Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch24 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch24 | Sandilyan | TamilNovel.in

138
0
Read Kadal Pura Part 3 Ch24 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch24 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch24 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 24 : உன் தந்தை சிறையில்.

Read Kadal Pura Part 3 Ch24 | Sandilyan | TamilNovel.in

காரிருள் சூழ்ந்திருந்ததால் எங்கும் கருமை கடுமை யாகத் தட்டிக் கிடந்த சமயத்தில், அடுத்திருந்த புஷ்ப ஒட்டியாணத்திலிருந்த மலர்கள் நறுமணத்தை எழுப்பி மதியை மயக்கிய சந்தர்ப்பத்தில், காஞ்சனாதேவியின் கமலப் பாதங்களைக் கையால் வருடிய வண்ணம், “நாளை நம் கதி எப்படி இருக்குமோ?” என்று கருணாகர பல்லவன் சொன்னபோது காரிகைகளைக் கைக்குள் போட்டுக் கொள்ளக் காதலர்கள் பேசும் அர்த்தமற்ற உணர்ச்சிப் பேச்சு அது என்றே எண்ணினாள் கடாரத்தின் இளவரசி.

கங்கதேவனிடம் தன்னை ஒப்படைக்கப் போவதாகக் கருணாகர பல்லவன் சற்று முன்பாக அறிவித்ததையும், பிறகு தன்னை இழுத்து வந்து இன்பமாக ஏதேதோ பேச முற்பட்டதையும் எண்ணிப் பார்த்த காஞ்சனாதேவி, கடல்மோகினியை அணுகியதிலிருந்தே கருணாகரபல்லவன் திடமாக இல்லையென்றும் தன் போக்கையும் திட்டங்களையும் அடிக்கடி மாற்றிக் கொள்கிறா னென்றும் தீர்மானித்துக் கொண்டதாலும், அத்தகைய சமயத்தில் அவனுக்குத் தன்னாலான சகல உதவிகளையும் செய்வது அத்தியாவசியமாகையால் கூடியவரையில் அவன் செல்லும் வழியிலேயே தானும் செல்ல உறுதி கொண்டாள்.

இத்தகைய உறுதிக்கு வந்தாளானாலும் கங்கதேவனையும் கடல் மோகினியில் இருந்த சூழ்நிலையையும் நினைத்தபோது அவளுக்குக் குலை நடுக்கம் எடுக்கவே செய்ததால் அந்த நடுக்கம் இளையபல்லவன் காலை வருடிய அந்தத் தருணத்திலும் லேசாக இருக்கவே செய்தது.

காலை வருடிய கைகள் அந்த நடுக்கத்தை லேசாக உணர்ந்துகொண்டன. அதை நினைத்து மெல்ல நகைக்கவும் செய்தான் இளையபல்லவன். அவன் நகைப்பு அந்த வேளையில் விசித்திரமாயிருக்கவே அவள் கேட்டாள், “எதற்கு நகைக்கிறீர்கள்?” என்று

“உன் உள்ளத்தைப் பயம் சூழ்ந்திருக்கிறது” என்றான் இளையபல்லவன் மேலும் நகைத்து.

“அதெப்படித் தெரிகிறது உங்களுக்கு?” என்று கேட்டு அன்புடன் அவன் தலைக் குழல்களைக் கோதிவிட்டாள் காஞ்சனாதேவி.

“கால்களில் லேசாக நடுக்கம் இருப்பது கைகளுக்குத் தெரிகிறது” என்றான் இளையபல்லவன்.

அப்பொழுதும் அவள் கோபிக்கவுமில்லை, சிரிக்கவு மில்லை. கருணாகரனைப் பற்றிய ஆழ்ந்த அன்பு, அன்பினால் விளைந்த அனுதாபம் இரண்டும் அவள் உள்ளத்தில் அபரிமிதமாக எழுந்ததால், “அதற்கு நகைப்பானேன்?” என்று கேட்டாள் அவள்.

