Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch19 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch19 | Sandilyan | TamilNovel.in

134
0
Read Kadal Pura Part 3 Ch19 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch19 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch19 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 19 : பழம் நழுவி…

Read Kadal Pura Part 3 Ch19 | Sandilyan | TamilNovel.in

கலிங்கத்தின் இரு மரக்கலங்களையும் கரையில் இழுத்துப் பழுது பார்க்குமாறும், கடல் புறாவைக் காளத்தி நதிபாயும் கடற்கோரைக் கூட்டத்தருகே நிறுத்துமாறும் இளைய பல்லவன் உத்தரவிட்டதால் பெரும் கோபமடைந்த கண்டியத் தேவனும் அமீரும், படைத்தலைவன் கடைசியாகச் சொன்ன ஒரு வார்த்தையைக் கேட்டதும் சற்றுப் பிரமிப்பும் சாந்தியும் அடைந்தனர். தனது கட்டளையை நிறைவேற்றக் கோபத்துடன் செல்ல முற்பட்ட அந்த இருவரையும், “இன்னும் ஒரு வார்த்தை,” என்று கூறி அழைத்த சோழர் படைத்தலைவன், “தேவரே! கடற்புறாவை கடற்கோரைகளுக்கு அருகில்தான் நிறுத்தச் சொன்னேன்” என்று சற்று அழுத்தமாகத் தெரிவித்தான்.

“ஆம். அப்படித்தான் சொன்னீர்கள்” என்றான் கண்டியத் தேவன் கோபம் தெளிவாகத் தெரிந்த குரலில்.

“அருகில் என்றால், கடற்கோரைகள் மரக்கலத்தின் மீது படவேண்டுமென்று அர்த்தமல்ல” என்றான் படைத்தலைவன்.

“அப்படியா!” என்று சொன்ன கண்டியத்தேவன் இளைய பல்லவன் பேச்சின் அர்த்தம் புரியாமல் விழித்தான்.

“ஆம் தேவரே! கடற்கோரைகளை அளவுக்கதிகமாக நெருங்கினால் கப்பலின் அடிப்பாகம் கோரைகளில் சிக்கிக் கொள்ளும். ஆகவே, கடற்கோரைகளை அடைத்து, ஆனால் அவற்றில் படாதிருக்கப் போதிய அளவு இடம் கொடுத்து மரக்கலத்தை நிறுத்திவிடும். புரிகிறதா?” என்று வினவினான் இளையபல்லவன்.

கண்டியத்தேவன் பதில் சொல்லவில்லை. புரிகிறது என்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் ஆட்டினான். அப்படித் தலையை ஆட்டியதைக் கவனித்த பிறகு இளைய பல்லவன், “தேவரே! பார்வைக்குக் கடல்புறா கோரையை அடைத்து நிற்கவேண்டும். ஆனால் கோரையிலிருந்து ஓரளவு தள்ளியே இருக்கவேண்டும். இன்னொரு மரக்கலம் வந்தாலும் அது முகப்பை நீட்டும் அளவுக்குக் கடல் புறாவுக்கும் கோரைக் கூட்டத்துக்கும் இடைவெளியிருக்க வேண்டும்” என்று கூறிவிட்டு அவர்கள் போகலாம் என்பதற்கறிகுறியாகக் கையை ஆட்டினான்.

அத்துடன் இளையபல்லவனைப் பிரிந்து சென்ற அமீரும் கண்டியத்தேவனும் இளையபல்லவன் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக்கொண்டு சென்றனர். மற்ற இரு மரக்கலங்களையும் நாடிச் செல்லக் கடல் புறாவில் இருந்த படகொன்றை நீரில் இறக்கி நூலேணி மூலம் அதில் இறங்கிய பின்னரே அமீர் தனது சந்தேகத்தைக் கண்டியத் தேவனிடம் வெளியிட முற்பட்டு, “தேவரே! இளையபல்லவர் மிகவும் குழம்பிப் போயிருக்கிறார் என்று நினைக்கிறேன்” என்றான்.

“ஆம்” என்று கண்டியத்தேவனும் ஒப்புக்கொண்டான்.

“அவர் உத்தரவுகள் இதற்குள் மும்முறை மாறிவிட்டன” என்று சுட்டிக் காட்டினான் அமீர்.

