Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch27 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch27 | Sandilyan | TamilNovel.in

135
0
Read Kadal Pura Part 3 Ch27 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch27 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch27 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 27 : கடல் மணலில் கோடுகள் சில…

Read Kadal Pura Part 3 Ch27 | Sandilyan | TamilNovel.in

கடாரத்தைக் கொள்ளையிடக் கருணாகர பல்லவன் திட்டமிட்டிருந்ததை அவன் வாயினாலேயே கேட்டதாலும், தான் கடாரத்தின் இளவரசியென்று சொல்ல முற்பட்டதும் அவன் தன்னை வலிய இழுத்து ‘இளவரசி’ என்ற பதம் வெளிவருமுன்பே வாயை இறுகப் பொத்தி விட்டதாலும் விளைந்த கோபத்தினால் முகம் சிவக்க உள்ளம் துடிக்கத் திணறிய காஞ்சனாதேவி, ‘என் அலுவலில் நீ குறுக்கிடுவதை நான் விரும்பவில்லை’ என்று இளையபல்லவன் கூறியதை கங்கதேவன் ‘உண்மை, உண்மை,’ என்று ஆமோதித்ததும், முதலில் ஏற்பட்ட உள்ளக் கொதிப்பு அதிகமாகியதால் இளையபல்லவன் அவளை விடுவித்ததும் எதிரே நின்ற இருவரையும் அவள் சில விநாடிகள் மாறிமாறிச் சுடுநோக்கு நோக்கினாள்.

தனது சொந்த நாட்டைக் கொள்ளையிடுவதில் கூட்டுச்சேர்ந்த அந்த இருவரையும் பொசுக்கிவிடும் ஜ்வாலை யைக் கக்கிய விழிகளுடன் நோக்கிய காஞ்சனாதேவி அடுத்த விநாடி அவ்விருவரும் நின்ற இடத்தில் கூட நிற்க இஷ்டப் படாமல் மாளிகையை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்து சென்றாள். அவள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த இருவரில் இளையபல்லவனே அவளைப் பார்ப்பதை விட்டு கங்கதேவனை நோக்கினான். கங்கதேவன் கண்கள் இரவு தந்த அந்த இருட்டிலும் அவள் போவதை விழுங்கிக் கொண்டிருந்தன. அவன் நின்ற தோரணையிலிருந்தே அவன் உள்ளத்தில் அலைமோதிக் கொண்டிருந்த காமவெறியைக் கண்ட இளையபல்லவன் அந்தக் கட்டழகிமீது அந்தப் பாதகன் கண்களை நீண்ட நேரம் நிலைக்கவிட விரும்பாமல் அவன் தோளில் இருமுறை கையால் தட்டினான்.
அதனால் சரேலென்று திரும்பி இளையபல்லவனை நோக்கிய கங்கதேவன், “மஞ்சளழகி நல்ல அழகிதான் இளைய பல்லவரே” என்றான் குரலிலும் காம ஒலி அலைபாய.

அவள் அப்படியொன்றும் பிரமாத அழகில்லை என்பதற்கு அறிகுறியாக இடது கையை இருமுறை ஆட்டிய இளையபல்லவன் கங்கதேவனை நோக்கி, “கலிங்கத்தின் கிழக்குத் திசைக் கடற்கரைத் தளபதி இங்குள்ள நாடுகளை அதிகம் சுற்றிப் பார்த்ததில்லை போலிருக்கிறது” என்றான் அலட்சியமாக.

காஞ்சனாதேவியின் அழகை அத்தனை அலட்சியப் படுத்தி இளையபல்லவன் பேசியது கங்கதேவனுக்கு வியப்பாயிருக்கவே, கன்னக் கதுப்புகளின் ஆழத்தில் புதைந்து கிடந்த அவன் கண்கள் அந்த இருட்டில் கூடப் பளிச்சிட்டன. “ஏன் பார்த்ததில்லை? அத்தனை நாடுகளையும் பார்த்திருக் கிறேன் இளையபல்லவரே, ஆனால் இத்தகைய அழகியை நான் பார்த்ததில்லை” என்றான் கங்கதேவன்.

