Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch22 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch22 | Sandilyan | TamilNovel.in

156
0
Read Kadal Pura Part 3 Ch22 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch22 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch22 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 22 : புறாவும் வல்லூறும்.

Read Kadal Pura Part 3 Ch22 | Sandilyan | TamilNovel.in

இரண்டு பரம அயோக்கியர்கள் ஒருவர்மீது ஒருவர் வஞ்சம் தீர்த்துக் கொள்ளவும், முடியுமானால் ஒருவரை யொருவர் அழித்து விடவும் திட்டமிட்டுத் தன்னை நயத்தாலும் பயத்தாலும் தம் பக்கம் இழுக்க முற்பட்டு ஆளுக்கொரு சத்தியமும் செய்யச் சொன்னதாலும், அந்தச் சத்தியத்தில் ஏதாவதொன்றைச் செய்யப் புகுந்தாலும் தன் உயிர் தனது உடலில் அரை விநாடி கூடத் தங்காது என்ற நினைப்பாலும் அடியோடு பிரமை பிடித்து நீண்ட நேரம் பஞ்சணை முகப்பில் உட்கார்ந்து விட்ட கூலவாணிகன் சேந்தன், பல நாழிகைகள் கழித்து, சோகப் பெருமூச்சொன்றை விட்டு, பஞ்சணை முகப்பைவிட்டு எழுந்திருந்து பலவர்மனை நோக்கினான்.

கூலவாணிகனிடம் கையடித்துச் சத்தியம் வாங்கிக் கொண்ட சில விநாடிகளுக்கெல்லாம் ஏதும் நடக்காதது போல் பரம நிம்மதியுடன் உறங்கிக் கொண்டிருந்தான் பலவர்மன். அப்படி அவன் உறங்குவதைக் கண்டதும் அவன் நெஞ்சழுத்தத்தையும் அளவிடற்கரிய கொடிய எண்ணங்களையும் நினைத்து தனக்கு ஏற்பட்டது வியப்பா திகைப்பா என்பதை நிர்ணயிக்க முடியாதபடி எண்ணங்கள் அலைமோத நின்ற கூலவாணிகன், ‘இந்த இருவரில் அதிக அயோக்கியன் யார்?’ என்று தன்னைத்தானே பலமுறை கேட்டுக்கொண்டு விடை காணாததாலும், மேலும் அந்த அறையில் இருக்க மனம் இடங்கொடாததாலும், சற்று தூரத்தே மஞ்சத்தில் கிடந்த தனது மேல் போர்வையை எடுத்துக் கழுத்தைச் சுற்றிப் போர்த்திக் கொண்டு அடிமேலடி எடுத்துவைத்து அந்த அறையினின்றும் வெளிப்போந்தான்.

அறையைவிட்டு வெளியே வந்ததும் அறைக் கதவை ஓசைப்படாமல் சாத்திவிட்டுப் பூனைபோல் நடந்து படிகளில் இறங்கி, கீழே இருந்த கங்கதேவன் அறையிடம் வந்து சில விநாடிகள் நின்று உற்றுக் கேட்டான். அறையில் அரவம் ஏதுமில்லாததாலும் அறைக்கதவு சாத்தியிருந்ததாலும் கங்க தேவன் படுக்கச் சென்றுவிட்டானென்பதை உணர்ந்து அங்கிருந்து வாயிலுக்கு வந்து கடற்கரையை நோக்கி அதிவேகமாக நடந்தான். கங்கதேவன் விடுதியின் வாயிலில் காவலர் இருவர் இருந்தபோதிலும் அவர்கள் அவன் செல்வதைச் சிறிதும் சட்டை செய்யாமலிருந்தபடியால் கூலவாணிகன் வெகு சீக்கிரம் கடற்கரையை அடைந்து கடல் புறா நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கருகில் வந்து சேர்ந்தான். அங்கிருந்த சர்வசகஜமான நிலை குறித்து மிகவும் வியக்கவும் செய்தான் சேந்தன்.

