Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch21 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch21 | Sandilyan | TamilNovel.in

126
0
Read Kadal Pura Part 3 Ch21 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch21 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch21 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 21 : இரண்டாவது சத்தியம்.

Read Kadal Pura Part 3 Ch21 | Sandilyan | TamilNovel.in

கெட்ட எண்ணங்களை நிரம்ப உடைய கங்கதேவன் தன்னிடம் காதில் கூறிய விஷயங்களை நினைத்தும் கையிலடித்து வாங்கிக்கொண்ட சத்தியத்தை நினைத்தும் கிலி கொண்டிருந்த கூலவாணிகனுக்கு கங்கதேவன் சென்றதும் பலவர்மன் கண் விழித்ததும் புன்முறுவல் செய்ததும் அருகில் வரச் சைகை செய்ததும் அந்தக் கிலியை ஆயிரம் மடங்கு உயர்த்தவே செய்தன. பூரண மயக்கத்தில் இருந்ததாகத்தான் எண்ணிய பலவர்மன் எப்படிக் கண்விழித்தான் என்பது பேராச்சரியமாக இருந்தது சேந்தனுக்கு. அது தவிர தன்னைச் சைகை காட்டி அழைக்குமளவுக்கு அவனுக்குத் தெம்பும் இருந்ததை எண்ணிப் பெரும் பிரமிப்புக்குமுள்ளானான் கூலவாணிகன்.

இளையபல்லவன் உத்தரவுப்படி தான் கடல் புறாவில் அளித்த மருந்தின் வேகத்தை அவன் உணர்ந்தே யிருந்தான். அந்த மருந்தையே ஜீரணம் செய்துவிட்டு அநாயாசமாகச் சிரிக்கும் பலவர்மன் உண்மையில் மனிதப் பிறவியல்லவென்றும் ராட்சதனாகத்தானிருக்க வேண்டு மென்றும் முடிவு செய்த சேந்தன் மிகுந்த பயத்துடனேயே பஞ்சணையை அணுகினான். அவனைப் பக்கத்தில் உட்காரச் சொல்லி சைகை காட்டிய பலவர்மன், “கூலவாணிகரே! அருகில் வாரும். இரைந்து பேசச் சக்தியில்லை” என்றான் தீனமான குரலில்.

கூலவாணிகன் நகைச்சுவையும் இடக்கும் அந்தச் சமயத்திலும் மேலோங்கி நின்றதால், “இரைந்து பேசச் சக்தி யில்லையா?” என்று ஏளனம் குரலில் தொனிக்கக் கேட்டான்.
பலவர்மர் தன் தலையைத் தலையணையில் மெள்ளத் திருப்பி, “ஆம் வணிகரே! முடியவில்லை ” என்றான் சிரமப்பட்டு வார்த்தைகளை உதிர்த்து.

“ஏன், கத்திப் பேச ஆவலாயிருக்கிறதோ?” என்று வினவினான் சேந்தன்.

“இல்லை அந்த ஆவலில்லை” என்ற பலவர்மன் குரல் சற்று வித்தியாசமாக ஒலித்தது.

“அதுவரையில் சந்தோஷம். “

“உமக்கு மட்டுமல்ல; எனக்கும் சந்தோஷம். “

“என்ன சந்தோஷமோ?”

“எனக்கு உணர்ச்சியிருக்கிற வேகத்தில் சக்தி இருந்தால் இரைந்திருப்பேன். நான் இரைவது கங்கதேவன் காதில் விழுந்தால்… ”

“விளைவில் சந்தேகமில்லை. “

“அப்படி என்ன விளைவு?”

