Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch20 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch20 | Sandilyan | TamilNovel.in

159
0
Read Kadal Pura Part 3 Ch20 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch20 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch20 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 20 : சேந்தன் செய்த சத்தியம்.

Read Kadal Pura Part 3 Ch20 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா கடற்கோரைக்கருகே சரியாக நகர்த்தப் படுகிறதா என்பதைப் பார்க்கக் கடற்கரைக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு இளையபல்லவன் மாளிகையிலிருந்து சென்றதும், தன்னைவிட ஓர் அதிர்ஷ்டசாலி உலகில் இருக்க முடியாதென்றே கங்கதேவன் நினைத்தான். அன்று தான் விழித்த வேளை மிகவும் நல்லவேளையே என்பதையும், இல்லாவிட்டால் அடுத்தடுத்துத் தான் எண்ணியபடியெல்லாம் காரியங்கள் நடக்குமாவென்றும், கலிங்கத்தின் தூரக்கிழக்குத் தளபதியும் கொள்ளைக்காரனுமான கங்கதேவன் பலமுறை எண்ணிப் பார்த்து இணையிலா திருப்தியும் பட்டுக்கொண்டான்.

விளக்குகள் பூரணமாகத் துறைமுகத்தில் அணைந்திருந்ததைப் பார்த்த பிறகும், கண்களுக்கு நன்றாகத் தெரியும்படியாகக் கடல் புறாவையும் மற்றுமிரு மரக்கலங்களையும் விளக்குப் போட்டு இளைய பல்லவன் கடல் பவனி வந்ததையும், பிறகும் தானாகவே துறைமுகத்துக்குள் வர அனுமதி கேட்டதையும் அப்படி அனுமதியளித்த பின்பும் தன் பெரு மரக்கலத்தைக் கடற் கோரைக்கருகில் நிறுத்த விண்ணப்பித்துக் கொண்டதையும் நினைத்துப் பார்த்த கங்கதேவனுக்கு, தன் அனுகூல காலத்தால் அத்தனையும் நடக்கிறதா அல்லது கடற்போர் வல்லவன் என்ற பிரசித்தி பெற்ற இளையபல்லவன் மூளை மழுங்கியதால்தான் அந்த விளைவுகள் உண்டாயினவா என்பது புரியவில்லை .

இளையபல்லவன் பேச்சிலிருந்தும் பார்வையிலிருந்தும் ஒன்று மட்டும் திட்டமாகப் புரிந்துகொண்டான் கங்கதேவன். இளையபல்லவன் சிறந்த அறிவாளி என்பதுதான் அது.

“அப்பேர்ப்பட்ட அறிவாளி தனது மரக்கலங்களில் போரிடும் நிலையிலிருந்த ஒரே மரக்கலமான கடல் புறாவை எதற்காகப் பயங்கரமான கடற்கோரைக்கருகில் நிற்க வைக்க முற்பட்டான்? அதுவும் எனது இரு மரக்கலங்களையும் நகர்த்த அவற்றுக்கும் கடற்கோரைக்கும் இடையே நிற்க வைக்கிறானே! என் மரக்கலங்கள் ஆயுதங்களை வீசினால் ஒன்று கடல் புறா திருப்பி அடிக்க வேண்டும், அல்லது பின்னடைய வேண்டும். திருப்பியடித்தால் பழுதுபடாத இரு மரக்கலங்களுக்கெதிரே பழுதுபட்ட கடல் புறா இருக்கும். பின்னடைந்தால் கடற்கோரைகளில் சிக்கும். இரண்டும் பேராபத்து ஆயிற்றே! இந்த நிலையில் மரக்கலத்தை நிறுத்த இளையபல்லவன் எப்படித் தீர்மானித்தான்?” என்று பலபடி தன்னைக் கேள்வி கேட்டுக்கொண்ட கங்கதேவன், தன்னைப் பிடித்த நல்ல காலந்தான் இளையபல்லவன் அறிவு கெட்டு விட்டதெனத் தீர்மானித்தான்.