காஞ்சனாதேவியின் அழகைப் பற்றி அந்தக் கயவனுடன் மேற்கொண்டு விவாதிக்க இஷ்டப்படாத இளையபல்லவன் அவன் குணங்களைப் பற்றிய சர்ச்சையில் இறங்கி, “பெண்ணுக்கு உடலழகு மட்டும் பிரயோசனமில்லை கங்க தேவரே! அடக்கம் வேண்டும், சொல்வதைக் கேட்கும் சித்தம் வேண்டும்” என்றான்.

“ஆம் ஆம். அது தேவைதான்” என்று கங்கதேவனும் ஒப்புக்கொண்டான்.
“அந்த இரண்டும் இவளிடம் கிடையாது” என்று சுட்டிக் காட்டினான் இளையபல்லவன்.

“அப்படியொன்றும் அடங்காதவளாகத் தெரிய வில்லையே?” என்று காஞ்சனாதேவிக்குப் பரிந்து பேசினான் கங்கதேவன்.

“அடங்காதவளாகத் தெரியவில்லையா! நன்றாகச் சொன்னீர்கள். உடல் நலமில்லாதவள் இவள். அறையை விட்டு வெளியே போகக்கூடாதெனச் சேந்தன் சொல்கிறான். கேட்காமல் இரவில், இந்தச் சில்லென்ற காற்றில் வெளி வருகிறாள். நான் மாலுமிகளுடன் பகடையாடிக் கொண் டிருக்கும் இடத்தில் வந்து வெட்கமின்றி நிற்கிறாள். திரும்ப அழைத்துக் கொண்டு மாளிகையில் சேர்க்க வந்தால் சீறி ஏதேதோ உளறுகிறாள்… ” என்ற இளையபல்லவன் வெறுப்புடன் ஓர் ‘உம்மும் கொட்டினான்.

இளையபல்லவனிடமிருந்து உதிர்ந்த வெறுப்புச் சொற்கள் கங்கதேவன் காதில் அமுதமென. விழுந்தன. காஞ்சனா தேவியிடம் கடல்புறாவின் தலைவனுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பினால் தான் அடையக்கூடிய பலனை எண்ணிப். பார்த்துப் பெரும் ஆனந்தமடைந்தான் கலிங்கத்தின் கடற் படைத் தலைவன். ஆகவே சொன்னான், “சில பெண்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள். நாம்தான் பொறுக்க வேண்டும்” என்று.

பொறுமையைப் பற்றி கங்கதேவன் தனக்குப் போதிக்க முற்பட்டது இளையபல்லவனுக்கு வினோதமாயிருந்தாலும் தனது உள்ளக் கருத்தை வெளிக்குக் காட்டாமல், “நமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டல்லவா?” என்றான்.

“என்ன அப்படிப் பொறுக்காதபடி மஞ்சளழகி கேட்டு விட்டாள் உங்களை?” என்று வினவினான் கங்கதேவன்.

“அவள் கேட்டது உங்கள் காதில் விழவில்லையா?”

“அவள் பேசியபோது நான் எங்கேயிருந்தேன்?”

“எங்களுக்குப் பின்னால்தான் நின்றிருந்தீர்களே?”

கங்கதேவன் வியப்பின் வசப்பட்டு வினவினான், “என்ன! நான் நின்றதை இத்தனை இருளில் உங்களால் பார்க்க முடிந்ததா? அதுவும் நீங்களிருந்த நிலையில்” என்று.

“கண் பார்க்க வேண்டுமா? கால் நடைச் சத்தத்திலிருந்து அறியமுடியாதா?” என்று கேட்டான் இளையபல்லவன்.

