Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch25 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch25 | Sandilyan | TamilNovel.in

109
0
Read Kadal Pura Part 3 Ch25 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch25 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch25 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 25 :ஒப்பந்தம்.

Read Kadal Pura Part 3 Ch25 | Sandilyan | TamilNovel.in

புஷ்ப ஒட்டியாணமென்று புகழ் பெற்ற மலர்த் தோட்ட வரிசைக்கருகேயிருந்து இளையபல்லவன் தன்னை அழைத்து வந்து கங்கதேவனுக்கு அறிமுகப்படுத்தி விட்டுச் சென்ற இரவிலிருந்து மூன்றாம் இரவில் சிறிதும் சத்தம் செய்யாமல் திருடன்போல் அறைக்குள் நுழைந்து, “உங்கள் தந்தை சிறையில் இருக்கிறார்” என்பதைச் சேந்தன் அறிவித்தவுடன் திக்பிரமை பிடித்துச் சிறிது நேரம் மஞ்சத்தில் உட்கார்ந்து விட்ட காஞ்சனாதேவி, “சிறையில் இருக்கிறாரா? யார் சிறை செய்தது? எதற்காக?” என்ற கேள்விகளைச் சினத்துடன் விடுவிடு என்று வீசினாள் சில விநாடிகள் கழித்து.

கூலவாணிகன் முகம் குழப்பத்தையும் அச்சத்தையும் மிதமிஞ்சிக் காட்டியதன்றிப் பதில் சொன்ன குரலும் நடுங்கவே செய்தது. “வேறு யார் சிறை செய்ய முடியும்? இளையபல்லவர்தான். அதுவும் இந்தக் கயவன் கங்க தேவனைத் திருப்தி செய்ய” என்ற கூலவாணிகன் திக்கு முக்காடி வார்த்தைகளை உதிர்த்தான்.

காஞ்சனாதேவியின் கருவிழிகள் வியப்பா அச்சமா என்று தெரியாத பார்வையொன்றை வீசின கூலவாணிகன் மீது. “எங்கு சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என் தந்தை?” என்று வினவினாள் கடாரத்து இளைவரசி. இம்முறை அவள் குரல் உணர்ச்சியற்று இருந்ததையும், ஒரு பெரும் தோரணை மட்டும் அதில் ஊடுருவி நின்றதையும் கவனித்த கூலவாணிகன் அதன் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறினாலும், “கடல் புறாவில் இருக்கிறார்” என்று பதில் சொன்னான்.
கடாரத்து இளவரசியின் நாசியிலிருந்து ஆசுவாசப் பெருமூச்சொன்று வந்தது. “வேறு இடத்துக்கு அகற்றப்பட வில்லையே அவர்?” என்று மட்டும் கேட்டாள் அவள் ஓரளவு சாந்தியுடன்.

“இல்லை” என்று மறுமொழி சொன்ன சேந்தன் அவள் சாந்தியைக் கண்டு வியப்படைந்தான். அந்த சாந்தியை உடைக்கும் எண்ணத்துடன் மற்றொரு விவரமும் சொல்ல முற்பட்டு, “கடல் புறாவிலிருந்தாலும் அவரைக் காவல் புரிவது கங்கதேவன் மாலுமிகள் இருவர். கங்கதேவன் உத்தரவின்றி அவரை யாரும் பார்ப்பதோ பார்த்துப் பேசுவதோ கூடாதென்று இளையபல்லவர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்” என்று சேந்தன் காஞ்சனாதேவியின் சாந்திக்குக் காரணம் இல்லையென்பதை வலியுறுத்தும் பார்வையொன்றை அவள் மீது திருப்பினான்.

அதனாலும் மனம் தளராத காஞ்சனாதேவி கேட்டாள், “கடல்புறாவில் கங்கதேவன் ஆட்கள் மட்டும்தானிருக் கிறார்களா?” என்று.

“இல்லை, காவலர் இருவரைத் தவிர மற்றவர் நம்மவர்
தான். “

“நம்மவர் எத்தனை பேர் இருப்பார்கள்?”