அந்த விஷயத்தில் மட்டும் தனக்கு நல்ல காலம் ஏற்பட வில்லை என்றும் மற்ற விஷயங்களிலும் நல்ல காலம் ஏற்பட் டிருப்பதையும் உணர்ந்தான் கங்கதேவன். பலவர்மன் மகளைக் கடல் புறாவில் இருக்கச் செய்து அங்கேயே பலவர்மனுக்குச் சிகிச்சை செய்திருந்தால் தன் நிலைமை என்னவாகும் என கங்கதேவன் எண்ணிப் பார்த்தான். சண்டையின்றி மஞ்சளழகியைத் தான் அடைய முடியாதென்று தீர்மானித்தான் அவன். “காலம் இங்கும் எனக்கு அனுகூலம் செய்திருக்கிறது.

என் மாளிகையிலேயே பலவர்மன் மகள் மஞ்சளழகி இருக்கிறாள் இப்பொழுது. இளையபல்லவனே! நீ வாழி பல்லாண்டு! உன் மூளைக்கிணை உலகில் கிடையாது. பஞ்சையும் நெருப்பையும் அக்கம் பக்கத்தில் வைக்காதே என்று உன் நாட்டவர் சொல்வார்களே! அதையுமா மறந்து விட்டாய்?” என்று உள்ளத்தில் கேள்வியொன்றை எழுப்பிக் கொண்டு குதூகலித்த கங்கதேவன், காலத்தை அதிகமாக ஓடவிடாமல் மேலறைக்குப் போகச் சிறிது தன்னைத் தயார் செய்துகொள்ளவும் முற்பட்டு அறையின் மூலையிலிருந்த ஒரு தந்தப் பேழையிலிருந்து ஏதோ வாசனைத் திரவியத்தை எடுத்து மீசையிலும் அங்கி மீதும் தடவிக் கொண்டான்.

பிறகு மீசையை நன்றாக முறுக்கி, சமயம் வரும்போது உதட்டுக்கு இடைஞ்சலாய் இல்லாதிருக்க சற்று மேலேயே எழும்பி நிற்கும்படி செய்து கொண்டான். புடைத்த கன்னங்களுடனும் ஆழக் கண்களுடனுமிருந்த தன் முகத்தினழகைச் சிறிது கண்ணாடியிலும் பார்த்துக் கொண்டான். பின்பு தன்னைப் பற்றிய பரம திருப்தியுடன் படிகளில் ஏறிச் சென்றான். அப்பொழுதுதான் நினைத்தான், பழம் நழுவிப் பாலில் விழுந்தது என்று. ‘அப்படியில்லாவிட்டால் மேலுக்கு கடற்கரை வருகிறேனென்று சொன்ன என்னை வேண்டாமென்று சொல்லிவிட்டு இளையபல்லவன் வெளியே செல்வானா?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான் கங்கதேவன்.

பண்பு மட்டும் சிறிது கங்கதேவனுக்கு இருந்திருந்தால் இதே நிலைமையை அவன் வேறு விதத்தில் ஆராய்ந் திருப்பான். கடல் புறாவைத் தன் மரக்கலங்களின் ஆதிக்கத்தில் நிறுத்த முற்பட்டதை இளையபல்லவனுக்குத் தன்மீது இருந்த நம்பிக்கையை உணர்த்துவதாக எண்ணியிருப்பான். மஞ்சளழகியைத் தன் வசம் ஒப்படைத்துப் போனதை அந்த நம்பிக்கை வரையற்றது என்பதை அறிவுறுத்துவதாக அறிந்திருப்பான். தவிர நட்பின் கடமையும் புரிந்திருக்கும் அவனுக்கு.

நண்பன் ஒப்படைத்தவளை அவன் அனுமதி கிடைக்கும்வரை அணுகுவது துரோகம் என்பதையும் புரிந்துகொண்டிருப்பான். ஆனால் பண்பு சிறிதுமற்றவனும் ஆயுளில் பல மங்கையரைக் கெடுத்திருப்ப வனுமான கங்கதேவன், இளையபல்லவன் செய்கை ஒவ்வொன்றிலும் அறிவீனத்தையும் அஜாக்கிரதையையுமே பார்த்தான். அத்தனையும் தன் அதிர்ஷ்டம் என்று எண்ணினான். மேலே இருப்பது பழம் என்றும் அது நழுவிக் கைகளில் விழப் போகிறதென்றும் நினைத்து அறையை விட்டு வெளியே வந்தான்.