அவன் கண்ணுக்கும் காதுக்கும் இருந்த சக்தியை எண்ணிப்பார்த்த கங்கதேவன் சோழர் படைத்தலைவனிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டிய அவசியத்தைப் புரிந்துகொண்டதால், “முடியும் முடியும்” என்றான். அதைத் தொடர்ந்து, “இருப்பினும் நீங்கள் அத்தனை முரட்டுத்தனமாக அவளை இழுத்து வாயைப் பொத்த வேண்டாம்” என்று சொன்னான்.

இதைச் சொன்ன கங்கதேவன் குரலில் ஏதோ சந்தேகம் ஒலிப்பதைக் கண்ட இளையபல்லவன் காஞ்சனாதேவி சொல்ல வந்ததை எத்தனை தூரம் அவன் ஊகித்திருப்பான் என்பதை அறிய விரும்பி அவன் முகத்தில் தன் கண்களைப் பதியவிட்டான். கங்கதேவன் முகத்திலிருந்து எதையும் கண்டு பிடிக்க முடியாததால் அலுப்புச் சொட்டும் பெருமூச் சொன்றை வெளியிட்ட இளையபல்லவன், “வாய் அதிக மானால் மூடுவதைத் தவிர வேறு வழியென்ன இருக்கிறது?” என்று வினவினான்.

“அப்படியென்ன சொல்ல வந்துவிட்டாள் அவள். “நான் கடாரத்தில்…’ என்று ஏதோ ஆரம்பித்தாள். நீங்கள் தடுத்து விட்டீர்கள். வாசகத்தை முடிக்க விட்டிருந்தாலென்ன?” என்று வினவிய கங்கதேவன் குரலில் சந்தேகம் மண்டிக் கிடந்தது.

கங்கதேவன்’ ஏதோ சந்தேகப்படுகிறானென்பதை உணர்ந்துகொண்ட இளையபல்லவன் உள்ளூரச் சிறிது சஞ்சலப்பட்டாலும் வெளிக்குப் பரம அலட்சியத்துடன் பேசத் தொடங்கி, “வாசகத்தை முடிக்காவிட்டாலென்னவா? எத்தனை தடவை கேட்பது அந்தப் பிரதாபத்தை?” என்றான்.

“பிரதாபமா!” வியப்பிருந்தது கங்கதேவன் குரலில்.

“இதுகூடப் புரியவில்லையா உங்களுக்கு?”

“எது?”

“மஞ்சளழகிக்கும் கடாரத்துக்குமுள்ள சம்பந்தம். “

“என்ன சம்பந்தத்தைச் சொல்கிறீர்கள்?”
“மஞ்சளழகி பலவர்மன் வளர்ப்புச் செல்வியல்லவா?”

“ஆம். “

“பலவர்மன் கடாரத்து மன்னன் குணவர்மனுக்கு ஒன்றுவிட்ட சகோதரன். “

“அது தெரியும். “

“அப்படியானால் கடாரம் அவள் பெரிய தகப்பன் சொத்தல்லவா?”

“ஆம், ஆம். “

“ஆகையால் கடாரம் அவர்களுடையதாம். அதைக் கொள்ளையிடுவதை இவள் அனுமதிக்க மாட்டாளாம். இதை நான் பகடையாடிக் கொண்டிருக்கையில் மாலுமிகள் முன்பு சொன்னாள். அதனால் மாளிகைக்குப் போகச் சொன்னேன். அவள் மறுக்கவே பலவந்தமாக இழுத்து வந்தேன். மீண்டும் இங்கு அந்தப் புலம்பலைத் துவங்கினாள். வாயை மூடாமல் என்ன செய்வது கங்கதேவரே? கடாரத்தை நாம் கொள்ளை யிடாதிருக்க முடியுமா? மாலுமிகள் ஒப்புவார்களா?” என்று சடசடவென்று கோபத்துடன் சொற்களைக் கொட்டினான் இளையபல்லவன்.