“ஆம் அமீர். “

“முதலில் கடல் புறாவை முகத்துவாரத்தை அடைக்கும்படி நிற்க வைத்துக் கலிங்கத்தின் இரு மரக்கலங்களை உள்ளே கொண்டுபோய்ப் பழுது பார்க்கலாம் என்று சொன்னார். “

“ஆம். “

“பிறகு இரு மரக்கலங்களையும் உள்ளே கொண்டுபோய்ப் பழுது பார்க்கலாமென்றும் கடல் புறாவை கங்கதேவனின் நான்கு மரக்கலங்களுக்கிடையே மூக்கை மாத்திரம் புகுத்தி நிற்க வைக்கலாமென்றும் கூறினான். “

“உண்மைதான். “

“இப்பொழுது கடல்புறாவைத் துறைமுகத்துக்குள்ளே கொண்டு போய்க் கடற்கோரைகளுக்கருகே நிற்க வைத்து உத்தரவு பிறப்பிக்கிறார்… ”

“ஆம். “

“ஏன் இப்படி உத்தரவுகள் மாறுகின்றன?” இதைக்கேட்ட அமீர் கண்டியத்தேவன் முகத்தை உற்று நோக்கினான்.

கண்டியத்தேவன் முகமும் குழம்பிக் கிடந்தது. அவன் நீண்ட நேரம் யோசித்துவிட்டுச் சொன்னான்: “இப்படி இளையபல்லவர் அடிக்கடி உத்தரவை மாற்றியதில்லை. மாற்றும் காரணம் ஓரளவு எனக்குப் புரிகிறது. அவ்வப்பொழுது கங்கதேவன் மாறுவதற்கேற்ப இவரும் உத்தரவை மாற்றுகிறார். ஆனால் அமீர்! நமக்குத் தெரியாதா எந்தக் குழப்பத்திலும் இளையபல்லவரின் சிந்தனை தெளிவுப்பட்டு விடுமென்பது” என்று.

அதைப்பற்றிய சந்தேகம் அமீருக்கும் சிறிதுமில்லை யென்றாலும் இளையபல்லவனை கங்கதேவன் விருந்துக்கு அழைத்துக் கரையில் வரவேற்றதிலிருந்து படைத்தலைவனுக்கு எப்பொழுதும் ஆபத்து காத்திருக்கிறது என்பதையும், ஆகவே, தான் மிகுந்த எச்சரிக்கையுடனிருக்க வேண்டுமென்பதையும் தீர்மானித்துக்கொண்டான். படைத்தலைவன் இட்ட உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டவுடன், தாங்களனைவரும் தங்கள் மூன்று மரக்கலங்களும் கங்கதேவனின் கைக்குள்தான் அடங்கியிருக்கும் என்றும் முடிவு செய்துகொண்டான்.

அதைப்பற்றிக் கண்டியத்தேவனிடம் தெளிவாகவும் கூறினான். அமீர் கூறியதெல்லாம் உண்மையென்று தெரிந்திருந்தது கண்டியத்தேவனுக்கு. “இரு மரக்கலங்களையும் கரையில் இழுத்துவிட்டால் அவை செயலிழந்து விடும். கடல்புறாவைக் கோரையினருகில் நிறுத்திவிட்டால் அதன்மீது கங்கதேவன் போர்க்கலங்கள் நான்கும் ஏககாலத்தில் ஆயுதங்களை வீச முடியும். ஆகவே அதுவும் செயலிழந்தது போலத்தான்” என்ற கண்டியத்தேவன், “ஆனால் நாம் என்ன செய்ய முடியும் அமீர்? தலைவர் உத்தரவுகளை நிறைவேற்றித்தானே ஆ க வேண்டும்?” என்றான்.

“நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். இப்படி மூன்று போர்க்கப்பல்களும் செயலிழந்த பிறகு காஞ்சனாதேவியை எப்படி கங்கதேவனிடமிருந்து காக்கப் போகிறார் இளைய பல்லவர்? கங்கதேவன் கடாரத்து இளவரசியை விரும்புவதாக அவரே சொன்னாரே?” என்று வினவினான் அமீர்.