அதுவரை காலை நோக்கிக் குனிந்திருந்த தலையை நிமிர்த்தி அவள் முகத்தைப் பார்த்தான் அவன். அந்தக் காரிருளிலும் இருளைக் கிழிக்கும் சந்திரன் போல் அவள் முகமிருந்தது. கண்கள் நக்ஷத்திரங்களைப்போல் ஜொலித்துக் கொண்டிருந்தன. உதடுகள் சற்று அகன்றிருந்ததால் உள்ளே யிருந்த முத்துக்கள் நன்கு வெளியே தெரிந்தன. அகன்றிருந்த உதடுகளிலிருந்து ஈரம் செவ்விய உதடுகளுக்கு மெருகையும் சிறிது ஒளியையும் கொடுத்தன. பக்கத்தில் எழும்பிய கன்னக் கதுப்புகளில் உதடுகள் அகன்றதால் குழிகள் விழுந்திருந்தன. அப்படிப் பலவிதத்திலும் தன் உதடுகளை வா வாவென்று அழைத்த அந்த வனப்புத் திட்டுகளை நீண்ட நேரம் ஆராய்ந்த இளையபல்லவன், “காஞ்சனா! உன் முகத்தில் அச்சம் இருக்கிறது” என்றான் கடைசியில்.

கண்கள் கண்களைக் கவர்ந்து நின்ற அந்தச் சமயத்தில் அவள் மிக மெதுவாகப் பேசினாள். “வேறெதை எதிர் பார்க்கிறீர்கள்?” என்று ரகசியமாகக் கேட்டாள்.

அவள் இரு கன்னங்களையும் அவன் தன்னிரு கைகளால் பிடித்துக்கொண்டு எதிரே இருந்த சந்திர பிம்பத்தைத் தன் கண்களால் பருகினான். அந்தப் பிடிப்பில் காதல் அதிக மில்லை. காதல் உணர்ச்சிகளை அவன் திடீரெனக் கைவிட்டு விட்டதை அவள் கன்னத்தில் பதிந்த கைகளின் தன்மை யிலிருந்தே புரிந்துகொண்டாள். அடுத்தபடி அவன் சொன்ன வார்த்தைகள் அவள் அபிப்பிராயத்தை ஊர்ஜிதம் செய்தன. “தைரியத்தை எதிர்பார்க்கிறேன்” என்ற சொற்கள் அவனிட மிருந்து மிக உறுதியுடன் வெளிவந்தன.

“தைரியத்தையா!” அவள் வியப்புடன் கேட்டாள்.

“ஆம் தைரியத்தைத்தான். “

“இந்தச் சூழ்நிலையிலா?”

“ஏன், இந்தச் சூழ்நிலைக்கென்ன?”
“எங்கும் உதவி கிடைக்காத தனித்தீவு. சொல்லியனுப்பி உதவி வரவழைப்பதையும் தடை செய்யும் நெடுங்கடல் சூழ்ந்த பிரதேசம். தவிர, கங்கதேவன்..” என்று மேலே ஏதும் சொல்லாமல் நிறுத்தினாள் அவள்.

“ஒரே ஆண்டில் நீ பெரிதும் மாறிவிட்டாய் காஞ்சனா” என்றும் சொன்னான் அவன் ஏதோ குற்றம் சாட்டும் குரலில்.

“என்ன மாறிவிட்டேன்?” என்று கேட்ட அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

“உன் நெஞ்சுத் துணிவு போய்விட்டது” என்றான் இளையபல்லவன்.

“முன்பு அதிகமிருந்ததோ?”

“ஆம். “

“எப்பொழுது?”