“என்னால் முடியாததை அவன் செய்திருப்பான். “

சேந்தன் சொன்ன சொற்களின் பொருளைப் பலவர்மன் பூரணமாகப் புரிந்துகொண்டான். சேந்தனிடம் ரகசியமாகச் சொன்னது தனது காதில் விழுந்துவிட்டதென்று தெரிந்தாலோ கங்கதேவன் தன்னை உடனே அந்தப் பஞ்சணையிலேயே கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பானென்று பலவர்மனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. தான் கங்கதேவனுக்கு ஏற்கெனவே இழைத்திருந்த கொடுமைக்கு அவன் ஏன் இன்னும் தன்னை உயிரோடு விட்டிருக்கிறானென்பது மட்டுந்தான் பலவர்மனுக்குப் புரியவில்லை. புரியவில்லையே தவிர அதைப் பற்றிச் சிந்திக்கும் நிலையிலும் இல்லை பலவர்மன் அந்தச் சந்தர்ப்பத்தில். அவன் மனமெல்லாம் கங்கதேவன் சேந்தனிடம் கூறிய ரகசியத்திலேயே நிலைத் திருந்ததால் அதைப்பற்றியே பேச முற்பட்ட பலவர்மன், “ஆம் கூலவாணிகரே! உமது மருந்தினால் முடியாததை அவன் கண்டிப்பாய் செய்திருப்பான்” என்று கூறினான்.

மருந்தைப் பற்றிப் பலவர்மனுக்குத் தெரிந்திருந்தது கூடக் கூலவாணிகனுக்கு வியப்பாயிருந்தது. ‘இவனுக்கு மருந்து கொடுக்க இளையபல்லவர் உத்தரவிட்ட சமயத்தில் இவன் தான் மயக்கத்திலிருந்தானே! அதைப்பற்றி இவன் எப்படி அறிந்தான்?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்ட கூலவாணிகள், “மருந்தா! என்ன மருந்து?” என்று பேச்சை மாற்ற முயன்றான்.

ஆனால் பேச்சை சிறிதும் மாற்ற இஷ்டப்படாத பலவர்மன், “ஆம், வணிகரே! நீர் கொடுக்க முயன்ற மயக்க மருந்தைப் பற்றித்தான் சொல்கிறேன்” என்றான், சொற்களை அழுத்தி உச்சரித்து உதடுகளில் புன்முறுவல் கூட்டி.

“கொடுக்க முயன்ற என்றால்?” கூலவாணிகன் சொற்கள் வியப்புடன் உதிர்ந்தன அந்தக் கேள்வியைக் கேட்டபோது.
“கொடுக்கவில்லை என்று பொருள்!” என்று பதில் சொன்னான் பலவர்மன்.

“யார் சொன்னது? என் கையால் நானே மருந்தைக் கரைத்து..” என்று கோபத்துடன் சொன்னான் சேந்தன்.

“புகட்டியதை யார் இல்லையென்கிறார்கள்?” என்று வினவினான் பலவர்மன்.

“புகட்டினால் ஒன்று நீர் மயக்கமுற்றிருக்க வேண்டும், அல்லது இறந்திருக்க வேண்டும். ஏன் இரண்டும் நடக்க வில்லை?” என்று கூலவாணிகன் வெறுப்புத் தொனித்த குரலில் கேட்டான்.

“கோபித்துக் கொள்ளாதீர்கள் கூலவாணிகரே! நான் இறக்கவும் இஷ்டப்படவில்லை. மயக்கமுறவும் இஷ்டப் படவில்லை ” என்று பலவர்மன் பதில் கூறினான் ஏளனம் கலந்த குரலில்.

“உமதிஷ்டப்படி மருந்து வேலை செய்யுமா?”

“செய்வதைத்தான் நீரே பார்த்திருக்கிறீரே?”

இதைக்கேட்ட கூலவாணிகன், “இல்லை, இல்லை! இதில் ஏதோ சூது நடந்திருக்கிறது” என்று கூவினான்.

“ஆம், ஆம். சூதுதான் நடந்திருக்கிறது” என்று பலவர்மனும் ஆமோதித்தான்.

“சூது செய்தது யார்?”

“நீர்தான். “

“நானா! என்ன சூது செய்தேன்?”