“பொருள்களைப் பாதுகாக்கத் தேவையான பத்துப் பதினைந்து பேர். “

“மற்றவர்கள்?”
“மற்றவர்களில் சிலர் மலர்த் தோட்டத்தின் முகப்பில் தங்குகிறார்கள். சிலர் கடற்கரையிலேயே தங்குகிறார்கள். இன்னும் சிலர் எட்ட இருக்கும் தமிழர் இல்லங்களில் தங்கிக் காலையில் வேலைக்கு வருகிறார்கள். “

“என்ன வேலை நடக்கிறது இப்பொழுது?”

“கலிங்கத்தின் கப்பல்களிரண்டை நாம் கைப்பற்றினோ மல்லவா? அவையிரண்டும் துரிதமாகச் செப்பனிடப்படுகின்றன. கடல் புறாவின் போர்ப் புண்களும் ஆற்றப் படுகின்றன. ” இதைக்கேட்ட காஞ்சனாதேவி சில விநாடிகள் சிந்தனை யிலிறங்கினாள். கங்கதேவன் காவலரிடம் தந்தை சிறை யிலிருந்தாலும் கடல் புறாவில் தமிழர்களும் காவலிருப்பதால் தந்தைக்கு எந்தவித. ஆபத்துமில்லை என்பதையும் ஏதோ காரணத்தை முன்னிட்டே இம்மாதிரி நாடகத்தையெல்லாம் இளையபல்லவன் ஆடுகிறானென்பதையும் அவள் தீர்மானித்துக் கொண்டபடியாலும், “அதனால் பாதகமில்லை கூலவாணிகரே” என்று கூறினாள் இறுதியாக.

கூலவாணிகனுக்கு அவள் பதில் விசித்திரமாயிருந்தது. “எதனால் பாதகமில்லை ?” என்று கேட்டான் அவன், வியப்பு பரிமளித்த குரலில்.

“தந்தையைக் கடல்புறாவில் சிறை வைத்திருப்பதால்” என்றாள் காஞ்சனாதேவி.

“அதுதான் பாதகமில்லையா? கடாரத்தைக் கொள்ளை யிட்டாலும் பாதகமில்லையா?” கூலவாணிகன் கேட்டான் எரிச்சலுடன்.
காஞ்சனாதேவியின் கண்களில் மெள்ள சினம் உதய மாயிற்று. “என்ன? கடாரத்தைக் கொள்ளையிடப் போகிறார் களா?” என்ற அவள் குரலில் உள்ளக் கொந்தளிப்பின் சாயை தெரிந்தது.

“ஆம் இளவரசி. “

“என் தலைநகரையா!”

“அதையேதான். “

“கொள்ளையிடப் போவது யார்?”

“இளையபல்லவரும் கங்கதேவனும். “

“இருவரும் சேர்ந்தா ?”

“ஆம். இது கூட்டு முயற்சி. “

காஞ்சனாதேவிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாததால் அவள் செங்கமல இதழ்கள் சில விநாடிகள் திறந்தே நின்றன. பிறகு அந்த இதழ்களிலிருந்து சொற்கள் உதிர்ந்தபோது காரம் அதில் நிரம்ப இருந்தது. இந்த முயற்சிக்கு வித்திட்டது யார்?” என்று வினவினாள் அவள் உஷ்ணத்துடன்.

“இளையபல்லவர்” என்று கூறினான் சேந்தன்.

“என்னால் நம்ப முடியவில்லை கூலவாணிகரே! கொள்ளைக் கப்பல்கள் கடாரத் துறைமுகத்தில் நுழைந்தால் மக்கள் நாசமாக்கப்படுவார்களே!” என்றாள் காஞ்சனாதேவி திகிலுடன்.

கூலவாணிகன் அவள் உட்கார்ந்திருந்த பஞ்சணையை நெருங்கி வந்தான். அவளைக் கூர்ந்து நோக்கிய அவன் கண்களில் அச்சம் இருந்தது. “யாரால் நம்ப முடியும் தேவி? இதை இளையபல்லவரே கங்கதேவனிடம் கூறினார். நடந்ததை நடந்தபடி சொல்லுகிறேன். கேட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்” என்ற சேந்தன் இரண்டு நாள் கதையை விவரிக்கத் தொடங்கினான்: “தேவி! உங்களை அழைத்துக் கொண்டு கடற்கரையிலிருந்து கிளம்பிய இளையபல்லவர் இங்கு வந்த நள்ளிரவு கங்கதேவன் அறையிலேயே படுத்து உறங்கினார்.