இளையபல்லவன் கடற்கரைக்குக் கிளம்பி ஒரு நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது என்பதைத் தீர்மானித்துக் கொண்ட கங்கதேவன் மாளிகையில் நிசப்தம் நிலவுவதைக் கண்டான். மாளிகைக்கு வெளியே காவல் புரிந்த இரு காவலர் பேசிக்கொண்டிருந்த சப்தம்கூடச் சரியாகக் காதில் விழ வில்லை, தூரத்தே கடல் போட்ட இரைச்சலால். ஆகவே பரம சந்துஷ்டியுடன் இணையற்ற இன்பத்தை எதிர்பார்த்து ஏறிச் சென்றான் அவன். மாடிப்படிகளில் ஏறிச் சென்று மாடிப்படிக் கதவைத் தட்டினான் இருமுறை.

கதவு திறக்கப்பட்டது. உள்ளே நோக்கிய கங்கதேவன் விழிகள் கன்னக்கதுப்புக்களின் ஆழத்திலிருந்தாலும் பயங்கர மாக ஒளிவிட்டன. அந்தக் கண்களுக்கெதிரே அவன் எதிர் பார்த்த பழம் இல்லை. ஆகவே அது பாலிலும் விழுவது சாத்தியமில்லை என்பதைப் புரிந்துகொண்டதால் கங்கதேவன் முகம்மிகக் கொடூரமாக மாறியது. அவன் கண்ணுக்கெதிரே தெரிந்தது மஞ்சளழகியின் அழகிய திருமேனியல்ல. மயக்கும் கண்களல்ல அவனை விழித்து நோக்கியவை.

அந்த மாயக் கண்களை, மந்திரக் கண்களை அவன் கடல் புறாவில் ஏற்கெனவே பார்த்திருந்தான். அறைக் கதவைத் திறந்து அவனை நோக்கியவை மந்திரக் கண்களல்ல, இரண்டு தந்திரக் கண்கள் நோக்கின. கங்கதேவன் கோபத்தைக் கண்டு அந்தத் தந்திரக் கண்களில் அச்சத்துடன் விஷமங்கலந்த நகைப்பும் துளிர்விட்டது. “உன்னை நான் இங்கு எதிர்பார்க்கவில்லை” என்று கூறினான் கங்கதேவன், சொற்களில் அனல் பறக்க.

கூலவாணிகனின் கண்களில் சிரிப்புத் தாண்டவமாடினாலும் மேலுக்குப் பணிவுடன் குரல் வெளிவந்தது. “அது அடிமையின் துர்பாக்கியம்” என்றான் கூலவாணிகன் தலை தாழ்த்தி வணங்கி.

சாதாரணச் சமயமாயிருந்தால் கூலவாணிகனின் குரலி லிருந்த ஏளனத்தையும் கண்களில் விளையாடிய நகைப்பையும் கங்கதேவன் கவனித்திருப்பான். காமவெறி மண்டிக்கிடந்த அந்தச் சமயத்தில் அவன் எதையும் கவனிக்கும் சக்தியை இழந்திருந்ததால் மீண்டும் உக்கிரத்துடன் கேட்டான், “நீ எதற்கு இங்கு வந்தாய்?” என்று.

“நான் இருக்க வேண்டிய இடம் இது. ” பணிவுடன் வந்தது சேந்தன் பதில்.

“நீ இருக்க வேண்டிய இடமா? முகத்தைப் பார் முகத்தை” என்றான் கங்கதேவன் வெறுப்புடனும் கோபத்துடனும்.

“என் முகத்துக்கென்ன?” சேந்தன் உள்ளூர நகைத்துக் கொண்டு வெளிக்குச் சர்வ சாதாரணமாகக் கேட்டான்.

“அழகு சொட்டுகிறது. “

“அப்படித்தான் ஊரிலும் சொல்லுவார்கள். “

“எந்த ஊரில் எந்த மடையன் சொன்னான் அப்படி?”

“இப்போதுகூடத் தாங்கள். “

சேந்தன் வார்த்தையை முடிக்கு முன்பாக, “டேய் மடையா!” என்று கூவி கங்கதேவன் சேந்தனை அறையத் தன் வலப் பெருங்கையை ஓங்கினான். சேந்தன் சற்றுப் பின்னடைந்து பதுங்கினான். அப்படிப் பதுங்கிக் கொண்டே சொன்னான், “அதிகமாகச் சத்தம் போடாதீர்கள்” என்று.