“பாலூர்ப் பெருந்துறையில் வாளுடன் நீ என்னை வரவேற்ற திருக்கோலத்தை என்னால் மறக்கமுடியவில்லை காஞ்சனா. “

இதைக் கேட்டதும் அவள் சில விநாடிகள் மௌனம் சாதித்தாள். பிறகு கீழிருந்த மணலை ஒரு கையால் எடுத்து மறுகையில் போட்டுக்கொண்டு சங்கடப்பட்டுக் கொண்டு சொன்னாள், “ஆம்! என்னாலும் மறக்க முடியவில்லை அதை,” என்று.
“நான் மறக்காததற்குக் காரணமுண்டு,” என்ற அவன் குரலில் பெருமிதமும் அன்பும் கலந்து நின்றது.

“நான் மறக்காததற்கும் காரணமுண்டு,” என்றாள் காஞ்சனாதேவி.

“நீ மறக்காததற்கு என்ன காரணம்?”

“உங்கள் காரணத்தை முதலில் சொல்லுங்கள். “

“அதுவரை பல பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் வாளேந்தி என்னைப் பயமுறுத்திய வீராங்கனை யொருத்தியை அன்றுதான் சந்தித்தேன். அந்தக் காட்சி என் மனத்தில் பதிந்துவிட்டது” என்றான் இளையபல்லவன்.

காஞ்சனாதேவி மெல்ல அவன் மீது சாய்ந்தாள். சில விநாடிகள் மௌனமாக இருந்தாள். “அந்த நிகழ்ச்சியை இன்றுவரை நானும் மறக்கவில்லை. அதற்குக் காரணம் சொல்லட்டுமா?” என்று கேட்டாள் அந்த மௌனத்திற்குப் பிறகு.

“சொல் காஞ்சனா!” என்றான் இளையபல்லவன்.

“அந்த வீராங்கனை அந்த இரவுடன் மறைந்துவிட்டாள்”
என்றாள் காஞ்சனாதேவி.

“மறைந்துவிட்டாளா!” இளையபல்லவன் குரலில் பேராச்சரியம் இருந்தது.

“ஆம். மறைந்துவிட்டாள். “

“ஏன்? ஏன் மறைந்துவிட்டாள்?”

“இளையபல்லவரே!”

“என்ன காஞ்சனா?”

“நான் சோழநாடு செல்லக் கலிங்கத்தில் வந்திறங்கிய போது நாட்டைக் காக்கும் பெரும்பணியை ஏற்ற கடாரத்து இளவரசியாக வந்தேன். எந்த ஆபத்தையும் சமாளிக்கும் சக்தியும் உறுதியும் என்னிடமிருந்தது. ஆபத்தை எதிர்பார்த்தும் வந்தேன். மக்கள் நலன் மனத்தில் எழுந்து நின்றது. அது பெரும் உறுதியைத் தந்தது. யாருக்கும் அஞ்சாத நெஞ்சம் படைத்திருந்தேன்… ” என்ற காஞ்சனாதேவி பெருமூச் செறிந்தாள்.

இளையபல்லவன் பதில் சொல்லவில்லை. அவளே மேற் கொண்டு சொன்னாள்: “அந்த நிலையில் நீங்கள் வந்தீர்கள். அஞ்சாத அந்த நெஞ்சத்தில் புகுந்தீர்கள். யாரும் என்னைப் பாதுகாக்கத் தேவையில்லை என்றிருந்த நெஞ்சத்தில் என்னைப் பாதுகாக்க ஒருவர் வந்துவிட்டார் என்ற உணர்ச்சி ஏற்பட்டது. அந்த உணர்ச்சிக்குப் பின் ஏதேதோ நான் அறியாத பல உணர்ச்சிகள் என் உடலிலும் உள்ளத்திலும் உலாவத் தொடங்கின. மெள்ள மெள்ள சுய உறுதிகளை, சுயபல நம்பிக்கையை அந்த உணர்ச்சிகள் உடைத்தன. மெள்ள மெள்ள அந்த வீராங்கனை மறைந்தாள். சதா உங்களைச் சிந்திக்கும் ஓர் அடிமை உயிரெடுத்தாள். உங்கள் பக்கத்தில் இப்பொழுது அமர்ந்திருப்பது அந்த அடிமை பழைய வீராங்கனையல்ல. சஞ்சலமும் பயமும் நிறைந்த உள்ளத்தைப் படைத்தவள். “