அலைமோதும் கரை முகப்பில் இளையபல்லவனும் காஞ்சனாதேவியும் அக்கம் பக்கத்தில் உட்கார்ந்திருந்ததையும், கண்டியத்தேவனும் அமீரும் இளையபல்லவனிடம் ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததையும், நால்வரும் கைகளில் பாத்திரங்களை வைத்துக்கொண்டு உணவருந்திக் கொண் டிருந்ததையும் கண்ட கூலவாணிகன் வியப்பு மட்டுமின்றி, தன்னைவிட்டு அவர்கள் உணவருந்துவது பற்றி ஓரளவு கோபமும் அடைந்தான்.

கடல்புறாவை நோக்கிப் படகொன்று போய்க்கொண்டிருந்ததையும் கவனித்துக் கரையில் சற்று தூரத்தில் இறக்கப்பட்டிருந்த இரண்டொரு பெட்டிகளையும் கவனித்த சேந்தன், நாளை முதல் காஞ்சனாதேவியும் கங்க தேவன் மாளிகையிலேயே தங்குவதற்குத் தேவையான பொருள்கள் கடல் புறாவிலிருந்து கொண்டு வரப்படுகின்றன என்பதையும் உணர்ந்து கொண்டான். கரையிலிருக்கும் நிலைமை தெரியாமல் இளையபல்லவன் சுக வாழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்வதையும், அவற்றை நிறைவேற்று வதில் அமீரும் கண்டியத்தேவனும் ஊக்கம் காட்டிச் சிரித்துக் கொண்டு நிற்பதையும் கண்ட கூலவாணிகன், எரிச்சல் தாங்காமல் கோபம் தலைக்கேற அவர்களை அணுகினான்.

விளக்கு ஏதும் கரையில் இல்லாததாலும் தூரத்தே மணலில் நடப்பட்டிருந்த ஒரே ஒரு பந்தத்தின் வெளிச்சம் அரையும் குறையுமாகப் பின்பக்கத்தில் விழுந்திருந்ததாலும், கூலவாணிகன் வரவை முன்னரே புரிந்துகொள்ள முடியாத அந்த நால்வரும் கூலவாணிகன் அருகில் வந்ததும் அதிக ஆச்சரியத்தையே அடைந்தனர். அந்த நால்வரில் கூலவாணிகனை முதலில் கவனித்த இளையபல்லவன், “வாரும் வாரும், கூலவாணிகரே! ஏது இவ்வளவு தூரம்? அதுவும் இந்த வேளையில்?” என்று வினவியதோடு நில்லாமல், “அமீர்! கூலவாணிகருக்கும் சிறிது சிற்றுண்டி கொடு” என்று உத்தரவும் இட்டான்.

அமீர் சிற்றுண்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியை நோக்கிச் சிறிது நகர முற்பட்டதும், “வேண்டாம் நில்லுங்கள். எனக்கு எதுவும் தேவையில்லை” என்று அதிகாரமும் வெறுப்பும் கலந்த குரலில் கூறினான் சேந்தன். அதைக்கேட்ட அமீரின் பெருவிழிகள் வியப்புடன் திரும்பின கூலவாணிகன் மீது. அந்த விழிகளைச் சாதாரண காலத்தில் சந்திக்க அஞ்சும் கூலவாணிகன் அன்று மிகுந்த தைரியத்துடன் சந்தித்ததன்றி, “அமீர், உணவு எதுவும் தேவையில்லை.

சொல்வதைக் கேள்” என்று சற்று மரியாதையையும் கைவிட்டு அதட்டலாகப் பேசவும் செய்தான்.
அடுத்த விநாடி அமீரின் விழிகள் மட்டுமின்றி மூவர் விழிகளுங்கூட அவன்மீது ஆச்சரியத்துடன் பதிந்தன. கூல வாணிகனுக்குத் திடீரென ஏற்பட்ட அந்தத் துணிவுக்குக் காரணம் அந்த நால்வரில் யாருக்குமே விளங்காததால் சில விநாடிகள் யாரும் பேசவில்லை. கடைசியில் பேச முற்பட்ட இளையபல்லவன் கேட்டான் சகஜமாக, “சேந்தா! ஏன்? பசிக்கவில்லையா உனக்கு?”

