமை மாறவில்லை தேவரே. நாம் நிலைமையை மாற்றலாமே” என்று இளையபல்லவன் கூறினான்.

கண்டியத்தேவனுக்கும் அமீருக்கும் ஏதும் புரியாதிருக்கவே இருவரும் விழிக்கவே செய்தனர். இளையபல்லவனே தனது யோசனையை விளக்கினான். “தேவரே! அமீர்! கேளுங்கள். கடல்புறாவை நம் எதிரியின் நான்கு மரக்கலங்களுக்கும் இடையே நிறுத்தினால் அதற்கு ஆபத்து அதிகம்தான். அதிகமென்ன அதை அழிப்பதும் எதிரிக்குச் சுலபம். ஆகவே அது வேண்டாமென்று முடிவு செய்துவிட்டேன். அதோ கரையைப் பாருங்கள். அந்தப்புறமல்ல, இதோ காளத்தி நதியின் கிழக்குப் புறம்,” என்று இளையபல்லவன் காளத்தி நதி பாய்ந்த இடத்தைத் தன் வலது கையால் சுட்டிக் காட்டினான்.

இருவரும் அந்த இடத்தைக் கவனித்தார்கள். ஏற்கெனவே அந்த இடத்தை இரண்டு மூன்று முறை இளையபல்லவன் தங்களுக்குச் சுட்டிக் காட்டி இருப்பதை அந்த இருவரும் உணர்ந்தே இருந்தார்கள். இருப்பினும் அதற்குக் காரணம் தெரியாமல் அந்த இடத்தை வெறித்துப் பார்த்தார்கள். அந்த இடத்தைச் சுட்டிக் காட்டி அவ்விருவரையும் பார்த்து, “நதி பாயும் இடத்தில் கடற்கோரைகள் மிகவும் அடர்த்தியா யிருக்கின்றன” என்றான்.

“ஆம்” என்றான் தேவன்.

“அந்த இடத்தில் அதாவது கோரைகளுக்கு அருகில் கடல்புறாவை நிறுத்தி வைத்தாலென்ன?” என்று வினவினான் இளையபல்லவன்.

“மிகவும் சௌகரியம்” கண்டியத்தேவன் குரலில் இகழ்ச்சி யிருந்தது.

“நீர் ஒப்புக்கொள்வீர் என்று எனக்குத் தெரியும். “

“எதை ஒப்புக்கொண்டேன்?”

“அந்த இடத்தில் கடல்புறாவை நிறுத்துவது சௌகரிய மென்பதை. “

“எதிரிக்குச் சௌகரியமென்று சொன்னேன். “

“கரையிலிருப்பவன் எதிரியல்லவென்று நான்… ”

“ஆம் சொன்னீர்கள். உங்கள் நண்பர்… ”

“உங்களென்ன, நமது நண்பர் என்று சொல்லும். “

“ஆம், ஆம். நமது நண்ப ர். “

“அப்படி வாரும் வழிக்கு. “

“கோரைக்கருகே கடல் புறாவை நங்கூரம் பாய்ச்சி, கலிங்கத்தின் இரு கப்பல்களையும் பழுது பார்க்கத் தரையில் இழுத்து விட்டால்… ” கண்டியத்தேவன் ஆத்திரத்துடன் பேசினான். ஆத்திரம் இருந்ததால் பேச்சு முற்றுப்பெற வில்லை .
“இழுத்துவிட்டால்?” இளையபல்லவன் கேட்டான். “நண்பருக்குக் கொண்டாட்டம், நமக்குத் திண்டாட்டம்” என்றான் தேவன்.

“நம்மைப் பற்றி ஏன் கவலை? நண்பரைப் பற்றிக் கவலைப்படும்?”

“கங்கதேவனைப் பற்றி மிகவும் கவலையோ உங்களுக்கு?”

“ஆம்” என்று இளையபல்லவன் மேலும் சொன்னான். “தற்சமயம் அவனைப் பற்றிய கவலைதான் எனக்கு. அவனுக்குக் கொண்டாட்டமான எதையும் நாம் செய்ய வேண்டும். ஆகவே சொன்னபடி செய்யுங்கள் தேவரே! நமது மரக்கலங்கள் மூன்றினாலும் அவனுக்குத் துன்பம் நேரிடக் கூடாது. ஆகவே கடல்புறாவைக் கோரைக்கருகில் நிறுத்தி விடும். கரையில் இழுத்து விடுங்கள் மற்ற இரு மரக்கலங்களை. கங்கதேவன் மகிழ்ச்சிதான் நமது மகிழ்ச்சி. “

இதைக் கேட்டதும் உக்கிரமான முகங்களுடனும் உள்ளெழுந்த கோபத்துடனும் செல்ல முற்பட்ட தேவனையும் அமீரையும், “இன்னும் ஒரு வார்த்தை” என்று சொல்லி நிற்கவைத்த இளையபல்லவன் அந்த ஒரு வார்த்தையையும் சொன்னான். அதைக்கேட்ட அந்த இருவரும் பிரமித்தனர். அதை ஏன் சொன்னான் இளையபல்லவன் என்பது இருவருக்கும் பெரும் குழப்பமாயிருந்தது. ஆனால் அந்த ஒரு வார்த்தையில் பெரும் மர்மம் புதைந்து கிடந்ததை உணர்ந் தார்கள்.

அதுவரை கவிந்த சொற்களாகிற ஆபத்து மேகங்களுக் கிடையே அது ஒரு நம்பிக்கை தரும் சிறு மின்னல் என்பது மட்டும் அவர்களுக்குப் புரிந்தது. ஆனால் இளையபல்லவன் மனத்தடியிலிருந்த திட்டம் மட்டும் இருவருக்கும் புரிய வில்லை. ஏதும் புரியாமலேயே இருவரும் அவன் கட்டளை களை நிறைவேற்றச் சென்றார்கள். அடுத்த அரை நாழிகைக்குள் கலிங்கத்தின் இரு மரக்கலங்களும் துறைமுகத்தை நோக்கி நகர்ந்தன. அவற்றைக் கவனித்த இளையபல்லவன் நாசியிலிருந்து சாந்தி கலந்த பெருமூச் சொன்று வெளிவந்தது.

Previous articleRead Kadal Pura Part 3 Ch17 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch19 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here