கங்கதேவன் சிந்தனையில் பல விநாடிகள் ஆழ்ந்தான். இளையபல்லவன் போக்கு அவனுக்குப் பெரும் வியப்பை மட்டுமின்றிப் பயத்தையும் விளைவித்தது. கடாரத்தைக் கொள்ளையிடும் ஆசையைச் சுமார் நாலைந்து நாட்களாகவே அவன் மாலுமிகளிடம் ஊட்டிவிட்டதன்றித் தன்னிடமும் ஒப்பந்தம் செய்து முறியெழுதிய பின்பு அவர்களை அந்தப் பாதையிலிருந்து திருப்புவது முடியாத காரியம் என்பதை அவன் உணர்ந்திருந்தான்.

கலிங்கத்தின் கடற்படைத் தளபதிப் போர்வையில் கொள்ளைத் தொழிலில் தானும் ஈடுபட்டு மாலுமிகளையும் அவன் ஈடுபடுத்தி இருந்ததாலும், கடாரத்தின் சிறப்பைப்பற்றி அவர்கள் ஏற்கெனவே கேள்விப் பட்டிருந்ததாலும் கொள்ளைத் தொழிலில் நிகரற்ற அகூதாவின் உபதலைவனே இவ்விஷயத்தில் அவர்களை உற்சாகப்படுத்தி இருப்பதாலும் கடாரத்தை நோக்கிச் செல்வதைத் தான் தடுக்க முடியாதென்பதை கங்கதேவன் சந்தேகமற உணர்ந்து கொண்டான்.

அலைகள் பெரிதாக எழுவதால் உட்புகுவது எளிதல்லாத கடாரத்தின் துறைமுகத் தைக் கைப்பற்றுவது அத்தனை எளிதல்ல என்பதையும் இவன் உணர்ந்திருந்ததால் அத்தனை பயங்கரப் படையெடுப்புக்கு இளையபல்லவன் எந்தத் துணிவுடன் அடிகோலுகிறான் என்பது புரியாததால் இதில் ஏதோ சூதிருக்கிறது என்பதை மட்டும் அவன் அறிந்து கொண்டான். இருப்பினும் அது என்ன என்று புரியாததாலும் மாலுமிகள் முன்பு தானும் ஒப்பந்தத்துக்கு உடன்பட்டு விட்டதாலும் மேலுக்கு, “ஆம் ஆம். கடாரத்தை நாம் எப்படிக் கொள்ளையிடாதிருக்க முடியும்?” என்று சொன்னான் சங்கடத்துடன். “இருப்பினும்..” என்று ஏதோ ஆரம்பிக்கவும் செய்தான்.

“இருப்பினும்? என்ன கங்கதேவரே?” என்று வினவினான் இளையபல்லவன் குரலில் சிறிது ஆத்திரத்தைக் காட்டி.

“கடாரத்தை அணுகுவது எளிதா?” என்று கேட்டான் கங்கதேவன்.
“அல்ல. “

“ஆகையால் சிந்தித்து அந்த வேலையைச் செய்ய வேண்டாமா?”

“சிந்தித்துதான் குணவர்வமனைச் சிறையிலடைத்திருக் கிறோம். அவனைக் கொன்று விடுவதாகச் சொன்னால் கடார மக்கள் தாமே பணிகிறார்கள். “

“பணிய மறுத்தால்?”

இளையபல்லவன் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மௌனமாய் இருந்தான். அவன் மௌனத்தைத் தன் இஷ்டத்துக்குத் திருப்ப எத்தனித்த கங்கதேவன், “இதைப் பற்றிச் சிறிது யோசிப்பது நல்லது” என்றான்.

இளையபல்லவன் தனது கண்களைத் திருப்பினான் கங்கதேவன்மீது. “நம்மிடமிருப்பவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமல்லலவா?” என்று வினவவும் செய்தான்.

“மாலுமிகளைப் பற்றித்தானே?”