குரலில் இகழ்ச்சியும் வெறுப்பும் கலந்து ஒலிக்கச் சொன்னான் கூலவாணிகன், “இல்லை, பசிக்கவில்லை” என்று.

“கங்கதேவன் மாளிகையில் உணவு பலமோ?” என்று வினவினான் இளையபல்லவன் மீண்டும் கூலவாணிகனின் வெறுப்பை உடைக்கவும் அவனை சகஜநிலைக்குக் கொண்டு வரவும்.

ஆனால் வணிகன் அப்பொழுதும் மசியவில்லை . “ஆம். நிரம்ப அதிகம்” என்றான் இகழ்ச்சி முன்னிலும் அதிகமாக.

இளையபல்லவன் விழிகள் மட்டுமின்றி, மற்றவர் கண் களும் அவனை ஆராய்ந்தன. மற்றவர்கள் சேந்தனை ஆராய்ந் தார்களே தவிர ஏதும் பேசவில்லை. இளையபல்லவனே தொடர்ந்து கேட்டான், “ஏன் சேந்தா! கங்கதேவன் விசாரணையும் உபசரிப்பும் அதிகம் போலிருக்கிறது,” என்று.

அதுவரை நின்றுகொண்டிருந்த கூலவாணிகன் யாரையும் லட்சியம் செய்யாமல் நடந்து சென்று இளையபல்லவனுக் கெதிரில் அநாயாசமாக உட்கார்ந்துகொண்டு, “மிகவும் அதிகம். மிகவும் அதிகம்” என்று கூறினான் எரிச்சலுடன்.

“அப்படியா! மிகவும் மகிழ்ச்சி” என்று கூறிய இளைய பல்லவன், கூலவாணிகன் எரிச்சலை எண்ணி எண்ணி குறுநகை கொண்டான்.

“நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயங்கள் நிரம்ப இருக்கின்றன” என்று கூறினான் கூலவாணிகன் அடுத்தபடி.

“நிரம்பவா?” இளையபல்லவன் சிறிது நகைச்சுவையைக் காட்டினான்.

“ஆம் இளையபல்லவரே! இதுவரை கங்கதேவன் உமக்கு மட்டுந்தான் நண்பனென்று நினைத்துக்கொண்டிருந்தீர். இப்பொழுது உம்மைவிட அவன் எனக்குத்தான் நண்பன்” என்ற சேந்தனும் விஷமத்தைக் காட்டினான்.

இதுவரை வாளாவிருந்த அமீரும் சம்பாஷணையில் கலந்துகொண்டு, “இனி நடக்கவிருக்கும் கடற்போர்களில் உனது நட்பைப் பெற விரும்புகிறானோ கங்கதேவன்?” என்றான் இகழ்ச்சியுடன்.

“போர்களில் பலவகை உண்டு அமீர்,” என்று கூல வாணிகனும் தன் சாமர்த்தியத்தைக் காட்டியதன்றி, அவற்றில். கடற்போர் ஒன்றுதான் உனக்குத் தெரியும்?” என்று குத்தலாகக் கூறினான்.

“வேறு போர்களில் உமக்குப் பரிச்சயம் போலிருக்கிறது?” என்று அமீர் கேட்டான் கோபத்துடன்.

“ஆம். “

“எந்தப் போரோ அது?”

“கடற்போரைவிடக் கடுமையானது. “

“பெயர் இல்லையா அதற்கு?”

“இருக்கிறது. காதல் போர். “

சேந்தன் இந்தக் கடைசிப் பகுதியை விஷமம் மிகவும் ஒலித்த குரலில் கூறினான். அதுவரை அவ்விருவர் சம்பாஷ ணையைச் சுவைத்துக் கேட்டுக்கொண்டே கையிலிருந்த தட்டின் உணவையும் நாவினால் சுவைத்துக் கொண்டிருந்த இளையபல்லவன் உண்பதைச் சட்டென்று நிறுத்தித் தட்டையும் கீழே வைத்துவிட்டுக் கூலவாணிகனை நோக்கினான்.

“காதல் போரா!” என்று கவலையுடன் வினவவும் செய்தான்.

