Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch23 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch23 | Sandilyan | TamilNovel.in

131
0
Read Kadal Pura Part 3 Ch23 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch23 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch23 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 23 : காலைப் பிடிக்கும் சமயம்.

Read Kadal Pura Part 3 Ch23 | Sandilyan | TamilNovel.in

காஞ்சனாதேவியைப் பற்றி கங்கதேவனும், கங்க தேவனைப் பற்றிப் பலவர்மனும் தீட்டியிருந்த திட்டங்களைச் சேந்தான் விவரிக்கக் கேட்டதும் தீவிர சிந்தனையிலிறங்கிய இளையபல்லவனை நோக்கி நின்ற மற்ற நால்வரும் அவன் காஞ்சனாதேவியைப் புறப்படச் சொன்னதற்கான காரணத்தை உணர்ந்ததும் பெரிதும் திகைத்தே போனார்களென்றால் அதைப்பற்றி வியப்படைய நியாயம் ஏதுமே யில்லை. இது முறை அல்ல” என்று காஞ்சனாதேவி ஆத்திரப் பட்டுக் கூவியது மிகவும் சரியே என்பதை மற்ற மூவர் முகங்களும் தெள்ளென எடுத்து விளக்கவே செய்தன.

இளையபல்லவன் அத்தகைய மதிகேடான முறைகேடான முடிவைச் சொல்லுவான் என்று அவர்கள் எதிர்பார்க்காததால் அவர்கள் முகத்தில் சினத்தின் சாயையும் தெளிவாகத் தெரிந்தது. காஞ்சனாதேவி எங்கே புறப்படவேண்டும் என்று கேட்டதும், “கங்கதேவனிடம்” என்ற இளையபல்லவன் பதில் புண்ணில் இடப்பட்ட கோலென அந்த நால்வர் மனத்தையும் புண்ணாக்கவே செய்தது. இளையபல்லவன் உண்மையாகத் தான் காமுகனான கங்கதேவனிடம் இரவு ஏறிய அந்தத் தருணத்தில் காஞ்சனாதேவியை அழைத்துச்செல்ல தீர்மானித் திருக்கிறானா என்று அவர்கள் சற்றுச் சந்தேகித்த சமயத்தில் தான் இளையபல்லவன் கடல் புறாவையும் பார்த்து, கங்கதேவன் போர்க்கலங்களையும் பார்த்து, “புறா வல்லூறை நோக்கிப் பறக்கவேண்டியது அவசியம்தான்” என்று கூறினான். எண்ணெய் விட்ட தீயெனக் காஞ்சனாவின் இதயம் எரிந்தது.

அதன் விளைவாகவே அவள் கடற்கோரைகளை நோக்கி ஓடினாள். “பிடி அவளை” என்று இளையபல்லவன் கூறியும் மற்றவர்கள் கேட்காதிருக்கவே இளையபல்லவனே எழுந் திருந்து ஓடி அவளைப் பிடித்திழுத்துக் கொண்டு வந்து பழைய இடத்தில் தள்ளினான்.

அந்த முரட்டுச் செயலால் மற்ற மூவரும் பிரமை பிடித்து நின்றார்கள். அமீரின் கோபம் தலைக்கு ஏறிக் கொண் டிருந்ததை அவன் திணறியதிலிருந்தும் பெருமூச்சு விட்டதி லிருந்தும் கடைக்கண்ணால் கவனித்த இளையபல்லவன் அதைப் பற்றிச் சிறிதும் லட்சியம் செய்யாமலே உக்கிரத்துடன் கூறினான், “இங்கு நான் தலைவன். என் உத்தரவை மீறுபவர் களைத் தூக்கிலிடவும் எனக்கு அதிகாரம் உண்டு” என்று.

