Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch26 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch26 | Sandilyan | TamilNovel.in

100
0
Read Kadal Pura Part 3 Ch26 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch26 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch26 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 26 : பதினொரு மாற்றுத் தங்கம்!

Read Kadal Pura Part 3 Ch26 | Sandilyan | TamilNovel.in

கடல்மோகினியென்று பிரசித்தி பெற்ற மாநக்காவரம் தீவின் துறைமுகத்தில் கருணாகர பல்லவன் காலை வைத்து வாரம் ஒன்றுக்கு மேல் ஓடிவிட்டாலும், அவனைச் சேர்ந்தவர்களைச் சூழ்ந்திருந்த ஆபத்து மட்டும் சிறிதும் குறையாமல் நாளுக்கு நாள் வளர்ந்து வந்ததன்றி, அந்த ஆபத்தை வளர்ப்பதற்குத் தேவையான அனைத்தையும் சோழர் படைத்தலைவனே செய்து வந்தான். அவன் செய்கைகளையும் போக்கையும் கவனித்து வந்த கண்டியத் தேவனும் அமீரும் மற்ற மாலுமிகளும் பெரும் பீதியை அடைந்தனர்.

தங்கள் அனைவரையும் தீர்த்துக்கட்டி அவனையும் அழித்துக்கொள்ள வேண்டுமானால் இளையபல்லவன் பிரதிதினம் ஏற்படுத்தி வந்த சூழ்நிலையை விட வேறெதுவும் தேவையில்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டாலும் அதைப்பற்றி அவனைக் கேட்க யாருக்கும் துணிவில்லாததால் உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தார்கள். சேந்தனை விட்டுக் காஞ்சனாதேவியிடம் நடக்கும் விஷயங்களைத் தெளிவுபடுத்தி இளையபல்லவனை எச்சரிக்கும்படி செய்யலாமென்றாலும் அதற்கும் வழியில்லாது போயிற்று.

கண்டியத்தேவனுக்கும் அமீருக்கும் கூலவாணிகன் சேந்தனை விட்டு அவர்கள் காஞ்சனா தேவிக்கு ஒப்பந்த விவரங்களைச் சொல்லச் செய்ததன்றி அடுத்து நடந்த விவரங்களையும் அவ்வப்பொழுது விவரிக்கச் சொல்லியிருந்தும் அந்தத் துறையிலிருந்தும் பயனேதுமில்லாது போயிற்று. கடாரத்தைக் கொள்ளையிட கங்கதேவனிடம் இளையபல்லவன் ஒப்பந்தம் செய்து கொண்டதைப் பற்றிக் கேள்விப்பட்டதும் வெகுண்ட காஞ்சனாதேவி அடுத்த இருநாட்களில் நடந்ததைப் பற்றிக் கேட்டதும் தலையிட எண்ணத்தான் செய்தாளென்றாலும் இளையபல்லவனைத் தனிமையில் சந்திப்பதும் பேசுவதும் அறவே முடியாமல் போய்விட்டது அவளுக்கு.

ஒப்பந்தம் செய்துகொண்டு முறி எழுதி முடித்த நாளிலிருந்து எப்படி இளையபல்லவன் கடல் புறாவின் பக்கமே வராமல் கங்கதேவன் மாலுமிகளிடையிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறானென்பதையும் அவர்களுடனேயே உண்டு உறங்கிக் கொண்டிருக்கிறான் என்பதையும் சேந்தன் மூலம் அறிந்த காஞ்சனாதேவி ஒருநாள் இரவு கங்கதேவன் மாலுமிகளிருந்த இடத்துக்கே இளையபல்லவனைத் தேடிச் சென்றாள். அப்படிச் சென்றவள், கங்கதேவன் மாலுமிகளிருந்த இடத்தையும் அங்கிருந்த நிலைமையையும் கண்டு நீண்ட நேரம் பிரமித்துப் பல விநாடிகள் நின்றுவிட்டாள்.