“ஆம் இளையபல்லவரே!” என்ற வணிகனும் இளைய பல்லவனை அர்த்த புஷ்டியுடன் நோக்கினான்.

தானில்லாத சமயத்தில் கங்கதேவன் மாளிகையில் ஏதோ நடத்திருக்கிறதென்பதைப் புரிந்துகொண்டான் இளைய பல்லவன், கூலவாணிகன் பார்த்த பார்வையிலிருந்து. காஞ்சனாதேவிக்கு அது புரியாததால் அவள் மட்டும் கேட்டாள் வேடிக்கையாக, “கூலவாணிகர் காதல் போரிலும் ஈடுபடுகிறாரா?” என்று.

“இஷ்டப்பட்டு ஈடுபடவில்லை,” என்று கூறினான் கூலவாணிகன்.

“வலுவில் வருகிறதாக்கும்?” என்று கூறிய காஞ்சனாதேவி புன்முறுவல் கொண்டாள்.

“ஆம். “

“அப்படியானால் கூலவாணிகனுக்கு அதிர்ஷ்டந்தான். “

‘அதிர்ஷ்டத்தைச் சொல்லத் தரமில்லை. “

“பெண் ரொம்ப அழகோ?”

“அழகிருப்பதனால்தான் இத்தனை தொல்லையும். “

“காதலைத் தொல்லை என்று சொல்லலாமா கூல வாணிகரே!

“முழுத்தொல்லை. காதலிப்பவர்களுக்கும் தொல்லை, சுற்றிலும் இருப்பவர்களுக்கும் தொல்லை. “

“இந்தக் காதல் போரில் நீர் வெற்றியடைந்தால் மணம் கிடைக்குமே கூலவாணிகரே!”
“வெற்றியடைந்தால் சரிதான். இல்லாவிட்டால் ஓர் எழுத்து சேரும். ” “ஓர் எழுத்தா ?”

“ஆம் மணத்துக்கும் மரணத்துக்கும் ஓர் எழுத்துத்தான் வித்தியாசம். “

இப்படி குதர்க்கமாகக் கூலவாணிகன் பதில் சொல்லிக் கொண்டு வந்ததால் சற்றே சினமடைந்த காஞ்சனாதேவி, ‘அப்படி உமக்கு மரணத்தை விளைவிக்கக்கூடிய அந்த அழகி யார்? எங்கிருக்கிறாள்?” என்று வினவினாள்.

“எதிரேதான் இருக்கிறார்கள்,” என்று பணிவுடன் பதில் சொல்லிய கூலவாணிகன் தன் கையைக் காஞ்சனாதேவியை நோக்கி நீட்டியதும் அமீரும் கண்டியத்தேவனும் அவனை சுடுநோக்கு நோக்கினார்கள். கூலவாணிகன் பேச்சில் ஏதோ மர்மமிருப்பதை அறிந்து கொண்ட இளையபல்லவன் அவனை நோக்கித் திட்டமாகக் கேட்டான், “சேந்தா, மாளிகையில் என்ன நடந்தது?” என்று.

அதற்குப் பதில் சொன்ன கூலவாணிகன் குரல் அடியோடு மாறியது. மேலுக்கு அவன் வழக்கம்போல் வேடிக்கையாகப் பேசினாலும் அவன் இதயத்தில் வேதனை இருப்பதை மற்ற நால்வரும் சில விநாடிகளில் புரிந்து கொண்டார்கள். “காதல் போரின் முதல் கட்டம் நடந்தது இளையபல்லவரே” என்றான் சேந்தன்.

“விளங்கச் சொல்” என்று இளையபல்லவன் உத்தர விட்டான்.

“நீங்கள் காஞ்சனாதேவியுடன் இங்கு வந்து விட்டீர்களா?”

“ஆம். “

“நீங்கள் எதிர்பார்த்தபடி சிறிது நேரத்திற்கெல்லாம் கங்கதேவன் வந்து கதவைத் தட்டினான் காஞ்சனாதேவியைச் சந்திக்க… ”

“உன்னைச் சந்தித்தான் நமது திட்டப்படி. “

“ஆம். “

“பிறகு?”