இளையபல்லவன் பிடித்திழுத்து வந்து தள்ளிய வேகத்தில் மணலில் புரண்டதால் சற்றே விலகியும், கடலோரத்து ஈர மணல் ஒட்டியும் கிடந்த ஆடையுடன் சமாளித்து இடக் கையை மணலில் ஊன்றி, சாய்ந்து உட்கார்ந்து கொண்ட காஞ்சனாதேவி தன் அஞ்சன விழிகளில் தீப்பறக்க இளைய பல்லவனை நோக்கினாள். “காக்கத்தான் தலைவன் வேண்டும். அழித்துக் கொள்ள அவரவர்களுக்கே வழி தெரியும்” என்றாள் சீற்றம் பரிபூரணமாகக் குரலில் தொனிக்க.

இளையபல்லவன் கண்கள் கடுமையுடன் அவளையும் நோக்கி அவளுக்குப் பின்னால் காவலர் போல் நின்ற கண்டியத்தேவன், அமீர், சேந்தன் ஆகிய மூவரையும் அளவெடுத்தன. கடைசியில் காஞ்சனாதேவியின்மீது நிலைத்த கண்களில் கருணையில்லையே தவிர, கடுமை பூர்த்தியாக இருந்தது. அவன் வாயிலிருந்து உதிர்ந்த சொற்களும் கடுமை யாகவே இருந்தன. “காஞ்சனா! உன்னை அழித்துக் கொள்ளத் தான் நீ கடற்கோரைகளை நோக்கி ஓடினாய். அவை கால்களில் சிக்கி இருந்தால் என்ன ஆகி இருக்கும்!” என்றான் இளையபல்லவன்.

“கால்களில் சிக்கியிருக்கும்” என்றாள் காஞ்சனாதேவியும் அலட்சியத்துடனும் கோபத்துடனும்.

“அது மட்டுமல்ல, கடற்கோரைகள் நிலத்தில் விளையும் நாட்டுக் கோரைகள் போலல்ல. கடல் மீன்களைப் போல் சதா உயிருடன் துடிப்பவை. அவற்றில் பல மாமிசப் பட்சிணிகள், மீனோ எதுவோ அகப்பட்டாலும் அப்படியே வளைந்து அவற்றை இறுக்கிக் கொன்று உறிஞ்சிவிடக் கூடியவை. இப்படிப் பல கடல் தாவரங்கள் உண்டு. அவற்றில் இத்தகைய கோரைகளும் ஒரு வகை. அதனால்தான் அவற்றிலிருந்து சிறிது தள்ளிக் கடல் புறாவை நிறுத்தச் சொன்னேன், மாலுமிகள் நீரில் இறங்கும்போது கோரைகள் வசம் சிக்கா திருக்க. அந்தக் கோரைகளை நோக்கி நீ ஓடுகிறாய்! அறிவு இருக்கிறதா உனக்கு?” என்று இளையபல்லவன் மிகுந்த சீற்றத்துடன் பேசினான்.

“கங்கதேவனிடம் என்னை அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ள உங்கள் அறிவைவிட என் அறிவு குறைந்ததல்ல. ” காஞ்சனாதேவியின் குரலில் மிகுந்த வெறுப்பு ஒலித்தது.

இளையபல்லவன் அதற்குப் பதில் சொல்லாமலே வேறு விதத்தில் கேள்வி கேட்டான், “கோரையில் சிக்கியிருந்தால் உன் கதி?” என்று.
“உயிர் போயிருக்கும்” என்றாள் காஞ்சனாதேவி.

“தெரிந்துமா அந்த முயற்சியில் இறங்கினாய்!”

“ஆம். “

“உயிரை அத்தனை அற்பமாக மதிக்கிறாயா?”

“சில சமயங்களில் உயிரை வைத்திருப்பதைவிட உயிரைத் துறப்பது சிறந்தது. “

“உயிரை விட முடிவு செய்ய நீ யார்?”

“என் உயிரை என்ன செய்வது என்பதைக்கூடத் தீர்மானிக்க எனக்கு உரிமையில்லையா?”

“இல்லை. “

“வேறு யாருக்கு அந்த உரிமை?”