அவர் திரும்பி வருவாரென்றும் ஏதாவது கட்டளை இடுவாரென்றும் எதிர்பார்த்த கண்டியத்தேவனும், அமீரும், நானும் கடற்கரையிலேயே நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தோம். இளையபல்லவர் வரவில்லை. விடியற்காலையில் தான் நாங்கள் உறங்கத் துவங்கினோம். நாங்கள் விழித்தபோது இளையபல்லவர் கங்கதேவனுடன் எங்களை நோக்கி வந்தார். அவன் முன்னிலையிலேயே கலிங்கத்தின் மரக்கலங்களைத் துரிதமாகப் பழுது பார்க்கும்படியும் கடல் புறாவின் புண்களையும் ஆற்றும்படியும் உத்தரவிட்டார்.

கங்கதேவன் அவரை மிகுந்த சந்தேகத்துடன் பார்த்தான். மரக்கலங்களைப் பழுது பார்க்க என்ன அத்தனை அவசரமென்று கேட்டான். பழுதுபட்ட போருக்கு உதவாத மூன்று மரக்கலங்கள் துறைமுகத்தின் பெரும் பாகத்தை அடைத்துக்கொண்டிருப்பதால் மற்ற நான்கு மரக்கலங்களும் ஒதுங்கிக் கிடக்க வேண்டிய அவசியத்தைச் சுட்டிக் காட்டிய இளையபல்லவர் ஏதாவது ஓர் எதிரி மரக்கலம் வந்து வாயிலை அடைத்து நின்று விட்டால் துறைமுகத்தின் கதி என்ன!’ என்று விசாரித்தார்.

சுற்றுமுற்றும் துறைமுக நிலைமையைப் பார்த்த கங்கதேவன் அதிலுள்ள அபாயத்தை உணர்ந்து கொண்டதால் அதற்கு. மேல் அவன் எதுவும் பேசவில்லை. அப்பொழுதுதான் சொன்னார் இளையபல்லவர், ‘கங்க தேவரே! கொள்ளையிலும் பரஸ்பர நம்பிக்கை வேண்டும். இல்லையேல் கூட்டு முயற்சி பலிக்காது’ என்று. அதுமட்டுமல்ல, தனது மரக்கலங்களை கங்கதேவன் சொந்த மரக்கலம்போல் பாவித்து எப்பொழுது வேண்டுமானாலும் சென்று பார்க்கலாமென்றும் கூறினார். கங்கதேவன் எப்பொழுது வந்தாலும் மரக்கலத்தைக் காட்டுமாறு கண்டியத்தேவருக்கும் அமீருக்கும் பணித்தார். “

காஞ்சனாதேவி இடையே ஒரு கேள்வி கேட்டாள், “இருவரும் ஒப்பினார்களா?” என்று.

“அப்பொழுது இருவரும் பதில் சொல்லவில்லை. அன்று நடுப்பகலில் கப்பல்களைப் பழுது பார்க்கும் வேலையை இளையபல்லவர் பார்வையிட வந்தபோது கண்டியத்தேவர் ஆட்சேபணை தெரிவித்தார். கடல் புறாவின் மர்மங்களை எதிரியைப் பார்க்கவிடுவது அபாயமென்று கூறினார். கங்கதேவன் எதிரியல்லவென்பதையும் நண்பனென்பதையும் வலியுறுத்தினார் இளையபல்லவர். அதுமட்டுமல்ல, அங்கிருந்த என்னை நோக்கி எப்பொழுதும் நான் கங்கதேவனிடம் இருந்து கொண்டு அவன் சொற்படி கேட்க வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்துவிட்டு வெகுவேகமாக எங்கோ போய்விட்டார். அன்று இரவு வரையில் அவரைக் காணவில்லை. கங்கதேவன் பலமுறை அவரைத் தேடினான்.