அர்த்த சந்திர வடிவத்திலிருந்த அந்தத் துறைமுகத்தின் கிழக்குக் கோடியில் கடல்புறாவும் அதன் மாலுமிகளும் தங்கியிருந்தார்களென்றால் அதன் மேற்குக் கோடியில் கங்கதேவன் மாலுமிகள் தங்கியிருந்தார்கள். போரிட அணி வகுத்து இருக்கும் இரு நிலப்படைகள் போல தனித்தனியாயிருந்த அந்த இரு கூட்டங்களையும் கண்ணெடுத்துப் பார்த்த கடாரத்து இளவரசி கங்கதேவன் ஆட்கள் கடல் புறாவின் ஆட்களைவிட எத்தனை மடங்கு அதிகமென்பதை அன்று தான் நேரில் பார்த்தாளாகையால், “இவர்களிடமிருந்து நாம் எப்படி மீளப் போகிறோம்” என்ற பெரும் பயம் அவள் இதயத்தைச் சூழ்ந்து கொள்ளவே தயங்கித் தயங்கி நடந்த கால்களுடன் இளையபல்லவன் இருக்குமிடத்தை அடைந்தாள் அவள்.

சுமார் நூறு பந்தங்கள் பல இடைவெளிகளில் எரிந்து கொண்டிருந்ததையும் அந்த இடவெளிகளில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாலுமிகள் பலப்பல கூட்டங்களாகப் பிரிந்து உட்கார்ந்திருந்ததையும் அத்தகைய கூட்ட மொன்றுக்கு நடுவில் இளையபல்லவன் உட்கார்ந்து மிகவும் குள்ளமாயிருந்த ஒரு மாலுமியுடன் பகடையாடிக் கொண்டிருந்ததையும், சுற்றிலுமிருந்தவர் மதுவைக் குடித்துக் கொண்டே நகைத்துக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்ததையும் கவனித்த காஞ்சனாதேவி மிகுந்த அருவருப்புடனேயே இளையபல்லவனிருந்த இடத்தை நாடி அவனுக்குப் பின்னால் நின்றாள். அவன் உட்கார்ந்திருந்த கூட்டம் மட்டும் கடற்கரையின் அலைகளுக்கு வெகு அருகாமையிலும் மற்றக் கூட்டத்தினரை விட்டுச் சற்றுத் தள்ளியுமிருந்ததால், மற்றக் கூட்டங்களைக் காஞ்சனாதேவி கவனித்தாலும் அக்கூட்டங்கள் அவளைக் கவனியாமலே அவள் இளைய பல்லவன் இருந்த இடத்தை அணுக முடிந்தது.

அந்தக் கூட்டத்துக்கு நடுவே ஒரு பெரும் பந்தம் நடப்பட்டு அதன் ஒரு புறத்தில் நாற்சதுரச் சிறு கம்பளம் ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. பந்தத்துக்கு இருபுறத்திலும் உட்கார்ந்து இளையபல்லவனும் குள்ள மாலுமியும் பகடையாடிக் கொண்டிருந்ததைக் கவனித்துக்கொண்டே இளையபல்லவன் பின்னால் சென்று நின்ற காஞ்சனாதேவியும் சிறிது நேரம் பகடையாட்டத்தைக் கவனித்தாள். இளையபல்லவன், “நான்கு, ஐந்து,” என்று பலக்கக் கூவிக் கொண்டு பகடைகளை உருட்டினாலும் அவனுக்கு வெற்றி அதிகமாகக் கிடைக்கவில்லை.

எதிரிலிருந்த குள்ளன் பார்வையும் குள்ள நரி போலிருந்ததன்றி அவன் சத்தம் போடாமல் ஏதோ இனிப்புப் பண்டத்தைச் சாப்பிட்டு விட்டவன்போல் நாவை வெளியே நீட்டி நீட்டி உதடுகளைத் துழாவிக்கொண்டே காய்களை உருட்டி அடிக்கடி வெற்றி யடைந்து கொண்டிருந்தான். அவன் வெற்றியடைய அடைய இளையபல்லவன் தனது மடியிலிருந்து பொற்காசுகளைப் பணயத்துக்காகத் தூக்கித் தூக்கிச் சிறு கம்பளத்தின் மீது எறிந்து கொண்டிருந்தான்.

அந்த நாணயங்கள் எறியப்பட்ட சமயங்களிலெல்லாம் மாலுமிகளிடையே பெரும் கரகோஷம் ஏற்பட்டதையும் ஒவ்வொருவர் பார்வையிலும் பொன்னுக்கான வெறி மிதமிஞ்சிப் பரவியதையும் கண்ட காஞ்சனாதேவி அவர்களை அந்த நிமிஷத்தில் பெரிதும் வெறுத்தாள். அதுமட்டுமின்றி தான் அத்தனை அருகில் பின்னால் வந்து நின்றிருந்தும் அதைச் சிறிதும் கவனியாத அளவுக்குச் சூதாட்டத்தில் இளையபல்லவன் சிந்தை ஆழ்ந்து கிடந்ததை எண்ணிப் பெரும் கோபமும் கொண்டாள்.