கங்கதேவன் கோபம் எல்லை மீறியது. “என் மாளிகையில் நான் சத்தம் போடக் கூடாதா? என்னிடம் விளையாடுகிறாய்?” என்று கூவிக்கொண்டே சேந்தனை அணுகினான். கங்கதேவனின் பயங்கர நடையிலிருந்தும் உதையிலிருந்தும் தப்ப, கூலவாணிகன் அறையின் மூலையில் அப்படியும் இப்படியும் பதுங்கிக்கொண்டே, “தங்கள் மாளிகைதான். இருப்பினும் இது தலைவரின் அறை” என்று கூவினான்.

“யார் சொன்னது இது தலைவர் அறையென்று?” என்று கங்கதேவன் வினவினான், சேந்தனைத் துரத்திப் பிடிக்க முயன்று கொண்டே.

“தாங்கள்தான். “

“எப்பொழுது சொன்னேன்?”

“சொன்ன மாதிரிதான். “

“சொன்ன மாதிரி என்றால்… ”
“பலவர்மனுக்கு எப்பொழுது ஒழித்து விட்டீர்களோ அப்பொழுதே அவருக்கு இந்த அறையை அளித்தது போலத்தான். “

“அவனுக்கு மட்டும் ஒழித்து விடவில்லை. “

“தலைவரை மரியாதையின்றிப் பேசுவது முறையல்ல. “

“யார் என்னைத் தடுக்க முடியும்?”

இந்தச் சமயத்தில் பிரம்மாஸ்திரத்தை வீசினான் சேந்தன். “அவர் மகள்” என்று மெள்ளத்தான் சொன்னான் கூலவாணிகன். இருப்பினும் அந்தச் சொற்கள் கங்கதேவனைச் சட்டென்று ஓரிடத்தில் நிற்க வைத்தன. “என்ன சொன்னாய்; இன்னொரு முறை சொல்?” என்று கேட்டான் கங்கதேவன்.

“அவர் மகள்” என்று சற்று அழுத்திச் சொன்னான் கூலவாணிகன்.

“மஞ்சளழகியா?” இதைக்கேட்ட கங்கதேவன் குரலில் காமம் மட்டுமின்றிக் கனிவும் தொனித்தது.

“ஆம்” என்றான் சேந்தன்.

“எங்கே அவள் இப்பொழுது?” என்று கங்கதேவன் வினவினான்.

“தலைவர் பெண்ணை … ” இழுத்தான் சேந்தன்.
“என்ன ?”

“மரியாதையுடன் அழைக்க வேண்டும். அவள் இவள் என்று… ” கூலவாணிகன் வார்த்தையை முடிக்காமல் விட்டாலும் முடிவு புரிந்தது கங்கதேவனுக்கு.

கங்கதேவன் அறை நடுவே சற்று நின்றான். பிறகு கேட்டான், “உன் பெயர் என்ன?” என்று.

தன் பெயரை ஏன் கேட்கிறான் என்பதை அறியாத கூலவாணிகன், “சேந்தன்” என்று பதில் சொன்னான்.

“உன் தொழில்?”

“பல. “

“உதாரணமாக?”

“வர்த்தகம், வைத்தியம். “

“உனக்கு இரண்டாலும் நல்ல லாபம் வேண்டுமா?”

லாபம் என்ற வார்த்தையைக் கேட்டதும் கூலவாணிகன் சித்தத்தில் இன்ப அலைகள் பாய்ந்தன. “எந்த வணிகனாவது லாபத்தைப் புறக்கணிப்பானா?” என்று வினவினான் ஆசை குரலிலும் தொனிக்க.

அடுத்த விநாடி கங்கதேவன் குரல் அடியோடு மாறியது. சேந்தன் அருகே வந்து அவன் தோளில் கையைப் போட்டுக் கொண்டு, “சேந்தா!” என்று தேனொழுக அழைத்தான்.

“தலைவரே!” என்றான் சேந்தனும்.

“உனக்கு என்னால் நிரம்பப் பணம் தரமுடியும்” என்று கூறிய கங்கதேவன் சேந்தனை உற்று நோக்கினான்.

சேந்தன் கண்களில் மகிழ்ச்சி மண்டிக் கிடந்ததை அவன் உணர்ந்தான். ஆகவே மேலும் சொன்னான் கங்கதேவன், “சேந்தா! இந்த மாளிகையில் ஒரு சிற்றரசை வாங்கக்கூடிய அளவுக்கு நகைகளும் பொற்காசுகளும் வைத்திருக்கிறேன். அவை அனைத்தையும் உனக்குத் தருவேன்… ” என்று.