“சாதாரண சமயங்களில் கடவுளுக்கு. இந்தச் சமயத்தில் எனக்கு. ” இதை நிறுத்தியும் திடமாகவும் சொன்ன இளைய பல்லவனை மற்றவர்கள் வியப்புடன் பார்த்தார்கள். இளையபல்லவன் மற்றவர்களைச் சில விநாடிகள் வெறித்துப் பார்த்துக்கொண்டே நின்றான். பிறகு முடிவு திட்டமாகத் தொனித்த உறுதியான குரலில் பேசத் தொடங்கினான், “கடாரத்தின் இளவரசியே! கேள், நான் சொன்னதைக் கேட்டதும் உணர்ச்சியின் மிகுதியால் உயிரை மாய்த்துக் கொள்ளக் கடற்கோரைகளை நோக்கி ஓடினாய்.

அப்படி உயிரை மாய்த்துக்கொள்ள நாகரீக நாடுகளின் சட்ட திட்டங்கள் இடங்கொடுக்கவில்லை. தற்கொலை சட்ட விரோதமாக ராஜ்யங்களாலும், பெரும் பாவமாகச் சாத்திரங் களாலும் கருதப்படுகிறது. அதற்குக் காரணம் உயிரை அழிக்க மனிதனுக்குள்ள சக்தி உயிரை மீட்க அவனுக்கில்லாமைதான். அத்தகைய உயிரைப் போக்கும் சக்தியும் உரிமையும் அதைக் கொடுக்கும் ஆண்டவனுக்குத்தான் உண்டு-” என்று மேலே ஏதோ பேசப்போன இளையபல்லவனை இடைமறித்த காஞ்சனாதேவி, “ஆண்டவனுக்கு அடுத்தபடி அந்த உரிமை உங்களுக்குத்தான் உண்டு போல் இருக்கிறது?” என்று சீறினாள்.

இளையபல்லவன் ஈட்டி விழிகள் காஞ்சனாதேவியின் காந்த விழிகளைச் சலனமின்றிச் சந்தித்தன. பதிலும் சலன மின்றியும் திடமாகவும் வந்தது. “ஆம்! இந்தப் பணி சம்பந்தப் பட்டவரையில், இந்த மரக்கலங்களுக்கு நான் தலைவனா யிருக்கும் வரையில், என் கீழ் அலுவல் புரிபவர்கள், என் பாதுகாப்பில் இருப்பவர்கள், இவர்களில் யார் உயிரைப் பலி கொடுக்கலாம், யார் உயிரைப் பலி கொடுக்கக் கூடாது என்பதை நிர்ணயிக்கும் உரிமை கடல்புறாவின் தலைவனான எனக்குத்தான் உண்டு.

தலைமைப் பதவி அந்த உரிமையை எனக்களிக்கிறது” என்ற இளையபல்லவன் காஞ்சனாதேவி ஒருக்களித்த இடத்திற்குப் பின்னால் மிகுந்த கலக்கத்துடன் நின்ற மற்ற மூவரையும் நோக்கி, “நான் உங்கள் தலைவனா யிருக்கிற வரையில் எந்த விஷயத்தில் தலையிடவும் உங்களுக்கு உரிமையில்லை. முடியுமானால் ஓர் உயிரைக் கூடத் தியாகம் செய்யும் நிலையில் நான் இல்லை. கடல் புறாவிலுள்ள மாலுமிகள் மொத்தம் இருநூறு பேர்தான் நம்மவர். பிடிபட்டுள்ள இரு மரக்கலங்கள், அதோ நின்றிருக்கும் கங்கதேவன் மரக்கலங்கள் நான்கு, இவற்றை நடத்தும் மாலுமிகள் அனைவரும் கலிங்கத்தவர். அந்த மாலுமிகளின் தொகைகளைக் கூட்டினால் மொத்தம் ஆயிரத்தைந்நூறு பேர்களுக்குக் குறைவில்லை.