காஞ்சனாதேவியின் சொற்கள் இளையபல்லவனுக்கு அதைரியத்தை உண்டாக்கவில்லை. பழைய துணிவை அவள் இழந்துவிட்டதைப் பெருமையாகக் கருதினான் அவன். அவள் உள்ளத்தின் அச்சம் முகத்துக்கு எத்தகைய புது அழகைக் கொடுத்திருக்கிறது என்பதையும் எண்ணிப் பார்த்து உவகை கொண்டான். இருப்பினும் அந்தச் சமயத்தில் வேண்டியது பயம் மிகுந்த பார்வையல்ல அவனுக்கு. துணிவு நிறைந்தவள் வேண்டியிருந்தது அந்தச் சூழ்நிலைக்கு. “காஞ்சனா! உன் உள்ளம் நன்றாகப் புரிகிறது எனக்கு.

என் சம்பந்தப்பட்ட வரையில் அந்த அதைரியத்தை, சஞ்சலத்தை வைத்துக்கொள். ஆனால் சற்றுப் பழைய சொரூபத்தையும் வரவழைத்துக் கொள். அடுத்த சில தினங்களில் நாம் கங்கதேவனை வெற்றி கொள்ள வேண்டுமானால் உன் துணிவு மிகமிக முக்கியம்” என்று கூறிய இளையபல்லவன் இடையிலிருந்த ஒரு குறுவாளையும் அவளிடம் கொடுத்து, “வாளேந்திய கை இந்தக் குறுவாளையாவது ஏந்தட்டும். இதை உனக்குத் தற்காப்புக்காகவே கொடுக்கிறேன். இதை உபயோகிக்க அவசியமிருக்காது. உனக்கு எந்த ஆபத்திலும் மறைவில் என் உதவிக்கரம் இருக்கும் என்பதை நினைத்துக்கொள். எது நடந்தாலும் கவலைப்படாதே. வா” என்று கூறி அவளைக் கையைப் பிடித்து எழுப்பி நிற்க வைக்கவும் செய்தான். அவள் இடைக்குள் குறுவாளைச் செருகிக் கொண்டு மேல் தாவணியை அது தெரியாதபடி இழுத்து விட்டுப் போர்த்தினாள்.

அதற்கு மேல் இருவரும் பேசவில்லை. இருவரும் கைகோர்த்துக்கொண்டு கங்கதேவன் மாளிகையை நோக்கி நடந்தார்கள். அதை அணுகியதும் அவள் கையிலிருந்து தன் கையைப் பிரித்துக்கொண்ட இளையபல்லவன் காஞ்சனா தேவியை நோக்கி “காஞ்சனா! நீ என்னிடம் முழுக்க முழுக்கக் காதல் கொண்டிருக்கிறாய் என்பது நினைவிருக்கட்டும்,” என்றான்.

“அதை இப்பொழுது நினைவுபடுத்துவானேன்?” என்று கேட்டாள் அவள் விஷமமாக.

“நான் உன்னைக் காதலிக்கவில்லை. “

“என்ன ?”

“ஆம். உன்னைப் புறக்கணித்து உன்னிடமிருந்து தப்பப் பார்க்கிறேன். “

“அப்படியா?”

“ஆம். ஆனால் நீ என்னை விட மறுக்கிறாய். பின்னால் ஓடி வருகிறாய். “

“யார் சொன்னது?” சற்று சீற்றத்துடன் எழுந்தது காஞ்சனாதேவியின் கேள்வி.

“சேந்தன் சொல்லியிருக்கிறான்… ”

“யாரிடம்?”