“அனைத்தையுமா?” சேந்தன் அக்கறையுடன் கேட்டான்.

“ஆம். “

“அனைத்தையும் கொடுத்துவிட்டு நீங்களென்ன செய்வீர்கள்?”

“மீண்டும் கொள்ளையடிக்க எனக்குச் சாமர்த்தியமுண்டு. “

“ஆம் ஆம். அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். “

கங்கதேவன் இதயத்தில் பெருமை மண்டியது. தன் பிரபாவம் வெகுதூரம் பரவியிருப்பதைப் பற்றிய மகிழ்ச்சியுடன் சொன்னான், “சேந்தா! எனக்கு நகை, பொன் முக்கியமல்ல” என்று.

“பின் எது முக்கியம்?” என்று அக்கறையைக் காட்டினான் குரலில் சேந்தன்.

“எதுவென்று பிறகு சொல்கிறேன். முதலில் நீ மறைக்காமல் விஷயங்களை எனக்குச் சொல்ல வேண்டும்” என்று கேட்ட கங்கதேவன் தனது குரலில் தோழமையைக் காட்டினான்.

“கண்டிப்பாய்ச் சொல்கிறேன். உங்களை எதிர்த்துக் கொண்டு இந்தத் துறைமுகத்தில் யார் பிழைக்க முடியும்?”

” அது தெரியுமல்லவா?”

“நன்றாகத் தெரியும். இல்லாவிட்டால் வாயைத் திறப்பேனா?”

“நீ புத்திசாலி… ”

“சற்று முன்பு நீங்கள் என்னை… ”

“மடையன் என்று அழைத்தேன். அதை மறந்துவிடு. “

“மறந்து விட்டேன். “

“ஆத்திரத்தில், மஞ்சளழகியில்லாத ஏமாற்றத்தில் அப்படிக் கூறிவிட்டேன். “
“அதனால் பாதகமில்லை . “

இதற்குப் பிறகு கங்கதேவன் பஞ்சணையில் மயக்கத்துடன் படுத்திருந்த பலவர்மனைச் சில விநாடிகள் பார்த்தான். பிறகு கேட்டான், “இவன் சுரணை அடைய… ” என்று.

“இரண்டு நாட்களாகும்” என்றான் சேந்தன்.

“அப்படியானால் நாம் பேசலாம்” என்ற கங்கதேவன், “சேந்தா! இந்த மஞ்சளழகி இளையபல்லவனைக் காதலிக் கிறாள் என்பது எனக்குத் தெரியும்” என்றான்.

“அதை ஊகித்து விட்டீர்களா!” சேந்தன் குரலில் வியப்பைக் காட்டினான்.

“என் கண்களிலிருந்து எதுவும் தப்ப முடியாது” என்ற கங்கதேவன், “ஆனால் சேந்தா! இளையபல்லவன் இவளைக் காதலிக்கிறானா?” என்று வினவினான்.

“அதை ஏன் கேட்கிறீர்கள் போங்கள். ” என்று அலுத்துக் கொண்டான் சேந்தன்.

“என்ன சேந்தா?”

“கங்கதேவரே! இந்தப் பெண்கள்தான் இளைய பல்லவரைக் கண்டதும் தலை கீழாய் விழுகிறார்கள். அவர் யாரையும் சட்டை செய்வது கிடையாது. அகப்பட்ட பெண் களைச் சிறிது காலம்.. சொல்லக் கூசுகிறதே. “
இதில் கூச்சமென்ன சேந்தா! கடலோடும் கொள்ளையர் வாழ்வே அவ்வளவுதான். “

“அப்படியா! நானும் கடலோடுகிறேன். “

“நீ வேறு தினுசு. “

“இதில் தினுசு வேறா?”

“ஆம் சேந்தா! சிலருக்குப் பண இச்சையிருக்கும். சிலருக்குக் காம இச்சை இருக்கும். இன்பங்கள் பலவிதம். அவற்றில் உனக்கு இன்பம் பணத்தில், நீ வணிகனல்லவா?”

“ஆம் ஆம். “

“ஆகவே சொல். இந்த மஞ்சளழகியை… ” என்று பொருள் பட நோக்கினான் சேந்தனை கங்கதேவன்.

“இளையபல்லவன் சில நாட்களாக… ” அங்குமிங்கும் நோக்கினான் சேந்தன்.