ஒற்றைக் குண்டலம் மட்டுமே அணிந்திருந்த குள்ளனிடம் சூதாடுவதிலிருந்த ஊக்கம் பின்னால் வந்திருப்பவளை உணரக்கூடாத அளவுக்கு இளையபல்லவன் உணர்ச்சியை உறையச் செய்துவிட்டதை எண்ணிக் கோபப் பெருமூச்சும் விட்ட அவள் அந்த இடத்தில் இருக்க இச்சைப்படாமல் திரும்பிச் செல்லக் காலைத் திருப்பினாள். ஆனால் அந்த முயற்சி சிறிதும் பலிக்கவில்லை. அவள் காலைத் திடீரெனப் பற்றிய இளையபல்லவனின் கை அந்தக் காலை ஒரு மடக்கு மடக்கி இழுக்கவே அவள் நிலை தப்பி அவன் பக்கத்திலிருந்த மணலில் விழுந்தாள்.

அப்படி விழுந்ததும் கலைந்த ஆடைகளைச் சரிப்படுத்திக்கொண்டு, எழுந்திருக்க முயன்ற அந்தக் கட்டழகியைக் கருணாகர பல்லவனின் இடதுகரம் இடையைச் சுற்றிச் சென்று தன் பக்கலில் பலமாக இழுத்துக்கொண்டது. இப்படியொரு பெண்ணின் வரவால் பகடையாட்டம் மட்டுமின்றி சத்தமும் திடீரென நிற்க, மாலுமிகள் காஞ்சனாதேவியை உற்று உற்றுப் பார்த்தனர். கடல் புறாவிலிருந்து அவள் நேரிடையாக கங்கதேவன் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அரைகுறையாகவே அவளைப் பார்த்திருந்த அந்த மாலுமிகள் அவளை வெகு அருகில் பார்த்ததும் பெரும் பிரமிப்பையும் ஓரளவு அச்சத்தையும் அடையவே, சிலர் கைகளில் பிடித் திருந்த குடிக் குவளைகள் பிடித்தபடியே நின்றனர்.

சிலர் வாயில் குடிக்க வைத்த குவளையை எடுக்காமலே நின்றார்கள். அதுவரை உட்கார்ந்திருந்த மாலுமிகளில் சிலர் எழுந்தும் விட்டார்கள். அதிக வெப்பத்தின் காரணமாக இடுப்பில் மட்டும் வேஷ்டிகளும் சராய்களும் பலவிதமாக அணிந்து அரைநிர்வாணமாக இருந்த அந்த மாலுமிகள் சதா கடலில் திரிந்ததால் இயற்கையுடன் அதிகமாக உறவாடி, திடகாத்திரத்தைப் பெற்றிருந்ததையும் அவர்கள் கழுத்துக்களிலும் கைகளிலும் சிலர் கால்களிலும்கூட விசித்திரமான பல நாட்டு ஆபரணங்களிருந்ததையும் கவனித்த காஞ்சனாதேவி, ஏதோ விசித்திரப் பிறவிகளைப் பார்க்கும் நகர மங்கையென அவர்களை நோக்கினாள்.

அத்துடன் தன்னை இழுத்து மணலில் தள்ளி அணைத்த இளையபல்லவனையும் நோக்கிய அவள், அவனும் அரை இறுதியுடன் அந்தப் பண்பற்ற மாலுமிகளைப் போலவேயிருந்ததையும், கழுத்திலும் ஒரு வீரச்சங்கிலி அணிந்திருந்ததையும், அதன் நடுவில் ஒரு பெரும் மாணிக்கம் அந்த இரவின் இருளையும் கிழித்துக் கொண்டு நெருப்புத் துண்டமென ஜொலித்ததையும் கண்டு, ‘சந்தேக மில்லை; இவர் முழுக்க முழுக்க கள்வராகிவிட்டார்,’ என்று ஒரு முறைக்கு இரு முறையாகத் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அவள் எண்ணங்கள் சரியென்பதற்கு அடுத்த விநாடியே அத்தாட்சியளித்த இளையபல்லவன், அத்தனை பேர் முன்னிலையிலும் அவளை இடது கையால் முரட்டுத் தனமாக இழுத்து அணைத்துக்கொண்டான். அத்துடன் எதிரே வளைத்துக் காஞ்சனாதேவியின் அழகில் பிரமித்து நின்றவர்களை நோக்கி, “ஏன் வாயடைத்து நிற்கிறீர்கள்? இவள் அழகைப் பார்த்தா? இவளுக்கிணையான அழகி இந்தக் கீழ்த் திசையில் கிடையாது,” என்று விரைந்து கூவினான்.