“கங்கதேவனிடம். “

மெள்ள அப்பொழுதுதான் புரிந்தது காஞ்சனாதேவிக்கு இளையபல்லவனின் தந்திரம். அதை விளக்கியும் சொன்னான் இளையபல்லவன், “ஆம் காஞ்சனா! அப்படித்தான் நான் சேந்தனைச் சலிப்புத் தட்டிவிட்டதாக நினைக்க வேண்டும். என்னால் கைவிடப்பட்ட உன்னிடம் அவன் நெருங்குவதும் நெருங்கிய பின் நீ சொல்வதைக் கேட்பதும் எளிது. இன்றிலிருந்து ஐந்தாவது நாள் அவன் உன்னைச் சந்திக்க முயலுவான். சேந்தன் அழைத்துப் போவான். மறுக்காமல் போ. மீதி எதையும் யோசிக்காதே,” என்று.

காஞ்சனாதேவி நன்றாகப் புரிந்து கொண்டாள் இளைய பல்லவன் கங்கதேவனை கவிழ்க்கத் திட்டமிட்டிருப்பதாக. ஆனால் அது என்ன திட்டம் என்று அவளுக்குத் தெளிவாகத் தெரியவில்லையாயினும் இளையபல்லவன் ஆழ்ந்த நெஞ்சத்தை நன்றாக அறிந்திருந்த அவள், அவன் சொற்படி நடக்கவே முடிவு செய்தாள். அவளை அழைத்துக்கொண்டு கங்கதேவன் மாளிகை சேர்ந்த இளையபல்லவன் நேராக கங்க தேவன் அறைக்குச் சென்று தட்டினான்.

அடுத்த விநாடியே கதவு திறக்கப்பட்டு, கங்கதேவன் வெளியே தலையை நீட்டினான். அவன் பெரிய கன்னக் கதுப்பில் ஆழ்ந்து கிடந்த பயங்கரக் கண்கள் இளையபல்லவனைக் கண்டதும் சிறிது சந்தேகத்துடன் பார்த்ததன்றி, பின்னால் நின்ற காஞ்சனா தேவியைக் கண்டதும் காமத்தையும் அள்ளிக்கொட்டின. காஞ்சனாதேவி மெள்ள நகர்ந்து மாடிப்படியைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.

கங்கதேவன் இருவரையும் சில விநாடிகள் பார்த்துவிட்டு, “என்ன வேண்டும்?” என்று பொதுவாக முரட்டுத்தனமாகக் கேட்டான்.

“ஓர் உதவி வேண்டும்” என்றான் இளையபல்லவன்.

“என்ன உதவி?” சந்தேகத்துடன் ஒலித்தது கங்கதேவன் குரல்.
“மஞ்சளழகியைத் தெரியும் அல்லவா உங்களுக்கு? இதோ இவளைப் பாருங்கள்” என்றான் குரலில் எரிச்சலுடன் இளையபல்லவன்.

அறை வாயிற்படியைத் தாண்டி வெளியே வந்த கங்க தேவன், “தெரியும். அன்றே உங்கள் மரக்கலத்தின் அறையில். ” என்று இழுத்தான்.

“பார்த்து விட்டீர்கள். கடல்மோகினித் தலைவர் கண் களிலிருந்து எதுதான் தப்பும்?” என்றான் இளையபல்லவன்.

“எதுவும் தப்ப முடியாது. நீங்கள் கடற்கரைக்குப் போனதும் தப்ப முடியாது. இவள் போனதும் தப்ப முடியாது” என்றான் கங்கதேவன்.

“அதுமட்டும் பயனில்லை. “

“வேறென்ன செய்யவேண்டும்?”

“இன்னும் நாலைந்து நாட்களுக்கு இவளை இந்த மாளிகையை விட்டு வெளியில் விடாதிருக்கக் காவலருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். “

“ஏன்?”

“ஒன்று இவள் உடல்நிலை சரியில்லை. காய்ச்சல் இருக்கிறது. இரண்டாவது… ”
“சொல்லுங்கள். “

“நான் போகுமிடங்களுக்கெல்லாம் பெண்கள் என்னைத் தொடர்ந்து வருவது எனக்குப் பிடிக்காது. ” இளையபல்லவன் இதைத் திட்டமாகச் சொன்னான்.