“கடல்புறாவின் அக்ரமந்திரத்திலிருந்து இளையபல்லவர் உத்தரவிட்டுச் சென்றார். நினைப்பிருக்கிறதா?” என்று பலவர்மன் குரல் பலவீனத்துடன் கேட்ட கேள்வியில் ஒரு விபரீதத் தொனியிருந்ததைக் கவனித்த கூலவாணிகன், கங்கதேவன் கயமைக்குச் சிறிதும் குறையாத அயோக்கியத் தனத்தையுடைய பலவர்மன் தனக்கு ஏதோ பெரும் குழியை வெட்ட முயல்கிறானென்பதை மட்டும் புரிந்து கொண்டதால் சிறிது நடுக்கத்துடனேயே பதில் சொன்னான், “ஆம். நினைப் பிருக்கிறது” என்று.

“அப்புறம் நீர் என்ன செய்தீர்?” அதே விபரீதத் தொனி யுடன் எழுந்தது பலவர்மன் கேள்வி.

“மருந்தைக் கலக்கினேன், கொடுத்தேன்” என்றான் பயத்துடன் கூலவாணிகன்.

“இல்லை. இல்லை. இரண்டும் செய்யவில்லை நீர்?”

“வேறென்ன செய்தேன்?”

“என் அருகில் வந்தீர். “

“ஏன் உம்மிடம் நிறைய அன்போ எனக்கு?”

“இல்லாவிட்டால் வருவீரா?”

“ஆம், ஆம். வந்தேன். அன்பு சொட்டியது. “

“உண்மை கூலவாணிகரே! அருகில் வந்தீர். அதுமட்டுமா? என் மயக்கத்தைத் தீர்க்க மருந்து கொடுத்தீர். நானும் சற்று மயக்கம் தெளிந்தேன். அப்பொழுது காஞ்சனா சற்று வெளியே சென்றிருந்த சமயம்… ”

இந்தக் கதையைக் கேட்ட கூலவாணிகனுக்கு ஏற்பட்டது மிதமிஞ்சிய பிரமிப்பா, மிதமிஞ்சிய கிலியா என்பது அவனுக்கே விளங்கவில்லை . “இத்தனையும் நடந்தது? உம்?” என்று கேட்டு வாயைப் பிளந்தான்.

“ஆம். இத்தனையும் நடந்தது. இவை மட்டுமல்ல, மேலும் நடந்ததைக் கேளும்” என்ற பலவர்மன், “காஞ்சனா இல்லாததைக் கவனித்த நீர் எனக்கு ஆசை காட்டத் துவங்கினீர். எனக்கு மயக்க மருந்து கொடுப்பதில்லை என்றும் எப்படியாவது தற்சமயம் பிழைக்க வைத்து, கடல்மோகினியை அடைந்ததும் தப்பவும் உதவுவதாகவும் வாக்கு அளித்தீர். ” என்றும் கூறினான்.

சேந்தன் பதில் சொல்லும் திறனை அறவே இழந்தான். வாயை வியப்பால் பிளந்தான். அதைக் கவனித்த பலவர்மன், சேந்தன் பதிலை எதிர்பாராமலே சொன்னான்: “நான் தப்பினால் உம்மையும் அக்ஷயமுனை அழைத்துச் செல்ல வேண்டுமென்றும் ஒரு லட்சம் பொன் கொடுத்துத் தமிழகம் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நிபந்தனைகள் கூறினீர். சுயநலத்தை முன்னிட்டு நானும் ஒப்புக்கொண்டேன்” என்று.

இதற்குமேல் பொறுக்காத கூலவாணிகன், “உம்முடன் தப்பிச் செல்லச் சதி செய்தேன்?” என்று வினவினான்.

“ஆம். “

“இதை யாராவது நம்புவார்களா?”

“இளையபல்லவர் நம்புவார். “

“எப்படி நம்புவார்?”