காணாததால் கடுங்கோபத்துடன், ‘எங்கே உங்கள் தலைவர்?” என்று இரைந்து அமீரையும் கண்டியத்தேவனையும் பார்த்துக் கூவினான். இதை அவன் கடல்புறாவிற்கு அருகிலுள்ள புஷ்ப ஒட்டியாணத்தின் முகப்பில் உட்கார்ந்து உணவருந்திக் கொண்டிருந்த எங்கள் முன்னிலையில் கூவினான். ‘ஏன் என்னைத் தேடுகிறீர்கள்?’ என்று கேட்டுக்கொண்டே இளையபல்லவர் மலர்ச் சோலைக்குள்ளிருந்து வெளியே வந்தார் சர்வ சாதாரணமாக. கங்கதேவன் மிகுந்த சந்தேகத்துடன் அவரை உற்று நோக்கினான்.

அதை லட்சியம் செய்யாமல் ‘ஏதாவது முக்கியமாகப் பேச வேண்டுமா?’ என்று வினவினார் இளைய பல்லவர். ஒன்றுமில்லையெனக் கூறிய கங்கதேவன் திரும்பினான் மாளிகையை நோக்கி. அவனைத் தடுத்த இளையபல்லவர் ‘நாளை இரவு உங்கள் மாலுமிகளைக் கடற் கரையில் ஒன்று சேருங்கள். எனது மாலுமிகளும் வருவார்கள்’ என்றார். கங்கதேவன் பதில் சொல்லாமலே புறப்பட்டான். அவனைத் தொடரும்படியும் என் கண்ணைவிட்டு அவன் அகலக் கூடாதென்றும் இளையபல்லவர் உத்தரவிட்டார். நான் கங்கதேவனைத் தொடர்ந்தேன். அவனை விட்டு அகல வில்லை” என்று விவரித்தான் சேந்தன்.

“ஆம், அகலவில்லை. இருவரும் சேர்ந்துதானே வருகிறீர்கள், போகிறீர்கள்?” என்றாள் காஞ்சனாதேவி.

அவள் மனோநிலை சேந்தனுக்கு நன்றாகப் புரிந்தது. மேற்கொண்டு நடந்த அனைத்தையும் அவள் அறிந்துகொள்ள விரும்புகிறாளென்பதை உணர்ந்துகொண்டான். “பிறகு மாறுபாடான உத்தரவுகள் வந்தன இளவரசி. தமிழர்கள் இல்லங்களையும் அதற்குப் பின்னாலுள்ள காட்டையும் கவனிக்கச் சொன்ன இளையபல்லவர் என்னை கங்க தேவனைப் பிரியவேண்டாமென்று சொன்னதால் அப்பணியை நிறைவேற்றுவது எப்படி என்று கேட்டேன். அந்தப் பணி அவசியமில்லையெனச் சொல்லிவிட்டார். அவர் போக்குக் கண்டியத்தேவருக்கும் அமீருக்கும் அடியோடு புரிய வில்லை . தவிர கடல்புறாவில் இருக்கும் உணவு பெரும் பகுதி தீர்ந்துவிட்டது” என்றான் கூலவாணிகன்.

இதைக் கேட்டதும் துடித்து எழுந்த காஞ்சனாதேவி “அப்படியானால் நம் மாலுமிகளின் கதி? அதிலிருந்த உணவு, கடல் புறா, அது பிடித்த இரு மரக்கலங்கள், இவற்றை நடத்தும் மாலுமிகளுக்குத்தானே போதுமானதாய் இருந்தது?” என்று வினவினாள்.

“ஆம் தேவி! இந்தத் துறைமுகத்தில் இப்பொழுது உணவுப் பஞ்சம் இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் கங்கதேவனுக்கும் அவன் வசமுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட மாலுமிகளுக்கும் நாம் பிடித்த கலிங்க மரக்கலங்களிலுள்ள சிறைவாசிகளுக்கும் நேற்று பெரும் விருந்து வைத்து உணவையும் மதுவையும் வாரி வழங்கிவிட்டார் இளையபல்லவர். அந்தக் கடற்கரை விருந்தை நீங்கள் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. நாங்கள் பார்த்தோம். எங்கும் மணலில் செருகப்பட்ட பந்தங்கள் எரிந்தன. கங்கதேவரும் இளையபல்லவரும் அக்கம்பக்கத்தில் பெருமஞ்சங்களில் அமர்ந்திருந்தார்கள். ஆயிரத்துக்கு மேற்பட்ட மாலுமிகள், கலிங்கர் மட்டுமல்ல பல நாட்டவர். ” என்று சொல்லிக்கொண்டே போன கூலவாணிகனை இடை மறித்த கடாரத்து இளவரசி, “என்ன! பல நாட்டவரா!” என்று வினவினாள்.