கங்கதேவனுக்கு இளையபல்லவன் கூறியதெல்லாம் பெரும் திருப்தியாய் இருந்தது. இப்படியொருவன் ஒரு பெண்ணிடம் நடந்துகொண்டால் அவனிடம் எந்தப் பெண்ணுக்கும் கசப்பு ஏற்படுமென்பதை அவன் உணர்ந்து கொண்டதன்றி, அந்தக் கசப்பு தனக்கு எத்தனை அனுகூலம் என்பதையும் புரிந்து கொண்டான். ஆகவே இளையபல்லவன் கூறியபடி செய்வதாக ஒப்புக்கொண்டான்.

ஓரளவு நுண்ணறிவும் உள்ள கங்கதேவன் அந்த இரவில் அந்தச் சந்தர்ப்பத்தில் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒரு பெண்ணிடம் தன் உணர்ச்சிகளைக் காட்டுவது சரியல்ல என்பதையும் அறிந்து கொண்டதால் அவளை அவள் தந்தையின் அறையில் சேர்த்துவிட்டு வரும்படி இளையபல்லவனிடம் கூறினான். காஞ்சனாதேவியுடன் சென்ற இளையபல்லவன் அவளைப் பலவர்மன் அறையில் விட்டுத் திரும்பினான். அன்றிரவுக்குப் பிறகு இரண்டு நாட்கள் காஞ்சனாதேவி இளையபல்லவனைப் பார்க்கவேயில்லை. இரண்டு நாளும் அந்த அறைக்கு வந்துபோய்க்கொண்டிருந்தவர்கள் கங்கதேவனும் சேந்தனும் தான். இருவரும் சேர்ந்தே வந்தார்கள், சேர்ந்தே போனார்கள்.

அவர்கள் வந்தபோதெல்லாம் காஞ்சனாதேவியும் பலவர்மனும் அக்கம் பக்கத்து மஞ்சங்களில் படுத்துக் கிடந்தார்கள். காஞ்சனாதேவியை தூரத்திலிருந்தே விசாரித் தான் கங்கதேவன். அவன் பண்பாடு மிக விநோதமாயிருந்தது காஞ்சனாதேவிக்கு. அதற்கு என்ன காரணமென்று அறியாமல் திகைத்த அவளுக்குக் காரணத்தை ஒரு நாளிரவு சேந்தன் சொன்னான். அதைக்கேட்ட காஞ்சனாதேவி பெரிதும் மலைத்தாள். “உண்மையாகவா?” என்று வினவினாள் கவலையுடன்.

அப்பொழுது இரவு மூடியிருந்த சமயம். சேந்தன் மெள்ள அறையைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்து ரகசியமாக விஷயத்தைச் சொன்னான்.

“என்னால் நம்ப முடியவில்லையே” என்றாள் அவள்.

“யாராலும் நம்ப முடியவில்லை ” என்றான் சேந்தன்.

“கண்டியத்தேவனும் அமீரும் என்ன செய்கிறார்கள்?”

“அவர்கள் என்ன செய்ய முடியும்?”

“இந்த அக்ரமத்துக்கு ஒப்புக்கொண்டார்களா?”

“ஒப்புக்கொள்ளாமல் என்ன செய்வது?”

“எதிர்ப்பது. “

சேந்தன் வருத்தத்துடன் அவளை நோக்கி, “எதிர்த்தும் பார்த்தார்கள், பயனில்லை. இரண்டு நாட்களாக இளையபல்லவர் அக்கிரமம் அதிகமாய் இருக்கிறது. தாங்க முடிய வில்லை. நாமெல்லாம் அதோகதி” என்றான். அத்துடன் சென்ற இரண்டு நாட்களில் நடந்த விபரீதத்தை விளக்கத் தொடங்கிய சேந்தன், “இப்பொழுது தங்கள் தந்தை சிறையிலிருக்கிறார்” என்றும் கூறினான்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch23 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch25 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here