“இந்தக் கடலோடும் வாழ்வு உனக்கு அடியோடு பிடிக்க வில்லையென்பது அவருக்குத் தெரியும். அதுவும் போர் என்றால் நீர் பதுங்குவதையும் அவர் பார்த்திருக்கிறார். ஊர் திரும்ப நீர் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கிறீர் என்பதும் அவருக்குத் தெரியும். “

பலவர்மன் தனது மனோநிலையையும், இளையபல்லவர் தன்னைப்பற்றிச் செய்துள்ள முடிவையும் நன்றாக உணர்ந்து கொண்டு விட்டானென்பதையும் புரிந்துகொண்டான் கூலவாணிகன். தவிர, அயோக்கியனான பலவர்மன் உண்மை யைத் திரித்துக் கூறுவதில் சாமர்த்தியமுள்ளவன் என்பதையும் அவன் அறிந்திருந்ததால், என்னைப்பற்றி இளையபல்லவர் தவறாக எதையும் யார் சொன்னாலும் ஒப்புக்கொள்ள மாட்டார் என்பது உண்மை.

இருப்பினும் நான் மயக்க மருந்து கொடுத்தும் கொடுக்கவில்லை என்பதை நிரூபிக்கும் நிலையில் பலவர்மன் கண்விழித்துக் கிடக்கிறானே? ஆகவே இவன் சொல்வதை ஒருவேளை இளையபல்லவர் நம்பிவிட்டால் என்ன செய்வது?’ என்று சிந்தித்துப் பயமும் அடைந்தான் கூலவாணிகன். அத்தனை பயத்திலும் தன் மயக்க மருந்து வேலை செய்யாத காரணம் மட்டும் அவனுக்குத் தெரியாததால் அதைப்பற்றிப் பலவர்மனைக் கேட்கத் துவங்கி, “பலவர்மரே! இளையபல்லவர் மயக்க மருந்து தர என்னை ஏவியது உமக்கு எப்படித் தெரிந்தது?” என்று வினவினான்.

“எனக்கு மட்டுமென்ன, நீர் அரைகுறை வைத்தியரா யில்லாதிருந்தால் உமக்கும் தெரிந்திருக்கும்” என்று பதிலிறுத் தான் பலவர்மன்.

“நீர் சொல்லுவது புரியவில்லை. “

“நான் தலையில் அடிபட்டு மயக்கத்திலிருந்தேன் அல்லவா?”

“ஆம். “

“எப்பொழுதும் மயக்கத்திலிருந்தேனா?”

“இல்லை, சிலசமயம் நினைப்பும் வந்தது. மாறிமாறி இருந்தது. “

“நினைப்பு வந்த சமயத்தில் நீர் ஏன் பேசியிருக்கக் கூடாது…?”
“அப்படியானால் இளையபல்லவர் உத்தரவிட்டபோது!”

“நினைப்பு திரும்பியிருந்தது. “

“பின் ஏன் கண்ணைத் திறக்கவில்லை ?”

“தன்னைக் கிட்டத்தட்டக் கொன்றுவிடும் திட்டம் வகுக்கப்பட்டிருந்த சமயத்தில் எந்த முட்டாளாவது கண்ணைத் திறந்து தன் சொரூபத்தைக் காட்டுவானா? காட்டினால்…?”

“அங்கேயே”

“சமாப்தி செய்திருப்பீர்” என்று கூறிய பலவர்மன் புன்முறுவல் செய்தான்.

எவ்வளவோ பேர்களைத் தயை தாட்சண்யமின்றிச் சமாப்தி செய்திருக்கும் பலவர்மன் அதைப்பற்றிப் பேசுவதும் புன்முறுவல் செய்வதும் விந்தையாய் இல்லை கூலவாணிகனுக்கு. ஆகவே மேற்கொண்டு கேட்டான் அவன், “அப்படி யானால் இளையபல்லவர் உத்தரவை முழுதும் கேட்டுக் கொண்டிருந்தீர்?” என்று.

“ஆம்” என்று சொல்லிய பலவர்மன் புன்முறுவல் செய்தான்.

“ஆகவே..?”