“அதுதான் எனக்கும் புரியவில்லை!” என்று கூறிய கண்டியத்தேவன் தாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே கலிங்கத்தின் மரக்கலமொன்றுக்கருகில் வந்துவிட்டதை உணர்ந்தான். தாரிணி வகையைச் சேர்ந்த அந்த இருபெரும் போர்க்கலங்களும் ஒன்றன்பின் ஒன்றாக நின்றுகொண் டிருந்தன. கடல் புறாவுடன் போரிட்டதால் பெரும் சேதப் பட்டிருந்த நிலையிலும் அவற்றின் சர்ப்ப முகங்கள் மிகப் பயங்கரமாக அலைகளில் ஆடிக்கொண்டிருந்தன.

அவ்விரண்டில் முதல் கப்பலிலேயே ஏறத் தீர்மானித்த கண்டியத்தேவன், அமீரை நோக்கி, “அமீர்! நான் இந்த மரக்கலத்தை முன்னால் செலுத்திச் செல்கிறேன். நீ அந்த மரக்கலத்தை எனக்குப் பின்னால் சிறிது தள்ளியே செலுத்திக் கொண்டு வா. அலைகள் வேகம் அதிகரிக்கிறது. மிகவும் நெருங்கினால் ஒன்றுடன் ஒன்று மோதும்” என்று கூறிவிட்டு முதல் மரக்கலத்தில் ஏறிக்கொண்டான்.

கண்டியத்தேவன் கடல் விவகாரங்களைத் தனக்குக் கூறியது வியப்பாக இருந்ததால் புன்முறுவல் கொண்டான் அமீர். அகூதாவிடம் கடற்போர் பயின்று கடற்காற்றே மூச்சுக் காற்றாக உடைய தனக்குக் கப்பலைச் செலுத்தும் முறையைக் கண்டியத்தேவன் போதிப்பது வியப்பாயிருந்தது அமீருக்கு. இருப்பினும் கண்டியத்தேவன் தன்னைவிட நாலைந்து ஆண்டுகள் பெரியவன் என்பதை முன்னிட்டும் கப்பல் கட்டும் பணியில் சிறந்தவன் என்பதாலும் அவனிடம் மரியாதையுடனும் தாழ்மையுடனும் அமீர் நடந்து கொண்டான். அதுவும் கடல்புறாவைக் கண்டியத்தேவன் நிர்மாணித்த பிறகு தேவனிடம் அமீர் அளவிலா மதிப்புக் கொண்டிருந்தான். ஆகவே அடுத்த மரக்கலத்திலேயே தான் ஏறியதும் கண்டியத்தேவன் உத்தரவுப்படியே நடந்து கொண்டான்.

முதல் மரக்கலத்தில் ஏறிய கண்டியத்தேவன் கடல்நீரை ஊன்றிக் கவனித்தான். அதன் நிறத்தின் கனத்தைக் கொண்டு அந்தத் துறைமுகத்தில் எந்தப் பகுதியில் நுழைந்தால் கப்பல் சீராக உட்புக முடியுமென்பதை ஆராய்ந்தான். கடல்மோகினி துறைமுகத்தில் காளத்திந்தி ஒருபுறம் பாய மற்றொரு புறத்தில் நிலமும் கடலுக்குள் நீண்டிருந்ததால் பிறைச்சந்திரன் போன்ற வடிவமுடையதாயிருந்தது அந்தத் துறைமுகம். காளத்திந்தி பாயும் இடத்தில் கடற்கோரைகள் மண்டிக் கிடந்ததால் அந்தப் புறம் போவது ஆபத்து என்பதை உணர்ந்த கண்டியத்தேவன் நிலம் நீண்டு கிடந்த பகுதி மார்க்கத்தில் மரக்கலத்தைச் செலுத்த உத்தரவிட்டான் மாலுமிகளுக்கு.

சுக்கான் பிடிக்க வேண்டியவனை அழைத்த கண்டியத்தேவன், “இதோ பார், அந்த நிலம் கடலில் புகுந்திருக்கும் இடத்துக்கருகே ஆழம் அதிகமில்லை . கடல்நீர் வெளுத்த நீலமாயிருக்கிறது. இடையே நீர் கறுத்திருக்கிறது பார் அதுதான் ஆழம் அதிகமான இடம். அதன் வழியே மரக்கலம் செல்லும்படி சுக்கானைப் பிடி” என்று மரக்கலம் செல்ல வேண்டிய மார்க்கத்தைச் சுட்டிக் காட்டினான். பிறகு அந்தத் தாரிணி மரக்கலத்தின் சர்ப்ப முகத்தில் காலை வைத்துக்கொண்டு நங்கூரத்தை எடுத்துவிடும் படிக்கும் துடுப்புகளைத் துழாவுமாறும் உத்தரவு பிறப்பித்தான். உத்தரவு மரக்கலத்தின் அடியறைக்குப் பறந்ததும் துடுப்புகள் துழாவின.