“ஆம், பல நாட்டவர் இருக்கிறார்கள் கங்கதேவனிடம். ” “எந்நாட்டவர்?”

“சுமாராகத்தான் சொல்ல முடியும். ஆயிரத்தில் கலிங்கர் பாதிக்குக் குறைவு. மற்றவர்கள் பாலித் தீவிலும் சொர் ண பூமியிலும் இருப்பவர்கள். நமது பாரத நாட்டின் வடபுறத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். “

இதைக்கேட்ட காஞ்சனாதேவி, “சொல்! மேலே சொல்” என்றாள்.

அதைக் கவனியாமலே சொன்னான் சேந்தன், “கடற் கரையில் அந்தப் பந்தங்களின் வெளிச்சத்துக்கு இடையே ஆயிரத்துக்கு மேற்பட்ட மாலுமிகள் உண்டு, குடித்து, பேரிரைச்சல் போட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில் எழுந்து அவர்களை நெருங்கிவர உத்தரவிட்ட இளையபல்லவர் பெரும் குரலில் கூவினார், ‘உங்களுக்கு இன்று விருந்தளித்தோம் வயிற்றுக்கு. இப்பொழுது கண்ணுக்களிக்கிறோம் விருந்து’ என்று. அடுத்த சில விநாடிகளில் அமீரின் காவலில் இருபெரும் பொக்கிஷப் பெட்டிகள் கடல்புறாவிலிருந்து வந்து அவர்முன் திறக்கப்பட்டன.

அவற்றிலிருந்து பெரும் நகைகளையும் கிரீடங்களையும் பொற்காசுகளையும் கண்ட கங்கதேவன் மாலுமிகள் பல விநாடிகள் பெரிதும் ஸ்தம்பித்தார்கள். பிறகு அவற்றை நோக்கி இரைந்துகொண்டு ஓடிவந்தார்கள். சட்டென்று பெட்டிகளை மூடினார்கள் நம் வீரர்கள். அதனால் எழுந்த கூக்குரலை இளையபல்லவரின் பெருங்குரல் அடக்கியது. இம்மாதிரி பல பெட்டிகள் உங்களுக்குக் கிடைக்கும். நானும் உங்கள் தலைவரும் கடாரத்தையே கொள்ளையிடப் போகிறோம். அந்த நகரில் உங்களை விட்டு விடுகிறேன்.

முடிந்த வரையில் கொள்ளையிடுங்கள்’ என்று இரைந்து கூவிய அவர் பெட்டிகளைக் கொண்டு போகுமாறு அமீருக்கு உத்தரவிட்டார். அடுத்தபடி ‘முறி எழுதுங்கள், முறி எழுதுங்கள்?’ என்ற கூக்குரல் எங்கும் எழுந்தது. கங்கதேவன் கூட்டத்தார் எதிரே உட்கார்ந்து கொள்ளையடிக்கும் பொருளில் யாருக்கு எவ்வளவு சேரவேண்டுமென்ற விதிகளை நிர்ணயித்து முறிகளை எழுதினார்கள். மாலுமிகளுக்குப் பெரிதும் விட்டுக் கொடுத்தார் இளையபல்லவர். அந்த முறியின்படி நமக்குச் சேரவேண்டியது அதிகமில்லை. “

இந்தக் கடைசிப் பகுதியை மிகுந்த வருத்தத்துடன் சொன்னான் சேந்தன். காஞ்சனாதேவி மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள். கடைசியில் ‘இவர் கொள்ளைக்காரர்தானா?” என்றும் நினைத்தாள். அப்படி நினைத்தபோது ஒரு சந்தேகமும் ஏற்படவே கேட்டாள், “இதில் என் தந்தையைச் சிறையிட வேண்டிய காரணமென்ன?” என்று.