“இங்கே யாரும் வரமாட்டார்கள், சொல். “

“இளையபல்லவர் புறக்கணித்து வருகிறார். இப்போது கூட”

“உம்… சொல். “

“அவருக்குத் தெரியாமல் இஷ்ட விரோதமாகக் கடற் கரைக்குப் போய் இருக்கிறாள். “

“ஏன்?”

“மஞ்சளழகிக்கு நேற்றிலிருந்தே சிறிது காய்ச்சல். கடலில் எப்போதும் போகாதவள் கடல் நோய் பிடித்துக் கொண்டிருக் கிறது. கடற்காற்று ஆகவில்லை . “

“அப்படியா! இது எனக்குத் தெரியாதே!” என்றான் கங்கதேவன் கவலையுடன்.

“கவலைப்படுவதற்கு ஏதுமில்லை. இன்னும் நான்கே நாட்களில் குணப்பட்டுவிடும். தவிர-” என்று சேந்தன் ரகசியம் சொன்னான்.

“என்ன சேந்தா?”

“காய்ச்சலுடன் கடலோரம் வர வேண்டாமென்று தள்ளிவிட்டுப் போய்விட்டார் இளையபல்லவர். ” “என் அறையிலிருந்துதான் போனார். “

“ஆம். அவர் சென்ற அடுத்த விநாடி என்னை மட்டும் இங்கு உட்கார வைத்துவிட்டுப் படிகளில் இறங்கிச் சென்றுவிட்டாள். யார் சொல்வதைப் பெண்கள் கேட்கிறார்கள்?”

“அதிருக்கட்டும். நீ எப்போது இங்கு வந்தாய்?” கங்க தேவன் குரலில் சந்தேகம் இருந்தது.
“பலவர்மரைத் தூக்கி வந்த நால்வரில் நான் ஒருவன். ஏழையை நீங்கள் எங்கே கவனிக்கப் போகிறீர்கள்? திரும்பிப் போனவர்கள் மூவர் என்பதை எங்கே கவனித்திருக்கப் போகிறீர்கள்? உங்கள் பார்வையெல்லாம் மஞ்சளழகி மீது…அந்தப் பார்வையும் பழுதுபட்டு விட்டது. பார்வையல்ல, காது,” என்றான் சேந்தன் கடுமையாக.

“என்ன சொல்லுகிறாய் சேந்தா?” என்று வினவினான் கங்கதேவன்.

“இளையபல்லவர் சென்றதும் உடனே நீங்கள் ஏன் இங்கு வரவில்லை? எதற்காக நீண்ட நேரம் அறைக்கதவை மூடிக் கொண்டு மஞ்சளழகி போவதுகூடத் தெரியாமல் இருந்தீர்கள்?” என்று கேட்டான் சேந்தன்.

சேந்தன் சொன்னது சரியென்றே பட்டது கங்க தேவனுக்கு. தன்னைச் சிங்காரித்துக் கொண்டிருந்த நேரத்தில் மஞ்சளழகி ஓடியிருக்க வேண்டுமென்பதைப் புரிந்து கொண்டான். சற்று யோசித்துவிட்டு, “சேந்தா! நீ என் பக்கம் சேர விரும்புகிறாயா?” என்று வினவினான்.

“லாபத்தைப் பொறுத்தது, நான் வணிகன்” என்றான் சேந்தன்.

“இப்படி வா!” என்று கங்கதேவன் அவன் காதுக்கருகில் குனிந்து கிசுகிசு என்று ஏதோ சொன்னான். கூலவாணிகன் முகத்தில் சற்றுப் பயத்தைக் காட்டினான். “பயப்படாதே நானிருக்கிறேன்” என்ற கங்கதேவன், “சத்தியம் செய்” என்று தன் கையை நீட்டினான். கூலவாணிகன் கையடித்துச் சத்தியம் செய்தான். அத்துடன் கங்கதேவன் அறையை விட்டு வெளியே நடந்தான். கூலவாணிகன் கதவைச் சாத்திக்கொண்டு கதவின் மேல் சாய்ந்து கொண்டு ஆயாசப் பெருமூச்சு விட்டான். அடுத்த விநாடி அவன் முகத்தில் கிலி படர்ந்தது. பஞ்சணையில் மயக்கமுற்றிருந்த பலவர்மன் அவனைப் பார்த்துப் புன்முறுவல் செய்தான். பிறகு அருகில் வரும்படி சைகையும் செய்தான்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch19 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch21 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here