அப்பொழுதும் மாலுமிகளிடை உற்சாகம் பிறக்கவில்லை. அவர்கள் கூச்சலிடவுமில்லை. காஞ்சனாதேவியின் கண்களில் தெரிந்த ஏதோ ஒரு பயங்கர ஒளி அவர்கள் வாயை அடைத்து விட்டிருக்க வேண்டும், கண்களை ஸ்தம்பிக்கச் செய்திருக்க வேண்டும். அவர்களே பேசாமல் சில விநாடிகள் அவர்களைப் பார்த்துக்கொண்டே நின்றார்கள். இளையபல்லவன் அவர்கள் ஸ்தம்பித்த நிலையைக் கண்டு உள்ளூர மகிழ்ந்தாலும் மீண்டும் இரைந்தான், “என்ன நான் சொல்லுவது உங்கள் காதில் விழவில்லை? இவள்தான் கீழ்த் திசையில் சிறந்த அழகி யென்கிறேன்.

யாராவது மறுத்துச் சொல்ல இஷ்டப் படுகிறீர்களா?” என்று. அது மட்டுமின்றி மறுத்தால் என்ன ஆகும் என்பதை உணர்த்த இடையில் செருகியிருந்த குறுவா ளொன்றையும் பலவந்தமாகத் தடவினான். அவன் பார்வை யையும் கூச்சலையும் அவன் குறுவாளைத் தடவியதையும் கண்ட மாலுமிகள் மெள்ள சுய நிலை அடைந்தனர். எதிரே உட்கார்ந்திருந்த குள்ளன் தன் சிறு கண்களால் இளைய பல்லவனை ஏறெடுத்து நோக்கி, “இளையபல்லவர் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அது சிறந்ததாகத்தானிருக்கும்” என்று கூறி அவன் மார்பில் சுடர் விட்ட மாணிக்கத்தையும் விரலால் சுட்டி, காஞ்சனாதேவியையும் சுட்டிக்காட்டினான். இதைக் கேட்ட மற்ற மாலுமிகள் பெரிதாகக் கரகோஷம் செய்தார்கள். பலர் ‘ஆம், ஆம்’ கொட்டினார்கள்.

இளையபல்லவன் விழிகள் அவர்களை மீண்டும் வட்டமிட்டன. “அந்த மாணிக்கத்துக்கு நான் வைத்திருக்கும் மதிப்பை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேனல்லவா?” என்று வினவினான் அவன், காரணமாக மார்பில் சுடர்விட்ட மாணிக்கத்தைச் சுட்டிக்காட்டி.

“ஆம் ஆம்” என்று மீண்டும் கூவினார்கள் மாலுமிகள்.

இளையபல்லவன் கூர்விழிகள் அவர்களை மீண்டும் வட்டமிட்டன. அவன் இடதுகை காஞ்சனாதேவியை முரட்டுப் பிடியாக அழுத்தியது. வலதுகை அவள் கன்னத்தைச் செல்லமாகத் தட்டிக் காட்ட, அவன் உதடுகளிலிருந்து சொற்கள் நிதானமாக உதிர்ந்தன, “அந்த மாணிக்கத்தை விட இந்த மாணிக்கத்தைப் பெரிதாக நான் மதிக்கிறேன்” என்று.

மாலுமிகள் நொடிப் பொழுதில் உணர்ந்து கொண்டார்கள் அவன் உள்ளத்தை. “புரிகிறது” என்பதற்கு அடையாளமாக அவர்களில் பலர் தலையையும் அசைத் தார்கள். “புரிகிறது” என்று இரைந்தே சொன்னான் குள்ளன்.

“நான் கடல் புறாவைக் கொடுத்துவிடுவேன். நான் கைப் பற்றி இருக்கும் இரு மரக்கலங்களைக் கூடக் கொடுத்து விடுவேன். இந்த மாணிக்கம் – இது உங்கள் அரசர் கொடுத்தது இதைக் கூடக் கொடுத்துவிடுவேன். ஆனால்… ” என்ற இளையபல்லவன் பேச்சை அரைகுறையாக விட்டான். அந்த அரைகுறைப் பேச்சில் பயங்கர ஒலி பூர்ணமாகப் படர்ந்து நின்றது.