“ஆம் கங்கதேவரே! இவர்கள் ஒழுங்கான சட்ட திட்டங் களுக்குப் பணியும் அரசாங்கக் கடற்படை மாலுமிகளல்ல… ”

“ஆம். “

“இவர்களுக்கு நாம் ஊதியம் அளிப்பதில்லை. “

“கொள்ளையில் பங்கு தருகிறோமே, அதென்ன?”

“அது பங்கு, ஊதியமல்ல. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அப்படியே அரசாங்க மாலுமிகளுக்கும் இந்த மாலுமிகளுக்கும் வித்தியாசமுண்டு. கொள்ளையிடத் தூண்டிப் பிறகு நாம் பின்வாங்கினால் நாமிருவரும் சின்னா பின்னமாகக் கிழித்தெறியப்படுவோம். இந்த உடலைக் கடற்கரைக் கழுகுகளுக்குச் சமர்ப்பிக்க நான் இஷ்டப்படவில்லை” என்ற இளையபல்லவன் தன் உடம்பைக் கையால் தட்டியும் காட்டினான்.

இளையபல்லவன் பேச்சு, வெறியனான கங்கதேவனையும் சிறிது நடுங்க வைத்தது. கொள்ளைக்காரர்கள் தலைவர்களுக்கெதிராகத் திரும்பிய பல சந்தர்ப்பங்களைப் பற்றிப் பல கொடிய கதைகளை அவன் கேட்டிருந்தபடியால் கடற்காற்றையும் மீறி அவன் உடல் லேசாக வியர்த்தது. “ஆம் ஆம். வேறு வழியில்லை. கடாரத்தைக் கொள்ளையிட வேண்டியதுதான். ஆனால் அந்தப் படையெடுப்பை நடத்தும் பொறுப்பு உங்களுடையது” என்றான் கங்கதேவன்.

இளையபல்லவன் இதழ்களில் இளநகை அரும்பியது. கங்கதேவன் கள்ளத்தனத்தை அவன் பூரணமாகப் புரிந்து கொண்டான். கடாரத்தின் பலத்தை முன்னிட்டும், அது ஸ்ரி விஜயத்தின் ஒரு பகுதியென்ற காரணத்தாலும் அதை அணுக கங்கதேவன் அஞ்சுகிறான் என்பதை உணர்ந்து கொண்ட இளையபல்லவன் ஒருவேளை படையெடுப்பு தோல்வியுற்று மரக்கலங்கள் திரும்பக் கடல்மோகினிக்கு ஓடி வந்தால் மாலுமிகளின் சீற்றத்துக்குத் தன்னை இலக்காக்க கங்கதேவன் திட்டமிடுகிறானெனத் தீர்மானித்துக் கொண்டான். ஆகையால் உள்ளூர நகைத்துக் கொண்ட இளையபல்லவன் சொன்னான்: “இந்தப் பெரும் பொறுப்பை எனக்களிக்க முயல்வது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. இதை நீங்களே மாலுமிகள் முன்பு சொல்லி விடுங்கள்” என்று.

கங்கதேவன் உள்ளம் பெரும் பூரிப்படைந்தது. தான் விரித்த வலையில் இளையபல்லவன் விழுந்துவிட்டதைத் தனக்கேற்பட்ட பெரும் வெற்றியாகக் கருதினான் கலிங்கத்தின் கடற்படைத் தலைவன். தங்கள் வசமுள்ள மரக்கலங்களைக் கொண்டு கடாரத்தைப் பிடிப்பதென்பது பகற்கனவென்பதை அறிந்திருந்த கங்கதேவன் அந்தப் பொறுப்பை இளையபல்லவன் மீது கட்டிவிட்டால் படையெடுப்புத் தோல்வி அடைந்து திரும்புமென்பதையும், பிறகு இளையபல்லவன் கதி அதோகதி என்பதையும் மனதுக்குள் எண்ணிப்பார்த்து இளையபல்லவன் ஒழிந்தானென்றே தீர்மானித்தான். ஆகவே அந்த மகிழ்ச்சியுடன் இளையபல்லவன் அன்று வரை கண்டு பிடிக்க முயன்று கொண்டிருந்த ஒரு முக்கிய ரகசியத்தையும் சொல்லத் துவங்கி, “இளையபல்லவரே! நீர் எனது நண்பராகி விட்டீர். பெரும் பொறுப்பையும் ஏற்கத் தீர்மானித்து விட்டீர். ஆகையால் நான் உம்மிடம் ஒரு விஷயத்தை மறைக்க விரும்பவில்லை” என்றான்.