இந்த நிலையில் நம்மவர்களில் ஒருவர் உயிரைத் தியாகம் செய்தாலும், ஒருவர் மரணத்தால் நமது பலவீனம் வெளியானாலும் அனைவரையும் அழித்துவிட கங்கதேவனுக்கு அரை விநாடிகூட ஆகாது. தவிர இங்கிருந்த தமிழ் சமூகம் என்ன ஆயிற்று என்பதும் தெரியவில்லை . அதோ தூரத்தே தெரியும் நூறு வீடுகளிலிருந்த தமிழர் எங்கே? அனைவரும் கொல்லப்பட்டார்களா? எஞ்சியவர்கள் உண்டா ? இந்த விவரமும் நமக்குத் தெரியாது. தற்சமயம் நாமறிந்தது கங்கதேவன் பலம் நம் பலத்தைவிட ஆறு மடங்கிற்கு மேல் அதிகம் என்பதொன்றுதான்” என்ற இளையபல்லவன் ஆகாயத்தை நோக்கினான்.

இந்த விவரங்களை எதற்காக எடுத்துரைக்கிறான் இளையபல்லவன் என்பதைத் திட்டமாகத் தெரிந்துகொள்ள முடியாததால் பேசாமலே நின்றார்கள் மற்றவர்கள். இளைய பல்லவனே அந்தக் காரணத்தை விவரித்தான். “ஆகவே, குறைந்த தொகையுள்ள நாம் ஒவ்வொருவரும் நமது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முயலவேண்டும். எதிரியை ஆராயும் பொறுப்பை எனக்கு விட்டுவிடுங்கள். சொல்கிறபடி மட்டும் செய்யுங்கள்” என்றான்.

அதுவரை வாளாவிருந்த காஞ்சனாதேவி, “நீங்கள் சொல்வது எதுவாயிருந்தாலும் செய்யத்தான் வேண்டுமா?” என்று கேட்டாள் வெறுப்பும் கோபமும் கலந்த குரலில்.

“ஆம். “
“எதுவாயிருந்தாலுமா?”

“ஆம். “

“என் கண்ணியத்துக்கு… கௌரவத்துக்கு… ” விக்கினாள் காஞ்சனாதேவி.

“அதைக் காப்பது என் கடமையென்று உனக்குத் தெரியும். என் உத்தரவு, போக்கு, உனக்கு விபரீதமாகத் தோன்றலாம். விபரீதத்தைச் சரியாக்கும் முறை எனக்குத் தெரியும்” என்ற இளையபல்லவன் மேலும் சொன்னான்: “காஞ்சனா! தமிழகத்தில் பிறந்தவனுக்குப் பெண்கள் கற்பைவிடச் சிறந்தது எதுவுமில்லை. அதைக் காப்பதில் தமிழனுக்குள்ள சிரத்தை உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது. கற்புக்கரசி ஒருத்தியின் சிலம்பினால் ஒரு மாநகரம் அழிந்ததைத் தமிழர்கள் கண்டித்துக் கூறவில்லை, பாராட்டினார்கள். அந்த மரபில் தோன்றிய நான் காரணமின்றி உன்னை கங்கதேவனிடம் அழைத்துச் செல்லவில்லை. தவிர காஞ்சனாதேவி… ” இந்த இடத்தில் சற்றுப் பேச்சை நிறுத்திய இளையபல்லவனை நோக்கிய காஞ்சனாதேவி, “தவிர?” என்று வினவினாள்.

“பெண்கள் கற்பு அவர்கள் கையில்தானிருக்கிறது. அதைக் காப்பதும் அழிப்பதும் அவர்களைப் பொறுத்தது” என்றான்.

மேற்கொண்டு காஞ்சனாதேலி எதுவும் பேசவில்லை. இளையபல்லவனே சொன்னான்: “காஞ்சனாதேவி, சிலரை வாளால் வெல்லலாம், சிலரை வஞ்சகத்தால் வெல்லலாம். கங்கதேவனை இரண்டினாலும் வென்றால்தான் முடியும். அதற்கு வழி வகுப்பதை எனக்கு விட்டுவிடு” என்று. அத்துடன் மெள்ளக் கையைப் பிடித்து அவளை எழுப்பவும் செய்தான். அவள் எழுந்திருந்ததும் கண்டியத்தேவனையும் அமீரையும் நோக்கி, “தேவரே! அமீர்! காஞ்சனாதேவி இன்று முதல் கங்கதேவனிடம் நட்புரிமை பாராட்டுவது போல் நடிப்பாள்.