அவன் அந்த வார்த்தைகளை அங்கு பேச வேண்டிய அவசியம் காஞ்சனாதேவிக்குப் புரியவில்லை. மாலுமிகளுக்கும் காரணம் புரியவில்லையே தவிர அவன் உக்ரம் நன்றாகப் புரிந்தது. ஆனால் மற்ற மாலுமிகளை விடக்கூர்மையான புத்தியைப் படைத்த பகடையாடிய குள்ளன் மட்டும் கேட்டான், “இதை எதற்காக எங்களுக்குச் சொல் கிறீர்கள்?” என்று.

இளையபல்லவன் விழிகள் அவன் முகத்தில் நிலைத்தன. பிறகு மற்றவர் முகங்களை ஆராய்ந்தான். “வெகு சீக்கிரம் உங்களில் பலர் என்னிடம் மாலுமிகளாக அலுவல் புரியலாம். ஆகவே உங்கள் தலைவனின் நோக்கங்கள், ஆசைகள், உறுதிகள் இவை என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நலமல்லவா?” என்று கேட்டு எதிரே குவளையிலிருந்த மதுவைச் சிறிது அருந்திக் குவளையைக் கீழே வைத்தான்.

குள்ளனும் இதரரும் அவனை நோக்கினார்கள். ஏற்கெனவே ஈட்டிகள் போலிருந்த விழிகளின் பயங்கரத்தை உதட்டு மூலையில் வழிந்த மது அதிகப்படுத்திக் காட்டியது. இளையபல்லவன் எத்தனை சகஜமாகவும் வேடிக்கையாகவும் பகடையாட முடியுமோ அத்தனை பயங்கரமாகவும் உறுதி யாகவும், தலைமை வகித்துத் தங்களை நடத்தவும் முடியு மென்பதை அறிந்த அவர்கள் உள்ளூரச் சிறிது அச்சமும் கொண்டார்கள்.

அப்படி அச்சத்தை ஓரளவு அவர்களிடம் புகவிட்ட இளையபல்லவன் மடியிலிருந்த இரண்டுபிடி தங்க நாணயங்களை எடுத்துக் கம்பளத்தில் வீசிவிட்டுச் சரேலெனக் காஞ்சனாதேவியையும் இழுத்துக்கொண்டு எழுந்திருந்தான். எழுந்து நின்ற தோரணையில் அவர்களை நோக்கி, “இதோ இருக்கும் உங்கள் தலைவன் பகடையில் அதிகப் பொற்காசு களைக் கைப்பற்றி விட்டான். மீதிப் பொற்காசுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அத்தனையும் சொர்ணபூமியின் பொற்காசுகள். பத்தரை மாற்றுத் தங்கம். ஆனால் என் பக்கத்தில் நான் கைப்பற்றி இருப்பது பதினோரு மாற்றுத் தங்கம். இதை யாராவது கைப்பற்ற வந்தால் கொலை நடக்கும். இந்தக் கடல் மோகினியைக் கொளுத்தக்கூட நான் தயங்க மாட்டேன்,” என்று பயங்கரக் குரலில் சொன்னான்.

இதைச் சொன்னவன் அடுத்த விநாடி வெறிச் சிரிப்புச் சிரித்தான். “அடடே, எதற்கு இத்தனை சீற்றம் எனக்கு? கடாரத்தையே கொள்ளையிட என் உதவி தேவை. அப்படியிருக்க எனக்குத் தேவையான இந்த ஒரு பெண்ணுக்குச் சண்டையிட யார் வரப்போகிறார்கள்?” என்று கூறிவிட்டு, “வா மஞ்சளழகி” என்று அவர்கள் காதுபட இரைந்துவிட்டு அவளை இழுத்துக் கொண்டு அந்தக் கூட்டத்தைவிட்டு வெளியே நடந்தான். அப்படி அந்தக் கூட்டத்தைவிட்டு வெளியே நடந்தவன் கூட்டமில்லாத இடத்தை நோக்கிச் செல்லாமல் மற்றக் கூட்டங்களுக்கு இடையே புகுந்து காஞ்சனாதேவியை அணைத்த வண்ணம் சென்றான்.