“நீர் இரண்டு உதவிகள் புரிந்தீர்… ”

“இரண்டா !”
“ஆம் இரண்டு. ஒன்று காஞ்சனை அறையைவிட்டு வெளியே சென்றபின்பு மருந்தைக் கலக்கி என் வாயில் ஊற்றியது… ”

“இரண்டாவது?”

“நான் மருந்தை விழுங்குமுன்பு பாத்திரத்தை அலம்ப அறைக் கோடிக்குச் சென்றுவிட்டது. “

“அப்படியானால் நீர்… ”

“மருந்தைத் தலையணையின் அடியில் துப்பிவிட்டேன். மருந்து மிகவும் கசப்பு. குடித்திருந்தால். “

“இப்பொழுது என்னுடன் பேசமாட்டீர். அல்லது… ”

“அல்லது?”

“எப்பொழுதும் யாருடனும் பேசியிருக்கமாட்டீர். “

பலவர்மன் மீண்டும் புன்முறுவல் செய்தான். “இப்பொழுது புரிகிறதா கூலவாணிகரே? என்றும் கேட்டான்.

“என்ன புரிகிறதா?” என்றான் சேந்தன்.

“மருந்து வேலை செய்யாத காரணம்?” என்றான் பலவர்மன்.
“புரிகிறது. “

“வேறு ஒன்றும் புரிந்திருக்க வேண்டும் உமக்கு. “

“வேறென்ன?”

“இந்த நிலைமையை நான் திரித்தும் கூறமுடியும் என்பது. “

“எப்படித் திரித்துச் சொல்வீர்கள் என்பதைத்தான் கூறி விட்டீர்களே. ஆனால் நீர் சொல்வதை இளையபல்லவர் நம்புவார் என்று எதிர்பார்க்கிறீர்களா?”

“நம்பினாலும் நம்பாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் உம்மீது அவநம்பிக்கை விதையை என்னால் விதைக்க முடியும். அவநம்பிக்கை என்னும் விதையின் சக்தி அபரிமிதம். அந்த விதையைப்போல் முளைவிட்டுத் துரிதத்தில் வளரும் விதை வேறெதுவும் உலகத்தில் இல்லை. “

இதைக் கேட்டதும் சிறிது சிந்தித்த கூலவாணிகன், இளையபல்லவனின் கோபத்தைவிட அவநம்பிக்கைக்கு ஆளாவதில் பெரிதும் மனத்துயரம் எய்தினான். அதை எப்படியும் தவிர்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் முடிவாகக் கேட்டான், “இப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்கிறீர்?” என்று.

“எனக்கும் ஒரு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்” என்றான் பலவர்மன்.
“என்ன சத்தியம்?” என்று கேட்டான் சேந்தன்.

“இங்கு நம் இருவருக்கும் நடந்த சம்பாஷணையை… ” என்று இழுத்தான் பலவர்மன்.

“யாரிடமும் சொல்லவில்லை. ” சட்டென்று வந்தது சேந்தன் பதில்.

“அது மட்டும் போதாது. “

“வேறென்ன செய்யவேண்டும்?”

“இப்பொழுது கங்கதேவனுக்குச் சத்தியம் செய்து கொடுத்தீரல்லவா?”

“என்ன செய்து கொடுத்தேன்?”

பலவர்மன் புன்முறுவல் மெள்ள மெள்ள மேலும் விரிந்தது. “கூலவாணிகரே! நீர் கங்கதேவனிடம் மெள்ளத்தான் பேசினீர்; இருப்பினும் என் காதில் விழாத அளவுக்குப் பேசவில்லை. கங்கதேவன் மஞ்சளழகியை அடைவதில் நீர் அவனுக்கு உதவி புரிய ஒப்புக்கொண்டதையும் அவள் உடல் நிலை சீர்பட்டதும் இன்றிலிருந்து ஐந்தாவது நாள் துறைமுகத் தைக் காட்டும் காரணத்தில் துறைமுகத்தின் மேற்குக் கோடிக்கு அழைத்துவர ஒப்புக்கொண்டதையும் நன்றாகக் கேட்டேன். அதைப்பற்றிக் கையடித்துச் சத்தியம் செய்ததையும் பார்த்தேன். இதில் பல ஆபத்துக்கள் இருக்கின்றன உமக்கு” என்று குரலில் சற்றுப் பயங்கரத்தையும் காட்டினான் பலவர்மன்.