“நீங்கள் சொல்லச் சொன்ன பொய்களை ஒன்று விடாமல் சொன்னேன். “

“நம்பினானா?”

“நான் பொய் சொல்லி நம்பாத மனிதன் இனிமேல் பிறந்தால்தானுண்டு. “

“சரி, பொய் சொன்னாய். பிறகு?”

“உங்களுக்குத் தெரியாதா இளையபல்லவரே, உலகத்தில் சத்தியமும் அசத்தியமும் அக்கம் பக்கத்தில் இருக்கிறது என்று. “

இளையபல்லவன் சற்று யோசித்துவிட்டு, “ஆம் சேந்தா! அதற்கென்ன?” என்று கேட்டான்.

சேந்தன் சொன்னான், “இளையபல்லவரே! உங்களை விட கங்கதேவன் நல்லவன்” என்று.

அமீரின் பெருவிழிகள் சேந்தனை நோக்கிப் பயங்கரமாக உருண்டன. அமீரைக் கையமர்த்திய இளையபல்லவன், “என்னைவிட நல்லவனா கங்கதேவன்?” என்று வினவினான்.

“ஆம். நீங்கள் அசத்தியம் பேசச் சொன்னீர்கள். அவன் சத்தியம் பேசச் சொன்னான். உண்மையைச் சொல்லாவிட்டால் ஊட்டியை நெரித்துக் கொன்றுவிடும் பார்வை அவனிடமிருந்தது. அப்படியும் நீங்கள் சொன்ன அசத்திய வார்த்தைகளையே சொன்னேன். ஆனால் கடைசியில் அவன் சத்தியத்தையே விரும்பினான்” என்றான் சேந்தன்.

“அப்படியா!”

“ஆம் இளையபல்லவரே! சத்தியம் செய்யும்படி வற்புறுத்திக் கையிலடிக்கவும் சொன்னான். “

“அப்படியே சத்தியம் செய்தீரா?”

“செய்தேன். “

“என்ன சத்தியம் செய்தீர்?”

“இன்றிலிருந்து ஐந்தாவது நாள் மஞ்சளழகியென்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் காஞ்சனாதேவியைத் துறைமுகத்தின் மேற்கோடிக்கு யாருமில்லாத இடத்துக்கு அழைத்து வருவதாக… ” இந்த வாசகத்தை அவன் முடிக்க வில்லை. அதுவரை பொறுமையாயிருந்த அமீர் அவனை அப்படியே தூக்கி நிறுத்தினான். காஞ்சனாதேவியும் உணவுத் தட்டைக் கீழே எறிந்து கனல் கக்கும் கண்களுடன் எழுந் திருந்து, “கூலவாணிகரே! என்ன துணிச்சல் உமக்கு இதைக் கூற?” என்று சத்தமும் போட்டாள்.

இளையபல்லவன் மட்டும் உணர்ச்சிகளைக் கைவிட வில்லை. அமீரை நோக்கி, “விடு சேந்தனை அமீர்!” என்று கூறிவிட்டு விடுதலையடைந்த கூலவாணிகனை நோக்கிக் கேட்டான், “பிறகு என்ன நடந்தது?” என்று.

“இதைச் செய்தால் நிரம்பப் பணமும் நகைகளும் தருவதாகச் சொல்லிவிட்டு கங்கதேவன் போய்விட்டான். அடுத்தவன் விழித்தான். என்னை அழைத்தான்” என்றான் கூலவாணிகன்.

“யாரது?”

“பலவர்மன். “

“பலவர்மனா?” இளையபல்லவன் குரலில் ஆச்சரியம் மிதமிஞ்சி ஒலித்தது.

“ஆம் இளையபல்லவரே. நாங்களிருவர் பேசுவதையும் அவன் கேட்டுக்கொண்டே படுத்திருந்தான். அவன் மயக்க மெல்லாம் வெறும் பாசாங்கு” என்று கூறி அவன் தன்னை ஏமாற்றிய முறைகளையும் கூலவாணிகன் விவரித்தான்.