காஞ்சனாதேவிக்கு வெட்கத்தால் பிராணன் போய்விடும் போலிருந்தது. இரண்டு மூன்று முறை அவனிடமிருந்து திமிறவும் முயன்றாள். அவன் இரும்புக் கரத்திலிருந்து, மீளமுடியாததால் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு உடம்பெல்லாம் நாணத்தால் கூனிக் குறுகச் சென்றாள். இம்மாதிரிப் பத்துப் பதினைந்து கூட்டங்களில் நுழைந்து சென்ற இளையபல்லவன், கடைசியாக கங்கதேவன் மாளிகையை நோக்கி நடக்கலுற்றான். கூட்டத்தை விட்டு இருவரும் அகன்று சிறிது தூரம் வந்ததும் காஞ்சனாதேவி தன்னைத் திமிறி விடுவித்துக் கொண்டு வேகமாக நடக்க முற்பட்டாள். இளையபல்லவனும் அவளை வேகமாகத் தொடர சட்டென்று நின்று திரும்பிய அவள், “என்னைத் தொடர வேண்டாம்,” என்று கூவினாள்.

இளையபல்லவன் நகைத்தான். “ஏன்?” நகைப்புக்கிடையே கேட்டான்.
“உங்களை நான் வெறுக்கிறேன்” என்றாள் அவள்.

“அது நல்லது. “

“என்ன நல்லது. “

“என்னை வெறுப்பது கங்கதேவனுக்குப் பிடிக்கும். “

“இளையபல்லவரே?” காஞ்சனாதேவியின் குரலில் உக்கிரம் நிரம்பியிருந்தது.

“அப்பா! உன் குரலில் என்ன கடுமை!” என்ற இளைய பல்லவன் இளநகை பூத்தான்.

“கடுமையைத் தவிர வேறெதை எதிர்பார்க்கிறீர்கள்?” சீறினாள் அவள்.

“இனிமையை” என்றான் இளையபல்லவன்.

“அது இனி என்னிடமிருந்து கிடைக்காது. “

“ஏன்?”

“உமது போக்கு… ”

“அதற்கென்ன?”

“வரவரக் கொள்ளைக்காரன் போக்காயிருக்கிறது. “

“அகூதாவின் உபதலைவன் வேறெப்படியிருப்பான்?”

“நீங்களே ஒப்புக்கொள்கிறீர்களா?”

“எதை?”

“கொள்ளைக்காரனென்பதை. “

“ஆம். ஒப்புக்கொள்கிறேன்!”

காஞ்சனாதேவியின் மார்பு மிதமிஞ்சிய கோபத்தால் எழுந்து எழுந்து தாழ்ந்தது. இருமுறை பெருமூச்சும் விட்டாள் அவள். “நீங்கள் கடாரத்தைக் கொள்ளையிடப் போவது உண்மைதானா?” என்று மிகுந்த சீற்றத்துடன் கேட்டாள் காஞ்சனாதேவி.

“ஆம். அதுதான் உத்தேசம்” என்ற இளையபல்லவன் நகைத்தான்.

“இதை என்னிடம் சொல்ல உங்களுக்கு என்ன துணிச்சல்?” என்று கூவிய அவள், “இளையபல்லவரே! நான் கடாரத்தின்… ” ஏதோ சொல்ல முற்பட்டதும் ஒரே தாவில் அவளை நெருங்கி அவளை இழுத்து அவள் அழகிய வாயை அழுந்தப் பொத்திய இளையபல்லவன், “போதும் நிறுத்து” என்று இரைந்தான்.

அவன் செய்கை அவளைப் பெரும் கோபத்திற்குள் ளாக்கியதால் அவள் முகம் குங்குமச் சிவப்பாகச் சிவந்து ஜொலித்தது. அதை நோக்கிய இளையபல்லவன், “நீ பதினொரு மாற்றுத் தங்கம்தான். ஆனால் என் அலுவல்களுக்குக் குறுக்கே வருவதை மட்டும் நான் விரும்பவில்லை. நினைப்பிருக்கட்டும் மஞ்சளழகி” என்று சற்றுக் கோபத்துடன் கூவி மஞ்சளழகி என்ற பெயரை அழுத்தியும் சொன்னான்.

“உண்மை உண்மை” என்று அவர்களுக்குப் பின்னா லிருந்து எழுந்த சொற்கள் அவ்விருவரையும் பிரித்தது. அவர்களுக்குப் பின்னால் புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந் தான் கங்கதேவன்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch25 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch27 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here