“என்ன விஷயம் நண்பரே?”

“எனது வாழ்க்கை ரகசியம் ஒன்று. “

“வாழ்க்கை ரகசியமா?”

“ஆம். பலவர்மன் சுரவேகத்தில் ஏதோ உளறியதாகக் கூறினீர்களல்லவா?”

“ஆம். “

“என்னைப் பற்றி… ”

“வசைச் சொற்களை உதிர்த்தான். “

“காரணம் தெரியுமா?”

“சொல்லுங்கள். “

“என்னிடம் அச்சம் அவனுக்கு. அந்த அயோக்கியன் என் சகோதரியைக் கவர்ந்து சென்றவன். அவனைக் கொல்ல நீண்ட நாளாகக் காத்திருக்கிறேன். “

இளையபல்லவன் எண்ணங்கள் அக்ஷயமுனையை நோக்கி ஓடின. ‘அகூதாவின் சகோதரியை ஜெயவர்மன் கவர்ந்தான். இவன் சகோதரியைப் பலவர்மன் கவர்ந்திருக் கிறானா? என்ன வடிகட்டின அயோக்கியர்கள் இருவரும்!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்ட இளையபல்லவன், “அத்தனை கயவரா அக்ஷயமுனைத் தலைவர்?” என்றான் குரலில் வியப்பைக் காட்டி.

“அதோ அந்த நீலவானத்தின் மீது ஆணையாகச் சொல்கிறேன். இவன் பரம அயோக்கியன். இவனை இரண்டு நாட்களுக்குள் கொல்லாமல் விடமாட்டேன். அது மட்டு மல்ல, அதோ போனாளே அவன் மகள். என் சகோதரிக்கு! அவன் செய்த கதியை அவள் விஷயத்தில் நானும் செய்தே ‘தீருவேன்” என்று உக்கிரத்துடன் சீறிய கங்கதேவன் கையால் ஆகாயத்தைப் பயங்கரமாகச் சுட்டியும் காட்டினான்.

இளையபல்லவன் முகத்தில் எந்தவித உணர்ச்சியுமில்லை. “அவசரப்படாதீர்கள். இன்னும் ஒரு வாரம் பொறுங்கள். உங்கள் வஞ்சகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம்” என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

“ஒரு வாரம் எதற்கு?” கங்கதேவன் குரல் இருளில் பயங்கரமாக ஒலித்தது.

“ஒரு வாரம் மட்டும் வேறு முக்கிய அலுவல்களை நீங்கள் கவனிக்க வேண்டும். இன்னும் இரண்டு நாட்களில் நான் கைப்பற்றிய கலிங்கத்தின் மரக்கலங்கள்…பழுது பார்க்கப் பட்டுவிடும். இப்பொழுதே அநேகமாக வேலை முடிந்து விட்டது. அவையிரண்டையும் உங்களைச் சேர்ந்த கலிங்கத்தின் மாலுமிகள் செலுத்திக்கொண்டு வேவு பார்க்கக் கடலில் ஓடட்டும்… ” என்று சொல்லிக்கொண்டே போனவனை இடைமறித்த கங்கதேவன், “அவற்றில் கலிங்கத்தின் மாலுமிகள் ஏன் செல்லவேண்டும்?” என்று வினவினான்.