இத்தனை ஏற்பாடுகளைக் கிரமப்படி முடித்து மரக் கலத்தை நகர்த்த முற்படுவதற்குள் நாழிகைகள் இரண்டாகி விட்டனவாகையால் கடற்காற்று வலுத்து அலைகள் பெரிதாக உருண்டன. அந்த அலைகளில் அந்தத் தாரிணி எழுந்து எழுந்து தாழ்ந்தது. சில வேளைகளில் திடீரென முகப்பை மாத்திரம் வெகு தூரம் தூக்கிக் கவிழ்ந்துவிடும் நிலைக்கும் வந்தது. அந்தக் காற்று உக்கிரத்தின் காரணமாகப் பாய் எதையும் விரிக்காமல் துடுப்புகளையும் சுக்கானையும் கொண்டே மிகுந்த எச்சரிக்கையுடன் மரக்கலத்தைத் துறைமுகத்துக்குள் நுழைத்தான் கண்டியத்தேவன். அந்த மரக்கலத்தைப் பின்பற்றி, சற்றுத் தூரத்தில் அமீரும் சென்றான்.

துறைமுகத்தின் ஒரு புறத்திலேயே கடலாழம் அதிகமா யிருந்தபடியால் அந்த வழியில் மரக்கலங்களை நுழைத்துப் பிறகு துறைமுகத்தின் நடுப்பகுதிக்கு மரக்கலங்களைத் திருப்ப வேண்டியதாயிற்று. அது தவிர கங்கதேவன் மரக்கலங்கள் துறைமுகத்துக்குள் இரண்டிரண்டாகப் பிரிந்து இருபுறங் களிலும் நின்றிருந்ததால் அவற்றின் மீது மோதாமலும் அந்த அலை உருட்சியில் மரக்கலங்கள் செல்ல வேண்டியதா யிருந்தது. மிகுந்த எச்சரிக்கையுடனும் லாகவத்துடனும் மரக் கலங்களை நடத்திச் சென்ற கண்டியத்தேவனும் அமீரும் தங்கள் மரக்கலங்களைத் துறைமுகத்தின் கரையருகே கொண்டுவந்து நிறுத்துவதற்குள் பொழுது சாயும் நேரம் நெருங்கிவிட்டது.

அந்த இரு மரக்கலங்கள் கரைக்கருகில் வந்து நின்றதும் கடல் புறாவும் உள் புக அசையத் தொடங்கிவிட்டதையும் அதன் முகப்பில் இளையபல்லவன் நின்றுகொண்டிருந்ததையும் தங்கள் மரக்கலங்களிலிருந்தே கவனித்த அமீரும் கண்டியத்தேவனும் கடல் புறா துறைமுகத்தில் புக விளக்கு வைத்த ஒரு நாழிகைக்கு மேல் ஆகுமென்று தீர்மானித்தனர். ஆகவே கடல்புறாவுக்கு வழி காட்டுவதற்கான பந்தங்களையும் விளக்குகளையும் ஏற்றத் தயார் செய்தனர்.

கடல் புறாவின் அசைவை அவர்கள் மட்டுமல்ல, கரை யிலிருந்த கங்கதேவனும் கவனித்தான். பெரும் எடையுள்ள கடல்புறா தனது இறக்கைகளிலும் முகத்திலும் எழுந்து எழுந்து மோதிய பேரலைகளைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் துறைமுகத்துக்குள் புகத் துவங்கிவிட்டதைக் கரையிலிருந்து கவனித்த. கங்கதேவன் அதன் அமைப்பைப் பார்த்துப் பெரிதும் வியந்தான். மாலை வெயிலில் அதன் கற்கள் பதிக்கப் பெற்ற கண்களும் பிரமாதமாகப் பிரகாசித்தன. அதன் இறக்கைகளில் பாய்ந்த மஞ்சள் வெய்யில் அவற்றைப் பொன்னிறமாக அடித்திருந்தன.