இன்று இவர்களை அறிமுகப்படுத்துகிறேன். இன்று காவலுக்கு நானிருக்கிறேன். நாளை முதல் அமீர் காஞ்சனாதேவியை விட்டு அகல வேண்டாம். அவசியமானால் கங்கதேவனைக் கொன்றும் விடலாம்” என்ற இளையபல்லவன் தேவரை மட்டும் குறிப்பாக நோக்கி, “தேவரே! நாம் கைப்பற்றியிருக்கும் இரண்டு மரக்கலங்களையும் நான்கு நாட்களுக்குள் எத்தனை பழுது பார்க்க முடியுமோ அத்தனை பழுது பார்த்து விடுங்கள். இன்றிலிருந்து ஐந்தாம் நாள் அந்த மரக்கலங்கள் கடலோடும். அதற்குண்டான ஏற்பாடுகளை நாளை தொடங்குகிறேன்” என்றான். பிறகு சேந்தனை நோக்கிச் சொன்னான், “சேந்தா! நீ கோழை என்பதை கங்கதேவன் அறிவான்” என்று.

“நானா!” சேந்தன் குரல் கோபத்துடன் ஒலித்தது.

“ஆம். சேந்தா! அதனால் தவறில்லை. கோழையா யிருப்பதிலும் அனுகூலமிருக்கிறது. கங்கதேவன் நீ கோழை யென்று நம்புவதால் உன்மீது அதிகமாகக் கண் வைக்க மாட்டான். ஆகவே நாளை நீ அங்கே செல்,” என்று தூர இருந்த விடுதிகளின் கூட்டத்தைக் காட்டினான் இளையபல்லவன்.

“தமிழர் விடுதிகளுக்கா!”

“ஆம். “
“அங்கு யாரிருக்கிறார்கள்? எத்தனை பேர்? எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்? எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள்? அறிந்து வா. “

“கங்கதேவனின் மாலுமிகள் தடுத்தால்?”

“தடுக்காதபடி செய்துகொள். “

“எப்படி முடியும் அது?”

“நாளைக் காலையில் கங்கதேவனைச் சந்தித்து அவனிடம் செய்த சத்தியத்தைக் கண்டிப்பாக நிறைவேற்றுவதாக உறுதி கூறு. “

“காஞ்சனாதேவியை ஐந்தாவது நாள்….” மென்று விழுங்கினான் சேந்தன்.

“மேற்குக் கோடிக்கு அழைத்து வருவதாகச் சொல்லி விடு. அதைக் காரணம் காட்டி அவன் பொக்கிஷத்தையும் பார்வை இடு. நாளை முதல் அவனுடன் உலாவு. அவன் மாலுமிகள் நீ கங்கதேவன் கையாளென்று நம்பட்டும்,” என்றான் இளைய பல்லவன்.

“நமது மாலுமிகள் என்னைக் சேவலமாக நினைத்தால்?”

“மிக மிக நல்லது. “

“இளையபல்லவரே!” என்று ஏதோ சொல்ல முற்பட்ட சேந்தனை நோக்கி, “என்ன சேந்தா!” என்று வினவினான் கடல் புறாவின் தலைவன்.

“பலவர்மனுக்கு நான் செய்த சத்தியம்?”

“அதையும் நிறைவேற்று. “

இந்தப் பதிலைக் கேட்ட சேந்தன் வாயைப் பிளந்தான். “என்ன சொல்கிறீர்கள் இளையபல்லவரே?” என்று கூவினான்.

“விஷத்தை வாங்கிக் கொள்” என்றான் இளையபல்லவன்.