“கலிங்கத்தின் கப்பல்களை கலிங்க மாலுமிகள் செலுத்துவது பொருத்தம். தவிர வேவு பார்க்கும்போது குறுக்கே கலிங்கத்தின் கலங்கள் வந்தால் உங்கள் மாலுமிகள் அவற்றைக் கலிங்கத்தின் கடற்படையைச் சேர்ந்த மரக்கலங்கள் என்று சொன்னால் நம்பிக்கையாயிருக்கும்” என்றான்.

அவன் சொல்வதில் ஆழ்ந்த காரணம் இருப்பதாகப் புலப் பட்டது கங்கதேவனுக்கு. “ஆம் ஆம். அதுதான் சரி” என்று கூறினான் அவன்.

இளையபல்லவன் மேலும் தொடர்ந்தான்: “அந்த மரக் கலங்கள் சென்றதும் நாம் கடாரத்தின் படையெடுப்புக்கு மற்ற மரக்கலங்களைச் சித்தப்படுத்தலாம். கடல் புறாவும் அதற்குள் பழுதுபார்க்கப்பட்டுவிடும். நாம் படையெடுப்புக்குச் சித்தம் செய்ய ஆரம்பித்ததும் மாலுமிகள் அந்த அலுவலில் மும்முரமாயிருப்பார்கள். அந்தச் சமயம் உங்களுக்கு மிகவும் அனுகூலம். “

இளையபல்லவன் கருத்து சரியென்றே பட்டதால் கங்க தேவன் அதற்கு ஒப்புக்கொள்ளவே இருவரும் பிரிந்தார்கள். மறுநாளிலிருந்து இளையபல்லவன் பகல் வேளைகளில் கலிங்கத்தின் கப்பல்களைப் பழுதுபார்ப்பதைக் கண்டியத் தேவன் அருகிலிருந்தே துரிதப்படுத்தினான். இராக் காலங்களில் கங்கதேவனைச் சேர்ந்த மாலுமிகளின் கூட்டங்களில் கலந்துகொண்டு பொழுதைப் போக்கினான். இரண்டொரு இரவுகளில் அவன் எங்கிருக்கிறானென்று யாருக்குமே தெரியவில்லை.

ஒரு குறிப்பிட்ட இரவில் அவனும் காணவில்லை. அமீரும் காணவில்லை. இதை சேந்தனிடமிருந்து அறிந்த கண்டியத்தேவன் ஏதும் விளங்காமல் விழித்தான். நாட்கள் நான்கு ஓடின. கலிங்கத்தின் மரக்கலங்கள் இரண்டும் நன்றாகச் செப்பனிடப்பட்டன. அவகாசமின்மையால் அவற்றின் அடிப்பாகங்களில் பிடித்திருந்த பாசைச் சேற்றையும் ஒட்டியிருந்த கிளிஞ்சல்களையும் கடல் பூச்சிக் கூடுகளையும் ஓரளவே சுரண்டியெடுக்க முடிந்தாலும் கடற் பிரயாணத்துக்கு அவை தயாராக நின்றன. கரையில் இழுக்கப்பட்டுத் தைலகிரியைப் பார்த்துக்கொண்டிருந்த அவற்றின் சர்ப்ப முகங்கள் மீண்டும் தண்ணீருக்குள் இழுக்கப்பட்டு அலையிலிருந்து தலைநீட்டி ஆடும் கடல் நாகங்களைப் போல் காட்சியளித்தன.

அவை தயாரான நாளின் இரவிலேயே அவை பயணப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. உணவுப் பொருள்களும், நீர்க்குடங்களும் சாரிசாரியாகப் படகுகளில் சென்றன. அவை இரண்டிலும் கங்கதேவனைச் சேர்ந்த கலிங்கத்தின் மாலுமிகள் சுமார் நானூறு பேரும் ஏறிப் பயணப்பட்டனர். அவற்றில் ஏற்கெனவேயிருந்த கலிங்க மாலுமிகள் கரைக்குக் கொண்டு வரப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

தரையிலிருந்த மாலுமிகளின் மிகுந்த ஆரவாரத்துக் கிடையே அந்த இரு மரக்கலங்களும் துறைமுகத்தை விட்டுப் பாய்விரித்து வெளியே நகர்ந்தன. அந்த வைபவத்தைக் கண்டு அமீருடனும் கண்டியத்தேவனுடனும் நின்ற இளையபல்லவன் மிகுந்த மகிழ்ச்சியுடனிருந்தான்.