அதன் தலையில் கால்வைத்து நின்றிருந்த இளையபல்லவன் ஏதோ தெய்வீக பட்சிமீது அலைகளில் ஊர்ந்து வரும் தேவனெனத் தென்பட்டான் கங்கதேவன் கண்களுக்கு அந்தச். சில நாழிகைகளில் இளையபல்லவன் மீது பெரிதும் பொறாமையும் கொண்டான் கங்கதேவன். மிகச் சிறந்த கடலோடிகளுள் ஒருவனான கங்கதேவன் அந்தச் சில நிமிஷங்களில் காஞ்சனாதேவியைக் கூட மறந்தான். அந்தக் கடல் புறா தனக்குச் சொந்தமாய் இருக்கக்கூடாதா என்று நினைத்தான். அதன் அசைவு, கம்பீரம் இரண்டும் அத்தனை அழகாயிருந்தன. அதைப் பார்த்து மலைத்துக்கொண்டு கரையிலேயே நின்ற கங்க தேவன் கரைக்கு வந்து பந்தங்களைக் கொளுத்த முயன்ற கண்டியத்தேவனுக்கும் அமீருக்கும் சகல உதவிகளையும் செய்தான்.

கடல் புறா துறைமுகத்தின் முகப்புக்கு வருவதற்குள் இருள் சூழ்ந்துவிடவே பந்தங்களும் விளக்குகளும் கொளுத்தப் பட்டன. அந்தப் பந்தங்கள், விளக்குகளைக் கொண்டு அமீரும் தேவனும் காட்டிய அடையாளங்களால் கடல் புறாவைச் செலுத்தி, காளத்திநதியின் முகத்துவாரத்தை நோக்கிச் சிறிதும் திருப்பி நிற்க வைத்த இளையபல்லவன் தான் மட்டும் ஒரு படகில் இறங்கிக் கரைக்கருகே வந்தான். அங்கு கங்கதேவனும் நிற்பதைக் கண்டதும் உள்ளூர மகிழ்ந்து, “கங்கதேவரே! உங்களைப் பார்க்கத்தான் வந்தேன், நல்ல வேளை, கரையிலேயே இருக்கிறீர்கள்” என்றான்.

“என்ன வேண்டும் உங்களுக்கு?” என்று வினவினான் கங்கதேவன்.

“முதலில் அதோ காளத்தி நதிக்கருகில் இருக்கும் இரண்டு மரக்கலங்களையும் சற்று முன்னோக்கி நகர்த்த வேண்டும்” என்று வேண்டிக்கொண்டான் இளையபல்லவன்.

“அவை அங்கிருந்தால் என்ன?” கங்கதேவன் சந்தேகத் துடன் கேட்டான்.

“கடல் புறாவை நிறுத்த அவை தடையாயிருக்கின்றன. “

“எங்கு நிறுத்தப் போகிறீர்கள்?”

“அதோ அந்தக் கோரைகளுக்கு அருகே?”

இதைக்கேட்ட கங்கதேவன் இளையபல்லவனை உற்று நோக்கினான். அவன் முகத்தில் சிறிது சந்தேகத்தின் சாயை எழுந்தது. “உண்மையாகத்தான் சொல்கிறீர்களா?” என்று வினவினான் சந்தேகம் குரலில் தொனிக்க.

“ஆம். ” இளையபல்லவன் பதில் திடமாக வந்தது.

கங்கதேவன் சிறிது யோசித்தான். பிறகு ஏதும் புரியாமல் தலையை அசைத்து, “சரி சரி! உங்களிஷ்டம்!” என்று கூறிவிட்டு இளையபல்லவன் உத்தரவுப்படி மரக்கலங்களை நகர்த்துமாறு உத்தரவிட்டான்.

அதற்குப்பின், “இன்னொரு வேண்டுகோள்” என்றான் மறுபடியும் இளையபல்லவன்.

“என்ன தேவை?”

“பலவர்மனையும் மஞ்சளழகியையும் உடனடியாகக் கரைக்குக் கொண்டுவர வேண்டும். அதற்கு உங்கள் மாளிகையில் ஓர் அறை தேவை. “

“அதற்கென்ன, தயார் செய்யச் சொல்கிறேன். “

“நீங்களே பார்த்துச் சரியான அறை ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டான் இளையபல்லவன்.