மற்ற நால்வரும் அந்த விவரங்களை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள். முடிவில் கூலவாணிகன் சொன்னான், “பலவர்மனும் சத்தியம் செய்யச் சொன்னான்” என்று.

“என்ன சத்தியம்?” இளையபல்லவன் குரல் கடுமையுடன் ஒலித்தது.

“இன்னும் இரண்டொரு நாட்களுக்குள் கங்கதேவன் உணவில் விஷத்தைக் கலக்கும்படி கேட்டான் பலவர்மன்” என்றான் கூலவாணிகன் சாதாரணமாக.

இளையபல்லவன் குரல் கடுமையாகியது. அத்தகைய கடும் விஷம் இருக்கிறதா உன்னிடம்!” என்று வினவினான் அவன்.

“இருக்கிறது. “

“நீ என்ன கொலையாளியா, வைத்தியனா?”

“சில சந்தர்ப்பங்களில் இரண்டு தொழிலுக்கும் அதிக வித்தியாசம் இருப்பதில்லை. இருப்பினும் எனக்கு விஷம் தேவையில்லை. பலவர்மனே கொடுப்பதாகச் சொல்லி யிருக்கிறான். “

இதைக்கேட்ட இளையபல்லவன்கூட அசந்து விட்டான். சிறிது நேரத்திற்குப் பின்பு கேட்டான்: “இதற்கும் சத்தியம் செய்தீரா?”

“ஆம்” என்றான் கூலவாணிகன்.

“இரண்டு சத்தியங்களில் எதை நிறைவேற்றப் போகிறீர்?”

“இரண்டையும் நிறைவேற்ற அவசியமில்லை. “

“ஏன்?”

“இரண்டு சத்தியங்களும் ஒன்றையொன்று முறித்து விட்டன. ஒரு சத்தியத்தால் கங்கதேவன் வாழ்வின் வளத்தைக் கோரினான். இன்னொரு சத்தியத்தால் அதை அழிக்கக் கோரினான் பலவர்மன். இனி எனக்குப் பொறுப்பில்லை” என்று ஆசுவாசப் பெருமூச்சு விட்டான் கூலவாணிகன்.

நீண்ட நேரம் அந்த ஐவரில் யாரும் பேசவில்லை. கரையில் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக ஆபத்து சூழ்வதைப் புரிந்து கொண்டதால் அவர்கள் அனைவர் முகத்திலும் கவலை சூழ்ந்து நின்றது. இளையபல்லவன் தீவிர யோசனையில் ஆழ்ந்தான். இருப்பிடத்தைவிட்டு எழுந்தான். அலையோரத்தில் இருமுறை அப்படியும் இப்படியும் நடந்தான். பிறகு ஏதோ முடிவுக்கு வந்து காஞ்சனாதேவிக்கு அருகில் வந்து நின்று, “காஞ்சனா! புறப்படு” என்றான்.

“எதற்கு?” என்று வினவினாள் காஞ்சனாதேவி.

இளையபல்லவன் பதில் சொன்னான். அந்தப் பதில் அமீரையும் கண்டியத்தேவனையும் திகைக்க வைத்தது. சேந்தன் தன் காதுகளை நம்பாமல் வாயைப் பிளந்தான். காஞ்சனாதேவியின் முகம் அச்சத்தால் வியர்த்தது. “இது முறையல்ல” என்று கூவினாள்.

இளையபல்லவன் பதில் சொல்லவில்லை வெளிப்படை யாக. கடல்புறாவை நோக்கினான். கங்கதேவன் மரக்கலங் களையும் நோக்கினான். “வல்லூறை நோக்கிப் புறா பறக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை” என்றான் முடிவாக.

அந்த முடிவு மேலும் மேலும் மற்றவர்களைத் திகைக்க வைத்தது. அடுத்த விநாடி காஞ்சனாதேவி அங்கு நிற்க வில்லை. வெகுவேகமாக ஓடினாள் கடற்கோரைகளை நோக்கி. “பிடி அவளை” என்ற இளையபல்லவன் குரல் மிக உக்கிரமாக ஒலித்தது.

Previous articleRead Kadal Pura Part 3 Ch21 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch23 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here