அவன் மகிழ்ச்சிக்குக் காரணம் அவ்விருவருக்கும் புரிய வில்லை. கடல்புறா கைப்பற்றிய இரு மரக்கலங்களும் கங்கதேவன் மாலுமிகளின் வசமாயின. ஏற்கெனவே உள்ள நான்கு மரக்கலங்களும் கங்கதேவனுக்குச் சொந்தம். ஆகவே தனிப்பட்ட கடற்கோரைக்கருகில் கிடந்த கடல் புறா ஒன்று தான் தங்கள் கைவசம். கங்கதேவன் மரக்கலங்களில் இரண்டு அதை நோக்கி நகர்ந்து நெருங்கினால் கடல்புறா கடற் கோரைகளை நோக்கி நகர்ந்து அதன் அடிப்பாகம் சிக்கிச் செயலற்று எதிரி வசம் அகப்பட்டுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்த கண்டியத்தேவன் பெரிதும் திகிலடைந்தான்.

அந்தத் திகிலைக் கவனித்த இளையபல்லவன் கண்டியத் தேவனை நோக்கிச் சிரித்துவிட்டு, “புரியவில்லை தேவரே, நமது நிலைமை?” என்று வினவினான்.

“புரிகிறது. நமது நிர்க்கதியான நிலை” என்றான் தேவன் வறண்ட குரலில்.

இளையபல்லவன் அப்பொழுது பதிலேதும் சொல்ல வில்லை. “இரவு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

இரவு ஏறி ஒரு ஜாமம் கழித்து வந்த இளையபல்லவன் ஒரு பந்தத்தைக் கொண்டு வரச்சொல்லி மணலில் நட்டான். “இதோ ஜாக்கிரதையாகக் கவனியுங்கள்” என்று சொல்லிப் பந்தம் வீசிய வெளிச்சத்தில் மணலில் சில கோடுகளை வரைந்தான். கண்டியத்தேவனும் அமீரும் வியப்பின் எல்லையை அடைந்தார்கள். மணலின் கோடுகளில் பெருங் கதை விரிந்தது. அந்தப் பெருங்கதையில் கங்கதேவன் வாழ்க்கைக் கதையும் கலந்து கிடந்தது. அமீரும் கண்டியத் தேவனும் இளையபல்லவனை நோக்கினார்கள். இளைய பல்லவனும் அவர்களை நோக்கினான். கலந்த ஆறு கண்கள் ஒன்றையொன்று மிக நன்றாகப் புரிந்துகொண்டன. கடைசி யாகப் பேசிய இளையபல்லவன் சொன்னான் அமீரை நோக்கி, “அமீர்! நாளன்றைக்கு இரவில் சேந்தன், காஞ்சனாதேவியை கங்கதேவன் குறிப்பிடும் இடத்துக்கு அழைத்துச் செல்லட்டும்” என்று.

“இந்தத் துறைமுகத்தின் மேற்குக் கோடிதானே!”

“ஆம். “

மேற்கொண்டு மற்ற இருவரும் பேசவில்லை. அவரவர் உள்ளங்கள் எரிமலைகளாயிருந்தன. இளையபல்லவன் மட்டும் எந்த விகாரமுமின்றி எழுந்திருந்து கீழே வரைந்த கோடுகளைக் காலால் அழித்துவிட்டு, கங்கதேவன் மாலுமிகள் இருந்த மேல்திசையை நோக்கிச் சென்றான்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch26 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch28 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here