“அப்படியே செய்கிறேன். வரவழையுங்கள் இருவரையும்” என்று கூறிய கங்கதேவன் மாளிகையை நோக்கி நடந்தான் அதிவேகமாக. அவன் சென்றதும் கடல் புறாவையும் மற்ற மரக்கலங்களையும் நிறுத்தவேண்டிய முறை பற்றியும் யார் யார் எங்கெங்கு இருக்கவேண்டும் என்ற விஷயம் பற்றியும் அமீருக்கும் கண்டியத்தேவனுக்கும் உத்தரவுகளைப் பிறப்பித்தான் இளையபல்லவன். பிறகு காஞ்சனாதேவி யையும், பலவர்மனையும் அழைத்துவர மாலுமிகளை அனுப்பினான்.

மயக்கமுற்றிருந்த பலவர்மனை ஒரு மஞ்சத்தில் கிடத்தி இரண்டு மாலுமிகள் படகில் வைக்க அவன் பக்கத்தில் உட்கார்ந்து காஞ்சனாதேவி கரை வந்து சேர்ந்தாள். பலவர்மனைத் தூக்கி வரச்சொல்லி இரு மாலுமிகளுக்கு உத்தரவிட்டுக் காஞ்சனாதேவியுடன் நடந்து கங்கதேவன் மாளிகைக்குச் சென்ற இளையபல்லவனுக்கு அங்கு விருந்து தயாராயிருந்தது. மாளிகை மாடியிலிருந்த தனது ஓர் அறையைப் பலவர்மனுக்கும் காஞ்சனாதேவிக்கும் ஒதுக்கி விட்டிருந்தான் கங்கதேவன். அன்றிரவு காஞ்சனாதேவி உண்ண மறுத்ததால் கங்கதேவனுடன் உணவுண்ட இளையபல்லவன் இரவின் நாழிகை எட்டுக்குமேல் ஓடி விட்டதை அறிந்து, “கங்கதேவரே, நாழிகை எட்டு ஓடி விட்டதே” என்றான்.

“ஆம், ஓடிவிட்ட து. “

“நான் கரைக்குப் போய், கடல் புறா நகர்த்தப்பட்டு விட்டதா என்பதைப் பார்க்க வேண்டும். “

“நன்றாய்ப் பாருங்கள், நானும் வேண்டுமானால் வருகிறேன். “

“வேண்டாம், வேண்டாம். நீங்கள் வரவேண்டாம். நீங்கள் படுத்து உறங்குங்கள். நான் போய் வருகிறேன்” என்றான் இளையபல்லவன்.

‘பழம் நழுவி பாலில் விழுந்தது’ என்று மனத்துள் உவகை கொண்டான் கங்கதேவன். இளையபல்லவன் கரைக்குச் சென்ற நீண்ட நேரத்திற்குப் பின்பும் அவன் திரும்பவில்லை. அதனாலேற்பட்ட சந்துஷ்டியுடன் மாளிகையின் தரைத்தளத்திலிருந்த தனது அறையைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் கங்கதேவன். மாளிகை எங்கும் நிசப்தமாயிருந்தது. மெள்ள மெள்ள மாடிப்படிகளில் ஏறி காஞ்சனாதேவி இருந்த அறையை நோக்கிச் சென்றான் அந்தக் கயவன். அவன் கண்களில் காமவெறி மண்டிக் கிடந்தது.

கங்கதேவன் சம்பந்தப்பட்ட வரையில் அது அவனுக்கு அனுகூலமான காலம். பழம் நழுவிப் பாலில் விழுந்துவிட்ட காலந்தான். பழமும் பாலும், ஏன் சர்க்கரையும் கலந்தால் கூட ஏற்படாத இனிப்பு அவன் சிந்தையைத் தழுவிக் கிடந்தது. அதன் ஊடே கொழுந்து விட்டது காமாக்கினி. அந்தக் காமாக்கினி உந்த, மாடிப்படிகளில் ஏறிக் காஞ்சனாதேவி இருந்த அறையை இருமுறை தட்டவும் செய்தான்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch18 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch20 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here