சேந்தன் அந்தக் கதையையும் விளக்கினான்: “அந்தக் கஷ்டத்தை ஏன் கேட்கிறீர்கள்? முறி எழுதிய பின்பும் கங்க தேவன் இளையபல்லவரை நம்பவில்லை. ‘கடாரம் பெரும் துறைமுகம், காவலுள்ள தலைநகர். என்னிடமுள்ள ஆயிரம் பேர் உங்களிடமுள்ள சுமார் நானூறு பேர், இவர்களைக் கொண்டு நாம் எப்படிக் கைப்பற்ற முடியும்’ என்று கேட்டான் அவன். அவன் மாலுமிகளும் அவரைச் சந்தேகத்துடன் நோக்கினார்கள். அதற்கும் மருந்து வைத்திருக்கிறேன்’ என்ற இளையபல்லவர் கடல் புறாவிலிருந்து குணவர்மரைக் கொண்டுவரக் கட்டளையிட்டார்.

முதலில் அமீர் மறுத்தான். பிறகு இளையபல்லவர் கட்டளையை மீறமுடியாமல் கொணர்ந்தான் உங்கள் தந்தையை வாள் உறுவிய காவலர் மத்தியில். அவரைக் கண்டதும் கூவினான் கங்கதேவன் ‘குணவர்மர்!’ என்று. அவன் குரலில் பயம் ஒலித்தது. இளையபல்லவர் சொன்னார் அவனுக்கு, ‘இவர் யாரென்பதை உங்கள் மாலுமிகளுக்கு அறிவியுங்கள்!’ என்று. கங்கதேவன் அறிவித்தான். பிறகு குணவர்மர் கடல் புறாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரைக் காவல் செய்யும் பொறுப்பையும் இளையபல்லவர் கங்கதேவனிடம் ஒப்படைத்தார். இன்னொரு விபரீதமும் நடந்திருக்கிறது… ”

இந்த இடத்தில் அச்சம் பூரணமாகத் தொனித்தது சேந்தன் குரலில்.

“என்ன? சொல் சேந்தா?” என்றாள் காஞ்சனாதேவி.

“கலிங்கத்தின் கப்பல்களை இளையபல்லவர் கைப் பற்றினாரல்லவா?”

“ஆம். “

“அவற்றைக் கடலில் கொண்டு சென்று பாரதத்திலிருந்து வரும் மரக்கலங்களை வேவு பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார் இளையபல்லவர். “

அதனாலென்ன?”

“அவற்றைக் கடலில் செலுத்தும் பொறுப்பை கங்க தேவனிடம் ஒப்படைத்து விட்டார் படைத்தலைவர். “

“அப்படியானால்!” காஞ்சனாதேவியின் குரலில் அச்சம் பெரிதும் ஒலித்தது.
“கங்கதேவனிடம் ஆறு மரக்கலங்கள், நம்மிடம் கடல் புறா மட்டும், அதுவும் அசைய முடியாதபடி கடற்கோரை களை அணுகி நிற்கிறது. “

காஞ்சனாதேவி முணுமுணுத்தாள், “அப்படியானால் நம் கதி அதோகதிதான்” என்று.

பதிலுக்கு ஆமோதிக்கும் முறையில் தலையை ஆட்டினான் சேந்தன். “இப்பொழுது இளையபல்லவர் எங்கே?” என்று கேட்டாள் காஞ்சனாதேவி.

“தெரியாது” என்றான் சேந்தன்.

காஞ்சனாதேவி மீண்டும் மஞ்சத்தில் உட்கார்ந்து விட்டாள். இளையபல்லவன் இப்படி எல்லோரையும் பேராபத்தில் இறக்கிவிட்டானே என்று நினைத்துப் பெருமூச் செறிந்தாள். சேந்தனும் பெருமூச்சு விட்டான். ஆனால் அந்த விபரீத ஒப்பந்தத்தை கங்கதேவனிடம் செய்து கொண்ட இளையபல்லவன் மட்டும் சற்றும் கவலையின்றி, தமிழர் இல்லங்களுக்குப் பின்னால் தூரத்தே தெரிந்த தைலகிரியின் அடிவாரத்தைத் தொட்டுக் கொண்டிருந்த மலர்த் தோட்டங் களை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch24 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch26 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here