“வாங்கிக் கொண்டு?”

“என்னிடம் கொடுத்துவிடு. “

“அடுத்த நாள் கங்கதேவன் சாகாவிட்டால்?”

“பலவர்மன் உன்னை ஏதும் செய்யாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்ற இளையபல்லவன், “வா, காஞ்சனா!” என்று கூறி அவளைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு கங்கதேவன் மாளிகையை நோக்கி நடந்தான்.

காஞ்சனாதேவி பதிலேதும் சொல்லாமல் அவன் பக்கலில் நடந்தாள். அவள் மனம் வருத்தத்தில் தோய்ந்திருந்தது. அவன் ஒவ்வொருவருக்கும் இட்ட உத்தரவைக் கேட்டதும் ஏதோ பெரும் திட்டத்தை இளையபல்லவன் வகுத்திருக்கிறானென்பதையும் அதில் தாங்கள் வெறும் சதுரங்கக் காய்கள் என்பதையும் புரிந்துகொண்டாள் அவள். அவன் சொன்னதைத் தவறாகப் புரிந்துகொண்டு கோரைகளை நோக்கி ஓடிய தன் அவசரத்தைப் பெரிதும் நொந்து கொண்ட கடாரத்துக் கட்டழகி அவனைச் சற்று நெருங்கியே நடந்தாள்.

அலையோரத்திலிருந்து சிறிது தூரம் வந்து விட்டதால் அந்த இருவரையும் வானத்தின் மெல்லிய இயற்கையொலி தவிர மற்றபடி இருளே சூழ்ந்து நின்றது. இரவு ஏறியதால் அலைகளின் ஓசை பெரிதாக எழுந்து யார் எது பேசினாலும் கேட்க முடியாதபடி அடித்துக் கொண்டிருந்தது. கரையோரத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த சோலை களிலிருந்து மலர்களின் நறுமணம் எழுந்து எங்கும் பரவி நின்றது. அந்த மணத்தை சுவாசித்தாள் காஞ்சனாதேவி. “என்ன மணம்!” என்றும் முணுமுணுத்தாள்.

அந்தக் கட்டழகியின் பக்கத்தே நடந்த இளைய பல்லவனுக்கு அத்தனை கடலலைகளின் இரைச்சலிலும் அவள் முணுமுணுத்த சொற்கள் காதில் விழவே, “ஆம் காஞ்சனா! அந்த மணம் தரும் சோலைகள் உலகப் பிரசித்தம். இந்த மாநக்காவரத்தைச் சுற்றிக் கடற்கரையோரமாக இந்தப் புஷ்பச் சோலைகள் இருக்கின்றன. அப்படி இவை தீவின் ஓரமாகச் சூழ்ந்து நிற்பதால் இராஜேந்திர சோழதேவர், இந்தத் தீவைக் கடல்மோகினி என்றும் இந்தச் சோலைகளைப் புஷ்ப ஒட்டியாணமென்றும் அழைத்தார். இந்தப் புஷ்ப ஒட்டியாணம் மிக அடர்த்தியானது. சிலருக்கு நல்லது. சிலருக்குக் கெடுதல்,” என்றான்.

“யாருக்கு நல்லது, யாருக்குக் கெடுதல்?” காஞ்சனாதேவி கேட்டாள் இன்பமான குரலில்.
இளையபல்லவன் இன்பப் புன்முறுவல் பூத்தான். தான் சொன்னதைத் தவறாகப் புரிந்துகொண்டு, சற்று முன்பு தன்னைத் தூக்கியெறிந்து கடற்கோரைகளை நோக்கி ஓடிய காஞ்சனாதேவி எத்தனை சீக்கிரத்தில் இன்ப கீதத்தை உதிர்க் கிறாள் என்று எண்ணிய படைத்தலைவன் ‘பெண்களுக்கு க்ஷணச் சித்தம் க்ஷணப் பித்தம்,’ என்று தன்னுள் சொல்லிக் கொண்டான்.

கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொல்லாததைக் கண்ட காஞ்சனாதேவி அவன் கையைப் பற்றிச் சிறிது அழுத்தி, “இந்தப் புஷ்ப ஒட்டியாணம்… ” என்றாள்.

“ஆம். “

“யாருக்கு நல்லது என்று கேட்டேனே?”

“கேட்டாய். “

“நீங்கள் பதில் சொல்லவில்லையே?”

“சொல்கிறேன். “

“சொல்லுங்களேன். ” காஞ்சனாதேவியின் கை அவன் கரத்தில் சுழன்றது.

“கள்வருக்கும் நல்லது; காதலருக்கும் நல்லது. “

“ஏன்?”

“இருவரும் மறைந்துறையப் பார்க்கிறார்கள். “

இதைக்கேட்ட காஞ்சனாதேவி மெல்ல நகைத்து அவன் கையிலிருந்து தன் கையை விடுவித்துக்கொண்டு சற்று தூரத்தே தெரிந்த புஷ்பக் காட்டை நோக்கி ஓடினாள். அந்த இரண்டாம் ஓட்டத்திலும் அவளைத் தொடர்ந்தான் இளைய பல்லவன். இம்முறை முதல் முறையைவிட அதிக வேகமாக ஓடி அவளைப் பிடித்தான். அவள் அவன் கையில் அகப்படாமல் கீழே விழுந்தாள் மணலில். அவன் அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். காஞ்சனாதேவியின் கண்கள் அவனை அன்பு வழிய நோக்கின.

அந்தப் பார்வையின் பொருளைப் புரிந்துகொண்ட இளையபல்லவன் அந்தக் கண்களைப் பார்க்க மறுத்தான். அவள் கமலப்பாதங்களை நோக்கினான். கடற்கோரையை நோக்கி ஓடிய சமயத்தில் அலைகள் வீசி அவள் ஆடையின் கால் புறங்களை நனைத்திருந்தது. தன் இரு கைகளாலும் அந்த ஆடையின் முனையைப் பிழிந்தான் அவன்.

தலை அவள் முன்னே கவிழ்ந்து கிடந்தது. தன் காலடியில் அந்த மகாவீரன் தலை வணங்கிக் கிடப்பதைக் கண்ட காஞ்சனாதேவி இருப்பிடத்தையும் சூழ்ந்துள்ள ஆபத்தையும் அறவே மறந்து சொன்னாள், “என், காலைத் தொடுகிறீர்களே!” என்று.

இளையபல்லவன் பதிலும் மெல்ல வந்தது “பிடிக்கிறேன் என்று சொல்,” என்றான்.

“பெண் காலைப் புருஷன் பிடிக்கலாமா?” என்று அவள் மெல்லக் கேட்டாள்.

“எதற்கும் ஒரு சமயம் உண்டு,” என்றான் இளைய பல்லவன்.

“காலைப் பிடிக்கும் சமயமா இது?”

“ஆம் காஞ்சனா!”

அந்தச் சமயத்தில் அவன் உணர்ச்சி வசத்தில் ஏதோ பேசியதாகப் பட்டது அவளுக்கு. ஆனால் மறுநாள் பேராபத்துதான் எழுந்தது அவர்கள் சம்பந்தத்தில். அதற்கு இளையபல்லவனே அடிகோலினான். அதுமட்டுமல்ல, அடுத்த இரண்டு நாட்கள் அவன் நடந்துகொண்ட முறைகள் பெரும் விபரீதமாயிருந்தன.

அடுத்த மூன்றே நாட்கள்! கடல் புறாவில் சம்பந்தப்பட்ட அனைவருமே கங்கதேவன் கைகளில் சிக்கிவிட்டார்கள். காலைப் பிடித்த சமயத்தில் சொன்ன வார்த்தைதான் அது. ஆனால் அது அனைவர் மென்னியையும் பிடிக்கும் மந்திர மாயிற்று.

Previous articleRead Kadal Pura Part 3 Ch22 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch24 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here