“பல ஆபத்துக்களா?” திகிலுடன் கேட்டான் சேந்தன்.

“ஆம். பல ஆபத்துக்கள். முதலாவது, நீர் கங்கதேவனிடம் காஞ்சனையை ஒப்படைக்க ஒப்புக்கொண்டது இளைய பல்லவருக்குத் தெரிந்தால் ஏற்படக்கூடிய ஆபத்து. இரண்டாவது காஞ்சனாதேவி மஞ்சளழகியல்லவென்றும் அவனை ஏமாற்ற நீங்கள் சொன்ன பொய் அது என்றும் கங்கதேவனுக்குத் தெரிந்தால் ஏற்படக்கூடிய ஆபத்து. “

“பிறகு?”

“எனக்கு மயக்கமுமில்லை மாயமுமில்லை என்று இளைய பல்லவனுக்குத் தெரிந்தால் ஏற்படக்கூடிய ஆபத்து?”

இதற்குப் பிறகு கூலவாணிகள் பேசவில்லை. பஞ்சணையை விட்டு எழுந்தான். சற்று அப்புறம் சென்று நின்றுகொண்டே கேட்டான்: “உம்மை நான் இப்பொழுது கொன்றுவிடுவதை யார் தடுக்க முடியும்?” என்று.

“நான் மருந்தைக் குடிக்கமாட்டேன்” என்றான் பலவர்மன்.

“கழுத்தை நெரித்தால்?” கூலவாணிகன் கேள்வி திடமாக எழுந்தது.

“நான் இறப்பதற்குக் காரணம் சொல்ல வேண்டும். “

“யாருக்கு?”
“இளையபல்லவருக்கு. “

“சொல்கிறேன். “

“முடியாது. “

“ஏன் முடியாது?”

“இதோ பாரும்” என்று பஞ்சணையின் அடியிலிருந்து ஒரு கூரிய குறுவாளை எடுத்துக் காட்டியபலவர்மன், “என் அருகே வந்தால் ஒரு விநாடியில் உம்மைக் கொன்றுவிட என்னால் முடியும். படுக்கையில் படுத்தபடியே பலபேரைக் கொன்றிருக்கிறேன்” என்று சுட்டிக் காட்டினான்.

கூலவாணிகன் முகத்தில் கிலி பெரிதும் படர்ந்தது. தன்னைச் சனியன் திடமாகப் பிடித்துக் கொண்டிருப்பதாக எண்ணினான் சேந்தன். நீண்ட நேரம் யோசித்துவிட்டுப் பஞ்சணையருகில் வந்த சேந்தன, “சரி பலவர்மரே! சொல்லும், நான் என்ன செய்ய வேண்டுமென்று. உமது கையில் நான் பலமாகச் சிக்கிக் கொண்டிருக்கிறேன்” என்றான்.

“கூலவாணிகரே, நீர் அறிவாளி” என்று சிலாகித்த பலவர்மன் தனக்கு அவன் செய்ய வேண்டிய அலுவலையும் கூறினான். கூறிவிட்டு, “உம். செய்யும் சத்தியம்” என்றான். பலவர்மன் கையிலும் அடித்து இரண்டாவது சத்தியமும் செய்தான் சேந்தன். கங்கதேவன் கோரிக்கையைவிடப் பயங்கரமாயிருந்தது பலவர்மன் கோரிக்கை. அதைக் கேட்டதாலும், செய்த இரு சத்தியங்களாலும் பிரமை பிடித்துப் பஞ்சணையில் உட்கார்ந்து கொண்டே இருந்தான் சேந்தன் நீண்ட நேரம்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch20 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch22 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here